வாடகை சைக்கிளும் எஸ்.டி.டி பூத்தும் இன்ன பிறவும்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 13,149 
 
 

மாமா ஒருவரை சமீபத்தில் சொந்த ஊர் திருமணம் ஒன்றில் சந்தித்தேன். பல ஆண்டுகள் ஊர்ப்பக்கம் வராமல் இருந்து இடைவெளிவிட்டு வந்திருக்கிறார். அவர் முகம் மிரண்டுபோய் இருந்தது. ஊரில் அவர் மிரளும்படியான சம்பவம் எதுவும் நடக்கவில்லை. நாங்கள் இருந்தது கல்யாண மண்டபத்தில். பெண்கள், வீட்டில் இருந்த அத்தனை நகைகளையும் பூட்டி, வேகாத வெயிலில் பட்டுப்புடவை கட்டி, வியர்வையில் முகப் பவுடர் பூச்சு திரித்திரியாக இருந்ததும், அவரது பழைய நண்பர்களான ஆண்கள் பல்வேறு சைஸ் தொந்திகளில் செயின்கள் ஊஞ்சலாட, அவரை வாரி அணைத்ததும் அவர் கொண்ட பீதிக்குக் காரணமோ என சம்சயித்து, அவரை தனியே மடக்கி காரணம் கேட்டேன்.

”என்ன மாமா ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றதும் பீடிகை ஏதுமின்றி சொன்னார். ”மாப்ளே, கோடிக்கணக்கான வருஷமா இந்த உலகமும் நம்ம ஊரும் மாறிக்கிட்டுத்தான் இருக்கு. ஆனா, இந்த இருவது வருஷத்துல நம்ம ஊரு மாறி இருக்கதைப் பாத்தா பயமா இருக்கு’ என்றார். எனக்கும் அந்தக் கருத்து இருந்ததால் தலையசைத்து ஆமோதித்தேன். அவர் தொடர்ந்தார்.

”ஒரே ஒரு டவுன்பஸ் நம்ம ஊருக்கு வரும். கொஞ்ச பேரு ஏறி தேனிக்குப் போவோம். வேலை இருக்கவன் மட்டும்தான் போவோம். இப்ப என்னடான்னா, ஷேர் ஆட்டோ மட்டும் இருவது நிக்குது. காலையில ஏழெட்டு காலேஜ், ஸ்கூல் பஸ்ஸு வருது. எவனும் தோட்டத்துக்கு நடந்து போக மாட்டேங்கிறான். பைக்லதான் போறான். சாயங்காலமானதும் பைபாஸ்ல வாக்கிங் போறான். என்னா கொடுமை… வக்காளி, தனியா எதுக்கு நீ நடக்கிறே? தோட்டத்துக்கு நடந்து போகவேண்டியதுதானே? அப்புறம் என்னத்துக்கு மாப்ளே இந்த ஊருக்கு இத்தனை பஸ்ஸு? எப்பப் பாத்தாலும் ஹாரன் சத்தம் தாங்க முடியலை.’

இதே மாமாதான் ஊருக்கு பஸ் வசதி போதாது என இளைஞராக இருந்தபோது பி.ஆர்.சி மேலாளருக்கு பலமுறை பெட்டிஷன் போட்டவர்.

மாமாவின் பேச்சு நிறையவே யோசிக்கவைத்தது. கடந்த 30 ஆண்டுகளைக் கவனிக்கும் யாருக்கும் மிரட்சி தரக்கூடிய வேகத்தில்தான் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

80-களில் கிராமங்களின் அடையாளமாக இருந்தது சைக்கிள். கிராம இளைஞர்களின் கூடும் இடங்களாக அமைந்திருந்தவை டெய்லர் கடைகளும் வாடகை சைக்கிள் கடைகளும்தான். டீக்கடைகளிலும் சலூன்களிலும் சற்றே நடுத்தர வயதினர் கூடி அரசியலை அலச, முதல் இரு கடைகளிலும் இளைஞர்களின் சப்ஜெக்ட்கள் ஓடும். மூன்று சைக்கிள்கள்தான் இருந்தன. ‘அட்லஸ்’, ‘ஹெர்க்குலிஸ்’ மற்றும் ‘ராலே.’ அதில் ராலே சைக்கிள் வைத்திருப்பவன், இன்று பி.எம்.டபிள்யூ., ஆடி கார்கள் வைத்திருப்பவன்போல மனதில் இறும்பூது எய்தியிருக்கக்கூடும்.

ஒருநாள் சைக்கிள் கடையில் இருந்த என்னை விறுவிறுவென ஓடிய கூட்டம் ஒன்று ஈர்க்க, டவுசரைப் பிடித்துக்கொண்டு பின்னால் ஓடினேன். ஒரு மாமாவின் வீட்டில், கிடைமட்டத்தில் மிலிட்டரி ரிட்டர்ன் ஒருவர் கொண்டுவந்திருந்த டேப்ரிக்கார்டர் ஒன்று படுக்க வைக்கப்பட்டிருந்தது. அதில் பேசினால் குரல் பதிவாகி திரும்ப ஒலிக்கும் என்ற தகவல் தீ போல் பரவி, பெண்கள் எல்லாம் கைக் குழந்தைகளோடு வந்துவிட்டார்கள். யார் பேசுவது என ஒரு சிறிய குழப்பம் நிலவ, எங்கள் ஊரில் அதிகம் புழங்கும் மொழியான தெலுங்கில், ‘ஏய் நீ மாட்லாடு… நுவ்வு மாட்லாடு’ என ஒருவரை ஒருவர் கை காட்ட, பெரும்பாலோர் பேசினால், ஏதாவது சம்பவமாகிவிடும் எனும் அச்சத்தில் அமைதியாக இருக்க, நாங்கள் மிகவும் வீரமான மனிதர் பராக்கிரமசாலி என ஒருவரை வரித்திருந்தோம். அவர் பெயர் ‘சிங்கம்’ என்பது உபரித் தகவல். (நிஜமாகவே நிஜப் பெயர்). அந்த சிங்கா மாமாதான் வீரத்துடன் பேசினார். இன்னும் நினைவிருக்கிறது… தொண்டையைச் செருமிக்கொண்டு, ‘இன்று நம் நாட்டிலேய்ய்ய்ய்… மோசமான சூழ்நிலைய்ய்ய்ய்! யார் யாரோ ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள். மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த நிலை மாற, உதயசூரியன் சின்னத்திலேய்ய்ய்ய்ய்…’ என்றவுடன், காங்கிரஸ்காரர் ஒருவர் அவரைத் திட்ட, அதுவும் பதிவாகிவிட்டது. அடுத்து ப்ளே பண்ணிப் பார்த்ததில் திட்டியதும் பதிவாகி இருக்க, ‘இது என்னாடா வெளங்காத மிசினா இருக்கு. வஞ்சதெல்லாம் கேக்குது?’ என, ‘குசு விட்டாலும் திருப்பி விடும்டியோவ்’ என்றார் டேப்ரிக்கார்டரைக் கொண்டுவந்தவர்.

அப்போது தெரியாது… இன்னும் சில வருடங்களில் ஊருக்கு ரெண்டு பேர் துபாய்க்கு வேலைக்காகப் போகப் போகிறார்கள். திரும்பி வரும்போது, மிலிட்டரிக்காரன் ரம்மோடு வருவதுபோல, நேஷனல் பானசோனிக் டூ இன் ஒன் எனும் டேப்ரிக்கார்டர்களுடன் வரப்போகிறார்கள் என்று. அந்தக் காலமும் வந்தது.

இளையராஜா இசையில் முடிசூடிக் கொண்டிருக்க, இசைத்தட்டுகளின் இடத்தை கேசட்கள் பிடித்துக்கொண்டன. டிடிகே, சோனி, ஃபைவ் ஸ்டார் கேசட்கள் எல்லா ஊர்களிலும் கிடைத்தன. மேற்படி கேசட்களையும் ரெனால்ட்ஸ் பேனாவையும் ஃபாரின்காரன் செய்து நம் ஊரில் விற்க, மேற்படி பேனாவை கேசட்களின் உள்ளே விட்டு அதனை ஃபார்வேர்டு செய்ய முடியும் என நாம் கண்டுபிடித்தோம். இதன் வழியே ஒரு பொருளின் அதிகபட்சப் பயன்பாட்டை எப்படி நுகர்வது என்பதை அறிவதில், நமக்கு நிகர் நாமே என்பதை நிரூபித்தோம் (இன்று ஃப்ளெக்ஸ் போர்டுகள் வீட்டுக் கூரையாகவும், தெர்மகோல் அட்டைகள் படகுகளாகவும் குடிசைப் பகுதிகளில் பயன்படுத்தப்படுவது இதன் தொடர்ச்சியே!)

இப்போது இளைஞர்கள் மத்தியில் புதிய வேலைவாய்ப்புக்கான தொழிலாக ரிக்கார்டிங் சென்டர்கள் உருவாகின. விவசாயிக்கு மகனாகப் பிறந்து ப்ளஸ் டூவுக்குப் பிறகு படிக்க முடியாத இளைஞர்கள், பேன்ட் போட்டுப் பழகிவிட்டதால் அவர்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே, அவர்கள் டெய்லர் ஆனார்கள்; திருப்பூர் போனார்கள் அல்லது மிலிட்டரியில் சேர்ந்தார்கள் அல்லது ரிக்கார்டிங் சென்டர் வைத்தார்கள். மற்ற வேலைகளைவிட ரிக்கார்டிங் சென்டர் வைப்பது சுவாரஸ்யமானது. இளையராஜாவின் பாடல்களைக் கேட்பதே தொழிலாக இருந்து கொஞ்சம் வருமானமும் வந்தால், அது பேரின்பம் அல்லவா? தனியார் பஸ்களில் டேப்ரிக்கார்டர்கள் பொருத்தப்பட்டன. எங்கள் தேனியில் இருந்து மதுரை செல்லும் இரண்டு மணி நேரப் பயணத்துக்கு அரசு பஸ்ஸைப் புறக்கணித்து, பாட்டு ஒலிக்கும் தனியார் பஸ்ஸில் ஏறக் காத்திருக்கும் கூட்டத்தை தினமும் பார்ப்போம். தனியார் பேருந்தில் ஏறி, நாங்கள் பதிந்திருக்கும் பிரத்யேக கேசட்டை பஸ் கண்டக்டரிடம் கொடுத்துப் போடச் சொல்லி, ‘புதிய பூவிது பூத்தது…’ எனப் பாடல் பின்னணியில் ஒலிக்க, சுடிதார் அறிமுகம் ஆகாத காலகட்டத்தின் தாவணி இளவரசிகளைத் தரிசித்தவாறே உற்சாகமாக கல்லூரிக்குப் பயணித்தோம். டீக்கடைகளின் வெளியே சில்வர் டிரம்களில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து இன்ஃபெக்‌ஷன் பயமின்றி குடித்தோம். தண்ணீரை கொஞ்ச நாள் கழித்து பாட்டிலில் அடைத்து விற்கப்போகிறார்கள் என யாரேனும் சொல்லியிருந்தால், அவர்களை கேனையன் எனச் சொல்லக்கூடிய கேனையர்களாகத்தான் இருந்தோம். நிஜமான மாம்பழங்கள், நிஜமான நெல்லிக்காய், கொடுக்காப்புளி, நாவல்பழம், கொய்யாக்காய், கடலை மிட்டாய், தேன் மிட்டாய் என எளிய தின்பண்டங்களைத் தின்று ஒரே கிரிக்கெட் பேட்டை வைத்துக்கொண்டு ஊரே விளையாடினோம்.

குடிகாரர்கள் மிகக் குறைவு. ‘சைடுடிஷ்’ என்ற வார்த்தை இல்லை. இருந்திருந்தாலும் அர்த்தம் வேறு. கல்லூரி ஆண்டு விழாவில் நான்கைந்து மாணவர்கள்தான் பீர் குடித்துவிட்டு பயத்துடன் லேட்டாக வீட்டுக்குப் போனார்கள். எல்லோருக்கும் தோன்றினாலும் சிலரால்தான் காதலிக்கவும் காதலியுடன் பேசவும் முடிந்தது. காதல் கவித்துவம் நிறைந்ததாக இருந்தது. கால் கொலுசும் கைக்குட்டையும், பேருந்தின் இருக்கையில் உதிர்ந்திருக்கும் ஒற்றை மல்லிகையும், எங்களைக் கவிஞர்களாக்கின. பேருந்தின் ஜன்னலோர இருக்கைப் பெண்களின் சிறுபார்வையும் மென்முறுவலும், ஒரு வாழ்நாளின் மொத்த சந்தோஷத்தையும் எங்களுக்குத் தந்தன. கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா வண்டிகளில் கையசைத்துப்போன சேச்சிகள், எங்கள் கற்பனையைச் சிறகடிக்கவைத்தார்கள். ஒற்றை விரல் தீண்டல் என்பதே அரும் நிகழ்வாகவும் பெரு மகிழ்வாகவும் இருந்தது. அந்த றிறீணீtஷீஸீவீநீ காதல், இன்று ப்ளாஸ்டிக் காதலாக மாறிவிட்டது. காதலில் இருந்த ரொமான்டிஸத்தையும், அப்பாவித் தனத்தையும், கற்பனையையும் நாம் இழந்தது பேரிழப்பு என்றே தோன்றுகிறது.

காதலைச் சொல்லும்போது கடிதங்களையும் தவிர்க்க முடியாது. எத்தனை கடிதங்கள் காதலிகளுக்கும் நண்பர்களுக்கும் எழுதப்பட்டன. ஒவ்வொரு கடிதமும் தாங்கி நின்ற அழுகை, சந்தோஷம், வேதனை, எதிர்பார்ப்புகள் என கடிதங்கள் ஒரு தனி உணர்ச்சி உலகமாக இருந்தன. பிள்ளையை வெளியூர் அனுப்பிவைத்துவிட்டு, வீட்டில் இருந்து அப்பா எழுதி அனுப்பும் நீல நிற இன்லேண்டு கவரில், அவர் எழுதி முடித்த பின் கிடைத்த சிறு இடைவெளியில் ‘உடம்பைப் பாத்துக்கப்பா, நேரத்துக்குச் சாப்பிடு’ என அம்மா கிறுக்கிய எழுத்துக்கள் தந்த உணர்வலைகளை எப்படி வர்ணிக்க? கடிதங்களைக் கொண்டுவரும் போஸ்ட்மேனுக்கும் நமக்குமான ஓர் உறவு தனித்துவமான ஒன்றாக அல்லவா இருந்தது? கடிதங்கள்போலவே வாழ்த்து அட்டைகளும்!

வாழ்த்து அட்டைகளை ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாகத் தேர்வுசெய்து ஸ்கெட்ச் பென்னில் விலாசம் எழுதி அனுப்பி பதில் அட்டைகளுக்காகக் காத்திருந்தது… அந்தக் காலகட்டத்தின் ஒவ்வொரு செயலிலும் அனுபவத்திலும் நிதானம் இருந்தது. மகிழ்ச்சியை துளித்துளியாக அனுபவிக்க முடிந்தது. எஸ்.எம்.எஸ்-களிலும் வாட்ஸ்அப்பிலும் இன்று பகிரப்படும் எந்த விஷயத்திலும் நிதானம் இல்லை. இயந்திரத்தனமாக எல்லாமே விநாடிகளில் முடிந்துவிடுகின்றன.

84-ம் ஆண்டுதான் எங்கள் ஊர் பஞ்சாயத்து போர்டில் கறுப்பு-வெள்ளை டி.வி வந்தது. எங்கள் ஊருக்கு டி.வி வந்த கொஞ்ச நாட்களிலேயே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். முதல்முறையாக ஒரு தலைவரின் மரணத்தை காட்சி ரூபமாகப் பார்க்கிற வாய்ப்பு. எனவே, அது ஏற்படுத்திய உளவியல் பாதிப்பு சாதாரணமானது அல்ல. ஊரே கூடி டி.வி முன்னால் அழுதது. பந்தல் போட்டு போட்டோவை வைத்து பெண்கள் முறை வைத்துக்கொண்டு ஒப்பாரி பாடினர். ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். அவர் இறந்தபோது ராகுலும் பிரியங்காவும் இளம்பிராயத்தினராகக் கண்கலங்கி, அவரது சிதை அருகே நின்றிருந்த காட்சி, காண்போர் மனதை உருக்கியது. அதன் விளைவு அடுத்து வந்த தேர்தலில் தெரிந்தது. இப்படி கறுப்பு-வெள்ளை டி.வி ஏற்படுத்திய அழுத்தமான பாதிப்புகள் நிறைய. மாலை நேரங்கள் டி.வி-யால் ஆக்கிரமிக்கப்பட்டன. கிராமத்து இளைஞர்கள் ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டியை, காலை 3 மணி முதல் கண் விழித்துப் பார்த்தோம். கால் பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றபோது மாரடோனா எங்கள் ஹீரோ ஆனார். ப்ரணாய் ராய் வழங்கிய ‘வேர்ல்டு திஸ் வீக்’கும், சித்தார்த்த பாசுவின் க்விஸ் புரோகிராமும் (சித்தார்த்த பாசு, சமீபத்தில் வெளியான ’36 வயதினிலே’ படத்தில் ஜனாதிபதியாக வந்தவர்.) தவறாமல் பார்க்கப்பட்டன. ஊரின் பெரும்பாலானோர் ஒரே இடத்தில் கூடிக் கவனிக்கிற சமூக நிகழ்வாக ஆரம்பகால டி.வி இருந்தது. டி.வி-யில் காட்டப்படுகிற ஒவ்வொரு விஷயமும் அங்கேயே பெரியவர்களாலும் இளைஞர்களாலும் விவாதிக்கப்பட்டது. இந்தக் காலகட்டம் வரை எல்லாம் நிதானமாகத்தான் இருந்தன.

90-களுக்குப் பிறகு நிகழ்ந்ததுதான் அசுர மாற்றம். அதன் தடயங்கள் ஆரம்பத்தில் லேசாகத்தான் தெரிந்தன. ‘கூடை ஆன்டெனாக்கள் வழியே வீட்டுக்கு வரப்போகும் அந்நியத் தொலைக்காட்சிகள் நம் கலாசாரத்தைப் பாதிக்கும்’ என ‘சுபமங்களா’வில் ஒரு கட்டுரை வந்த நினைவு. டங்கல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது என கம்யூனிஸ்ட்கள் பிரசாரம் செய்தார்கள். புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்தால், தண்ணீர் காசுக்கு விற்கப்படும். கழிப்பிடங்களிலும் சாலைகளிலும் கட்டணம் வசூலிப்பார்கள் என, தெருமுனை நாடகங்களும் பிரசாரங்களும் நடந்தன. ‘எலெக்ட்ரானிக்ஸில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்து, தகவல்தொடர்பில் பெரும் புரட்சி நடக்கப்போகிறது’ என சுஜாதா எழுதினார். இவை அனைத்தும் நம்ப இயலாத வேகத்தில் நிகழ்ந்தன.

மாற்றத்தின் தொடக்கமாக லேண்ட்லைன் போன்கள் கிடைப்பது சுலபமானது. ஊரில் ஒரு போன் இருந்தாலே அதிசயம் எனும் நிலை மாறி ஏகப்பட்ட போன்கள். அதைத் தொடர்ந்து எஸ்.டி.டி பூத்கள் ஒரு தொழிலாக உருவெடுத்தன. 80-களில் ரிக்கார்டிங் சென்டர் வைத்தவர்களின் வாரிசுகள் இப்போது டவுன்களில் எஸ்.டி.டி பூத் வைத்தார்கள். மொபைல்போன்களின் பெருக்கம் எஸ்.டி.டி பூத்களை இல்லாமல் செய்தது. கம்ப்யூட்டர் ஆண்ட்ராய்டு போன்களின் பெருக்கம் இப்போது இன்டர்நெட் சென்டர்களை காலி செய்துகொண்டிருக்கிறது. ப்ளஸ் டூ வரை மட்டுமே படிக்க முடிந்த, வேலை கிடைக்காத இளைஞர்கள் செய்வதற்கு, தொழில்கள் இல்லை. அவர்கள் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்திருக்கிறார்கள். பைரேட்டட் டி.வி.டி விற்கிறார்கள். மார்க்கெட்டிங் வேலையில் சேர்ந்து களைப்புடன் அலைகிறார்கள். ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக மாறி, தங்கள் தந்தையர் நிலங்களை விற்று கமிஷன் வாங்குகிறார்கள். கணிசமானோர் டாஸ்மாக்கில் கிடக்கிறார்கள். சாதி அமைப்புகளில் சேர்ந்து தங்களுக்கான அடையாளத்தைத் தேடுகிறார்கள். சரக்கடித்துவிட்டு அலம்பல் செய்கிறார்கள். கிராமப் பகுதிக்குச் செல்லும்போதெல்லாம் நான் கவனித்துக் கவலையடைகிற விஷயம்… இவர்களுக்கான வேலை எது? இவ்வளவு பெரிய இளைஞர் சக்தியைச் சரியான முறையில் ஒருங்கிணைக்காவிட்டால், அது பெரிய சிக்கலில்தான் முடியும்.

டெக்னாலஜி ஒன்று நமக்கு அறிமுகமாகி, அனைவரையும் அடைந்து அது பழகுவதற்குள் மற்றொன்று வந்து முந்தையதைப் பழசாக்கிவிடுகிறது. பேஜர் என ஒன்று இருந்ததே, ஞாபகம் வருகிறதா? அதிகம் இல்லை. 98-ம் ஆண்டு வாக்கில் அறிமுகமாகி அல்பாயுசில் போய்ச்சேர்ந்த ஒரு சாதனம் அது. என் அறிவுக்கு எட்டிய வரையில் மிகக் கொஞ்ச நாள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த கருவி பேஜர்தான் என நினைக்கிறேன். பேஜரை ஒழித்த மொபைலின் வளர்ச்சி அசுரத்தனமானது. கறுப்பு-வெள்ளை செங்கலாக இருந்த மொபைல், சடசடவென மாறி இப்போது ஆண்ட்ராய்டு அவதாரம் எடுத்திருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கிறது. அலாரம் டைம்பீஸ், கால்குலேட்டர், டார்ச், கேமரா… எல்லாம் எதுக்கு தனியா என எல்லாவற்றையும் மொபைலில் அடக்கிவிட்டு, சீக்கிரமே சார்ஜ் போய்விடுகிறது என புதிதாக பவர் பேங்க் எனும் கருவியைத் தூக்கித் திரிகிறார்கள்.

மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருப்பதுதான். நினைவுகளில் கடந்தகாலம் பொற்காலமாகவே உணரப்படுவது மனித இயல்பு எனக் கருதிக்கொண்டாலும், மனது உறுத்தத்தான் செய்கிறது. என் தந்தை, நான் சிறுவனாக இருக்கும்போது என்னிடம் என் ஊர் ஓடையைக் காட்டி ‘இதுல வருஷத்துல பத்து மாசம் தண்ணி ஓடும். இப்ப மழை பேஞ்சாத்தான் தண்ணி வருது. இப்ப வெறும் மணலாக் கிடக்கு’ எனப் பெருமூச்சுடன் சொன்னார். இப்போது என் ஊர் ஓடையில் மணலே இல்லை. பிளாஸ்டிக் குப்பைகளோடு புதர் மண்டிக் கிடக்கிறது. ஓடையே இல்லாமல்போகும் காலமும் தொலைவில் இல்லை. ஓடை மறைந்துபோகும். ஆனால், பெய்யும் மழை நீர், தனக்கான ஓடையை உருவாக்கிக்கொள்ளாமல்போகுமா என்ன? அந்த நம்பிக்கையோடுதான் வாழ வேண்டியிருக்கிறது!

– ஆகஸ்ட் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *