வண்டின் ரீங்காரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 26, 2023
பார்வையிட்டோர்: 1,117 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த வண்டு தேனைப் பருக ஒரு மலரை விட்டு இன்னொரு மலருக்குப் பறந்து சென்றது. பச்சை சிவப்பு ஊதா மஞ்சள் பழுப்பு என்ற பல வண்ண மலர்களில் அந்தக் கருவண்டு புகுந்து புகுந்து உற்சாகமாகத் தேனைப் பருகும்போது செவ்விய மாதர் வதனத்திலுள்ள கரு விழிகளை நினைவூட்டிற்று.

அது மலரை விட்டு வெளிவரும்போது ரீங்காரமிட்டது. மலரில் தேனைப் பருகும்போதோ ரீங்காரம் ஓய்ந்து போயிற்று!

இந்த வண்டின் இயல்பைக் கண்டதும்…

***

திருவாளர் திருவேங்கடம் ஒரு தமிழ்ப்பள்ளியாசிரியர். தமிழ்ப் பண்டிதருங்கூட. பெரும்பாலான தமிழ்ப் பண்டிதர்களிடம் வலிய உறவு கொள்ளும் வறுமைப் பிணி இவரையும் பற்றிக்கொண்டது.

தாய் தந்தையரைக்கூட நன்கு பராமரிக்க முடியா மல் திண்டாடினார் திருவேங்கடம்.

திருமணம் ஆகவில்லை. மனைவி, மக்கள் இன்பம் அவ்வப் போது தலை தூக்கும். வறுமை நிலை அதை அப்படியே அமுக்கிவிடும்.

நண்பர்களின் தூண்டுதலால் அவர் வறுமை ஒழிப் புச் சங்கத்தில் உறுப்பினரானார். விரைவில் செயலவை உறுப்பினர், துணைத்தலைவர் என்று படிப்படியாக உயர்ந்து அச்சங்கத்தின் தலைவராகி விட்டார்.

பண்டிதரின் சொற்பொழிவு வெகு உருக்கமாக இருக்கும். ஒட்டிய வயிறும், குழி விழுந்த கண்களும், எலும்புக் கூடுகளும் கொண்ட மனித உருவங்கள் அழுக் கேறிய கிழிந்த உடையுடன் நடமாடக்கூட முடியாமல் மூலையில் முடங்கிக் கிடப்பதை அவர் உணர்ச்சிப் பெருக்குடன் சித்திரிக்கும்போது, வறுமைப் பேயின் கோர உருவம் அப்படியே நம் கண்முன் நிற்கும். செல்வர்கள் தங்களுக்கு எவ்வாறு பொருள் சேர்ந்த தென்பதை உணர்ந்து ஏழைகளைக் கைதூக்கி விடுவதே தங்கள் வாழ்க்கை லட்சியமாகக் கொள்வார்களாயின், நாட்டில் ஏழையென்று ஒருவன் இருப்பானா? என்று இடித்துக் காட்டும்போது, “ஐயோ! நம்மிடம் பொருள் இருந்தால் இவர் கூறுகிறபடி செய்து காட்டலாமே” என்னும் ஒரு தீவிர ஆசை மூண்டெழும்.

தம் சொந்த வறுமை அனுபவத்தை இவ்வாறு சொற்பெருக்காற்றி, மக்கள் மனத்தைக் கவர்ந்து புகழ் பெற்றாராயினும், திருவேங்கடத்தின் பொருளாதாரநிலை மட்டும் ஓர் அங்குலம் கூட உயராமல் இருந்தது. பொது நலம் என்னும் போர்வை போர்த்துக்கொண்டு காசு சேர்த்துப் பணக்காரராகும் திருக் கூட்டத்தைச் சேர்ந்தவரல்லர் அவர். மனச்சாட்சிக்கு அஞ்சிய மனிதர்.

எனினும், காலமெனும் காட்டாற்றில் நாம் அடித் துக்கொண்டு போகும்பொழுது, துன்பச் சுழல்களில் சிக்கித் தவித்தாலும் ஓரோர் சமயம் இன்ப வெள்ளத்திலும் மிதக்கிறோமல்லவா?

அவர் நலனில் அக்கறைகொண்ட, சிதம்பரம் என்ற நண்பரின் ஆலோசனையில் திருவேங்கடம் ஒட்டுக்கடை யொன்றைத் திறந்து நடத்தினார். அதற்கு மூலதனமாக சிதம்பரமே அவருக்குச் சிறிது தொகையைக் கடனாகக் கொடுத்து உதவினார்.

கடன் கொடுத்தவரின் கை ராசியோ என்னவோ திருவேங்கடத்தின் ஒட்டுக்கடை ஐந்தாறு மாதங்களுக்குள் பலசரக்குக் கடையாக மாறிற்று. இரண்டு வருடங்களில் அந்தக் கடை பெரிய மளிகைக் கடையாகக் காட்சியளித்தது.

இப்போது திருவேங்கடம் தமிழ் ப் பள்ளியாசிரியரல்ல. மளிகைக்கடை முதலாளி. வறுமை ஒழிப்புச் சங்கத்தின் தலைவரல்ல. (அந்தச் சங்கம் என்றோ கலைந்து மறைந்துவிட்டது)

***

ஒருநாள் திருவேங்கடத்தின் முன்னாள் நண்பர், ஆம்; சிதம்பரந்தான் (தகுதி உயர்ந்ததும் திருவேங்கடம் அவர் நட்புறவைக் கை கழுவிவிட்டார்). அவரைத் தேடிக்கொண்டு மளிகைக் கடைக்கு வந்தார்.

“முதலாளி, தாங்கள்தான் கலைந்துபோன நமது வ.ஒ. சங்கத்தை உயிர்பிக்கவேண்டும். ஏழைகளின் நல்வாழ்வுக்கு உண்மையாக உழைக்கும் தங்கள் தலைமை யிலேயே நாங்கள் தொண்டாற்ற விரும்புகிறோம். தங்கள் ஒப்பற்ற வாக்கு வன்மையினாலும், தற்போது தாங்கள் பெற்றுள்ள உயர்ந்த செல்வ நிலையாலும் நமது சங்கத் திற்கு ஏராளமான உறுப்பினர்களைச் சுலபமாகச் சேர்த்துவிடலாம். ஒரு இயக்கமாக இருந்து வேலை செய்தால்தான் உருப்படியான பலனைக் காணமுடியும்.”

சிதம்பரத்தின் முதல் வார்த்தையைக் கேட்டதுமே திருவேங்கடத்தின் முகம் மாறிவிட்டது. தொடர்ந்து சிதம்பரம் பேசப் பேச அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

வெறுப்புடனும் கோபத்துடனும், “என்ன? சங்கமா? எந்தச் சங்கத்தைச் சொல்கிறீர்கள்?” என்று தெரிந்தும் தெரியாதவர்போல் கேட்டார்.

“முதலாளி! என்ன இப்படிக் கேட்கிறீர்கள்! கலைந்து போன நமது வறுமை ஒழிப்புச் சங்கத்தைத்தான் சொல்கிறேன். மக்கள் மனம் நன்கு பக்குவமடைந்திருக்கும் இப்போது தாங்கள் சிறிது பொருளுதவி செய்து, அதனை மீண்டும் தொடங்கி விட்டீர்களானால் நன்றாய்ப் பிடித்துக்கொள்ளும். அத்துடன் ஏழை மக்களின் பிள்ளைகளுக்குப் பள்ளி உபகாரச் சம்பளம் கொடுக்க வகை செய்ய வேண்டும். நான் நினைக்கிறேன், தாங்கள் அவர்களுக்குக் கைத்தொழிற் கல்வியும் கற்றுத்தர ஏற்பாடு செய்யலாமென்று – என்ன எண்ணுகிறீர்கள்?”

“அப்படியெல்லாம் நான் ஒன்றும் யோசிக்கவில்லை”

“போகட்டும். அவைகளைப் பிறகு பார்த்துக் கொள்வோம். முதலில் நமது சங்கம் புத்துயிர் பெறட்டும்”

இப்போது திருவேங்கடத்தின் மனத்தில் குமுறிக் கொண்டிருந்த ஆத்திரம் கனல் கக்கும் வார்த்தைகளாக வெளிவரத் தொடங்கிற்று:-

“சங்கமாவது? வெங்காயமாவது? என்னால் இப்போது ஒன்றும் செய்யமுடியாது. உங்கள் வ. ஒ. சங்கத் திற்கு என் பொருளை வாரி இறைத்துவிட்டால், பிறகு எனக்குப் பொருளுதவி செய்கிறவர் யார்? இக்காலத்தில் பணந்தான் உயிர்நாடி. பணந்தான் எல்லாம். நான் வறுமையோடு போராடிக்கொண்டிருந்த காலத்தில் நீர் எனக்குப் பொருளுதவி செய்து ஆதரித்ததை நான் மறக்கவில்லை. அரும்பாடுபட்டுத் தேடிய இந்தச் செல் வத்தை இப்போது அழிக்கவும் வழி சொல்கிறீர். பொது நலம்! பொது நலம் என்று நான் இரவு பகல் பாராமல் இருபத்து நான்கு மணி நேரம் உழைத்தேன். என்ன பலனைக் கண்டேன்? உழைத்து உழைத்து ஓடானதுதான் மிச்சம். “தலைவன்” என்னும் வெற்றுச் சொல்வயிற்றுக்குச் சோறுபோடாது என்பதைப் பட்டுத் தெளிந்துவிட்டேன். நான் இனியும் முட்டாளல்ல. கண்ணைத் திறந்து கொண்டு பாழுங்கிணற்றில் விழுவதற்கு! இந்தக்காரியத்திற்கு ஒரு காசுகூட கொடுக்கமுடியாது. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்! நீங்களும் இந்த வீண் முயற்சியை விட்டுவிடுங்கள்.”

***

திருவேங்கடம் சிதம்பரத்திடம் தப்பித்துக் கொண்டாராயினும், தாசி தங்கமணியிடம் தப்ப முடியவில்லை. அந்தச் சுந்தரி இவர் சிந்தையில் குடிகொள்ளஆரம்பித் தாள். பெண் சுகத்தையே இதுவரை அறியாதவரல்லவா?

கண்ணைத் திறந்துகொண்டு கிணற்றில் விழமாட்டேன் என்று தம் நண்பர் சிதம்பரத்திடம் ஜம்பமடித்துக்கொண்ட திருவேங்கடம் இப்போது தங்கமணியின் மோக வலையில் கண்ணிழந்து விழுந்துவிட்டார்.

அவர் சொத்துகள் எல்லாவற்றையும் அந்தச்சிலந்தி சுவைத்து, விழுங்கி, ஏப்பமிட்டுவிட்டு, தனது வீடே கதி யென்றிருந்த அவரை, “உமக்கு இங்கே என்ன வேலை? ஏதாவது தொழில்புரிந்து வயிற்றைக் கழுவும்” என்று எச்சரிக்கை விட்ட பொழுதுதான் அவர் கண்கள் திறந்தன. உண்மை நிலையை உணர்ந்தார்.

அண்மையில் தோழர் திருவேங்கடத்தின் சொற்பொழிவு ஒன்றைக் கேட்கநேர்ந்தது. முன்னாள் தமிழாசிரியரும் இடையில் மளிகைக்கடை முதலாளியும், இப்போது ஏழையர் தோழரான அவர், முதலாளி வர்க்கத்தின் மனப்பான்மையைக் கண்டித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

முகத்திலே கோபக்கனல் வீச, “முதலாளி வர்க்கமான பிணந்தின்னிக் கழுகுகளின் அட்டகாசத்தை ஒடுக்கவேண்டாமா? அவர்கள் பணத்திமிரை அடக்க வேண்டாமா?” என்று கர்ஜித்தார்.

– 1959, காதற் கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *