வெள்ளிக்கிழமை இரவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 3,847 
 

அன்று புதன்கிழமை. சென்னை கார்ப்போரேட் அலுவலகம்.

காலை பத்து மணி வாக்கில் வைத்தியநாதனுக்கு ஹெச் ஆரிலிருந்து ஒரு மெமோ கடிதம் பியூன் மூலமாக அனுப்பப்பட்டு, அதைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்பந்தம் பெறப்பட்டது.

வைத்தியநாதன் அவசர அவசரமாக அதைப் பிரித்துப் படித்தார்: ஆங்கிலத்தில் இருந்த கடிதத்தின் தமிழாக்கம்…

வைத்தியநாதன் (Emp code 115),

தாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பத்தரைமணி தனியார் வோல்வோ ஸ்லீப்பர் பேருந்தில் நம் அலுவலக அக்கவுண்ட்ஸ் மேனேஜரான பானுமதியுடன் கோயமுத்தூர் பயணம் செய்யும் போது, அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இந்தச் செய்கை அவரை மிகுந்த மனவேதனையில் தள்ளிவிட்டதாகவும், தங்களுக்கு தகுந்த தண்டனை அளிக்குமாறும், திருமதி பானுமதி எழுத்து மூலமாக எங்களுக்குப் புகார் அளித்துள்ளார்.

கண்டிப்புக்கு பெயர்பெற்ற நம் கம்பெனியின் பர்சேஸ் மானேஜரான தாங்கள், ஐம்பத்தியாறு வயதில் இப்படி ஒரு செயலைச் செய்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எனினும் தங்களின் முப்பது வருட நேர்மையான உழைப்பை மனதில் கொண்டு தங்களது தரப்பையும் கேட்க முடிவு செய்துள்ளோம்.

பானுமதியின் கூற்று உண்மையாயின், தங்களை நம் கம்பெனியிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளோம். அப்படி ஏன் வெளியேற்றக் கூடாது என்பதற்கான காரணங்கள் தங்களிடம் இருந்தால், இரண்டு நாட்களுக்குள் தங்களது கருத்தை எங்களுக்கு எழுத்து மூலமாகத் தெரிவிக்கலாம்.

இப்படிக்கு,

திம்மையா, ஹெச்ஆர் மேனேஜர்.

கடிதத்தை படித்துவிட்டு வைத்தியநாதன் தனக்குள் சிரித்துக்கொண்டார்.

அடுத்த நாளே, ஹெச் ஆர் திம்மையாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். அதில்,

நான் சென்னையின் பிரபல கிரிமினல் லாயரான தியாகராஜனை நேற்று மாலை சந்தித்தேன். அவர் சொல்ல இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன்.

பானுமதி மேடம் சொன்னது முற்றிலும் உண்மைதான். ஆனால் என்னால் அது திட்டமிட்டு செய்யப் பட்டதல்ல. சென்ற வெள்ளிக்கிழமை மதியம் நம் கேன்டீனில் பானுமதி மேடத்துடன் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அன்று இரவு நான் வோல்வோ பேருந்தில் கோயமுத்தூர் செல்வதாகவும், என்னுடன் வருவதாக இருந்த என் மனைவி உடல்நலம் குன்றியதால் வரவில்லை எனவும் மனைவியின் டிக்கெட்டை கேன்ஸல் செய்யப் போவதாகச் சொன்னேன்.

உடனே பானுமதி தான் ஒரு இறப்புக்காக அவசரமாக கோயமுத்தூர் செல்ல வேண்டுமென்றும், அதனால் அந்த டிக்கெட்டில் அவர் வர விரும்புவதாகவும் சொன்னார். நான் உடனே சரியென்றேன்.

வெள்ளிக்கிழமை இரவு பத்தரைக்கு வோல்வோ கிளம்பியது. பஸ் வேகமெடுக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு, வெளிர்நீல நிறத்தில் இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. எனக்குத் தூக்கம் வரவில்லை.

நான் ஒருக்களித்துப் படுத்தபடி தவறான எண்ணத்துடன் மேடம் பானுமதியின் மீது என் வலது கையை படர விட்டேன். ஆனால் அவர் கோபத்துடன் என் கையைத் தள்ளிவிட்டு எழுந்து சென்று காலியாக இருந்த வேறு ஒரு படுக்கையில் போய் படுத்துக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். நான் வெட்கிப்போனேன்.

இதுதான் நடந்த உண்மை.

என் கீழ்மையான நடத்தைக்கு நான் மிகவும் வருந்துகிறேன். இதற்காக நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் தங்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேட்கத் தயார்.

ஆனால், இதற்கும் கம்பெனிக்கும், என் வேலைக்கும் என்ன சம்பந்தம்?

இரவு பத்தரை மணிக்கு மேல், ஓடும் பஸ்ஸில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி. அதனால் தாங்கள் என்னை வேலையை விட்டு நீக்க முடியாது.

தவிர, லாயருக்கு நம் கம்பெனியைப் பற்றி நன்கு தெரிந்திருக்கிறது. அவர் மகன் நம்மிடம் இரண்டு மாத காலம் சம்மர் ட்ரெயினிங் ஏற்கனவே எடுத்திருக்கிறான். அவன் நம் எம்.டிக்கும், பீஆர்ஓ ஜெயந்திக்கும் உள்ள நெருங்கிய உறவு பற்றி தன் அப்பாவிடம் அப்படியே சொல்லியிருக்கிறான்…

லாயர் தியாகு என்னிடம் நம் எம்.டி பற்றி துருவித்துருவி கேட்டார்.

அது நம் எம்.டியின் தனிப்பட்ட விஷயம் என்பதால் நான் லாயரிடம் எதையும் சொல்லவில்லை… ஏனெனில் நம் கம்பெனியின் அழுக்குத் துணியை அவர்முன் அலச விரும்பவில்லை.

எனவே, தாங்கள் என்னை மேற்கொண்டு தொந்திரவு செய்தால், நான் லீகலாகச் செல்ல வேண்டியிருக்கும்.

இதுதான் என் உறுதியான பதில்.

இப்படிக்கு, வைத்தியநாதன்.

கடிதத்தைப் படித்த திம்மையா, அதை எடுத்துக்கொண்டு உடனே எம்.டியிடம் ஓடினார். அதைப் படித்துப் பார்த்த எம்.டி யின் முகம் கறுத்தது. ஜெயந்தியைப் பற்றி அந்தக் கடிதத்தில் இருந்ததை அவர் ரசிக்கவில்லை…

“திம்ஸ், இதை இப்படியே வளர விட்டு விடக்கூடாது. உடனே அக்கவுண்ட்ஸ் பானுமதியை இங்கே வரச்சொல்…”

பானுமதியை இண்டர்காமில் தொடர்புகொண்டதும், அவள் எம்.டி ரூமுக்கு விரைந்து வந்தாள். எம்.டி அவளை அமரச் சொன்னார்.

“பானு, எல்லா விஷயத்தையும் திம்மையா என்னிடம் சொன்னார். நாங்க வைத்தியநாதனுக்கு மெமோ கொடுத்தோம். அவர் தன்னுடைய தவறை நேர்மையாக ஒப்புக் கொண்டுள்ளார். தங்களிடம் நேரில் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக எழுதியிருக்கிறார். தவிர, கம்பெனிக்கும் இதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்கிறார். நான் அவரை உடனே இங்கு வரச் சொல்கிறேன். அவர் தங்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டதும், நாம் இதை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்… பெரிது படுத்த வேண்டாமே ப்ளீஸ்…”

“அதெப்படி ஸார்…? ஒருத்தர் என்னிடம் பிஸிகலாக அத்து மீறியிருக்கிறார். அதை ஒப்புக்கொண்டு, என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் சரி என்றாகி விடுமா? பெண்மைக்கு தாங்கள் தரும் மரியாதை இதுதானா? இப்படிப்பட்ட கம்பெனியில் நான் வேலை செய்ய இனியும் விரும்பவில்லை…நான் இப்போதே நின்று கொள்கிறேன். இதை வேறு விதமாக டீல் செய்து கொள்கறேன். கடைசியில் ஆண்கள் எல்லோரும் ஒன்று கூடிவிட்டீர்கள்….” கண்கள் கலங்கின.

எம்.டியால் உடனே அவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. நிலைமை கையை மீறிப் போவதை உணர்ந்தார்.

“ஓகே பானு, தாங்கள் அடுத்த அறையில் பத்து நிமிடங்கள் காத்திருங்கள்…”

பானுமதி அங்கிருந்து அகன்றாள்.

எம்.டி பானுமதியின் பர்சனல் பைலை பார்க்க வேண்டுமென்று சொல்ல, அதை உடனே திம்மையா தன் உதவியாளரை எடுத்து வரச் செய்தார்.

எம்.டி பைலை பிரித்துப் படித்துப் பார்த்தார்.

“இருபத்திஎட்டு வயது… ஸி.ஏ., ஐஸிடபிள்யூஏ இரண்டும் டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்திருக்கிறாள். நிறைய காஸ்ட் கட்டிங் செய்து நம் கம்பெனிக்கு கடந்த இரண்டு வருடங்களில் அதிக சேமிப்பு காட்டியிருக்கிறாள். கெட்டிக்காரி. வேலையை விடுவதானால் மூன்றுமாத நோட்டீஸ் அவள் நமக்குத் தரவேண்டும்…. ஹும்” என்று பெருமூச்சு விட்டார்.

திம்மையாவிடம் ஆலோசித்துவிட்டு, பானுமதியை வரச்சொன்னார்.

“பானு யு ஆர் டூ குட் பார் அவர் கம்பெனி. இரண்டு வருட சர்வீஸ். நீங்கள் வேலையை நிறுத்திக் கொண்டால் மூன்று மாத நேரக் கெடுவோ அல்லது அதற்கு ஈடான பணமோ நம் கம்பெனிக்குத் தரவேண்டும். அதே சமயம் வைத்தியநாதன் நம் கம்பெனிக்காக முப்பது வருடங்கள் நேர்மையாக உழைத்திருக்கிறார், அதுவும் பர்சேஸ் டிபார்ட்மெண்ட்டில். தவறை ஒப்புக்கொண்டு தங்களிடம் மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருக்கிறார்…. அதைத் தாங்கள் ஏனோ ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை…

“………………………”

“இருப்பினும் நான் தங்களிடம் மிகவும் நேர்மையாக நடந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள் இன்றே இப்போதே ராஜினாமா செய்து விடுங்கள். மூன்று மாதக்கெடு எதுவும் வேண்டாம். தாங்கள் வேறு வேலை தேடிக்கொள்ள ஏதுவாக அந்த மூன்று மாத சம்பளத்தை கம்பெனியே தங்களுக்கு இன்று மாலையே வழங்கிவிடும்… இதுதான் வின் வின் சிட்சுவேஷன் என்று நான் கருதுகிறேன்… ஹெச்.ஆர் தங்களுடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு இன்றே ரிலீவிங் ஆர்டர்; சர்வீஸ் சர்டிபிகேட் எல்லாம் தங்களுக்கு வழங்கிவிடும்… என்ன சொல்கிறீர்கள்?”

“யெஸ் பானுமதி எம்.டி சொல்வதில் நியாயம் இருக்கிறது…” என்று திம்மையா ஒத்துப் பாடினார்.

பானுமதி அமைதியாகத் தலையை ஆட்டி ஆமோதித்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றாள். அவள் போனவுடன், “திம்ஸ் ஐ டோன்ட் வான்ட் எனி மோர் காம்ப்ளிகேஷன்ஸ்…” என்றார்.

திம்மையா அங்கிருந்து அகன்றார். எம்.டி பெருமூச்சு விட்டார். ஜெயந்தி விஷயத்தை கிளறாமல் பார்த்துக் கொண்டாரே…

அன்று இரவு எட்டரை மணி.

பானுமதியின் வீட்டு டைனிங் ஹால்…

“வைத்தி சித்தப்பாவுக்குத்தான் நான் ரொம்ப நன்றி சொல்லணும். எனக்கு அவர் சித்தப்பா என்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் என்னை கம்பெனியில் சேர்த்து விட்டது முதல், துபாயில் எனக்கு வேலை கிடைத்ததும், நோட்டீஸ் பிரியட் இல்லாமல் மேலும் அதற்கான பணத்தையும் எனக்கு வாங்கிக் கொடுத்து, எனக்கு ரிலீவிங் ஆர்டர் வாங்கிக் கொடுத்தது வரை, அவர் டைரக்ஷனில் எல்லாமே சிறப்பாக நடந்தேறியது…”

சித்தி, “இந்தக் கம்பெனி திம்மையா சுத்த அசமந்தையா இருப்பான் போல…போன வெள்ளிக்கிழமை சித்தப்பா பொன்னேரி பாக்டரிக்குத்தான் போனாரு… சென்னை ஆபீஸுக்கே போகலை; அப்ப எப்படி கேன்டீன்ல உன்னைச் சந்தித்துப் பேசியிருக்க முடியும்? தவிர வோல்வோ பஸ்ல உங்க பேர்ல யாராவது பயணம் செய்தார்களா என்றும் செக் செய்யவில்லை. ஒரு பெண் புகார் அளித்துவிட்டால் அதை நம்புகிற பிரகஸ்பதிகள்தான் நம் நாட்டில் அதிகம்…” என்றாள்.

“தியாகராஜன்னு கிரிமினல் லாயர் எவனும் கிடையாது., அவன் பையனும் சம்மர் ட்ரெயினிங் எடுக்கவில்லை” சிரித்தார் வைத்தியநாதன்,

பானுமதி; வைத்தி சித்தப்பா எனப்படும் வைத்தியநாதன்; சித்தி, பானுமதியின் கணவன் அனைவரும் கொல்லென சிரித்தனர்.

பானுமதி அடுத்த வாரம் துபாயில் புதிய வேலையை ஒப்புக்கொள்ள ஆர்வமானாள்…

நல்ல வேளையாக துபாயில் அவர்கள் கேட்ட கம்பெனி சான்றிதழ்கள் அனைத்தும் இப்போது தயார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *