கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,171 
 
 

மாலை நேரம் —
வேலைக்கு சென்றவர்களும், பிள்ளைகளும் வீடு நோக்கி திரும்ப, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து, கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கும் அந்த முதியவர்கள், நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில், தெருவின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கிற திண்டில் அமர்ந்து கொண்டிருந்தனர். பரஸ்பரம், தினமும் அந்த இடத்தில், மாலை நேரத்தில் சந்திப்பவர்கள் என்பது, அவர்கள் பேச்சிலிருந்து வெளிப்பட்டது.
“”என்ன தியாகு… நாம மூணு பேரும் வந்தாச்சு; தலைவரை இன்னும் காணோம்?”
“”தலைவருக்கு கிளம்பும் போது என்ன வேலை வந்ததோ… எப்படியும் வந்துடுவாரு. இன்னைக்கு அவர்கிட்டே ஒரு யோசனை கேட்கணும்.” அவர்களில் ஒருவர் சொன்னார்.
“”அதோ தலைவர் வந்துட்டிருக்காரு…”
வடிகால்அவர் சுட்டிக்காட்டிய திசையில் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து, நெற்றியில் சந்தன குங்கும பொட்டுடன், எழுபது வயதிலும், கம்பீரமாக நிமிர்ந்து புன்னகைத்தபடி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார், அவர்களால் தலைவர் என்றழைக்கப்படும் சந்தானம்.
அவருக்கு உட்கார இடம் விட்டு, நகர்ந்து கொண்டனர்.
“”ஏன் லேட்டு தலைவரே?”
“”எல்லாம் அன்பு தொல்லை தான். என் மருமக, “இன்னைக்கு, “டிவி’யில ஒரு புது டிஷ் செய்யறதைப் பார்த்தேன். நான் டிரை பண்ணப் போறேன். இருந்து சாப்பிட்டு பார்த்து, எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க மாமா…’ன்னு என்னை நிறுத்தி வச்சுட்டா. வயசான காலத்தில் எண்ணெய் பலகாரம் சாப்பிட்டா செரிக்குமா? ஏதோ அவ ஆசைக்கு, இரண்டு எடுத்து வாயில் போட்டுட்டு வந்தேன். கபீர் பேடாவாம்; பேரு எப்படி இருக்கு?” சொல்லி சிரித்தார்.
“”நீங்க கொடுத்து வச்சவரு தலைவரே… எங்க வீட்லே, மருமக நேரத்துக்கு சாப்பாடு கூட தர மாட்டாள்,” சொன்ன சதாசிவம், “”இன்னைக்கு வீட்டில் நான் எந்த விஷயத்துக்கும் வாயைத் திறக்கலை. தேவையில்லாம நம்ப அபிப்பிராயத்தை சொல்லி, வீண் பிரச்னை தான் வருது. நீங்க சொன்ன மாதிரி அமைதியா இருந்தேன். ஓரளவு இன்றைய பொழுது நல்லபடியா போச்சு தலைவரே…”
“”என்ன செய்யறது சதாசிவம். நாம் பேசி அவங்க கேட்ட காலம் முடிஞ்சுடுச்சு; இப்ப அவங்க சொல்றதை தான் நாம் கேட்கணும். தேவையில்லாம எல்லா விஷயத்திலே÷யும் மூக்கை நுழைச்சு, அப்புறம் மகன், மருமககிட்டே வாங்கி கட்டிக்கிறீங்க… அவங்க குடும்பம், அவங்களுக்கு தெரியும்ன்னு அமைதியாக இருங்க.”
“”ஏதோ நானும், என் மனைவியும் வயசான காலத்தில் தனிக்குடித்தனம் பண்றதாலே, என்னை பொறுத்தவரை இந்த சங்கடம் இல்லை. இருந்தாலும், மகன், மருமகள், பேரன், பேத்திகளோடு ஒண்ணா இருக்க முடியலைங்கிற ஆதங்கம் மனசு நிறைய இருக்கத்தான் செய்யுது. நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்,” தன் மனதிலிருப்பதைச் சொன்னார் தியாகு.
“”என்ன பரமு… வந்ததிலிருந்து வாயைத் திறக்கலை; அமைதியாக இருக்கே. என்ன விஷயம்?”
“”மனசு கஷ்டமா இருக்கு தலைவரே… உங்ககிட்டே ஒரு யோசனை கேட்கணும்ன்னு இருக்கேன். என் மக போன் பண்ணினா. பேரனுக்கு உடம்பு முடியலையாம். பத்து நாள் நீங்களும், அம்மாவும் வந்து இருங்கன்னு கூப்பிட்டா…
“”மருமகளோ… “இப்ப எப்படி போக முடியும். பிள்ளைகளுக்கு ஸ்கூல் நடக்குது. நானும், அவரும் வேலைக்கு போயிடுவோம். வர்றதுக்கு சாத்தியமில்லைன்னு சொல்லிடுங்க. அவங்கவங்க குடும்பத்தை அவங்கவங்க தான் சமாளிக்கணும். நீங்க ரெண்டு பேரும் போயிட்டா, இங்க யாரு பார்க்கிறது?’ என்கிறாள்.
“”நாங்க ரெண்டு பேரும் அவ கண்ணுக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரங்களாத்தான் தெரியறோம். எங்க விருப்பத்துக்கு எதையும் செய்ய முடியலை. அதான் உங்ககிட்டே யோசனை கேட்கணும்ன்னு இருந்தேன்.”
ஒரு கணம் அவரை கூர்ந்து பார்த்த சந்தானம், “”வருத்தப்படாதீங்க பரமு. மகனை பகைச்சுக்க முடியுமா? அவங்க நிழலிலே இருக்கோம். கொஞ்சம் அனுசரிச்சுதான் போகணும். சனி, ஞாயிறு ஒட்டி மருமகளை, இரண்டு நாள் லீவு போட முடியுமான்னு கேளுங்க. ஒரு நடை போயி பார்த்துட்டு வந்துடறோம்ன்னு கோபப்படாம உங்க விருப்பத்தை சொல்லுங்க. நிச்சயம் உங்க மகன் யோசனை செய்து பார்ப்பாரு. உங்களை அனுப்பி வைக்கலைன்னா, நாளைக்கு முதலுக்கே மோசமாயிடும். வீணா பிரச்னை வேண்டாம்ன்னு தான் அவங்களும் நினைப்பாங்க. அவங்களுக்கு உங்க அருகாமை இப்ப தேவைப்படுது. நீங்க போயிட்டு வரலாம். கவலைப்படாதீங்க!”
“”தலைவரே… உண்மையைச் சொல்றோம். சாயந்திர நேரம் இங்க வந்து உட்கார்ந்து, அவங்கவங்க மனசிலே இருக்கிற பாரத்தை இறக்கி வச்சு பேசுறோம். நீங்களும் எங்களுக்கு நல்லவிதமான அறிவுரை சொல்றீங்க. குடும்ப வண்டியும் ஏதோ ஓடிட்டு இருக்கு.”
“”என்ன செய்யறது. எல்லாருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரி அமைஞ்சுடற தில்லையே. நாம் நாலு பேரும், நாலு விதமா வாழ்க்கை நடத்திட்டு இருக்கோம். ஏதோ கடவுள் அருளாலே, எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அன்பான மகன், மருமகள், பேரன், பேத்தின்னு மனசறிஞ்சு நடக்கிற குடும்பம் எனக்கு கிடைச்சிருக்கு…
“”இன்னைக்கும் என் மகன் என்னைக் கேட்காம எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டேங்கிறான். என் மருமக தந்தைக்கு மேல் என் மீது பாசம் காட்டறா. என் மனைவி, இதையெல்லாம் அனுபவிக்க கொடுப்பினை இல்லாம போயி சேர்ந்துட்டா…
“”ஏதோ எனக்காவது கடவுள் இந்த அளவு கருணை பொழிஞ்சிருக்காருன்னு நினைச்சு, உண்மையில் பெருமைப்படறேன். நீங்களும் என்னை மாதிரி குடும்பத்தில் சந்தோஷமாக இருக்கணும்ன்னு தினமும் அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன்.”
“”உங்களுக்கு நல்ல மனசு தலைவரே… கடவுள் ஒரு குறையும் வைக்க மாட்டாரு.”
“”சரி… இருட்டிடுச்சி கிளம்புவோம். நாளைக்கு சாயந்திரம் பார்ப்போம்; வரட்டுமா?”
அவர் எழுந்து கொள்ள, ஆளுக்கொரு திசையில் அவர்கள் வீடு நோக்கி நடந்தனர்.
“”இங்க பாருங்க… உங்க நண்பர், வாங்கின கடனை, இப்போதைக்கு கொடுக்க மாட்டாரு. உங்கப்பா சும்மா தான் இருக்காரு. போயி பார்த்துட்டு வரச் சொல்லுங்க. இந்த மாசம் கல்யாணமெல்லாம் வருது. நமக்கே செலவு அதிகம் இருக்கு. போயி கேட்டாதான் கொடுப்பாரு!”
அப்பாவிடம் வந்தவன், “”10:00 மணி போல, மேல ஊரணி, மூன்றாம் சந்தில், நாலாம் நம்பர் வீட்ல, என் சிநேகிதன் கிருஷ்ணன் இருக்கான். அவன்கிட்டே, வாங்கின பணம், 5,000 ரூபாயை எப்ப தருவான்னு கேட்டுட்டு வாங்க. மாசம் ரெண்டாச்சு!”
அவர் மவுனமாக இருக்க, “”என்ன… சொல்றது விளங்குதா?”
“சரி’ என்பதற்கு அடையாளமாக தலையாட்டினார் சதாசிவம்.
காலை, 10:00 மணிக்கு சூரியன் தகிக்க, வெயிலில் வியர்வை வழியும் முகத்தை துண்டால் துடைத்தபடி நடந்தார் சதாசிவம்.
“மேல ஊரணி, மூன்றாம் சந்துன்னு சொன்னானே… நம்ப தலைவரும் மேல ஊரணி பக்கம் தான் வீடு இருப்பதாக சொல்லி இருக்காரு… ம்… அவரு கொடுத்து வச்சவரு. மகனும், மருமகளும் தாங்கறாங்க. எனக்கு கொடுத்து வச்சது இதுதான்!’
மனதில் அலுப்பு ஏற்பட, கிருஷ்ணன் வீடு நோக்கி நடந்தார்.
மேல ஊரணி, மூன்றாம் சந்தில் நுழைந்தார், பத்து வீடு தள்ளி, ஒரு வீட்டிலிருந்து சந்தானம் வெளியே வருவதைப் பார்த்தார்.
“அதுதான் தலைவர் வீடு போலிருக்கு!’
சந்தானம் இவரைப் பார்க்காமல், அடுத்த தெருவில் நுழைந்து சென்றுவிட, “இன்னொரு நாள் அவர் வீட்டிற்குப் போக வேண்டும்…’ என, மனதில் நினைத்துக் கொண்டார்.
கேட்டை திறந்து வெளியே வந்த கிருஷ்ணன், “”உள்ளே வாங்கப்பா… நீங்க ஏன் வெயிலில் இவ்வளவு தூரம் வந்தீங்க. போனில் சொல்லி இருக்கலாமே… நானே கொடுக்கணும்ன்னுதான் இருந்தேன். இந்த மாசம் செலவு அதிகமாகி, கொடுக்க முடியாம போச்சு. அடுத்த வாரம் நானே கொண்டு வந்து தர்றேன்னு சொல்லுங்க. உள்ளே வாங்க, மோர் சாப்பிட்டுப் போகலாம்.”
“”இல்லப்பா… கிளம்பறேன். அதோ அந்த மாடி வீடு, சந்தானங்கிறவரு வீடு தானேப்பா அது?”
அவர் காட்டிய திசையைப் பார்த்தவன், “”அந்த ரோஸ் கலர் மாடி வீடா… அதுல பிரசாத்ங்கிறவர் இருக்காரு… சந்தானம்ன்னு யாரும் இல்லையே!”
“”இல்லப்பா… நீ தெரியாம சொல்ற… கொஞ்சம் சிவப்பா… உயரமா… நெந்தியில் சந்தன குங்கும பொட்டு வச்சுட்டு இருப்பாரு… இப்ப கூட அந்த வீட்டிலிருந்து வெளியே போனாரு.”
“”ஓ… அவரைச் சொல்றீங்களா…. அவர், அந்த வீட்டிற்குப் பின்னாலே ஷெட்லே இருக்காரு. பாவம் நல்ல மனுஷன். இந்த வீடு கட்டடம் வேலை நடக்கும் போது வந்தாரு. அவர் பிள்ளைங்க வீட்டில் பிரச்னையாகி, வீட்டை விட்டே அனுப்பிட்டாங்களாம். வீட்டுக்காரங்க அவர் நிலைமையை நினைச்சு பரிதாபப்பட்டு, கட்டடத்துக்கு காவலுக்கு வச்சுகிட்டாங்க. அங்கேயே இருந்தாரு…
“”வீடு கட்டி முடிஞ்ச பிறகு, பின்புறம் ஒரு சார்பு மாதிரி போட்டுக் கொடுத்து இருக்கச் சொல்லிட்டாங்க. பகலிலே வீட்டுக்குக் காவல். ஏதாவது வீட்டுக்கு சாமான்கள் வாங்கிட்டு வந்து தருவாரு. மத்தபடி அந்த வீடே கதின்னு இருக்காரு. என்ன செய்யறது…
“”வயசான காலத்தில், கடவுள் ஒவ்வொருத்தருக்கு, ஒவ்வொரு மாதிரி முடிவை காட்டிடறாரு. ஆனாலும், இந்த மனுஷன், பிள்ளைங்க இருந்தும் இப்படி அனாதை மாதிரி ஊரு விட்டு ஊரு வந்து, வாழ்ந்துட்டு இருக்காரு. சாயிந்திரத்தில் காலாற நடந்துட்டு வருவாரு. அவருக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்!”
“பாவம் தலைவர், அவரை வாய்க்கு வாய், “கொடுத்து வச்சவரு…’ன்னு சொல்வோமே… அவருக்குள் இப்படியொரு சோகமா?’
அவருக்குரிய மதிப்பையும், மரியாதையையும் தராமல் தேவை முடிந்தபின், சாப்பாட்டில் கருவேப்பிலையை தூக்கி எறிவது போல், அவரது குடும்பத்தினர், அவரை வெளியேற்றி விட்டனர் என்பதை சதாசிவத்தால் உணர முடிந்தது.
தன் நிலையைத் தெரிவித்து, சுய பச்சாதாபத்தை தேடாமல், தன்னை முன் மாதிரியாக்கி, குடும்பத்தினரால் மதிக்கப்பட்டு, சந்தோஷமாக இருப்பது போல, ஒரு பாவனையை உருவாக்கி, தன் மன ஆசைகளை, தன் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தி, மற்றவர்களுக்கும் நல்ல வார்த்தைகள் சொல்லி ஆறுதல்படுத்தி, சந்தோஷப்படும் அவரை, நண்பர்கள் கூட்டத்தில் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தக் கூடாது என்ற முடிவுடன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார் சதாசிவம்.

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *