கோயில் மணி ஓசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,753 
 

(1996 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று நள்ளிரவிற் புது வருடம் பிறக்க இருக்கிறது. வீட்டிலிருந்து அண்மையிற்தான் கோயில் இருக்கிறது. புது வருடத்தை எதிர்பார்த்து விழிப்பிரவு ஆராதனையும் அதைத் தொடர்ந்து அர்த்த சாமப்பூசையும் அங்கு நடைபெறும். ஆனால் வேதநாயகத்தாராற் கோய் லுக்குப் போக முடியவில்லை.

மார்கழி மாதம் முழுவதும் ஒரே மழை. அடைமழை. ஊரிலுள்ள குண்டுகுழிகளில் நீர் நிரம்பி வழிந்தது. வெள்ளக்காடு. வாடைக்காற்று உஸ்ஸென்று வேகமாக ஊதியது. அந்தக் கூதலிலும் கொடுகலிலும் வேதநாயகத் தாரால் வெளியே போகவே முடியவில்லை. மேலே அணிந்திருந்த சுவெற்றருக்கும் உள்ளின் உள்ளே என்புக் குழலட்டைகளையும் உறையச் செய்யும் குளிரில் அவர் விறைத்துக் கொண்டிருந்தார்.

கடந்த மூன்று நாட்கள் தான் வெய்யில் முகத்தைக் காணமுடிந்தது. ஆனாலும் இரவிலே பனி மழையாகவே கொட்டுகிறது. ஆமாம், தைப்பனி தொடங்கிவிட்டது.

“அப்பு, நீங்கள் கோயிலுக்குப் போகவில்லையா?”

“என்னால ஏலாது மகள். பொல்லாத பனியுங் குளிரும், நீங்க எல்லாரும் போங்க. நான் வீட்டிலே இருக்கிறன். விடியப் பூசைக்குப் போறன்.”

“நீங்க கோயிலுக்குப் போவீங்க என்று தான் பார்த் தேன். நீங்க போகாட்டி நான் போறேன். பிளாஸ்கில ஒங்களுக்குக் கோப்பி ஊத்தி வச்சிருக்கன்” என்ற மகள் தன் குடும்பத்தோடு கோயிலுக்குப் புறப்பட்டுக் கொண் டிருந்தாள்.

பத்தரைக்கு மேல் மூன்றாம் மணி அடித்தது. பதினொரு மணிக்கு விழிப்பு ஆராதனை தொடங்கி விடும்.

பதினொரு மணி நெருங்கியபோது வேதநாயகத்தார் வீட்டிலே தனத்து விடப்பட்டிருந்தார்.

கட்டிற் தலைமாட்டில் தலையணையை நிமிர்த்தி வைத்து அதிலே சாய்த்து கொண்டு பைபிளைப் புரட்டத் தொடங்கினார். தலைமாட்டிலிருந்த திருவழிபாட்டுக் காலண்டர் இன்றையப் பூசையில் வாசிக்கப்பட இருக்கும் வேதாகமப் பகுதிகளைச் சுட்டிக் காட்டிக் கொண் டிருந்தது.

ஆனால் வேதநாயக வாத்தியாருக்கு ஆச்சரியமாகவும் இருந்தது! அன்றைப் புதுவருட முதல் நாள் தேவதாயின் திருநாள் – கடன் திருநாள் என்று அதிலே எழுதப் பட்டிருந்தது!

அவர் ஆரம்ப வகுப்பு மாணவனாக இருக்கையில் புதுவருட தினத்தைக் கிறிஸ்து நாதரின் விருத்த சேதனத் திருநாள் என்றுதான் அறிந்திருந்தார். ஆனாலும் விருத்த சேதனத்தைப்பற்றி எவருமே கவலைப்பட்ட தில்லை. விருத்த சேதனம் கிறிஸ்தவரிடையே நடைமுறை யில் இல்லாதது காரணமாக இருக்கலாம். அத்தினம் புது வருடப் பிறப்பாகவே கொண்டாடப்பட்டது.

இன்றுங்கூட அந்த வழக்கம் மாறவில்லை. அதை மாற்றவோ மறப்பிக்கச் செய்யவோ எவராலும் முடிய வில்லை. ஆனால் விருத்த சேதனத் திருநாள் தேவ தர்யாரின் திருநாளாக மாற்றப்பட்டதை அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. திருச்சபையின் வழி பாட்டு நடைமுறைகளிற்தான் எத்தனை மாற்றங்கள்! வேதநாயக வாத்தியார் மாற்றங்களோடு ஒத்துப் போக முடியாத ஒரு பழமைவாதி. அனாக்ரோணிஸம்.

மனத்துட் குறைப்பட்டுச் கொண்டே வேதநாயக வாத்தியார் பைபிளைப் பிரித்து அன்றைய வழிபாட்டின் முதலாம் வாசகமாகக் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தார்.

சபிக்கப்பட்ட தண்ணீர் உன் கருப்பையில் விழவே, உன் கருப்பை வீங்கவும், உள் தொடைகள் அழுகவும் கடவன என்று குரு சொல்லும்போது அந்தப் பெண் ஆமென், ஆமென் என்று கூறக் கடவாள். பின்னர் குரு இந்தச் சாப வார்த்தைகளை ஒரு புத்தகத்தில் எழுதி, தம்மாலே சபிக்கப் பட்ட மிகக் கசப்பான தண்ணீரால் அவ் வெழுத்தைக் கழுவிக் கலைத்து, அதை அவ ளுக்குக் குடிக்கக் கொடுப்பார். அவள் குடித்தபின், குரு எரிச்சலின் காணிக் கையை, அந்தப் பெண்ணின் கையில் இருந்து வாங்கி, அதை ஆண்டவருடைய முன்னிலையில் உயர்த்திக் காட்டிய பீடத் தின் மேல் வைக்கப்போகும்போது, முதலிற் பலிபீடத்தின் மேற் தகனிப்பதற்காசு அதினின்று ஒருபிடி மாவை எடுத்து வைக்கக் கடவர். அதன்பின் கசப்பான தண்ணீ ரை அப்பெண் குடிக்கும்படி கொடுப்பார். அதை அவள் குடித்தபின்பு தான் உண்மையாகவே தீட்டுப்பட்டுக் கணவனுக்குத் துரோகம் செய்து விபசாரியானவளென்றால் சபிக்கப் பட்ட தண்ணீர் உள்ளே புகுந்து விடும். அந்தப் பெண் மக்களுக்குள்ளே சபிக்கப் பட்டவளாகி எல்லாருக்கும் மாதிரியாக இருப்பாள். மோயீசன் காலத்திற் சுத்திகரிப்பு எத்தனை கொடூர மாகவும், கோரமாகவும் இருந்தது என்பதைச் சிந்தித்த வாத்தியார் பதினைந்து ஆண்டுகளுக்குமுன்னே மரணித்த தம் மனைவியை நினைந்து கொண்டார்!

வாழ்க்கையில் அவர் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கலாம் சண்டைக்காரன் என்று பேர் வாங்கியிருக்கலாம். ஆனால் எக்காலத்தும் மோகபாவத்தைக் கட்டிக் கொண்டவரல்ல. கல்யாணமான நாள் தொடக்கம் இன்றுவரை ஏகபத்தினி விரதன் தான் என்ற திருப்தியோடு நாட்காட்டி சொல்லிய சங்கீதங்களைப் படிக்கத் தொடங்கினார்.

இறைவா! மக்களினங்கள் உம்மைப் போற் றிப் புகழ்வார்களாக. நீதியோடு மக்களை ஆள்கின்றீர். உலகத்து மக்களினங்களின்மீது ஆட்சி செலுத்து கின்றீர் என்று நாடுகள் அனைத்தும் மகிழ்ந்து கூறட்டும் இறைவா! மக்களினங்கள் உம்மைப் போற் றிப் புகழ்வார்களாக. மக்கள் எல்லாரும் உம்மைக் கொண்டாடுவார்களாக. பூமி தன் பலனைத் தந்தது. கடவுள் தமக்கு ஆசி அளித்தார். கடவுள் நமக்கு ஆசி அளிப்பாராக. மாநிலத் தின் கடையெல்லை வரை மக்கள் அவருக்கு அஞ்சுவார் களாக. இந்தச் சங்கீதங்கள் வேதநாயகத்தாரின் மனத்தைக் கொள்ளை கொண்!-ன. மழை, வெள்ளம், புயல்போன்ற இயற்கைக் கொடூரங்களுக்கும், விமானக் குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல், ஏகே வேட்டு என்ற மனிதக் கொடுமை களுக்கும் தப்பி, எழுபத்தைந்து நீண்ட ஆண்டுகளாக உலகிலே வாழ்ந்து விட்டார் அவர். அவர் வாழ்வில் இன்னோர் புத்தாண்டு வரப்போகிறது. அந்தப் பெருமித மான நன்றியுணர்வில் அச்சங்கீதங்கள் மீண்டும் மீண்டும் பாடிப் பரவசமானார். மனம் இலேசாகி அடைக்கலாங் குருவியைப்போலக் காற்றில் ஜிவ்வென்று பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

இலகுவாகி விட்ட மனதோடு வேதப் புத்தகத்தைப் புரட்டி அன்றைய இரண்டாம் வாசகத்தைப் படித்தார்.

ஆனாற் காலம் நிறைவுற்றபோது, நாம் இறைவனின் பிள்ளைகளாகும்படி, திருச் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்டுக் கொள்ளும்படியாகக், கடவுள் தன் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும், திருச் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவராகவும் அனுப்பினார். அந்த ஆவியானவர் அப்பா தந்தாய் எனக் கூப்பிடுகிறார். ஆகவே நீ அடிமை அல்ல. மகன் தான். மகனின் உரிமை யாளனுமாம். இவை யாவும் கடவுளின்

செயலே. ஆம் நான் கடவுளின் பிள்ளை . கடவுள் எனக்காகவே மனித அவதாரம் எடுத்தார் என்ற பெருமிதத்தோடு எண்ணிக் கொண்டார் வேதநாயகத்தார்.

இந்த வாசகங்களையும் அவற்றின் பொருளையும் எல்லோரும் விளங்கிக் கொள்வார்கள். அதற்கும் மேலாகப் பூசையிடை யே குரு அவைகளுக்கு விளக்கங் கொடுப்பார். அப்படியிருந்தும் இந்த வாசகங்கள் ஒவ் வொன்றிற்கும் யாரோ ஒருத்தி வந்து விளக்கங் கொடுப் பாள். இத்தனைக்கும் ஊர் மக்களில் யாருமே எழுதப் படிக்கத் தெரியாதவர்களுமல்ல. ஆகவே இந்த வாசக விளக்கங்களும் முன்னுரைகளும் தேவைதானா? என் பிதா வின் கோயிலைக் கள்ளர் குகையாக்க வேண்டாம் என்று கிறிஸ்து நாதர் சொன்னார் அல்லவா? வாசக விளக்கங் கொடுக்கும் இந்தப் பெண்கள் கோயிலை நாட்டிய மேடையாக்குகிறார்கள். வாசக விளக்கம் கொடுக்கும் – பெண்களைப் போட்டோ எடுப்பதும், அவள் ஏதோ இமாலய சாதனையைச் சாதித்தது போலப் பெருமைப் பட்டுக் கொள்வதும் எல்லாமே வெறுங் கூத்துத்தான்.

நத்தார்ச் சாமப் பூசையில் அந்தக் கூத்துக்களைக் கண்டு மனம் சலித்துப் போய்ப் பூசை முடிந்ததும் வேதநாயக வாத்தியார் தன் வயதான தன் மைத்துன னிடம் கேட்டார். “நத்தார்ப் பூசை முடிந்துவிட்டது. வருடப் பூசையை அலங்கோலப் படுத்துகிறவர் யார்?

அவரும் சிரித்துக்கொண்டு சொன்னார். “இப்ப காலம் மாறிப் போச்சு. தம்ம காலத்தில் பெண்டுகளைப் பீடத்தில் ஏறவே விடமாட்டம். குருவாக அபிஷேகம் பண்ணப்படாத கன்னியர்களும், சகோதரர்களும் சற் பிரசாதங் கொடுக்கிறாங்க, முறமையான குருவினால் பூசைப்படி ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்று நாம பெரிய குறிப்பிடத்தில படிச்சதெல்லாம் இப்ப நடை முறையில் இல்லை .”

“ஆமாம். இதுகளெல்லாம் ஏன் பீடத்தில ஏறு துகள்? பீடத்தில சற்பிரசாதம் இருக்கிறதென்று ஒரு மட்டு மரியாதை இல்ல. நாமெல்லாம் கோயிலுக்கு வந்தா முதலில ஒற்றை முழந்தாளிலிருந்து சற்பிரசாதத்தை நமஸ்கரிப்போம். சற்பிரசாதம் வெளியே இருந்தா, இரட்டை முழந்தாளிலிருந்து ஆகாரம் பண்ணுவோம். இப்ப திறந்த வீட்டுக்க நாய் பூர்ற மாதிரிக் கோயிலுக்க நுழைஞ்சிடிறில் பழகக்குள்ள தலையைக் குனியுற மாதிரி ஒரு வெட்டு. அவ்வளவுதான்!

வேதநாயக வாத்தியாருக்கு ஆத்திரமாயிருந்தது.. ஆத்திரம் அடங்கியதும், பைபிளைத் திறந்து அன்றையப் பூசையில் வாசிக்க இருக்கும் லூக்காஸின் நற்செய்தியைப் படித்தார்.

இடையர்கள் விரைந்து சென்று மரியாளை யும் சூசையையும் முன்னிட்டியிற் கிடத்தி யாருந்த குமாரனையும் கண்டனர். கண்ட பின்னர் அப்பாலனைப் பற்றித் தமக்குக் கூறப்பட்டதைப் பிறருக்கு அறிவித்தார்கள். கேட்டவர்கள், தங்களுக்கு இடையர் கூறி யதைப் பற்றி வியப்படைந்தார்கள். மரியாளோ உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்தாள். இடையர்கள் தாம் கண்டது கேட்டது எல்லாம் நினைத்துக் கடவுளை மகிமைப் படுத்திக்கொண்டே திரும்பினர். அவர்களுக்குச் சொல்லியபடியே எல்லாம் நிகழ்ந்திருந்தது. எட்டாம் நாள் வந்தபோது குழந்தைக்கு விருத்த சேதனம் செய்ய வேண்டியிருந்தது. தாய் கருத்தரிக்கு முன்பே தூதர் குறிப்பிட்டி ருந்தபடி இயேசு என்னும் பெயரை அவருக்குச் சூட்டினார்கள். வேதநாயக வாத்தியார் பலதுறை படித்திருந்த வாக்கியங்கள் தான் அவை. ஏன்? ஊரிலே சகலருக்கும். அவ்வரிகள் மனப்பாடம்!

ஆனால் அவர் இளைஞனாக-வாலிபனாக இருந்த காலங்களில் பூசையின்போது சுவாமியார் லத்தீன் மொழியிலேயே இவைகளை வாசிப்பார். அவர் வாசித்து முடிந்ததும் கோயில் உபதேசியார் சொன்சால்வெஸ் அடிகளார் எழுதிய சுவிசேஷ விரித்துரையிலிருந்து அச்செய்தியைப் படிப்பார்.

பிரமாதமான வர்ணனைகளோடும், கற்பனாலங் காரத்தோடும் அவ்விரித்துரைப் பகுதிகளை நினைவு படுத்திப் பார்த்தார். ஞாபகத்துக்கு வரவில்லை.

படுபாவிகள்! வீட்டை எரித்தவர்கள் புத்தகங்களை யும் அள்ளிப் போட்டுப் பத்த வைச்சி விட்டாங்கள். இல்லாட்டிச் சுவிசேஷ விரித்துரையை எடுத்துப் படிக்க லாம். இந்தத் தலைமுவறக்குக் கொன்சால்வெஸ் அடிகளார் எழுதிய விரித்துரையே தெரியாது. – கோயிலிலிருந்து ஒலி பெருக்கியிற் பாட்டு மிதந்து வந்தது.

வேதநாயக வாத்தியாருக்குத் தற்போதைய பாடல்கள் அதிகமாகப் பிடிப்பதில்லை. அதிலும் நல்ல நாட் திருநாட்களில் இசைக்குழு ‘ றவ்வாணமும்’ அடிச்சுக் கொண்டு பாடும். அவருக்குக் கட்டோடு அது பிடிப்ப தில்லை !

வேதநாயக வாத்தியார் அந்தக் காலத்துப் பாடல் களை நினைத்துக் கொண்டார்.

அவர் காலத்திலே வருடப் பிறப்பன்று இரவு விழிப் பாராதனை இல்லை. அதற்கு முந்திய நாள் மாலையில் வழிபாடு நடக்கும். அவ்வழிபாட்டில் நன்றிக் கீதம் பாடுவதுதான் முக்கிய நிகழ்ச்சி.

ஒலிபெருக்கியில் வரும் பாட்டுச் சத்தம் தன் காதுகளில் விழக்கூடாது என்ற வேகத்தோடு அந்த நன்றிப் பாடலை உரத்துப் பாடத் தொடங்கினார்.

‘TE DEUM LAUDA MUS
TE DOMINUM CONFITEMUR

தன் நினைவிலிருந்த வரைக்கும் அந்த நன்றிக் கீதத்தைப் பாடிவிட்டு ஓய்ந்த வேதநாயகத்தார் மேசையிலிருந்த வானொலியின் முள்ளைத் திருகி முடுக்கினார்.

வெள்ளவத்தை மெதடிஸ்த தேவாலயத்திலிருந்து தள்ளிரவு ஆராதனை அஞ்சலாகிக் கொண்டிருந்தது. ஏனோ அது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆங்கில அலை வரிசையைத் திருப்பினார். கறுவாக்காடு பப்டிஸ்த ஆலயத்திலிருந்து ஆராதளைகள் அஞ்சலாகிக் கொண்டிருந்தன.

வேதநாயக வாத்தியார் வானொலியின் கழுத்தைத் திருகி அதைக் கொன்று விட்டுச் சுவர்ச்கடிகாரத்தைப் பார்த்தார். வருடம் பிறக்க இன்னமும் ஐந்தே ஐந்து நிமிடங்கள் இருந்தன. கட்டிலிற் சாய்ந்திருந்த வேத நாயகம் எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

அவர் எழுபத்தைந்து வருடப் பிறப்புக்களைச் சந்தித்து லிட்டார். ஒரே ஒரு வருடப் பிறப்பை மட்டும் மூன்றாம் வருடம் றாகமவில் தன் மகனோடு சந்தித்தார். இன்றைய வருடப் பிறப்பையும் விட்டால் அவர் நினைவறிந்த நாட்களிலிருந்து தம்மூர்க் கோயிலிற்தான் எல்லா வருடப் பிறப்புக்களையும் சந்தித்திருக்கிறார்! அவர் மட்டுமல்ல. ஊரிலே ஆண்களும் பெண்களுமான பலர் வருடப்பிறப்புக்காகக் கோயிலிலேதான் அமைதி யாகக் காத்துக் கொண்டிருப்பார்கள். மணிக்கூடு தன் இரு கரங்களையும் கூப்பிப் பன்னிரண்டில் நிறுதிட்ட மாகக் கூடுகையிற் புது வருடம் பிறக்கும். வெடிகள் முழங்கும். மேளம் கொட்டும். எல்லாவற்றிற்கும் மேலாகக் கோயில் மணி தன் சுநாதத்தால் ஊர் முழுவதை யும் நிறைக்கும்.

முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னே அரசுரிமைப் போராட்டத்திற் தோல்வி கண்டு தூத்துக் குடியிற் சரணடைந்த கொட்டியாபுரத்து வன்னியனுக்கு, அனுசரணையாகத் தூத்துக்குடியிலிருந்து வந்த வேத தாயகத்தின் முன்னோர் தாம் வரும்போதே கோயில் மணியையும் கொண்டு வந்திருப்பார்கள்.

அதற்கும் சில ஆண்டுகளின் பின்னால் சங்கைக்குரிய யோசேப் வாஸ் முனிவர் இவ்வூருக்கு வருகை தந்த மூன்று தடவைகளிலும் அக்கோயில் மணி ஒலித்திருக்கும். அதற்கும்பின் யாழ்ப்பாண மேற்றிராணியார் இவ்வூருக்கு வருகைதந்த போதும் அம்மணி ஒலித்திருக்கும். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இம்மறை மாவட்டத்தின் முதல் ஆயரான ‘சாள்ஸ் லலிஞ்’ ஆண்டவர் இவ்வூருக்கு வந்திருந்தபோதும் கோயில் மணி ஒலித்திருக்கும். ‘ அதற்கும் பின்னால் வந்த ஐந்து ஆயர்கள் ஊருக்கு வருகைதந்த போது கோயில் மணி ஒலித்ததை வேதநாய கத்தார் தன் காதுகளாற் கேட்டிருக்கிறார்.

அந்தக் கோயில் மணி ஓசை அவர் வாழ்க்கையோடு கலந்து விட்டிருந்தது. இளமைப் பருவத்திற் காலை ஐந்து மணிக்குத் திருந்தாதி மணி ஒலித்ததுமே அவர் தாயார் அவரைப் படுக்கையில் இருந்து எழுப்பிவிடுவார். முகம் கழுவி உடுப்பை மாற்றிக் கொள்கையில் காலை ஆறு மணிப் பூசைக்காகக் கோயில் மணி ஒலிக்கும்.

அம்மணி ஓசையைக் கேட்டவுடன் கோயிலுக்குச் சென்று பூசைப் பரிசாரகனாகப் பணியாற்றுவார். ‘சர்வேசுரனுடைய பீடத்திற் பிரவேசிப்பேன்’ என்று குருவானவர் கூற, ‘என் வாலிபத்தை மகிமைப்படுத்தும் தேவனிடத்திற் பிரவேசிப்பேன்’ என்று லத்தீன் மொழியிற் பதிலுரைக்கையில் எத்தனை பூரிப்பு!

பூசை முடிந்து வீடு திரும்பிச் சாப்பாடாகியதும், கோயிலில் முதலாம் மணி அடிக்கும். ஏழு மணிக்கு ஒலிக்கும் அம்மணி ஓசை பாடசாலைக்கான முதலாம் மணி. ஏழரை மணிக்கு இரண்டாம் மணி ஒலிக்கும்.

பாடசாலைக்குப்போன பின்னர் மதியம் பன்னிரண்டு மணிக்குத் திருந்தாதி மணி ஓவிக்கும். பாடசாலையில் எல்லாருமே எழுந்து நின்று. ‘ஆண்டவருடைய சம்மனசானவர் மரியாய்க்கு விசேஷஞ் சொல்ல’ என்று செபிப்பார்கள்.

சாயந்தர வேளைகளிற் பக்திச் சபைக்கூட்டங் களுக்காகவோ, வணக்கமாதச் செபமாலைக்கோ, கோயிலிற் குடி கொண்டிருப்பவரின் நவநாளுக்காகவோ அம்மணி ஒலிக்கும். கடைசியாய் இரவு ஏழரை மணிக்கு மரித்தவர்களுக்குச் செபிப்பதற்காகக் கோயில் மணி ஒலிக் கும். அந்த மணியோடு அன்றைய நாளைக்கு அதன் ஓசை அடங்கும்.

அப்படியிருந்தும் ஒருநாள் அர்த்த ராத்திரியில் கோயில் மணி ஓசை கேட்டது. ஊரவர் எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். வேதநாயக வாத் தியாரும் ஓடினார். கோயிலுக்கு அருகாமையில் ஒரு ஓலை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஊர்ச் சனங்கள் எல்லோரும் சேர்ந்து தீயை அணைத்தார்கள்!

ஊரிலே மரணம் சம்பவித்தாலும், இளைப்பாற்றி, மணி அடித்து அதன் ஓசை அச்சம்பவத்தை ஊர் முழு வதற்கும் அறிவிக்கும். மட்டக்களப்பிலோ, திருக்கோண மலையிலோ சுவாமியார் யாராவது மரணமடைந்தாலும் இளைப்பாற்றி மணி ஒலிக்கும். ஏன் பாப்பரசர்கள், மேற் பிராணியார்களின் மரணத்தைக்கூட அம்மணி ஓசை அறிவித்தது.

அவர் ஞானத் தந்தையும் தாயும் சிறு குழந்தையாக இருந்த அவரைத் தூக்கிக் கொண்டு வந்து கோயிலிலே } ஞானஸ்னானம் கொடுத்தபோதும் அம்மணி ஒலித்திருக் கும். அவர் வாலிபனாகித் தன் மனைவியைக் கைப்பிடித்த போதும் அம்மணி – ஒலித்தது. அவர் பிள்ளைகளதும் பேரப் பிள்ளைகளதும் திருமுழுக்கின்போதும் அம்மணி ஒலித்தது.

வேததாயகத்தாருக்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. அவருடைய உறவுச் சகோதரி ஒருத்தி அயற்கிரா மத்துப் பிறசமயி ஒருவனைக் காதலித்து அவனோடு ‘ஓடி’ விட்டாள்! அவளுக்கு எப்படியாவது இரு சமய சம்பந்த விவாகம் செய்து கோயிலிற் கைப்பிடித்து மணியடிக்க வேண்டும் என்று அவர் பிரயத்தனப்பட்டார்.

ஆனாற் “கோயிலிற் கைப்பிடிக்க எனக்குச் சம்மதந்தான். எனக்கு எம்மதமும் சம்மதமே. ஆனால் பிள்ளை களுக்கு ஞானஸ்னானம் கொடுக்க வேண்டும் என்று ஒப்ப மாட்டேன். பிள்ளைகள் வளர்ந்த பின்னர் விரும்பிய சமயத்தை அவர்கள் கடைப்பிடிக்கட்டும்.”

என்று அவள் காதலன் மிக நிதானமாகவும் நேர்மை , யாகவும் சொன்னார். சுவாமியார் இதற்கு ஒப்பவில்லை. இதனாற் கோயிலுக்குப் புறம்பாகத்தான் அவளுக்குத் திரு மணம் நடந்தது.

அவள் அவிசாரியாடவில்லை. மிகக் கண்ணியமாகத் தான் குடும்பம் நடத்தினாள். எப்போதாவது நல்ல நாட் – திருநாட்களில் அவள் கோயிலுக்கு வருவாள். ஆனால் ஊர்ச்சனம் பெருவியாதிக்காரியைப் பார்ப்பது போலத் தான் அவளைப் பார்க்கும். அத்தனை அசூயை.

அவள் மரித்தபோது தன் சடலத்தைக் கோயிலுக்குக் கொண்டு போகவேண்டும் என்று அவள் விரும்பியதாக அவள் கணவன் சொன்னார்.

வேதநாயக வாத்தியார் சுவாமியிடம் சென்று கதைத்துப் பார்த்தார். ஆனால் ஊரவர்களின் நெருக் குதலிற் சுவாமியார் அவளுக்கு இளைப்பாற்றி மணி யடிக்க மறுத்துவிட்டார். கடைசியாய்க் கோயில் வெளி விறாந்தையில் அவள் சடலத்தை வைத்து குருசுமணியும் கத்திசால்களுமில்லாமல் சேமக்காலைக்குக் கொண்டு போக வேண்டியதாயிற்று. சவக்காலையிலும் ‘வெஞ் சாரிக்கப்படாத’ ஒதுக்கிடத்திற்தான் அவள் சடலம் அடக்கம் பண்ணப்பட்டது.

பிரேத ஊர்வலத்தில் சுவாமியார் லத்தீன் மொழியிற் பாட வேண்டிய பாடல்களை வேதநாயகத்தார் தமிழிலேயே பாடினார்.

சாதாரணமான லோக சாவில் ஏனோக் எலியேசை சாகாமல் நீர் மீட்டதுபோல-சுவாமி உந்தமது தாசனான சொந்த இவள் ஆத்துமத்தை உத்தமமாய் மீட்டு ரட்சிப்பீரே-சுவாமி ஏன்! சிவபுராணம் படிக்கிறது தானே என்று சிலர் விடுப்புக் கதை பேசினார்கள். வேதநாயக வாத்தியாரால் அதைத் தாள முடியவில்லை. இப்போதுங்கூட அவளுக்கு இளைப்பாற்றி மணி அடிக்கவில்லையே என்று அவர் மனம் அழுதது.

ஆனால் இன்று, அன்றையக் கட்டுப்பாடுகளில்லை. தம் பிள்ளை களை மனமுவந்து பிறசமயிகளுக்குக் கைய ளித்துப் பிறசமயிகளாகவே வளரும் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சிக் குலாவுவர்களும் கோயிற் பங்கு மேய்ப்புப் பணிச் சபையில் முக்கியமான அங்கத்தவர்களாக இருக் கிறார்கள். குருவானவரைக் கேட்டால் ‘திருச்சபைக்கு வெளியேயும் உண்மையான கிறீஸ்தவர்கள் இருக் கிறார்கள்’ என்று தத்துவம் பேசுகிறார். கோயில் மணி அவர்களுக்காகவும் ஒலிக்கிறது.

தினந்தினம் ஒலிக்கும் கோயில் மணி இரு நாட்களில் மட்டும் ஒலிப்பதில்லை.

அவர் வாலிபனாக இருக்கையில் பெரிய வியாழக் கிழமையன்று காலையிற்தான் பூசை. சாந்தூஸ் மணியோடு கோயில் மணி ஒலிக்காது. மீண்டும் சனிக்கிழமை காலை தண்ணீரையும் நெருப்பையும் ஆசீர்வதித்துப் பாஸ்காத்திரியைக் கொளுத்தும்போதுதான் மீண்டும் கோயில் மணி ஒலிக்கும்.

அந்த இரண்டு நாட்களிலும் கோயில் மணியின் இடத்தைத் ‘துக்கப் பறைகள்’ பிடித்துக் கொள்ளும்.

பாடசாலை மாணவனாக இருக்கையில் வேதநாயக வாத்தியார் குருத் தோலை ஞாயிறன்றே தன் துக்கப் பறையைத் தேடி எடுத்துக் கொள்வார். பெரிய வியாழனும் வெள்ளியும் திருந்தாதி அடிப்பது, பூசை மற்றும் சடங்குகளுக்கான நேரத்தை அறிவிப்பது எல்லாமே மதுக்கப்பறைகள் தான். படை பதைக்கும் சித்திரை வெய்யிலிற் தன்னொத்த இளைஞர்களோடு சேர்ந்து கொண்டு தெருவெல்லாந் திரிந்து துக்கப்பறை சுற்றுவதில் ஒரு குஷி!

பெரிய வியாழன் இரவும் வெள்ளி இரவும் கொன் சால் வெஸ் அடிகளாரின் வியாகுல பிரசங்கம் கோயிலிற் படிக்கப்பட்டு ஒவ்வொரு பிரசங்கத்தையும் ‘துக்கித்த திருமுகத்தை எங்களுக்குக் காண்பியும் சுவாமி’ முடிக் கையில், தம் கைகள் அலுத்துச் சோர்ந்து ஊர்ப் பெரியவர்கள் அதட்டி அடக்கும் வரையற் துக்கப்பறை யைச் சுற்றுவதில் ஓர் இன்பம்!

அந்த இளமை இன்பத்தை மனத்துட் சுகித்துக் கொண்டே வேதநாயக வாத்தியார் சுவர் மணிக்கூட்டை நிமிர்ந்து பார்த்தார். மணிக்கூண்டின் இரு கரங்களும் பன்னிரண்டு என்ற இலக்கத்திற் கூம்பிக் கொண்டு மெதுவாக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன.

மாணவப் பருவத்தில் மணிக்கூட்டின் இரு முட்களும் பன்னிரண்டிற்கூம்புவதை எதிர்பார்த்து மணிக்கயிற்றைப் பிடித்தபடி நின்றிருக்கிறார் மணிக் கயிற்றைப் பிடித்துக் கொள்ள மாணவரிடையே பலத்த போட்டி இருக்கும். அவர் ஆயுளில் மூன்றோ நான்கு தடவைகள் தான் மணிக்கயிற்றைம் பிடித்துக் கொள்ளும் பாக்கியம் அவருக்குச் சித்தித்திருக்கிறது. முட்கள் பன்னிரண்டில் ஒன்றை ஒன்று தொட்டதும் மணிக்கயிற்றைப் பிடித்துத் தன் ஆசை தீரமட்டும், தன் கைகள் அலுக்கும் வரையும் இழுத்தடித்திருக்கிறார். பக்கத்திலே பட்டாஸ்கள் வெடித்தன. மேளம் கொட்டியது. ஆனால் மணியடிக்கும் கர்மயோக சாதனையை எந்த முழக்கமும் குழப்ப வில்லை !

இப்போதும் மணிக்கூடு பன்னிரண்டு மணியைக் காட்டிக் கொண்டிருக்கிநது. தெருவெங்கும் காவல் தின்ற ஆமிக்காரரதும் பொலிஸ்காரரதும் கைகளிலிருந்த ஏகேக்கள் வேட்டுகளைத் தீர்க்கின்றன. அதைத் தொடர்ந்து மெதடிஸ்த தேவாலயத்தின் மணி ஓசை கேட்கிறது. ஆனால் அவரது புனித அந்தோனியார் கோயிலின் மணி ஓசை கேட்கவேயில்லை!

புதுவருடம் ஏகே வெடியோடுதான் தொடங்கி யிருக்கிறது. கோயில் மணி கேட்கவில்லையே. இந்த ஆண்டு ஊருக்கு என்னென்ன அனர்த்தங்கள் ஏற்படப் போகின்றதோ என்ற அங்கலாய்ப்போடு வேதநாயக வாத்தியார் வீட்டிலிருந்து எழுந்தார்’.

அவருக்கு வெறிபிடித்து விட்டதா?

போர்த்திருந்த போர்வையைச் சுழற்றி எறிந்து விட்டு என்புக் குழலிற்குள் இருக்கும் குழலட்டையையும் உறைய வைக்கும் பனியையும் பொருட்படுத்தாது கோயிலை நோக்கி ஓடுகிறார். இத்தனை வேகம் அவருக்கு எங்கிருந்து வந்தது?

இதோ கோயில் வளவை அடைந்துவிட்டார். வெளி விறாந்தையிற் கால் வைத்து ஏறுகையில் தடக்குண்டு விழுகிறார். சுதாரித்துக் கொண்டு எழுந்தவர் கோயிற் கோபுரத்தின் உச்சியில் உள்ள மணியின் நாக்கிற் கட்டப்பட்டுத் தொங்கும் மணிக்கயிற்றைப் பிடித்துக் – ‘கொள்கிறார். இழுத்து அடிக்கிறார்.

‘டண்’ என்று ஒரு சத்தம்.

மயக்கமாக வருகிறது. மீண்டும் மணியை அடிக் கின்றார்.

டண், டண் என்ற ஓசைகள்! மயங்கிக் கீழே விழுகிறார்!

புது வருடம் பிறந்ததுமே யார் இளைப்பாற்றி மணி யடிக்கிறார்கள்?

கோயிலுக்குள் இருந்தவர்கள் சிலர் மிரண்டு வெளியே வருகிறார்கள்.

வெளித் தாழ்வாரத்தில், வேதநாயக வாத்தியாரின் கட்டை தான் கிடக்கிறது! அவரது ஆத்மா தேவனோடு ஐக்கியமாகிவிட்டது!

பாவம் இன்றோ நாளையோ அவர் பிரேதம் சேமக்காலைக்குக் கொண்டு செல்லப்படுகையில் வழக்கம் போலக் கோயிலில் இளைப்பாற்றி மணி ஒலிக்கும். ஆனால் வேதநாயக வாத்தியாரின் செவிகளில் அந்த மணி ஓசை கேட்காது.

– 1996

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *