கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 5,764 
 
 

“அனு உனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாயே, இப்போது எப்படி இருக்கிறாய், மருத்துவரிடம் சென்றாயா”

“பரவாயில்லை வனிதா மருத்துவரிடம் போகவில்லை, எனக்கு சரியாகிவிட்டது, அதனால் போகவில்லை பள்ளிக்கு வந்துவிட்டேன்”

“உன் முகம் சரியில்லையே வாட்டமாகவே இருக்கிறதே, நீ மருத்துவரிடம் போயிருக்கலாமே”

“ஆமா வனிதா ரொம்ப சோர்வாக இருக்கிறது, அதனால்தான் முகத்தில் அப்படி தெரிகிறது, போகப் போக சரியாகிவிடும்”

“சரி வா அலுவலகம் உள்ளே செல்வோம், நேரமாகிவிட்டது தாமதமானால் மேலாளர் திட்டுவார், உனக்கு பதவி உயர்வு வரும் நேரத்திலா இப்படி உடம்பு சரியில்லாமல் ஆகனும்”

“ஏன் அப்படி நினைக்கிறே, அதுக்கும் இதுக்கும் என்ன இருக்கும், சாதாரண காய்ச்சல் உடம்பு வலிதானே”

“அதுக்கில்லைடி இந்த நேரத்தில் அடிக்கடி விடுமுறை எடுத்தால், உனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கைவிட்டு போய்விடும், நீ இதற்காக எவ்வளவு உழைத்திருப்பாய் அதை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கு அனு”

“அதெல்லாம் ஒன்றும் ஆகாதுடி, கமலி வந்த மாதிரி தெரியவில்லையே, எப்பவும் நமக்கு முன்னாடியே வந்துவிடுவாள்”

“ம்ம் அதானே ஏன் இன்னும் வரவில்லை” என்று இருவரும் யோசிக்க,

“ஹாய் என்னடி இரண்டு பேரும் ஏதோ யோசனையில் இருக்கீங்க”

“உன்னைதான் காணும் என்று தேடிக் கொண்டிருக்கிறோம், எங்களுக்கு முன்னாடியே வந்துவிடுவியே காணோமே என்று தேடினோம்” என்றாள் அனு

“என்னடி மங்களகரமா வந்திருக்கே எதுவும் விஷேசமா” என்றாள் வனிதா

“இல்லைடி கோயிலுக்கு போயிட்டு வருகிறேன் அதனால்தான் நெற்றியில் குங்குமம் விபூதியெல்லாம்”

“என்ன கமலி எப்பவும் வெள்ளிக் கிழமைதான் போவாய், இன்னைக்கு என்ன?”

“உனக்காகதான் அனு நீ அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போறீயா, அதுக்காக ஒரு சின்ன வேண்டுதல் நீ சீக்கிரம் சரியாக வேண்டுமென்று”

“ரொம்ப நன்றிடி உன்னுடைய வேண்டுதலால்தான் எனக்கு ஒன்றுமில்லைடி”

“சரி இந்தா குங்குமம் விபூதி வைத்துக் கொள்” என்று மூவரும் வேலை பார்க்கத் தொடங்கினர்.

மதிய உணவை மூவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்ட பிறகு மீண்டும் வேலையைத் தொடங்கிய சிறிது நேரத்தில் அனு நாற்காலியில் அமர்ந்தவாரே மயக்கம் போட்டு விழுந்தாள்.

“அனு ஏய் அனு என்ன ஆச்சு உனக்கு, அனு அனு” என்று இருவரும் அழைக்க அவளுக்கு சுயநினைவேயில்லை, உடனே அவள் முகத்தில் நீர் தெளிக்க அப்பவும் அனு மயக்கம் தெளியவில்லை, அருகிலிருந்த மருத்துவமனைக்குச் கொண்டுச் சென்றனர்.

அனு வீட்டிற்கும் தகவல் சொல்லிவிட்டு அவர்கள் வரும் வரை அவள் கூடவே இருந்து வனிதாவும் கமலியும் கவனித்துக் கொண்டனர். உள்ளே மருத்துவர்கள் அவளை பரிசோதனை செய்துக் கொண்டிருந்தனர்.

அதற்குள் அனு வீட்டிலிருந்து எல்லோரும் வந்துவிட்டனர், “என்ன ஆச்சு வனிதா ஏன் மயக்கம் போட்டு விழுந்தாள்”

“தெரியல ஆண்ட்டி சாப்பிட்ட பிறகு வழக்கம் போல் கணிப்பொறியில் வேலைதான் பார்த்துக் கொண்டிருந்தால், திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள், மருத்துவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்”

மருத்துவர் வெளியில் வந்ததும், “ஒன்றுமில்லை, இரத்த அழுத்தம் குறைந்திருக்கிறது, சிறிது நேரத்தில் கண் விழித்துவிடுவாள் அழைத்துச் செல்லுங்கள், நன்றாக ஓய்வெடுக்க வையுங்கள்” என்று அவர் செல்ல, சிறிது நேரத்தில் வீட்டிற்குச் அழைத்துச் சென்றனர்.

மூன்று நாட்களானது அனு எழுந்து நடமாட மிகவும் சிரமப்பட்டாள், “அனு இன்று மருத்துவமனையில் அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்கேன், முதலில் உனக்கு முழுவது பரிசோதனை செய்யனும்” என்றார் அனுவின் அம்மா.

அனு, “சரி” என்று சொன்னதோடு மீண்டும் கண்ணை மூடிக் கொண்டாள், அடுத்த ஒரு மணி நேரத்தில் கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அனுவுக்கு எல்லா பரிசோதனையும் எடுத்து முடித்ததும், “ஒரு வாரத்தில் எல்லா பரிசோதனையின் ரிப்போர்ட் வந்துவிடும், அப்போது வந்து வாங்கிக் கொண்டு மருத்துவரைப் பாருங்கள்” என்றார் செவிலிப் பெண்.

ஒருவாரம் கழித்து அனுவும் அவள் அம்மாவும் ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு மருத்துவரைப் பார்த்தனர், “அனு உங்களுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை, நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள், ஆனால் ஏன் இப்படி சோர்வாக இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை, உங்கள் மனதில் எதுவும் குழப்பமா” என்றார்.
“எந்த குழப்பமும் எனக்கில்லை டாக்டர் ஆனான் நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை”

“சரி நான் மனோதத்துவ மருத்துவர்க்கு எழுதித் தருகிறேன் எதற்கு நீங்கள் அவரிடமும் பரிசோதனை செய்துவிடுங்கள்” என்றார்.

மனோதத்துவ மருத்துவரும் அதையே சொல்ல, “இவர் உடம்பிலும் ஒன்றுமில்லை, மனதிலும் ஒன்றுமில்லை நல்ல ஆரோக்கியமாகதான் இருக்கிறார்” என்று சொன்னார்.

நாட்கள் ஆக அனு மிகவும் மோசமாகி அவள் உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலைக்குச் சென்றாள், அவளைப் பார்ப்பதற்காக உறவினர் ஒருவர் வந்திருந்தார், அவளைப் பற்றி எல்லாம் விசாரித்துவிட்டு, அனு அம்மாவிடம் பேச அவரும், “சரி” என்று தலையை ஆட்டினார்”

இரண்டு நாட்கள் கழித்து அவர் ஒரு சாமியாரை அழைத்து வந்திருந்தார், அவர் அனுவை நன்றாக பார்த்துவிட்டு, வீட்டை நன்றாக சுற்றி சுற்றிப் பார்த்துவிட்டு,

“உங்கள் மகளுக்கு ஒன்றுமில்லை அவருக்கு நோயை வரவழைத்திருக்கிறார்கள், அமாவாசை முடிந்ததும் பூசை செய்தால் என்னவென்று பார்த்துவிடலாம்” என்றார்.

அமாவாசை முடிந்த பிறகு பூசை செய்துவிட்டு கேட்டார் அனுவிடம், “உனக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கொடுப்பதாக இருக்காங்களா” என்றார்.

“ஆமாம்” என்று அனு சொல்ல,

“அதுதான் உன்னை இந்த நிலைமைக்கு ஆக்கியிருக்கு” என்றார்

“ஐயா எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை, கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்” என்றார் அனுவின் அம்மா

“உங்கள் மகளுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை தனக்கு வர வேண்டுமென்று உங்கள் மகளுக்கு பூசை செய்து செய்வினை வைத்துள்ளனர்” என்றார்.

“ஐயா அது யார் என்று தெரிந்து கொள்ளலாமா”

“நாங்கள் வைத்த செய்வினை எடுப்போம், ஆனால் யாரென்று சொல்லமாட்டோம், ஒரு சில நடந்த சம்பவங்களை சொல்கிறேன், நீங்களே அது யாரென்று புரிந்து கொள்ளுங்கள், இதை நாங்கள் எடுத்துவிட்டு அப்படியே வைத்தவர்களுக்கு திருப்பி அனுப்பிவிடட்டுமா?” என்றார்.

“வேண்டாம் ஐயா, அவர்கள் செய்த அதே தவறை நாங்கள் செய்ய விரும்பவில்லை, அவர்கள் நன்றாக இருக்கட்டும்” என்றாள் அனு

அதே போல் அவர் சொல்லச் சொல்ல அனுவுக்கு அது யாரென்று புரிந்துவிட்டது, எதையும் காட்டிக் கொள்ளாமல் அவரின் பூசைக்கு ஒத்துழைப்புக் கொடுத்தாள், அவள் சாப்பிட்ட உணவில் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது, அதானால் அவளுக்கு நிறைய நீர் குடிக்க கொடுத்து வயிற்றிலிருந்ததை வெளியில் கொண்டு வந்தனர். வீட்டிற்குச் சென்ற பிறகு சில பரிகாரங்களைச் செய்ய சொல்லி அனுப்பினார்.

ஒருவாரத்தில் அனு பழைய அனுவாக மாறி அலுவலகம் சென்றாள். அவளைப் பார்த்ததும் வனிதா அவளை ஆரத் தழுவி வரவேற்றாள், “ரொம்ப சந்தோஷமாக இருக்குடி, இப்போதான் நீ பழையபடி மாறியிருக்கே”

“ஆமாண்டி நான் பழையபடி மாறி புதிய பிறப்பெடுத்து வந்திருக்கிறேன், அது என்னவென்று உனக்கு இப்போது தெரியும்”

“கமலி நல்லா இருக்கியா எனக்காக கோயிலுக்கெல்லாம் போய் வேண்டிக் கொண்டாய், நான் நன்றாகி வந்திருக்கிறேன் வா என்று சொல்ல மாட்டேன்கின்றாய்”

“அது வேலையாக இருந்தேன் உன்னைக் கவனிக்கவில்லை, எப்படி இருக்கே அனு”

“அட எப்படி இருக்கே என்று கேட்கிறே, நீ இன்னும் சாகவில்லையா என்று கேட்பாய் என நினைத்தேன்”

“நா நா நான் எதுக்கு அனு அப்படிக் கேட்கனும், நீ என்ன பேசறே அனு”

“போதும் நிறுத்துடி நீயெல்லாம் தோழியாடி, உனக்கு பதவி உயர்வு வரனும்னா உன் திறமையால் மேல வர நினைக்கனும், அடுத்தவர்களை சவக் குழிக்கு அனுப்பிவிட்டு, உன்னால் எப்படி மேல வர முடியும், நீ செய்த வினையால் நீயே அழிந்து போவாய்”

“என்ன அனு என்னனென்னமோ பேசறே, எனக்கும் ஒன்றும் புரியவில்லை”

“எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது, உனக்கு பதவி உயர்வு வேண்டுமென்று, உன் வீட்டில் செய்ததாக வடை சாப்பிட கொடுத்தாயே இரண்டு மாதத்திற்கு முன் ஞாபகம் இருக்கிறதா?, நீ வைத்த செய்வினை அவ்வளவு சீக்கிரம் மறந்து போகுமா என்ன?”

“உனக்கு திறமை இருந்தால் நான் நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறேன், என்னுடன் நேருக்கு நேர் மோதிப் பார், உன்னை மாதிரி பயந்து போய் முதுகில் குத்தும் கோழை இல்லை, மரணப் படுக்கைக்குச் சென்ற நான், உன் முன்னாடி எவ்வளவு தில்லாக வந்து நிற்கிறேன் பார்த்தாயா, அடி எவ்வளவு அடிக்க முடியுமோ அடி எதற்கும் அசர மாட்டேன் திரும்ப வருவேன், நான் யாருக்கும் கெடுதல் நினைக்கவில்லை அழிந்து போவதற்கு”

“ஏய் கமலி, நானும் அனுவுடன் கைகோர்க்கப் போகிறேன், வினை விதைத்தவன் வினை அறுப்பான், நீ விதைத்த வினையால் நீயே அழியப் போகிறாய், பொறுத்திருந்து பார் அது என்னவென்று உனக்கே தெரியும், நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கு மறவாதே, மற்றவர்கள் அழிவில் வாழ நினைப்பவர்கள் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை, நீ இதைப் புரிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை வருகிறோம்”

“வா அனு போகலாம், அவள் செய்தததை சீக்கிரம் உணருவாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *