ராகு காலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 8,808 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திங்கட்கிழமைகளை எனக்குப் பிடிக்காதென்று சிலர் நினைக்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால் திங்கட்கிழமைகளில் எனக்கு ஒருவித மனஸ்தாபமும் இல்லை. இவை வரும்போது பின்னால் இன்னும் நாலு நாட்களை இழுத்துக்கொண்டு வருவதுதான் எனக்குப் பிடிக்காது. அடுத்த சனி, ஞாயிறு நாட்கள் வெகு து}ரத்தில் இருந்தன. அதுதான் வில்லங்கம், இதைத்தவிர எனக்குக் திங்கட்கிழமைகளில் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.

இப்படிப்பட்ட ஒரு திங்கட்கிழமை காலை நான் அலுவலகத்திற்கு விரைந்துகொண்டு இருந்தேன். விரைந்து என்பது தவறு. நைரோபியில் எட்டு வீதிகள் கொண்ட பிரதானமான கிரோமா ரோட்டில் காலைச் சந்தடியில் கார்கள் ஊர்ந்தன. ரேடியோவில் அப்போது பிரபலமான ஆப்பிரிக்கப் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது.

என்னுடைய மார்புளைத் தொடாதே,

புதியவனே!

அவை இன்னும் இளசாகவே இருக்கின்றன.

கொஞ்சம் பொறுத்திரு,

காட்டு கத்தாளைபோல உடம்பு வலுவாகட்டும்,

அதன் பிறகு உன் கைகள் சொல்வது

எனக்குப் புரியும்.

அதுவரைக்கும் என் மார்புகளைத் தொடாதே,

புதியவனே!

இந்தப் பாடலுக்கு ஏற்ப ஒரு காரியம் என் அலுவலகத்தில் அந்தச் சமயம் நடப்பது தெரியாமல் நான் சாவகாசமாக சவாரித்துக் கொண்டிருந்தேன்.

நைரோபியில் வேலை செய்வதென்றால் ஒன்றில் ஒரு ஷாவிடம் அல்லது பட்டேலிடம் வேலை செய்யவேண்டும். அது தவிர மிக நுட்பமாக biodata (தகைமைத் தரவு) எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இங்கே வேலைகள் கிடைப்பது இந்த தகைமைத் தரவு தயாரிப்பவரின் கெட்டித்தனத்தில் தான் தங்கியிருக்கிறது. அதனாலே இங்கு எல்லோரும் வெகு சகஜமாக வில்லை வளைப்பார்கள்; மற்சயத்தை அறுப்பார்கள்; மலையைத் தூக்குவார்கள். நானும் பெரிதாக ஒன்றும் செய்யாமல் சப்த சமுத்திரத்தையும் உருட்டிக் குடித்ததாகப் புனைந்து இந்த வேலையைச் சம்பாதித்திருந்தேன்.

என்னுடைய முதலாளி ஒரு பட்டேல். பல தொடர்வீடுகளுக்கு சொந்தக்காரர். இவரிடம் நான் மேலாளராக வேலை பார்த்தேன். வீடுகளை மேற்பார்வை செய்வது, ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவது, கணக்குகளைக் காப்பது இவைதான் என்னுடைய வேலை. தோல்வி வெற்றிக்கு முதல்படி என்ற முதுமொழியில் எனக்கு இருந்த பற்றுக் காரணமாக இந்த வேலை தொடர்ந்தது. ஒரு விளையாட்டு அரங்கம் கட்டப் போதுமான படிகள் என்னிடம் சேர்ந்திருந்தன.

அலுவலகம் திறந்து ஓர் அரைமணி நேரம் பிந்தித்தான் நான் தினமும் வருவேன். அன்று எப்படியோ சீக்கிரமாக வந்துவிட்டேன். நான் முயற்சி பண்ணாமலேயே நடந்த காரியம் அது. இப்படி தப்பிதங்கள் சிலசமயம் நடப்பதுண்டு.

எங்கள் தொடர் வீடுகளை உயரமான மின்சார வேலியும், இரட்டை கேட்டில் நின்ற காவலர்களும் பாதுகாத்தனர். மிமோசா விருட்சங்களின் உச்சியில் இருந்து அடாடா பட்சிகள் காலை ஒலிபரப்பை நிகழ்த்தின. அறுத்துக்கொண்டு ஓடிவிடுமோ என்று ஐயப்பட்டதுபோல மோட்டார் சைக்கிள்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு வேலி ஓரத்தில் நின்றன. நான் வேகமாக என் அறையை நோக்கி நடந்தபோது இன்னும் வேகமாகக் காவலாளிகள் என்னைப் பின்தொடர்ந்தனர். அவர்களுடைய முகங்கள் கலவரமாகக் காணப்பட்டன. என்னுடைய அறைக்கதவு சிறிது திறந்து ஆடியபடி நின்றது. என்னுடைய லேட்டாக வரும் பழக்கத்தில் மகத்தான நம்பிக்கை வைத்து அங்கே ஒரு காரியம் நடந்துகொண்டிருந்தது. கதவைத் திறந்தபோது நான் அப்படியான காட்சியை எதிர்பார்க்கவில்லை.

அவன் முகம் பழக்கமானதாக இல்லை. முப்பத்தைந்து வயது மதிக்கக்கூடிய நல்ல உடல்வாகு இருந்தது. தசைகள் முறுகிக் கிடந்தன. முதுகில் வியர்வை துளிர்த்து நீராக வழுக்கிக்கொண்டிருந்தது. முன்னறிவிப்பின்றி வந்த என்னை மிகவும் குற்றமாகப் பார்த்தான். அந்தப் பெண் ஒரு கையால் தன் உடைகளை எடுத்துக்கொண்டு மறுகையால் ஒரு மார்பை மறைத்துக்கொண்டு ஓடினாள். பின்பு இன்னொருமுறை வந்து தன் காலணிகளை மீட்டுக்கொண்டு திரும்பினாள்.

இவள் துப்புரவுப் பணிப்பெண். தினமும் அதிகாலை வேளைகளில் கைக்காசு கொடுத்துக் கோடுபோட்டு அழகு படுத்திய கேசத்துடன் வருவாள். சுத்தமாக வெளுத்த உடையோடு ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்டுக் காட்சியளிப்பாள். போறணையில் இருந்து இறக்கிய பாண்போல மொரமொரவென்றும், இளஞ்சூட்டோடும் ஒருவித மணத்தோடும் இருக்கும் இவளைத்தான் அவன் வந்து இரண்டு நாட்களுக்கிடையில் வளம் பண்ணிவிட்டான்.

சில நாட்கள் முன்பு புதிதாக குடிவந்த டொன்னின் டிரைவர்தான் இந்த மாரியோ ங்கோமா. சாரத்தியம் தவிர வேறு வேலைகளும் பார்த்தான் என்பது அன்று காலைதான் எனக்குப் புரிந்தது. ஒரு காலத்தில் ஹறாம்பி உதை பந்தாட்டக்குழுவில் பிரபலமாக இருந்தவன் என்று பின்னால் தெரிந்துகொண்டேன். தொடைகள் அரைய, என்னைத் திரும்பிப் பார்த்தபடியே மிக மெதுவாக அவன் அசைந்து போனான். நான் இவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்தான் போலத் தெரிந்தது.

இப்படித்தான் எனக்கு மாரியோவிடம் முதன்முதலில் பரிச்சயம் ஏற்பட்டது.

ஒரு வாரம் முன்பு மிஸ்டர் டொன் என் அலுவலகத்திற்கு வந்திருந்தார். வீடு பிடித்திருப்பதாகச் சொன்னார். இவர் ஒரு மொரிஸியஸ்காரர். கட்டையான மனிதர். எந்த விதமான வீட்டிலும், எப்படிப்பட்ட வாசலிலும் குனியும் சிரமம் இல்லாமல் போகும் வசதி பெற்றவர். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியாக நைரோபியில் பதவியேற்று இருந்தார். இவரிடம் அசிரத்தையாக பழகமுடியாது என்பது எனக்கு உடனேயே புரிந்துவிட்டது. சொற்களுக்குக் காவல் போட்டுக்கொண்டு பேசினார்.

வீட்டுப் பத்திரம் கையொப்பம் இடுவதற்கு ரெடியாக இருந்தது. தன் தொழில் பழக்கத்தால் நான் தயாரித்து வைத்திருந்த ஒப்பந்தத்தை இவர் வாசிக்க முற்பட்டார். ஒருதலைப் பட்சமான ஒப்பந்தங்கள் இங்கு வெகு பிரசித்தம். இது எல்லோருக்கும் தெரியும், புதிதாக வந்திருக்கும் இவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

எறும்பின் கண்களுக்கு மாத்திரம் சாத்தியமான சிறிய எழுத்துக்களில் நாங்கள் ஒப்பந்தத்தில் அடிக்குறிப்புகள் இடுவோம். மிக அபூர்வமான சரத்துக்களை எல்லாம் இப்படித்தான் நுழைத்து விடுவோம். இவர் அவற்றை எல்லாம் படிக்க மிகவும் ஆசைப்பட்டார். தலையைச் சொறிந்துகொண்டு வெகுநேரம் யோசித்தார். ஓர் IMF பத்திரத்தில் கையெழுத்து வைக்கச் சொன்னதுபோல மனதை மிகவும் குழப்பிக்கொண்டார்.

“ஐயா, இது இரும்புப் பட்டறையில் தயாரித்த பத்திரம். இதில் ஒரு வரி, ஒரு வார்த்தை, ஓர் எழுத்து, ஏன் ஓர் இடைவெளியைக் கூட உங்களால் மாற்ற முடியாது. வேண்டுமானால் இன்னொரு நாளைக்கு வந்து பாருங்கள்” என்றேன். மிகவும் யோசித்தபின் பேனையை கையிலெடுத்து Velay Don என்று தன் பெயரை வரைந்தார்.

இவருடைய மனைவியைக் கண்ட பிறகுதான் இவர் தமிழராக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எனக்கு உதித்தது. மோசமான பல தமிழ் வார்த்தைகளுக்கு இவர் சொந்தக்காரராக இருந்தார். இவருடைய உச்சரிப்பு அச்சுறுத்தலாக இருக்கும். வேலாயுதன் என்ற பெயர்தான் இன்னும் சுத்திகரிக்கப்பட்டு Velay Don என்று மாறியிருந்தது.

மாரியோ முதல் தடவையாக ஒரு வெளிநாட்டுக்காரரிடம் வேலை பார்த்தான். அதனால் அவனுக்கு அடிக்கடி சம்சயங்கள் வந்தன. டொன்னுடைய பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள் ஒன்றுமே அவனுக்கு முதலில் புரிபடவில்லை. அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்றும் தெரியவில்லை. அவன் படித்த முதல் பாடம் காலையில் காரை எடுக்கும்போது பின்னோக்கி எடுக்கக்கூடாது என்பதுதான். புதிய கார் ஒன்றை வாங்கி டொன் செய்த புதிய காரியம் இவனைப் பிரமிக்க வைத்தது. பூசணிக்காய் ஒன்றைக் கார் சில்லின் கீழ் வைத்து நசித்து கார் ஓட்டியதைக் கூறி அதற்குக் காரணம் கேட்டான். நான் எனக்குத் தோன்றிய மாதிரி அர்த்தம் சொன்னதும் மிகவும் கலவரப்பட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

அந்த அம்மா இரண்டு அடையாளம் (பொட்டு) வைத்திருக்கிறாளே! ஒன்று நெற்றியிலே, மற்றது உச்சியிலே. அவர்களுடைய மகளுக்கு மட்டும் ஓர் அடையாளம். அது ஏன் என்ற கேள்வியுடன் இன்னொரு நாள் வந்தான். அதற்கும் பதில் தயாராக வைத்திருந்தேன். இப்படித்தான் மாரியோ, சுவரைத் தொட்டு கரியாக்கியபடி, அடிக்கடி என்னிடம் வரத்தொடங்கினான்.

அந்த அம்மா மிகவும் ஆசாரமானவள். சேலை கட்டி குளிரைத் தடுக்க ஒரு வேலைப்பாடு செய்த போர்வையும் போர்த்தியிருப்பாள். வான்கோழி போல கழுத்திலே சுருக்கங்கள் விழுந்து கிடக்கும். ஒரு காலத்தில் செழித்திருந்த கேசத்திற்குப் போதிய சான்று இருந்தது. தலையில் வெள்ளைக் கோடுகள் படர்ந்து முகத்திற்கு ஓர் அழகையும் கண்ணியத்தையும் கொடுத்தன.

மாரியோ அந்த அம்மாமீது மிகவும் மரியாதை வைத்திருந்தான். அவள் சொல்வதுதான் அவனுக்கு வேத வாக்கு. நவராத்திரி, தீபாவளி போன்ற மங்கல நாட்களில் உற்சாகத்தோடு கலந்துகொள்வான். அவற்றின் விபரங்களை ஆச்சரியத்தோடு கேட்டுக் கிரகிப்பதில் ஆர்வம் காட்டுவான். அவர்கள் பழக்க வழக்கங்கள், உணவு வகைகள்கூட அவனுக்குச் சீக்கிரத்தில் அத்துப்படியாகிவிட்டன.

போகப்போக அவர்களுடைய சம்பிரதாயம், பழக்க வழக்கங்கள் பற்றி மாரியோ என்னிடம் அர்த்தம் கேட்பது குறைந்துவிட்டது. மாறாக, சுமங்கலி பூசை பற்றி எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை அவனே தீர்த்து வைப்பான் போல இருந்தது. அந்த அம்மா கடுமையான விரதங்களைப் பிடிக்கும்போது இவனும் பிடித்தான். அவற்றினுடைய பலாபலன்களையும் அவன் தெரிந்து வைத்திருந்தான்.

ஆனால் வெகு காலமாகியும் மாரியோவுக்குப் பிடிபடாத விஷயம் ஒன்று இருந்தது. அதுதான் ராகு காலம்.

ஒரு நாள் பதட்டமாக வந்து சேர்ந்தான். டொன் அவனைக் கடுமையாகத் திட்டிவிட்டதாகச் சொன்னான். காரணம் அவன் பத்து நிமிடகாலம் தாமதமாக வந்ததுதான். அன்று அவர் வெளிநாட்டுப் பயணத்திற்காக விமான நிலையம் செல்வதற்கு இருந்தார். அது ஒரு வெள்ளிக்கிழமை. பிளேன் பின்னேரம் இரண்டு மணிக்குத்தான் புறப்படுவதாக இருந்ததாம். டொன் என்றால் காலை பத்து மணிக்கு முன்பே வீட்டை விட்டுக் கிளம்புவதற்குத் தயாராய் இருந்தார். அன்று பார்த்து மாரியோ லேட்டாக வந்ததால், ராகு காலம் தொடங்கி விட்டதாக அவனைக் கண்டித்து, பயணத்தையே கான்ஸல் பண்ணி விட்டார்.

ஓர் ஆபிரிக்க டிரைவருக்கு ராகு காலத்தின் சூட்சுமம்பற்றி விளக்குவது எவ்வளவு கடினம் என்பதைக் கற்பனை திறன் உள்ளவர்களிடம் விட்டுவிடுகிறேன். மாரியோவின் முகத்தைப் பார்த்த பிறகு எப்படியும் இந்த ராகு கால மர்மத்தை இவனுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று தீர்மானித்தேன்.

விஷ்ணு எப்படி மோகினியாக மாறி அமிர்தம் பங்கிட்டாரென்றும், அதை ராகு, தேவ உருவத்தில் பெற முயற்சித்ததையும், சூரிய சந்திரர் இதை அறிந்து விஷ்ணுவுக்குக் கோள் சொல்லியதால் ராகுவுக்கும் சூரிய சந்திரருக்கும் தீராப் பகை ஏற்பட்டதையும் விவரித்தேன். ராகுவின் பழி தீர்க்கும் படலம் இன்றும் தொடர்கிறது. சூரிய சந்திரர் இயக்கத்தில் பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் ஒரு சில மணி நேரங்களை ராகு பீடித்துக் கொள்கிறான். அதுதான் ராகு காலம், அந்தக் காலங்களில் என்ன செய்தாலும் அது உருப்படாது என்று விளக்கினேன்.

ஒரு சிறு பிள்ளையின் குதூகலம் அப்போது மாரியோவுக்கு ஏற்பட்டது. விளக்கம் இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை போலும். எந்த நாட்களில் எவ்வளவு மணி நேரங்களை ராகு பாதிப்பான் என்று அவன் கேட்டதற்கும் என்னிடம் ஒரு சூத்திரம் தயாராக இருந்தது.

Mother Saw Father Wearing The Turban Surely. இந்த வசனத்தை அவனை மனப்பாடம் செய்ய வைத்தேன். இந்த ஏழு வார்த்தைகளும் ஏழு நாட்களைக் குறிக்கும். முதலாவது வார்த்தை Monday என்றால் இரண்டாவது வார்த்தை Saturday மூன்றாவது Friday இப்படியே கடைசி வார்த்தை Sundayஐ குறிக்கும். இந்த முறைப்படி முதலாம் நாள் ராகு காலம் காலை ஏழரை முதல் ஒன்பது வரை நீடிக்கும், இரண்டாம் நாள் ஒன்பது முதல் பத்தரை, மூன்றாம் நாள் பத்தரை முதல் பன்னிரெண்டு இப்படியே விரியும் என்று விளக்கினேன். அவனும் புரிந்ததுபோல பெரிதாகத் தலையை ஆட்டினான்.

அவனுக்கு எவ்வளவு தூரம் இது அர்த்தமாகியது என்பது தெரிய நான் வெகுகாலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் அப்போது அது எனக்குத் தெரியவில்லை.

டொன் தம்பதியருக்கு ஒரு மகள். பதின்மூன்று, பதினாலு வயதிருக்கும். மிக அழகான ஒரு பெண்ணாக வருவதற்குத் திட்டம் போட்டிருந்தாள். தலைமயிர் அடர்ந்து உச்சி பிரிக்காமல் இருக்கும். எப்படி வரிந்து இழுத்தாலும் அவளால் அந்த முகத்து வசீகரத் தன்மையைக் குறைக்க முடியாது. எப்பொழுது பார்த்தாலும் நீச்சல் தடாகத்தில் இரு பாதி குளியல் உடையில், சம வயது ஆப்பிரிக்கப் பெண்களுடன் விளையாடிக்கொண்டு இருப்பாள். ஒரு நாள் பார்த்த போது யாமா சோமா இறைச்சியை அவர்களுடன் பகிர்த்து உண்டு கொண்டிருந்தாள். எனக்குத் திகைப்பாயிருந்தது.

நான் மாரியோவைக் கேட்டேன். “என்ன மாரியோ, இந்தப் பெண் இப்படிப்போய் சுட்ட இறைச்சியைச் சாப்பிடுகிறாளே. அவர்கள் சுத்த சைவம் அல்லவா?” என்றேன்.

“ம்பவானா, அதை ஏன் கேட்கிறீர்கள்? பள்ளிக்கூடம் போகும் வழியில் யாயா சென்டரில் மட்டன் கட்லட் வாங்கிச் சாப்பிடுகிறாள், வீட்டுக்குத் தெரியாமல். இலையான் அடித்தால் ஓணான் ரத்தம் வருகிறது.” என்றான்.

“சின்னப் பெண்தானே! செய்துவிட்டு போகட்டும்.”

“இல்லை, ம்பவானா, மாமிசம் சாப்பிடுவதை நான் சொல்லவில்லை. பெற்றோருக்குத் தெரியாமல் கள்ளமாகச் சாப்பிடுவதைச் சொல்கிறேன்.”

டொன்னின் உலகம் தனி உலகம். அளவுக்கு அதிகமான பட்டன்கள் வைத்த கோட்டை அணிந்துகொண்டு அடிக்கடி என் அலுவலகத்துக்கு முறைப்பாடுகளைக் கொண்டுவருவார். வீட்டிலே சாயமடித்து வளர்த்த தலைமயிர் என்றபடியால் கீழ்பாதி ஒரு நிறமாகவும் மேல்பாதி இன்னொரு நிறமாகவும் இருக்கும். உலகத்தைப் பார்க்கும் கண்களால் இவருக்குப் பக்கத்தில் இருக்கும் காதைப் பார்க்க முடியவில்லை. இவரிடம் மகளைப் பற்றிச் சொல்லுவோமா என்று நான் பலதடவை யோசித்தது உண்டு.

அந்தச் சிறுமி ஆப்பிரிக்கச் சநேகிதிகளின் சகவாசத்தால் முற்றிலும் மாறி வர, மாரியோவோ தன்னுடைய இயல்பான குணத்தையும், பழக்க வழக்கங்களையும் துறந்துவிட்டான். அந்த அம்மாவின் மேல் அவனுக்குப் பற்றுதல் அதிகமானது. சிறிது சிறிதாக மாமிசம் சாப்பிடுவதையே விட்டுவிட்டு அவர்களுடைய இட்லி, சாம்பார் தோசைக்கு அடிமையானான். அது மாத்திரமல்ல, சிவராத்திரி, கந்தசஷ்டி பற்றி யெல்லாம் தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்திருந்தான்.

மகளைப் பற்றித் தாயாரிடம் சொல்வதா விடுவதா என்ற மனப் போராட்டம் மாரியோவுக்கும் இருந்தது. நல்ல காலமாக முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு நேரவில்லை. விதி வேறு விதமாகத் தீர்மானித்தது போலும்.

சதுர்த்தி விரதத்தில் இவர்கள் தீவிரமாக இருந்தபோது டொன்னுக்கு திடீர் என்று மாற்றல் உத்தரவு வந்தது. வழக்கமான நாலு வருடங்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. டொன்னுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலும் பார்க்க மாரியோவுக்கு அதிகமான ஏமாற்றம். அவர்களை மிகவும் பிடித்துப்போய் அவனுடைய வாழ்க்கை ஓர் ஒழுங்குக்கு வரும்போது இப்படி நடந்துவிட்டதே என்று புலம்பினான்.

டொன் போகுமுன் பல பரிந்துரை கடிதங்களைக் கொடுத்திருந்தார். அப்படியும் மாரியோவுக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. அவன் மனம் உடைந்து இருக்கும் போது ஸ்வீடன் தூதரகத்தில் ஒரு சாரதி அவசரமாகத் தேவைப்படுவதாகக் கேட்டிருந்தார்கள். மாரியோவை அடுத்த நாளே போய் அவர்களைப் பார்க்கும்படி கடிதம் கொடுத்து அனுப்பினேன். அத்துடன் மாரியோ என் வாழ்வில் இருந்து மறைந்துவிட்டான்.

பல மாதங்கள் கழித்து ஒரு சனிக்கிழமை யாயா சென்டருக்குச் சென்றிருந்தேன். இரட்டைப் பின்னல் கட்டிக்கொண்டு என்னுடைய சிறிய மகளும் வந்திருந்தாள். அது பசி வியாபித்திருக்கிற ஒரு மத்தியான நேரம். எங்கேயும் பசி தெரிந்தது, இருந்தபடி சிலர் சாப்பிட்டார்கள். நின்றபடி சிலர், இன்னும் சிலர் நடைபாதையிலேயே நடந்தபடி சாப்பிட்டார்கள்.

வழக்கம் போல ஐஸ்கிரீம் கடையைக் கண்டவுடன் என் மகளுடைய நடை தளர்ந்தது. வெட்டுக்கிளியை முகர்ந்த நாய்க்குட்டி போல கால்களைப் பரப்பிக்கொண்டு அசைய மறுத்துவிட்டாள். எத்தனை நூறு புதிய சுவைகள் வந்தாலும் வனில்லா போல் வருமா? அந்த மணம் அங்கே பரவியிருந்தது.

தூரத்தில் மாரியோ வந்துகொண்டிருந்தான். ஓர் ஒட்டைச்சிவிங்கி போல கால்களை அகட்டி வைத்து நடந்து வந்தான். அளவுக்கு அதிகமாக தொங்கிய கோட்டின் பகுதிகள் செட்டை போல இரண்டு பக்கமும் விசிறி அடித்தன. மெலிந்துபோய் இருந்தான். நூலிலே கோத்து வைத்ததுபோல அவன் உடம்பின் அங்கங்கள் தனித்தனியாக ஆடின. நெற்றியிலே திருநீறு பூசி அதிலே குங்குமப் பொட்டு.

அவனை இந்தக் கோலத்தில் பார்த்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என் மகள் பின்னால் நகர்ந்து என் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்..

‘மிஸூரி.’

‘மிஸூரி சான்.’

“எங்கே மாரியோ இந்தப்பக்கம்?”

“கோவிலுக்குப் போயிருந்தேன். ம்பவானா, புரட்டாசி சனியில்லையா”

“இன்று வேலைக்குப் போகவில்லையா”

“வேலையா? இப்ப ஆறு மாசமாக அதைத்தானே தேடிக்கொண்டிருக்கிறேன்.”

“ஆறு மாசமா? ஏன் அந்த ஸ்வீடன் தூதரக வேலைக்கு என்ன நடந்தது?”

“அதை விடுங்க, ம்பவானா? நாணல் புல் குழலை ஊதினாலும் கொஞ்சம் ஆறத்தானே வேண்டும், முகத்தைச் சொறிய” என்றான்.

“ஏன், என்ன நடந்தது?”

“நேர்முகத் தேர்வுக்கு புதன்கிழமை பன்னிரெண்டு மணிக்குக் கூப்பிட்டிருந்தார்கள். எப்படி போக முடியும்?”

“நீ போகவில்லையா?”

“சரியான ராகுகாலம், வேலை கிடைக்கவா போகிறது?”

முழுங்கால்கள் தனித்தனியாக ஆட, வேகம் குறையாமல் மாரியோ தன் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தான்.

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன், வெகு நேரம்.

“ம்பவானா, இதோ இரண்டு வனில்லா” என்றான் கடைக்காரன்.

– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *