மாலை வெய்யில் அவள் முகத்தில் விழுந்து அவளின் வருத்தத்தை எதிரில் இருக்கும் வாலிபனுக்கு காண்பித்தது
இப்பொழுது ஏன் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறாய்? ஒன்றை புரிந்து கொள், வீரனுக்கு மனைவியாக வேண்டுமென்றால் தைரியமான பெண்ணாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்.
போருக்கு போவதை வீரம் என்று ஒத்துக்கொள்கிறேன், ஆனால் எதிரி எப்படிப்பட்டவன் என்பதையும், மனதில் வைத்து அதன்படி போருக்கு தயாராகுபவன் வீரன். அந்த பெண்ணின் பேச்சு இவனை கோபமுற வைக்கிறது.
அப்படி என்ன அவர்கள், நம்மை விட வீரத்தில் சிறந்தவர்கள் என்கிறாய்?
முதலாவது அவர்கள் நம் இனத்தை சார்ந்தவர்கள் அல்ல, அவர்களின் நடவடிக்கைகள் எதுவும் நமக்கு தெரியாது, உடல் பலத்திலும் ஒவ்வொருவனும் மலை போல் இருக்கிறான், வெள்ளை வெளேர் என்றிருப்பவன், கொஞ்சம் புத்திசாலியாகவும் இருக்கிறான்,ஏதேதோ கருவிகள் வைத்து சண்டைக்கு வருகிறான். இவனை எதிர்க்க நம் மன்னர் எப்படி முடிவு செய்திருக்கிறார் என்று பாருங்கள்.
விட்டால் அவர்களோடு போய் சேர்ந்து விடுவாய் போலிருக்கிறது, நம் மன்னர் எடுத்த முடிவு தவறு என்கிறாயா?
தவறு என்று சொல்ல மாட்டேன், ஆனால் நாமும் அவர்களை போல அவர்களின் தந்திரங்களை கற்றுக்கொள்ளவாவது நேரம் கிடைக்க வேண்டாமா?
நம்முடைய மிள்கு, கிராம்பு, லவங்கம், இவைகளை வாங்கி அவன் நாட்டுக்கு அனுப்பத்தான் வந்தான், அப்பொழுது நம் மன்னர் தடை ஏது சொன்னாரா?சரி வியாபாரம் செய்து கொள் என்றுதானே சொன்னார். இவனாகத்தானே நம் நாடு ஒரு முறை வறட்சியாக இருந்த போது கடன் கொடுத்தான். அதை கூட சிறிது சிறிதாக நம் மன்னர் அடைத்து கொண்டுதானே இருக்கிறார். அப்புறம் எப்படி மன்னரின் சொந்த விவகாரங்களில்
நுழைந்து, அவருக்கு வாரிசு இல்லை என்பதால் கடன் கட்ட இனி ஆள் இல்லை, அதனால் இந்த நாட்டை எழுதிக்கொடுத்து விடு என்று எப்படி மிரட்டலாம்.
ஏன் அவர் தம்பியின் மகன் நீங்கள் இல்லையா? உண்மையை சொல்லுங்கள்.உங்களை நம்ப தயாராக இல்லை. இதுதான் நம் மண்ணின் எண்ணம், வருபவர்களை நம்பி சாவியை கையில் கொடுப்பார்கள், சொந்தங்களுக்கு கொஞ்சம் கிள்ளி கொடுக்க யோசிப்பார்கள்.
அதைப்பற்றீ இப்பொழுது என்ன பேச்சு? அவர் எனக்கு பெரியப்பா என்பதை விட இந்த நாட்டு மன்னர் அதை மனதில் வைத்து நான் போருக்கு தலைமை ஏற்பது என்று முடிவு செய்து விட்டேன்.
அது உங்கள் இஷ்டம்,ஆனால் கணவனின் உயிரை பற்றிய கவலை எனக்குண்டு, அதை மறந்து விட வேண்டாம்.
அதற்காக அவர்களிடம் போய் மண்டியிடப்போகிறாயா?
அது என் இரத்தத்தில் கலக்காதது.
வெள்ளையர்களின் முகாமில் அவர்களின் தளபதி ஸ்டீபன் பிளெமிங் தன்னுடைய ஆலோசனை குழுவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.என்ன சொல்கிறார் இந்த நாட்டின் மன்னர்?அவர் கட்ட வேண்டிய தொகை ஏராளமாக இருக்கும்போது, நாட்டை எழுதிக்கொடுத்து விடுவதுதானே முறை.
நாம் ஏற்கனவே, நம்முடைய உள்ளூர் ஆட்களை வைத்து விளக்கி சொல்லி விட்டோம், பதில் இது வரை கிடைக்க வில்லை.ஆனால் நம்முடன் போருக்கு தயாராவார்கள் போல் தெரிகிறது.
நம்முடைய பலம் அவர்களுக்கு தெரியுமா? வெறும் வீரம் மட்டும் அவர்களிடம் இருக்கிறது.என்ன பயன்? போர் என்று சொன்னால் தயாராக வேண்டியது தான்.
திடீரென்று ஒரு சலசலப்பு, ஒரு பெண்ணை இழுத்து வருகிறார்கள், யார் இவள்? எதற்காக அழைத்து வந்திருக்கிறீர்கள். இந்த முகாமை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள், அதனால் பிடித்து இழுத்து வந்தோம்.
யார் பெண்ணே நீ? அதுவும் எங்களது இடத்தில் உனக்கு என்ன வேலை?
அவள் பேசாமல் நின்று கொண்டிருக்கிறாள். என்ன இவள் எதுவும் பேசாமல் இருக்கிறாள்?
‘ஒ” இவளுக்கு என் பாஷை புரியவில்லை பொலிருக்கிறது. அந்த துபாஷை அழைத்த்கு வாருங்கள், இந்த பெண்ணிடம் பேச சொல்லுங்கள்.
வணக்கம் என்று சொல்லி வந்த துபாஷிடம் இந்த பெண் யாரென்று கேட்டு சொல்லும்.
துபாஷ் திரும்பி தமிழில் நீ யாரம்மா? என்று கேட்டார். அந்த பெண் தொடர்ந்து பத்து நிமிடங்கள் அவருடன் உரையாடியதை அனைவரும் வேடிக்கை பார்த்தனர், அந்தளவு அந்த பெண்ணின் பேச்சில் அனல் தெறித்தது. அவளுடன் பேசி முடித்து விட்டு திரும்பிய துபாஷ் “சார் “திஸ் கேர்ள் ஆஸ்கிங்க்….என்று ஆரம்பித்து, தன்னை உங்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ள சொல்கிறாள்.
பெண்களை எல்லாம் சேர்த்துக்கொள்வதில்லை !
சொன்னேன், அவள் சொல்கிறால் என்னோடு யார் வேண்டுமானால் மோத சொல்லுங்கள்,ஒரு வீரனை தோற்கடித்தால் சிப்பாயாகாவும், ஒரே நேரத்தில் மூன்று வீர்ர்களை தோற்கடித்து விட்டால் உதவி தளபதியாகவும், ஒரே நேரத்தில ஐந்து பேரை தோற்கடித்து விட்டால் ஒரு படை பிரிவிற்கு தளபதியாகவும் நியமித்தால் போதும் என்கிறாள் இந்த பெண்.
அடேயப்பா அந்த அளவுக்கு திறமை உண்டா அந்த பெண்ணிடம், இருந்தாலும் நாங்கள் இப்பொழுதெல்லாம் வாள் சண்டை அதிகம் போடுவதில்லை, இதோ பாருங்கள் இதற்கு பெயர் துப்பாக்கி, தூரத்தில் இருந்தே எவ்வளவு பெரிய வீரனையும் சுட்டு விடலாம், அதுவும் இல்லாவிட்டால் பீரங்கி இருக்கிறது, ஐந்தே நிமிடங்களில் எவ்வளவு பெரிய கூட்டம் என்றாலும் அனைவரையும் அழித்து விடும். இருந்தாலும் இவ்வளவு துணிச்சலாக வந்து கேட்ட இந்த பெண்ணை இப்போது பரிசோதித்து பதவி கொடுப்போம்.
சண்டை ஆரம்பித்து பத்தே நிமிடங்களில் ஐந்து பேரை வாள் முனையில் தோற்கடித்து விட்டாள் அந்த பெண்.உடனே ஸ்டீபன் பிளெமிங்க் அந்த பெண்ணை பாராட்டி ஒரு படை பிரிவிற்கு தளபதியாக நியமிப்பதாக அறிவித்தார்.அது மட்டுமல்ல, ஒரு துப்பாக்கி வீரன் இந்த பெண்ணுக்கு துப்பாக்கி சுடவும், பீரங்கி சுடவும், பயிற்சி அளிப்பான்.
துபாஷ் திரும்பி அந்த பெண்ணிடம் தமிழில் இதை சொல்ல அந்த பெண் தலை குனிந்து ஏற்றுக்கொண்ட்தாக சொல்ல சொன்னாள்.
இந்த ஒரு மாதமாக வீட்டிலே இருப்பதில்லை, என்று அம்மா சொல்லுகிறாள்?
நீங்கள் என்ன சொன்னீர்கள் உங்கள் அம்மாவிடம்.
நான் ஏதோ காரணம் இருக்கும் என்று சொல்லி இருக்கிறேன்.
நீங்கள் வேறு ஒன்றும் என்னை பற்றி நினைக்கவில்லையா?
ஒன்றை புரிந்து கொள், இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் நமக்கும், அந்த வெள்ளை கூட்டத்துக்கும் சண்டை வரப்போகிறது,தளபதி பொறுப்பில் இருக்கும் நான் அதற்கு நம் படைகளை தயார் படுத்திக்கொண்டிருக்கிறேன்.இப்படி இருக்கையில் உன்னை பற்றி நினைக்க நேரம் இல்லை.
நல்லது, இப்பொழுதாவது நாம் சண்டை போடுதற்கு முன் அவர்களுடைய பலம் என்ன என்று யோசித்தீர்களா?
சும்மா சொன்னதையே சொல்லாதே, அவர்கள் நம்மை விட புத்தி சாலிகள், வீர்ர்கள், என்று சொல்வதை சொல்லி விட்டேன். அவ்வளவுதான் மனைவியின் பேச்சால் எரிச்சலுற்று வெளி கிளம்பினான்.
மூன்று மாதம் முடிந்திருக்கும், திடீரென மன்னர் ஆணைக்கிணங்க, இவர்கள் படை வெள்ளையர்களின் முகாமை தாக்க தொடங்கியது. அலை அலையாய் வந்த குதிரைப்படை வெள்ளையர்களின் முகாம்களில் இருந்த வீர்ர்களை சிறை பிடித்த்து. ஆனால் பிடிபட்ட அனைவருமே உள்ளுர் ஆட்கள்தான். வெள்ளையர்கள் ஒருவர் கூட சிக்கவில்லை.
மண்டையை உடைத்துக்கொண்டான் தளபதி. எப்படி நடந்தது இது? அப்பொழுது வெளியே அலை போன்ற சத்தம், அத்தனை வீர்ர்களும் திகைத்து நிற்க அவர்களை சுற்றி வெள்ளை சிப்பாய்கள் கைகளில் துப்பாக்கியுடனும், அதன் முன்னால் பீரங்கி வண்டிகளுடனும் அணி வகுத்து நின்று கொண்டிருந்தனர்.
ஸ்டீபன் பிளெமிங்க் பெருஞ் சிரிப்புடன், இந்த துப்பாக்கியை பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை, வேண்டுமானால் சிறிய சாம்பிள் காட்டுகிறேன் என்று சொல்லி சைகை காட்ட ஒரு வெள்ளை சிப்பாயிடமிருந்து புறப்பட்ட குண்டு இவர்கள் வீரன் ஒருவனின் மார்பை துளைத்து சென்றது. அவன் வெல்லப்பட்ட மரம் போல் குதிரயிலிருந்து விழுந்தான்.
இவர்கள் படை வீர்ர்கள் அனைவரும் அப்படியே வெல வெலத்து நின்றனர்.
தளபதி கைதியாக்கப்பட்டு சிரச்சேதம் செய்ய கொண்டு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அப்பொழுது எங்கிருந்தோ வந்த ஐந்து குதிரை வீர்ர்கள் அடங்கிய கூட்டம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தளபதியை தூக்கி குதிரையில் ஏற்றி பறந்து சென்று விட்டது. வெள்ளை சிப்பாய்கள் கூட்டம் துப்பாக்கியை திருப்பி அவர்களை சுட முயற்சிக்கு முன் பறந்து மறைந்து விட்டனர்.
ஆச்சர்யமும் கோபமும் கொண்ட ஸ்டீபன் பிளெமிங்க், பல்லை கடித்து யார் இவர்கள்? எதற்கு எதிரி நாட்டு தளபதியை கடத்திக்கொண்டு போகிறார்கள்? ஒன்றும் புரியாமல் நின்றான்.
கட்த்திக்கொண்டு வரப்பட்ட தளபதி கீழே இறக்கி விடப்பட, அந்த ஐந்து குதிரை வீர்ர்களும் தங்களுடை முகத்தை மறைத்த துணிகளை அகற்ற அங்கு அவன் மனைவி உட்பட அனைவருமே பெண்களாய் இருந்தனர்.
பெண்களா தன்னை கடத்தி வந்தது, அதுவும் தன் மனைவியா? அவனுக்கு ஆச்சர்யமும் திகைப்பும் ஏற்பட்டது. இத்தனை பெண்கள் எப்படி? அதுவும் இந்த காட்டுக்குள்?
அவனை புன்னகையுடன் பார்த்த அந்த பெண் என்ன ஆச்சர்யபடுகிறீர்களா?ஒன்று சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா? எதிரி எப்படிப்பட்டவன் என்று ஆராய்ந்து அதன்படி போரை நட்த்துகிறவன் தான் புத்திசாலி, இப்பொழுது சொல்கிறேன் கேளுங்கள், உங்கள் நாட்டு படையில் உள்ள வீர்ர்கள் வாள் வீசுவதில் வல்லவர்களாய் இருக்கலாம், இங்கிருக்கும் எங்கள் படை பெண் வீர்ர்களின் வீரத்தை பார்க்கிறீர்களா? என்றவள் ஒரு பெண்ணை பார்த்து கண்ணை காட்ட அந்த பெண் ஒரு நொடிக்குள் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து ஒரு தூரத்தில் இருந்த ஒரு பொம்மையின் தலையை சுட, அந்த தலை தனியாக விழுந்தது.
இது எப்படி சாத்தியம்?
அவனின் கேள்விக்கு அவள் பதில் சொன்னாள், நான் இப்பொழுது அவர்கள் படையில் ஒரு பிரிவின் தளபதி. ஆனால் என் நாட்டு பெண்களுக்கு நான் ஒரு துரோணாச்சார்யார்.
புரியவில்லையா? நான் அங்கிருந்து கற்று வந்த துப்பாக்கி சுடும் கலையும், பீரங்கி சுடும் கலையும், என் நாட்டு பெண்களுக்கு கற்று தந்து கொண்டிருக்கிறேன். இப்பொழுது இந்த படையில் சுமார் நூறு வீரர்கள் உருவாகி விட்டார்கள்.
இவர்கள் யாரும் வெள்ளையனை எதிர்த்து சண்டையிட போவதில்லை, அனைவருமே கூடிய சீக்கிரம் குடும்ப வாழ்க்கைக்கு சென்று விடுவார்கள். அவர்கள் பெறப்போகும் குழந்தைகளுக்கு, ஆணானாலும்,பெண்ணானாலும் அவர்களுக்கு இந்த போர்க்கலைகளை கற்றுக்கொடுத்து வெள்ளையர்களை எதிர்காலத்தில் எதிர்க்க்கூடிய, அவர்களை போலவே, துப்பாக்கி சுடுவதிலும், பீரங்கி சுடுவதிலும் தேர்ச்சி பெற்ற ஒரு சந்ததியை உருவாக்கி அவர்களை இங்கிருந்து விரட்டுவார்கள்.அதற்குத்தான் இந்த பெண் கல்வி.
அதை இப்பொழுதே செய்தால் என்ன என்று கேட்காதீர்கள்? உங்களை போல வீர்ர்கள், ”ஆண்” என்ற எண்ணத்தில் எங்களிடம் இந்த கலையை கற்றுக்கொள்ள, அவர்களின் மனப்பான்மை ஒத்துக்கொள்ளாது..
இவ்வார்த்தைக்கு என்ன பதில் சொல்வது என்று திகைத்து நின்றான் அந்த தளபதி.