நான் ஓர் ஏழை. எனக்கு அப்பனைத் தெரியாத காலத்திலே அவர் காலமாகி விட்டார். எனக்கு அம்மாதான் எல்லாம். வசதியான பாடசாலையில் என்னைச் சேர்த்துப் படிப்பிப்பதற்கு அம்மாவிடம் பணம் இல்லை. நல்லூர் ஆசீர்வாதப்பர் ஆரம்பப் பாடசாலையில் அம்மா என்னைச் சேர்த்து விட்டார். நான் முதலாம் இரண்டாம் வகுப்புப் படிக்கும்வரை அம்மா என்னைத் தன் அரையில் இருத்திக் காவிக் கொண்டு வந்து பாடசாலையில் விட்டு விட்டு, பாடசாலை முடியும் நேரம் வந்து தூக்கிக் கொண்டு போவா. மூன்றாம் வகுப்பிலிருந்து நான் நடந்து போகத் தொடங்கினேன். எனக்குப் படிப்பதில் கொள்ளை ஆசை நான் எல்லாப் பாடங்க ளிலும் கெட்டிக்காரன். கணக்கில் விண்ணன். எப்பொழுதும் முதலாம் பிள்ளை யாகவே வருவேன்.
அந்தப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரை தான் இருந்தது. நான் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது சம்பத்திரிசியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டு மென்று அம்மாவுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினேன். டிசம்பர் மாதத்தில் அம்மா எங்கள் மருதடி ஒழுங்கையில் வசித்த றோகேசன் ஆசிரியரின் மகன் பிரான்சிஸ்ஸிடம் சம்பத்திரிசியார் கல்லூரியில் சேர விண்ணப்பப்பத்திரம் எடுத்துத் தரும்படி என்னையும் கூட்டிக் கொண்டு போய்க் கூறினார். அவர் அந்த விண்ணப்பப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து என்னிடம் தந்து, தலைமை ஆசிரியரிடம் கொடுத்து நிரப்பி அனுப்பும்படி கூறிவிட்டுச் சென்றார். நான் புளுகத்தோடு அதை அடுத்த நாள் எங்கள் தலைமை ஆசிரியரிடம் கொண்டு போய்க் கொடுத்தேன். அவர் அதை நிரப்பி சம்பத்திரிசியார் கல்லூரிக்கு அனுப்பவில்லை. அவர் வேண்டுமென்றும் செய்யவில்லை. அனுமதி தினத்துக்கு முதல் நான் அந்த விண்ணப்பப் பத்திரத்தை நிரப்பி என்னிடம் கொடுத்து நாளைக்கு இதைக் கொண்டுபோ என்று கூறினார்.
அன்று இரவு முழுவதும் எனக்கு நித்திரை வரவேயில்லை. எப்பொழுது விடியும் எனக் காத்திருந்தேன். அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு அம்மாவையும் கூட்டிக் கொண்டு சம்பத்திரிசியார் கல்லூரிக்குப் போனேன். என்னைப் போல பல பிள்ளைகள் அனுமதி பெற வந்து வரிசையில் நின்றனர். நானும் அந்த வரிசையில் நின்று அனுமதி வழங்கவிருந்த சுவாமியாரிடம் எனது விண்ணப்பப் பத்திரத்தைக் கொடுத்தேன். எனக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்று யேசுவை வணங்கியபடி இருந்தேன். என் விண்ணப்பப் பத்திரத்தை வாங்கிப் பார்த்த அந்தச் சுவாமியார் இது முதலில் அனுப்பியிருக்க வேண்டுமென்று சுழட்டி எறிந்து விட்டார்.
அம்மா பாவம். அது படிக்காதது. அதற்குக் கண் கலங்கிப் போச்சு. எனக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும். என்ன செய்வதென்று எங்களுக்குத் தெரியவில்லை. எனக்கு அழுகை வரத் தொடங்கியது. அம்மா தன் முந்தானைச் சேலையால் என் கண்ணீரைத் துடைத்து விட்டு “நீ அழாதை நான் வேறை எங்கையெண்டாலும் ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுறன்” என்று கூறி என் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டா.
எனக்கு படிக்கும் ஆசை தணியவில்லை. அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு அவ போகுமிடமெல்லாஞ் சென்று என்னை ஒரு பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடு என்று தொல்லை கொடுத்தேன். எந்தப் பள்ளிக்கூடத்திலே எப்படிச் சேர்ப்பதென்று அம்மாவுக்கு தெரியவில்லை. என் தொல்லை தாங்காமல் எங்கள் ஒழுங்கையில் வசித்த ஓவசியரின் மகன் அரியத்திடம் போய் என்னை ஏதாவதொரு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடு தம்பி என்று கெஞ்சினாள். அந்த அண்ணர் அடுத்த நாள் என்னை ஸ்ரான்லிக் கல்லூரிக்குக் கூட்டிச் சென்று அதிபரிடம் பேசினார். அதிபர் விண்ண ப்பம் முதலில் அனுப்பாததால் அனுமதி வழங்க முடியாதெனக் கூறினார். அரியம் அண்ணர் எங்கள் குடும்ப நிலையை அவருக்குக் கூறியும் அவர் எங்களைத் துரத்தி விட்டார். ஏழைகளின் பிள்ளைகள் படிக்கக் கூடாதென்று அவர் நினைத்தாரோ என்னவோ எனக்கு அப்போது விளங்கவில்லை. இரவில் அம்மாவின் மடிக்குள் படுத்துக் கிடக்கும் போது “அம்மா நான் படிக்க வேணும் ஆரையும் பிடித்து ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடு” என்று அலுப்புக் கொடுத்தேன். அது பாவம். அதுக்கு யாரைப் பிடிக்க வேண்டுமென்றே தெரியவில்லை. அது முத்திரைச் சந்தையில் காய் கறி வாங்கிக் கடகத்தில் சுமந்து கொண்டு தெருத்தெருவாய் அலைந்து விற்றுத்தான் எனக்குச் சோறு போட்டா.
பாடசாலைக்குப் போகின்ற என் வயதொத்த பிள்ளைகளைப் பார்த்து நான் ஏங்கினேன். இதற்கிடையில் முதலாந்தவணை முடிந்து விட்டது. எனக்குப் படிக்க ஒரு பாடசாலையும் கிடைக்காதோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன். அந்த ஓவசியரின் மகன் அரியம் ஒரு நாள் வீட்டுக்கு வந்து கொழும்புத்துறை சூசையப்பர் சாதனா பாடசாலையில் சேர்க்கலாம் என்று அம்மாவிடம் கூறினார். நான் அவர் கையை அன்போடு பற்றி “அண்ணை என்னை அங்கையெண்டாலுஞ் சேர்த்து விடுங்கோ ”” என்று கெஞ்சினேன். அடுத்த நாள் அவர் என்னை அப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார். அந்தப் பள்ளிக்கூடம் என்னைப்போல் ஏழைகள் படிக்கின்ற பள்ளிக்கூடம். அங்கு அனுமதி கிடைப்பதில் சிரமம் இருக்கவில்லை.
– நான் பேரானந்தத்துடன் அம்மாவிடம் வந்து அந்த நற்செய்தியைக் கூறி எனக்குப் புத்தகங்களும் கொப்பிகளும் வாங்கக் காசு கேட்டேன். அம்மாவிடம் பணம் இருக்கவில்லை. அவ எங்கள் ஒழுங்கையில் வட்டிக்குப் பணம் கொடுக் கின்ற தம்பர் “பொஞ்சாதியிடம்” பத்து ரூபா வட்டிக்கு வாங்கிக் கொடுத்தா. இது 1949 ஆம் ஆண்டு. பத்து ரூபா பெருங்காசு. அந்தப் பத்து ரூபாவில் வாங்கக்கூடிய இரண்டு புத்தகங்களையும், ஐந்து கொப்பிகளையும் வாங்கிக் கொண்டு அந்தப் பாடசாலைக்குப் படிக்கச் சென்றேன். எங்கள் வீட்டிலிருந்து அப் பாடசாலை நான்கு மைல் தூரமிருக்கும். என்னிடமிருந்த ஒரே ஒரு நீலக் காற்சட்டையும் வெள்ளைச் சேர்ட்டையும் அணிந்து கொண்டு காலை ஆறு மணிக்கு அந்த நான்கு மைல் தூரமும் நடந்து சென்றேன். அம்மாவிடம் எனக்கு இன்னொரு காற்சட்டையும் சேர்ட்டும் வாங்கித் தரப் பணம் இல்லை. எனக்கு அம்மாவிடம் கேட்கவும் மனசு வரவில்லை. அதிகமான நாட்கள் காலைச் சாப்பாடு சாப்பிட வழியில்லை. பகல் உணவுக்காக ஒரு மணி நேரம் இடைவேளை விடுவார்கள். நான் கொழும்புத்துறை கடற்கரையில் போய் நின்று கடலைப் பார்த்துவிட்டு வந்து வகுப்பறையில் அமர்ந்து விடுவேன்.
அப் பாடசாலைக்குச் சென்று ஆறு மாதம் ஆகவில்லை. என்னிடம் தேவையான புத்தகங்கள் கொப்பிகள் இல்லாததால் ஆசிரியர்கள் தரும் வீட்டுப் பாடங்களை என்னால் செய்ய முடியவில்லை. ஒரு நாள் மரியாம்பிள்ளை என்னும் ஆசிரியர் நான் வீட்டுப் பாடம் செய்யவில்லையென்று தூணைக் கட்டிப்பிடிக்கச் சொல்லிக் குண்டியில் பிரம்பால் தாறுமாறாக அடித்து விட்டார். நான் வீட்டுக்கு வரும் வழியெல்லாம் அழுது கொண்டு வந்தேன். அன்று தொடங்கி நான் பாடசாலைக்குப் போகவில்லை.
ஒரு நாள் மாலைப் பொழுது, அம்மா காய்கறி விற்றுவிட்டு எனக்குப் பாண் வாங்கிக் கொண்டு வந்து தந்தார். அதை நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எனக்கு எண் கணிதம் கற்பிக்கின்ற ஆசிரியர் லூக்காஸ் மாஸ்ரர் சைக்கிளில் வீட்டை வந்து இறங்கினார். நான் அதிசயித்துப் போனேன். நான் பாணை வீசிவிட்டு எழுந்து நின்றேன். அம்மா களைப்பில் முந்தானைச் சேலையை விரித்து விட்டு விறாந்தையில் படுத்துக் கிடந்தார். நான் உடனே அம்மாவை எழுப்பி விட்டேன். அவரை இருக்கும்படி கூற வீட்டில் கதிரையில்லை. நான் நிலத்தில் இருந்து குப்பி விளக்கில் படிப்பேன். அதனால் பல தடவைகள் என் தலை முடி எரிந்திருக்கிறது. நான் கைகளை மார்பின் மீது கட்டிக்கொண்டு மௌனமாக நின்றேன். அம்மாவும் எழுந்து அவர் முன்னால் மரியாதையாக நின்றாள்.
“உங்கடை மகன் ஏன் பள்ளிக்கூடத்துக்கு வாறதில்லை? இவன் கெட்டிக்காரன். நல்லாப் படித்து வருவான். அவனை நாளைக்குப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்கோ. வேண்டிய கொப்பி புத்தகங்கள் நான் வாங்கிக் கொடுக்கிறன்” என்று சொன்னார்.
“என்ரை பிள்ளைக்கு ஆரோ மாஸ்ரர் மோசமாக அடித்துப் போட்டார். என்ரை புள்ளை படிக்க வேணுமெண்டு துடியாத் துடித்தான். இப்ப பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டன் எண்டு நிற்கிறான். நான் ஏழை நான் என்ன செய்வன்?” என்று அம்மா கூறியபோது அவவின் கண்கள் கண்ணீர் சிந்தின.
“எனக்கு நடந்தது தெரியும். நீங்க கவலைப்பட வேண்டாம். நான் எல்லாம் பார்த்துக் கொள்றன். புள்ளையை நாளைக்குப் பாடசாலைக்கு அனுப்புங்கோ” என்று கூறிய அவர் என் தலையைத் தடவி விட்டார்.
“நீ நாளைக்குப் பாடசாலைக்கு வா, என்ன?”
“ஓம் சேர்”
அவர் சைக்கிளில் ஏறிப் போய்விட்டார்.
லூக்கஸ் மாஸ்ரர் நல்ல கறுப்பு. ஆஜானுபாகுவான தோற்றம். வேட்டியும் நஷனலும் அணிந்து கறுப்புச் செருப்புடன் அவர் நடந்து வரும் போது மாணவர்களுக்குக் குலை நடுங்கும் பயம். கறுப்புப் பிறேம் போட்ட கண்ணாடிக்குள்ளால் வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவனையும் ஊடுருவுகையில் எல்லோரும் அடங்கி ஒடுங்கிப் போவர். நேரந் தப்பாது வந்து படிப்பிப்பார். அவர் அடித்தாலும் அன்பு காட்டுவதால் எல்லோருக்கும் அவரில் விருப்பம். எனக்கும் தான்.
அவர் கூறியதைக் கேட்டு எனக்கு ஒரே ஆனந்தம். அவர் போனவுடன் எனது நீலக் காற்சட்டையையும், சேர்ட்டையும் எடுத்துக்கொண்டு கிணற்றடிக்குச் சென்று அவற்றைச் சவர்க்காரமில்லாமல் தண்ணீரில் அலம்பிக் காயப் போட்டேன்.
அடுத்த நாள் எப்போது விடியும் எனப் பார்த்திருந்து விடிந்ததும் நேரத்தையும் பார்க்காமல் நீலக் காற்சட்டையையும், சேர்ட்டையும் அணிந்து என்னிடமுள்ள புத்தகங்கள், கொப்பிகளையும் தூக்கிக் கொண்டு பாடசாலைக்குப் புறப்பட்டேன். அம்மா தேநீர் கொண்டுவந்து தந்து இரண்டு ரூபாவும் தந்தார். நான் பாடசாலைக் கட்டிடத்துக்குள் போகையில் லூக்காஸ் மாஸ்ரர் அலுவலகத்தில் இருந்தார். என்னைக் கண்டு விட்டார். “இங்கை வா” எனக் கைச் சைகையால் காட்டினார். நான் அவர் முன் போய் அடக்க ஒடுக்கமாய் நின்றேன்.
“இந்தா, இதில் உனக்குத் தேவையான புத்தகங்களும் கொப்பிகளும் இருக்கு. உன்னைப் போல் நானும் ஒரு ஏழையாய் பிறந்து கஷ்டத்தின் மத்தியில் தான் படித்தேன். நீ நல்லாப் படிக்க வேணும். படிப்பில் கவனமாயிரு. கெட்ட சிநேகிதம் கூடாது. உனக்குத் தேவையானதை என்னிடம் வந்து கேள் சரியா?” இந்தா இந்த “பாக்” கைப்பிடி, கொண்டுபோய் திறந்து பார்” .
“ஓம் சேர்”
அவர் கொடுத்தவற்றைப் பக்குவமாய் வாங்கிக்கொண்டு வகுப்பறைக்குச் சென்றேன். என் வாங்கில் அமர்ந்து அந்த “பாக்”கைத் திறந்தேன். ஒரு நீலக் காற் சட்டையும் வெள்ளைச்சேட்டும். எனக்கு நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை.
அன்று தொட்டு தீவிரமாகப் படித்தேன். ஆறாம் வகுப்பில் இரண்டாந் தவணைப் பரீட்சையில் முதலாம் பிள்ளையாக வந்தேன். அடுத்தடுத்து ஒவ்வொரு ஆண்டும் முதலாம் பிள்ளையாக வந்து எஸ். எஸ்.சி. பரீட்சையில் திறமையாகச் சித்திய டைந்தேன். அந்த வெற்றியில் என்னைவிட லூக்காஸ் மாஸ்டரே பெருமகிழ்ச்சி அடைந்தார். “நீ இன்னும் படித்து உயர்ந்த நிலை அடைய வேணும்” என வாழ்த்தினார். நான் அதன் பிறகு ஒரு வேலை தேடி ஆசிரியர் புகுமுகப் பரீட்சை, எழுதுவினைஞர் பரீட்சை, தபால் தந்தி இயக்குநர் பரீட்சை, எல்லாம் எழுதினேன்.. அம்மா தன்னை ஒறுத்து மிச்சம் பிடித்து பரீட்சைக் கட்டணங்களைத் தந்தார். முதலிலே ஆசிரியர் புகுமுகப் பரீட்சை முடிவுகள் வெளியாகின. நான் கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலைக்கு எடுபட்டேன். லூக்காஸ் மாஸ்டரை அவர் வீட்டில் போய்ச் சந்தித்தேன். “நீ கெட்டிக்காரன். மேலும் மேலும் படிக்க வேணும்” என்று கூறினார். அவருடைய வார்த்தைகள் எனக்குப் பெரும் உற்சாகமாக இருந்தன. நான் கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெறும் காலத்திலே என்னைக் கண்டால், “உனக்கு ஏதும் தேவையா?” என்று அவர் கேட்பார். “இல்லை சேர்” என்று என் வறுமையை எனக்குள் அடக்கிக் கொள்வேன்.
ஆனால் அத்தகைய அன்பு மிக்க ஆசானைப் பெற்றதையிட்டு மனதுக்குள் பெருமைப்படுவேன்.
நான் ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை முடித்த போது பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டதனால் எங்களுக்கு நியமனம் மூன்று ஆண்டுகளாகக் கிடைக்கவில்லை. லூக்காஸ் மாஸ்டரின் ஊக்கல் என் மனதுள் இயங்கியதனால் அந்த மூன்று ஆண்டுகளும் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சைக்காக என்னைத் தயார் செய்து பரீட்சை எழுதினேன். பரீட்சை எழுதி முடிந்ததும் எனக்குப் பதுளையில் நியமனம் கிடைத்து ஆறு மாதங்களில் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானேன்.
நான் கலைப் பட்டதாரியாகி ஒரு விடுமுறை காலத்தில் யாழ்ப்பாணம் சென்றேன். ஒரு நாள் யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்கு முன்னால் சைக்கிளில் சென்று கொண்டிருக்கையில் அந்த வழியாகச் சென்ற லூக்காஸ் மாஸ்டரைச் சந்தித்துவிட்டேன். உடனே சைக்கிளால் இறங்கி “சேர்” என்று அழைத்தேன்.
அவரும் உடனே சைக்கிளால் இறங்கி என்னைப் பார்த்தார்.
“யோசேப்”
“சேர் நான் பட்டதாரியாகி விட்டன், உங்கள் உதவியும் ஆசியும் தான்” என்றேன்.
“எனக்குப் பெருஞ் சந்தோஷம். நீ இன்னும் படிச்சு முன்னேற வேணும்.”
“நான் படிச்சு முன்னேறுறன் சேர்” –
அவர் என் முதுகில் தடவி “நல்லாயிரு” என்று கூறிவிட்டுச் சென்றார்.
நான் கல்வி டிப்புளோமா கொழும்புப் பல்கலைக்கழகத்தில் செய்து “சிறப்புச் சித்தி எய்தி முதுதத்துவமானி பட்டத்துக்காகப் பயின்று கொண்டிருக்கையில் கொழும்பில் எமது தூரத்து உறவினரின் திருமணத்துக்கு மனைவியுடன் சென்றேன். அங்கு ஒரு கதிரையில் லூக்கஸ் மாஸ்டர் இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியோடு அவர் முன்னால் சென்று நின்றேன்.
அவர் உடனே எழும்பி என் கைகளைப் பிடித்து, “நீ உயர்ந்துவிட்டாய். உன் முன்னால் நான் இருக்கமுடியாது. உன் படிப்புக்கு மதிப்புத் தரவேண்டும்” என்றார்.
என் கண்கள் கலங்கின. நான் கூனிக் குறுகிப் போனேன். அந்த உயர்ந்த ஆசானை இன்றும் நினைத்துக் கொண்டே என் கல்விச் சேவைகளை ஆற்றுகின்றேன். அந்த ஆசிரியனின் ஆசிரியத்துவம் மகத்தானது. அது என் உள்ளத்துக்குள் வேலை செய்து கொண்டே இருக்கிறது.
– தினகரன் 1995 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995