நிலவறைக்குள் (BUNKER) இருந்த மலர்விழிக்கு ஒரு வினாடிகூட நிற்காது வெடிக்கின்ற குண்டுகளின் அகோரச் சத்தம் காதை அடைப்பது போல் இருந்தது. நிலவறை இருண்டு கிடந்தது. கொஞ்ச நஞ்சம் பரவியிருந்த வெளிச்சத்தையும் வெடிகுண்டுகளின் கரும்புகை அள்ளிக் கொண்டு போய்விட்டது. சூரிய ஒளியே தெரியவில்லை. அந்த நிலவறைக்குள்ளும் புகையின் வாடை. கண்கள் எரிவது போல் இருந்தன அவளுக்கு. ஆனால் எதுவும் நடக்காததுபோல் மெüனமாகக் கண்களை மூடி தவம் செய்கிற துறவி போல் இருந்தான் சாந்தன். காதே வெடிக்கிற சத்தம் அவனை ஒன்றும் செய்யவில்லையா? மூக்கில் படிகிற புகைவாடை அவனை அசைக்கவில்லையா? எதுவுமே நடக்கவில்லையென்று இருக்கிறானா?
“”அண்ணா…” மலர்விழி. அவள் கூப்பிட்டது அவனுக்குக் கேட்கவில்லை. வெளியே வெடிக்கிற சத்தம் அவளின் வார்த்தைகளை அபகரித்துக் கொண்டது. மலர்விழி சாந்தனை நெருங்கி அவன் காதுக்குள் பேசினாள்.
“”அண்ணா”
“”ம்”
“”பங்கருக்குளேயே இருக்க வேண்டியதுதானா?”
“”வேற வழியில்லை மலர், வெளியே வெடிக்கிற வெடியில் எப்படிப் போக முடியும்?”
மலர்விழியின் கண்களில் நீர்த்துளிகள் உருண்டன. அவளிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. சாந்தன் அப்போது சொன்னான், “”இது யுத்த களம். ஒப்பாரிக்கு வேலையில்லை. வெடிச்சத்தம் நின்றால் போகலாம்!”
மலர்விழி மெüனமானாள். வெடிச்சத்தம் எப்போது நிற்கும் என்பது எவருக்கும் தெரியாது. ஆனால் யுத்தம் கடைசிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்பே சாந்தன் அதுகுறித்து தெளிவாகச் சொல்லிவிட்டான்.
“”களத்தின் நிலைகுறித்து எதுவும் சொல்ல முடியாது. இரு பக்கப்போர் என்பது இல்லை. போராளிகளுக்குள்ளும் கறுப்பு ஆடுகள் நுழைந்துவிட்டன. யார் யாருடைய ஆள் என்பதே தெரியவில்லை. பத்து நாட்களுக்கு முன்பே என்னை அகதி முகாமுக்குப் போய்விடச் சொன்னார்கள். ஆனால் மருத்துவமனையில் நோயாளிகளைக் கவனிக்கிற வேலையில் இருந்ததால் நோயாளிகளை விட்டுப் போகவில்லை. நான் இங்கு போராளி இல்லை. ஆயுதம் தூக்கவும் இல்லை. ஆனால் இந்த மருத்துவமனையில் இருந்தால் என்னையும் போராளியாகவே சிங்கள ராணுவம் பார்க்கும்…ம்…அவர்கள் என்னை எப்படியும் பார்க்கட்டும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என் கவலையெல்லாம் உன்னைப் பற்றித்தான்…”
மலர்விழி “ஏன்’ என்பதுபோல் சாந்தனையே பார்த்தாள். அப்போது சாந்தன் சொன்னான்,””அகதி முகாமுக்குப் போனால் என்னைப் புலியாகவே பார்ப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் என்னைப் போன்றவர்கள் புலிதான். ஆனால் உன்னைப் புலிப்பெண்ணாகப் பார்ப்பார்கள். நீ புலிகளின் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறாய். உன்னை ராணுவம் படமெடுத்து வைத்திருக்கும். அவர்களைப் பொறுத்தவரை நீ ஒரு பெண்புலி. அதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது…”
மலர்விழியின் உடல் நடுங்கியது. அவளுக்கும் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் அவர்களின் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சி மட்டுமே நடத்தியவள். அதுவே அவளுக்கு எதிராக இருக்கும் போலிருக்கிறதே! மலர்விழி குழிக்குள் பரவியிருந்த இருட்டுக்குள் தீர்க்கமாய்ப் பார்த்தாள். அந்த இருட்டுக்குள்ளும் ஒரு வண்ணத்துப்பூச்சி நிலவறைச் சுவரில் இருந்தது தெரிந்தது. அதன் நிறம் சரியாகத் தெரியவில்லை.
“”அண்ணா வண்ணத்துப்பூச்சி” என்று சொல்லியவாறு அதனைக் காட்டினாள் மலர்விழி.
சாந்தன் மலர்விழி காட்டிய திசையை உற்றுப் பார்த்தான். ஒரு வண்ணத்துப்பூச்சி ஆடாமல் அசையாமல் இருந்தது. அது செத்துப் போய்விட்டதோ என யோசித்தான் அவன். அவனுக்கு வண்ணத்துப்பூச்சிகள் பிடிக்கும். முல்லைத் தீவில் அடர்ந்த மரங்கள் இருக்கும் வனப்பகுதியில் இருந்து வந்த விதவிதமான வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னே பித்துப் பிடித்தவன் போலவும் போயிருக்கிறான். ஒருநாள் தன்னோடு படிக்கிற சீலன் அழகான வண்ணத்துப்பூச்சியைப் பிடிக்கிறேன் என்று அதன் ஒரு பக்கச் சிறகை நசுக்கிவிட்டான். அதன்பிறகு அது பறக்கவும் இல்லை. உயிரோடு இருக்கவும் இல்லை. அதனைக் கண்ட சாந்தன் கோபத்தில் சீலனை அடிக்க கை ஓங்கிவிட்டு,””வண்ணத்துப்பூச்சிக்கும் உயிர் இருக்கெண்டு யோசி…அநியாயமாக ஒரு உயிரைக் கொன்றுவிட்டாயே!” என்று சொல்லிவிட்டு நின்றுவிட்டான்.
சீலன்,””இங்க மனுசனையே பூச்சிய போல் கொல்லுது. நீ தத்துவம் சொல்ல வெளிக்கிட்டியோ?” என்று சொல்லிவிட்டுப் போனான். அவன் சொன்னது உண்மை. சிங்கள ராணுவத்தைப் பொறுத்தவரையில் தமிழர்கள் பூச்சிகள்தான். பூச்சிகளைக் கொன்றால் எந்த நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்? தமிழர்களைக் கொன்றாலும் அதேதான்…”
மலர்விழி,””வண்ணத்துப்பூச்சிய பற்றி கேட்டனான்” என்று இழுத்தாள்.
“”மலர் இது வண்ணத்துப்பூச்சிகள் பறக்கிற காலம். ஆயிரக்கணக்கான நிறங்களில், விதங்களில் வண்ணத்துப்பூச்சிகள் வட்டம் வட்டமாகப் போகும். ஆனால் இங்கு நடக்கிற யுத்தத்தினால் வண்ணத்துப்பூச்சிகளையே நான் காணவே இல்லை. இது எங்கள மாதிரி அகதியா வந்ததோ? பங்கரை விட்டுப்போனால் செத்துப்போகும்” என்றான் சாந்தன்.
“”ஐயோ! பாவம் அண்ணா. அது பங்கருக்குள்ளயே இருக்கட்டும்” என்றாள் மலர்விழி.
“”நான் வேண்டாமென்டா சொல்றன். அது வெளியே போனால் செத்துப்போகும்…” என்று சாந்தன் சொன்னபோது அவன் மனதுக்குள் ஒரு மின்னலாய் வெட்டி நின்றது ஓர் எண்ணம்…”வண்ணத்துப்பூச்சி வெளியே போனால் மட்டுமா சாவு? உனக்கு உன் தந்தைக்கு…’
சாந்தனுக்குள் ஒரு நடுக்கம். அவள் உடல்தான் பருவம் பெற்றது. உள்ளம் குழந்தைபோல. அம்மாவையும் அப்பாவையும் யுத்தம் காவு கொண்டுவிட்டது. இப்போது அவன்தான் அவளுக்கு தாயாக தந்தையாக இருக்கிறான். முல்லைத்தீவு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவியாக, சில நேரங்களில் மருந்து கொடுப்பவராக இருந்து மலர்விழியையும் காப்பாற்றி வந்தான். ஆனால் விமானத் தாக்குதலில் மருத்துவமனை கட்டடங்களும், நோயாளிகளும் சிதைய, அவனைப் போன்ற பலர் ஆங்காங்கே இருந்த பங்கருக்குள் பதுங்கினார்கள்.
பங்கருக்கு வந்த சாந்தன் வெகுநேரம் பேசவில்லை. கண்களை மூடி அழுதான். குண்டடிபட்டு உயிர் தப்பிய ஒரு சிறுவனை டாக்டர்கள் இருக்கிற வசதியை வைத்துக் காப்பாற்றியிருந்தார்கள். ஆனால் விமானத் தாக்குதலில் அந்தச் சிறுவனும் செத்துவிட்டான். இப்படி எத்தனை பேர்? மருத்துவமனைகளை ஹிட்லர் கூடத் தாக்கவில்லையாம். ஆனால் இங்கு?
அந்த பங்கருக்குள் இருந்த டாக்டர் சந்துரு சாந்தனிடம் பேசினார்,””சாந்தன்! எத்தனை நாளைக்கு உந்த பங்கருக்குள் இருப்பது?”
அவர் பேசியது வெடிச்சத்தங்களுக்கு மத்தியில் மெல்லிசாய்க் கேட்டது. அவன் தவழ்ந்து தவழ்ந்து அவரருகே போனான். பிறகு டாக்டரின் காதருகே சொன்னான், “”வெடிச்சத்தம் நின்டுது என்டால் அகதியா சரணடையலாம். அது நிக்க வேணும்!”
“”நிக்கும் எண்டு நினைக்கிரன். எதுக்கும் சரணடைய வெள்ளைக்கொடி வேண்டும் எண்டு வேட்டிய கிழிச்சி பல துண்டுகளை வைச்சிருக்கிறன். சத்தம் நின்டதும் ஆளுக்கொருவர்களுக்குச் சாப்பிட எதுவுமில்லை” இருந்த பானைத் தண்ணீரைப் பங்கு போட்டுக் குடித்தார்கள். இரவு முழுவதும் தூங்குவதும் விழிப்பதுமாக இருந்தார்கள் அவர்கள். விடிந்தபோது வெளியே சத்தம் எதுவுமே கேட்கவில்லை. அவர்களால் அதனை நம்பவே முடியவில்லை. ஆயினும் நம்ப வேண்டியதாயிற்று. வெடிச்சத்தம்தான் கேட்கவில்லை.
சாந்தன் பங்கரை விட்டு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,””பங்கரை விட்டு எல்லாரும் வாங்கோ…வெள்ளக் கொடிய புடிங்கோ!” என்றான். பங்கருக்குள் இருந்த மற்றவர்கள் ஒவ்வொருவராக தலைக்கு மேலே ஒரு கையால் கிழிக்கப்பட்ட வெள்ளை வேட்டித் துணியைக் கொடியாக அசைத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். வெளியே எங்கு பார்த்தாலும் படர்ந்திருந்த புகை மண்டலம் மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தது. சற்று தூரத்தில் எந்திரத் துப்பாக்கியோடு ராணுவத்தினர் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகில் ராட்சத ஆட்லறி வண்டிகள் (அதபஐககஉத-ஙஐநநஐகஉ கஅமசஇஏஉதந) நின்றன. இவற்றில் இருந்து ஒரு விநாடிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்து வெடிக்குமாம்.
வெள்ளைத் துணியை அசைத்துக்கொண்டு டாக்டர் நடந்து போன போது சட்டையைக் கழற்றச் சொல்லி ராணுவத்தினர் கத்தினார்கள். டாக்டர் சட்டையைக் கழற்றி இடுப்பில் சொருகிக்கொண்டு, தான் முல்லைத் தீவு அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்ததைக்கூறி, செஞ்சிலுவைச் சிங்கம் கொடுத்த அடையாள அட்டையைக் காட்டினார். அடையாள அட்டையைப் பார்த்த ராணுவ வீரன் சிங்களத்தில் “மூ கொட்டி டொக்டரி’ (இவன் புலி டாக்டர்) என்று சத்தம் போட, மற்ற ராணுவ வீரர்கள் அவர் கைகளில் விலங்கு போட்டு அவரை இழுத்துப் போனார்கள். அதைப் பார்த்த மலர்விழி பயந்துபோய்,””அண்ணா” என்றாள்.
“”மலர் ஒண்டும் யோசியாதே…பேசாமல் இரு…”
“”வெள்ள துண்டை எடுத்துக்கொண்டு போக வேண்டியது தான்” என்று டாக்டர் சொல்லிவிட்டார்.
சாந்தன் மெüனமாக தனக்குள், “நடக்கிற யுத்தத்தில் அகதிகள் சரணடைய வெள்ளைக் கொடி தூக்க வேண்டுமா என்ன? அப்படியானால் இது அழிவுக்கான யுத்தம். இதில் ஆயுதமற்றவர்கள் ஆயுதம் தாங்கியவர்களிடம் சரணடைய வேண்டுமாம். சரணடைதல் என்பது புரிந்தவர்களிடம் செய்வதாகும். புரிதல் இல்லாதவர்களிடம் எவ்வாறு சரணடைய இயலும்? யுத்த தர்மம் தெரிந்தவர்களிடம் சரணடைதல் உயர்வானது. இங்கு நடக்கிற யுத்தத்தில் தர்மமாவது? சரணடைவதாவது?’ எனத் தனக்குள் யோசித்தபோது மலர் மிகுந்த பதற்றத்தோடு பேசினாள்.
“”அண்ணா! வண்ணத்திப்பூச்சி பறந்து போய்விட்டது…”
“”ஐயோ பாவம்…வெளியே போனால் அது செத்துப்போகுமே!” என்றான் சாந்தன்.
அப்போது டாக்டர் சந்துரு சொன்னார்,””மனுசங்களே செத்துப் போகிற நேரத்திலே ஒரு பூச்சி சாவரத பெரூசா சொல்றியே சாந்தன்…”
“”வண்ணத்துப் பூச்சிக்குள்ளும் மனுசனுக்குள்ளும் இருப்பது உயிர்தானே…அந்த உயிர் எடுத்திருக்கும் உருவம்தான் வேறு. மனுசன் பேசவும், ஆடவும், ஆட்டுவிக்கவும் தெரிஞ்சதுனால அவன் உயிர் பெருசாத் தெரியுது!” என்றான் சாந்தன்.
டாக்டர் ஒரு விநாடி அவனைப் பார்த்துவிட்டு மெüனமானார். ஆனால் அவர் மனதுக்குள் எண்ணங்கள் எழுந்தன. “இவன் எப்போது துறவியானான். பெரிய தத்துவம் பேசுகிறானே! ஆனால் அவன் சொன்னது சரி. உயிர் ஒன்றுதான். அதன் உருவம்தான் வேறு’
வெளியே வெடிச்சத்தம் நிற்கவில்லை. எப்போது அது நிற்குமென்று எவருக்கும் தெரியவில்லை. இரவு முழுவதும் வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.பங்கருக்குள் இருந்தான் சாந்தன். ஆனால் அவனுக்குள் ஆயிரம் எண்ணங்கள் புரண்டு புரண்டு எழுந்தன. இதுவரை ஆண்களைத்தான் சட்டையைக் கழற்றச் சொல்கிறார்கள். மலர்விழி பெண், என்ன சொல்வார்களோ? தனக்கு எது நடந்தாலும் அவன் கவலைப்பட போவதில்லை. ஆனால் மலர்விழி? பருவம் அவளைப் பெண்ணாக்கியிருந்தாலும் அவள் உள்ளத்தில் சின்னப்பிள்ளை.
ராணுவ வீரர்கள் முன்னால் சாந்தன் சட்டையைக் கழற்றிவிட்டு வெள்ளைத் துணியைப் பிடித்தவாறு நின்றான். ஒரு ராணுவ வீரன் அவன் அருகில் வந்து அவனை உற்றுப் பார்த்து ஏதோ முணுமுணுத்துவிட்டு அவனுக்குப் பின்னால் பயந்தவாறு நின்ற மலர்விழியைப் பார்த்தான். அவன் பார்வை சாந்தனுக்குப் பயத்தைக் கொடுத்தது. பிறகு அவன் மலர்விழியைத் தனியே நிற்கச் சொல்லிவிட்டு, “”படு பொடிவுனாட்ட ஒந்தாய்” (சரக்கு சின்னதாக இருந்தாலும் நல்லா இருக்கு) என்றான்.
சாந்தனுக்கு சிங்களம் புரியும். ஆனாலும் அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான். அப்போது இன்னொரு ராணுவவீரன் மலர்விழியின் அருகில் வந்து இரண்டு கைகளையும் தூக்கச் சொன்னான். மலர்விழி இரு கைகளையும் தூக்கியவாறு நின்றாள். அதனை ரசித்தான் அவன். பிறகு அவன் கண்கள் மலர்விழியின் முகத்திலிருந்து கால்கள் வரை தேடுதல் நடத்தியதை உணர்ந்தான் சாந்தன்.
அப்போது ஒரு ராணுவவீரன் ஒரு போட்டோவைக் கொண்டு வந்து மலர்விழியோடு ஒப்பிட்டான். பிறகு சிங்களத்தில் பெண்புலி என்றான்.
சாந்தனுக்கு கால்கள் முறிந்துவிடுவதைப்போல் இருந்தது. ஆங்கிலத்தில்,””மலர்விழி புலி இல்லை. சிறுவர் நிகழ்ச்சி மட்டுமே நடத்தியவள். அவள் என் தங்கை. அவளை விடுங்கள். என்னை என்ன வேண்டுமன்றாலும் செய்யுங்கள்” என்றான் அவன். அதற்கு ராணுவ வீரன்,””கட்ட விரப்பியோ” (வாயை மூடு) என்று சொல்லி துப்பாக்கியால் முதுகில் அடித்தான். அதனைக் கண்ட மலர்விழி தன்னையறியாமல் “”அண்ணா” என்று அழுதுவிட்டாள். அவள் அழுகையைக் கிண்டல் செய்வதுபோல் “”அண்ணா” என்ற ராணுவவீரன் சாந்தனை கால்சட்டையைக் கழற்றி நிர்வாணமாக நிற்கச் சொன்னான். நிர்வாணமாக ஏன்? அதுவும் தங்கையின் முன்பா? துப்பாக்கிக் குண்டுகளைவிட மோசமான வார்த்தைகள். ராணுவத்தின் வக்ரம் சாந்தனுக்குப் புரிந்தது. யோசித்தான். இனிமேல் வேறு வழியில்லை. இவர்கள் சொல்வதைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் சாக வேண்டும்! ஒரு விநாடி யோசித்தான்.
அப்போது ராணுவவீரன் கால்சட்டையைக் கழற்றச் சொல்லி துப்பாக்கியால் நெஞ்சில் தள்ளினான். சாந்தன் ஒரு முடிவுக்கு வந்தான். திடீரென்று மலர்விழியை இழுத்துக்கொண்டு ஓடினான் அவன். இதை எதிர்பார்க்காத ராணுவ
வீரர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள்.
சாந்தனும் மலர்விழியும் உடுப்போடு பூமியை முத்தமிடுவதுபோல் விழுந்தார்கள் நிலத்தில். அவர்கள் முதுகைக் குண்டுகள் துளைத்திருந்தன. “”அண்ணா” என்று முணுமுணுத்தவாறு மலர்விழி உயிரை நிறுத்திக்கொண்டாள். அவள் இறந்துவிட்டாள் என்பதை அறிந்த சாந்தன், “”இனிமேல் நிர்வாணத்திற்குப் பயப்பட வேண்டியதில்லை. உயிர் இல்லா உடலை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்” என்ற அவன் நினைவு மயங்க மயங்க…அவன் கண்களுக்குள் வண்ணத்துப்பூச்சியொன்று சிறகடித்துப் பறந்தது.
– மாத்தளை சோமு (மார்ச் 2012)