வெரொனிகா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 727 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிலப் பெண்பால் பெயர்களைக் கேட்ட மாத்திரத்தில் ஒர் ஈர்ப்பு ஏற்பட்டு, மனது தானாகவே அந்தப் பெயருக்கு ஓர் உருவம் கொடுக்கத் தொடங்கிவிடும். நான் பெண்களைக் காதலித்ததை விட பெயர்களைக் காதலித்தது அதிகம். வெரொனிகா, இந்தப் பெயரை சமீபத்தில் வாசித்தது பவுலோ கோயல்ஹோவின் ஒரு புதினத்தின் கதாநாயகியாக … தற்கொலையின் வாயிலில் நிற்பவள், தனது நாட்டைப்பற்றித் தவறாக எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை வாசிக்க நேரிடுகையில், குறைந்த பட்சம் அதற்கு பதில் எழுதவாவது உயிரோடு இருக்க வேண்டும் என மீண்டு வர நினைப்பவள். சென்ற வாரம் தான் வாசித்து முடித்ததில் இருந்து தொடர்ந்து வெரொனிகா பெயருக்கு சில உருவங்களைக் கொடுக்கத் தொடங்கி இருந்தேன்.

எனக்கு ஒரு பழக்கம், கட்டுரையிலோ, கதையிலோ ஏதேனும் ஈர்ப்பைத் தரக்கூடிய பெண் பெயர்கள் தெரிந்தால், அந்த பெயர்களை இணையத்தில் தேடி, அந்தப் பெயரில் இருக்கும் சிலரிடமாவது நட்புப் பாராட்ட நினைப்பேன். கடைசி 10 வருடங்களில், சிலப்பெயர்கள் நட்பைத் தாண்டியும் சில உறவுகளையும் உணர்வுகளையும், சில சமயங்களில் உணர்ச்சிகளுக்கு வடிகாலாகவும் இருந்ததுண்டு.

வெற்றித்திருமகள் என்ற பொருள் கொண்ட வெரொனிகா பெயரில் இருக்கும் மெய்நிகர் உருவங்களை ஃபேஸ்புக்கில் தேடி அனைவருக்கும் நட்பு அழைப்பு விடுத்தேன். வழமைப்போல 80 சதவீதத்தினர் நிராகரித்து, 20 சதவீதத்தினர் ஏற்றுக்கொண்டனர். என்னை ஏற்றுக்கொண்ட, 15 வெரொனிக்காக்களில், எனது ஊரில் இருந்து நேரிடையாக விமானம் செல்லும் நகரத்தில் வசிக்கும் பெண்களை வடிகட்டினேன். உக்ரைன், இங்கிலாந்து நீங்கலாக எஞ்சிய ஸ்லோவாக்கியாவில் வசிப்பதாக காட்டிய வெரொனிகாவிற்கு தனிச்செய்தி அனுப்பினேன். அன்னா கோர்னிகாவின் சாயலில் இருந்தாள், கைகளற்ற, கழுத்து இறக்கம் அதிகத்துடன் கூடிய ஒரு ஆடையை அணிந்து இருந்தாள். கணினியின் முன் அமர்ந்தபடி எடுத்தப் புகைப்படம் மாதிரி தெரிந்தது. தோள்பட்டையின் மச்சமும் கழுத்தில் அணிந்து இருந்த சிலுவை சங்கிலியும் கவனத்தைக்கவர்ந்தன. அடுத்த நிமிடத்தில் பதில் ஆங்கிலம் தனக்கு சரளமாக வரும் என ஆங்கிலத்தில் பதில் வந்தது. முதல் பிரச்சினை மொழிப்பிரச்சினை தீர்ந்தது, என நினைத்துக்கொண்டே, மேட்டின இனத்திற்கே உரிய பொய் வார்த்தைகளுடன் பேச்சுத் தொடர்ந்தது.

“உனக்கு ஸ்லோவாக்கியாவைப் பற்றி என்னத் தெரியும்”

ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கிய இந்த இரண்டு நாடுகளும் அடிக்கடி குழப்பினாலும் “கத்தியின் ரத்தமின்றி, பெரிய சங்கடங்கள் இன்றி ஒருங்கிணைந்த செக்கஸ்லோவாக்கியா விடம் இருந்து பிரிந்த நாடு, விலைவாசிகள் சாமானிய மனிதனுக்கு ஏற்ற வகையில் இருக்கும் நகரமான பிராட்டிஸ்லாவா தான் தலைநகரம், பொதுவுடமை பெரும்பலனைத் தந்த ஐரோப்பியப்பகுதி” மனதுக்குள் விக்கிபீடியாவிற்கு நன்றி சொல்லியபடி பதிலளித்தேன். அர்த்தராத்திரியில் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டிய சங்கடத்தை நொந்தபடி, அவளின் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கும் பொழுது,

“உனக்குப் பெண் தோழி இருக்கின்றாளா…. ” நான் எதிர்பார்த்து இருந்த கேள்வியைக் கேட்டாள். “அழகும் அறிவும் கூடிய பெண்ணைத் தேடிக்கொண்டே இருக்கின்றேன்”

“அழகுடன் அறிவும் கூடிய பெண்கள் பிராட்டிஸ்லாவா வில் இருக்கின்றனர், சிலப்பெண்களின் பெயர்கள் வெரொனிகா என்று கூட இருக்கும்” என்று சொல்லி கண்ணடிக்கும் ஸ்மைலியை அனுப்பினாள்.

தொடர்ந்த நாட்களில் பேச்சின் சுவாரசியமும் கிளுகிளுப்பும் கூடிக்கொண்டே போனது. எவ்வளவுக் கேட்டும் ஸ்கைப்பிலோ, குரல் வழி அரட்டையிலோ வரமாட்டேன் என்றாள்.

“நாம் ஒருவரை ஒருவர் பார்ப்பதும், பேசுவதும் நேரில் மட்டுமே இருக்கவேண்டும்” என்று அவள் சொல்லியபொழுது அழகு கொஞ்சம் குறைவாக இருக்ககூடுமோ எனத் தோன்றியது.

மூடியிருக்கும் கையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் அந்த சந்தேகத்தை அப்பால் தள்ளியது. பிப்ரவரியின் மத்தியில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

ஊருக்குக் கிளம்பும் இரண்டு நாட்களுக்கு முன்னர், போகிறதுதான் போகிறோம், வேறு ஏதாவது பெண் நட்பையும் பிராட்டிஸ்லாவாவில் ஏற்படுத்திக்கொள்வோம் என, கவர்ச்சியான ஒரு ஐரோப்பியப் பெயரைத் தேடினேன். முன்னே நூறு கிலோமீட்டர்கள் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் கனரகவாகனம், எந்த வித முன்னறிவிப்பின்றி வண்டியைத் திடுமென நிறுத்தினால் பின்னால் வருபவருக்கு என்ன அதிர்ச்சி ஏற்படுமோ அந்த அந்த் அதிர்ச்சி முகத்தில் அறைந்தது. வெரோனிகாவின் அதே புகைப்படம், புதிதாகத் தேடிய பெண்ணின் முகப்பில் இருந்தது. வெரொனிகாவின் முகப்பில் இருக்கும் நண்பர்களை நோட்டம் விட்டதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண் நட்புகளின் மத்தியில் வெரொனிகாவின் படத்துடன் வெவ்வெறுப் பெயர்களில் சில ஃபேஸ்புக் கணக்குகள் இருந்தன. கொஞ்சம் பயம் தொற்றிக்கொண்டது, பயணத்திட்டத்தை கைவிட்டு விடலாமா எனக்கூட யோசித்தேன்.

வாழ்க்கையில் எத்தனையோ அபயகரமான பாதைகளைக் கடந்து இருக்கிறேன், எது நடக்குமோ அது நடக்கும், போய் பார்த்துவிடலாம். மனதில் ஒரு குறுகுறுப்புடன், எப்போதும் இல்லாத ஒரு திகிலுடனும் வெரொனிகா கொடுத்திருந்த முகவரிக்கு சென்றேன். அந்தக் குடியிருப்புப்பகுதியின் முதல் நுழைவாயில் வரவேற்றது. நுழைவாயிலில் வெரொனிகாவின் வீட்டு எண்ணின் அழைப்பானை அழுத்தினேன். ஏனைய வீட்டு எண்களுக்கு நேர் எதிரே குடியிருப்பவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் வெரொனிகாவின் பெயர் எழுதப்பட்டிருக்கவில்லை. அழைப்பு மணி தொடர்ந்து கொண்டிருந்தது. கதவைத் திறப்பவர் நிஜமாகவே வெரொனிகாவாக இருக்கலாம் அல்லது மனநோயாளி ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம், விபாச்சார போதை மருந்துக் கும்பலின் பிரதி நிதியாக இருக்காலாம். யாராக இருந்தாலும் விளக்கைத்தேடும் விட்டில் பூச்சியைபோல அசாதாரண தைரியத்துடன் இருந்தேன். அழைப்பு எடுக்கப்பட்டது, ஆனால் யாரும் பேசவில்லை, நிசப்தத்தைக் கேட்க முடிந்தது.

“என் பெயர் கேத்தரினா நீல்ஸ்ஸான், ஸ்டாக்ஹோல்ம் இருந்து வந்திருக்கும் பெண்” என்று நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள கதவுத் திறக்கப்பட்டது.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *