விடியலைத்தேடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 4,947 
 
 

இன்று ஆஃபீசிலிருந்து சீக்கிரம் கிளம்பி விடலாம் என்று ஒவ்வொரு நாளும் மனது ஆசைப்படும். ஆடிட் நேரங்களில் சொல்லவே வேண்டாம் லெட்ஜரை சரிபார்க்க, டேலி செய்ய என்று நேரம் போவதே தெரியாது. எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு கிளம்ப ஏறத்தாழ நள்ளிரவு நெருங்கிவிடும்.

அன்றும் அப்படித்தான். அலுவலகத்திலிருந்து கிளம்ப இரவு நேரமாகிவிடடது. அலுவலகத்திலிருந்து அம்பத்தூர் ரயில் நிலையம் வரை கார் ஏற்பாடு செய்திருந்தார்கள். .

அதிகாலை அல்லது இரவு ரயில் பயணாங்களில் என்ன ஒரு சௌகரியம் என்றால், ரயிலில் ஜன்னலோர இறுக்கையில் சாய்ந்துகொண்டும், தாராளமாக காலை நீட்டி அமர்ந்து கொள்ளலாம்!. அருகில் பேச்சுத்துணைக்குக் கூட யாரும் இல்லாததால் மனது மெல்ல பழைய சம்பவங்களை அசைபோடத்துவங்கியது.

ரயில் பயணங்களில் என்னால் ‘ரமேஷை’ நினைக்காமல் இருக்க முடிவதில்லை. ரமேஷ், என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்.

எப்போதும் ஏதோவொறு தடிமனான புத்தகமோ அல்லது நாவலோ படித்துக் கொண்டிருப்பான். அவ்வப்போது, கதை, கவிதைகளும் எழுதுவான் புனைப்பெயரில்!. அந்த வயதில் எங்களுக்கு புனைப்பெயர் வைத்துக் கொள்ளக்கூட எங்களுக்குத் தோன்றியதில்லை.

என்ன கேள்வி கேட்டாலும், யார் கேட்டாலும் சளைக்காமல் திரும்ப இடக்காக கேள்வி கேட்கும் ஸ்டைலும் பக்குவமும் எங்களை அவனிடம் கட்டிப்போட்டதென்னவோ உண்மை.

அரசியலிலும் அதிக ஆர்வமுள்ளவன். சென்ட்ரலிலிருந்து ஸ்டேட் மினிஸ்டர்களின் கல்வித்தகுதி முதல் குடும்ப பின்னணி வரை மணிக்கணக்கில் அலசுவான். கண்டிப்பாக வருங்காலத்தில் ஒரு வக்கீலாகவோ, எழுதாளனாகவோ குறைந்த பட்சம் ஒரு அரசியல்வாதியாகவோ வருவானென்று எங்களுக்கு நம்பிக்கையிருந்தது.

பள்ளியில் படிக்கும் நாட்களில் பெரும்பாலும் நான், சுந்தரி, ரமேஷ் மூவரும் ஒன்றாகத்தான் ரயிலில் பள்ளிக்குச் செல்வோம்.

ஒருமுறை அவ்வாறு பயணம் செய்யும் போது ரயிலில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசைக் காட்டி, “இவன்லாம் முறையா பர்மிஷன் வாங்கிருப்பான்ற ”

அவன் காட்டிய நோட்டீசை பார்த்தவறே, “தெரியலடா ரமேஷ்” என்றேன்.

“சான்சே இல்ல, முதல்ல அந்த நோட்டீசை பாரேன். என்னவெல்லாம் சொல்லிருக்கான். சர்க்கரை வியாதிலேர்ந்து, கிட்னி ஃபெயிலியர் வரைக்கும் எந்த நாள் பட்ட வியாதிக்கும் இவன்கிட்ட மருந்து உண்டாம்,” என்று சொல்லி நானும் சுந்தரியும் எவ்வளவு சொல்லியும் கேளாமல் அந்த நோட்டீசை கிழித்து போட்டான்.

மற்றொருமுறை எங்கள் க்லாஸ் லீடர் ஹரீஷ் ஒருமுறை விளையாட்டாக சுந்தரியை கிண்டல் செய்ய, பதிலுக்கு ரமேஷ் அவனை ஹெச் ஃபார் ஹிட்லர், ஏ ஃபார் அர்ரகன்ட், ஆர் ஃபார் ராஸ்கல், ஐ ஃபார் இடியட் என்று அப்போது பிரபலமாக இருந்த விளம்பரத்தை வைத்து கேலி செய்ததை எங்கள் யாராலும் மறந்திருக்க முடியாது. அதிலிருந்து இடம், பொருள், ஏவல் பாராமல் கண்ட இடத்திலெல்லாம் கேலி செய்யும், ரமேஷை பார்த்தாலே ஹரீஷ் ஓடி ஒளிந்து கொள்வான்.

பின்பு தான் தெரிந்தது அதுவும் ஒரு முக்கோண காதல் கதையென்று. அன்றிலிருந்து சுந்தரியிடம் எனக்கு பேச்சு வார்த்தையில்லை, ஒரு விதத்தில் பொறாமை என்றும் சொல்லலாம்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியான அன்று காணாமல் போன ரமேஷை இன்று வரை பார்க்க முடியவில்லை.

‘மானம் ரோஷம் உள்ளவன் ஓடிப்போய்ட்டான், எல்லார்கிட்டயும் அதெல்லாம் எதிர்பாக்கமுடியுமா?’ போன்ற மாற்றாந்தாயின் எண்ணற்ற திட்டுகளையும், அவமானங்களையும் பொருட்படுத்தாமல், அரியர்சை பாஸ் செய்து, தபாலில் பி. காம். முடித்ததெல்லாம் பழங்கதை. இப்போது, அம்பத்தூரிலுள்ள ஒரு பீ. பி. ஒ வில் கை நிறைய சம்பளம்.

நினைத்துக்கொண்டே லேசாக கண்ணயர்ந்த போது, ஜன்னலுக்கு வெளியேயிருந்த முழங்கையில் ஒவ்வொரு தூரலாக விழ, தூக்கம் கலைந்தது. ரயில் மெதுவாக ஏதோவொரு ரயில் நிலையத்தினுள் சென்றுகொண்டிருந்து. தட தடவென ஒருவர் ஓடும் ரயிலில் நன் இருந்த கம்பார்ட்மென்டில் ஏறுவதை பார்த்தபோது பதட்டமானது. உன்னிப்பாக பார்த்தபோது, என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை, அது ரமேஷே தான்!.

தூசி நிறம்பிய பரட்டைத் தலை, பழைய சட்டை, தூக்கி கட்டிய லுங்கி, என பார்ப்பதற்க்கே பரிதாபமாக இருந்தான். லேடிஸ் கம்பார்ட்மென்டில் அவன் ஏறியதைக் கூட மறந்து,”ரமேஷ்” என்று என்னையறியாமல் கத்தி விட்டேன்.

ஒன்றிரண்டு பேர்கள் மட்டுமே இருந்த அந்த கம்பார்ட்மென்டில் உத்தேசமாக குரல் வந்த திசையை நோக்கி நெற்றியை சுருக்கி கேள்விக்குறியுடன் அருகே வந்தவன் என்னைப் பார்த்து,

“நீங்க” என்றான்.

“ஷைலஜாடா, ஷைலூ தெரியல ”

“ஷைலூவா ” என்று சொல்லி கையில் எதையோ மறைத்தான். வழக்கம்போல் இன்னொறு கையில் தடிமனான புத்தகம்.

நான், “உங்கிட்ட நிறைய பேசணும், எப்படி இருக்க ”

“அதான் பாக்கறியே” என்றான் பிடிமானமில்லாமல், சிறிது நேர மௌனத்திற்கு பிறகு கொஞ்சம் சுதாரித்து என்னைப் பார்த்து “அது சரி நீ எப்படியிருக்க, என்ன பண்ணிட்டிருக்க?”

” நல்லாயிருக்கேன், நல்ல வேலை, கை நிறைய சம்பளம். அதை விடு முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு, ஃபெயில் ஆனதுக்காகவா யாராவது வீட்டை விட்டு ஓடிப்போவாங்க, ”

” நான் எங்க ஃபெயில் ஆனேன்?”

என்னுடைய நம்பர் பேப்பரில் இல்லை என்றதும் வேறு எதுவுமே தோன்றாமல் அன்று முழுவதும் அழுதுகொண்டிருந்ததும், அவன் நம்பரைக் கூட பார்க்காமல் ஓடிப்போனவுடன் தேர்ச்சி பெறவில்லை என நானே முடிவு செய்ததும் இப்போது தான் நினைவுக்கு வந்தது, “அப்புறம் எதுக்காக ஓடிப்போன?. போலிஸ்லல்லாம் கம்ப்ளைன்ட் குடுத்தாங்க, பேப்பரில உன் போட்டோ கூட வந்திருந்தது பாக்கலை ”

” பாத்தேன், அடுத்த பக்கத்தில சுந்தரி போட்டோவும் வந்ததே அதை நீ பாக்கலை ? ” என்றான் அதே பழைய நக்கல் மாறாமல்

” அடப்பாவி, கல்யாணமாய்டுச்சா?”

“ம், அப்பவே”

“பசங்க?”

“மூத்தது பொண்ணு”

“எங்க போன? எப்படி போன? ஒண்ணும் விவரமே இல்ல ”

“அதுவா, எக்ஸ்போர்ட் கம்பனில வேலை வாங்கித்தாரேன்னு சொந்தக்காரர் ஒருத்தர் சொன்னார், அவரை நம்பி ரெண்டுபேரும் வீட்ல கொஞ்சம் காசு எடுத்துகிட்டு திருப்பூர் போய்ட்டோம். அடுத்த நாளே ரிஜிஸ்தார் ஆபீசில் கல்யாணம், அப்புறம் ஒண்ணும் சொல்லிக்கிறா மாதிரி இல்ல. நாய் படாத பாடு. நாலு வருஷம் கழிச்சி திரும்ப வந்துட்டோம்.

கூட்டிட்டு வந்த பொண்ணையும் ஒழுங்கா காப்பாத்த முடியல, இப்ப யோசிச்சா ஏன் லவ் பண்ணேன்னு இருக்கு.” என்று விரக்தியாய் தரையைப் பார்த்து அலுத்துக் கொண்டான்.

மழை நன்றாக வலுக்க ஆரம்பித்திருந்தது. நீர்த்துளிகள் என் மீது பட நான் ஜன்னல் இருக்கையை விட்டு நகர்ந்துகொண்டேன். அவனைப் பார்த்து,

“ஆமா இப்ப என்ன பண்ற?” என்று கேட்பதற்குள்,

அவன் அடுத்த ஸ்டேஷனில் தூரத்தில் தெரிந்த செக்கிங்கை பார்த்து பதறி, “கொய்யால, இப்பல்லாம் விடிகாத்தால ‘செக்கிங்’ வர ஆரம்பிச்சிட்டான்” என்று சொல்லி கையில் மறைத்து வைத்திருந்த ஏதோவொறு விளம்பர நோட்டீஸையும், பசையையும் காற்றில் பறக்கவிட்டு வழக்கம் போல் புத்தகத்தை மட்டும் மறக்காமல் லுங்கியில் சொறுகிக்கொண்டு ”சாரி, இன்னொரு நாள் பாக்கலாம்” என்று சொல்லி என் பதிலுக்கு கூட காத்திராமல் ரன்னிங்கில் இறங்கி மாயமானான்.

ரயில் நின்றதும், சரியாக எங்கள் கம்பார்ட்மென்டில் ஏறிய செக்கிங், அங்கிருந்த ஒன்றிரண்டு பேரிடம் சென்று டிக்கெட்டை சரிபார்த்துகொண்டு என் டர்ன் வரும்போது, நான் தன்னிச்சையாக மாத பாஸை எடுத்து காட்ட,

” என்ன ஷைலஜா உங்கிட்டயா டிக்கெட் கேட்டேன் ”

“நீங்க” என்றேன் நான் வியப்புடன்.

“ஹரீஷ் தெரியலை?, ஹெச் ஃபார் ஹிட்லர், இப்ப ஞாபகம் வந்திருக்குமே? ” என்று சொல்லி கண்சிமிட்டினான். “என்ன சுந்தரி புருஷன் ஓடறார் போல? அடிக்கடி பார்ப்பேன், கண்டுக்கறதில்லை, பாவம்! ” என்ற அவன் கண்களில் இரக்கமிருந்தது.

“இத்தனை வருஷமா சுத்தமா கான்டாக்டே இல்ல, மொபைல் நம்பர் கேக்கலாம்னு பாத்தா அதுக்குள்ளாற ஓடிட்டான்.”

“கவலையே படாதே, தினமும் இந்தப் பக்கம் அவன இதே டைம்ல பாக்கலாம். அவன் வீடு கூட இங்கதான் எங்கேயோ மாம்பலத்துல ஒரு எல். ஐ. ஜி. க்வார்டர்ஸ்னு கேள்விப்பட்டேன் அடுத்த முறை பாத்தேன்னா கட்டாயம் வாங்கித்தறேன்” என்றான் கனிவுடன்.

“மனசே சரியில்லை ஹரீஷ், பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு, இதெல்லாம் ஒரு பிழைப்பா? இவனுக்கெல்லாம் ஒரு விடிவுகாலமே பிறக்காதா?”

“நிச்சயமா, பொதுவா ரமேஷ் மாதிரி ஆளுங்ககிட்ட ரிஸ்க் எடுக்குற குணம் ஜாஸ்தி இருக்கும். போதாக்குறைக்கு அரசியல் வேற. கட்டாயம் ஒரு நாள் இல்ல ஒரு நாள் நல்ல லெவலுக்கு வருவான். என் நேரம் சரியில்லைன்னா, இவனே ரெயில்வே மினிஸ்டராக கூட ஆகலாம்.” என்றான் லேசான நக்கலுடன்.

“ரெயில்வே மினிஸ்டரா! சும்மா ஒரு கற்பனைன்னே வச்சுப்போம், முதல்ல உன்னால அதை ஏத்துக்க முடியுமா?” என்று நான் கேலியுடன் கேட்டதை அவன் பொருட்படுத்தவில்லை.

”கட்டாயம், இவனுக்காக இல்லைன்னாலும் சுந்தரிக்காக” என்ற ஹரீஷை என்னால் உணரமுடிந்தது.

ஜன்னலுக்கு வெளியே மேகங்கள் முற்றிலும் கலைந்து, விடிவதற்கான அறிகுறிகள் தெரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *