எதைப்பார்த்தாலும் மேம்போக்காக நுனிப்புல் மேயும் மாடு போல இருப்பது அகனுக்கு பிடிக்காது. ஆழ்ந்து பூரணமாக ஆராய்ந்து தெரிந்து, தெளிவு பெறும் போக்கு அவனுக்கு சிறுவயதிலிருந்தே கை வந்த கலை.
யாரைப்பார்த்தாலும் இமைக்காமல் பார்ப்பதைக்காண்பவர்கள் “இவனென்ன விழுங்குவது போல பார்க்கிறான்” என புதிதாக, இதுவரை பழகிடாத பெண்கள் சந்தேகப்படுவர், சங்கடப்படுவர். அழகான பெண்ணைப்பார்த்து விட்டால் ‘தான் இவ்வளவு பெரிய அழகியா?’ என சம்மந்தப்பட்ட பெண்ணே வியக்கும் அளவுக்கு தயங்காமல் அப்பெண்ணிடமே வர்ணித்து பேசுபவனாக இருந்தான்.
நன்கு பழகிய இளம் பெண்கள் இவனிடம் வந்து ” இந்த டிரஸ் எனக்கு நல்லாருக்கா? இந்த மாப்பிள்ளை எனக்கு பார்த்திருக்கிறாங்க. பொருத்தமானவரா இருப்பாரா? ” என போட்டோவைக்காட்டி கேட்கும் அளவுக்கு அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்திய நல்லவனாக, திறமை மிக்கவனாக வலம் வந்தான்.
சுற்றுலா செல்லும் போது கூட பேருந்தில் இருக்கும் மற்றவர்கள் உடனிருப்போரிடம் பேசிக்கொண்டோ, திண்பண்டங்களை வாயில் போட்டு நொறுக்கிக்கொண்டோ, உறங்கிக்கொண்டோ நேரத்தைக்கழிக்கும் போது அகன் மட்டும் வெளியில் பார்வையை வீசி மரங்களையும், செடிகளையும், பூக்களையும், மலைகளையும், கரடுகளையும், நதிகளையும், நீரோடைகளையும், குளங்களையும், உயர்ந்த கட்டிடங்களையும், மாற்று கலாச்சாரம் கொண்ட மனிதர்களையும்பார்த்து வியப்பது அவனை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டியது.
ஒரு ஹோட்டலில் உணவருந்தி விட்டு வெளியே வந்து வேடிக்கை பார்த்தவன் ஓர் அழகிய பெண்ணைப்பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றான். இது வரை இது போன்ற அழகிய பெண்ணை அவன் பார்த்திருக்கவில்லை. அவளோ தன் குழந்தையை இடுப்பில் உள்ள சேலையில் தொட்டிலாகக்கட்டி பிச்சையெடுத்து வாழ்பவளாக இருந்தாள்.
ஒரு முடி கூட வெண்மையாக இல்லை. கரிய கூந்தல். நெற்றியோ உயரம். நெட்டையாகவும் இல்லை. குட்டையாகவும் இல்லை. மெலிந்தும் இல்லை. பருமனாகவும் இல்லை. வலிந்து வந்து வாலிபர்கள் பேச நினைக்கும் சிலை போன்ற உருவம். ‘பேசாமல் இவள் சினிமா நடிகையாகியிருக்கலாம். பாவம் வறுமை அவளை பிச்சையெடுக்க வைத்து விட்டது’ என வருந்தியவாறு தன்னிடமிருந்த ஐநூறு ரூபாய் நோட்டை அவளுக்கு பிச்சையாக….இல்லை , அன்பளிப்பாகக்கொடுத்தான். அவள் குனிந்து அவனது பாதங்களைத்தொட்டு வணங்கினாள்.
இவனும் அவளது கைகளைப்பற்றி தூக்கி விட்டவன் உடன் சுற்றுலா வந்தவர்கள் அழைக்க, பேருந்தை நோக்கிச்சென்றான். பணம் பெற்ற அப்பெண்ணை விட அகனுக்குத்தான் மகிழ்ச்சி மனதுள் ஆர்பரித்தது.
அடுத்த நாள் புகழ் பெற்ற ஓர் அணையை சுற்றிப்பார்க்க தான் சென்ற சுற்றுலா பேருந்து சென்று நிற்க, அதிலிருந்து தாமதிக்காமல் இறங்கியவன் அங்கிருந்த பார்க் பகுதிக்கு சென்று சற்று ஓய்வெடுத்தவாறு பூக்களையும், செடி கொடிகளையும் ரசித்தபடி அருகிலிருந்த ஒரு தடாகத்தில் பூத்திருந்த தாமரைப்பூக்களை ரசித்த போது பூக்களின் நடுவே ஓர் உயிருள்ள தாமரையைக்கண்டு வியந்தான்.
‘இது கனவா…? நனவா….? எந்தப்பெண்ணைப்பார்த்து பரிதாபப்பட்டு பிச்சைக்காரி என நினைத்து பணம் கொடுத்தானோ… அதே பெண் இங்கே…. அகனை மிரட்ச்சியுடன் அவள் பார்க்க, எங்கிருந்தோ ஒரு குரல் ‘கட் கட்’ என சொன்னது காதில் விழுந்ததும் திரும்பி பார்த்தான். கேமரா வைத்திருந்த ஒருவருடன் பிரபல இயக்குனர் நின்று கொண்டிருந்தார்.
இயக்குனர் வேகமாக அகனை நோக்கி வந்து கை குழுக்கினார். “என்னோட நல்ல நேரமோ என்னமோ தெரியல தம்பி. நேத்தைக்கு பிச்சைக்காரிக்கு நீங்க பிச்சை போட்ட ஸாட் சூப்பரா இயல்பா வந்திருக்கு. இப்ப காலைல இருந்து பத்து டேக் எடுத்தும் காதாநாயகிக்கு மிரட்சியான முக பாவனைய வர வைக்க முடியல. உங்கள பார்த்ததும் வந்திருச்சு. தேங்க யூ. நீங்க சினிமாவுக்கு ராசியான ஆளா தெரியறீங்க. அடுத்த படம் உங்கள வெச்சுப்பண்ணப்போறேன். கதாநாயகி கண்டிப்பா இவங்கதான். உங்க போன் நெம்பர் கொடுங்க” என வாங்கியவர், தயாரிப்பாளரை அழைத்து ஐம்பதாயிரம் பணம் அட்வான்ஸ் கொடுத்த போது பெற்றுக்கொண்ட அகன், மகிழ்ச்சியின் உச்சத்தில் பூரித்தான்.