வித்தியாசமான கிராமம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,664 
 

குறுஞ்செய்தி ஒன்று மொபைலில் வந்து விழுந்தது.

நீண்ட நேரமாக எதிர்பார்த்திருக்கும் செய்தியாக இருக்கலாம் என வேகமாக திறந்து படித்தார் அணுசக்தி துறை அமைச்சர் பீமராகவ்

”சாரி சார். பிப்டி பேசன்ட் டெத். இன்குலிடிங் டூ டாக்டர்”

செய்தி , அமைச்சர் முகத்தில் துக்கத்தை ஓங்கி அறைந்தது.

அவசரமாக மொபைலில் டெக்ஸ்ட்டை திறந்து ” கௌமெனி சில்ரன்?” என டைப் செய்து அதே நம்பருக்கு அனுப்பினார்.

மறுவினாடிக்குள் இன்பாக்ஸில் வந்து விழுந்தது. ” டென் சார்.”

அதைத்தொடர்ந்து மற்றொரு தகவல் ” ஜஸ்ட் நவ். ப்போர் டாக், இலவன் கௌ டெத்”

அமைச்சர் மனசுக்குள் பூரான் ஊர்கிற மாதிரியான ஒரு உணர்வு. மெல்லிய திகில் பற்றியது.

அதே எண்ணுக்கு அழைப்பு விடுத்தார். மறுமுனையில் துறை இயக்குனர் பீட்டர் உட்டன்ஸ்

” உட்டன்ஸ் …நான் சம்பவ இடத்திற்கு வரட்டுமா?”

” சம்பவ இடத்திற்கா சார்? வாய்ப்பே இல்லைங்க சார்..”

” ஏன்….?”

” நுழைய தடைங்க சார்”

” எனக்குமா?”

” இது ஹெல்த் டிப்பார்ட்மென்ட் ஆர்டர் சார். சென்ட்ரல் மினிஸ்டர்களுக்கு எப்படினு தெரியல சார்.”

தனது துறை முள்ளின் மேல் பயணம் செய்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தார் அமைச்சர்.

” சரி. மக்களின் மனநிலைதான் என்ன?”

” மக்கள் உண்ணாவிரதத்தை கை விடுவதாக இல்லைங்க சார்.”

” என்னதான் சொல்றாங்க?”

” எல்லா அணு உலைகளையும் மூடும் வரை உண்ணாவிரதத்தை கை விட முடியாதுங்குறாங்க சார்”

அவர் காதிற்குள் தீக்கோலை சொறுகியது மாதிரி இருந்தது அந்த செய்தி.

” அணுக்கதிர் வீச்சின் அபாயம் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தி விட்டீர்களா..?”

” எஸ் சார். முழுமையா சார். சார்… மற்றொரு அணு உலையும் வெடிக்கிற கன்டிசன்ல இருக்காம் சார்”

“ வாய்ப்பில்லைங்க உட்டன்ஸ்”

“ என்னச் சொல்றீங்க சார்.?”

“அந்த அணு உலை சைன்டிஸ்ட் கட்டுப்பாட்டுக்குள் வந்திருச்சு”

” மக்களிடம் பதட்டத்தை தணிக்க அரசின் நிலைப்பாடு என்னங்க சார்?”

”இருபத்து நான்கு மணி நேரத்திற்கு எந்த செய்தியையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தடை விதிச்சிருக்குறாங்க. அது மட்டுமல்ல, இந்த மாத முழுமையும் செய்திப்பிரிவை அரசுக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதாகவும் முடிவு செய்திருக்கிறாங்க”

” நீங்க இப்ப எங்கே சார் இருக்கீங்க?”

”தலைநகரத்தில்”

“உலக நாடுகளுக்கு சம்பவம் தெரியுமா சார்?”

”வல்லரசு நாடுகளின் பார்வைகள் நம் நாட்டுப்பக்கம் திரும்பிருக்கு. அதுமட்டுமல்ல, உதவிகள் கேட்டா செய்ய தயாராக இருப்பதாகவும் சொல்லிருக்கிறாங்க”

”நம்ம துறை அதற்கு என்ன முடிவு செய்திருக்கு சார்.”

”எல்லா பிரச்சனைகளையும் நம்மளே சால்வ் பண்ணிடலாமுனு சொல்லிருக்கிறேன்.. பத்து பிசிக்ஸ் சைன்டிஸ்ட்டை அங்கே உடனே அனுப்பி வச்சிருக்கேன் உட்டன்ஸ்.”

”குட் சார். நான் அவங்கள உடனே மீட் பண்றேன் சார்”

”நோ. அவங்களே சம்பவ இடத்துக்கு வந்திடுவாங்க. இன்னும் பத்து நிமிஷத்திலே எல்லா கம்யூனிகேசன் நெட் வொர்க்கையும் டிஸ் கனைக்ட் செய்யப் போறாங்க”

”வாட் சார்.!என்ன சொல்றீங்க!”

”அதற்குக்குள்ளாகவே கூட இருக்கலாம்”

”சார் . மற்றொரு செய்தி. உண்ணாவிரதம் இருப்பவர்களில் பலர் இரத்த வாந்தி எடுக்குறாங்களாம் சார்.”

தர்மச்சங்கட்டமான செய்தியை வேப்பெண்ணை மாதிரி விழுங்கிக் கொண்டு மேலே சொன்னார் அமைச்சர்.

” ஆம்புலன்ஸ் கூடுதலாக அரேஞ்ச் பண்ணிருக்கு. அவங்கள உடனே ஹாஸ்பிட்டல்ல அட்மிட்பண்ணப் பாருங்க.”

”சரிங்க சார். ”

”ஒரு முக்கியமான செய்தி. அரசே இழப்பீடுகளை அறிவிக்கும் வரை நீ யாரிடமும் செய்தியை கசிய விட்டுவிடக்கூடாது”

” ஓகே சார்”

” திஸிஸ் நாட் மை அனோன்ஸ். பிரசிடன்ட் ஆர்டர்”

அமைச்சரின் அதிகாரம் உட்டன்ஸ் ஆழ்மனதில் தரைத்தட்டி உட்கார்ந்து கொண்ட மறுகணம் இணைப்பு அதுவாகவே துண்டித்துக் கொண்டது.

*****

கடற்கரை ஓரங்களில் புதுக்காலனிகள் கொத்தாக முளைத்திருந்தன. தண்ணீர் தொட்டியை தலைகீழாய் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் அமைப்பாக காலனிகளின் மேல்தளம். தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவைகளும் அணு உலைகள் தானோ! என கிலி மூட்டச்செய்தன. மேல் தளத்தின் உயரத்தில் நீள, குறுக்குவாக்கில் கம்பிகள் கட்டி அதில் சேலைகளும் வேஸ்டிகளும் காய்ந்துக்கொண்டிருந்தன.

சிவப்பு சுழல் விளக்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாலைகளை உராய்த்துக்கொண்டு காலனி குடியிருப்புக்குள் நுழைந்தன. கட்டியுள்ள புது அங்காடி , சிற்றுண்டி கடைகளை திறந்து வைத்து உரையாற்றினார் அமைச்சர் பீமராகவ்.

” பத்து வருடத்திற்கு முன் நிகழ்ந்த கசப்பான சம்பவத்தை மறந்து விடுங்கள் மக்களே. அதற்கான நிவாரணம் மிக விரைவில் அரசு அறிவிக்க உள்ளது. அணு உலைகளில் உள்ள காலியிடங்களை உங்களைக் கொண்டே நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. மற்றொரு முக்கியமான செய்தி, உங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவை அரசே ஏற்றுள்ளது. விஞ்ஞானம் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைகளில் பத்துப்பேர் மிக விரைவில் அணு விஞ்ஞானியாக இந்த அணு உலைகளில் பணியாற்ற வர இருக்கிறார்கள் மக்களே.”

கூட்டத்திற்குள் திடீரென்று ஒருவித சலசலப்பு. குதூகலப் பூரிப்பு

”உங்கள் பிள்ளைகளுக்கென்று தனி பள்ளிக்கூடம் ,கல்லூரி , அங்காடி அதுவும் உலகத்தரத்தில். இன்னும் இன்னும் ஏராளமான சலுகைகள் உங்களுக்கென்று அரசு அறிவித்து வருகிறது. அனைவருக்கும் காரிய உடைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த உடை அணுக்கதிர் வீச்சிலிருந்து உங்களை காக்கும் . இந்த அரசைப் போல…….”

சிறிது நேரத்தில அமைச்சர் வாகனங்கள் மூச்சுக்காற்றில் கரி பூசிவிட்டு மறைந்து கொண்டன.

ஒரிரு நாட்களுக்குப்பிறகு தூரத்தில் அணு உலைக்கு நேர் தென்கிழக்கே டேங்கர் லாரிகள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து சென்றன. சிறிது நேரத்தில் பூமி கொப்பளங்களாக மணல்மேடுகளும் கல் குவாரிகளும்.

மறுவாரத்தில் இன்னும் அழகாய் ஒரு கட்டிடம் உலகத்தரத்தில பிறந்திருந்தது. இத்துடன் கட்டிட வேலைப்பாடுகள் முடிவுக்கு வந்தவிட்டதாக காது வழிச்செய்தி உலாவியது.

அடுத்தொரு நாளில் அதுவாகவே அந்த புதுக்கட்டிடம் திறந்து கொண்டது. இரு வழிப்போக்கர்கள் பேசிக் கொண்டார்கள்.

”இந்தக் கட்டிடத்தை திறந்து வைக்க அமைச்சர் வரவில்லை?”

” சுடுகாட்டை திறந்து வைக்க அமைச்சர்களெல்லாமா வருவார்கள்?”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *