லாரிச் சிங்கி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 9, 2024
பார்வையிட்டோர்: 446 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

புகழ்மிக்க மலைக்கோவில் ஒன்றின் அடிவாரத்திற்கு அருகே ஒரு பூங்கா. மரம்விட்டு மரந்தாவும், காட்டின் ஜோக்கர்களான பத்துப்பதினைந்து குரங்குகள், எட்டடி நீளமும், மூன்றடி அகலமும், மூன்றடி உயரமுங் கொண்ட கம்பி வலையால் பின்னப்பட்ட இரும்புக் கூண்டுக்குள், கும்பலாக இருந்தாலும், ஒவ்வொன்றும் தனிமைப்பட்டது போல் தவித்துக் கொண்டிருந்தன. வானத்தை மோனமாக வெறித்துக் கொண்டிருந்தவை, வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தவை, குட்டிகளைப் பிடித்துக் கொண்டிருந்தவை, பிடித்த குட்டிகளை தள்ளிக் கொண்டிருந்தவை – இப்படி பல்வேறு நிலையில் பல குரங்குகளும், ஒரு குரங்கே, பல்வேறு நிலையிலுமாக, போராடி ஒய்ந்த களைப்பில், புரியாத எதிர்காலத்திற்குப் பயந்தவை போலவும், களிப்பான கடந்த காலத்திற்கு ஏங்குபவை போலவும், மெளனமே கொடுரமாக, மனிதனை எமனாக நினைத்து மயங்கிக் கொண்டிருந்தன.

இதற்கு முரணாக, ஏழெட்டு நரிக்குறவர்களும், குறத்திகளும் கூண்டுக்கு அருகே குதுகலமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கிழிந்த பிரம்புப்பாய் ஒன்றில், ஒர் இளங்குறத்தி டப்பாவுக்குள் கையைவிட்டு, டப்பாபோல் இருந்த தன் வயிற்றுக்குள் ஆகாரத்தை வாரி விட்டுக் கொண்டிருந்தாள். ஒரு கிழவி, தன் பெரிய உடம்புக்குள் சின்னப் பாவாடையை, அகலப்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு இளங்குறத்தி ஒருத்தி, எந்த டாக்டரோ கொடுத்த வெள்ளைக்கோட்டை போட்ட ஜோரில், இரண்டு வயதுக் குழந்தையாக ஆன மாதிரி, தன் இரண்டு தோள்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு, புருஷன் தன்னைக் கவனிக்கிறானா என்ற நானங் கலந்த பார்வையை வீசிக் கொண்டே, பாவாடை முனையை லேசாகப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தாள். இரண்டு மூன்று நடுத்தர வயதுப் பெண்கள், முழங்கை வரைக்கும் வியாபித்த, சட்டையா அல்லது ஜாக்கெட்டா என்று கண்டுபிடிக்க முடியாத அல்லது அவை இரண்டுஞ் சேர்ந்த புதிய உடுப்புக்களுக்கு மேலே, சூரிய காந்தி பூவைப் போல, அடுக் கடுக் காக, வட்டத்திற்குமேல் வட்டமாக படர்ந்திருந்த கருகுமணி மாலை, வெள்ளைப்பாசி மாலை, சிவப்புப்பாசி மாலை, மஞ்சள் மணி மாலை முதலிய மாலைகள் சகிதமாய், காவிப்பற்கள் மாலை வெயி லில் பட்டு, வான வி ல் போல் ஜொலிக்க உட்கார்ந்திருந்தார்கள்.

குறவர்களோ, குடியும், குடித்தனமுமாக விதிக்கப்பட்ட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கிழவன், தேக்குக் கம்பு ஒன்றில் அரத்தினால் பலவித கோடுகளை அறுகோணம் போலவும், முக்கோணம் போலவும், தீட்டிக் கொண்டிருந்தார். இருந்தவர்களிலேயே எடுப்பாகத் தெரிந்த செங்கோடன் கூண்டைத் திறந்து, குரங்குகளுக்கு, பொறி கடலை, நெல்லுப்பொறி போட்டுக் கொண்டிருந்தான். பொறி வைத்து பிடித்துவிட்டு, பொறிகடலையோடும் அவனை, சில குரங்குகள் குரைத்தபோது, டப்பாவையே சாப்பிடப் போகிறவள்டோல், இன்னும் உண்ட வேலையை மட்டும் கருதியவளாய், அந்த உணவுக்கு வழி செய்யும் வேலையை செய்ய மறந்தவளாய் இருந்த டப்பாக்காரியை அதட்டினான் செங்கோடன்.

“ஹே.ஹே..முட்டக் கண்ணு. முட்டக்கண்ணு. எத்தனோ தரம் சாப்புட்றது. ஏய்ந்திரு கழுதெ. கழுதெ. கொரங்கோ… அடைப்பியா. தின்னுப்புட்டே… வயிறுபுடக்க… கெடப்பியா…”

‘முட்டக்கண்ணு’ என்ற இடுகுறிக்கு ஆளான டப்பாச் சோற்றுக்காரியான ஷோக்காட்டாளுக்கு ஆத்திரம் பீறிட்டது.

‘மன்ஷல்லே. பலா அந்தஸ்துண்டு. நீ. ஏதோ ஒரு அந்தஸ்த காட்டுறியா… காட்றா. பாக்கோலாம். காட்டுறியா. காட்றா பாக்கோலாம்…”

செங்கோடன், மன்ஷ அந்தஸ்துக்களாகக் கருதப்படும் வில்லில் ஒரே கல்லால், கெளதாரியை அடித்தல், தன்னந் தனியாக குரங்கைப் பிடித்தல், நரிபோல ஊளையிடுதல், ஐந்தரை கிளாஸ் சரக்கை அனாவசியமாகக் குடித்தல், மாரி மீனாட்சி (மதுரை மீனாட்சி) மேல் பாட்டுப் பாடல், எருமைக் கிடாவின் கழுத்துப் பக்கத்தில் தோலை உரித்து, புடைத்து நிற்கும் இரண்டு நரம்புகளை வில்லால் அடித்து, ரத்தத்தை நீருற்றுப்போல் வரவழைத்தல் போன்றவற்றில் எந்த அந்தஸ்தைக் காட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, டப்பாக்காரியான முட்டைக்கண்ணு மீண்டும் காத்தறா… பாக்கோலாம். காத்தறா பாக்கோலாம் என்றாள்.

செங்கோடன் மிரளும்படி, டப்பாக்காரி மிரட்டுவது அவன் மனைவி வெள்ளைக் கோட்டுக்காரிக்கு கோபத்தைக் கொடுத்தது. ‘மன்ஷ அந்தஸ்தைக் காட்ட முடியாமல் போன கணவனுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவள், அவனால் காட்ட முடியாது என்பதைக் காட்டிக் கொடுத்த களிப்பில் கைதட்டிச் சிரித்த முட்டக்கண்ணான டப்பாக்காரி மேல் கோபம் வந்தது அவளுக்கு. இவள் சவாலிட்டாள்.

“ஹே. ஹே.. ஷோக்காரி. முட்டக்கண்ணோய்… பொம்புள மேலே பலா அந்தஸ்துண்டு. நீ ஒண்ணே ஒண்ணு காட்டே… பாக்கலாம்… காட்டே பாக்கலாம்.”

முட்டக்கண்ணுவின் புருஷன் சும்மா இருப்பானா? வரையாடு மாதிரி எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு, மனைவிக்கு ஒத்தாசை செய்ய வேண்டும் போலிருந்தது. வெள்ளைக் கோட்டுக்காரி, அவனுக்குக் கூடப் பிறந்த தங்கை, ஆகையால் உரிமையோடு கையை ஓங்கிக் கொண்டே ஹே. ஹோ. லாரிச் சிங்கி. அண்ணோனும் தங்கோயும் தொமாஷ் பண்னோனா ஒன்மேல எது வந்தோதுது என்று அதட்டினான். இந்த அதட்டலைப் பார்த்ததும் செங்கோடனுக்கு கோபம் வந்தது. பின்னர் அண்ணன் காரன் தங்கைக் காரியை அடிக்கப் போவதுபோல் பாச்சா காட்டுவதில் தப்பில்லை என்று உணர்ந்தவன் போல், திக்குமுக்காடிக் கொண்டிருந்போது, கோவணம் மட்டுமே கட்டியிருந்த இன்னொரு இளங்குறவன், கையிலிருந்த டப்பாவை அடித்துக்கொண்டே தக்கா புக்கா. புக்கா தக்கா. தக்கா. தக்கா. புக்கா. புக்கா…’ என்கிற மாதிரி ஒரு பாட்டைப் பாடிக்கொண்டு டப்பாங்குத்து ஆடியதைப் பார்த்து, எல்லோரும் சிரித்தார்கள்.

அப்போது கம்பீரமான தோற்றத்துடன் ஒருவரும், அவருக்கு அக்கம்பக்கமாக இருவரும் பூங்காவிற்குள் வந்தார்கள். கம்பீரமான மனிதர், அந்த பஞ்சாயத்தின் தலைவர். எம்.எல்.ஏ ஆகிவிடலாம் என்று இப்போதே பெரிய துண்டை முழங்கால் வரைக்கும்விட்டு, பழகிக் கொண்டிருப்பவர்; ஏய்… இன்னுமா போகலே? சைதாப்பேட்டை ஆளுங்க தேவல போலுக்கே என்று அதட்டினார். சைதாப்பேட்டையில் குடியமர்த்தியிருக்கும் நரிக்குறவர்கள், சென்னை நகர சாவாச தோசத்தால், குரங்குகளைப் பிடிப்பதைவிட, மனிதர்களை பிடிப்பதால் அதிகபலன் ஏற்படுவதை உணர்ந்து, குரங்கு பிடிப்பை விட்டு விட்டபடியால், பஞ்சாயத்துத் தலைவர் ஆற்காட்டில் இருந்து, இந்த நரிக்குறவர்களை வரவழைத்தார், கோவிலுக்கு வரும், பக்தர்களின் வாழைப்பழம் தேங்காய் வகையறாக்களை தட்டிப் பறித்து முன்னேறிய குரங்குகள் இப்போது வரிசை வரிசையாக மட்டுமல்லாமல் முன்வரிசை பின் வரிசையாகவும் இருந்த கடைகளில் உள்ள வாழைப்பழங்களையும், தேங்காய்களையும் பகிரங்கமாகத் திருடுவதோடு, மாலைகளையும் எடுத்துக் கொண்டு போய், பல்லைக் காட்டின. இதனால் மேலும் பல்லைக்கடிக்க முடியாத கடைக்காரர்கள் சங்கம், குரங்கு களிடமிருந்து தங்கள் பொருளாதாரத்தைத் காக்க வேண்டுமென்றார்கள். பஞ்சாயத்துக்காக கட்டப்படுவதாக இருந்த லைசென்ஸ் பனம், கடைவரி தொழில்வரி முதலிய வரித்தொகையை பஞ்சாயத்துக்குப் பதிலாக, குரங்குகளுக்கு கட்டுவதாகக் கூக்குரலிட்டார்கள். அவர்களிடம் வரிபாக்கி இருப்பதுபோல், ஒட்டு இருப்பதையும் உணர்ந்த பஞ்சாயத்துத் தலைவர், இந்த நரிக்குறவர்களை ஆற்காட்டிற்குப்போய் கூட்டி வந்தார். ஒரு குரங்குக்கு மூன்றரை ரூபாய்; பெரும்பாலான குரங்குகள் பிடிபட்டதும், அவற்றை லாரியில் ஏற்றி அவை திரும்பி வரமுடியாத தொலைவில் உள்ள ஏதாவது ஒரு காட்டில் கொண்டு விடுவதாக ஏற்பாடு.

சூரியன் மலையுச்சிக்கு நேர்கோடு போல் வந்துவிட்டது. இன்னும் அவர்கள் வேலையைக் கவனிக்காமல் இருப்பதைப் பார்த்து உறுப்பினர்கள் சகிதமாக வந்த தலைவர் ஆத்திரப்பட்டார்.

‘ஏய். செங்கோடா… இந்தாடா பணம்’

‘அல்லா கொரங்கோயும். பிட்ச பொறவு தாங்கோ சாமி

‘இது குரங்குக்கு இல்லேடா… ஒங்களுக்கு. மரியாதயாய்… இந்தப் பணத்துல. உடனே பஸ் பிடிச்சி. ஆற்காட்டுக்கு. போய்ச் சேருங்க. டான்ஸ் ஆடுற நேரமாடா இது.

அப்போதுதான் நரிக் குறவர்கள் சுதாரித்தார்கள். ஷோக்காட்டாள் எம்டியாக போனதோடு, அடிவாரமும் தேய்ந்து போன டப்பாவை, முந்தானையால் டப்பாவுக்குள் துடைத்துவிட்டு, அவசர அவசரமாக கூண்டுப் பக்கம் போனாள். இரும்பு கூண்டை சற்று நகர்த்தி, அதை இன்னொரு கூண்டின் வாய்ப்பக்கம் கொண்டு போய் இடைவெளியைக் குறைத்து, குரங்குகளை கம்பிவலைத் துவாரங்கள் வழியாக, ஒரு கம்பை விட்டு லேசாக அடிக்க, குரங்குகள் ஒன்றோடொன்று சண்டை போட்டுக் கொண்டே அந்த கூண்டிற்குள் ஒடின. அதன் இரும்புக் கதவை மூடிவிட்டு, அவள் முதுகை நிமிர்த்தியபோது, செங்கோடனும், இன்னும் இரண்டு பேருமாக முதுகுகளைக் குனிந்து, எம்டியாகப் போன இரும்பு கூண்டைத் துக்கினார்கள். இதரக் கிழக்குறவர்களும், குறத்திகளும் பரபரப்பாக அல்லது பஞ்சாயத்துத் தலைவர் அப்படி நினைக்க வேண்டும் என்பது போல, பம்பரமாகச் சுற்றிக்கொண்டு, மீண்டும் தத்தம் இடத்தில் தயாராக நின்றார்கள். குரங்குகள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை, சேடிஸ்டிக்காக ரசித்துக் கொண்டிருந்த பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் தன் சந்தேகத்தை வினாவாக்கினார்.

‘டேய் செங்கோடா… குரங்குக ஏண்டா – இப்படிச் சண்டை போடுதுங்க’

‘நம்ம பஞ்சாயத்துக் கூட்டத்தை… அடிக்கடி பார்த்திருக்கும்’. என்றார் தலைவர் பொடி வைத்து செங்கோடன் விளக்கினான்.

‘அதா சாமீ. கொரங்கோ. கொம்பல்லோ பிட்சா. கலாட்டா இல்லே. இதுங்க… பலாப்பலா கொம்பல்லோ பிட்சது. அதான் கலோட்டா”

“மன்ஷன். தன். கொம்பல்லோ கலாட்டா பண்றான். இன்னோர். கொம்பல்லோ. பயத்துலே. சொம்மா. இருக்கான். ஆனா. கொரங்கோ கொம்பல்லோ சொம்மா. வேற கொம்பல்லோ கலோட்டா…’ என்றாள் வெள்ளைக் கோட்டுக்காரி.

‘ஏய்… லாரிச்சிங்கி.கொரங்கோ. சொம்மா இருக்க மாட்டே என்று செங்கோடன் மனைவியை அதட்டியபோது, குற்றாலக் குறவஞ்சில… சிங்கின்னு… படித்திருக்கோம். இது என்னடா… லாரிச் சிங்கி என்றார் இன்னொரு உறுப்பினர். செங்கோடன் தன் மனைவியைப் பற்றி பேச்சுத் திரும்பியதில் கோபப்பட்டு, நின்றபோது, ஷோக்காடாள் விளக்கினாள்.

‘அதா. சாமி.இவளோட. அம்மா… ஆற்காட்ல… லாரி ஏறி. திருவண்ணாமலைக்கு போச்சோ. இந்த கொரங்கு லாரிலே பொறந்ததுங்கோ… லாரிச்சிங்கின்னு வச்சோம்.’

குறவர்கள், உறுப்பினர்கள் முகத்தைப் பார்த்துப் பேசுவதால், தன் முகம் தன்னையறியாமலே எள்ளுங் கொள்ளுமாக, பஞ்சாயத்துத் தலைவர் லேசாக அதட்டினார்.

‘ஏய்… பஸ்ஸுக்குப் பணம் வேணுமா?’

‘அய்யோ சாமீ…’

‘இந்நேரம் பத்து குரங்குகள். பிடிச்சிருக்கணும். பேச்சுக்கு இதாடா நேரம்… நாலு நாள்ள – ஒரு குரங்கு கூட இந்தப்பக்கம் இருக்கப்படாது. ஆமாம் சொல்லிட்டேன்’

பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் ஒத்திவைப்பு பிரேரணையை பஞ்சாயத்துக் கூட்டத்தில் கொண்டு வரப்போவதற்கு அங்கேயே ஒத்திகை பார்த்தார்.

‘குரங்குகளை… பிடித்துப் பிரயோஜனமில்ல. அப்பாவிக் குரங்குகள்தான் அகப்படுதுங்க… திருட்டுக் குரங்குங்க கூண்டைப் பார்த்ததுமே. கூண்டோட ஒடிருதுங்க பஞ்சாயத்துப் பணந்தான் வேஸ்ட்; இல்லியாடா செங்கோடா’

‘அதுவும் நெயாயந்தான் சாமி’

பஞ்சாயத்துத் தலைவருக்கு மகாக் கோபம். இந்த செங்கோட்டுப் பயல், பஞ்சாயத்துப் பணம் வேஸ்டுன்னு சொல்றதை, வழி மொழிகிறான் என்றால் என்ன அர்த்தம்?

‘டேய். மலைப்பக்கம் போlங்களா.. இல்ல பஸ் ஸ்டாண்ட் பக்கமா?’

‘அய்யோ சாமி’ என்று சொல்லிக் கொண்டு, கோட்டுக்காரியான லாரிச் சிங்கி தவிர, இதர குறவர்கள் புறப்பட்டார்கள். அப்போது, அவள் இரண்டு வயது பையன், வாய்க்குள் விட்டிருந்த ஆள்காட்டி விரலையும், பெருவிரலையும் எடுத்து, அருகே இருந்த ஒரு கோணி மூட்டைப் பக்கம் நீட்டினான். நேரத்தை வீணடிக்க விரும்பாத பஞ்சாயத்து தலைவர், ஏன் ஒன் பையன். அப்படி நீட்டுறான் என்றார். லாரிச்சிங்கி மகிழ்ச்சியோடு சொன்னாள்.

‘ஒ. அதா சா.மீ அங்கோ. சாராயம் இக்கு. சாயோங் காலமா கொடுக்கோப்போறே. அரகிளாலோ இப்போவோ. கேக்குறான். சாமி’

‘என்ன. குழந்தைக்கா சாராயம் கொடுக்கிங்க?’

‘குத்தா என்னோ தப்பு சாமீ?’

‘ஒங்களுக்கு சாராயம். எங்கே கிடைக்குது?’

‘ஒங்கோட்கு… எங்கே கிடைக்கோ… அங்கோதான்’

லாரிச்சிங்கி கைதட்டிச் சிரிக்க, பஞ்சாயத்துத் தலைவர், அந்தப் பதிலை ரசிப்பதுபோல் அவளை ரசிக்க, பல குரங்குகளைப் பார்த்திருக்கும் செங்கோடன், ஏய் லாரி சொம்மாகிட. இங்கோ. கொரங்குவரும். உஷாரா இருவோ என்று அறிவுரையை அதட்டுரையாக்கிவிட்டு பின்பு உள்ளுர்த் தலைவர்களிடம் வாங்கோ. சாமி என்று சொல்லிக் கொண்டு, அவர்களையும் வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டும் வெளியேறினான்.

சகாக்கள் போவது வரைக்கும் அவர்களின் முதுகு பக்கம் பார்வையை கோனக் கணக்கில் வீசிக் கொண்டிருந்த லாரிச்சிங்கி, அவர்கள் ஒரு முனைக்குள் திரும்பியதும், பார்வையை கூண்டுப் பக்கமாகத் திருப்பினாள். அங்கே, அதிகமாகச் சண்டையில்லை. ஆனால், கூண்டுப் பக்கமாக இருந்த அரச மரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு குரங்கு மெள்ள இறங்கி, கூண்டு பக்கமாக வந்து நின்றது. லாரிச் சிங்கியை ஜாக்கிரதையாகவும், கோபமாகவும், பார்த்துவிட்டு, கம்பி வலைப்பக்கம் முகத்தைக் கொண்டு போனது. உள்ளே ஒரு சின்னஞ் சிறிய குரங்குக் குட்டி, வெளியே நின்ற குரங்கிடம் பேசத்துடிப்பது போல் கீக்கீ.கீக்கீ என்று கத்திக் கொண்டே, எம்பி எம்பிக் குதித்தது. கீரிப்பிள்ளையின் அளவுக்கு ஒனான் நிறத்தில் அணிலின் லாகவத்தில் மழலையாகக் கத்திக் கொண்டும், இருந்த அதைப் பார்த்ததும், வெளியே நின்ற தாய்க் குரங்கு, கம்பி வலையை பிய்க்கப் போவதுபோல் அடித்தது. பின்னர் வலி தாங்க முடியாமல் போகவே, கைகளை முஷ்டியாக்கி பார்த்துக் கொண்டது. தொலைவில் குழந்தையை அனைத்தவாறு பால் கொடுத்துக் கொண்டிருந்த லாரிச்சிங்கியை பரிதாபத்தோடும், பயங்கரமான கோபத்தோடும் மாறி மாறிப் பார்த்தது. அம்மாக் , குரங்கு தன்னை எப்படியாவது மீட்டுவிடும் என்கிற நம்பிக்கையில், குட்டிக் குரங்கும் விழிகள் போலிருந்த கம்பி வலைக்குள் விழி பிதுங்க, தாயின் விழிகளைப் பார்த்துக் கொண்டிருந்தது. இதரக் குரங்குகள் கரங்களால் மெளனமாகத் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தன.

இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த லாரிச்சிங்கி குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு கூண்டுப் பக்கம் வந்து தன் பையனின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, பிடியை விடாமலே அந்த தாய்க் குரங்கைப் பார்த்து, பையனை வீசினாள். அவன் கால்களை கம்புகளாக நினைத்துக் கொண்டே, தாய்க்குரங்கு மரத்திற்குத் தாவியது. லாரிச்சிங்கி சிரித்துக் கொண்டே, மீண்டும் தன் இருப்பிடத்திற்கு வந்து, கூண்டைப் பார்த்தாள்.

சிறிது நேரந்தான்.

மரத்தில் ஏறிய தாய்க்குரங்கு, மீண்டும் கூண்டுக்கருகே வந்தது. கூண்டு வாயை கடித்துப்பார்த்தது. கைகளால் இடித்துப் பார்த்தது, உடம்பால் தள்ளிப் பார்த்தது, அந்த வேகத்தில் கூண்டுகூட ஆடியது. உள்ளே துடித்துக் கொண்டிருந்த குட்டிக் குரங்கு, தன் முகத்தில் படர்ந்த வேர்வையையோ, கண்ணிரையோ, வலைக் கம்பிகளை, அம்மாவின் ரோமக் கனைகளாக நினைத்துத் தேய்த்தது. தாய்க்குரங்கோ குட்டியை அணைப்பதாக நினைத்து, அதன் முகத்தைக் காட்டிய கம்பி வலையை கையால் அனைத்துக் கொண்டிருந்தது.

லாரிச்சிங்கிக்கு என்னவோ போலிருந்தது. திருமணமாகி சரியாக ஒன்பது மாதம் இருபது நாட்களுக்குப் பிறகு பிறந்து, இரண்டு வருடங்கள் அவளின் மடிக்குள் அடைக்கலமாகக் கிடந்து, அதிக சாராயத்தாலோ என்னவோ ஒரு நாள் இறந்து போன தன் தலை மகனின் நினைவு வந்தது. எமக்கூண்டுக்குள் இப்படித்தான் அவன் தவித்துக் கொண்டிருப்பானோ?

தாய்க்குரங்கு, தன் குட்டியைப் பார்த்துக்கொண்டு சிறிது நேரமாவது இருக்கட்டும் என்று நினைத்தவள் போல் மனசு கேட்காமல், இடுப்பில் தொட்டிலை மாட்டிக் கொண்டு குழந்தையை அதில் வைத்துக்கொண்டு, தெருப்பக்கமாகப் போனாள். பாசிகளை விற்ற காசில், டப்பாவுக்குள் இரண்டு இட்லிகளைப் போட்டு பிசைந்து குழந்தைக்கு உணவை ஊட்டிக் கொண்டே, ஒரு தெருவைத் தாண்டி, ஊர் முனைக்கு வந்து விட்டாள். பையன், தன் இடுப்பைப் பிடித்து அழுத்த அழுத்த, அவளுக்கு அன்னையின் வயிற்றை அரவணைப்பாய் பிடித்துக் கொண்டிருக்கும் குரங்கின் ஞாபகம் வந்தது; இந்த குரங்குளைப் பிடிப்ப்தற்கு பெருமளவு காரணமாக இருந்தவளும் இவளே கூண்டுக்குள், தின்பண்டங்கன்ளைப் போட்டுவிட்டு, அதோடு சேர்ந்த சன்னமான சுமார் இருநூறு அடி நீளமுள்ள இரும்புக் கம்பி முனையைப் பிடித்துக்கொண்டு. புதர்ப்பக்கமாக இருந்தவள் இவள். மணலால் மறைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பியைப் பார்க்க முடியாமல், தின்பண்டங்களைப் பார்த்துக் கொண்டு குரங்குகள் நுழைந்தபோது இரும்புக் கம்பியை இழுத்து, கதவை மூடியவளும் இவள்தான். இப்படி பல தடவை, திறந்த கதவை மூடியவள். அப்போதெல்லாம் குரங்குகள் போடும் கூச்சலையும், பிரானனை பிளப்பதுபோல், பிரளயத்தை உண்டுபண்ணுவதுபோல் சுழலும் வேகத்தையும் ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது என்னவோ மாதிரி இருந்தது. காடை, கெளதாரிகளைப் பிடித்துதின்றும், பிடித்தவற்றை விற்றுத்தின்றும் பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பழக்கப்பட்ட நாடோடியான இவளுக்கு, ஏனோ அந்தக் குரங்கின் முகமே கண்களில் நிழலாடியது.

ஊர்முனையிலிருந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பூங்காவிற்குத் திரும்பி வந்தாள். இவள் வருகிறாள் என்பதையும் சட்டை செய்யாமல், தாய்க்குரங்கு கம்பி வலைக்கு மேலே குப்புறக்கிடந்தது, உள்ளே குட்டிக்குரங்கு இன்னொரு பெரிய குரங்கின் தோளில் ஏறி, அண்ணாந்து பார்த்தது. தாயும் குட்டியும் கம்பி வலையின் இடைவெளிக்குள் முகத்தோடு முகம் உரச, ஒன்றும் புரியாமல் கனத்துப் போன நெற்றியுடன் நெற்றி உரச, தலைவிதியை நொந்ததுபோல் தலையோடு தலைசேர, நிம்மதியற்ற வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுபோல, கண்ணிருடன் கண்ணிர் கலக்க நிதர்சனத்தை பாசத்தால் விழுங்கி, நெருக்கத்திற்குக் குறுக்கே நின்ற கம்பி வலையை நெடுமூச்சால் தள்ள முடியாமல் போனதால் தள்ளாடிக் கொண்டே, அகத்தோடு அகம் சேர்த்தும், முகத்தோடு முகம் சேர முடியாமல் போன நிரந்தரத்தை தற்காலிகமாக நினைத்து தற்காலிகமான இணைப்பை நிரந்தரமாக நிலைத்தவைபோல் இன்னதென்று புரியாத, இனப்படுத்த முடியாத மோனத்தின் முழுப்பாங்கில் அவை சேர்ந்தும் சோர்ந்தும் கிடந்தன, லாரிச்சிங்கி அருகில் வந்துநிற்பது கவனிக்காமலே அடித்தால் அடி என்பதுபோல் தாய், சேயைப் பார்க்க, சேய் தாயைப் பார்க்க இதரக் குரங்குகள் அரக்கி வந்துவிட்டாள் என்பதுபோல் தாய்க் குரங்கை உஷார்ப்படுத்தும் விதத்தில் கத்தின.

திரும்பிப் பார்த்த தாய்க்குரங்கு, நாலடி தூரம் வரை துள்ளிக்குதித்து நின்றது. குறத்தியை சீறிப்பாய்ந்து பயமுறுத்த முடியாது என்பதை உணர்ந்ததுபோல் அது தன் கண்ணில் சுரந்த நீரை, தோளில் வைத்துத் துடைத்தபோது லாரிச் சிங்கியும், தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். கூண்டின் உள்ளே குட்டிக் குரங்கு முட்டி மோதியது. இறக்கும்போது, தன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இறந்த தன் மகனின் சுரணையற்ற கைவிரல்களை சகாக்கள் வலுக்கட்டாயமாகப் பிரித்தபோது, எந்தத் துன்பம் ஏற்பட்டதோ அந்தத் துன்பம் இப்போதும் அவளுக்கு ஏற்பட்டது.

லாரிச்சிங்கி ஒரு முடிவுக்கு வந்தாள்.

குழந்தையை சற்று தொலைவில் வைத்துவிட்டு, ஒரு கம்பை எடுத்து, குட்டிக் குரங்கை லேசாகக் குத்தினாள். குட்டிக் குரங்கை, கூண்டு வாசல் பக்கமும் இதர குரங்குகளை வேறொரு முனைக்கும்கொண்டு போனாள். அவளை பயங்கரமாக நெருங்கிக் கொண்டு வந்த தாய்க் குரங்கைப் பற்றிக் கவலைப்படாமல் குட்டிக்குரங்கை கம்பால் அடித்தே, வாசல்பக்கம் வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்து, கட்டியிருந்த கதவை அவிழ்த்து, குட்டி மட்டும் தாயோடு சேரட்டும் என்று எண்ணிக் கொண்டே, லேசாகக் கதவைத் திறந்தாள். இதற்குள் பின்னால் வந்த தாய்க்குரங்கு, அவள் காலைக் கடித்ததால், நிலை குலைந்து அவள் திரும்பியபோது வாசல் கதவு முழுவதும் திறக்க, எல்லாக் குரங்களும் மனிதர்கள் பல்லவனுக்கு முண்டியடிப்பதுபோல் முண்டியடித்துக் கொண்டு ஓடின.

லாரிச் சிங்கி என்ன செய்வதென்று புரியாமல் குழம்பியபோது மேலே தெரிந்த மலைப்பகுதியில் நடப்பதை தற்செயலாகப் பார்த்த செங்கோடன், ஹே லாரிச்சிங்கி எதுக்கோ திறந்து. வாரேன். வாரேன்…! என்று கத்த குறக்கோஷ்டி, கத்திக் கொண்டும், திட்டிக்கொண்டும், அங்கிருந்தே இவள்மீது அப்படியே குதிக்கப் போகிறவர்கள் போல், நெஞ்சை முன்னால் குவித்தும், முதுகை பின்னால் வளைத்தும் கத்திகளை ஆட்டிக்கொண்டும் வேல்கம்புகளை ஓங்கிக் கொண்டும் வந்தார்கள்.

லாரிச்சிங்கிக்கு விஷயம் புரிந்து விட்டது. கதவைத் திறந்த உண்மையைச் சொன்னால் உதைப்பார்கள். சொல்லாவிட்டால் பைத்தியம் பிடித்ததாய்க் கருதி பரிகாரம் தேடுவார்கள். பரிகாரம் உதைகளைவிட பயங்கரமானது. இது, குறைந்தபட்சக் கூலி விவகாரம், இருபது குரங்குகளுடையது எழுபது ரூபாய் விவகாரம். பொது விவகாரம். அல்லும் பகலும் பாடுபட்டதன் அத்தாட்சி விவகாரம். அதுமட்டுமல்ல. இனிமேல் இந்த ஆற்காட்டுக் குறவர்களை பஞ்சாயத்துத் தலைவர் கூப்பிடாமல் போகிற விவகாரம். இதர குறக்கோஷ்டிக்கு இளக்காரமாய்ப் போன விவகாரம். இந்த விவாகரங்களை கணக்கில் வைத்துப் பார்த்தால், சகாக்கள் அவளைத் தள்ளி வைப்பார்கள். தள்ளி வைக்கப்படும் குறத்தியின் நிலைமை கும்பலில் இருந்து தள்ளப்பட்ட குரங்கின் நிலையைவிடப் பரிதாபமானது.

லாரிச்சிங்கி, இப்போது ஒரு முடிவுக்கு வந்தாள்.

தள்ளப்படுமுன்னே, அவளே தன்னைத் தள்ளிக்கொண்டால் என்ன? ஒதுக்கப்படும் முன்னே ஒதுங்கிக் கொண்டால் என்ன? சகாக்களின் தண்டனையைத் தாங்க முடியாது. அது எந்தத் தண்டனையை விடவும் மோசமாகத்தான் இருக்கும்.

குறவர்கள் அடிவாரத்திற்கு வந்திருக்க வேண்டும். கூக்குரல் கேட்டது. லாரிச்சிங்கி, குழந்தையை எடுக்கப்போனாள். பிறகு சிறிது யோசித்தாள். தனிப்பட்டுப் போன தன்னோடு, அந்த குழந்தை இருக்க வேண்டாம். அவன் நன்றாக இருக்க வேண்டும். வயிறார உண்வேண்டும். குறவர் உறவோடும், ஊரோடும் அவன் ஒத்து வாழ வேண்டுமே அன்றி, செத்து வாழப்போகும் அவளோடு இருக்கலாகாது. இனிமேல் இவனைப் பார்ப்போமோ… பார்க்க முடியுமோ என் ராசா. மாரி மீனாட்சி தந்த மாரிக்கொழுந்தே. போறேண்டா. போறேண்டா. ஒன்ன பாக்கோ மொடியாட்டாலும். ஒன்ன பெத்தோ இந்தோ வயிறு இருக்கோ. அதே அட்சிக்கிட்டே இருப்போண்டோ. இருப்போண்டோ.

குறவர் கோஷ்டி நெருங்கிக் கொண்டிருப்பது காலடிச் சத்தத்தாலும் வாயடி ஒசையாலும் நன்றாகக் கேட்டது.

லாரிச்சிங்கி, பூங்கா சுவரில் ஏறி பின்னால் இருந்த சாக்கடைப் பாதை வழியாக ஓடினாள். குட்டியை அதற்கு வலி கொடுக்குமளவுக்கு அனைத்துக் கொண்டே அவளைப் பரிதாபமாகப் பார்த்த அதே தாய்க்குரங்கைப் பார்த்துவிட்டு, அழாமல், அழமுடியாமல் ஓடினாள். குரங்குகளை கும்பலில் சேர்த்த திருப்தியிலும் கும்பலில் இருந்து பிரிந்த துயரமும் குட்டியைக் குரங்கோடு சேர்ந்த மகிழ்ச்சியும், தன் குட்டிச் செல்வத்தை உயிருடன் பறிகொடுத்த வேதனையும், எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற அச்சங்கலந்த ஆவலும், மொத்தத்தில் மனிதனுக்கு எத்தனை உணர்ச்சிகள் உண்டோ, அத்தனை உணர்ச்சிகளும் அவளை ஆட்கொள்ள, செம்பவள நிறங்கொண்ட, செண்பகப் பூ முகங்கொண்ட லாரிச்சிங்கி லாரியில் பிறந்த அந்த குறப்பெண், இப்போது லாரியைவிட வேகமாக ஒடிக்கொண்டிருக்கிறாள்.

– காகித உறவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: சூலை 2005, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *