ரயிலாகிய நான்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 1,529 
 
 

கூ…கூ…கூ…கூவிக்கொண்டே நிலையத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறேன். நுழையும்போதே எனக்காக காத்திருக்கும் மனித கூட்டங்களை பார்த்தவுடன் எனக்கு மலைப்பாகத்தான் இருக்கிறது. ! எங்குதான் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்.?. எப்பொழுது பார்த்தாலும் ஓடி ஓடி வந்து என் வயிற்றுக்குள் பதுங்கிக்கொள்கிறார்கள். மற்றொரு இட்த்தில் நின்றவுடன் வயிற்றை கிழித்துக்கொண்டு பீறிட்டு வெளியே வருகிறார்கள். அப்ப்ப்பா இவர்களை நினைக்கையில் எனக்கு இவர்கள்தானா ஒரு காலத்தில் என்னை கண்டு மிரண்டு கல்லால் அடித்தவர்கள் ?

  வெள்ளைக்காரன் என்னை கண்டு பிடித்து முதன் முதலில் வரும்பொழுது ஏதோ பெரும் “கரும் பூதம்” வருவதாக கல்லால் அடித்து ஓடியவர்கள் ! அதற்குப்பின்னால் இந்தியா என்றால் வெளிநாடுகளில் என்னைக்காட்டி என் தலைமீது மனிதக்கூட்டங்கள் உட்கார்ந்திருப்பதை காட்டி வெளி நாட்டு மக்கள் “பாருங்கள் இவர்கள்தான் இந்தியர்கள் என்று கிண்டல்கள் கூட செய்திருக்கிறார்கள்.

அதுவும் எனது வாழ்க்கையில், மறக்க முடியாத நாட்களாக “இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது என் மீது படர்ந்து, தொங்கி ஏறி, இடத்தை விட்டு ஓடிக்கொண்டு, கதறிக்கொண்டும், அப்ப்ப்பா…ஒரே இனமாய், ஒற்றுமையாய் அதுவரை வாழ்ந்த மக்கள் அந்த காலகட்ட்த்தில் எப்படி மாறிப்போனார்கள்? நினைக்கும்போது என் நெஞ்சமெல்லாம் அழுகிறது.

இன்று ஒவ்வொரு நகரத்தின் வழியாகவும், இந்த இந்தியா முழுக்க சுற்றி சுற்றி வந்து இவர்களின் பழக்க வழக்கங்கள் எனக்கு அத்துப்படியாகி விட்டன. இதோ என்னை நோக்கி ஓடி வரும் இந்த மனித கூட்டங்களில்தான் எத்தனை கதை ஒளிந்திருக்கும். ஒவ்வொரு பயணியாக வருபவனிடம் இந்த பயணத்திற்கான ஒரு கதை வைத்திருப்பான். இது எனக்கு நன்கு தெரியும். என்னுடைய கடமை என்ன? அவனை அவன் செல்ல வேண்டிய இட்த்தில் கொண்டு போய் விட்டு விடுவதுதான். அவ்வளவுதான். சில மனிதர்கள் போன காரியம் ஜெயமானால் என்னை பாராட்டியும் பேசியிருக்கிறார்கள். சிலர் என்னை தூற்றியும் இருக்கிறார்கள். எனக்கு என்ன ஒரு இயந்திரம்தானே? என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கலாம்.! ஆனால் எனக்கும் ஈரம் இருக்கும், என் மீது மோதி இறந்து விடும் உயிர்களுக்காக எத்தனை வருத்தப்பட்டு இருக்கிறேன் தெரியுமா? ஆடு,மாடு, யானை, மனிதன் எதுவென்றாலும் உயிர்தானே.

இதோ கிளம்ப போகிறேன். முடிந்தவரை ஆட்களை வயிற்றில் நுழைத்து அடைத்துக்கொண்டேன். நான் கொஞ்சம் விரைவானவன். அடுத்து எழுபது கிலோ மீட்டர் தூரம் தாண்டித்தான் நிற்க வேண்டும். இது காட்டுப்பகுதி,கொஞ்சம் மோசமான இடமும் கூட. அதற்காக மூச்சை இழுத்து விட்டு இழுத்து விட்டு என்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். இதோ எனது வாலில் இறுதியில் பச்சை நிற கொடி ஒன்று அசைய எனது பிரயாணத்தை ஆரம்பித்து விட்டேன்.

தட்…தட்..தடம்..தட்..ஒரே சீராக வரப்போகிற நிலையத்தை குறிவைத்து ஓடிக்கொண்டிருக்கிறேன். சடாரென ஒரு சத்தம்..என்னை பிடித்திழுக்க “எங்கிருந்தோ ஒரு இட்த்தில் அபாய சங்கிலி இழுக்கப்பட்டிருக்கிறது. மெதுவாக சிறிது தூரம் சென்று நின்று விட்டேன். எனக்குள் ஒரு அபாய எச்சரிக்கை ! ஏதோ நடக்கப்போகிறது !

நின்ற பின்னால் இறங்கிச்சென்ற ஊழியர்கள் ஒவ்வொரு பெட்டியாக சென்று விசாரிக்க கடைசி வரை யார் நிறுத்தியது என்று கண்டு பிடிக்க முடியவில்லை. சரி வண்டியை எடுக்க சொல்லி அறிவுறுத்த, என்னை இயக்குபவர் மெதுவாக என்னை இயக்கும் இட்த்தில் நிற்க அங்கு மறைந்திருந்த ஒருவன் சட்டென அவர் பின்புறம் வந்து முகத்தின் மீது தாக்கி,  அப்படியே அங்கிருந்து வெளியில் உருட்டி விட்டான். இப்பொழுது என்னை இயக்கும் இட்த்தில் அவன் !. எனக்கு மனசு பதற ஆரம்பித்த்து, இவன் என்னை கொண்டு என்ன செய்ய்போகிறானே? கிட்ட்த்தட்ட ஆயிரக்கணக்கான உயிர்கள் என்னை நம்பி என் வயிற்றுக்குள் அமர்ந்திருக்க ! இந்த பாவி என்ன செய்வானோ !

அதற்குள் எனது வயிற்றுப்புறத்திலிருந்த ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் கூக்குரல், துப்பாக்கியை காட்டி இரண்டு மூன்று பேராக நின்று கொண்டு பெண்கள், ஆண்கள், எல்லோரிடமும் பணம் நகைகளை பிடுங்கிக்கொண்டிருந்தனர். எங்கும் ஒரே கதறல், நான் என்ன செய்வது? என்று மலைத்து போய் நின்று கொண்டிருந்தேன். அவர்களோ கிட்ட்த்தட்ட ஐம்பது அறுபது பேர் இருக்கலாம். எப்படி கண் சிமிட்டும் நேரத்தில் என்னுள் ஏறினார்களா? அல்லது முதலிலேயே பயணிகளோடு பயணிகளாக வந்தார்களா தெரியவில்லை !

அப்பொழுது எனக்கு முக்கியமான சிக்னல் ஒன்று கிடைத்தது, நான் இயங்கும் தளத்தின் கீழ் புறம் கம்பியை பிடித்தபடி என்னை ஓட்டுபவர் மெல்ல ஏறிக்கொண்டிருப்பதை கண்டு கொண்டேன். பாவம், அவரால் அவன் முகத்தில் தாக்கிய இரத்த காயத்தால், இரத்தம் வ்ழிய ஏற முடியாமல் தன் இருகைகளாலும் கம்பியை பற்றியபடி ஏறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். நான் அப்படியேதான் நின்று கொண்டிருக்கிறேன். எப்படியும் பத்திருபது நிமிடங்கள் என்னை நிறுத்தியிருக்கப் போகிறார்கள் என்று தெரிகிறது. எல்லா பெட்டியில் இருக்கும் இவ்ர்கள் ஆட்கள் கொள்ளை அடித்து வெளிவந்த பின்னால்தான் என்னை எடுப்பார்கள் என்று புரிகிறது. அதற்குள்ளாகவே என்னை இயக்குபவர் உள்ளே வரவேண்டுமே என்று வேண்டிக்கொண்டிருக்கும் போதே என்னை இயக்கும் அருகில் நின்றுகொண்டிருந்த கொள்ளயனை எப்படியோ கஷ்டப்பட்டு மேலேறி வந்தவர் திடீரென தாக்கி அவனை அப்படியே பிடித்து தள்ளினார் அவன் கீழே விழுந்தவன் கூக்குரலுடன் எழ முயற்சிக்க இவர் என்னை இயக்க ஆரம்பித்து விட்டார். நான் குதூகலத்துடன், கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்க ஆரம்பித்தேன். அதற்குள் கீழே விழுந்த கொள்ளையன் மீண்டும் எழுந்து என் மீது ஏற முயற்சிப்பதற்குள் நான் சிறிது தூரம் நகர்ந்து வர முன்னால் வர அவனால் என் இட்த்துக்கு ஏறி வர முடியாமல் நின்று விட்டான்.

நான் வேகம் எடுக்க அதற்குள் பெட்டிக்குள் இருந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்தவர்கள், இரயில் திடீரென விரைவாக ஓடுவதை கண்டு  பெட்டியில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்தார்கள். அதற்குள் சுதாரித்த பயணிகள் துணிச்சலாய் அவர்களை பிடித்துக்கொண்டார்கள். ஒரு சில இடங்களில் பயணிகளுக்கும் கொள்ளையர்களுக்கும் சண்டை கூட நடை பெற்று பயணிகள் காயமடைந்தனர்..

நான் ஒரே கரும்மாய் இவர்களை கொண்டு வந்து அடுத்த நிலைத்துக்குள் சேர்க்கவேண்டும் என்ற வெறியுடன் வந்து கொண்டிருந்தேன்.செய்திகள் அதற்குள் போய் சேர நிலையத்துக்குள் ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, கொள்ளையர்கள் கொஞ்சம் பேரை கைது செய்து விட்டார்கள். காயம்பட்ட பயணிகளுக்கும், என்னை ஓட்டி வந்த ஓட்டுன்ருக்கும் சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கூட்டி சென்றார்கள்.

இந்த நிகழ்ச்சி நடந்து மீண்டும் அதே பாதையில் ஓடிக்கொண்டே தான் இருக்கிறேன். என்னை இயக்கியவர் கூட ஓய்வு பெற்று சென்று விட்டார். ஆனால் எனக்கு மட்டும் ஓய்வேது? இது போல் எண்ணற்ற கதைகள் எனக்குள் வைத்து அப்படியே மறைந்து கொண்டுதான் இருக்கிறது. இது சமீபத்தில் நடந்ததால் உங்களிடம் இதை சொன்னேன். நான் கிளம்புகிறேன்…கூ…கூ..கூ…கூ…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *