(1985 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முடி வெட்டிக்கொண்டு அறைக்குத் திரும்பி இருந்தேன்.
என் தலை இவ்வளவு கேலிக்குரிய பொருளாக இருக்கும் என்று நான் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. தலையில் ஒரு கோழி இறகைச் சொருகிக் கொண்டு போகும் பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல ரகுவும், சோமுவும் என்னையும் என் தலையையும் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தார்கள்.
“கிருஷ்ணமூர்த்தி, என்ன ஆச்சு உனக்குத் திடீரென்று” என்றான் ரகு.
“ஏன்? எனக்கொன்னும் ஆகல்லியே. நான் நல்லாத்தானே இருக்கேன்” என்றேன் நான்.
“டேய் ரகு. முதல்ல இவன் கிருஷ்ணமூர்த்தியா, இல்லே அவன் தம்பியான்னு பாரு.”
“ஐயையோ, நான் கிருஷ்ணமூர்த்தி தாம்பா. அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?”
“எனக்கொன்னு தெரிஞ்சாகணும். இந்த மாதிரி முடி வெட்டிக்க எவ்வளவு கூலி கொடுத்தே? ஒன்னேகால் ரூபாயா?”
“ஒன்னே கால் ரூபாய்க்கு இப்ப எவன் முடி வெட்றான்?”
“இது வெட்டினது இல்லே. அது கடிச்சு எடுத்தது மாதிரி இருக்கு.”
“எது?”
“கிருஷ்ணமூர்த்தி விளக்கெண்ணெய்த் தடவிக்கிட்டு படுத்தி ருப்பான். பெருச்சாளி ஏதோ வந்து அங்க அங்க கடிச்சுக் குதறிட்டுப் போயிருக்கும்.”
“இன்னாப்பா, அவ்வளவு மோசமாவா இருக்கு?” என்றவாறு நான் கண்ணாடியைப் பார்த்தேன். கொஞ்சம் வித்தியாசமாகத்தான் தெரிந்தேன். என் தம்பி மாதிரி, என் மைத்துனன் மாதிரி இருந்தேன். டைபாய்டு ஜுரத்தில் படுத்து எழுந்து வந்தவனைப் போலத் தெரிந்தேன். முகமும் உடம்பும் இளைத்துவிட்டது மாதிரி இருந்தது.
“ஒரு மாதிரியாத்தான் இருக்கு இல்லே?”
நான் அவ்வாறு சொன்னதுதான் தாமதம். அவர்கள் இருவரும் உருண்டு புரண்டு சிரிக்கத் தொடங்கினார்கள்.
“ரகு, கிருஷ்ணமூர்த்தியை அந்த ஃபைவ் ஸ்டார் சலூனுக்கு அழைச்சுக்கிட்டு போ. அதுவரைக்கும் இவனைத் தள்ளிவை.”
ஒவ்வொரு முறையும் முடி வெட்டிக்கொள்ளும் போதெல்லாம் எனக்கு இந்த நிலைமை எப்படியோ ஏற்பட்டு விடுகிறது. தலையி லிருந்து முடி இறங்கியவுடனே, தலை சின்ன பந்து மாதிரி சிறுத்து விடும். முகம் பசியால் இளைத்த மாதிரி ஆகிவிடும். தலையின் பின் பக்கம் வழிக்கப்பட்டு விடுவதால், கழுத்து நீண்டு கொண்டது மாதிரி மெலிந்து போய்விடும். கழுத்து நீண்டு விடுவதால், தோள் முட்டுகள் துருத்திக் கொள்ளும். முடி வெட்டிக் கொண்ட முதல் வாரம் என்னையே எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடும்.
இந்த அவஸ்தை சின்ன வயசிலேயே என்னைப் பற்றிக் கொண்டு விட்டதுதான்.
மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, அப்பாவைப் பொறுத்த வரை முடியிறக்கும் கிழமை. காலை இட்லியைப் பிட்டுப் போட்டுக் கொண்டவுடன், பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்திலிருக்கும் கடைக்கு என்னைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போவார். “வேணாம்பா… வேணாம்பா” என்று நான் அழுவேன். என் அழுகை அவரை எக்காலத்திலும் கரைத்தது கிடையாதே. பலி பீடத்துக்கு இழுத்துப் போகப்படும் ஆட்டுக்குட்டியே நான். நாற்காலியின் கைகள் இரண்டின் மேலும் பலகையைப் போட்டு, அதன் மேல் என்னை உட்கார வைப்பார்கள். சகலவிதமான கறைகளையும் கொண்ட ஒரு துண்டால் என்னைப் போத்துவான் சிதம்பரம்.
“நல்லா வெட்டு சிதம்பரம். குழந்தை பாரு. காட்டுச் செடி முளைக்கிற மாதிரி, தலையில் முடி வளர்றது” என்பார் அப்பா. உத்தரவு கிடைத்ததும் சிதம்பரம் தன் ஆயுதங்களை எடுப்பார். முதலில் நண்டு மாதிரி ஒரு மெஷின். கைகளில். அதை இடுக்கிக் கொண்டு, இந்தக் காது தொடங்கி அந்தக் காது வரை சர்சர் என்று இழுப்பார். மிஷின் மேலும் கீழும் மேய்ந்து என் முடிகளைப் பிய்த்து, இழுத்து, மூர்க்கத்தனம் பண்ணும். ‘சிவுக் சிவுக்’கென்று வலி பிராணனை வாங்குவதால் அவ்வப்போது தலையை நிமிர்த்துவேன்.
“தலையைக் குனிடா” என்று அப்பா சத்தம் போடுவார்.
“படிக்கற பிள்ளைக்கு ஒரு வாட்டி சொன்னா போதாது?” என்பான் சிதம்பரம்.
அந்தக் காலை நேரத்திலும் ஒரு பழ வாசனை அவனிடமிருந்து பொங்கி, அவன் மூச்சுக் காற்றோடு வந்து என்னைக் குமட்ட வைக்கும்.
“இந்த இருமல் சனியனுக்காக அப்பப்போ கொஞ்சம் போட வேண்டியிருக்கு. இல்லேன்னா இந்தக் கழுதையை யார் தொடுவா?”
என்று அப்பாவிடம் சொல்வான் சிதம்பரம்.
“அது சரி. அளவோட குடிச்சா தப்பில்லையே” என்பார் அப்பா. வாந்தி வந்துவிடுமோ என்ற பயத்தில் இருப்பேன் நான்.
அடுத்த படியாகக் கத்தியைக் கல்லில் தீட்டிக் கொண்டு என் கன்னத்தைப் பார்க்க வருவான் சிதம்பரம். இதோ இப்போது காதுக்கு. இப்போது கன்னத்துக்கு, எது போகுமோ என்ற பயத்திலும், கத்தி முடியை எடுக்கும்போது ஏற்படும் வலியிலுமாக உடம்பு சிலிர்த்துப் போய் இருப்பேன், நான்.
“கண்ணாடியைப் பாரு. இன்னா ஜோக்கா இருக்கே… பாரு மாப்பிள்ளை மாதிரி” என்று தன் தொழில் திறமையைத் தானே ரசித்துக் கொள்வான் சிதம்பரம்.
என்னைப் போல, ஆனால் நிறைய வித்தியாசங்களோடு, ஆங்காங்கே ரசம் போன கண்ணாடியில் – தோன்றும் என் முகத்தைப் பார்க்கையில் எனக்கு அழுகை அழுகையாக வரும்.
“ஊம்… பரவாயில்லை. இன்னும் கொஞ்சம்கூடக் கழிச்சி ருக்கலாம்” என்பார் அப்பா, ஆதங்கத்தோடு.
“இன்னும் கழிச்சா மொட்டைதாங்க-” “இந்த வெயிலுக்கு மொட்டை அடிச்சாத்தான் சௌகர்யம்”
குழாய் மூலம் தண்ணீரைக் குளிரத் தலையில் அடித்து விடுவதால் தலை, அப்போது படிந்து – மேலே கறுப்பும், கீழே வெள்ளையுமாய், இந்தக் காதுக்கும் அந்தக் காதுக்கும் நூல் பிடித்துச் சிரைத்த மாதிரி, சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கருஞ் சட்டியைக் கவிழ்த்த மாதிரி இருக்கும். குளித்துத் தலை துவட்டிக் கொண்டவுடன், தலையில் முடி சில இடங்களில் படிந்தும், பலப்பல இடங்களில் நட்டு வைக்கப்பட்ட செடி மாதிரி நிமிர்ந்து கொண்டும் மைதானத்தில் புல் முளைத்த மாதிரிக் காணப்படும். அடுத்த நாள் காலை இந்தத் தலையோடு நான் பள்ளிக்கூடம் போக வேண்டுமே என்று நினைக்கும்போது சோறு இறங்காது.
“அட… ராஜா மாதிரி இருக்கியே” என்பார்கள் வீட்டில் உள்ளவர்கள். கேலியாகத்தான் இருக்கும். வேறென்ன?
கடை முழுக்க, மரப்பட்டறையில் மரச் சுருள்கள் குவிந்து கிடப்பதுபோல், மயிர்ச்சுருள்கள் கறுப்பும் வெளுப்புமாகக் குவிந்தி ருக்கும். அத்தனை அளவு முடிக்குவியலை ஒரு சேரப் பார்ப்பது ஓர் ஆச்சயம்.
கோடை விடுமுறைகளில் தாத்தா வீட்டுக்குப் போவேன். மேட்டுத் தெருவில் மணி என்றழைக்கப்படுகிற மணிமேகலை என்கிற என் தோழி இருந்தாள். சமயங்களில் தாத்தா ஊரிலும் நான் முடி வெட்டிக்கொள்ள நேர்வதுண்டு. இது வித்தியாசமான அனுபவம். மேட்டுத் தெருவின் மேற்கெல்லையில் ஏரி ஒன்று இருந்தது. ஏரிக்கரை ஓரம் இருந்த அரச மரத்தின் கீழே முத்து, கிண்ணம், கத்தியோடு உட்கார்ந்திருப்பார். ஓலைத் தடுக்கில்தான் வாடிக்கையாளர் உட்கார வேண்டும். அரச மரத்துக் காற்று சுழித்துச் சுழித்து ஏரித் தண்ணீரை மொண்டு மொண்டு வரும். உடம் பெல்லாம், குளித்த பின் ஏற்படுகிற குளிர்ச்சி கொள்ளும்.
அன்பே உருவான மனிதர் இந்த முத்துதான். அவருக்குக் கடை இல்லை. நாற்காலி இல்லை. ரசம் போன கண்ணாடி இல்லை. கத்தியும் கிண்ணம் சீப்புமே அவர் ஆயுதங்கள்.
“வாங்க தம்பி, உட்காருங்க” என்பார் முத்து. மொட்டைத் தலை. புருவம் தொடங்கி உச்சி வரை அப்பிய திருநீறு. காலணா அளவுக்குக் குங்குமப் பொட்டு. வெற்றிலை போட்ட சிவந்த வாய். ஒற்றை ருத்ராட்சம் அணிந்திருப்பார்.
நோகாமல் தொழில் செய்வதில் கெட்டிக்காரர். ஒருமுறை கூட என் முடியைப் பிடித்து இழுத்ததில்லை . இரத்தம் வரக் கீறியது இல்லை. குனிந்த தலை நிமிர்ந்தால் கூடக் “கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கறது; அப்புறம் குனியறது” என்பார். காலம் அவர் கைக்குள் இருந்தது. அவருக்கும் அவசரம் இல்லை . அவரிடம் வந்தவர்களுக்கும் அவசரம் இல்லை. ஆபீஸ் இல்லை. எல்லோரும் அரை நாள் முடி வெட்டிக் கொண்டார்கள்.
தொழிலை முடிக்க ரெண்டு மணி எடுத்துக் கொள்வார். முடிவெட்டிக் கொண்ட சிரமம் இருக்காது. காற்று வாங்க ஆற்றங் கரையில் உட்கார்ந்திருப்பதுபோல் இருக்கும். பலரும் இருப்பார்கள். பேசுவார்கள். காற்று வாங்குவார்கள். விரும்பினால் சவரமும் பண்ணிக் கொள்வார்கள்.
முத்து என்னைப் பார்க்கும் போதெல்லாம் “உங்க தொப்புள் அறுத்த கத்தி என்கிட்ட இன்னும் இருக்கு தம்பி” என்பார். முத்துவின் அம்மாதான், என் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்தது, குளுமைக்காக அவர் அம்மாத்தான் எனக்கு நெற்றியில் சூடு போட்டது, என்றெல்லாம் பழங்கதைகளை அலுக்காமல் சொல்வார். எனக்கும் கேட்பதில் சுவாரஸ்யம் இருக்கவே செய்யும். ரொம்ப நாள் வரை தொப்புளை, எதற்குக் கத்தி கொண்டு அறுக்க வேண்டும் என்று எனக்குப் புரிந்தது இல்லை .
பழைய ஒப்பித்தால் தெருவும், டூப்ளக்ஸ் தெருவும் சந்திக்கும் இடத்தில், ‘ஞானம் அமைந்த அறிவுள்ள இடத்தில் தொழில் செய்யும் சிறந்த நிலையம் என்ற ஐந்துக்கு ரெண்டரை அளவுக்கு ஒரு போர்டு தொங்கும். மிகப் பருமனும், முழு நிலா மாதிரித் தாடியும் கொண்ட அந்தக் கடையின் உரிமையாளர் ஒருநாள் விளக்கம் அளித்தார்.
“எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம். தலையில்தான் மூளை. அதுதான் அறிவும் ஞானமும் இருக்கும் இடம். அங்கு தொழில் செய்கிற சிறந்த இடம் நம்முடையது” என்றார் அவர்.
பத்தாம் வகுப்புக்கு வந்த பின், சுதந்திரம் பெற்ற நான் இந்தக் கடையில்தான் வெட்டிக்கொள்வது என்று வழக்கப்படுத்தியிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னை அவருக்கு ஒப்புக் கொடுத்து விடுவேன். அவர் கத்திரி, சிட்டுக் குருவியைப் போல, வாய் ஓயாமல் கத்திக் கொண்டேயிருக்கும். பார்பர் ஷாப்பில் இருப்பது போல இருக்காது. ஒரு சோலைக்குள் இருப்பேன்.
“நாளைக்குப் போலாமாடா கிருஷ்ணமூர்த்தி?”
“எங்கே ?”
“முடி வெட்டிக்கத்தான்…”
“போனாப் போச்சு…”
“ஷூவரா சொல்லுடா…. ஃபோன் பண்ணி பிக்ஸ் பண்ணனுமே…”
“ஃபோனா?”
“ஆமாம்டா, ஃபோன் பண்ணி பிக்ஸ் பண்ணிக்கிட்டுத்தான் போவணும். நீ போய் நின்ன உடனே இழுத்துவச்சுச் செரைக்க, அரசமரத்தடின்னா நினைச்சே… இது ஃபைவ் ஸ்டார் ஓட்டல் சலூன்ப்பா …”
மறுநாள் மாலை ஆறு மணி முதல் ஏழுவரை எனக்காக நேரம் ஒதுக்கப்பட்டது என்று மிகப் பணிவாகவும், நட்பாகவும் அந்த ஆண்மை நிறைந்த குரல் சொல்லியது.
நாங்கள் ஐந்தே முக்காலுக்கு அங்கிருந்தோம். கதவைத் திறந்த தும் ஏ.சி.யின் பனி முகத்தில் படிந்தது. ஒரு ஜாணுக்கு உள்ளிழுக்கும் சோபாவில் அமர்ந்து நாங்கள் என் முறைக்குக் காத்திருந்தோம். எனக்கு நேரே கண்ணாடிக் கதவு. ஆனால் உள்ளிருப்பது தெரியாத விதத்தில் திரை மறைத்தது. எங்கிருந்தோ சுகமான மணமும், கூடவே வாசனை மாதிரி சங்கீதமும் வந்தது. ஒரு புனிதமான இடத்தில் இருப்பது போன்ற உணர்வு தோன்றியது.
என் வாட்ச் ஆறைக் காட்டியபோது கண்ணாடிக் கதவு திறந்தது. என் வயசு உள்ள ஒருவர் நட்பான புன்னகையோடு என் முன் கை நீட்டினார். ஆங்கிலத்தில் மிக மென்மையாகச் சொன்னார்.
“நான் ராஜன். தாங்கள்தானே தி. கிருஷ்ணமூர்த்தி?”
“ஆம்.”
“தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. தயவுசெய்து உள்ளே வாருங்களேன்.”
நான் மட்டும் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றேன். உள்ளே எங்கு நோக்கினும் வெள்ளையும், இள மஞ்சளமாக – சோபா மற்றும் நாற்காலிகள் இருந்தன.
சோபாவைக் காட்டி “உட்காருங்கள்” என்றார். அதே சமயம் உட்பக்கம் கதவைத் திறந்து கொண்டு ஒரு பையன் காபி கொண்டு வந்தான்.
“தயவு செய்து காபியைப் பெற்றுக் குடியுங்கள்” என்றார் ராஜா.
“குடித்துவிட்டுத்தான் வந்தேன்.”
“நான் கொடுத்து அதை நீங்கள் குடிக்கக் கூடாதா?”
அவர் ஏதோ ஓர் அர்த்தத்தில் கேட்பது புரிந்தது.
உடனே நன்றி சொல்லி வாங்கிக் கொண்டேன். அந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமானவனாக நான் என்னை உணர முடிய வில்லை. கொஞ்சம்போல் ஒரு தாழ்வு மனப்பான்மை எனக்குள் எட்டிப் பார்த்தது. என்னிலும் ராஜன் மிக உயர்ந்த ஆடை அணிந்தி ருந்தார். அழகாக ஆங்கிலம் பேசினார். சௌகர்யமாகவும் இருந்தார். காபியைக் குடித்ததும், பிறிதொரு நாற்காலியில் என்னை உட்கார வைத்தார்.
“முன்பக்கம் அதிகமாகக் ‘கட்’ பண்ண வேண்டாம்” என்றேன்.
“எனக்குத் தெரியும் நண்பரே. தலையைப் பற்றிய கவலையை என்னிடம் விடுங்கள். டாக்டருக்கு உடம்பைப் பற்றித் தெரியும். அவரிடம் இந்த மாத்திரையைக் கொடுங்கள் என்று கேட்பீர்களா?” என்றார் ராஜன்.
நான் அடங்கிவிட்டேன். ஒரு கண்ணாடியை என்னிடம் கொடுத்தார்.
“பார்த்துக் கொள்ளுங்கள். இந்தத் தலையை வைத்துக் கொண்டு எப்படித் தெருவில் நடமாடினீர்கள், ஆச்சர்யம்தான்! நான் வேலை செய்து முடித்த பிறகு அப்புறம் பாருங்கள்.”
அவர் குரலில் எவ்வளவு பணிவிருந்ததோ அந்த அளவுக்குக் கண்டிப்பும் இருந்தது.
அடுத்த ஒரு மணி நேரமும் மிக இனிமையாகக் கழிந்தது. தலையில் அவர் கைபடுவதாகவே எனக்குத் தோன்றவில்லை. ஏதோ ஒரு ரசாயன மாற்றம் நிகழ்வது மாத்திரம் தெரிந்தது. எங்கிருந்தோ ஒரு பெண்மணி பாடும் இசையில் என்னைப் பறிகொடுத்தேன்.
முடித்ததும், மீண்டும் என்முன் ஒரு கண்ணாடியைக் காட்டி னார், ராஜன். என்னால் நம்ப முடியவில்லை. என் முகம் அழகு கூடியிருந்தது. முடிவெட்டியது மாதிரியே தெரியவில்லை. வெட்டப் பட்டிருந்தது.
என் தகுதியை மீறிய கட்டணத்தைக் கொடுத்து விடை பெற்றேன். ஒரு டாக்டர் வீட்டுக்கு, ஒரு வழக்கறிஞர் வீட்டுக்கு, ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டுக்குப் போய் வந்த மாதிரி இருந்தது.
போனவாரம் தாத்தா ஊர்பக்கம் போயிருந்தேன். முத்து இருந்தார். கடை இல்லை. ஏரி தூர்க்கப்பட்டுக் கட்டடங்கள் எழும்பிக் கொண்டிருந்தன. தனியாக் கடை வைத்து நடத்தும் சக்தி முத்துவுக்கு இல்லை. கிராமம், கட்டடங்கள் மலிந்த நகராக உருமாறிக் கொண்டிருந்தங்து.
அந்த அரசமரம் இப்போது இல்லை. கரைகளில் உட்கார்ந்த மனிதர்களும் இல்லை.
அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் முடி வெட்டிய ராஜனின் ஞாபகம் வந்தது. ராஜனின் இடத்தில் முத்துவை வைத்துப் பார்த்தேன்.
“பட்டணமெல்லாம் எப்படித் தம்பி இருக்கு?” என்றார் முத்து.
“அதுக்கென்ன? ராட்சஸக் குழந்தை மாதிரி அது வளர்ந்து கிட்டு இருக்கு… உன்னை மாதிரி ஆளுகளை அழிச்சு, அது மாத்திரம் கொழுகொழுன்னு ஆயிட்டு இருக்கு” என்றேன்.
– 1985
– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.