தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 8,681 
 
 

ஆரவாரமும், கூச்சலும், ஓலமிட்டு அழும் கூக்குரலும் கேட்டு பரபரப்புடன் வெளியே வந்தார் சோமுப்பிள்ளை.

வீட்டுவாசலில் ஒரே கூட்டம். பிள்ளையைக் கண்டதும் ஒரு பெண்மணி ஓடிவந்து அவர் காலில் விழுந்து, “”ஐயா, புண்ணியவானே என் பிள்ளையைக் காப்பாத்திக்குடுங்க. நீங்கதான் இப்ப அவனுக்கு உயிர்ப்பிச்சை குடுக்கற கண்கண்ட தெய்வம். எதையும் மனசிலே வச்சுகிட்டு என் மகனை சாகவிட்டுடாதீங்க” என்று கதறினாள்.

விஷ முறிவு

பிள்ளை திடுக்கிட்டார். தன் காலில் விழுந்து கதறிய பெண்மணியையும், அவள் அருகில் தலைகுனிந்தபடி கண்ணீர் பெருக்கிக் கொண்டு நின்றிருந்த ராசுத்தேவரையும், அருகே தரையில் கிடத்தப்பட்டிருந்த அந்த இளைஞனையும் பார்த்ததும் சோமுப்பிள்ளையின் முகம் ரெüத்திரமாக மாறியது. வெறுப்பும் குரோதமும் அவர் நெஞ்சில் கொந்தளித்தன.

கூட்டத்திலிருந்த ஒருவர், “”ஐயா, பையனை நல்ல பாம்பு போட்டுடுச்சு, உடம்பு நீலம்பாரிச்சுப் போயிடுச்சு. நினைவும் தப்பிடுச்சு. நீங்கதான் காப்பாத்தணும், எதையும் மனசிலே வச்சுக்கக்கூடாது. அவன் உயிர் இப்ப உங்க கையிலே” என்றார்.

அங்கு கூடி நின்ற கூட்டத்தையும் கீழே படுக்க வைக்கப்பட்டிருந்த அந்த இளைஞனையும் ஒருமுறை பார்த்ததும் வெறுப்புடன் உள்ளே போகத் திரும்பியவர் சட்டென்று பொறிதட்டியது போல ஏதோ நினைவிற்கு வந்தவராக நின்று விட்டார். கண்களை மூடிக்கொண்டு சில விநாடிகள் யோசனைக்குப் பிறகு கூட்டத்திலிருந்த ஒருவரைப் பார்த்து, “”எதுவும் குடிக்கக் குடுத்தா குடிப்பானா?” என்று கேட்டார்.

“”முடியாது பிள்ளைவாள், அவனுக்குப் பல் கிட்டிவிட்டது. வாயைத் திறக்க முடியாது” என்றார் அவர்.

“”சரி, ரெண்டு மூணு பேர் வாங்க” என்று அழைத்துக்கொண்டு தன் வீட்டு கொல்லைப்புறத்திற்குச் சென்று அங்கு நின்று கொண்டிருந்த வாழை மரங்களில் ஒன்றை அடியோடு வெட்டி எடுத்து வெளியே தூக்கி வரச் சொன்னார். அப்படி அவர்கள் கொண்டு வந்ததும், அதன் பட்டைகளை உரித்துத் தரையில் பாய் போலப் பரப்பச் சொன்னார். நன்றாகப் பரப்பியதும் பாம்பு கடித்த வாலிபனைத் தூக்கி அதில் படுக்க வைக்கச் செய்தார். மேலும் சில வாழைப்பட்டைகளை உரிக்கச் செய்து உள்ளே சென்று ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, “”ஒரு அரைப்படி அளவுக்கு வாழைப்பட்டைச் சாறைப் பிழியுங்க” என்று கூறிவிட்டு கொல்லைப்புறம் சென்று ஒரு பச்சிலையைப் பறித்து வந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கைகளினால் கசக்கிச் சாறெடுத்து, பிழிந்து வைத்திருந்த வாழைப்பட்டைச் சாற்றில் கலந்தார். அதற்குள் வாழைப் பட்டையில் கிடத்தப்பட்டிருந்தவனது பல் கிட்டிப்பு நீங்கி வாய் திறந்து கொண்டது. அந்த பச்சிலைச்சாறு கலந்த வாழைப்பட்டைச் சாற்றை அவனுக்குப் புகட்டும்படி கூறிவிட்டு, விடுவிடுவென்று நடந்து எதிரே இருந்த கிணற்றடிக்குச் சென்று வாளிவாளியாகத் தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றிக் கொண்டவர், அருகில் இருந்த வேப்பமரத்தில் தனிந்த கிளையில் இருந்து ஒரு கொத்து வேப்பிலையை பறித்துக் கொண்டு வந்து தலையிலிருந்தும், தாடியிலிருந்தும் நீர் வடிய ஈர வேட்டியுடன் அந்த இளைஞனின் அருகில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு, வேப்பிலைக் கொத்தை சுழற்றிக் கொண்டு மந்திரிக்கத் தொடங்கினார்.

முக்கால் மணி நேரத்திற்கு மேல் வாய் ஓயாமல் முணுமுணுப்பாக மந்திரத்தை ஜபித்துக் கொண்டும், கை ஓயாமல் வேப்பிலைக் கொத்தால் வீசிக் கொண்டும் இடத்தை விட்டு சற்றும் அசையாமல் கருமமே கண்ணாக இருந்தார் சோமுப்பிள்ளை.

முக்கால் மணிநேரத்திற்குப்பிறகு சவம் போல கிடந்த அந்த இளைஞனின் உடலில் ஓர் அசைவு தென்பட்டது. லேசாக முனகுவதும் கேட்டது. காலில் பாம்பு கடித்து பல் இரண்டும் அழுத்தமாகப் பதித்திருந்த இடத்திலிருந்து இரண்டு சொட்டு நீர் வடிந்தது. அதைப் பார்த்ததும் பிள்ளை மந்திரிப்பதை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று ஓர் அரப்புத் துண்டை எடுத்து வந்து அவன் வாயில் வைத்து, “”இதை நல்லா மென்னு தின்னுப்பா” என்றார். அவன் அரைப் பிரக்ஞையுடன் அதை மென்றுவிட்டு, “”தூ..தூ.. ஒரே கசப்பு” என்று முனகினான்.

அமைதியான முகத்துடன் பிள்ளை எழுந்து குறிப்பாக யாரிடமும் என்று இல்லாமல் பொதுவாக, “”இனிமேல் பயமில்லை அழைச்சுகிட்டுப் போங்க. ரெண்டு நாளைக்கு பத்தியமாச் சாப்பிடட்டும். இன்னிக்கு ராத்திரி பேதிக்கு மாத்திரை வாங்கி சாப்பிடக்குடுங்க. நாலைந்து தரம் நல்லா பேதியாகட்டும். முழுதும் சரியாகிடும்” என்று கூறிவிட்டு, யாருடைய நன்றியுரையையும், பாராட்டுக்களையும் லட்சியம் செய்யாமல் கடமை முடிந்த கர்மவீரராக உள்ளே சென்று விட்டார்.

சுமார் ஒரு வருஷத்திற்கு முன்பு நடந்த சம்பவம். சோமுப்பிள்ளையின் ஒரே புதல்வன் செந்தில்வேலன் இருபது வயது வாலிபன். தங்களுக்கிருந்த நாலு வேலி நிலத்தையும் அப்பாவும் பிள்ளையும் வெள்ளாமை செய்து வெகு சுகமாகக் காலம் கழித்துக் கொண்டிருந்தனர். சோமுப்பிள்ளை தன் மகன் மீது அளப்பரிய பாசம் வைத்திருந்தார். வசதியும் வளப்பமாகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது. வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் பிரச்னையில் வாய்த் தகராறு ஏற்பட்டு அது முற்றி கைகலப்பாக மாறி, தன்னை மீறிய ஆத்திரத்தில் ராசுத்தேவரின் மகன் தியாகு – இப்பொழுது பாம்பு கடித்து உயிருக்குப் போராடியவன் மண்வெட்டியால் ஓங்கிப் போட்டுவிட்டான். அந்த இடத்திலேயே சோமுப்பிள்ளையின் ஒரே செல்லமகன் செந்தில்வேலன் துடிதுடித்து உயிரைவிட்டுவிட்டான். விவரம் அறிந்து ஊரே ஓடிவந்து கண்ணீர்விட்டது. சோமுப்பிள்ளையைத் தேற்ற யாராலும் முடியவில்லை. உடைந்து நொறுங்கிப் போய்விட்டார் அவர்.

சிலர் போலீசுக்கு புகார் கொடுக்க வேண்டும் என்று புறப்பட்டபோது சோமுப்பிள்ளை அவர்களைத் தடுத்து விட்டார். அவர்களிடம் அவர், “”போலீசுக்குப்போனா அவனைக் கைது செஞ்சு கேஸ் நடக்கும். அவனுக்கு பத்து வருஷமோ, எட்டு வருஷமோ தண்டனை கிடைக்கும், அவ்வளவு தானே ஆனா அது போதாது. என் மகன் துடிதுடிச்சு செத்தமாதிரி அவனும் சாகணும். அவனை என் கையாலேயே கொல்லணும், அப்பத்தான் என் மகன் ஆத்மா சாந்தியடையும்” என்று கூறி போலீஸ்வரை விஷயம் போகாமல் தடுத்துவிட்டார்.

மறுநாள் மயானத்தில் தனக்குக் காரியம் செய்ய வேண்டிய தனது மகனுக்கு காரியங்களை செய்து கொள்ளி வைத்துவிட்டு, எரியும் சிதையின் முன்பு நின்று, உரத்த குரலில் ஊரறிய “”என் குல விளக்கான என் மகனைக் கொன்றவனை என் கையாலேயே வெட்டிக் கொல்வேன், இது சத்தியம். அதுவரை என் தாடியை எடுக்கமாட்டேன், பாயில் படுக்கமாட்டேன், ஒரு வேளைக்குமேல் சாப்பிடமாட்டேன், இது என் மகன்மேல் சத்தியம்” என்று வெறிபிடித்த குரலில் சபதம் செய்தார். அவர் குரலில் இருந்த ஆங்காரமும், ஆத்திரமும், உக்கிரமும் ஊராரை நடு நடுங்கச் செய்தது.

சோமுப்பிள்ளையின் வைராக்கியமும், உறுதியும் ஊரே அறிந்ததுதான். அவர் சொன்னதை நிறைவேற்றாமல் விடமாட்டார் என்பது எல்லோருக்குமே தெரியும். ராசுத்தேவரும் அவரது குடும்பமும் ரொம்பவே பயந்து விட்டனர். தன்னுடைய மகனைக் காப்பாற்ற வேண்டுமானால் அவனை சோமுப் பிள்ளையின் கண்களிலே தென்படாதவாறு எங்காவது தலைமறைவாக பாதுகாப்பாக அனுப்பிவைத்துவிடுவதுதான் ஒரே வழி என்று முடிவு செய்து யாருக்கும் தெரியாமல், எங்கிருக்கிறான் என்பதையும் ரகசியமாக வைத்து ஐம்பது மைல் தூரத்தில் இருந்து தன்னுடைய நண்பர் ஒருவரின் பாதுகாப்பில் தலைமறைவாக இருக்கச் செய்தார் ராசுத்தேவர். எத்தனை வருஷங்கள் போனாலும் சோமுப்பிள்ளையின் குரோதம் அடங்காது என்பது தெரிந்தாலும் சில வருஷங்கள் போனால் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு வழி பிறக்காதா என்ற நப்பாசையும், புத்திரசோகத்தில் சோமுப்பிள்ளையே போய்ச் சேர்ந்தாலும் சேர்ந்து விடமாட்டாரா என்ற அற்பமான ஆசை காரணமாகவும் ராசுத்தேவர் அந்த முடிவுக்கு வந்தார்.

ஒரு வருஷத்திற்கு மேலாகியும் ராசுத்தேவரின் மகன் எங்கிருக்கிறான் என்ற விவரமே யாருக்கும் தெரியவில்லை. தனது அண்ணன் தம்பிகளுக்குக்கூட அவனது இருப்பிடத்தைத் தெரிவிக்கவில்லை ராசுத்தேவர். சோமுப்பிள்ளை எப்படியெப்படியெல்லாமோ முயற்சி செய்தும் அவன் இருப்பிடத்தைப் பற்றிய ரகசியத்தை அறிய முடியவில்லை. இந்த நிலையில் மகன் இறந்த ஆறுமாதங்களுக்குள் சோமுப்பிள்ளையின் மனைவி பாக்கியத்தம்மாள் மகனின் மரணம் தந்த துயரத்திலும், ஏக்கத்திலுமாக உயிரைவிட்டு விட்டாள். சோமுப்பிள்ளையின் ரெüத்திரமும், பழிவாங்கும் வெறியும் மிகவும் உக்கிரமடைந்தன.

ராசுத்தேவரின் தாயார் மிகவும் வயதானவள். உடல்நலம் குன்றி படுக்கையில் விழுந்துவிட்டாள். நாட்டு வைத்தியர் இனி தேறாது என்று கைவிரித்துவிட்டார். மூன்று மாதங்களுக்கு மேலாக படுக்கையில் கிடந்து தானும் சிரமப்பட்டு மற்றவர்களையும் சிரமப்படுத்திக் கொண்டிருந்தாள். படுக்கையிலேயே கிடந்ததால் உடம்பில் புண் ஏற்பட்டு துர்நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது. போய்ச்சேராமல் எல்லோர் உயிரையும் வாங்குகிறாளே என்று அனைவரும் வெளிப்படையாகவே பேசத் தொடங்கி விட்டனர். அப்பொழுதுதான் ராசுத்தேவரின் தூரத்து உறவுக்கிழவி ஒருத்தி சொன்னாள்:

“”அவ மனசிலே பேரன் நினைப்பு கிடந்து அல்லாடுது, அதுதான் இன்னும் இழுத்துகிட்டுக்கிடக்குறா. அவன் வந்து அப்பாயின்னு கூப்பிட்டு ஒரு சொட்டுப்பாலை வாயிலே விட்டுட்டான்னா கிழவி நிம்மதியாப் போய்ச் சேர்ந்துடுவா. நீ யாருக்கும் தெரியாம ரகசியமா ராவோட ராவா பிள்ளையை அழைச்சிகிட்டு வந்து அவகிட்ட காட்டிட்டு உடனே அவனைத் திருப்பி அனுப்பிச்சுடு, மறுபடி சாவுக்குக்கூட அவன் வரவேண்டாம். பேரன் கையாலே பால் குடிச்சிட்டா கிழவி நிம்மதியாப் போயிச்சேந்துடுவா”.

அனைவருக்குமே அதுதான் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் முன்பே இருந்து கொண்டுதான் இருந்தது. எனவே, அதையும் செய்து பார்த்துவிடலாம் என்று முடிவு செய்து ரகசியமாக தனது இளைய மகனை அனுப்பி ஊர் அடங்கியதும் யாருக்கும் தெரியாமல் வயல்காட்டு வழியாக தன் மகனை அழைத்து வரச்செய்தார். நள்ளிரவு நேரத்தில் அவன் வந்து அப்பாயி என்று கூப்பிட்டதும் கண் திறந்து பேரனைப் பார்த்த கிழவி புன்னகையுடன் அவன் ஊற்றிய பாலையும் நிறைவாக உட்கொண்டாள். விடிந்தால் அவன் வந்திருப்பது எப்படியும் ஊருக்குத் தெரிந்துவிடும் என்பதனால் பொழுது சரியாகப் புலருமுன்பே கம்மலும் கருக்கலுமாக இருந்த நேரத்தில் மீண்டும் அவன் தலைமறைவாக இருந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். வயல் வரப்பில் மூன்று மைல் தூரம் நடந்து பக்கத்து ஊருக்குச் சென்று பஸ் பிடித்து ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு இறங்கி வேறு பஸ் பிடித்து அவன் தலைமறைவாக இருக்கும் ஊருக்குச் செல்ல வேண்டும். அப்படிப்போகும்போதுதான் வரப்பில் படுத்துக்கிடந்த நல்லபாம்பின் மேல் தெரியாமல் அடி வைக்க அது ஆக்ரோஷமாகப் போட்டுவிட்டது. கூடச்சென்ற அவன் தம்பி கதறிக் கொண்டு ஓடிவந்து விவரம் சொன்னதும் ராசுத்தேவர் குடும்பம் போட்ட கூக்குரலில் அக்கம் பக்கத்தினர் திரண்டு விட்டனர். அனைவருமாகச்சென்று அவனைத் தூக்கி வந்து வீட்டில் கிடத்தியபோதே அவனுக்கு நினைவு தப்பி விட்டது. விஷயம் ஊர் முழுவதற்கும் பரவி விட்டது. என்ன செய்யலாம் என்று அனைவரும் கூடி யோசித்தனர். ஏழு மைல் தூரத்தில் உள்ள டவுனுக்குக்கொண்டு போவதற்கோ அல்லது ஆள்போய் அங்கிருந்து டாக்டரை அழைத்து வருவதற்கோ நேரமில்லை. இருக்கும் ஒரேவழி சோமுப்பிள்ளையிடம் சரண் அடைவதுதான் என்று சிலர் யோசனை சொல்லினர். வேறு சிலரோ அவனைப் பார்த்தாலே சோமுப்பிள்ளை பொலி போட்டுவிடுவார் என்று பீதியைக் கிளப்பினர். வேறு எதுவுமே வழியில்லை ஒன்றும் செய்யாமல் சாகவிடுவதைவிட, சோமுப்பிள்ளையிடம் சென்று கெஞ்சிப் பார்ப்பது, அவர் மனம் இரங்கி உயிர்ப் பிச்சை கொடுத்தால் கொடுக்கட்டும், இல்லையேல் விதிவிட்ட வழி என்று போக வேண்டியதுதான். பாம்புக்கடியால் சாவா, சோமுப்பிள்ளை கையால் சாவா அல்லது அவரால் உயிர்ப்பிச்சையா எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று தான் ஊரார் கூடி முடிவு செய்து சோமுப்பிள்ளை விட்டுவாசலில் வந்து கூடினர்.

சோமுப்பிள்ளையின் மந்திரசக்தி அந்த வட்டாரம் முழுவதுமே பிரசித்தம். எப்படிப்பட்ட பாம்புக்கடியாக இருந்தாலும் அவர் வேப்பிலையைக் கையில் எடுத்து மந்திரிக்க ஆரம்பித்து விட்டால் விஷம் போன இடம் தெரியாமல் போய்விடும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம், பாம்புக்கடியால் உயிர் போயிருந்தால் கூட சோமுப்பிள்ளை மீண்டும் உயிரைக் கொண்டு வந்து விடுவார் என்று கூறுவார்கள். அஞ்சுதலைநாகம் கடிச்சு இருந்தால் கூட சோமுப்பிள்ளை காப்பாற்றி விடுவார் என்றும் கூறுவார்கள். எப்படியும் மாதம் பத்து பேராவது பாம்புக்கடிக்கு ஆளாகி தூக்கி வரப்பட்டு சோமுப்பிள்ளையின் பச்சிலை மருந்தினாலும் மந்திர சக்தியாலும் உயிர் பிழைத்துப் போவார்கள்.

பிள்ளைக்கு இந்த சக்தி கிடைத்த விவரம் மிகவும் சுவையானது, ரகசியமானதும்கூட. பிள்ளைக்கு அப்போது முப்பது வயதிருக்கலாம். ஒரு கோடைக்காலத்தில் காற்றுக்காக வீட்டிற்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டுப் படுத்திருந்தார் பிள்ளை. அவர் மனைவி பாக்கியத்தம்மாள் தாய்வீடு சென்றிருந்தாள். நேரம் நள்ளிரவு இருக்கும். யாரோ தன்னை எழுப்புவதுபோல ஓர் உணர்வு தோன்றி சடக்கென கண் விழித்தார் பிள்ளை. அந்த முழு நிலவு நாளில் தன் முன் நின்ற உருவத்தைப் பார்த்ததும் முதலில் திடுக்கிட்டு சற்றுப் பயப்படவும் செய்தார். அவருக்கு முன்னே ஆறடிக்கு மேல் உயரத்தில் தாடியும் மீசையுமாக ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது. வடஇந்திய யாத்ரீகர் போல நீண்ட அங்கி அணிந்து நின்ற அந்த நபரின் கண்கள் நெருப்புப்போல ஜொலித்தன. தோளில் ஒரு ஜோல்னாப்பை. அந்த நபர் பிள்ளையிடம், “”கானா வேண்டும்” என்றார். பிள்ளைக்குப் புரியவில்லை. அரைகுறையான கொச்சைத் தமிழில் “”சாப்பாடு வேணும்” என்றார் அவர். இதற்குள் பிள்ளைக்குத் தெளிவும் துணிச்சலும் வந்திருந்தன. அவர் வட இந்தியாவைச் சேர்ந்த பைராகி என்பதனைப் புரிந்து கொண்டார் பிள்ளை. அந்த ஊர் ராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்திருந்ததனால் பெரும்பாலான ராமேஸ்வரம் யாத்ரீகர்கள் இந்த வழியாகவே செல்வார்கள். நடந்தே கூட வட இந்தியாவிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் எவ்வளவோ சாமியார்களை, இதைப் போன்ற பைராகிகளை பிள்ளை பார்த்ததுண்டு.

பிள்ளை எழுந்து வீட்டைத் திறந்து உள்ளே சென்று ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து அந்த பைராகியிடம் கொடுத்து கை, முகம் அலம்பச்செய்து, வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அவரை உட்காரச் செய்து கொல்லைப்புறம் சென்று ஒரு பெரிய வாழை இலையை அறுத்து வந்து கழுவிவிட்டு பைராகி முன் போட்டு, மறுநாள் காலை தனக்காகவும், மாட்டுக்காரன் மற்றும் மற்றுமொரு வேலையாள் ஆகியோர் பழையது சாப்பிடுவதற்காக வடித்துத் தண்ணீர் ஊற்றி வைத்திருந்த சோற்றுப்பானையைத் தூக்கி வந்து வைத்து சோற்றை அள்ளி இலையில் வைத்து, உறை ஊற்றி வைத்திருந்த கெட்டித் தயிரை எடுத்து சோற்றில் ஊற்றி உப்பையும் போட்டார். வீட்டில் இருந்த நாரத்தங்காய் ஊறுகாயை எடுத்து வைத்தார். வாய் பேசாமல் அந்த நள்ளிரவு நேரத்தில் பைராகி பானையில் இருந்த மூன்று ஆள் சோற்றையும் முழுமையாகச் சாப்பிட்டு முடித்தார்.

சாப்பாடு முடிந்ததும் அந்த பைராகி தன் வழியே புறப்பட்டுப் போய் விடுவார் என்றுதான் பிள்ளை நினைத்தார். ஆனால், அவரோ வெளியே கிடந்த கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டு மெüனமாக கஞ்சா சிலும்பியை எடுத்துப் பற்ற வைத்து புகைத்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரத்திற்குப் பிறகு தனக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில், “”நீ படுத்துத்தூங்கு. நான் திண்ணையில் படுத்துக் கொள்கிறேன்” என்று கூறியவர் பாய் தலையணை எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு திண்ணையில் வெறும் தரையில் படுத்து நிம்மதியாக உறங்கிவிட்டார்.

மறுநாள் விடிந்ததும் காலை உணவை முடித்துக்கொண்டு பைராகி புறப்பட்டுவிடுவார் என்றுதான் சோமுப்பிள்ளை நினைத்தார். ஆனால் பைராகி அப்படிப் புறப்பட்டு விடவில்லை. சோமுப்பிள்ளை கூடவே வயல் வரப்புகளுக்கும் வீட்டுக்குமாக அலைந்து அவருடனேயே சாப்பிட்டு, உறங்கி இரண்டு நாட்களைக் கழித்துவிட்டார். சோமுப்பிள்ளையும் அவரை எப்பொழுது புறப்படுகிறீர்கள் என்று கேட்கவில்லை. ஏதோ ஒரு உத்தேசத்தில் தங்கியிருக்கிறார், இருந்துவிட்டுப் போகட்டுமே என்று இருந்து விட்டார். ஊராருக்கெல்லாம் இவர்கள் இருவரையும் சேர்ந்து பார்க்கும்போதெல்லாம் வேடிக்கையாகவும் புதிராகவுமே இருந்தது.

மூன்றாம் நாள் காலை பைராகி சோமுப்பிள்ளையை அழைத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றிற்குச் சென்று நீராடினார். சோமுப்பிள்ளையையும் குளித்துவிட்டு வரச்சொல்லி ஆற்றங்கரையில் அமைந்திருந்த பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பிள்ளையார் கோவில் முன்பாக நீண்டு உயர்ந்து நெடிது வளர்ந்திருந்த அரசமரத்தின் அடிப்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நாகர் சிலைகளுக்கு முன்பு சோமுப்பிள்ளையை ஈர வேட்டியுடன் உட்கார வைத்து, “”நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு மனப்பாடம் செய்து கொள்” என்று கட்டளையிடும் குரலில் கூறிவிட்டு அவர் காதில் ரகசியமாக ஒரு மந்திரத்தை உபதேசித்தார். திரும்பத் திரும்ப பத்துப் பதினைந்துமுறை சொல்லிச் சொல்லி பிள்ளை மனதில் மந்திரத்தைப் பதியச் செய்துவிட்டார். பிறகு வீட்டிற்குப் போனதும், “”நீ இதை ஒரு காகிதத்தில் வேண்டுமானாலும் எழுதி வைத்துக் கொள். ஆனால் யார் கண்ணிலும் படவேண்டாம், ரகசியமாக இருக்கட்டும். இது எனக்கு எனது குருநாதர் உபதேசித்தது. உனக்கு நான் போதித்திருக்கிறேன். இது வலிமை வாய்ந்த கருட மந்திரம். எப்படிப்பட்ட பாம்புக்கடி விஷத்தையும் முறித்து இறக்கிவிடும். இது மக்களுக்குப் பயன்படவேண்டிய அருமையான வரப்பிரசாதம். தெய்வத்தின் அருளால் இது உனக்குக் கிடைத்ததாக நினைத்துக்கொள்” என்று கூறினார். சோமுப்பிள்ளைக்குப் புல்லரித்துப் போய்விட்டது.

அன்று இரவு வழக்கம்போல சாப்பிட்டுவிட்டு சிலும்பியில் கஞ்சாவை நிரப்பி முழுமையாக இழுத்து முடித்து விட்டுப் படுத்த பைராகியை விடிந்தவுடன் காணவில்லை. எப்பொழுது போனார் என்ற சுவடே தெரியாமல் தன் வழியே போய்விட்டிருந்தார் அவர்.

இரண்டு நாட்களிலேயே மந்திரத்தை பரீட்சிக்க வேண்டிய அவசியம் சோமுப்பிள்ளைக்கு ஏற்பட்டுவிட்டது.

அடுத்த தெரு சுந்தரம் பிள்ளை மூங்கில் வெட்டச் சென்றபோது, மூங்கில் புதரில் கிடந்த ஒரு கட்டுவிரியன் கடித்து விட்டதாகத் தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்தார் சோமுப்பிள்ளை. வாயில் நுரைதள்ளி நினைவு தப்பிக்கிடந்த சுந்தரம் பிள்ளையைப் பார்த்துவிட்டு தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு வேப்பிலை அடித்து மந்திரிக்கத் தொடங்கினார். சோமுப்பிள்ளையின் இந்தப்புதிய அவதாரம் ஊராருக்கு அதிசயமாகவும் வேடிக்கையாகவும் பட்டது. “விதி முடிந்தால்தான் விரியன் கடிக்கும்’ என்ற நம்பிக்கையில் ஊறியவர்கள் அவர்கள். ஆனாலும், என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே என்ற ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. சுற்று வட்டாரத்தில் ஆறு மைலுக்கு யாருக்கு பாம்பு கடித்தாலும் பாடை கட்ட வேண்டியதுதான் என்பதுதான் அவர்கள் அதுவரை அனுபவத்தில் கண்ட உண்மை.

ஆனால், பிள்ளையின் மந்திர சக்தியினால் பிரக்ஞை தப்பி நினைவு இழந்து கிடந்த சுந்தரம் பிள்ளை மெல்ல முனகியதுடன் பிறகு சிறிது சிறிதாக நினைவு மீண்டு உயிர் பிழைத்து எழுந்து விடவே ஊரே அதிசயத்தில் ஆழ்ந்தது. பைராகி மூலம் சோமுப்பிள்ளைக்கு இந்த அதிசய சக்தி கிடைத்திருப்பதை அறிந்த ஊரார் பைராகியையும் சோமுப்பிள்ளையையும் தெய்வமாகவே போற்றத் தொடங்கினர். அந்த ஊரும் சரி சுற்று வட்டாரத்தில் பத்து மைல்களுக்குள் இருந்த ஊர்களும் சரி பாம்புக்கடிக்கு பிரசித்தமானவை. ஊரின் நெஞ்சைக் கிழித்துக் கொண்டு போவது போல அமைந்திருந்த ராமேஸ்வரம் சாலையின் இருபுறமும் ஓங்கி உயர்ந்த மரங்களும் அதற்குப் பின்னே அடர்ந்து மண்டிக் கிடந்த புதர்களும் நிறைந்திருந்த பகுதி அது. சர்வ சாதாரணமாக பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த, அவற்றுக்கு உரிமையான இடத்தை மனிதர்கள் ஆக்ரமித்துக் கொண்டு நடமாடத் தொடங்கியதும் அவற்றுக்குச் சிரமமாகிவிட்டது. என்றாலும் தாங்களாக வலியச் சென்று யாரையும் தீண்டிவிடுவது கிடையாது. இருட்டிலோ, கவனிக்காமலோ தங்களை மிதித்து விடுபவர்களை அல்லது தங்களைத் தாக்க வருகிறார்கள் என்று சந்தேகம் தோன்றும்படி நடந்து கொள்பவர்களை மட்டுமே போட்டுவிடும் இயல்பு கொண்டவை அவை. மனிதர்கள் வயலுக்கு போவதற்கு மரங்களுக்கும் புதர்களுக்குமிடையே அமைந்திருந்த ஒற்றையடிப்பாதைகளையே பயன்படுத்த வேண்டியிருந்தது. அவர்களது அஜாக்கிரதையும், அலட்சியமுமே பாம்புகளை பயமுறுத்திக் கடிக்கச் செய்து கொண்டிருந்தன.

சுந்தரம் பிள்ளையின் புனர்ஜென்மத்திற்குப்பிறகு சோமுப்பிள்ளையின் புகழ் சுற்று வட்டாரம் முழுவதும் ஒரே நாளில் பரவிவிட்டது. தெய்வம்தான் தங்கட்கு உதவ வேண்டி பைராகி வடிவில் வந்து சோமுப்பிள்ளை மூலமாக வழிகாட்டியிருப்பதாக நம்பினர். அதன்பிறகு எப்படியும் மாதம் பத்து பேராவது பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கி வரப்பட்டு சோமுப்பிள்ளையால் பிழைத்துச் செல்வது வழக்கமாகிவிட்டது.

ராசுத்தேவரின் மகன் பாம்புக்கடியிலிருந்து காப்பாற்றப்பட்டபின் உள்ளே சென்ற பிள்ளை வெளியே வரவேயில்லை. பலரும் நன்றி சொல்லவும் பாராட்டவும் நின்று பார்த்துவிட்டு, சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று புறப்பட்டு விட்டனர்.

அதன் பிறகு ஒரு வாரம்வரை பிள்ளையை ஊரில் காண முடியவில்லை. வீடு பூட்டியே இருந்தது. அவர் எங்கு போனார் என்பது யாருக்குமே தெரியவில்லை. அவருடைய பண்ணை ஆட்கள் கூட எந்த விபரமும் தெரியாமல் விழித்தனர்.

ஒரு வாரத்திற்குப்பிறகு பிள்ளையின் வீடு திறந்திருந்தது. தெருவோடு போன அவருடைய ஒன்று விட்ட தம்பியின் மகன் பஞ்சு, வீடு திறந்திருப்பதைப் பார்த்துவிட்டு வந்து வாசற்படியில் நின்று கொண்டு, “”பெரியப்பா, பெரியப்பா” என்று கூப்பிட்டான். கூப்பிட்ட குரல் கேட்டதும் தனது தம்பி மகன்தான் வந்திருக்கிறான் என்பதனைப் புரிந்து கொண்டு “”வாப்பா” என்று கூறியவாறு வெளியே வந்த சோமுப்பிள்ளையைப் பார்த்ததும் அவன் திகைத்து வாயடைத்துப் போய் நின்று விட்டான்.

அவருடைய சபத சின்னங்களான அடர்ந்து நீண்ட தலைமுடி, தாடி முதலியன சுத்தமாக மழிக்கப்பட்டு, பளபளப்பான முகத்துடன், நெற்றி நிறைய பட்டையாக விபூதி பூசப்பட்டு அதன் நடுவே குங்குமப் பொட்டுமாக சிவப்பழமாகக் காட்சியளித்தார் பிள்ளை. அவன் திகைத்து நின்று விட்டதை உணர்ந்து கொண்ட பிள்ளை, “”வாப்பா, உட்காரு” என்று கூறிவிட்டு திண்ணையில் தானும் உட்கார்ந்து கொண்டு அவனையும் உட்காரச் செய்தார்.

அவன் திகைப்பிலிருந்து விடுபடாமலே, “”என்ன பெரியப்பா இது, யாருகிட்டவும் எதுவும் சொல்லாம இத்தனை நாளா எங்கே போயிருந்தீங்க? நாங்கள்லாம் உங்களைக் காணாமே தவிச்சுப் போயிட்டோம். அப்பா ஒவ்வொரு இடமாப் போயி விசாரிச்சுக்கிட்டு இருக்காரு” என்றான்.

“”என்னமோ தோணிச்சு அப்பா, என் அப்பன் முருகனைப்பார்க்க பழநி மலைக்குப் போயிட்டேன். முடி காணிக்கையெல்லாம் கொடுத்திட்டு அவன் காலடியிலேயே ஒரு வாரம் கிடந்திட்டு விடியற்காலம்தான் ஊருக்கு வந்தேன்”

“”பெரியப்பா, உங்க சபதம்” என்று இழுத்தான் அந்த இளைஞன்.

“”ஓ, அதைக் கேக்குறியா ராசுத்தேவர் மகனைக் கொண்டு வந்து வாசலில் போட்டதும், நான் வந்து பார்த்ததும் என் நெஞ்சே கொதிச்சுது. நம்ம கையாலே சாக வேண்டியவன் பாம்புக்கடியாலே சாவுறானேன்னு ஒரு கணம் ஏமாற்றமாகக்கூட இருந்தது. இருந்தாலும் சாகத்தானே போறான், நம்ம கையாலே போனா என்ன பாம்பாலே போனா என்னன்னுதான் உள்ளே போகத் திரும்புனேன். ஆனா சட்டுன்னு எனக்கு உபதேசம் செஞ்ச குரு அப்ப சொன்ன வார்த்தைங்க நினைவுக்கு வந்திருச்சு. அவர் சொன்னார், பாம்பு கடிச்சு கொண்டு வர்ரவுங்க யாரா வேண்னாலும் இருக்கலாம், வேண்டாதவனாகவோ விரோதியாகவோ கூட இருக்கலாம். அப்ப அவன் யாருங்கறது முக்கியமில்லே, அந்த சமயம் அவன் நம்மகிட்ட உயிரை யாசிச்சுகிட்டு வந்து நிக்கற யாசகன். ஒரு யாசகன் நம்மகிட்ட கையேந்தி நிக்கும்போது மடியிலே வச்சுகிட்டு இல்லேன்னு சொல்றது பெரிய பாவம். நம்மளாலே காப்பாத்தக் கூடிய ஓர் உயிரைக் காப்பாத்தாம புறக்கணிக்கறது ஒரு கொலை செய்யுறதுக்கு சமம். பாம்பு கடிச்சு உயிருக்குப் போராடி உயிரை யாசகம் கேட்டு வர்ரவன், அவன் யாரா இருந்தாலும், அவனைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை, அதுதான் நம்ம தர்மம். எனக்கு என் குருவோட இந்த கட்டளை நினைப்புக்கு வந்ததுக்கு அப்புறம்தான் ராசுத்தேவர் மகனுக்கு மந்திரிக்க ஆரம்பிச்சேன்”.

“”அது சரி பெரியப்பா… இங்கே சில பேரு வேற மாதிரி பேசிக்கிட்டாங்க”

“”என்ன பேசிக்கிட்டாங்க?”

“”ராசுத்தேவர் மகன் மேலே உங்களுக்கு இருக்கற வஞ்சம் தீரலை. ஆனா அவன் பாம்புக்கடியாலே சாகக்கூடாது, உங்க கையாலே சாகனுமுன்னுதான் அவனைக் காப்பாத்தியிருக்கீங்கன்னு பேசிக்கிட்டாங்க”.

சோமுப்பிள்ளை மென்மையாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்,

“”அப்படியில்லேப்பா, ராசுத்தேவர் மகனை இங்கே கொண்டு வந்தபோதே அவனுக்கு முக்காலே மூணுவீசம் அளவுக்கு உயிர் போயிருந்தது. இப்ப அவன் உடம்புலே ஓடிக்கிட்டிருக்கற உயிர் நான் குடுத்த பிச்சை. போட்ட பிச்சையை நானே அபகரிக்கக்கூடாது, அது கடவுளுக்கே அடுக்காது. நான் குடுத்த உயிரோட நடமாடுற அவனும் இப்ப என் மகன் மாதிரிதான். அந்த நெனைப்போடத்தான் பழநிக்குப் போயி எங்கப்பன் முருகன் கிட்ட சரணடஞ்சு என் நெஞ்சிலிருந்த பழி வாங்கணும்கற விஷத்தை முறிச்சுகிட்டு வந்தேன். அன்னைக்கு அவன் உடம்பிலே ஏறியிருந்த விஷத்தை முறிச்ச மாதிரியே எங்கப்பன் முருகன் காலடியிலே என் நெஞ்சிலே ஊறியிருந்த பழிவாங்குற எண்ணம்கிற விஷத்தையும் முறிச்சுகிட்டு புது மனுசனா வந்திருக்கேன்”

வியப்பால் விரிந்த வழிகளுடன் எதுவும் பேசத் தோன்றாமல் நீண்ட நேரம் தன் பெரியப்பாவை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு உறைந்து போய் உட்கார்ந்திருந்தான் சோமுப்பிள்ளையின் தம்பி மகன்.

– வெங்கடேசன் Sr (செப்டம்பர் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *