வியாபாரம் என்பது அரசியல் மாதிரி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 9,990 
 
 

புரத சத்து மிகுந்த ‘ஹெல்த் பிளான்’ என்ற சத்துப் பவுடர் தயாரிக்கும் அந்தக் கம்பெனியின் முதலாளியும், அன்று அந்தக் கம்பெனி மானேஜர் ராம் பிரசாத்தும் விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்திக் கொன்டிருந்தார்.

‘ஹெல்த் பிளான்’ பவுடரை ‘பாக்கெட்’டில் அடைத்து , மெடிகல் ஷாப்கள் மூலம் அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.

“ சார்!…நம்ம கம்பெனி தயாரிப்புகளை, தயாரித்த ஆறு மாதங்களுக்குள் உபயோகித்து விட வேண்டும்…இல்லாவிட்டா கெட்டு போயிடும்!…ஐந்து மாதங்களுக்கு முன்பு தயாரித்த பத்தாயிரம் பாக்கெட்கள் விற்பனை ஆகாமல் அப்படியே ஸ்டாக் இருக்கு!..இன்னும் ஒரு மாதத்திற்குள் அவைகளை விற்பனை செய்ய முடியாது! இன்னும் ஒரு மாதம் தாமதம் செய்தா அவைகள் அனைத்தும் கெட்டு விடும்!….”

“ அப்படியா?..இப்படி செய்யுங்கள்… அந்தப் பாக்கெட் கீழ் பகுதியில் தயாரித்த தேதி, ஆறு மாதத்திற்குள் உபயோகிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் சிறிய எழுத்தில் பிரின்ட் செய்திருக்கிறோம்! அதன் மேல் ‘விற்பனைக்கு அல்ல!’ என்று ஒரு புதிய லேபிளை ஆங்கிலத்தில் அச்சிட்டு ஒட்டி விடுங்கள்!…”

“ அப்புறம்?…”

“ இப்பொழுது..மொத்தமாக செல்போன் வாங்கினால் ஐயாயிரம் ரூபாயில் அருமையான செல்போன் கிடைக்கும்! நகரத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் நிறைய நோயாளிகள் ஆலோசனைக்கு வந்து போகும் நூறு டாக்டர்களை தேர்வு செய்வோம்!…பொதுவாக இன்று டாக்டர்களிடம் வந்து போகும் நோயாளிகளில் 70% நோயாளிகள், சக்கரை அல்லது ரத்த அழுத்த நோயாளிகளாக இருக்கிறார்கள். நாம் தேர்தெடுக்கப்படும் டாக்டர்களிடம் நம்முடைய விற்பனை பிரதிநிதிகளை அனுப்புவோம்… ‘நம் தயாரிக்கும் பவுடரில் நிறைய புரதம் இருக்கிறது..சர்க்கரை நோயாளிகள் தினசரி பாலில் இந்தப் பவுடரை கலந்து குடித்து வந்தால், சர்க்கரையில் அளவு குறைவதோடு, அதனால் ஏற்படும் களைப்பும் போய் விடும்…நம் பவுடரில் சோடியம் அளவை குறைக்கும் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், இரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன் படும்’ என்று டாக்டர்கள் நோயாளிகளிடம் சொல்லச் சொல்லி, இலவசமாக ஒவ்வொரு பாக்கெட் நோயாளிகளுக்குத் தர ஏற்பாடு செய்வோம்!…நம்மிடம் ஸ்டாக் இருக்கும் அனைத்துப் பாக்கெட்களும் பத்தே நாளில் தீர்ந்து விடும்!…பத்தாயிரம் பேர் உபயோகித்துப் பார்த்தால் நமக்கு அதில் நிறைய புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கு! ….அதற்காக டாக்டர்களுக்கு செல்போன் அன்பளிப்பு தந்து விடுவோம்! ..”

“ சார்!…அதற்கு டாக்டர்கள் ஒத்துழைப்பு தராம போய் விட்டா என்ன சார் பண்ணறது?…”

கம்பெனி முதலாளி வாய் விட்டுச் சிரித்தார்.

“ நீ மானேஜரா இருக்கவே லாயாக்கில்லே!…. முதலிலே வியாபாரம் என்றா என்னவென்று தெரிஞ்சிக்க வேண்டும்!… வியாபாரம் என்பது அரசியல் மாதிரி!…விலை தான் அதுக்கு முக்கியம்!… அவசர காலங்களில் தலைவர் பேச்சுக்கு கட்டு படாத மாதிரி சிலர் பேசுவாங்க…அறிக்கைகள் விடுவாங்க….அதில் உள் நோக்கம் இருக்கும்….தலைவருக்கு அவர்கள் எதற்கு அப்படி நடந்து கொள்கிறார்கள் என்றும் தெரியும்!…அதோட தலைவருக்கு அவங்க அந்தஸ்தும் தெரியும்!…சிலர் பதவிக்கு அடி பணிவாங்க….சிலர் பணத்திற்கு அடி பணிவாங்க!….ரகசியமாக அவர்களைக் கூப்பிட்டு அவரவருக்கு தேவையானதை தந்திடிவார்… உடனே அதே வாய், தலைவர் தான் நமக்கு கண்கண்ட தெய்வம் அவரை விட்டா நமக்கு கதியில்லே என்று தொடர்ந்து அறிக்கைகள் வரும்… ஊர் ஊராகப் போய் ஆதரவு திரட்டி அதற்கும் கொஞ்சம் வசூலித்து விடுவாங்க!….அது போல் தான் வியாபாரமும்!..சரக்கு சுமாரா இருந்தால் கூட பரவாயில்லே!…விளம்பரம் கொடுத்து, பத்திரிகைகளின் ஆதரவையும் தேடிக் கொள்ள வேண்டும்! விற்பனை செய்பவர்கள், விற்பனைக்கு உதவியா இருப்பவர்களை எல்லாம் இனம் கண்டு, அரசில்வாதிகள் மாதிரி அவர்களுக்கு அன்பளிப்பு, இதர சலுகைகள் எல்லாம் கொடுத்து நமக்கு சாதகமா இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்!…அது தான் வியாபாரியின் முக்கிய கடமை!…”

– பாக்யா டிசம்பர் 30 ஜனவரி 5 2017 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *