கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 9,710 
 
 

சுரேஷுக்குத் தூக்கம் வரவில்லை. விஜய் நாளை ஊரை விட்டே போகிறான். அவன் அப்பாவுக்கு மாற்றல் ஆகி விட்டது. ஆனால் தூக்கம் வராததற்கு அவனைப் பிரிவது காரணம் இல்லை. உண்மையில் சொல்லப் போனால் அவனுக்கு விஜயைப் பிடிக்காது.

சுரேஷ் வீட்டின் மாடியில் விஜயின் மாமா குடும்பம் இருந்தது. ஐந்தாறு தெரு தள்ளி அவன் வீடு இருந்தது. அவனுக்கு அம்மா இல்லை. அப்பாவும், அத்தையும் அவர்களைப் பார்த்துக் கொண்டாலும் வாரத்தில் ஏழு நாளும் மாமா வீட்டில்தான் அவர்கள் (விஜய், அவன் அண்ணன், தம்பி, அக்காள்) எல்லோரும் இருப்பார்கள்.

சுரேஷ், விஜய் மற்றும் அஷோக் என்கிற அடுத்த தெருப் பையன் எல்லோரும் ஒரே பள்ளியில் ஏழாவது வகுப்பில்

படித்தார்கள். அதில் அஷோக்கும் சுரேஷும் ஒரே செக்ஷன்.

விஜயோடு சிறு வயது முதலே பழக்கம் என்றாலும், இருவருக்கும் ஒத்தே வந்ததில்லை. அவன் அக்கா திடீரென்று ஒரு மாதிரி மாறியதைக் குறித்து சுரேஷ் கொஞ்சம் குறுகுறுப்போடு ஏதோ கேட்கப் போனதற்கு விஜய் சுரேஷுடைய அம்மா, பாட்டியையெல்லாம் பற்றி அசிங்கமாகப் பேசி பதில் சொல்லிவிட்டான். தவிர விஜய்யிடம் கிரிக்கட் பேட், டென்னிஸ் பந்து என்று ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். விதவிதமான ஸ்டாம்ப்புகள், பம்பரங்கள் வேறு வைத்திருப்பான். அவ்வப்போது ‘வைத்துக் கொள்’ என்று சுரேஷிடம் கொடுப்பான். கொடுக்கும் போது ஒன்றும் சொல்ல மாட்டான். ஆனால் இரண்டு மூன்று நாட்களில் ஞாபகமாக திருப்பி வாங்கிக் கொள்வான். ஒன்றைக் கூட திருப்பி வாங்கிக் கொள்ளாமலிருந்ததில்லை.

விஜய், அஷோக்கைத் தவிர, தீனதயாளன், ராஜகோபால், மதிவாணன் என்றெல்லாம் சுரெஷுக்கு நண்பர்கள் இருந்தனர். அவன் வீட்டுப் பக்கத்து வீட்டிலேயே இருந்த சுசீலாவும், இந்துவும் குழந்தையிலிருந்தே சுரேஷின் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அதில் சுசீலாவுக்கு அம்மா இல்லை. அவர்கள் வீட்டில் எல்லோரும் ஏதோ ஒரு பாஷை பேசினார்கள். இந்துவைக் கண்டாலே சுரேஷுக்குப் பயம். அவள் தன் அம்மாவோடு சுரேஷ் வீட்டுக்கு வரும்போதெல்லாம் சுரேஷின் பொக்கிஷங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து உடைத்து விடுவாள். பெரியவர்கள் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

ஒருநாள் மாடி வீட்டில் சுரேஷ், விஜய், சுசீலா, இந்து எல்லோரும் இருக்கையில் அந்த இரண்டு பெண்களுக்கும் சுரேஷைப் ரொம்பப் பிடிக்குமா, இல்லை விஜய்யையா என்ற கேள்வி எழுந்தது. சுரேஷே அதற்குக் காரணமாய் இருக்கலாம். அவனுக்கு அடிக்கடி அப்படி சந்தேகம் வரும். அவன் பெற்றோர், பாட்டி, தாத்தா, பெரியப்பா, சித்தி எல்லோரிடமும் அவர்களுக்கு யாரை ரொம்பப் பிடிக்கும் என்று கேட்டிருக்கிறான். அவர்கள் எல்லோரும் ஒரு மனதாக ‘சுரேஷ்’ என்று சொல்லியிருக்கிறார்கள். சுரேஷின் தம்பி பாலன் பிறந்த பிறகும் கூட அது அப்படியேதான் இருந்தது.

இவர்களைக் கேட்ட போது இரண்டு பெண்களும் வெட்கத்தோடு நின்றார்கள். சுரேஷ் அவர்கள் உதவிக்கு வந்தான். ‘என்னைப் பிடிக்கும் என்றால் இந்தக் கதவை இரண்டு முறை சாத்தி திறவுங்கள். விஜய் என்றால் மூன்று முறை அதே மாதிரி செய்யுங்கள்” என்றான். அனைவருக்கும் அது சரி என்று பட்டது.

அது ஒரு அறையின் வாசலின் இரண்டு கதவுகளில் ஒன்று. சில சமயம் அதில் தொங்கிக் கொண்டு அப்படியும் இப்படியும் கூட போய் வந்து விளையாடுவார்கள். விஜய்யின் பாட்டி தூங்கும் போதுதான்.

இரண்டு பெண்களுமே கதவைப் பிடித்துக் கொண்டார்கள்.

மெல்ல கதவை சாத்தித் திறந்தார்கள். இரண்டாம் முறையும் சாத்திவிட்டு மீண்டும் திறந்தார்கள். கதவிலிருந்து கையை அவர்கள் எடுக்கையில் சுரேஷ் மகிழ்ச்சியோடு (என்னதான் தெரிந்த விஷயம் என்றாலும் அது நடக்கும் போது சந்தோஷமாகத்தான் இருந்தது) ஆனாலும் கண்யமாக நடந்து கொள்ள வேண்டும் என்று “உன்னையும் பிடிக்கும். எனக்கப்பறம்” என்று விஜயிடம் சொல்ல வாயைத் திறக்கையில், கையை எடுத்துவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவ்விரண்டு பெண்களும் மூன்றாம்முறை கதவை சாத்தித் திறந்து விட்டார்கள். சுரேஷுக்கு வாழ்க்கையே சின்னாப் பின்னமாகி விட்டது. அழுகை வந்தது. அழவும் முடியவில்லை. வழியை மறைத்துக் கொண்டு நின்ற விஜயைப் பார்க்கவும் முடியவில்லை. அந்தப் பெண்கள் இருவரும் சிரித்துக் கொண்டே ஓடி விட்டார்கள். விஜய் ஆறுதலாக ஒன்றும் சொல்லவில்லை.

ஆனாலும் விஜயை பகைத்துக் கொள்ளவும் முடியாது. அப்புறம் கலர் கலரான கோலிகளை, பட்டங்களை இரண்டு நாளைக்காவது வேறு யார் கொடுப்பார்கள். எல்லாம் விஜயின் அண்ணன், மாமா, அக்காள் கொண்டு வந்து தருபவை. இரண்டு தடவை நன்கு சீசன் செய்யப் பட்ட எண்ணை வாசனை அடிக்கும் ‘பேட்’களைக் கூட கொடுத்து இருக்கிறான். அந்த பேட்களின் வாசனை சுரேஷுக்கு ரொம்பப் பிடிக்கும். அவற்றை படுக்கையில் வைத்துக் கொண்டே தூங்கி இருக்கிறான். போன வாரம் ஒரு புது ‘பேட்’டை விஜயின் மாமா அவனுக்கு வாங்கிக் கொடுத்தார். ஹேண்டிலில் ரப்பர் உறை போட்டு பின்புறம் கிரிக்கட் வீரர்களின் கையெழுத்தோடு அட்டகாசமாக இருந்தது.

ஊர் விட்டுப் போவதால் ஒவ்வொரு ஃபிரண்டுக்கும் ஒரு பரிசு தரப் போவதாக விஜய் சொல்லி இருந்தான். தன் புது பேட்டை சுரேஷுக்குத் தருவான் என்று சுரேஷ் நிச்சயம் நம்பினான். அதனாலேயே அவன் மனம் கோணாதபடி நடந்து கொண்டான். ஆனால் நேற்று விஜய் “நாளைக் காலை பத்து மணிக்கு அஷோக் வீட்டு பால்கனியில் மேட்ச். சுரேஷ், அஷோக் இருவரில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கு அந்த புது பேட்” என்று சொல்லிவிட்டான். அதுதான் சுரேஷுக்குத் தூக்கம் வரவில்லை. அவனுக்குப் பிடித்த, ராமர், வெங்கடாசலபதி, முருகர் என்று எல்லா சாமியையும் வேண்டிக் கொண்டவாறே படுத்துக் கொண்டிருந்தான்.

விஜய்யிடம் இன்னொரு நல்ல குணமும் இருந்தது. அவன் ஒரு போதும் சுரேஷ ‘குண்டு’ என்று கேலி பண்ணியதில்லை. ஏன் பெரும்பாலானோர் பண்ணியதில்லை. அக்கம் பக்கத்தில் அவன் அம்மா, அப்பாவிடம் இருந்த மரியாதை, பள்ளியில் அவன் நன்றாகப் படித்ததுடன் கேட்பவர்களுக்கெல்லாம் புத்தகம், நோட் புக் கொடுத்து உதவி வந்தது, ஆசிரியர்களுக்கு அவனைப் பிடித்திருந்தது போன்ற காரணங்களால் அவனை யாருமே கேலி செய்ததில்லை. யாராவது ‘குண்டு’ என்று கேலி செய்வார்களோ என்று அவன் பல சமயம் பயந்து இருக்கிறான். அப்படி செய்தால் அவனுக்கு கண்ணில் நீர் தளும்பிவிடும். அம்மாவிடம் சொன்னால் “ எல்லாம் வெனையிலே வெந்து சூனியத்துலே சுருங்குகறதுகள். நீ ராஜா மாதிரி செகப்பா மொழுமொழுன்னு இருக்கே, ஒனக்கென்னடா” என்பாள்.

அஷோக்தான் திடீரென்று ஒரு நாள் அவனை “ஃபேட் பாய்” என்று கூப்பிட்டான். அஷோக்குக்கு நிறைய இங்க்லீஷ் வார்த்தைகள் தெரியும். ஐந்தாம் வகுப்பு வரை அவன் வேறு பள்ளியில் படித்திருந்தான். ஆறாம் க்ளாஸிலிருந்துதான் ‘ஏ பி சி டி” அவர்கள் பள்ளியில் சொல்லிக் கொடுத்தார்கள். அதுதான் அவர்கள் பகுதியில் இருந்த பெரிய பள்ளி. சுரேஷ் முதலில் ஐந்தாம் வகுப்பு வரை அவன் தெருவில் இருந்த எலிமென்ட்ரி பள்ளியில் படித்தான். அங்கு எல்லாம் தமிழ்தான். நாலாம் வகுப்பு எலிசபெத் டீச்சர் தாழ்ப்பாளில்லாத பாத் ரூம் உள்ளே செல்கையில் அவனை சாத்திய கதவுக்கு வெளியே நின்று காவல் இருக்கச் சொல்வாள். அவனை ‘டேய் குண்டுப் பையா’ என்று ஓரிரு முறை அழைத்து இருக்கிறாள். ஆனால் அவள் அழைத்ததை யாரும் பார்த்தது இல்லை. மங்களம் டீச்சர் (பள்ளி நிறுவனர் அவளை ‘பாப்பாத்தி அம்மா’ என்று அழைப்பார்.) ஒரு முறை அவனைப் பாடச் சொல்லிக் கேட்டாள். அவன் தனக்கு தெரியாது என்றதும் பெஞ்சின் மேல் நிற்க வைத்து விட்டாள். அவன் தலையைக் குனிந்து நின்றதும் ‘உனக்கு என் பொண்ணையா தரப் போறேன் ஏண்டா வெக்கப் படறே” என்றாளே தவிர குண்டு என்று சொல்லவில்லை. சுரேஷும் மனதுக்குள் “உன் பொண் யாருக்கு வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டான். அவள் பெண்ணும் அதே பள்ளியில்தான் படித்தது. ஒல்லிக் குச்சானாக இருக்கும். டீச்சர் பெண் என்பதால் அதற்கு தனி மரியாதை. மாணவர்களில் யாருக்குமே அவளைப் பிடிக்காது.

பள்ளியில் இருந்தவர்களிலேயே குமார் தான் நல்லவன். அவன் சுரேஷ் சொன்ன எல்லாவற்றையும் கேட்பான். எங்கிருந்தோ வேறு ஊரிலிருந்து வந்து நாலாம் வகுப்பில்தான் சேர்ந்தான். சுரேஷ் கூடவே இருப்பான். அவன் போகச் சொன்னதும்தான் போவான். அவன் யாரோடு ‘ஷேம்’ விட்டாலும் அவனும் விட்டு விடுவான். ‘பழம்’ விட்டாலும் அப்படித்தான். அவன் ஐந்தாம் வகுப்பு வந்ததும் யார் யாரோடோ சேர்ந்து ஆளே மாறிப் போய் விட்டான்.

ஜெயப்பிரகாஷையும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவன் நிறைய கெட்ட வார்த்தை பேசுவான். அவனை மாதிரி யாராலும் குத்துச் சண்டை போட முடியாது. அவன் சட்டை எப்போதும் கிழிந்தே இருக்கும். அதன் வலது புறக் காலர் அவன் வாயில்தான் இருக்கும். அவன் அருகில் சென்றாலே அந்த எச்சில் வாடை அடிக்கும். அவன் பல பேரோடு பள்ளி முடிந்ததும் தெருவிலும், நடைபாதையிலும் சண்டை போட்டிருக்கிறான். ஐந்தாம் வகுப்பு வந்த போது ஒருநாள் அவனுக்கும் ஏழுமலைக்கும் ஒரு பெரிய சண்டை ரொம்ப நேரம் நடந்தது. ஒரு நேரம் ஜெயப்பிரகாஷ் மல்லாக்க ரோட்டில் விழுந்துவிட்டான். ஏழுமலை பெரியாளாகியிருக்க வேண்டியது. ஜெயப்பிரகாஷ் மேலே பாய்ந்த ஏழுமலையை தன் இரண்டு கால்களாலும் உதைத்துத் தூக்கினான். ஏழுமலை மூன்று நான்கடி உயரப் பறந்து தள்ளி விழுந்தான். அப்புறம் ஒருவாரம் அவன் பள்ளிக்கு வரவில்லை.

ஒருமுறை ஹெட்மிஸ்ட்ரஸ் பிரேயர் ஹாலில் யார் யாரையெல்லாம் ஜெயப்பிரகாஷ் அடித்து இருக்கிறானோ அவர்கள் எல்லோரும் பிரேயர் முடிந்த பின் தன் அறைக்கு வருமாறு கூறினாள்.

சுரேஷும் போனான். ஏழெட்டு பிள்ளைகள் வந்திருந்தார்கள். ஜெயப்பிரகாஷ் அனைவரையும் அடித்ததாக ஒத்துக் கொண்டான். ஆனால் சுரேஷை அடித்ததேயில்லை என்றான். ஹெச்.எம். “என்னடா” என்றாள். சுரேஷ் தலையை ஆட்டி மறுத்தவாறே முழங்கையில் இருந்த பழைய காயம் ஒன்றைக் காட்டினான். ஜெயப்பிரகாஷ் இரண்டு கால்களாலும் உதைத்துத் தூக்கியதில் மூன்று நான்கடி உயரப் பறந்து தள்ளி விழுந்தது கூட தான் தான் என்று அப்போது அவனுக்குத் தோன்றியது.

அதற்கப்புறமும் ஜெயப்பிரகாஷ் அவனை எதிரியென்று எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் ஹெச். எம். அறையில் அன்று என்ன நடந்ததோ ஐந்தாம் வகுப்பு முடியும் வரை வரை அவன் யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை. இவ்வளவு நடந்தும் அவன் ஒரு முறை கூட “ஏய் குண்டா” என்று சுரேஷை அழைத்ததில்லை. ஐந்தாம் வகுப்புக்கு அப்புறம் சுரேஷ் சேர்ந்த உயர் நிலைப் பள்ளியில் அவன் சேரவில்லை. எங்கு போனான் என்று தெரியவில்லை.

புதிய பள்ளி மிகப் பெரியதாக இருந்தது. இரண்டு விளையாட்டு மைதானங்கள், இரண்டு பெரிய கட்டிடங்கள் என்று. உள்ளே போய் வெளியே வரவே சுரேஷ் கஷ்டப் பட்டான். செங்கல் கலரில் இருந்த பள்ளியில் நிறைய புது நண்பர்கள். கன்னத்தில் பெரிய கருப்பு மச்சத்தோடு இருந்த குமாரசாமி, நொண்டி விளையாட்டில் அசகாய சூரனாகிய உமாபதி, பெரிய நாமத்தோடு பள்ளிக்கு வரும் சீனிவாச வரதன் இன்னும் எவ்வளவோ பேர்.

நல்ல வேளையாக அஷோக் “ஃபேட் பாய்” என்றழைத்தது சுரெஷின் பள்ளியில் யாருக்கும் புரியவில்லை. முதல் தடவையே தனியாக அதன் தமிழ்ப் பதத்தை சுரேஷிடம் சொல்லிவிட்டான். ஒரு வாரம் கழித்து ‘அப்படி கூப்பிடாதே’ என்று சுரேஷ் கெஞ்சி கேட்டதும் அஷோக் ‘சரி இனிமேல் உன்னை ‘ட்ராஃபிக்” என்று அழைக்கிறேன் என்றான். சரி என்று சுரேஷ் சொல்லாவிட்டாலும் அஷோக் இருவரும் தனியாக இருக்கையில் அப்படியே அழைத்தான். சிலசமயம் அந்த வார்த்தையை எல்லோரும் இருக்கையிலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சொன்னான். யாரும் பெரும்பாலும் கவனிக்கவில்லை.

சுரேஷ் அப்பவிடம் “ட்ராஃபிக்” என்றால் என்ன என்று கேட்டதும் அவர் ஒரு சின்ன ஆங்கில தமிழ் அகராதியில் அந்தச் சொல்லைக் காட்டி எப்படி அகராதி பார்க்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார். அந்தச் சொல்லின் பொருளை அறிந்து கொண்டதும் அதற்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று அவனுக்குப் புரியவில்லை.

இவையெல்லாம் ஆரம்பிப்பதற்கு ஒரு காரணமும் இருந்தது. ஒருநாள் அஷோக்கின் அப்பா சுரேஷின் தெரு வழியாகப் போனார். சுரேஷைக் கவனிக்கவில்லை. பேன்ட்டில் ஷர்ட்டை ‘இன்’ செய்து கொண்டிருந்தார். டை கழுத்தில் தொங்கியது. ஒரு கையில் தோல் பை இருந்தது. இன்னொரு கையில் இருந்த சிகரெட்டை அடிக்கடி வாயில் வைத்து ஊதிக்கொண்டே போனார். மறுநாள் பள்ளியில் அஷோக்கிடம் ‘உங்க அப்பாவைப் பார்த்தேன். நேத்து எங்க வீட்டு வழியாகப் போனார். என்னைப் பார்க்கலை.” அத்தோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். “சிகரெட் பிடிச்சுட்டே போனார்” என்றும் சொன்னான். அஷோக்கின் முகம் உடனே கறுத்தது. உதடுகள் கோணின. அவன் உதடுகள் பலருடையதைப் போலன்றி வெளுத்திருப்பதை சுரேஷ் கவனித்தான். நாலைந்து பேராகப் பேசிக் கொண்டிருந்த இடத்தை விட்டு விருட்டென்று அஷோக் போய்விட்டான். அதற்கு நாலைந்து நாட்களுக்குப் பின்தான் “ஃபேட் பாய்” ஆரம்பித்தது.

ஒருநாள் ‘ட்ராஃபிக்’ என்று ஏன் பெயர் வைத்தேன் என்று அஷோக் ஒரு நல்ல மூடில் இருக்கையில் சொன்னான். ‘ட்ராஃபிக்” ஸ்பெல்லிங் தெரியுமா?” என்று கேட்டான். ‘தெரியும். டி.ஆர்.ஏ.எஃ.எஃ.ஐ.சி.” “அதை கடைசியிலிருந்து சில எழுத்துகளை விட்டுச் சொல். எஃப். ஏ. டி. வரும் அப்படினா என்ன” என்றான். “டிரஃபிக்” பற்றி அகராதியில் பார்த்திருந்ததால் அதன் ஸ்பெல்லிங் தெரிந்து இருந்தது. இப்போ எஃப். ஏ. டி. ஒரு முறை வாய்க்குள்ளும் பிறகு மெலிதாகவும் சொன்னபோது புரிந்து போயிற்று. ஒரே அவமானமாகவும், பயமாகவும் இருந்தது. அஷோக் சுரேஷை ஒரு துரும்பைப் பார்ப்பது போல் வெறுப்போடு பார்த்தான். தன் வெளுத்த உதடுகளை உள்ளே மடித்து தலையை ஆட்டிக் கொண்டான். வெகு வேகமாக நொண்டி விளையாடுகையில், கிரிக்கட்டில் ‘கூக்ளி’ போடும்போது அப்படித்தான் செய்வான். ஒருதரம் உமாபதியையே நொண்டியில் ஜெயித்து விட்டான். படிப்பில் மட்டும் எப்போதும் சுரேஷுக்கு பின் ‘ரேன்க்’தான் வாங்குவான்.

ஒரு முறை அவனைப் போலவே உதட்டை மடித்துக் கொண்டு தலையை ஆட்டிக் கொண்டு சுரேஷ் பள்ளி மைதானத்தில் மண்ணில் காலைத் தேய்த்து தன்னைப் பிடிக்க வந்தவனிடம் கட் கொடுக்க முயற்சித்த போது அவனது இரண்டாவது விரலின் நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டியது. அதில் நிறைய மண்ணும் புகுந்து விட்டது.

அஷோக் வீட்டு மாடியில் அகலம் குறைவான ஆனால் மிக நீண்ட, ஒரு கம்பி போட்ட, பால்கனி இருந்தது. அங்குதான் மேட்ச் நாளைக்கு. அங்கு கிரிக்கட் ஆடி ஆடியே அவர்களுக்கு ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் மட்டும் நன்றாக வந்தது. ஒரு சுவரில் ஸ்டம்ப் வரைந்திருக்கும். பதினைந்து அடி தூரத்தில் ஒரு மேடு இருக்கும். அதுதான் பௌலின் க்ரீஸ். கையை கீழாக வைத்துதான் பந்தை போடுவார்கள். ரப்பர் மற்றும் பெரும்பாலும் டென்னிஸ் பந்துதான் உபயோகப் படுத்தப் பட்டது.

எப்போதோ தூங்கிய சுரேஷுக்கு காலையில் சீக்கிரமே விழிப்பு வந்து விட்டது. பாலன், மூன்று வயது தம்பி, அதற்குள் விழித்திருந்தான். அவன் இவனைப் பார்த்து சிரிக்கையில் அவனும் இவனைப் போலவே வெள்ளையாக குண்டாக இருப்பது தெரிந்தது. அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்தான். பல் தேய்க்காமல் குழந்தையைக் கொஞ்சினால் அம்மா திட்டுவாள்.

சரியாக ஒன்பது மணிக்கு விஜய் வந்து விட்டான். அவன் கையில் அந்த பேட் இருந்தது. அம்மா அவனிடம் எத்தனை மணிக்கு ட்ரெய்ன்” என்று கேட்டாள். ‘ராத்திரி பதினோரு மணிக்கு’ என்றான்.

சுரேஷிடம், ‘நான் போறேன். நீ வா. பத்து மணிக்கு இல்லையென்றாள் அஷோக் தான் ஜெயித்ததாக ஆகும்” என்று சொல்லி விட்டு போனான். பின்னாலேயெ சுரேஷும் போய் விட்டான்.

அஷோக் வீட்டில் அவன் அப்பா ஒரு ஈஸிச் சேரில் வேட்டி, பனியனில் அமர்ந்து இருந்தார். அவர் கையில் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை.

இரண்டு பேருமே இருந்ததால் ஒன்பதரை மணிக்கே மேட்ச் ஆரம்பித்தது, விஜய் சொல்படி. ராத்திரி அவன் ஊருக்கு வேறு போக வேண்டும்.

விஜய் ‘டாஸ்’ போட்டான். சுரேஷ் சொன்ன ‘தலை’ விழுந்தது. சுரேஷ் கையில் விஜய் அந்த பேட்டைக் கொடுத்து ‘ஆல் தெ பெஸ்ட்’ என்றான்.

ஸ்டம்ப்பின் முன் நிற்கையில் வழக்கம் போல் “எனக்கு தன்னம்பிக்கையும் உண்டு தெய்வ பக்தியும் உண்டு.. நானும் நல்லா ஆடுவேன். ராமரும் எனக்கு ஹெல்ப் பண்ணுவார்”என்று ஒவ்வொரு பந்தை அடிக்கும் முன்பும் சொல்லிக் கொண்டான். சில சமயம் அவன் சொல்லி முடிக்கும் முன் பந்து வந்து விடும். அப்போதெல்லாம் அரைகுறையாக ஆடினான். விஜய்தான் அம்பயர். பதினான்கு ரன்கள் எடுத்திருக்கையில் விஜய் அவனுக்கு எல் பி டபிள்யூ கொடுத்து விட்டான். சுரேஷுக்கு தன் கால் ஸ்டம்ப்பை மறைக்கவேயில்லை என்று நிச்சயமாகப் பட்டது. ஆனாலும் விஜய் சொன்னால் சொன்னதுதான். அதுவும் இப்போது அவன் அம்பயர் வேறு.

அஷோக் பேட்டை வாங்கிக் கொண்டான். விஜய் மறக்காமல் அவனுக்கும் ‘ஆல் தெ பெஸ்ட்’ சொன்னான். அஷோக் பதி மூன்று ரன்கள் எடுத்திருக்கையில் பந்து நேராக ஸ்டம்ப்பில் பட்டது. சந்தோஷத்தில் சுரேஷ் எகிறிக் குதிக்கையில், விஜய் “நோ பால்” என்று சொல்லி விட்டான். அந்த வீட்டில் யாருக்குமே யாருமே நோ பால் தந்ததில்லை. ஆனால் விஜய் சொன்னால் சொன்னதுதான். அடுத்த இரண்டு பந்துகளுக்குப் பிறகு அஷோக் இரண்டு ரன்கள் எடுத்தான். விஜய் அவன்தான் ‘வின்னர்’ என்று சொல்லி பேட்டை அவனிடமிருந்து வாங்கி மீண்டும் அவனிடமே கொடுத்தான். அஷோக் அந்த பேட்டை முத்தமிட்டான். சுரேஷுக்கு அழுகையும் கோபமும் வந்தன. வீடு அஷோக் வீடு. அவன் எத்தனையோ தடவை அங்கு கிரிக்கட் ஆடி இருகிறான். சுரேஷ் பத்து முறை அங்கு விளையாடி இருந்தால் அதிகம். தவிர விஜய் அம்பயராக இருந்து தன்னை மீண்டும் கவிழ்த்து விட்டான் என்பதும் தெரிந்தது. குழம்பிப் போய் அவன் நிற்கையில் அந்த சம்பாஷணை ஆரம்பித்தது.

“ட்ராஃபிக்”னா என்னடா?” என்றான் விஜய். உற்சாகமாக அஷோக் சொல்ல ஆரம்பிக்கையில் சுரேஷ் அவர்கள் இருவரையும் விலக்கிக் கொண்டு தட தடவென்று மாடிப் படிகளில் இறங்கி தெருவுக்கு வந்து விட்டான். “ஃபேட் பாய்””ட்ராஃபிக்” என்கிற குரல்களும், சிரிப்பும் பின்னால் கேட்டன.

தெருவில் இறங்கி எங்கு செல்வது என்று சுரேஷுக்குப் புரியவில்லை. அழுது கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தது. வீட்டுக்குப் போனால் நிறைய கேள்விகள் வரும். வீட்டைத் தாண்டி நேராக நடந்தான். அவனாகவே தெருவின் திருப்பத்தில் இருந்த சிவன் கோயிலை அடந்தான். கோவில் இன்னும் சாத்தவில்லை. முருகன் சந்நிதியில் போய் நின்று கொண்டான். “என்னை ஏன் குண்டாகப் படைத்தாய் முருகா. என்னைக் காப்பாற்று. என்னையும் விஜய் மாதிரி, அஷோக் மாதிரி ஒல்லியாக்கு. உடனே ஒல்லியாக்கு” என்று மனம் வெதும்பி விக்கியவாறே, உருகி, கண்களை மூடியும் அவ்வப்போது ஒற்றை விளக்கில் தெரிந்த வள்ளி தெய்வானை சமேத முருகனைப் பார்த்த படியும் வேண்டிக் கொண்டான். அது மாதிரி சுமார் ஐம்பது தடவையாவது சொல்லியிருப்பான். அழுகை நின்றது. சட்டையின் நுனியால் கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டான். சந்நிதியில் யாருமே இல்லை. பிராகாரங்களையெல்லாம் வலம் வந்தான். தனக்குத் தெரிந்த ஸ்லோகங்களையெல்லாம் சொல்லிக் கொண்டான். பிறகு மெல்ல வீட்டுக்குப் போனான்.

அதற்கப்புறமும், தொடர்ந்து அவன் குண்டாய் இருப்பதாக கேலி செய்பவர்கள் இருந்துகொண்டேதான் இருந்தார்கள். இதனாலன்றியும், வேறு எதனால் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத காரணங்களாலும் பாதிக் கல்லூரிப் படிப்பில், சுமார் இருபது வயதில் அவனுக்கு கடவுள் நம்பிக்கையும் முற்றாகப் போய் விட்டது. அவன் காது படவே ஒரு சிலர் ‘குண்டு சுரேஷ்’ என்றும் குண்டாக, சில சமயம் அசிங்கமாக, இருந்த பல்வேறு பிரபலஸ்தர்கள் பெயரிலும், விதவிதமான பட்டப் பெயர்களாலும் அவனை அவ்வப்போது குறிப்பிட்டு கொண்டுதான் இருந்தார்கள். நோக்கமின்றியோ, வேடிக்கைக்காகவோ, புண்படுத்தவோ விடப்பட்ட அத்தகைய அழைப்புகளும், குறிப்பிடுதல்களும், கேலியும், கிண்டலும் அவனை ஒரு முறை கூட, அன்றைக்குப் பிறகு, துளியும் பாதித்ததேயில்லை.

– சொல்வனம், ஏப்ரல் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *