கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 12,955 
 
 

‘சுரீர்’ என்றது. அதற்கப்புறம் நடந்தது ஞாபகம் இல்லை..

கடித்தது பாம்பா , பூரானா ? இந்த வலி வலிக்கிறதே..’ர்ர்’ என்று இன்னும் ஏறிய வண்ணம்.. கொட்டிற்றோ ? பெரிய கருந்தேளாக இருக்குமோ? ஏற்கனவே பட்ட அனுபவம் இருந்திருந்தால் இனம் கண்டு கொண்டிருக்க முடியுமோ என்னவோ..அனுபவம் எல்லாவற்றுக்கும் தேவைப்படுகிறது..

நுரை தள்ளிய வண்ணம் நான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்?

எனக்கே ஓதிப்பார்க்க தெரிந்துதான் இருந்தது.

நாலு வருடங்களாகின்றன ‘இஸ்மு’ வாங்கி.

இதை வாங்கவா கெளஸ் ஹஜ்ரத்தின் காலடியில் விழுந்தோம் என்றால் இதுவாவது குடும்பத்தில் அன்றாடம் தேவைப்படும் அபாயத்தைச் சமாளிக்க உதவுமே என்றுதான். ஹஜ்ரத் எதைத்தான் சொல்லவில்லை?

பிட்யூட்டரி சுரப்பியைத் தட்டி எழுப்பும் பயிற்சிகள் என்று நான் சொன்னால் ஹராம்?

நமக்கு வாங்கவும், சரியாக உபயோகிக்கவும் , பத்திரப்படுத்தவும் தகுதிகள் இல்லை. முப்பது வருடங்களுக்கு முன்பு இளமையில் , பொறி தெறிக்கிறார் போல் அவர்கள் தொடர்ந்து தன் சீடர்களுக்கு மூன்று மாதம் – ஒரு நாளைக்கு மூன்று கேஸ்ஸட்கள் வீதம் – பேசிய கேஸ்ஸட்டுகள் எங்கே?

பத்து கேஸ்ஸட்கள் அதில் மிஞ்சியதே பெரிய விஷயம்.அற்புதமாக ரிகார்டிங் செய்ததற்கு பழைய சீடர்கள் குழுவுக்கு நன்றி சொல்லதான் வேண்டும். அவர்கள் பதிவு செய்வதில் மட்டும் கெட்டிக்காரர்களாய் இருந்திருக்கிறார்கள்.

எழுந்து எழுந்து வீழ்கிற அலைகள்..ஆனால் இதைப் பார்ப்பது மட்டும் சாதனை செய்கிற விசயமா என்ன?

நாங்கள் கடைசி அலையா? இல்லை. கடலை ஜெயிக்கிற கப்பல்கள். அலைகளின் எந்த பேரெழுச்சிகளையும் சுழற்சிகளையும் சமாளித்து, அதன் தாயின் ஓங்கார ஓசைக¨ளைப் புணர்வின் இன்ப முனகல்களாக மாற்ற மேலேறிப் பயணிப்பவர்கள்.

ஹஜ்ரத்தின் பேச்சு எங்களை அப்படி உற்சாகம் கொள்ள வைத்தது. We are the captain of our Ship…

வாழ்க்கையைப் பற்றி பேசும் ஹஜ்ரத்கள் அபூர்வம்.

ஒரு தாடி , இரண்டு ‘மாஷா அல்லாஹ்’ , காலடியில் கிடக்கிற ரோஜாப்பூக்களைப் பார்த்த வண்ணம் ஞானப் பார்வை, பன்னீர் வாசம் வீசுகிற மவுலூது சபைகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

சில சர்க்கார்கள் இரண்டு தாடி கூட வைத்திருக்கிறா¡ர்கள்!

‘தொப்பி போடாத தலையும் , சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட பிரகாசம் பொங்கும் முகமும் , கையிலே எந்நேரமும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டும் எப்போதும் சூழ்ந்திருக்கும் இளைஞர் கூட்டமும் ‘ கொண்ட கெளஸ் ஹஜ்ரத் எனக்கு பிடித்துப் போனது. ‘பறக்கிற அவ்லியா பறந்துகிட்டே வந்து சலாம் சொன்னாலும் ‘ வ அலைக்கும் சலாம்; உங்களாலே பறக்க மட்டும்தான் முடியும். எங்க வாழ்க்கைக்கு ஒரு மயிரையும் உங்களாலே புடுங்க முடியாது ‘ என்று சொல்ல ‘தில்’ இருக்கனும்’ என்று சொல்லும் ஹஜ்ரத்தை எப்படி பிடிக்காமல் போகும்?

இவர்களை ஊருக்குப் பிடிக்காமல் போனதில் வியப்பில்லைதான். யாரோ ஊதி விட்டதைக் கேட்டு ஊர் கிளர்ந்தெழுந்தது. புது மார்க்கம் உண்டு பண்ணுபவனை கல்லால் அடி ! பயந்து, மரத்தில் புகுந்த அவுலியாவை ஒழித்துக்கட்ட மரத்தை அறுத்த கூட்டத்தின் வாரிசுகள்..

இப்போது ஹஜ்ரத்தைப் பார்க்க வரும் பெரிய மனிதர்கள் அந்த காலத்தில் அவர்களுக்கு எதிராகக் கல்லை எடுத்தவர்கள்தான். நான் சொல்லை எடுத்தவர்களின் list ல் வருகிறேன். அடுத்த தலைமுறை. இன்றைய தலைமுறையோ பல்லை எடுக்கிறது…

எல்லாவற்றிலும் தோற்றுப்போய் வாழ்வில் நம்பிக்கைப் பெற அவர்களை நாடிய போது பழசு எதையும் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.

‘வாங்க existentialism…!’ என்று மட்டும் இலேசான புன்னகை…

கோபம் வராதா? வரும் பயங்கரமாக – எதிரில் உட்கார்ந்திருப்பவர்களின் ஒரு மிகச் சிறிய , தவறான, உடல் அசைவைக் கண்டால். இது Similarity Science என்று அப்புறம் அவர்கள் விளக்கிய போது தான் தெரிந்தது..

‘உஙகளுடைய ஒவ்வொரு அசைவும் உங்களுக்கு மேம்பட்ட , உஙகளை விட அழகான , power ஆன சக்தியினுடைய இயக்கமாகத்தான் அசையனும். உங்களை ஒப்படைச்சிடனும் அது கிட்டே. அப்பத்தான் ‘ ஆண்டவனே, என்னை எதற்காக படைத்தாயோ அதைச் செய்யவிடு ‘ ங்குற துஆ correctஆ இருக்கும். அவனுக்குத் தெரியும் – புள்ளைக்கி என்னா வேனும்டு…! – ஹஜ்ரத்.

இல்லை , இவர்கள் வெறும் ஓதிப்பார்த்து நூல் முடிந்து போடும் சாதாரண சாபு அல்ல.

இவர்களை விமர்சித்துக் கொண்டிருந்த காலங்களில் துளியூண்டை என்னை நான் விமர்சிப்பதில் செலவழித்திருந்தால் எப்படியோ மாறிப் போயிருக்கலாம். ஃபிக்ரு க ஃபீக யக் ஃபிக்..

என் நடவடிக்கையில் எற்பட்ட மாற்றம், நண்பர்கள் சிலரின் வேடிக்கைக்கு ஆளாயிற்று.

இரண்டு மாதமாக கடுமையாக கஷ்டப்படுத்திய மூச்சுத் திணறல் அவர்கள் ஓதிக் கொடுத்த தண்னீரை குடித்த மாத்திரத்தில் எப்படி கானாமல் போ¡யிற்று?!

காய்ந்த, கணுக்களற்ற மஞ்சள் துண்டுகளையும் ஒதிக் கொடுத்தார்கள். அதை நெருப்பில் போட்டு புகையை முகர வேண்டும் – ஒரு நாளைக்கு இரு முறை.

‘ரெண்டு மாசமா நீம்பரு, டாக்டர் கொடுத்த மருந்தை சாப்பிட்டிருக்கியுமுலெ? அதான்..’ – நண்பன் சேத்த மரைக்கான்.

ஹஜ்ரத்தைப் பார்க்க வரும் அதே டாக்டரை அவனிடம் காட்டினேன். டாக்டரின் பெண்டாட்டிக்கு மனக் கோளாறு !

‘டாக்டருக்குத்தான் பைத்தியம் !’ என்றான் அவன்.

‘யாரோ ஒருவருக்கு பைத்தியம் பிடித்து இருக்கிறது..’ என்று எண்ணும்போது ‘ ஓய் பேக்கூ…… ‘ என்று சத்தம் கேட்டது. ஜப்பார் நானா! எப்போதும் யாரையும் ‘ஜனாப்..’ என்று கூப்பிடும் அவர், தன்னை இந்த மட்டரகமான கெட்ட வார்த்தையில்….!- சேத்த மரைக்கான் கொதித்தான்.

‘வயசுலே பெரியஹண்டு கூட பார்க்க மாட்டேன்.’ங்கும்மாலெ ஓக்க’ண்டு ஏசிப்புடுவேன்..’!’

‘அடக்கும்..’ என்பது மாதிரி ஜப்பார் நானா கை ஆடியது.

‘ஒங்கட வயசுக்கு…’

‘ச்சூ…இரிங்க தம்பீ..! நீங்க பேசுறதைக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். ஏன் தம்பி, நான் அலங்கார வாசல்லேர்ந்து திட்டுறேன் – மணி மேடை கிட்டே இருக்கிற உங்களைப் பார்த்து. சாதாரண மனுஷன் பேசுற சத்தம். அதுக்கு இவ்வளவு power ! கொதிக்கிறீங்க…உம்மாட ‘ஹயா’வுலெ பூறுறீஙக..! அப்ப, ‘ஹக்கன்’ற வார்த்தைக்கு எவ்வளவு power இரிக்கும் ? ஹஜ்ரத், அதைத்தானே ஒதி ஊதுறாஹா?’

சேத்த மரைக்கான் ஒன்றும் பேசவில்லை. அதற்கு அப்புறம் யாரிடமும் பேசவில்லை.

அவர்களுக்குப் பட்டால்தான் தெரியும். துபாயிலிருந்து ,அங்கே குணப்படுத்த இயலாமல் ஊர் வந்திருக்கிற நான், ஆயிரத்தெட்டு முறைகளையும் அலசிப் பார்த்து முடிவுக்கு வந்த பிறகுதான் சுலபமாக ஓதிப் பார்த்தே இதைக் குணப்படுத்த முடியும் என்பதில் முயற்சிக்க வேண்டுமா ?. விசாவும் வேலையும் முடிந்து விடும்…

பொறுப்புள்ள பெரியவர்களிடம் பிரச்சினைகளை ஒப்படைத்து விடுவதுதான் எவ்வளவு சுலபமான காரியம். மூளையைக் கசக்கும் நேரம் மிச்சம். விரயமாகும் சக்தி மிச்சம். இதை விட்டு விட்டு..

ஹஜ்ரத் இதையெல்லாம் எப்படி செய்கிறர்கள்?

காக்காய் உட்கார பனம்பழம் விழுகிற மாதிரி ?…எத்தனை வெளியூர் காக்காக்கள் ! இல்லை, critical faculty ஐ உஸ்தாத் விசயத்தில் பயன்படுத்துவது ஹராம்.

spiritual force என்றால் எண்ணம் என்று கூட தெரியாமலிருந்த நான் அதை செய்யக் கூடாது. அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்வதே முறை. வாங்கும்போது கை தாழ்ந்திருப்பதே அவசியம்.

கடன் நீங்க , காரியங்கள் சித்திக்க , கெளரவம் வர , கவலை தீர இஸ்முகள் கிடைத்தன. தொடர்ந்து ஓதிக் கொண்டு வந்ததில் மாற்றங்களும் தெரிந்தன. கடன் அதிகமானால் சரியாக ஒதவில்லை என்று அர்த்தம்….!

நல்லவைகள் நடந்தால் நம் குருவால். கெட்டதானால் நம்மாலா ?

‘(மனிதனே) உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும் உனக்கு ஏதாவாது தீங்கு ஏற்பட்டால் அது உன்னால்தான் வந்தது..’ (5:4:79)

கெட்டது நடக்க விடாமல் எது தடுக்கிறது ?

‘வீணிற் திரிந்தலையாதே உன்னை

விட்டும் புறம்பிலே ரப்பைத் தேடாதே

காண உன்னால் முடியாதே – உன்னைக்

காட்டிடும் முர்ஷிதைத் தேடிடிப்போதே ‘ – மெய்ஞானத் தெளிவு,

பாடல்களுக்கா பஞ்சம் ? ஆனால் அவைகள் , பட்ட பாட்டிலும் , கிடைத்த பாடத்திலும் அடைந்த பழத்திலுமுள்ள விளைவுகளல்லவா?

தெளிவு கிடைத்தது. என் முர்ஷித் , ஹஜ்ரத்தான்.

பூனையின் பல் கடி பற்றி எலிகள்தான் பயப்பட வேண்டும். குட்டிகளுக்கோ அது இதம். பாதுகாப்பு.. – எங்கோ படித்த ஞாபகம்..

கொடுத்த இஸ்முகள் எல்லாம் சீடர்களின் பாதுகாப்புக்குதான். கொடுப்பது , ஹஜ்ரத்தின் பாதுகாப்புக்கு என்று சொல்லக்கூடாது. இலவசமாக அனைவருக்கும் தருவதில் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது ?

சீடர்களிடம் எந்த காசும் வாங்குவதில்லை.

ஓதிப் பார்த்தும் , தாயத்து போட்டும் , அவ்வப்போது செவுனைக் கோளாறுகளைச் சரி செய்தும், பேய் ஓட்டியும் வருகிற காசில் அவர்கள் வாழவில்லை. நாடு முழுவதும் உள்ள பெரும் அரசியல் தலைவர்கள், நடிக நடிகையர்கள் , தொழிலதிபர்கள் வந்து நக்குகிறார்களே..

Don’t Care..

சீடராகி , தொடர்ந்து அவர்கள் ஓதும் புர்தா ஷரீ·பில் கலந்து கொண்டு வர வேண்டும். லைலைத்துல் கத்ரு, சஃபே பாராத் இரவுகளில் திக்ரு இருக்கும் விடிய விடிய.. அப்புறம் மார்ச் இரண்டாம் வாரத்திலும் அக்டோபர் மூன்றாவது வாரத்திலும் ‘பட்டை’ க்கு உட்கார்வது இருக்கிறது. பட்டை, ஒரு கெட்டியான அட்டை. ஹஜ்ரத் ஓதியது. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு வண்ணத் துணியில் மூடி வரும். இது பரக்கத்திற்காக. பணம் புழங்குகிற இடத்தில் இதை வைத்திருக்க வேண்டும். சீடர்களில் உள்வட்டம் என்ற பிரிவு உண்டு. ரகசிய ஞான விஷயங்கள் போதிக்கப்படும் அவர்களுக்கு..

விஷக்கடிக்கு இஸ்மு எல்லா சீடர்களுக்கும் ஒரே நாளில்தான் கிடைத்தது. அப்படியென்றால் இது ரகஸ்யமானதா இல்லையா என்று சீடர்கள் அலசிக் கொண்டிருந்தார்கள்.

அவுஸ்பென்ஸ்கியும் அரை அவுன்ஸ் விஸ்கியும் ஒன்றா எனும் விவாதம்..

‘ஹஜ்ரத்தை விட ஒரு நல்ல குரு நமக்கு கிடைக்காது. நம்மளை விட பே துப்பாக்கள் ஹஜ்ரத்துக்கும் கிடைக்காது’ என்றேன் ஆதங்கத்துடன் , கிருஷ்ணசாமி என்ற சீடரிடம். கணிதப் பேராசிரியர். சென்னையிலிருந்து வந்திருந்தார். உடனே ஹஜ்ரத்தின் காதில் போட்டு விட்டார். சீடர்கள் எதையும் மறைக்கக்கூடாதாம்..

நான் இஸ்முவை எழுதும்போது ‘மனுஷக் கடிக்கு’ என்று தலைப்பிட்டேன்.

பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு சீடர் அதையும் உடைத்தார்.!

ஹஜ்ரத் எதையும் சொல்லவில்லை. கண்கள் சிரித்த மாதிரி இருந்தது. பிரமையோ ?

விஷக்கடி மந்திரம் சொல்லிக்கொடுக்க ஊரில் எத்தனையோ பேருண்டு. பணக்கடியில் அவதிப்பட்டு வாழ்பவர்கள் அவர்கள். அதை மட்டும்தான் சொல்லித்தர இயலும். குண்டலினி பற்றிக் கேட்டால் குப்புறப் படுத்துக் கொள்வார்கள். முக்கோணம் ? அது தசையாலானது..!

நாசுவன் சாதிக் கூட விஷக் கடிக்கு ஓதிப் பார்க்கிறானே ! அவன் வாப்பா சுல்தான் நானா அவனுக்குக் கொடுத்து விட்டுப் போன ஒரே சொத்து அது.

சுல்தான் நானாதான் எனக்கு ‘சின்னத்து’ பண்ணியவர். அறுத்ததும் ,மார்பு வரை கூம்பாக மூடிய சிகப்பு வண்ணத் துணியில் இருக்கும் குறியைப் பார்த்தவாறு , ‘கட்டு.. கட்டு..பூட்டு..பூட்டு..’ என்று எதேதோ உரக்க சப்தமிட்டு வேப்பிலை அடித்தது (துணி மேல்தான் !) ஞாபகம் வருகிறது.

காப்பு கட்டுவது என்று பெயராம். அதற்கு நபிமார்களையும் அவுலியாக்களையும் கூப்பிடும் மந்திரம்.

‘குஞ்சை அறுத்து கட்டுன பொறகு என்னாங்கனி ‘கட்டு..கட்டு’ ங்கிறியும் ?! ‘ என்று பெரியாப்பா கேட்டார்கள் அப்போது.

‘விஷயம்’ வீங்கி விறைத்து விடும் ஒதா விட்டால் என்று அவர்களுக்கு தெரியுமா ?

‘உஸ்..’ என்றார் சுல்தான் நானா. ஓதும்போது இடைஞ்சல் செய்யாதே..பலிக்காது!

அல்லது மந்திரத்தில் அதுவும் சேர்த்தியா ? தெரியவில்லை.

இதே இஸ்முவைத்தான் விஷக்கடிக்கும் பயன் படுத்துவாரா என்றும் தெரியவில்லை. இவர் மகன் சாதிக் மந்திரிக்கும்போது சப்தம் வர மாட்டேன்கிறது..அறுபடும்போதும் யாரும் சப்தமே எழுப்புவதில்லை. sparay அல்ல காரணம். கத்தி அவ்வளவு நாசூக்காக இருக்கிறது. பணம் வாங்கும்போதும்தான்..

‘என்னாங்கனி ஒதுறியிம் ?’ என்று கேட்டேன் என் மகன் சாமானை அவன் பரிசோதிக் கொண்டிருக்கும்போது.

‘கேட்காதீங்க நானா.. சீக்கிரம் ஆறாது..!’

‘அப்ப ஏன் மாத்திரை கொடுக்கிறியும் ?’ என்று கேட்கலாம். ‘மாவு’ சேர்ந்து விடும் என்று சாபம் கொடுப்பார்கள்!

மனமிரங்கி அவன் சொன்னாலும் நான் செய்தால் பலிக்குமா என்பது ஐயம்தான்.

‘உத்தரவு’ பெற வேண்டும். வழி வழியாகத்தான் இப்படித்தான் வருகிறது. உஸ்தாதிடம் உத்தரவு வாங்கிச் செய்வதுதான் உயர்வு.

ஆனால் இம்மாதிரி பல இஸ்முக்கள் உள்ள புத்தகங்கள் இப்போது நிறைய வருகின்றன. எல்லா வகையான காரியங்களுக்கும் அதில் இஸ்முக்கள் அரபியில் இருக்கின்றன – இத்தனை தரம் தினம் ஓதி வரவேண்டும் என்ற குறிப்புடன். இதில் அனுமதியும் ஆசியும் எங்கிருந்து கிடைக்கும் ? பணம் கொடுத்து வாங்கினால்தான் பலிக்கும் என்று எடுத்துக் கொள்வதா ?

இந்த புத்தகங்கள் ஒன்றில் இருந்த இஸ்மு ஒன்றை தினம் அதில் குறிப்பிட்டவாறு ஓதியே தான் பிள்ளை பெற்றாதாக என் பெரிய லாத்தா முத்து உம்மனை தீர்மானமாகச் சொல்வாள் – மச்சானை பக்கத்தில் வைத்துக் கொண்டே!

பத்து வருடமாக இல்லாத பிள்ளை பின் எப்படி வந்ததாம் ?

மச்சான் முகம் பார்க்கச் சகிக்காது. ஒப்புக் கொண்டால் அவருக்கு அவமானம். ஒப்புக் கொள்ளாவிட்டால் ஆயத்துகளின் மேல் குற்றம் சொல்லும் பாவத்திற்கு உள்ளாகிறார்..

சிரித்து வைப்பார் அவர். இதற்கும் முத்து உம்மனை எதாவது மந்திரித்திருக்க வேண்டும் – புஸ்தகத்தைப் பார்த்துத்தான்!

புஸ்தகங்கள் பார்த்து வரும் ஞானத்திலும் காய்ச்சும் ஆனத்திலும் எனக்கு நம்பிக்கையில்லை.

இத்தனை முறை ஓத வேண்டும் என்று போட்டிருக்கும். உருவேற்றியிருக்க வேண்டுமே அதற்கு ! கிரகணத்தன்று உருவேற்ற வேண்டும் – உத்தரவு கிடைத்தால். அதுதான் கிடைத்தாயிற்றே என்றால் கிரகணம் வரவேண்டாமா ? நானோ சேர்ந்திருந்த புதிது. ஹஜ்ரத் சொன்னவுடன் உடனே எழுதிக்கொண்டேனே தவிர கிரகணத்திற்காக எதிர்பார்த்தில்லை. விடுமுறையில் தாயகம் வருவது முழு நிலாக்களைப் பார்க்கவல்லவா? காலை நேரங்களில் நிலா வருவதில்லை. ரொம்ப வருடஙகளாக அப்படித்தான் இருக்கிறது…இன்னும் வாலிபன் போன்ற திகட்டாத ஆர்வம்…

பயணம் புறப்படும்போதுதான் ஹஜ்ரத்திடம் கேட்டேன். இப்படி சீடர்களெல்லாம் அரபு நாடு என்று அலைந்து திரிவதில் ஏற்பட்ட வருத்தத்தோடு, போனவுடன் கிரகணத்தன்று உருவேற்றச் சொன்னார்கள். கிரகணங்களுக்கா பஞ்சம் ?

குழுவோடு அவர்கள் முன்னிலையில் சேர்ந்து செய்வதை தவற விட்டதால் எனக்கு உருவேற்றும் எண்ணிக்கை 1000 !

தண்டனையா ? அதிக power வரட்டும் என்ற அக்கறையாகத்தான் இருக்க வேண்டும். விபத்தில் மாட்டியவனுக்கு அதிக ரத்தம் தேவைப் பட்டால் ஆள் பேராபத்தில் இருக்கிறான் என்றல்லவா அர்த்தம்?

ஒரு வருடத்திற்கு முன்பே தனக்கு , தன் சின்னாப்பா விஷக்கடி இஸ்மு கொடுத்து 1800 முறை உருவேற்றச் சொன்னார்கள் என்று ஹஜ்ரத்தின் நானா மகன் காமில் சென்னது ஞாபகம் வந்தது. அவனுக்கு 18000 தடவை கூட கொடுக்கலாம்.

‘உம்மாடி..’பட்’டுண்டு கேக்கும் அது..! அன்னைக்கி அப்படித்தான். ‘சுபுஹு’ நேரத்திலே ஒரு பட்டணச்சி வந்து கதவை தட்டு தட்டுண்டு தட்டுனா.. அவ புள்ளைய நட்டுவாக்கிளி கடிச்சி புடிச்சிண்டு..’சாபு காப்பாத்துங்க…’ண்டு கத்துறா..! ‘எஜமானே எஜமானே..’ண்டு சின்னப்பாவை உடலே..! டேய் பாத்துட்டு வாடாண்டு என்னையை அனுப்புனாஹா.. சைக்கிளை எடுத்துட்டுப்போயி கடிவாயிலை விரலை வச்சி ஓதுனதுதான்…புள்ளை உடனேயே எந்திருச்சிட்டான் – ‘பட்’டுண்டு ! என்றான் அவன்.

இன்னொரு கொடும் விஷத்தைத் தாங்கத் திராணியில்லாமல் பையன் முழித்துக்கொண்டு விட்டான் போலும்! காமில் ஒரு பெரிய சடை மண்டலம்.

எத்தனையோ பேருக்கு வழி காட்டுகிற ஹஜ்ரத்துக்கு இவனுக்கு வழி காட்ட இயலாதா? சிறு பிள்ளையிலேயிருந்து தன் காலிலேயே இருப்பவனின் வாழ்வை மாற்ற இயலாதவர்கள் மற்றவர்களுக்கு நினைத்ததை அடையும் சக்தியை எப்படி கொடுக்க முடியும் ? என்று ஷைத்தான் என்னை அரித்தான்..

கேட்டே விட்டேன்.

‘இப்ப எந்த கேள்வியும் கேட்க வேணாம்.. எனக்குத் தெரியும் – எவனுக்கு என்னா சந்தேகம் முளைக்கும் ; எப்ப முளைக்கும்ட்டு… பேசும்போதே பதிலைக் கொடுத்து விடுவேன். அதில்லாம என் பேச்சுக்கு உதாரணம் காட்டினாலோ அல்லது தன்னோட கருத்தை எடுத்து வச்சாலோ ‘செத்த நேரம் பேசாமா இருடா’ண்டு என்னைச் சொன்னதா அர்த்தம்.. பேசாமா உருப்படப் பாருங்க. முதல்லெ கேட்கப் படிச்சிக்குங்க..’ என்பவர்களிடம் கேள்வியா ! அதுவும் சலாம் சொல்லி பவ்யமாக வந்து அவர்களின் கால்களை கண்களில் ஒற்றிக்கொண்டு பின்பு அப்படியே திரும்பாமால் நடந்து செல்லும் சில சீடர்களுக்கு மத்தியில்…

சீடர்கள் என்னை அடிக்காமல் விட்டது ஆச்சரியம். அல்லது மின்னலாய் இறங்கிப் பொசுக்கி ஆட்கொள்ளும் ஹஜ்ரத்தின் கண்கள் செய்த மாயம்.

‘ இப்ப என்னோட வலது பக்கத்திலே சுவரோரமா என்னென்னா பொருள்ங்க இருக்குண்டு பாருங்க..’

‘…… ……’

‘சும்மா சொல்லுங்க.. மத்த பேர் நெஞ்சுலெ உள்ள கேள்விதான் உங்க மூலமா வந்திக்கிது. புரிய வைக்கத்தான் உங்களை கேட்கிறேன்’

‘பீரோ…டேபிள்..’

‘போதும்…இருபது வருஷமா என்னெட்டே இக்கிது. கொஞ்சம் கூட மாறலே – வேறு பொருளாக!’

அவ்வளவுதான். பொறி கலங்கிப் போயிற்று எனக்கு..

நான் சுத்தமாக மாறிப் போனேன்.

இனி எந்த ஷைத்தானும் விளையாட முடியாது.

ஹஜ்ரத் சொல்வதற்கு உட்படுவது. அவ்வளவுதான். எந்த விஷக்கடியையும் ஓதிப் பார்த்தே குணப்படுத்த முடியும் என்று சொல்பவர்கள் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஊரில் நிகழ்ந்து பரபரப்பாய் பேசப்பட்ட நூர் முஹம்மது மெளத்தை தவிர்த்திருக்க இயலாதா என்று நான் கேட்கக் கூடாது. எந்த பயங்கரமான பாம்பாக இருந்தாலும் கையால் தைரியமாக பிடிக்கிற அந்த இளைஞன் பாம்பு கடித்துதான் மெளத்தானான்…வெளியூர்களிலிருந்தெல்லாம் விஷக்கடி வைத்தியர்கள், மந்திரவாதிகள் காட்டிய வித்தை பலிக்கவில்லையே…அப்பொதெல்லாம் ஹஜ்ரத் ஊரில் இருந்தார்களே..

மெளத்தான பிறகு என்ன ஓதிப் பார்ப்பது ?

பிழைக்க வைக்கிற சாத்தியம் இருந்திருந்தாலும் பாம்புக் கடிக்கு என்று தனியாக ஒரு முறை இருக்கிறது. ஆங்கில மருத்துவ முறையைச் சொல்லவில்லை. ஹஜ்ரத் சொன்ன அந்த கொட்டையின் பெயர் ஞாபகம் இல்லை. அதை வைத்துக்கொண்டு கிரகணத்தன்று உருவேற்றிய ஆள் அதை செய்ய முடியும். இதை நிர்வாணமாக செய்ய வேண்டுமாம். ஒரு மைல் தூரத்திற்கு யாரும் இருக்கக்கூடாது. ஊரில் சாத்தியமா இது ? இப்படி செய்த கொட்டையின் விசேஷம் அதை வைத்திருக்கும் யாரும் எந்த மாதிரி விஷக்கடியையும் சமாளிக்கலாம். கொட்டையை கடிபட்ட இடத்தில் தேய்க்க வேண்டும்.

அந்தக் கொட்டை ஒன்று தன்னிடம் இருந்ததாக ஹஜ்ரத் சொல்லியிருக்கிறார்கள். அது அந்தச் சமயம் இல்லாமலிருந்திருக்கலாம். அல்லது அது பற்றி அவர்களுக்குக் கூட தெரியாமல் இருந்திருக்கலாம்.

ஹஜ்ரத்தும் சீடர்தானே – அவர்களின் உஸ்தாதுக்கு ?

என்ன கஷ்டம் வந்தாலும் ஹஜ்ரத்திடம் போவதில்லை என்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள் – ‘செத்தாலும் ‘நஜாத்’ பள்ளியில் தொழ மாட்டேன்’ என்று சில பேர் சொல்வது மாதிரி..அவர்களின் பிரச்சனைகளுக்கு ஹஜ்ரத்தா பொறுப்பு ?

ஆயிரம் முறை என்ன, 10000 முறை ஓதி உருவேற்ற வேண்டும் என்று ஹஜ்ரத் சொன்னாலும் கேட்டு நட. உனக்கும் நாலு பேர்களுக்கு உதவுகிற மாதிரி ஒரு விஷயம் இலவசமாக கிடைக்கும் போது இதென்ன பைத்தியக்காரத்தனம் ? ஓது !

‘யா அஹியா அஸ்ராஹியா ஆதூனி அஸ்மா உஸு

யா முஜ்லி அலாயிமுல் ஊமூதி பிஹக்கில் ஹக்கி

வபி ஹக்கி ஃகாலிகல் ஃகல்கி…..’ என்று நீளும்

பத்து வரிகளுக்குள் அடங்கும் அதில் கடைசி இரண்டு வரிகள், ஏதேனும் ஒரு பொருள் வாங்கும்போது நமக்கு தீங்கு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள உதவும்.

மன்னிக்க வேண்டும். முழு இஸ்முவையும் எழுத அனுமதி இல்லை. இத்தனை வருட ஒதுதலையும் வீணாகி விடும். ஆரம்ப உரு 1000. தினம் மூன்று முறை. விசேஷ காலங்களில் 108 தடவை ஓதுவது என்று இந்த 5 வருடங்களாக கணக்கிட்டால் எண்ணிக்கை எங்கோ போய் விடும்.

தேள்தான் அகப்பட மாட்டேன் என்கிறது! ஊரிலிருக்கும்போது , பிள்ளையார் கோயில் தோட்டத்திலிருந்து என் மனைவி வீட்டுக்கு அடிக்கடி வரும் தேள்கள் எங்கே போயின ?

இந்த நாலு வருடத்தில் ஊரில் எத்தனையோ விஷக் கடிகள் ஏற்பட்டிருக்கலாம்தான். நான் இரண்டு முறைதானே ஊர் போயிருக்கிறேன்! அப்போது என் கண்ணுக்கு யாரும் தட்டுப் படவில்லை. பரீட்சித்துப் பார்க்க வேண்டுமென்று யார் மேலாவது விஷ ஜந்துக்களைப் போட்டு கடிக்க விட்டிருக்கலாமோ ? ஒரு மாமா மகன் ஃபரீதை முயற்சித்தேன் , அவனுக்குத் தெரியாமல். ஜந்து இறந்து விட்டது! அதை எனக்கே கூட செய்து பார்த்திருக்கலாம்தான்..

ஆனால் ஒருமுறை தேள் கொட்டுவது போல் நடித்திருக்கிறேன் என் மனைவி அஸ்மாவிடம். ஏப்ரல் முதல் தேதி விடியும் நேரத்தில் என்னமோ சிறு பிள்ளை விளையாட்டு போல விளையாடும் ஆசை.. அல்லது அதற்கு சற்று நேரத்திற்கு முன் அவளுடன் என் உடம்பு தளர்ந்து தோற்றதில் , சமாளிக்கும் வாய்ப்பாக அதை எடுத்துக் கொண்டேன் போலும்..இருக்காது. ஹஜ்ரத்திடம் போய் வருவதிலிருந்து அதிகம் சிரிக்காமல் இருக்கிறேன் என்று அவள் முகம் சொன்னது. ஆன்மீக நாட்டம் யாரையும் அழுமூஞ்சிகளாக ஆக்கும் அவசியம் இல்லை என்று காட்டுவதற்குக் கூட நான் அப்படி செய்திருக்கலாம்.

‘எனக்குத் தெரிந்த உண்மைகள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் குறைவாக சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்’ என்று ரசூலுல்லா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மனைவியை சந்தோஷமாக வைத்திருப்பதின் அவசியத்தையும் சொல்லியிருக்கிறார்கள் நிறைய..ஆயிஷா நாயகத்திடம் அவர்கள் விளையாட்டாகத் தோற்பதெல்லாம் அதற்குத்தான்.

பெண்டாட்டிதான் backing force என்று ஹஜ்ரத் சொல்லியிருக்கிறார்களே..

‘புள்ளே எந்திரி… என்னமோ ‘சுரீர்’ண்டு கொட்டுனிச்சி…ஆ…அல்லாவே… கடுக்குதே…’ -அலறினேன்.

‘ச்சு..சும்மா படுங்க மச்சான்! எறும்பா இக்கிம் !’ – அஸ்மா அலட்சியமாய் சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

April Fool…April Fool !

‘இப்படியே ஊராட இருந்து ஏதாச்சும் சின்ன வியாபாரம் பண்ணலாம்ட்டு நினைக்கிறேன் புள்ளே..போதும் இந்த சபர்..’ என்று சொன்னதற்குத்தான் இந்த முகம் எவ்வளவு திகிலைக் கொட்டியது !

அவரவர்களுக்கு அவரவர் பாதுகாப்பு.

துபாயின் நகரப் பகுதியில் மின்னும் வெளிச்சத்தைத் தவிர்த்து விட்டு இப்படி ஆப்ரா முடிவடையும் வெறிச்சோடிய ,இருட்டடைந்த பகுதியில் வாழ்கிற எனக்கு என்ன பாதுகாப்பு?

வாடகை பணத்தை மிச்சப்படுத்தி பத்தால் பெருக்கி மகிழலாமே..இதுதான் பாதுகாப்பு.

எனது portableஐ சுற்றிலும் அடுக்கியுள்ள பெரும் பெரும் புல் கட்டுகளிலிருந்து பாம்புகள் தலை காட்டாதிருக்க வேண்டும். செளதியிலிருந்து வருகிற புல் கட்டுகள்..பிரைட், ஹஸீஸ், அலஃப் என்று பல பெயர்கள் இதற்கு..

பிரித்து சிறு சிறு பண்டல்களாக , ‘பது’ அரபிகள் மற்றும் தூரமாய் கிராமப் புறங்களுக்கு கொண்டு போய் விற்கிற பட்டான்கள் கேட்கிற sizeக்கு தயார் பண்ணும் பாகிஸ்தானி மற்றும் பலுச்சி கூலிகள் பாம்பை பார்த்ததாகவும் அடித்ததாகவும் சொல்வார்கள்.

ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை இதுவரை.

Gulf Newsல் விளம்பரம் கொடுக்க இயலுமோ விஷக்கடி மந்திரிப்பு பற்றி ? மம்னு ! டிரைவிங் லைசன்ஸ் எடுத்துக் கொடுக்க தாயத்து விற்கிறவர்கலெள்ளாம் இருக்கிற நாட்டில் மந்திரிப்பவர்களும் இருக்கத்தான் இருப்பார்கள்.

ஆனால் எல்லோரும் ஒன்றாகி விடுவார்களா ?

‘உங்கள்ட்டெ சக்தி இருக்குண்டு வெளிலே காட்டுறது வழிச்சிக்கிட்டு காமிக்கிற மாதிரி ‘ என்றீர்களே ஹஜ்ரத்.. நான் எப்போது பரீட்சித்துப் பார்ப்பது? சந்தேகம் வந்து விட்டாலே ஞானம் பலிக்காதுதான். உதவுபவர்களுக்குள்ள தகுதியை அறிவது எப்படியாம் ?

‘ஆசைப்படு.. ஆசைதான் துஆ’ – ஹஜ்ரத் என்னை கேலியாய் பார்த்து சிரிப்பது போல..

அடுத்த அரை மணி நேரத்தில் பக்கத்து பாகிஸ்தானி ரூமில் கூச்சல் கேட்டது. இர்ஷாதுக்கு தேள் கொட்டி விட்டது !

‘பிச்சுனே பாய்கோ டங் மாரா !’ – இர்ஷாதின் தம்பி நவீத் அழுது கொண்டே ஓடி வந்தான் என்னிடம். பிச்சு=தேள். டங்=கொட்டுதல். சில மொழிகள் வலிமையானவை. கேட்கும்போதே அந்த effect வந்து விடும்.

‘பிச்சு மர்கயா ?’

நவீத் என் நகைச்சுவையை சிக்கிற சமயமா இது ? ‘பாய்.. எதாச்சும் செய்’.. என்று துடித்தான்.

புர்தா ஷரீஃபில் நான் உட்கார்ந்திருக்கும் போது ஒரு நாள் எதேச்சையாக நுழைந்தவன், இலேசான வெளிச்சத்தில் நான் ஊதுபத்தி மணம் கமழ உட்கார்ந்திருந்த முறையை கவனித்திருக்கிறான். அன்றிலிருந்து அவனுக்கு என் மேல் மரியாதை. பச்சைப் போர்வை போர்த்தாத குறை !

எண்ணிய உடன் நடந்து விட்டதே!. என் பரபரப்பை முதலில் அடக்க வேண்டும்.

இர்ஷாத் ரூமில் நுழைந்தேன். பெரும்பாலான பாகிஸ்தானி கூலி போல இரண்டு A.Cக்களை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கி நடக்கிற பயில்வானாக இருந்தால் என்ன ?

விஷத்தை விட பயம் அதிக விஷம் கொண்டது.

‘யா அஹியா அஸ்ராஹியா ஆதூனி அஸ்மா உஸு

யா முஜ்லி அலாயிமுல் ஊமூதி ….. ‘

கொட்டிய இடத்தில் என் வலது கையை வைத்து மெதுவாக மூச்சு விட்டபடி 41 முறை ஓதினேன். ஹஜ்ரத் பக்கத்தில் நிற்பது போல கற்பனை செய்து கொண்டேன் , முதல் முறையாக இருப்பதால்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் கடுப்பு குறைய வேண்டும்.

நவீத் கவைலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சகோதரன் வலியில் முனகுவதை.

இப்போது இர்ஷாதுக்கு வேர்த்து விட ஆரம்பித்தது..

இல்லை, இது விஷ வேர்வை..அவனுக்கு கடுப்பு கூடிக் கொண்டே போனது.

ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது. இப்போது எனக்கு வேர்த்து விட ஆரம்பித்தது.

இர்ஷாதுக்கு உண்மையில் தேள் கொட்டிற்றா இல்லையா ? இல்லை இந்தியன் ஓதும் இஸ்மு , பாகிஸ்தானிக்கு பலிக்காதா ? ஆனால் நான் பாகிஸ்தானியிடம் சுளுக்கு வலித்து குணமாகியிருக்கிறதே..

‘நவீத்..உஸ்கோ ரஷீத் ஹாஸ்பிடல் லேகெ ஜானா.. ஜல்தி..’ என்று சொல்லிவிட்டு நவீதின் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தபடி என் அறைக்கு வந்தேன்.

எங்கே தவறு நிகழ்ந்தது ?

உச்சரிப்பில் கோளாறு இருந்திருக்குமோ ? அல்லது ஓதும் எண்ணிக்கையில் மாற்றம் இருந்ததா ?

ஹஜ்ரத் கொடுத்த இஸ்முகளை எழுதி வைத்திருக்கிற டைரியைப் புரட்டினேன். எல்லாம் சரிதான். அவர்கள் கொடுக்கும்போது எழுதியதுதான். பிறகு சீடர்கள் லேசர் பிரிண்டரில் அச்சிட்டு , ஹஜ்ரத் பார்த்து சரி சொன்ன பிறகு xerox எடுத்த பிரதி , கேஸ்ஸட்டில் கேட்டு பிறகு டைரியில் எழுதிய வரிகள் எல்லாம் ஒன்றுதான்…

ஷர்புன் நிஃமத் (கொடுக்கப்பட்ட அருள் பறிக்கப்படுவது) இறங்கி விட்டதோ ? ஏன், ஒரு நொடி சந்தேகப் பட்டு விட்டேனோ ?

நாலு வருட உருவும் நேரமும் வீணாகி விட்டதே..

கெளஸ் ஹஜ்ரத்துக்கு உடனே ·போன் செய்தேன். கலங்கிய படி சொன்னேன். உடனே பதில் சொல்ல மாட்டார்கள் எப்போதும். என்னவோ என் நேரம் அவர்கள் நல்ல மூடில் இருந்தார்கள்.

‘என்னா ஓதுனீங்க அப்படி ? எங்கே சொல்லுங்க..’

‘யா அஹியா அஸ்ராஹியா….’

‘நிறுத்துங்க..’- குறுக்கிட்டார்கள்.

‘ஏன் ஹஜ்ரத் ?’

‘என் பெயரை கெடுத்துடுவீங்க போலக்கிதே !.. அதானே பார்த்தேன்..’

எனக்குப் புரியவில்லை. குழம்பினேன்.

‘ ‘யா அஹியா’ அல்ல. வெறும் ‘அஹியா’ தான். ‘அஹியா அஸ்ராஹியா..’ண்டு தான் ஆரம்பிக்கனும்.’

‘சுரீர்’ என்றது. அதற்கப்புறம் நடந்தது ஞாபகம் இல்லை…

அருஞ்சொற் பொருள் :

இஸ்மு = மந்திரம்

ஹயாவு = பெண் குறி

ஆனம் = குழம்பு

மம்னு = தடை

துப்பா = மடையன்

ரப், ஹக்கன் = இறைவன்

ஹராம் = (மார்க்கத்தில்) அனுமதிக்கப்படாதவை

திக்ர் = ஜெபம் , இறைச்சிந்தனை

– ஜனவரி 10th, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *