வசந்தத்தில் ஒரு நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,014 
 
 

தேவன், அந்த பூச்சூடும் வைபவத்தில் மூச்சுமுட்டுவதை உணர்ந்தான். மெல்ல தப்பித்து மாடி ஏறியபோது பாலூர் சித்தப்பா கூப்பிட்டார்.

“தேவா, உன் புஸ்தகம் வந்ததிலில் இருந்து இவளுக்கு உன்னை பார்க்கணுமாம்”.

அவள் படியேறி வந்துகொண்டு இருந்தாள். நேர்வகிடு எடுத்து வாரப்பட்ட தலைப் பின்னல். மத்திய வயது. சட்டென எந்த சுவாரஸ்யமும் தோன்றாமல் அவன் புன்னகைத்தான். ஆனால் மேலேறி வந்ததும், அவனைப் பார்த்து புன்னகைத்ததும், படியில் கால் விட்டவாறு, கீழே இருந்து பார்ப்பவர்கள் கண்களுக்கு அவள் தெரிகிறமாதிரி அவள் உட்கார்ந்துகொண்டு, “வாணி” என்றதும் அவனுள் சுறுசுறுப்பானது. ஏனென்று தெரியாமல் அவள் லலிதாவை நினைவூட்டினாள்.

தேவன், “ஜாக்கிரதைவுணர்வா?” என்றபோது, “அது என் வேர்” என்றாள்.

நிமிடத்துக்கு நிமிடம் அவள் லலிதாவை நினைவூட்டினாள். “நீங்க எங்க படிச்சீங்க?” என்றதற்கு, “ஏன் என் பிரெண்ட்ஸ் பத்தி யோசனையா?”

“என் புக்கை பத்தி என்ன கேக்கணும் உங்களுக்கு ?”.

“தேவதைக்குன்னு சமர்ப்பணம் பண்ணி இருக்கீங்களே, தப்பித்தலா?”

“வாழ்வின் கண்ணிகளில் இருந்து தப்பிக்கவே அல்லவா மனிதன் பயிற்றுவிக்கபடுகிறான்”

“கலை ஒரு மனிதனை மேம்படுத்தணும்ன்னு நானும் நினைக்கிறேன். ஆனால் சுதந்திரப்படுத்தனும்னு நீங்க சொல்றீங்க”. தேவன் இடைமறித்தான்.

“அது, காம்யு சொல்றது. கலையின் லட்சியம் ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும் சுதந்திரத்தை, பொறுப்புணர்வை அதிகப்படுத்தனும்னு. அதுக்கு நான் உடன்படறேன்”.

“உங்கள் எழுத்து ஒருவரை அவரின் வாழ்க்கை வட்டத்தில் இருந்து இழுக்கிறது சரிதானா?”.

தேவன் உறுதியாக இப்போது நம்பினான், இவள் லலிதாவை அறிந்திருக்க வேண்டும் என. அவனுள் சுரீரென ஒரு வலி பரவியது. எந்த நாளும் தீராக் காயமாய் லலிதா அவன் நினைவுகளில் எரிந்துகொண்டு இருந்தாள்.

வாணி தொடர்ந்து கேட்டாள், “உங்களுக்கு குற்றவுணர்வே இல்லையா? உங்கள் எழுத்து உங்கள் ஆயுதமா?”

“குற்றவுணர்வு இல்லாத மனிதனே இருக்கமுடியாது. அதை வெளிப்படுத்துதல் மனிதனுக்கு மனிதன் வேறுபடும் அவ்வளவுதான்”. அங்கு ஆழ்ந்த மவுனம் நிரம்பியது. “அதே மாதிரி எழுத்தை குறை சொல்லாதீங்க. எழுதுபவன், பாடுபவன், மேஸ்திரி, வெட்டியான் எல்லோருக்குள்ளும் மனசுதான் இருக்கு. என்ன ஒண்ணுன்னா நாங்கள் அதைப் பதிவு செய்துவிடுகிறோம். திருப்பிப் பார்க்கும்போது எப்போதும் வலி நிறைந்ததாய், புரியாதவர்க்கு கேலிப்பொருளாய், மனசை பிரதானமாய் உணர்பவர்க்கு படிக்கும்போதே அதிரச்செய்துவிடுவதாய், கல்லில் செதுக்கி விடுகிறோம் ”

“வாணி, உங்களுக்கு லலிதாவை தெரியுமா?” அவள் அதற்குப் பதில் சொல்லவில்லை. கண்கள் கலங்கி இருந்தது.

“கட்டற்ற சுதந்திரம் வாழ்க்கையை அழிச்சாலும், மறுபடி நியாப்படுத்திக்கொள்ள முடியும் உங்களால்”

“இல்லை, கொலை செய்பவன் கொலையுறுகிறான். இன்னும் சொல்லப்போனால் எழுதும்போது மென்மனமும், வாழும்போது மென்மனம் தாங்கமுடியா யதார்த்தங்களுமாய் நான் அனுபவிக்கும் சித்ரவதைகள் நிறைய. நாம் இரண்டு பேரும் நிற்கும் இடம் ஒன்றுதான். துக்கம் ”

வாணி பதில் சொல்லாமல் கீழே இறங்கினாள். ஒவ்வொரு படியிலும் அவள் வேதனை தெரிந்தது. கடைசிப் படியில் தேவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் வயிறு வேதனையில் சுருண்டது. நகுலனின் வரிகள் நினைவில் ஆடியது

“எந்தக் கதவு எப்போது திறக்கும் என்று யார்தான் சொல்ல முடியும்?”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *