(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
உலகந்தான் எவ்வளவு விசித்திரமானது? அன்றொரு நாள் உலகத்தையே உலுப்பிய பெரும் புயல், சூறாவளி, மழை.

அதற்கு இரு வாரங்களுக்குப் பின் ஒரு நாள்… கால்களை வேகவைக்கும் கடும் வெயில். அந்த ஊரின் பிரதான வீதியில் நடந்து கொண்டிருந்தேன். அப்பப்பா! என்ன வெப்பம். வீதியில் சனநடமாட்டமே இல்லை. ஏன்? வீதிக்கரைக் குடிசைகளில் கூடச் சனசஞ்சாரமில்லை. எங்கிருந்தோ சில நாய்கள் ஊளையிட்டன. சில காக்கைகள் கரைந்தன. அவைகளும் இவ்வுலகத்தில் பிறந்த உயிர்கள் தாமே….?
நான் நடந்து கொண்டேயிருந்தேன்.
தூரத்தில் இரு உருவங்கள் தெரிந்தன.
யாராக இருக்கலாம்?
எனக்கு அந்த ஊர் அவ்வளவு பழக்கமில்லை. நான் வேறூரைச் சேர்ந்தவன்.
உருவங்கள் என்னை அண்மித்துவிட்டன. உற்றுக் கவனித்தேன்.
‘அட எங்கடை பேரம்பலம் போலையல்லோ கிடக்கு’.
அவர் என்னுடன் இரு வருடங்களுக்கு முன் கொழும்பில் வேலை செய்தவர். இப்போ யாழ்ப்பாணத்தில் வேலை செய்கிறார். அவருடைய சொந்த ஊரும் இதுதான்; ஒருவேளை அவராக இருக்கலாம். ஆனால், இயற்கையிலேயே நோய்காரனாகிய அவரால் வெய்யிலில் திரியமுடியாதே. அதுவும் இந்தக் கொதிக்கும் வெய்யிலில்……!
‘என்ன வரதராசன் பேசாமல் போகிறாய்?” அதே பேரம்பலம் தான்; அதே கனிவு ததும்பும் குரல் தான்.
‘ஓ நீங்களா! என்ன நல்லாய் மெலிஞ்சு கறுத்து இவ்வளவு தூரம் மாறிவிட்டியள்’
‘உலகின் விசித்திர நியதி இதுதான்.’ குரலில் அதே கனிவு; அதே தத்துவம் நிரம்பிய பேச்சு.
‘அதுசரி; அந்தக்காலத்திலை, நான் இயற்கையிலேயே நோய்காரனென்று சொல்லி, ஒரு நிமிஷமும் வெயிலிலை நிற்க மாட்டீங்களே; இப்ப ஏன் வெய்யில் வழிய அலையிறியள்?’
‘எல்லாம் இவனாலை தான்;’ பக்கத்தில் நின்றவனைச் சுட்டிக் காட்டினார்.
அவன் பார்வைக்கு அசல் கமக்காரனாகத் தோற்றமளித்தான். தலைமயிர்கள் சடையாக வளர்ந்திருந்தன. முகத்தில் ஒரு மாதமாகச் ‘சவரக்கத்தி’ படவில்லைப் போலிருந்தது. வயிறு ஒட்டி இருந்தது. அவன் உடை என்ற பேரினில், உடுத்தியிருந்த கந்தலில் ஊரின் செம்பாட்டு மண் அப்படியே படிந்திருந்தது.
‘ஏன் வெய்யிலிலை நிக்கிறியள்; வாருங்கோவன் அந்த மரத்துக்குக் கீழை போவம்’ அவன் கூறினான்.
சில மாதங்களாக வெய்யவனின் கொடுமையால், இலையுதிர்ந்து பரட்டையாக நின்ற மரஞ்செடிகள், இரு வாரத்திற்கு முன் பெய்த பெருமழையால், சிறிது தளிர்த்திருந்தன.
ஆனால் அந்த மரம், அவன் சுட்டிக் காட்டிய அந்த மரம் அதற்கு விதிவிலக்குப்போலும். அது ஒரு கல்மேட்டில் வளர்ந்திருந்தது. அதற்கு மழையைப் பூரணமாக அனுபவிக்க வாய்ப்பில்லை. அதனால் அது பழைய ‘பரட்டையாகவே’ இருந்தது.
நிழலற்ற அம்மரத்தின் கீழ் நிழலுக்காக அமர்ந்தோம்.
உலகம் விசித்திரமானது தான்……!
அவன் தொடர்ந்தான். நான் ஒரு கமக்காரன். எனக்கு சொந்தமாய் நிலம் புலம் இல்லை. வருசம் நூறு ரூபாய் குத்தகைக்குத் தான் நிலம் எடுத்துச் செய்யிறன். ஆயிரம் கண்டுக்கும் வாழை….. அத்தனையும்…. அவன் விக்கினான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
பேரம்பலத்தின் முகத்தைப் பார்த்தேன். அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் கண்களிலிருந்தும் நீர் தழும்புவதைக் கண்டேன்.
விம்மலிடையே அவன் தொடர்ந்தான். ‘மழை, வெய்யில் எண்டு பாராது பாடுபட்டேன். கடன்பட்டு உரம், வேண்டிப்போட்டேன். அத்தனையும் பூவும் பிஞ்சுமாய் முறிந்துவிட்டதய்யா. அவன் விக்கி விக்கி அழுதான்.
பேரம்பலத்தின் கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்தது. ஏன் கல்நெஞ்சனான நான்கூடக் கண்ணீர் விட்டேன்.
உலகம் உண்மையில் விசித்திரமானதுதான்…..!
அங்கு நிலவிய அமைதியைக் கிழித்துக் கொண்டு பேரம்பலம் பேசினார்.
‘வரதா! புயலினால் பாதிக்கப்பட்டோருக்கு கிராமசேவகர் மூலம் அரசாங்கம் உதவி அளிக்குதாம். எங்கள் கிராமம் தனிக் கிராமமில்லை.எங்களூருக்கு ஒரு தனிக் கிராமசேவகர் இல்லை. அயலூர் கிராமசேவகர் தான் எங்களுக்கும், ஆனால் அதில் எத்தனை பாகுபாடுகள்; எங்கள் கிராமம் தனிக் கிராமமானால்……? எங்களூரின் ஏழைக் கமக்கார மக்களுக்கு விமோசனம். அந்த முயற்சியில் ஈடுபட்டுத்தான் நானும் இவனும் அலைகிறோம்.
வீதியில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவனின் கார் செல்வதைக் கண்டேன். கைதட்டி நிறுத்தினேன். ‘அப்பவாறேன்’ என்று கூறிவிட்டு பதிலைக்கூட எதிர்பாராமல் சென்று காரிலேறினேன்.
கார் சிறிதுதூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தேன். அவர்கள் இருவரும் பழையபடி, அதே கொதிக்கும் வெய்யிலில் நடந்து கொண்டிருந்தார்கள்.
நான் காரில் செல்கிறேன். அவர்கள் கொதிக்கும் வெய்யிலில் நடக்கின்றார்கள். நாங்கள் உத்தியோகம் பார்த்து உழைக்கிறோம். உல்லாசமாய் வாழ்கின்றோம். எங்கள் உல்லாச வாழ்வின், அடி அத்திவாரமாக மிளிரும் ஏழை விவசாயிகள் அன்றாட வாழ்வுக்கே திண்டாடுகின்றார்கள். நாங்கள் அவர்களைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை. ஆனால் அதற்கும் விதிவிலக்கு…..?
எங்களைப் போல் உல்லாசமாக வாழ்வு வாழவேண்டிய பேரம்பலம், தன் சுகவாழ்வைத் துறந்து, இயற்கையாகவே நோய் உள்ள தனது உடம்பை மறந்து, ஏழைகளுக்காக வெய்யில் எல்லாம் அலைகின்றார்.
உண்மையில் உலகம் விசித்திரமானதுதான்!
அன்று பின்னேரம் எனக்கும் என் அயலவர் ஒருவருக்கும், ஒரு வேலியைக் குறித்து வாக்குவாதம். காரியாதிகாரியிடம் முறையிடலாமெனச் சென்றேன்.
அங்கே, வெளி வராந்தாவில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளின் உடல் மெலிந்திருந்தது. கொடிய நோயால் தாக்கப்பட்டவள் போலக் காணப்பட்டாள். அவளது முகம் எனக்குப் பழக்கமானது போல இருந்தது.
“என்ன வரதா எப்பிடிச் சுகம் சுவாத்தியம்?’ அவள் வினாவினாள். உற்றுப் பார்த்தேன். பேரம்பலத்தின் மனைவியார். கொழும்பில் பழகின பழக்கம்; நான் அவாவை அக்காவென அழைப்பது வழக்கம்.
‘என்ன ஆளைத்தெரியேல்லையோ?’ மிக ஈனமான மெல்லிய குரலில் அவள் கேட்டாள்.
‘இல்லை அக்கா. ஏன் இப்பிடி இளைத்திருக்கிறியள். இங்கை ஏன் வந்தனீங்கள். என்னைப் போல, உங்களுக்கும் வேலிகீலிப் பிசகாய் இருக்காது. உங்கடை ஊரிலையல்லே ஒரு சிறந்த பஞ்சாயம் இருக்குது.’
‘அப்பிடிப் பிசகொண்டும் இல்லையடா தம்பி! நானும் அவரும் ஆஸ்பத்திரிக்கெண்டு வந்தனாங்கள். போறவழியிலை இங்கை,ஏதோ தனிக்கிராம அலுவலாம்; கதைச்சுப் போட்டுப் போவோம் என்றார்? உங்கை உள்ளுக்கை ஏதோ கதைச்சுக் கொண்டிருக்கின்றார். ‘அவளின் சுருதி வரவரக் குறைந்தது. அவள் கண்கள் இமைக்குள் செருகின. அவள் அவ்வாசனத்திலேயே மயங்கிச் சரிந்தாள்.
உள்ளே ஓடினேன். பேரம்பலத்திடம் சொன்னேன்.
‘அவவுக்கு உப்பிடித்தான்; இன்னும் இரண்டொரு நிமிஷத்திலை உணர்வு வரும். இது அவவுக்கு சர்வசாதாரணம்; அவர் அலட்சியமாகக் கூறினார்.
நான் ஏதேதோ பாடுபட்டு, வீதியில் போன ஒரு காரை மறித்து, அதில் அவவையும் அவரையும் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினேன்.
‘எட, இப்படியும் மனிசர் உண்டா? மனைவி மயங்கி விழ தனிக்கிராமம், தனிக்கிராமமென்று தலையை அடிக்கிறாரே; எனக்குள் நான் எண்ணினேன்.
உலகம் விசித்திரமானது தான்!
காலம் தன் கோலங்களைக் காட்டி ஓடிக் கொண்டே யிருந்தது.
ஒரு நாள்……?
பத்திரிகையைத் திறந்தேன். ‘பேரூரைச் சேர்ந்தவரும் அதேயூர் விவேகானந்தாக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றுகின்றவருமான திருவாளர் பேரம்பலம் அவர்கள் காலமாகிவிட்டார்கள். அன்னாரின் பூதவுடல், அவ்வூர் மயானத்…
மேலும் தொடர்ந்து என்னால் படிக்கமுடியவில்லை. கண்களில் நீர் திரையிட்டது.
மரண ஊர்வலத்தில் நானும் ஒருவனாகச் சென்றேன்.
ஒருவர் எனக்கருகிலிருந்த வேறொருவரிடம் கூறினார்.
‘ஒரு மாதமாய் படுக்கையிலை கிடந்தார். ஒவ்வொரு நாளும் தனக்குப் பக்கத்திலை இருந்து ‘பேப்பர்’ படிச்சுக் காட்டச் சொல்லி எனக்குச் சொன்னார். நானும் பெரிய இடத்து ஆக்களெண்டு போய் படிக்கிறது. நேற்றும், எங்கடை கிராமம் தனிக்கிராமமாகி விட்டது எண்டு நான் பேப்பரிலை வாசிக்கேக்கை தான் உவற்ரை உயிர் பிரிஞ்சது. சாகிற காலத்திலே கூட ‘பேப்பர் பைத்தியம்’.
இவர்கள் எங்கே உண்மையை அறியப் போகிறார்களென்று எண்ணி, நான் எனக்குள் சிரித்தேன்.
பேசிய குரல் எனக்குப் பழக்கமானதாக இருந்தது. உற்றுப் பார்த்தேன். அன்றொரு நாள், கொதிக்கும் வெய்யிலில் பேரம்பலத்தோடை திரிந்த அதே கமக்காறன்.
அட, இவனா அவரைப் பைத்தியமெண்டு சொன்னது…..?
உண்மையில் உலகம் விசித்திரமானது தான்.
– விவேகி (1960களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ்), 01-08-1968
– உதிரிகளும்…(சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: ஆவணி 2006, புதிய தரிசனம் வெளியீடு.