“தமிழ் இலக்கியத்தின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் எழுத்தாளர் இளம்புயல் அவர்களுடன் நடக்கப்போகும் இந்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பார்வையாளர்கள் அனைவரும் எங்கள் வணக்கம். முதலில் அவரைப்பற்றிய ஒரு சிறு விளக்கம். பின்னர் அவருடன் வந்திருக்கும் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம்” என்று அந்த பிரபல தொலைக்காட்சி சேனலில் பிரபல anchor விமல் சொன்னதும், சொல்லிக்கொடுத்தது போல பார்வையாளர்கள் அனைவரும் ஒரு சேர கை தட்டினார்கள்.
டிவி கேமரா இளம்புயல் முகத்தில் மையம் கொண்டது. சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும். சுருள் முடி, தமிழ் இலக்கிய கர்த்தாக்களுக்கே உரிய மெல்லிய நறுக்கி விடப்பட்ட மீசை. இரண்டாவது முறை பார்த்தால் வசீகரிக்கும் முகம். நிரந்தரத் தேடலில் அலைபாயும் கண்கள்.வெகு நேரம் தன்னை கேமரா பார்த்ததில் சட்டென்று சுயநினைவுக்கு வந்தவன் போல ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து, கை கூப்பி வணங்கினான்.
‘மிஸ்டர் இளம்புயல்! முதலில் உங்கள் சமீபத்திய புதினம் ‘விலை’யின் மகத்தான வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள். அதைப் பற்றிய அனுபவங்களை சற்று எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?” என்ற டிவி நிருபரை பார்த்து ‘தாராளமாக’ என்றான் இளம்புயல்.
“இதுவரை பெரிய வெற்றி என்று எதுவும் பார்காத எனக்கு இந்தப் படைப்பின் வெற்றி ஆச்சரியத்தைக் கொடுத்தது என்பதைவிட விடா முயற்சி வெற்றி தரும் என்னும் முதியோர் சொல்லின் உண்மையை உணர்த்தியது என்றே சொல்லலாம். என் ஏழு மாத உழைப்பின் பலன்.
இளம்புயல் என்ன சாதித்தான் என்று கூசாது குற்றம் சாட்டிய வாய்களுக்கெல்லாம் நான் போட்ட பூட்டு தான் இந்த ‘விலை’. என் அடிப்படை எழுத்து நடையை சற்று மாற்றி நான் செய்த experimental work இது. என் அடையாளம். இது போல இனி என்னாலேயே எழுத முடியுமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் என் உள்ளத்தில் குடி கொண்டிருந்த ஒரு நெடு நாளைய கனவின் வெளிப்பாடு இது” என்றான் இளம்புயல்.
“ஆனால் இது நீங்கள் எழுதியதே இல்லை என்றும், இதனை வேறு ஒரு பிரபல எழுத்தாளர் எழுதியிருக்கலாம் என்றும் ஒரு வதந்தி உலவுகிறதே, அது பற்றி உங்கள் கருத்து என்ன” என்று கேட்ட டிவி anchor விமலை இளம்புயல் எரித்து விடுவது போல் பார்த்தான்.
“சுற்றி வளைத்து ஏன் கேட்கிறீர்கள் விமல்? எழுத்தாளர் சந்திரமதி என்று நேரடியாக அவர் பெயரைச் சொல்வதுதானே?” என்றான்.
“இல்லை…” என்று ஆரம்பித்த விமலை மேலும் பேச விடாமல் அவனே தொடர்ந்தான். “ சந்திரமதி வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல. இந்த யுகத்தின் பரிசு. அவரின் தாக்கம் இல்லாத எழுத்தாளர்களைக் காட்டுங்களேன் பார்க்கலாம். அவரால் inspire ஆன பல இளைஞர்களில் நானும் ஒருவன். அவரின் சாயல் என் எழுத்தில் இருக்கலாம். இருக்கும். இருக்க வேண்டும். இந்த வதந்திக்கு இறுதியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். ‘விலை’ என் படைப்பு. என் உழைப்பின் பலன். என் கனவுகளின் வெளிப்பாடு. இதனை யாரும் எனக்காக ghost write செய்யவில்லை” என்று ஆத்திரத்துடன் சொல்லி முடித்தான்.
விமல் பார்வையாளர்கள் பக்கம் திரும்பி “யாரும் எதுவும் கேள்வி கேட்க விரும்பினால் கேட்கலாம்” என்றான்.
அடுத்து பார்வையாளர் தங்கள் கேள்விகளைக் கேட்பதற்கு முன்னமே டிவியை mute செய்தார் எழுத்தாளர் சந்திரமதி. பின்னர் அந்த ரிமோட்டை தன் அருகில் தூக்கியெறிந்த பூமாலையைப் போல் கசங்கலாகப் படுத்தக் கிடந்த அந்த அழகியப் பெண்ணின் வயிற்றின் மேல் வைத்தார். கட்டில் அருகில் இருந்த டேபிளில் வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி தன் உதடுகளிடையே பொருத்தினார். இதற்காகவே காத்திருந்தவள் போல் அந்தக் கசங்கிய பூமாலை சட்டென்று எழுந்து லைட்டரால் அதற்கு நெருப்பூட்டினாள்.
சந்திரமதி சிகரெட்டின் புகையை உள்வாங்கி நுரையீரல் எல்லாம் நிறைத்து பின் வாய் வழியே வளையமாக வெளியேற்றினார். அவர் கண்கள் அவளைத் தலை முதல் கால் வரையில் கணக்கெடுத்தது.
‘என்ன பாக்குறீங்க?” என்றாள் அவள்.
“உனக்கு அந்த ‘விலை’ அதிகமோன்னு பாக்குறேன்” என்றார் கொஞ்சலாக.
“பாப்பீங்க பாப்பீங்க, கெழட்டுச் சிங்கத்துக்கு யோசனை போகுது பாரு” என்று சொல்லியபடியே சந்திரமதியின் உடல் மீது காமத்துடன் படர்ந்தாள்.
அனிச்சையாக அவர் கண்கள் டிவியின் பக்கம் சென்றது. அங்கே அந்த கசங்கிய பூமாலையின் கணவன் எழுத்தாளர் இளம்புயல் தன்னிலை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தது இவர்கள் இருவரின் காதுகளிலும் விழவில்லை.
– நவம்பர் 2013