கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,176 
 

சினுவா அச்சிபி
தமிழில்: கே. முரளிதரன்

“மேடம், இந்தப் பக்கம் வாருங்கள்” என்றாள் அந்த சூப்பர் மார்க்கெட்டில் வரிசையாக இருந்த கேஷ் கவுண்டர்களில் ஒன்றைக் கவனித்துக்கொண்டிருந்த துறுதுறுப்பான அந்தப் பெண். திருமதி எமெனிகே தனது ட்ராலியை அந்தப் பெண்ணின் பக்கம் லேசாகத் திருப்பினாள்.

“மேடம், நீங்கள் என் பக்கம் வந்தீர்கள். பிறகு அந்தப் பக்கம் போய்விட்டீர்கள்” என்று குறைபட்டுக்கொண்டாள் அடுத்த கவுண்டரில் இருந்த பெண்.

“ஓ, ஸாரி மை டியர். அடுத்தமுறை கண்டிப்பாக உன்னிடம் வருகிறேன்”

“குட் ஆஃப்டர்னூன் மேடம்” என்று இனிமையான குரலில் இசைத்த அந்தப் பெண், மேடம் வாங்கி வைத்திருந்த பொருள்களைத் தன் கவுண்டரில் எடுத்துவைக்க ஆரம்பித்திருந்தாள்.

“பணமா, அக்கவுண்டா மேடம்?”

“பணம்.”

அந்தப் பெண் பொருள்களின் விலைகளை மின்னல் வேகத்தில் உள்ளிட்டு, மொத்தத் தொகையைச் சொன்னாள். ஒன்பது பவுண்டு பதினைந்து ஷில்லிங் ஆறு சென்ட்.

திருமதி எமெனிகே தனது கைப்பையைத் திறந்து பர்ஸை எடுத்தாள். இரண்டு சுத்தமான, மொடமொடப்பான 5 பவுண்டு நோட்டுகளைப் பர்ஸிலிருந்து எடுத்து நீட்டினாள். அந்தப் பெண் மறுபடி பொத்தானைத் தட்டினாள். இயந்திரத்திலிருந்து பணத்தை வைக்கும் ட்ரே வெளியில் வந்தது. மேடம் கொடுத்த பணத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு, மீதத் தொகையையும் முழ நீளத்திற்கு ரசீதையும் கொடுத்தாள். திருமதி எமெனிகே அந்த ரசீதின் கீழே ஜிபிகிழிரி சீளிஹி. சிளிவிணி கிநிகிமிழி என்ற வார்த்தைகளுடன் மொத்தத் தொகையும் குறிப்பிடப்பட்டிருந்த இடத்தைப் பார்த்து, தலையை அசைத்துக்கொண்டாள்.

இந்தத் தருணத்தில்தான் முதல் சிக்கல் வந்தது. மேடம் வாங்கிய பொருள்களை அட்டைப் பெட்டிக்குள் வைத்து, அதை வெளியில் நிற்கும் மேடத்தின் கார்வரைக்கும் எடுத்துச்செல்வதற்குக் கடையில் ஆளே இல்லை.

“பையன்களையெல்லாம் எங்கே?” என்று அவஸ்தையுடன் கேட்ட அந்தப் பெண், “ஸாரி மேடம். எங்களிடம் வேலை பார்த்த பல பையன்கள் இந்த இலவச ஆரம்பக் கல்வித் திட்டத்தால் வேலையை விட்டுப் போய்விட்டார்கள்… ஜான்…” என்று கூப்பிட்டாள். மீதமிருந்தவர்களில் யாரோ கண்ணில் பட்டிருக்க வேண்டும்.

“இங்கே வா… மேடத்தின் பொருள் களை அட்டைப் பெட்டியில் எடுத்துவை”.

ஜான் என்ற அந்தப் பையனுக்கு வயது 40. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அந்த சூப்பர் மார்க்கெட்டிலும் அவனுக்கு வியர்த்துப்போயிருந்தது. பொருள்களைக் காலி அட்டைப் பெட்டிக்குள் எடுத்துவைத்துக்கொண்டே, சத்தமாகத் தன் அதிருப்தியை வெளியிட்டான்.

“இந்தக் கழுதை வேலைக்கு மேலும் சில ஆட்களைத் தேடச் சொல்லி மேனேஜரிடம் சொல்லப் போகிறேன்.”

“எல்லோரும் இலவசக் கல்விக்குப் போய்விட்டார்கள் என்று கேள்விப்படவில்லையா” என்று வேடிக்கையாகக் கேட்டாள் விற்பனைப் பெண்.

“அது சரி. இலவசக் கல்விக்காக நான் சாக முடியாது.”

கார் நிறுத்துமிடத்தில் இருந்த திருமதி எமெனிகேவின் பழுப்பு நிற மெர்சிடிஸின் பின்புறத்தில் அட்டைப் பெட்டியை வைத்துவிட்டு நிமிர்ந்து நின்றான் ஜான். எமெனிகே தனது கைப்பையையும் பர்சையும் திறந்து, அதிலிருந்த சில்லறைக் காசுகளைக் கிளறி, 3 பென்னி காசைத் தேடி, அதை இரண்டு விரல்களால் எடுத்து அவனது கையில் போட்டாள். அவன் சிறிது நேரம் தயங்கி விட்டு, ஒரு வார்த்தையும் பேசாமல் காலை இழுத்து இழுத்து நடந்தபடி சென்றுவிட்டான்.

சின்னப் பையன்கள் செய்யக்கூடிய வேலைகளைச் செய்யும் இம்மாதிரி வயதானவர்களைப் பற்றி திருமதி எமெனிகே கவலைப்படுவதில்லை. நீங்கள் எவ்வளவுதான் கொடுத்தாலும் அவர்களுக்குத் திருப்தி வராது. காலை இழுத்து இழுத்து நடக்கும் இந்த ஆளைப் பாருங்கள். ஒரு சின்ன அட்டைப் பெட்டியைச் சில அடி தூரங்கள் தூக்கி வந்து வைப்பதற்கு அவன் எவ்வளவு பணத்தை எதிர்பார்க்கிறான்? இலவச ஆரம்பக் கல்வி இம்மாதிரி சூழலைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. வீடுகளுக்கு இதைவிட மோசமான பாதிப்பு. பள்ளி ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை திருமதி எமெனிகே மூன்று பணிப் பெண்களை இழந்துவிட்டாள். குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் தாதி உள்பட. ஏழு மாதக் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு, வேலைக்குச் செல்லும் பெண் என்னதான் செய்ய முடியும்?

ஆனால் இந்தப் பிரச்சினை நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஒரு டெர்ம் இலவசக் கல்வி அளித்த பிறகு திவாலாகிவிடுவோமோ என்ற பயத்தில் அரசாங்கம் இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டது. தனது நிபுணர்கள் அளித்த ஆலோசனையின் படி கல்வி அமைச்சகம் ஆரம்பத்தில் எட்டு லட்சம் குழந்தைகளுக்கு மட்டும் இலவசக் கல்வித் திட்டத்தை வகுத்திருக்க வேண்டும். ஆனால் பள்ளி தொடங்கிய முதல் நாளில் 15 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வந்திருந்தார்கள். கணித்ததைவிட அதிக மானவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? நிபுணர்கள் அரசுக்குத் தவறான வழிகாட்டிவிட்டார்களா? வானொலியில் பேட்டியளித்த தலைமைப் புள்ளிவிவர நிபுணர், தவறான கணிப்பு என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம் என்று குறிப்பிட்டார். பிரச்சினை என்னவென்றால், அக்கம்பக்கத்து நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இங்கே கொண்டுவரப்பட்டு, நியாயமற்ற சிலரால் நேர்மைக்குப் புறம்பான வழியில் பதிவுசெய்யப்பட்டனர் இது நிச்சயம் அத்திட்டத்தைச் சீர்குலைக்கும் ஒரு நடவடிக்கைதான்.

காரணம் என்னவாக இருந்தாலும் சரி, அரசு அந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டது. பிரதமரின் அரசியல் மேதமைக்காகவும் தைரியத்திற்காகவும் தி நியூ ஏஜ் தனது தலையங்கத்தில் அவரைப் பாராட்டியது. ஆனால் பல அனுபவமுள்ளவர்களும் பொறுப்புள்ள குடிமக்களும் சொல்வதை அரசு முன்பே கேட்டிருந்தால் மொத்த அவமானத்தையும் தவிர்த்திருக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியது. உண்மைதான். இந்த இலவசக் கல்வித்திட்டம் குறித்த தங்களது சந்தேகங்களையும் தயக்கங்களையும் தி நியூ ஏஜின் பக்கங்களில் இவர்கள் தொடர்ந்து எழுதிவந்தார்கள். இந்த விவகாரம் குறித்துப் பலரது கருத்துகளை வெளியிட தி நியூ ஏஜ் முன்வந்தது. தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டே இதைச் செய்வதாகச் சொன்னது. அந்நிய முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான செய்தித்தாள்கள் எதை எழுதினாலும் விமர்சகர்கள் அதைக் கண்டுகொள்ளமாட்டார்கள். அந்த விமர்சகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் வாதத்தை முன்வைக்க வேண்டும் எனச் சவால் விடுத்தது தி நியூ ஏஜ். ஆனால் இந்தச் சவாலை எந்த விமர்சகரும் ஏற்கவில்லை. தம் கருத்தை வெளிப்படுத்துவதற்கு தி நியூ ஏஜ் கொடுத்த வாய்ப்பைப் பலர் ஆவலுடன் பயன்படுத்திக்கொண்டார்கள். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று பெரும் கட்டுரைகள் என்ற வீதத்தில் இந்தப் புதிய திட்டத்தை விமர்சித்துப் பெரும் எண்ணிக்கையிலான பொறுப்புள்ள குடிமக்கள் எழுதினார்கள். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள், பொறியியலாளர்கள், விற்பனையாளர்கள், காப்பீட்டு முகவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோர் அவர்களில் அடக்கம். குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதை யாரும் எதிர்க்கவில்லையென்றும் ஆனால் இலவசக் கல்வி என்பது அவசரக்குடுக்கைத்தனமானது என்றும் இவர்கள் குறிப்பிட்டார்கள். பெரும் செல்வமும் பலமும் கொண்ட அமெரிக்காவிலேயே இதை அறிமுகப்படுத்தவில்லை. நாம் எவ்வளவு கீழே இருக்கிறோம் என்று சிலர் சுட்டிக்காட்டினார்கள்.

பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் ஒரு சிறுவனுக்குரிய உற்சாகத்துடன் படித்தார் திரு. எமெனிகே. “சிவில் சர்வீஸ் அதிகாரிகளையும் நாளிதழ்களில் எழுத அனுமதிக்க வேண்டும்” என்று கடந்த பத்து நாட்களில் மூன்று முறையாவது எமெனிகே சொல்லியிருப்பார். “இது மோசமல்ல. ஆனால் சுதந்திரம் பெற்றதிலிருந்து நம் நாடு கல்வியில் பெரும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதை அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும். காரணம், கல்வியின் மதிப்பு என்ன என்பது பெற்றோர்களுக்குத் தெரியும். குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணத்தைச் செலுத்த அவர்கள் என்ன தியாகத்தை வேண்டுமானாலும் செய்வார்கள். இது ஒன்றும் ஆலிவர் டிவிஸ்ட்களின் தேசமல்ல.”

இந்தக் கட்டத்தில் இம்மாதிரி விவாதங்களில் திருமதி எமெனிகே பெரிதாக ஆர்வம்காட்டவில்லை. இந்தக் கட்டத்தில் எதுவும் நிச்சயமில்லாமல் இருந்தது. இலவசக் கல்வியைப் பற்றி அவளுக்குச் சில தனிப்பட்ட, தெளிவில்லாத சந்தேகங்கள் இருந்தன. அவ்வளவுதான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் “நீ பேப்பரைப் பார்த்தாயா? இந்த விஷயத்தைப் பற்றி மைக் எழுதியிருக்கிறார்” என்றார் அவளுடைய கணவர்.

“யாரது மைக்?”

“மைக் ஓகுடு.”

“ஓ.. என்ன சொல்லியிருக்கிறார்?”

“நான் இன்னும் படிக்கவில்லை. ஓ. ஆமாம் . . . மைக் எப்போதும் மனத்தில் பட்டதைப் பட்டெனச் சொல்லி விடுவார் என்று நம்பலாம். எப்படி ஆரம்பிக்கிறார் பாரேன்: ‘இலவசக் கல்வி என்பது சுத்தமான கம்யூனிசத்திற்கு இணையானது.’ இந்தக் கருத்து முழுக்க உண்மையல்லதான். ஆனால் யாராவது வந்து தனது கப்பல் நிறுவனத்தைத் தேசியமயமாக்கிவிடுவார்களோ என்று நினைக்கிறார். கம்யூனிசத்தைப் பார்த்துப் பயப்படுகிறார்.”

“ஆனால் இங்கே கம்யூனிசம் வர வேண்டுமென்று யார் அழுகிறார்கள்?”

“யாருமில்லை. அன்றைக்குச் சாயங்காலம் கிளப்பில் அவரிடம் அதைத்தான் சொன்னேன். ஆனால் ரொம்பவும் பயந்துபோயிருக்கிறார். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஏகப்பட்ட பணம் இருப்பதுகூட நல்லதல்ல.”

இந்த அளவில்தான் எமெனிகே குடும்பத்தில் அறிவுபூர்வமாக விவாதங்கள் நடக்கும். எல்லாம் அந்தக் குறிப்பிட்ட நாள்வரைதான். அவர்கள் வீட்டில் சமையல்காரனுக்கு உதவுவதற்காகவும் உபசாரகனுக்கு உதவுவதற்காகவும் இருந்த 12 வயதுப் பையன், உடல் நலமில்லாமல் இருக்கும் தன் தந்தையைப் பார்க்கப் போக வேண்டும் என்று சொன்னான்.

“உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையென்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார் மேடம்.

“என் சகோதரன் வந்து சொன்னான்.”

“உன் சகோதரன் எப்போது வந்தான்?”

“நேற்று சாயங்காலம் வந்தான்.”

“என்னைப் பார்க்க ஏன் அவனைக் கூட்டிவரவில்லை?”

“மேடம் அவனைப் பார்க்க விரும்புவார் என்று எனக்குத் தெரியாது.”

படித்துக்கொண்டிருந்த பேப்பரிலிருந்து தலையைத் தூக்கி “நேற்றிலிருந்து இப்போதுவரை இதைப் பற்றி ஏன் சொல்லவில்லை?” என்று கேட்டார் திரு. எமெனிகே.

“நான் வீட்டிற்குப் போக வேண்டியிருக்காது என்று முதலில் நினைத்தேன். ஆனால் வீட்டுக்குப் போய் அவர்களைப் பார்க்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அவருக்கு ரொம்பவும் உடம்பு சரியில்லாமல் இருக்கலாம். அதனால்…”

“சரி. போ. ஆனால், நாளை மதியத்திற்குள் திரும்பி வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால்…”

“நாளைக் காலைக்குள் வந்து விடுவேன்.”

ஆனால் அவன் வரவில்லை. அவன் இப்படிப் பொய் சொல்லி விட்டுப் போனதில் திருமதி எமெனிக்கேவுக்கு மிகுந்த கோபம். வேலைக்காரர்கள் இப்படித் தன்னை ஏமாற்றுவது அவருக்குப் பிடிக்காது. அந்தச் சுண்டெலி தன்னைப் புத்திசாலியாக நினைத்துக்கொள்கிறது. கொஞ்ச நாட்களாகவே அவன் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்தே அவள் சந்தேகப்பட்டிருக்க வேண்டும். இப்போது ஒரு மாசச் சம்பளத்தோடு ஓடிவிட்டான். நோட்டீஸ் காலத்திற்குப் பதிலாக அந்தச் சம்பளத்தைப் பிடித்திருக்கலாம். இம்மாதிரி ஆட்களிடம் அன்பாக நடந்துகொண்டாலே இப்படித்தான். அதற்குப் பலனேதும் இருக்காது.

ஒரு வாரம் கழித்துத் தோட்டக்காரன் நோட்டீஸ் கொடுத்தான். அவன் எதையும் மறைக்கவில்லை. தங்கள் கிராமத்திற்குத் திரும்பி, இலவசக் கல்விக்குப் பதிவுசெய்துகொள்ளும்படி அவனுடைய அண்ணன் செய்தி அனுப்பியிருப்பதாகச் சொன்னான். இந்தக் கிராமத்து அறியாமையைப் பார்த்து சிரித்தார் திரு. எமெனிகே.

“இலவச ஆரம்பக் கல்வி என்பது குழந்தைகளுக்குத் தான். உன்னை மாதிரி வயதானவனை யாரும் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். உனக்கு எத்தனை வயது?”

“எனக்குப் பதினைந்து வயது, சார்.”

“ஆமாம், மூன்று வயது. வந்து முலையைச் சப்பு” என்று சிரித்தாள் திருமதி எமெனிகே.

“உனக்குப் பதினைந்து வயதல்ல. குறைந்தது இருபது வயதாவது ஆகும். எந்தத் தலைமையாசிரியரும் உன்னை ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்ளமாட்டார். நீ போய் முயல விரும்பினால் போகலாம். போய், முடியவில்லை என்று மட்டும் திரும்பிவராதே.”

“நான் அதில் தோற்கமாட்டேன் ஓகா” என்றான் தோட்டக்காரன். “எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு என் தந்தையைவிட வயது அதிகம். அவன் பதிவுசெய்து எல்லாவற்றையும் முடித்துவிட்டான். மாஜிஸ்ட்டிரேட் நீதிமன்றத்திற்குப் போய், அங்கே ஐந்து ஷில்லிங் கொடுத்தான். அவனுக்கே வயதைக் குறைத்துச் சான்றளித்துவிட்டார்கள்.”

“இனிமேல் உன் இஷ்டம். நீ இங்கே நல்லபடியாக வேலை பார்த்திருக்கிறாய் . . .”

“மார்க், இது என்ன தேவையில்லாத பேச்சு. அவன் போக விரும்புகிறான். போகட்டும்.”

“நான் அப்படி விட்டுவிட்டுப் போக விரும்புவதாகச் சொல்லாதீர்கள் மேடம். ஆனால் என் அண்ணன்தான் . . .”

“எல்லாம் கேட்டாகிவிட்டது. நீ போகலாம்.”

“ஆனால் நான் இன்றைக்குப் போகவில்லை. ஒரு வார நோட்டீஸ் கொடுக்க விரும்புகிறேன். மேடத்திற்காக சரியான ஒரு தோட்டக்காரனையும் தேடிக் கொடுப்பேன்.”

“நோட்டீஸ், தோட்டக்காரனைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே. போய்விடு.”

“நான் என் சம்பளத்தை இப்போது வாங்கிக் கொள்ளவா அல்லது மத்தியானம் வந்து வாங்கிக்கொள்ளவா?”

“எந்தச் சம்பளம்?”

“நான் இந்த மாதம் முழுக்க வேலை பார்க்கமாட்டேன். அதனால் நான் வேலை பார்த்த பத்து நாட்களுக்கான சம்பளம் மேடம்.”

“இதற்கு மேலும் என்னை எரிச்சல் மூட்டாதே. போய்விடு.”

திருமதி எமெனிகேவுக்கு உண்மையான எரிச்சல் அதற்குப் பிறகுதான் வந்தது. அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவள் வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது, குழந்தையைப் பார்த்துக்கொள்ள வைத்திருந்த தாதியான அபிகெய்ல், குழந்தையை இவளது மடியில் போட்டுவிட்டுப் போய்விட்டாள். அபிகெய்ல் கூட! அவளுக்காக எவ்வளவோ செய்தும்கூடப் போய்விட்டாள். எவ்வளவு பாடாவதியான தோற்றத்தில் அவள் இங்கே வந்தாள். சானிட்டரி நாப்கின்களுக்குப் பதிலாகக் கிழிந்த துணிகளைத்தான் பயன்படுத்துவாள். குழந்தையின் அழுகையை நிறுத்த அதற்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்து, மூக்கிலும் கொஞ்சம் தண்ணீர் விடுமளவுக்கு வெகுளிப் பெண் அவள். இப்போது அவள் பெரிய பெண்ணாகிவிட்டாள். இப்போது தைக்கவும் சமைக்கவும் தெரியும். பிராவும் சுத்தமான பேண்ட்களும் அணிந்துகொள்கிறாள். பவுடர், சென்ட்களைப் பூசிக்கொள்கிறாள். தலைமுடியை அலங்கரித்துக்கொள்கிறாள். இப்போது கிளம்பிவிட்டாள்.

அந்த நாளிலிருந்தே திருமதி எமெனிகேவுக்கு “இலவச ஆரம்பக் கல்வி” என்ற வார்த்தைகள் பிடிக்காமல் போய்விட்டன. திடீரென இந்த வார்த்தைகள் மக்களிடையே சாதாரணமாகப் புழங்கும் வார்த்தைகளாகிவிட்டன. குறிப்பாக, கிராமப் புறங்களில். மக்கள் இதைப் பற்றி ஜோக் அடிக்கும்போதெல்லாம் அவளுக்கு ஏகப்பட்ட கோபம் வரும். இது குறித்த உணர்ச்சியே இல்லாத அவர்களைத் தலையில் அடிக்க வேண்டும் என்று அவளுக்குள் பொங்கும். அவளுக்கு அமெரிக்கர்களையும் தூதரகங்களையும் (குறிப்பாக அமெரிக்கத் தூதரகங்களைப்) பிடிக்கவேயில்லை. மிச்ச மீதமிருக்கும் வேலைக்காரர்களையும் பணத்தை வீசியெறிந்து ஆப்பிரிக்கர்களிடமிருந்து இவர்கள் பறித்துக்கொள்கிறார்கள். அந்தத் தோட்டக்காரன் பள்ளிக் கூடத்திற்குப் போகவில்லை; ஏழு பவுண்டு சம்பளம் தருவதாகச் சொன்ன ஒரு போர்டு பவுண்டேஷன் ஆளிடம் வேலைக்குச் சேர்ந்துவிட்டான் என்று அவளுக்குத் தெரியவந்ததும்தான் இந்தக் கோபம் வந்தது. அந்த ஆள் இவனுக்கு சைக்கிளும் அவன் மனைவிக்கு சிங்கர் தையல் மிஷினும் வாங்கிக் கொடுத்திருக்கிறான்.

“ஏன் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்?” என்று கேட்டாள் அவள். இந்தக் கேள்விக்கு உண்மையில் அவள் பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் கணவர் வழக்கம் போலப் பதிலளித்தார்.

“ஏனென்றால், அமெரிக்காவில் அவர்களால் வேலைக்காரர்களை வைத்துக்கொள்ள முடியாது. அவர்கள் இங்கே வரும்போது, வேலைக்காரர்கள் இவ்வளவு மலிவாகக் கிடைப்பதைப் பார்த்தவுடன் அவர்களுக்கு என்னசெய்வதென்று தெரிவதில்லை. அதுதான் காரணம்” என்றார் அவர்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு இலவச ஆரம்பக் கல்வி ரத்துசெய்யப்பட்டது. பள்ளிக் கட்டணம் திரும்பவும் கொண்டுவரப்பட்டது. தி நியூ ஏஜ் குறிப்பிட்டது போல, “அரைவேக்காட்டுத்தனமான சோஷலிசமெல்லாம்” ஆப்பிரிக்கா மாதிரி நாடுகளில் சரிப்படாது என்று அரசு நம்பவைக்கப்பட்டிருந்தது. படுமோசமான இடதுசாரிப் பார்வையுடன் செயல்பட்டுவரும் கல்வித் துறை அமைச்சருக்கு இது சரியான அடி. மிகவும் உறுதியான நிதியமைச்சருடன் எப்போதும் கல்வியமைச்சர் மோதலில் ஈடுபட்டு வந்தார்.

“நாம் புதிய வரிகளை விதிக்காவிட்டால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது” என்று கேபினட் கூட்டத்தில் சொன்னார் நிதியமைச்சர்.

“அப்படியானால், வரிகளை விதிப்போம்” என்று கல்வி அமைச்சர் சொன்னதும் அவருடைய சகாக்களிடமிருந்து பெரும் சிரிப்பு எழுந்தது. அங்கு ஆஜராகியிருந்த திரு. எமெனிகே போன்ற நிரந்தரச் செயலர்கள் கூடச் சிரித்தார்கள். இத்தனைக்கும் விதிமுறைப்படி அவர் விவாதத்திலோ சிரிப்பிலோ கலந்துகொள்ளக் கூடாது.

அப்போதும் சிரித்துத் தீராத நிதியமைச்சர் “நம்மால் அப்படிச் செய்ய முடியாது” என்று சொன்னார். “இங்கிருக்கும் என்னுடைய மரியாதைக்குரிய நண்பர் இந்த அரசு தனது முழு ஆட்சிக்காலத்தையும் நிறைவுசெய்கிறதா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படமாட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நம்மில் சிலர் அது பற்றிக் கவலைப்படுகிறோம். மற்றவர்கள் எப்படியோ, என்னைப் பொறுத்தவரை, தேர்தலால் எனக்கு ஏற்பட்ட கடன் தீரும் வரைக்குமாவது நான் இந்தப் பதவியில் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்”

“ஹியர், ஹியர்” என்று சிரித்தும் கத்தியும் மற்றவர்கள் இதை வரவேற்றார்கள். விவாதத் திறமையில் கல்வியமைச்சரால் நிதியமைச்சருடன் போட்டியிட முடியாது. ஏன் பிரதமர் உள்பட அமைச்சரவையில் இருக்கும் யாராலும், விவாதத்தில் நிதியமைச்சருடன் போட்டியிட முடியாது.

“அதில் நாம் எந்தத் தவறும் செய்துவிடக் கூடாது” என்று தீவிரமான முகபாவத்துடனும் குரலுடனும் தன் பேச்சைத் தொடர்ந்தார் நிதியமைச்சர். “ஏற்கனவே சிரமப்படும் நம் மக்களின் மீது மேலும் புதிய வரிகளை விதிக்கும் அளவுக்கு யாரும் முட்டாள்தனமாக இருந்தால் . . .”

“ஆப்பிரிக்காவில் பொதுமக்கள் இல்லையென்று நினைத்தேன்” என்று ஒரு சிறிய சிரிப்புடன் குறுக்கிட்டார் கல்வியமைச்சர். ஒன்றிரண்டு பேர் சிரித்தார்கள்.

o

“என் மதிப்பிற்குரிய நண்பரின் பிரதேசத்தில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். கம்யூனிச முழக்கங்கள் எளிதில் எல்லோரையும் தொற்றிக்கொள்ளக்கூடியவை. புதிய வரிகளை விதிப்பதால் ஏற்படக்கூடிய கலவரங்களை அடக்குவதற்கு ராணுவத்தை அனுப்ப நாம் தயாராக இருந்தாலொழிய, புதிய வரிகளைப் பற்றி இப்படிப் போகிறபோக்கில் நாம் பேசக் கூடாது. மிகுந்த வலியுடனும் தயக்கத்துடனும் வாழ்வின் ஒரு எளிய அம்சத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்: “மக்கள் புதிய வரிகளை எதிர்த்துக் கலகம் செய்வார்கள். ஆனால் பள்ளிக் கட்டணத்தை எதிர்த்துக் கலகம்செய்ய மாட்டார்கள்.” இப்போதும்கூட எல்லோரும் இதைக் கற்றுக்கொண்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கான காரணம் எளிமையானது. பள்ளிக் கட்டணம் எதற்கு விதிக்கப்படுகிறது என்பது பிளாக் டிக்கெட் விற்பவனுக்குக்கூடத் தெரியும். அவனுடைய குழந்தை காலையில் பள்ளிக்கூடத்திற்குப் போய், சாயங்காலம் திரும்பிவருவதைப் பார்க்கிறான். ஆனால் அவனிடம் போய்ப் பொது வரிவிதிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். உடனே, அவனுடைய பணத்தை அரசாங்கம் திருடிக்கொள்வதாக நினைப்பான். இன்னொரு விஷயம், ஒரு மனிதன் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட விரும்பவில்லையென்றால் கட்டாமல் இருந்துவிடலாம். என்ன இருந்தாலும் இது ஒரு ஜனநாயக சமூகம். அப்படிக் கட்டாமல் இருந்தால், அதிகபட்சம் என்ன நடக்கும்? அவனுடைய குழந்தை பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலேயே இருந்துவிடும். அதை அவன் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டான். ஆனால் வரி என்பது வேறு. ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதை அவர் கட்டித்தான் ஆக வேண்டும். இரண்டுக்கும் இடையில் துல்லியமான வித்தியாசம் இருக்கிறது. அதனால்தான் மக்கள் கலகம் செய்கிறார்கள்.” இதைக் கேட்டு சிலர் மட்டும் “ஹியர் . . . ஹியர்” என்று சொன்னார்கள். சிலர் ஆசுவாசத்தையோ ஒப்புதலையோ குறிக்கும் வகையில் பெருமூச்சுவிட்டார்கள். நிதியமைச்சரைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வியந்து, நேசித்த திருவாளர் எமெனிகே, நிதியமைச்சரின் பேச்சு முழுவதும் பல்லியைப் போலத் தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். தன்னுடைய “ஹியர்… ஹியர்”ஐச் சற்றுச் சத்தமாகக் கத்திவிட்டார். இதனால், பிரதமரின் முறைப்பையும் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

இலக்கில்லாமல் கொஞ்ச நேரம் பேசினார்கள். பிறகு இலவசக் கல்வியை ஒழிக்க வேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட விஷயங்களை முழுமையாக ஆராயும் வரைக்கும் அதை நிறுத்திவைப்பது என்றும் முடிவெடுத்தார்கள்.

o

பத்து வயது சின்னப் பெண்ணான வெரோனிகா மனமுடைந்து போயிருந்தாள். உற்சாகமளிக்காத, கடுமையான வீட்டு வேலைகளிலிருந்து விடுதலையளிப்பதால் அவளுக்குப் பள்ளிக்கூடத்தை ரொம்பவும் பிடித்திருந்தது. அவளுடைய அம்மா அனாதரவான விதவை. நாள் முழுவதும் பண்ணையில் வேலை பார்ப்பாள். சந்தை நாட்களில் சந்தைக்குப் போய்விடுவாள். அப்போது சின்னக் குழந்தைகளை வெரோதான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வயதுக் குழந்தையான மேரியைத்தான் அதிகம் கவனிக்க வேண்டியிருக்கும். இருப்பதிலேயே அதுதான் மிகவும் சின்னது. மற்ற இரண்டு பேரும் ஏழு வயது, நான்கு வயது குழந்தைகள். அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். பனம் விதைகளையோ வெட்டுக் கிளிகளையோ பிடித்துச் சாப்பிட்டுக்கொள்வார்கள். அவர்களால் வெரோவுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் மேரி வேறு மாதிரி. காலையில் அவளுக்கு ஃபூஃபூவும் காலை உணவிலிருந்து மிச்சம் பிடித்து அவளுக்கென வைத்திருக்கும் சூப்பும் (சூப்பில் தண்ணீர் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கும்) கொடுத்த பிறகும் அவள் அழுதுகொண்டேயிருப்பாள். காலை உணவே இரவு உணவில் மிஞ்சியது தான். பனம் விதைகளைத் தானே மென்று தின்னும் அளவுக்கு மேரிக்கு வயதாகவில்லை. அதனால் வெரோ முதலில் பாதிமென்று, அதனை மேரிக்குக் கொடுப்பாள். சாப்பாடு, பனம் விதை, வெட்டுக்கிளி, ஒரு கிண்ணம் தண்ணீர் ஆகியவற்றிற்குப் பிறகும் மேரி திருப்தியடைய மாட்டாள். இத்தனைக்கும் அவளுடைய வயிறு டிரம்மைப் போலப் பெரிதாகவும் இறுக்கமாகவும் இருக்கும். கண்ணாடியைப் போல மின்னும்.

அவர்களுடைய அம்மா மார்த்தா ஒரு அதிர்ஷ்டக் கட்டை. நீண்ட நாட்களுக்கு முன்பு அவளுடைய வாழ்க்கை மிக நல்லபடியாகத்தான் தொடங்கியது. உள்ளூர் சுவிசேஷப் பிரச்சாரகர்களுக்கு எதிர்கால மனைவிகளைத் தயாரித்து அளிப்பதற்காக வெள்ளை பெண் பாதிரிகளால் புதிதாகத் தொடங்கப்பட்ட செயிண்ட் மோனிகாவில் அவள் ஒரு முன்னணி மாணவி. அந்தக் காலத்தில் அவளுடன் படித்த மாணவிகள் எல்லோரும் இளம் ஆசிரியர்களைக் கல்யாணம் செய்துகொண்டார்கள். இப்போது அவர்களில் பலர் பாஸ்டர்களின் மனைவிகளாக இருக்கிறார்கள். ஏன் சிலர் பிஷப்புகளின் மனைவியாகக் கூட இருக்கிறார்கள். ஆனால் மார்த்தா அவளுடைய ஆசிரியையான மிஸ் ராபின்சன் கொடுத்த ஊக்கத்தால் இளம் தச்சனைக் கல்யாணம் செய்துகொண்டாள். அவன் ஓனிஷ்டா இன்டஸ்ட்ரியல் மிஷினில் வெள்ளை மிஷினரிகளால் பயிற்றுவிக்கப்பட்டவன். கறுப்பு மனிதன் மீட்சியடைய வேண்டுமென்றால் அவன் வேதாகமத்தைப் படிப்பதோடு சில உடல்ரீதியான தொழில்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையில் நிறுவப்பட்ட தொழிற்கல்விக்கூடம் அது. (இன்டஸ்ட்ரியல் மிஷின்மீது மிஸ் ராபின்சன் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார். அதன் முதல்வரைத்தான் பிற்காலத்தில் அவர் மணந்துகொண்டார்). அந்த ஆரம்ப கால சுவிசேஷ நாட்களில் பெரும் நம்பிக்கை இருந்தது. ஆனால் ஆசிரியப் பணிகளோ எழுத்தர் வேலைகளோ வளர்ந்த அளவுக்குத் தச்சுத் தொழில் வளர்ச்சியடையவில்லை. அதனால் மார்த்தாவின் கணவன் இறந்தபோது (அவனுக்கு இத்தொழிலைக் கற்றுக் கொடுத்த மிஷினரிகளின் வார்த்தைகளில் சொல்வதானால் – ஒரு காலத்தில் பூலோகத்தில் தச்சனாக இருந்தவனால் சொர்க்கத்தில் இருக்கும் பணிகளுக்காக அவன் அழைத்துக்கொள்ளப்பட்டபோது) அவள் அனாதையாகிப்போனாள். ஆரம்பத்திலிருந்தே அது ஒரு அதிர்ஷ்டம் கெட்ட கல்யாணம்தான். திருமணமாகி இருபது வருடங்களுக்குப் பிறகே முதல் குழந்தை பிறந்தது. அதனால், வயதான காலத்தில் சின்னக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததோடு, உழைப்பதற்கான தெம்பும் அவள் உடலில் இல்லை. அவள் அதில் கசந்துபோயிருந்தாள் என்று சொல்ல முடியாது. மலட்டுத்தனம் என்ற சாபத்தைக் கடவுள் நீக்கிவிட்டார் என்று அவள் ஏகப்பட்ட சந்தோஷமடைந்தாள். ஆனால் அவள் கணவனை நோய் தாக்கி, அவனது வலது கரத்தை முடக்கியது. ஐந்து வருடங்களாக இப்படியிருந்து அவன் செத்துப்போனான். இதுதான் அவளை மிகவும் வருத்தப்படுத்தியது. அவளால் தாங்க முடியாத, நியாயமற்ற தண்டனை அது.

வெரோவைப் பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்திய பிறகு, அவர்களது கிராமத்தைச் சேர்ந்தவரும் பெரிய அரசு அதிகாரியும் தலைநகரத்தில் வசிப்பவருமான திரு. மார்க் எமெனிகே மார்த்தாவைச் சந்தித்தார். அவருடைய மெர்சிடிஸ் 220எஸ்ஸைப் பிரதான சாலையில் ஓரத்தில் நிறுத்திவிட்டுக் கிட்டத்தட்ட 500 அடி தூரத்தை வாகனங்கள் செல்ல முடியாத பாதையில் நடந்துவந்து அந்த விதவையின் குடிசையை அடைந்தார். இவ்வளவு பெரிய மனிதரின் வருகையைப் பார்த்து மார்த்தா முதலில் பயந்துபோனாள். தான் வைத்திருந்த கோலா விதைகளை அங்குமிங்கும் தேடியபடி இதைத்தான் யோசித்துக்கொண்டிருந்தாள். நவீன மனிதர்களுக்கே உரிய வகையில் அந்தப் பெரிய மனிதரே அந்த மர்மத்தை உடைத்தார்.

“எங்களுடைய சின்னக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஒரு சின்னப் பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கிறோம். உன் பெண்ணைப் பற்றி விசாரிக்கும்படி யாரோ இன்று சொன்னார்கள் …”

மார்த்தா முதலில் தயங்கினாள். ஆனால் அந்தப் பெண்ணின் முதல் வருட வேலைக்காக அந்தப் பெரிய மனிதர் ஐந்து பவுண்டுகள் கொடுப்பதாகவும் அவளுக்கு உணவு, உடை அளித்துப் பிற தேவைகளையும் கவனித்துக்கொள்வதாகவும் சொன்ன பிறகு அவள் இளக ஆரம்பித்தாள்.

“நான் ஒன்றும் பணத்தைப் பற்றிக் கவலைப்பட வில்லை. ஆனால் என் மகளை நன்றாகப் பார்த்துக்கொள்வீர்களா என்றுதான் கவலையாக இருக்கிறது” என்றாள் மார்த்தா.

“நீ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை, மா. எங்களுடைய குழந்தைகளில் ஒருத்தியாகவே அவளை நடத்துவோம். என்னுடைய மனைவி ஒரு சமூக நலத்துறை அதிகாரி. குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதென்றால் அவளுக்கு என்னவென்று தெரியும். உன் மகள் எங்கள் வீட்டில் சந்தோஷமாக இருப்பாள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அந்தச் சின்னக் குழந்தையைத் தூக்கிவைத்துக்கொள்வதும் என் மனைவி அலுவலகத்திற்கும் பிற குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும் போயிருக்கும் நேரத்தில் அதற்குப் பால் கொடுக்க வேண்டியதும்தான் அவள் வேலை.”

“வெரோவும் அவள் தங்கை ஜாயும் கூடப் போன டெர்மில் பள்ளிக்கூடத்தில் படித்தார்கள்.” எதற்காக இதைச் சொல்கிறோம் என்று தெரியாமலேயே சொன்னாள் மார்த்தா.

“எனக்குத் தெரியும். இந்த விஷயத்தில் அரசாங்கம் செய்தது மோசம் தான். ரொம்பவும் மோசம். ஆனால் ஒரு குழந்தை பெரிய ஆளாக வருமென்றால், அது பள்ளிக்கூடத்திற்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி பெரிய ஆளாகிவிடும். இதெல்லாம் இங்கே எழுதியிருக்கிறது. கை ரேகையில் எழுதியிருக்கிறது.”

மார்த்தா தரையையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு கண்களை உயர்த்தாமலேயே பேசினாள். “எனக்குக் கல்யாணம் ஆனபோது, எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்: நான் இப்போது இருப்பதைவிட என் மகள்கள் நல்ல நிலைமையில் இருப்பார்கள். நான் அந்தக் காலத்திலேயே மூன்றாம் வகுப்புப் படித்தேன். அவர்கள் எல்லோரும் கல்லூரிக்குச் சென்று படிப்பார்கள் என்று சொல்லிக்கொண்டேன். முப்பது வருடங்களுக்கு முன்னால் எனக்குக் கிடைத்ததுகூட இவர்களுக்குக் கிடைக்காது. இதை நினைத்துப் பார்த்தால் என் நெஞ்சே வெடித்து விடும்போலிருக்கிறது.”

“மா… இதைப் பற்றியெல்லாம் நினைத்து ரொம்பவும் கவலைப்படாதே. நான் முன்பே சொன்ன மாதிரி நாம் என்னவாக ஆகப்போகிறோம் என்பது இங்கே எழுதியிருக்கிறது. என்ன சிரமம் வந்தாலும் அது மாறப்போவதில்லை.”

“எனக்கும் என் கணவனுக்கும் எழுதியதைவிட நல்லதாக எழுதியிருக்கும்படி கடவுளை வேண்டிக்கொண்டிருக்கிறேன்.”

“ஆமென்… இந்தப் பெண்ணைப் பொறுத்தவரை, இவள் எங்கள் வீட்டில் நல்லபடியாகவும் கீழ்ப்படிந்தும் நடந்துகொண்டால் எங்கள் குழந்தை தானே சமாளித்துக்கொள்ளும் அளவுக்குப் பெரியவனான பிறகு, இவளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவிடாமல் எங்களை எது தடுக்கப்போகிறது? எதுவுமில்லை. அவள் இன்னும் சின்னக் குழந்தைதான். எத்தனை வயதாகிறது?”

“பத்து வயதாகிறது.”

“பார்த்தாயா…? அவள் குழந்தைதான். அவள் பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் படிக்க நாள் இருக்கிறது.”

வெரோவைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதாகச் சொன்னதெல்லாம் ஒரு பேச்சுக்குச் சொன்னதென்று அவருக்குத் தெரியும். மார்த்தாவுக்கும் தெரியும். ஆனால் பக்கத்திலிருந்த அறையில் ஒரு இருட்டு மூலையிலிருந்தபடி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த வெரோவுக்கு அது புரியவில்லை. ஒரு குழந்தை தன்னைத் தானே கவனித்துக்கொள்ள எவ்வளவு நாட்களாகும் என்று அவள் கணக்குப்போட்டுப் பார்த்தாள். சீக்கிரத்திலேயே அது நடந்துவிடும். அதனால், தலைநகரத்தில் அந்தப் பெரிய மனிதரின் வீட்டில் வசிக்க அவள் சந்தோஷமாகச் சென்றாள். சீக்கிரமே வளர்ந்து தன்னைத் தானே கவனித்துக்கொள்ளக்கூடிய குழந்தையை அவள் பார்த்துக்கொண்டாள். அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு பள்ளிக்கூடத்திற்குப் போகும் வாய்ப்பு இவளுக்குக் கிடைக்கும்.

வெரோ மிகவும் நல்ல பெண். ரொம்பவும் கூர்மையான பெண். திரு. எமெனிகேவும் அவரது மனைவியும் ரொம்பவும் சந்தோஷமடைந்தார்கள். அவளைப் போல இரண்டு மடங்கு வயதுள்ள பெண்களுக்கு உரிய புத்திசாலித்தனம் அவளுக்கு இருந்தது. எல்லாவற்றையும் விரைவாகக் கற்றுக்கொண்டாள்.

சமீப காலமாக நல்ல வேலைக்காரர்கள் கிடைப்பதில் ஏற்பட்டிருந்த சிரமத்தால் மிகவும் கசந்துபோயிருந்த திருமதி எமெனிகே, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டாள். இலவச ஆரம்பக் கல்வித் திட்டத்தால் ஏற்பட்டக் குழப்பத்தை நினைத்து அவளால் சிரிக்க முடிந்தது. இப்போது அவளால் எங்கு வேண்டுமானாலும் போக முடியும். சின்னப் பையனை நினைத்துக் கவலைப்படாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தங்க முடியும் என்று திருமதி எமெனிகே தன் நண்பர்களிடம் சொன்னாள். வெரோவின் வேலைகளிலும் நடத்தையிலும் அவளுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அவளுக்கு மிகுந்த அன்புடன் “லிட்டில் மேடம்” என்று பெயர் சூட்டினாள். அபிகெய்ல் வேலையை விட்டுப்போன பிறகு வந்த மாதங்களில் அவள் பட்ட சிரமங்களுக்கெல்லாம் ஒருவழியாக முடிவு வந்துவிட்டது. குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக ஒரு பெண்ணைத் தேடி என்னென்னவோ செய்து பார்த்து விட்டாள். ஏதும் அமையவில்லை. ஒரு இளம் பெண் வந்தாள். ஆனால் மாதத்திற்கு ஏழு பவுண்டுகள் கேட்டாள். இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. அவள் பொதுவாக நடந்துகொண்ட விதம்தான் – வேலைக்காரர்களுக்கென இருக்கும் வீட்டில் கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமை உள்பட தொழிலாளர் சட்டத்தில் இருக்கும் எல்லா உரிமைகளையும் அறிந்தவள்போல அவள் நடந்துகொண்டாள். ஏன், கணவனைக்கூடப் பயன்படுத்திக்கொள்ளலாம். மார்க் அந்த மாதிரி ஆள் அல்ல. ஆனால் அந்தப் பெண் அவ்வளவு சரியானவள் அல்ல. அவளுக்குப் பிறகு வேறு யாரும் இதுவரை வரவில்லை.

o

எமெனிகேவின் மூத்த குழந்தைகள் – மூன்று பெண்கள், ஒரு பையன் – தினமும் காலையில் தந்தையின் மெர்சிடிசிலோ தாயின் சத்தமான ஃபியட்டிலோ கிளம்பும்போது வெரோ குழந்தையைப் படிவரைக்கும் கொண்டுவந்து, அவர்களுக்கு ‘பை. . . பை’ சொல்லச் செய்வாள். அவளுக்கு அவர்களுடைய சுத்தமான ஆடைகளும் ஷூக்களும் ரொம்பவும் பிடித்திருந்தன. அவள் வாழ்க்கையில் ஷூ அணிந்ததேயில்லை. ஆனால் அவளுக்குப் பொறாமை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால் தினமும் காலையில் வீட்டையும் தெரிந்த விஷயங்களையும் பொருள்களையும் விட்டுக் கிளம்பி, வெளியில் செல்வதுதான். முதல் சில மாதங்களில் இந்தப் பொறாமை மிகக் குறைவாக இருந்தது. கிராமத்திலிருந்து ஒரு பெரிய இடத்திற்கு வந்த சந்தோஷத்தில் இது புதைந்து போயிருந்தது. அம்மாவின் பாடாவதி குடிசையிலிருந்து, மதிய நேரத்தில் குடலை முறுக்கி வலியேற்படுத்தும் பனம் விதைகளிலிருந்து, மீன்கூட இல்லாமல் கசக்கும் விதைகளால் ஆன சூப்பிலிருந்து கிடைத்த விடுதலையால் ஏற்பட்ட சந்தோஷம் அது. அங்கிருந்து வந்தது, உண்மையிலேயே பெரிய விஷயம்தான். ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல, இப்படித் தினமும் நல்ல ஆடைகளையும் ஷூக்களையும் அணிந்துகொண்டு, சாண்ட்விச், பிஸ்கட்களை அழகான பேப்பர் நாப்கின்களில் சுருட்டி, சுத்தமான பள்ளிக்கூடப் பையில் வைத்துக்கொண்டு செல்வது மீதான ஆசை அதிகரித்தது. ஒரு நாள் காலையில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஃபியட் சென்ற பிறகு, வெரோவின் முதுகில் சாய்ந்திருந்த சின்னப் பையன் அழ ஆரம்பித்தான். அவனை அமைதிப்படுத்த அவளது மனத்தில் ஒரு பாட்டு உதித்தது.

சிறு சத்தம் போடும் மோட்டர் காரே

நீ பள்ளிக்கூடம் போனால்

என்னையும் கூட்டிப் போ.

பீ…பீ…பீ- பவ்-பவ்-பவ்.

காலை முழுவதும் அந்தச் சின்னப் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தாள். அது அவளுக்கு மிகுந்த சந்தோஷமளித்தது. ஒரு மணிக்கு திரு. எமெனிகே குழந்தைகளை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு, திரும்பவும் கிளம்பியபோது வெரோ அவர்களுக்காக ஒரு புதிய பாட்டை உருவாக்கினாள். அவர்களுக்கு அது பிடித்திருந்தது. பல நாட்களுக்கு அவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து கற்றுக்கொண்டுவரும் “பா . . . பா . . . ப்ளாக் ஷீப்”, “சிம்பிள் சிமோன்” போன்ற பாடல்களுக்குப் பதிலாக இதையே அவர்கள் பாடினார்கள்.

அந்தப் புதிய பாடல் திரு. எமெனிகேவின் காதுக்கு வந்து சேர்ந்தபோது, “இந்தப் பெண் ஒரு ஜீனியஸ்” என்று சொன்னார். அவருடைய மனைவி முதன்முதலில் இந்தப் பாடலைக் கேட்டபோது நெஞ்சடைக்கச் சிரித்தாள். அவள் வெரோவை அழைத்து “என் காரைக் கேலி செய்கிறாயா? குறும்புக்காரப் பெண்” என்று சொன்னாள். அந்தப் பெண்மணியின் கண்களில் கோபம் தென்படாமல் சிரிப்பு தென்பட்டதால், வெரோவுக்கு ரொம்பவும் சந்தோஷம்.

“அவள் ஒரு ஜீனியஸ். இத்தனைக்கும் அவள் பள்ளிக் கூடத்திற்குப் போனதில்லை” என்று தன் கணவனிடம் சொன்னாள்.

“அதுபோக, நீங்கள் எனக்கு ஒரு புதிய கார் வாங்கித்தர வேண்டியிருக்கிறது என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்கிறது.”

“கவலைப்படாதே டியர். ஒரு வருடம் போகட்டும். அந்த ஸ்போர்ட்ஸ் காரை வாங்கித்தந்து விடுகிறேன்.”

“ஆமாம் வாங்கித்தந்தீர்கள்.”

“என்னை நம்பமாட்டேன் என்கிறாய். பொறுத்திருந்து பார்.”

சில வாரங்களும் மாதங்களும் கழிந்தன. சின்னப் பையன் சில வார்த்தைகளைப் பேச ஆரம்பித்திருந்தான். ஆனால் வெரோவைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது பற்றி யாரும் பேச ஆரம்பிக்கவில்லை. அந்தச் சின்னப் பையன் வேகமாக வளராததால், இது அவனுடைய தவறுதான் என்று முடிவுசெய்தாள் வெரோ. அவனால் நன்றாக நடக்க முடிந்தும்கூட, இவளது முதுகில் சவாரி செய்வது அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. “தூகி போ” என்பதுதான் அவனுக்கு ரொம்பவும் பிடித்த வார்த்தைகள். அதைப் பற்றியும்கூட வெரோ ஒரு பாட்டு எழுதினாள். அவளுடைய அதிகரித்து வரும் பொறுமையின்மையைத்தான் இது காட்டியது.

“தூக்கிப் போகிறேன் தூக்கிப் போகிறேன்

ஒவ்வொரு தடவையும் உன்னைத் தூக்கிப் போகிறேன்

இதற்கு மேலும் நீ வளர விரும்பவில்லையென்றால்

உன்னை விட்டுவிட்டு, நான் பள்ளிக்கூடம் போவேன்

ஏனென்றால் வெரோ ரொம்பவும் களைத்துவிட்டாள்

களைப்பு களைப்பு ரொம்பவும் களைப்பு”

எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கூடத்தை விட்டுவரும் வரை இவள் அந்தப் பாட்டைப் பாடுவாள். பிறகு நிறுத்திவிடுவாள். அவள் இந்தப் பாட்டை அந்தச் சின்னப் பையனுடன் தனியாக இருக்கும்போது மட்டும்தான் பாடுவாள்.

ஒரு நாள் மதியம் திருமதி எமெனிகே வேலையிலிருந்து திரும்பியபோது வெரோவின் உதடுகள் சிவந்த நிறத்தில் இருப்பதைப் பார்த்தாள்.

தனது விலையுயர்ந்த லிப்ஸ்டிக்கை பற்றிக் கவலைப்பட்டபடி “இங்கே வா. என்ன இது?” என்று கேட்டாள்.

ஆனால் அது லிப்ஸ்டிக் அல்ல: அவள் கணவன் வைத்திருந்த சிவப்பு மை என்று தெரியவந்தது. அவளால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

“அவளுடைய நகங்களைப் பாருங்கள். பாதங்களிலும் கூட. ஆக, லிட்டில் மேடம், குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி உன்னை வீட்டில் விட்டுவிட்டுப் போனால் இப்படித்தான் செய்கிறாயா? அவனை ஒரு மூலையில் போட்டுவிட்டு, உன்மீது சாயம் பூசிக்கொள்கிறாய். இம்மாதிரி முட்டாள்தனமான காரியம் செய்து, மறுபடியும் மாட்டிக்கொள்ளாதே. கேக்கிறதா?”

ஆரம்பத்தில் புன்னகைத்துவிட்டதால், அதைச் சரிக்கட்டக் கூடுதலாக எச்சரிக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

“அந்தச் சிவப்பு மை விஷம் என்று உனக்குத் தெரியுமா? உன்னை நீயே கொலைசெய்துகொள்ள விரும்புகிறாயா? அதற்கு என் வீட்டைவிட்டு வெளியேறி, உன் அம்மாவிடம் திரும்பிச் செல்லும்வரை காத்திருக்க வேண்டும்.”

இந்த எச்சரிக்கையில் அவளுக்குத் திருப்தி ஏற்பட்டது. வெரோ போதுமான அளவுக்குப் பயந்துபோயிருந்ததை அவளால் பார்க்க முடிந்தது. அன்று மதியம் முழுவதும் அவள் ஒரு நிழலைப் போல அலைந்து கொண்டிருந்தாள்.

திரு. எமெனிகே வீட்டுக்கு வந்து தாமதமாக மதிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, எமெனிகே அவரிடம் அந்தக் கதையைச் சொன்னாள். அவரிடம் காண்பிப்பதற்காக வெரொவைக் கூப்பிட்டாள்.

“உன் விரல் நகங்களைக் காண்பி” என்றாள். “கால்களையும் காண்பி, லிட்டில் மேடம்.”

சைகைசெய்து வெரோவை அனுப்பிய பிறகு, “அவள் வேகமாகக் கற்றுக்கொள்கிறாள். தாய்ப் பசு பெரும் புல்லை மெல்லும்போது, கன்று அதன் வாயைக் கவனிக்கிறது என்ற பழமொழியை நீ கேட்டதில்லையா?” என்று சொன்னார்.

“யார் பசு? காண்டாமிருகமே…”

“அது வெறும் பழமொழிதான், மை டியர்.”

ஒரு வாரமோ அல்லது அதற்குப் பிறகோ எமெனிகே அப்போதுதான் வேலையிலிருந்து திரும்பியிருந்தாள். குழந்தைக்குக் காலையில் அவள் உடுத்திவிட்டுச் சென்றிருந்த உடை மாற்றப்பட்டு, அதைவிடக் கனமான உடை உடுத்தப்பட்டிருந்தது.

“நான் அவனுக்குப் போட்டுவிட்டிருந்த உடை என்னவானது?”

“கீழே விழுந்து அதை அழுக்காக்கிவிட்டான். அதனால் மாற்றிவிட்டேன்” என்றாள் வெரோ. ஆனால் அவள் சொன்னவிதத்தில் ஏதோ வித்தியாசம் இருந்தது. குழந்தை மோசமாக விழுந்திருக்கக்கூடும் என்றுதான் முதலில் திருமதி எமெனிகே நினைத்தாள்.

பதறிப்போய் “எங்கே விழுந்தான்?” என்று கேட்டாள். “குழந்தையின் எந்த இடம் தரையில் விழுந்தது? அவனைத் தூக்கிக்கொண்டு வா! இதெல்லாம் என்ன? ரத்தமா? இல்லை. இது என்ன? கடவுளே, என்னைக் கொன்றுவிட்டாயே! போய், உடனே அந்த ஆடையைக் கொண்டுவா!”

“நான் அதைத் துவைத்துவிட்டேன்” என்று சொன்ன வெரோ, அழ ஆரம்பித்தாள். இதற்கு முன்னால் அவள் அழுததேயில்லை. திருமதி எமெனிகே வெளியில் ஓடி நீல நிற ஆடையையும் வெண்ணிற பனியனையும் எடுத்துப் பார்த்தாள். இரண்டும் சிவப்புக் கறை படிந்திருந்தன!

அவள் வெரோவைப் பிடித்து, இரண்டு கைகளாலும் வெறிபிடித்தவள் போல அடித்தாள். பிறகு ஒரு பிரம்பை எடுத்து, அது உடையும்வரை அடித்தாள். வெரோவின் முகத்திலும் கரத்திலும் ரத்தம் ஓடியது. அதற்குப் பிறகுதான் குழந்தையை ஒரு பாட்டில் சிவப்பு மையைக் குடிக்க வைத்ததை ஒப்புக்கொண்டாள். திருமதி எமெனிகே நொறுங்கிப் போய், நாற்காலியில் விழுந்தாள்.

மதிய உணவுக்கெல்லாம் திரு. எமெனிகே காத்திருக்கவில்லை. வெரோவை மெர்ஸிடிஸில் அடைத்து நாற்பது மைல் தூரத்தில் இருக்கும் அவளது தாயின் கிராமத்திற்குக் கொண்டுபோனார்கள். தான் மட்டும் போக விரும்பினார் எமெனிகே. ஆனால் தானும் வருவதாகச் சொன்னாள் எமெனிகே. குழந்தையையும் தூக்கிவந்தாள். வழக்கம்போல எமெனிகே மெயின் ரோட்டில் காரை நிறுத்தினார். ஆனால் அவளுடன் அவர் உள்ளே போகவில்லை. காரின் கதவைத் திறந்து வெரோவை வெளியில் இழுத்துவிட்டார். அவளுக்குப் பின்னால் அவளுடைய சிறிய துணி மூட்டையை எறிந்தாள் திருமதி எமெனிகே. காரை ஓட்டிக்கொண்டு அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.

o

சந்தையிலிருந்து மிகவும் சோர்ந்துபோய்த் திரும்பினாள் மார்த்தா. அவளுடைய குழந்தைகள் வேகமாக ஓடிவந்து, வெரோ திரும்பிவந்துவிட்டாள் என்றும் படுக்கையறையில் அழுதுகொண்டிருக்கிறாள் என்றும் சொன்னார்கள். அவள் கூடையைக் கீழே போட்டுவிட்டு, வெரோவைப் பார்க்கப் போனாள். ஆனால் அவள் சொன்ன சம்பவங்களை இவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

“நீ குழந்தைக்குச் சிவப்பு மையைக் குடிக்கக் கொடுத்தாயா? எதுக்கு? அப்படிச் செய்தால் நீ பள்ளிக் கூடத்திற்குப் போக முடியுமா? எப்படி? சொல். நாம் அவர்கள் இடத்திற்குப் போகலாம். ஒருவேளை அவர்கள் இன்றிரவு கிராமத்தில் தங்கினாலும் தங்கலாம். அல்லது யாரிடமாவது நடந்தது என்ன என்பதைச் சொல்லியிருக்கலாம். நீ சொல்லும் கதை எனக்குப் புரியவேயில்லை. நீ எதையாவது திருடிவிட்டாயா?”

“என்னைத் திரும்பவும் அங்கே கூட்டிக்கொண்டு போகாதேம்மா. அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்.”

“நீதான் நடந்தது என்ன என்பதைச் சொல்ல மாட்டேன் என்கிறாயே?”

மார்த்தா அவள் கையைப் பிடித்து, வெளியில் இழுத்துச் சென்றாள். வெளியில் வந்த பிறகுதான் அவள் தலை, முகம், கழுத்து, கைகள் என எல்லாப் பக்கங்களிலும் பிரம்புத் தடங்களும் ரத்தம் உறைந்திருப்பதும் தெரிந்தன. அவள் விதிர்த்துப் போனாள்.

“யார் இப்படிச் செய்தது?”

“மேடம்.”

“நீ என்ன செய்ததாகச் சொன்னாய்? சொல் இப்போது.”

“நான் பாப்பாவுக்குச் சிவப்பு மையைக் கொடுத்தேன்.”

“அப்படியானால், வா போகலாம்.”

வெரோ கத்தத் தொடங்கினாள். மீண்டும் அவள் மணிக்கட்டைப் பிடித்து இழுத்துச் சென்றாள் மார்த்தா. வேலையிலிருந்து வந்து உடையை மாற்றிக்கொள்ளவில்லை. முகம், கைகளைக் கழுவிக்கொள்ளவில்லை. அந்தப் பக்கமாகப் போன எல்லாப் பெண்களும் – சில ஆண்களும்கூட – வெரோவின் மீதிருந்த பிரம்படிகளைப் பார்த்து வீறிட்டார்கள். யார் இப்படிச் செய்ததென்று கேட்டார்கள். இந்தக் கேள்விகள் எல்லாவற்றிற்கும், “எனக்கே தெரியாது. அதைத்தான் கண்டுபிடிக்கப் போய்க்கொண்டிருக்கிறேன்” என்று பதில் சொன்னாள் மார்த்தா.

o

நல்லவேளை. எமெனிகேவின் பெரிய கார் அங்கிருந்தது. அவர்கள் தலைநகரத்திற்குத் திரும்பியிருக்கவில்லை. முன் கதவைத் தட்டிவிட்டு மார்த்தா உள்ளே நுழைந்தாள். பார்லரில் அமர்ந்து குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துக்கொண்டிருந்தாள் திருமதி எமெனிகே. வந்தவர்களை அவள் கண்டுகொள்ளவேயில்லை. அவர்களிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் இருந்த பக்கமே திரும்பவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அவளது கணவர்தான் இறங்கி வந்து முழுக் கதையையும் சொன்னார். குழந்தையைக் கொல்வதற்காகத்தான் அதற்குச் சிவப்பு மை கொடுக்கப்பட்டது என்பது மார்த்தாவுக்குப் புரிந்ததும் அவள் வீறிட்டாள். இனிமேல் எதையும் கேட்க விரும்பவில்லை என்பதுபோல விரல்களால் காதை அடைத்துக்கொண்டாள். உடனே மார்த்தா வெளியில் ஓடினாள். பக்கத்திலிருந்த பூச்செடியிலிருந்து ஒரு கிளையை உறித்தெடுத்து, அதிலிருந்த இலைகளையெல்லாம் ஒரு இழுவையில் உதிர்த்தாள். அந்தப் பிரம்புடன் மறுபடியும் உள்ளே நுழைந்து, “எவ்வளவு மோசமான விஷயத்தைக் கேட்க வேண்டியதாயிற்று” என்று கத்தினாள். வெரோ கத்திக்கொண்டே, அந்த அறைக்குள் ஓடினாள்.

அவர்களை அப்போதுதான் முதன்முதலில் பார்த்ததைப் போல, “என் வீட்டில் வைத்து அவளை அடிக்காதே” என்று உணர்ச்சியற்ற, உறுதியான குரலில் சொன்னாள் திருமதி எமெனிகே. “அவளை உடனே இங்கிருந்து கூட்டிக்கொண்டு போ. நீ அதிர்ந்துபோனதாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறாய். நல்லது. ஆனால் அதை நான் பார்க்க விரும்பவில்லை. உன் கோபத்தை உன் வீட்டில் வைத்துக்காட்டு. உன் மகள் என் வீட்டில் கொலைசெய்யப் பழகவில்லை.”

இந்த வார்த்தைகள் மார்த்தாவைக் கடுமையாகத் தாக்கின. நின்றபடியே உறைந்துபோனாள் மார்த்தா. அந்த இடத்திலேயே அசையாமல் நின்றாள். பிரம்பைப் பிடித்திருந்த கை அசையவில்லை. பிறகு திருமதி எமெனிகேவைப் பார்த்து, “நான் ஏழைதான். நான் மோசமான நிலையில்தான் இருக்கிறேன். ஆனால் நான் கொலைகாரி அல்ல. என் மகள் வெரோ கொலைகாரியானால், அவள் அதை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லை என்பது கடவுளுக்குத் தெரியும்” என்று சொன்னாள்.

“ஒருவேளை அவள் என்னைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கலாம்” என்று மிகப் போலியாகப் புன்னகைத்தபடி சொன்னாள் எமெனிகே. “அல்லது அவள் அதைக் காற்றிலிருந்து பெற்றிருக்கலாம். அதுதான் சரி. அவள் காற்றிலிருந்துதான் அதைப் பிடித்திருக்க வேண்டும். இங்கே பார் பெண்ணே, உன் மகளைக் கூட்டிக்கொண்டு, என் வீட்டைக் காலிசெய்.”

“வெரோ, போகலாம். வா, போகலாம்!”

“ஆமாம், தயவுசெய்து போய்விடு!”

தான் தலையிடுவதற்குத் தகுந்த தருணத்தை எதிர் பார்த்துக்கொண்டிருந்த திரு. எமெனிகே இப்போது பேசினார்.

“இதெல்லாம் அந்தச் சாத்தானின் வேலை. படிப்பின் மீது இந்த நாட்டினருக்கு இருக்கும் பைத்தியம் ஒரு நாள் நம் எல்லோரையும் நாசமாக்கிவிடும் என்று எனக்குத் தெரியும். இப்போது, குழந்தைகள்கூடப் பள்ளிக் கூடத்திற்குப் போவதற்காகக் கொலைசெய்கிறார்கள்.”

இப்படி எல்லாத் தரப்பினரையும் சமாதானப்படுத்துவதுபோல அவர் பேசியது மார்த்தாவை மேலும் புண்படுத்தியது. ஒரு கையில் வெரோவை வீட்டை நோக்கித் தள்ளியபடி, இன்னொரு கையில் பயன்படுத்தாத பிரம்பைப் பிடித்திருந்தாள் மார்த்தா. வெரோவைத் திட்டிக்கொண்டே போனாள். ஒரு தீய குழந்தை தாயின் கருவுக்குள் புகுந்துவிட்டதாகச் சொன்னாள்.

“கடவுளே, நான் என்ன காரியம் செய்துவிட்டேன்?” கண்ணீர் கொட்டத் தொடங்கியது. “மற்ற பெண்களைப் போல நானும் சரியான வயதில் குழந்தை பெற்றிருந்தால், என்னைக் கொலைகாரி என்று அழைத்த அந்தப் பெண்ணின் வயதில் எனக்கு ஒரு மகள் இருந்திருப்பாள். அந்தப் பெண் என் முகத்தில் காறித் துப்புகிறாள். இதைத்தான் நீ எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறாய்” என்று குழந்தையின் தலையைப் பார்த்துச் சொல்லியவள், அவளை இன்னும் ஆவேசமாக இழுத்துச் சென்றாள்.

“உன்னை இன்றைக்குக் கொன்றுவிடுகிறேன். முதலில் வீட்டுக்குப் போகலாம்.”

திடீரென வினோதமான, இலக்கில்லாத, தெளிவில்லாத வேறொரு எண்ணம் அவளுக்குள் மெதுவாக உருக்கொள்ள ஆரம்பித்தது. “தன்னை ஆம்பளை என்று அழைத்துக்கொள்ளும் அந்த ஜந்து கல்வி மீதான பைத்தியத்தைப் பற்றிப் பேசுகிறது. அவனுடைய எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கூடத்திற்குப் போகிறார்கள். இரண்டு வயதுக் குழந்தைகூடப் போகிறது. ஆனால் அதெல்லாம் பைத்தியமல்ல. பணக்காரர்களுக்குப் பைத்தியம் இருக்காது. என்னைப் போன்ற ஏழை விதவைகளின் குழந்தைகள் மற்றவர்களைப் போலத் தாங்களும் பள்ளிக்கூடத்திற்குப் போக விரும்பும்போது தான் அது பைத்தியக்காரத்தனமாகிவிடுகிறது. இது என்ன வாழ்க்கை? கடவுளே என்ன இது? தனக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தான் பார்த்துக்கொள்ளும் குழந்தையையே கொல்ல விரும்புகிறாள் என் குழந்தை. அவள் வயிற்றுக்குள் இம்மாதிரி தீய எண்ணங்களை விதைத்தது யார்? நான் விதைக்கவில்லை என்பது கடவுளே உனக்குத் தெரியும்”

அவள் பிரம்பைத் தூக்கி எறிந்தாள். தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *