‘ரபீயுல் அவ்வல்’ தலைப்பிறை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2021
பார்வையிட்டோர்: 2,304 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மஃறிப் தொழுகை முடிந்ததிலிருந்தே, பள்ளிவாச லில் இருந்து சிதறிய கூட்டம் பலவாறாகப் பிரிந்து சென் றனர். நடுத்தர வயதினர் சிலரும், வேண்டியவர்களும் தான் ஹாஜியார் வீட்டுப் பக்கம் விரைந்தனர்.

அப்துல் காதர் லெவ்வை, மெல்ல மெல்லமாக ஊன்று கோலின் துணையுடன் தமது இல்லம் நோக்கி நடந்து கொண்டிருந்தார். உடல் நலமில்லா விட்டாலும் ‘ஜமாத் தொழுகை’யை அவர் விடமாட்டார். இளைஞர் சிலரும் அவருக்கு உதவியாக சென்று கொண்டிருந்தனர்.

மஃறிப் தொழுகைக்குப் பின் யூசுப் ஹாஜியார் வீட்டுக் கந்தூரி வைபவம், களை கட்டத் தொடங்கியிருந்தது. ஒரு நாளும் இல்லாத திருநாளாய்…

ஓ! ஐந்து ரபீயுல் அவ்வல் தலைப்பிறைகளுக்குப் பின் மீண்டும் ‘மௌலூத் ஓதலுக்குப் பின் அன்னதானம் வழங்கும் வைபவம் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ‘மழை தண்ணீ’ இல்லாததன் காரணமாக ‘வயல் வரம்’ பெல்லாம் இறுகி, வரட்சியால் ஊரெங்கும் வறுமை ஆட் கொண்டிருந்தது.

கந்தூரி வீட்டில் உள்ளூர் வாசிகளைவிட, வெளியூர்க் காரர்களே கலகலப்பூட்டிக் கொண்டிருந்தனர். கிராமத்தின் பெரிய புள்ளிகளும், ‘எடுபிடிகளும் ஓட்டமும் நடையுமாக உதவி ஒத்தாசை செய்து கொண்டிருந்தார்கள்.

ரபீயுல் அவ்வல் தலைப்பிறை – ஹாஜியாருக்கு பரவா யில்லை. முதலில் வெளியிலிருந்து வந்த பிரமுகர்களுக்கு *சாப்பாடு’ வைக்க தடல்புடலான ஏற்பாடுகள். ‘ கந்தூரி’ என்ற பெயரில் ஹஜியாரின் ‘பிஸ்னஸ்’ நண்பர்களுக்கும் புரியாணி.

இரண்டு மணித்தியாலங்களாக ஹாஜியார் வீட்டு வள வையும், ரோட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த மோட்டார் வாகனங்கள், சுமார் ஒன்பது மணியளவில் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கின. அன்று மாலை ஐந்தரை மணிக்கே கேற் பூட்டப்பட்டிருந்தது ‘சல்மா மன்ஸி லின் பரந்த முன்றலில் சனம் வந்து புகுந்து விடாமல் வாகனங்கள் ஒதுக்குவதறகாக கூட்டிப் பெருக்கி பளிச்சென்று வைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அவை சென்று மறைந்து விட்டன. மணி ஒன்பது பிந்தி, ஒன்பதரையை அண்மித்துக் கொண்டிருந்தது.

“இனி ஊர் ஜமாத்தாருக்குத்தான்..”

யூசுப் ஹாஜியார் குரல் கொடுத்தார்.

“வாங்க, வந்திருங்க.. நேரம் போகுது.”

ஊர் ஜமாத்தார் என்றால் ஹாஜியாரின் பரிபாஷையில் தனது அந்தஸ்துக்கு நெருக்கமானவர்களும் பள்ளிவாசல் பரிபாலனக் குழுவினரும், உறவினர்களும். ஓதல் யஜ்லிசை அலங்கரித்ததற்காக லெப்பை முஅத்தின் ஆகியோரையும், இந்த அரங்கிலேயே அடக்கிவிட வேண்டியது தவிர்க்சு முடியாத கடமை நிர்ப்பத்தம்.

ஒரு சுற்றுச் சுற்றி வந்து மீண்டும் அழைக்கிறார்.

“ரஷீது மச்சான்…ஆக்கள் வந்தா எண்டு பாத்து’ இருக்க வையுங்க…”

முதலாம் தரம் முடிந்து, விருந்தாளிகள் போய்விட் டார்கள். இரண்டாந் தரத்திற்குத்தான் இந்தக் கூப்பிடு. ஹாஜீயாரோடு நெருங்கிய,ரஷீது மச்சானுக்குத்தான் இந்தத் தராதரங்கள் எல்லாம் புரியும். எவருடைய மன மும் இம்மியளவாவது நோகாமல் காரியம் பார்ப்பதில் சமர்த்து.

இந்தமுறை அந்தச் சாணக்கியமும் தோற்றுவிட்டது.

ஐந்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை தானே ஆகாயத்தில் கார் முகில் தோன்றி, வரண்ட இதயங்களில் பால் வார்த்துள்ளது.

பருவமழை பொழியோ பொழியென்று பொழிந்து … விவசாய உள்ளங்கள் சந்தோஷப் பெருக்கடங்க, வயல்கள் எங்கும் பசுமை! புதுமை! அறுவடை! சூடு மிதிப்பு!.

வசதி படைத்தவர்கள் அனுபவித்தார்கள். தலைப்பிறை யில் யூசுப் ஹாஜியார் வீட்டு கந்தூரி என்றால், முன்பெல் லாம் அதற்கு ஒரு தனித்துவம். ஊர் மக்களின் கௌரவம் பொருளாளர் ரஷீது அவர்களின் உள்ளமும் பூரித்துப் போகும்.

இப்பொழுதெல்லாம் அது நடை பெற முடியாத காரி யம். புதிய தலைமுறையினர் விழிப்படைந்துள்ளனர். ஒரு வேளைச் சோறு என்றதும், ஓடோடிச் சென்று அடிபணிந்து நிற்கும் பஞ்சை விவசாயிகள் இல்லை. ‘ரபீயுல் அவ்வல் தலைப்பிறை ஒரு சிலருக்கு மட்டுமல்ல, அது ஒவ்வொரு வருக்கும் தான், என்ற புதிய விழிப்புணர்வு வேர் பாய்ச்சியிருக்கிறது.

மூன்றாம் பந்திக்கு என்று அறிவிக்கப்பட்டது.

எங்கடப்பா ஊரவங்கள் போனாங்க என்ற கேள்வியின் உந்துதலினால் ஹாஜியார் ஒரு பக்கமும் ரஷீது மறு கோணத்திலும், ஓணானைப்போல் தலையை நிமிர்த்தி நிமிர்த்தி பார்வையால் கூட்டத்தை அளக்கிறார்கள் –

சிறுவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என்று எல்லாரையும் நன்கு அறிபவர் தனாதிகாரி ஒருவர்தானே!

‘அரைவாசிப்பேர் மௌத்து ‘ என்று புலம்பிக் கொள் கிறார்கள். அங்கும் இங்கும் அலைந்து தேடுதல் முயற்சி படுதோல்வி.

“…ம்…காணமே…?”

“யார்? யாராக்கள்…” குரல்கள். மன்சிலில் ஒரு சலசலப்பு.

வந்தவர்கனின் கண்கள் நான்கு பக்கங்களுக்கும் சுழல்கின்றன.

முன்னர் இப்படி ஒரு விஷேசம் என்றால் சகல விவசாய உள்ளங்களிலும் ஒரு குதூகலிப்பு இழையோடும். அக்கம் பக்கத்துக் கிராமங்களில் இருந்தும்…வருவார்கள்.

முகத்தைப் பார்த்து ‘வாங்க’ என்று ஒரு வார்த்தை அழைப்பு இல்லாமல், பள்ளிவாசல் திண்ணையிலிருந்து ஒரு பொது அறிவித்தலை ஏற்றுச் செல்லும் காலம் மாறிவிட்டது.

வந்தவர்களுக்குப் பன்னீர் தெளித்து. வரவேற்று இருக்கச் செய்து கொண்டிருந்த யூசுப் ஹாஜியாருக்கு கைகால் ஓடவில்லை.

“யார் மச்சான் வராத ஆக்கள்?”

ஒரு ‘வாய்ப்பாட்டை’யே ஒப்புவித்து நம்மட அத்துல் காதர் லெப்பை…” என்று முடித்தார்.

சபையிலிருந்து கணைகள் சரமாரியாக எழுகின்றன.

சில உறவினர்களும், பெரும்பாலும் ஹாஜியாரின் வயல்களில் வேலை செய்பவர்களும் தான் சமுகமளித்திருக்கின்றனர். எவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

“அந்த மனிசன் நோயாளி, எங்க வரப்போரா”

அவருக்கு ஊரில் எப்போதும் ஒரு தனி மதிப்பு. ஒரு காலத்தில் நன்றாய் வாழ்ந்தவர், பலருக்கு ‘ஏர்’ ஆகவும் ‘ஏணி’ யாகவும் இருந்தவர்.

ஊரிலிருந்து ஒருவர் சமூகமளிக்கா விட்டால், அதற்குக் காரணம் ‘பிரச்சினைப்பட்டு, ஒதுக்கப்பட்டவர்’ என்ற வரிசையில் இடம் பெற்றவராக இருக்கவேண்டும்.

பள்ளிவாசல் வரி கட்டாதவர், அல்லது எல்லாருக்கும் போல சொல்லிக் கெடக்கா எண்டு கேளுங்க…நாங்க தான் ஒன்றுக்குள் ஒன்று ‘காட்’ தேவைப்படாது. ஆனால்…பொறத்தி மனிசர்?’

இந்த முறைதான் அழைப்பிதழ் அஞ்சலட்டையை விட சிறிய அளவில் அழகாக அச்சிடப்பட்டு, உரிய காலத்தில் தூரத்து பிரமுகர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாம். ஊர் புள்ளிகளுக்கும் விநியோகிக் கப்பட்டிருக்கிறது. அஞ்சலில் அனுப்பினாலும் சில வேளை களில் தவறிப் போகும். அல்லது பிந்திக் கிடைக்கும்,

ஹாஜியாரின் குரலோசை கிணற்றின் அடியிலிருந்து வந்தது.

“காசீம், காசீம்…டேய் காசீம், எங்கே…இவன்…! ஹரபாப் போங்க…இங்க வாயன்டா, என்னை தின்னத்தான் போறீங்க.”

ஹாஜியாருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அமர்க்களப்படுத்துவவற்கு இது பள்ளிவாசல் விசாரணையா? அல்லது ஒரு புனிதமான மஜ்லிசா?

பகிர்ந்து கொண்டிருந்த, கை ரூவின் இளைய சகோதரன் காசீம் என்னவோ ஏதோவென்று ஓடிவந்து நிற்கின்றான்.

“காசீம் நீ அப்துல் காதர் வூட்டபோய் காட்’ குடுத்து சொல்லலியா?”

பட்டியலில் அப்படியொரு பெயர்…?

அப்படியாயிருந்தால் அவருக்கு எழுதின அழைப்பு…? சிலையாகி நின்றவன் சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தான்.

“என்னடா யாதத்துப் போச்சா, வாயத் திறந்து சொல்லேண்டா…?”

இதுவரைக்கும் ஹாஜியாருக்கு இப்படி ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டதில்லை. ரபீயுல் அவ்வல் தலைப்பிறை இப்படித் தலையிடியைத் தரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. எல்லாமே வெற்றிகரமாகத்தான் நடந்துள்ளன. எல்லாருடைய கண்களும் காசிமின் வாயை மொய்த்துக் கொண்டிருந்தன.

யோசித்துக் கொண்டிருந்த காசீம், ஹாஜியார் எதிர் பார்த்தபடி, தயக்கத்தோடு சொற்களைச் செப்பி விழுங்கி விட்டான்.

“இல்ல மச்சான், சொல்ல மறந்திட்டன்” என்று அற்புதமாகச் சொல்லி விட்டான்.

இந்த வார்த்தைகளால் யூசுப் ஹாஜியாருக்கு ‘உசார்’ பிறந்ததும் ‘ஓஹோ’ வென்றிருந்தது.

“அப்துல் காதர் லெப்பை ஜமாத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ஆளா?”

“ஏழை எளியதுகள் என்று மறந்திருப்பார் போலிருக்கு”

“எல்லாம் புகழுக்குச் செய்யிறது தானே!”

“தொலைவிலிருந்து வந்த மனிசரெல்லாம் போயிட்டாக, பாவம் ஊர்ல உள்ள * மிஸ்கீன்’ ஒரு கையும், காலும் வளமில்லாத நோயாளி, பாரிசவாயு ஏற்பட்டதிலிருந்து மனிசன் நாட்டு வைத்தியத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கா..”

“ஓதிப் படிச்ச மனிசன், ஊர் முழுக்க ‘லெப்பை’ என்ற பட்டம்: ஏழை எண்டாப்போல கழிவா?”

‘நல்லாக் கெடக்கு ஞாயம்’ தனக்குத்தான் ‘மார்க்கம்’ தெரியும் என்பதைக் காட்ட விரும்பிய ஒருவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மௌலவியைச் சுரண்டினார்.

“மௌலவி நீங்க ஒரு ஆலிம் தானே, கந்தூரி கொடுக்கிறது யாருக்கு?”

“…ஆ தெரியாமத்தான் கேக்கிறன்.”

இப்படியாகத் திசைமாறிச் சென்ற சலசலப்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க நினைத்த பிரகிருதி –

“டேய் யாராவது போய் அத்துல் காதர் லெப்பைய கையோடு கூட்டிக் கொண்டு வாங்கடா, சபைக்கு முக்கியமான ஆள்.”

ஆனால் அது எடுபடவில்லை.

ஊர்ப் பாடசாலையில் இருந்து வந்த மன்சூர் மாஸ்டர் கௌரவப் பிரச்சினையைக் கிளப்பினார்.

“இந்த சபையில் ஞாயம் கேட்கிறது முறையல்ல; நாங்கள் எல்லாரும் யூசுப் ஹாஜியார் அவர்களுடைய முகத்துக்காக ‘மஜ்லிசை’ சிறப்பிக்க வந்த விருந்தாளிகள். ‘ஊர் நிர்வாகத்தை பாதிக்கும் குற்றம் குறை இருந்தா, பள்ளிவாசல் சபைக்கு அறிவித்து, விசாரணைய ஏற்படுத்தி ஞாயம் பேசுங்க, மற்றது இந்த நோரத்தில் அப்துல் காதர் லெப்பைய ஆள் அனுப்பி எடுப்பிக்கிறது. அது அவருக்கும் மரியாத இல்ல. மறதியாக ஒரு தவறு நடந்தது உண்மை. அத மறந்து இந்த கூட்டத்த சிறப்பிக்கிறது தான் நல்லது.”

ஆசிரியருக்கு ஓர் அர்த்தமுள்ள பிரசங்கமே நடத்தி விட்ட திருப்தியால் உச்சி குளிர்ந்திருந்தது. ஊரவருக்கும் அந்த உரையில் ஒரு நியாயம் இருப்பதுபோல் பட்டிருக்க வேண்டும்.

சலசலப்பு அடங்கிவிட்டது.

மூன்று பந்திகளோடு உபசாரம் முற்றுப் பெற்றது. விருந்தாளிகள் வெளியேறி விட்டார்கள்.

நான்காவதாக இருந்தவர்கள், உதவி ஒத்தாசை செய்தவர்களும், இல்லத்தவர்களும் தான்.

மன்சூர் மாஸ்டர் மட்டும் நீண்ட நேரம் ஹுஜியாரோடு உறவாடிக் கொண்டிருந்தார்.

காசிம் ரஷீது, இன்னும் பகிர்வதற்கு உதவியாய் நின்றவர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முன் அறையில் ஆழ்ந்த அமைதியில் சிந்தித்துக் கொண்டிருந்தார் ஹாஜியார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்டவனுடைய ‘ரஹ்மத்’ பெய்யவில்லை. வறுமையின் உக்கிரம் நீடித்திருந்தாலும் சனங்களின் மனங்கள் எவ்வளவு தூரம் மாறிப் போயிருக்கிறது என்பதை இந்த நிகழ்வு ஹாஜியாருக்குப் புதிய பாடம் புகட்டியிருக்கிறது. ‘நீர்ப்பாசனத் திட்டம் இங்காலப் பக்கம் வந்தா கரியம், நம்மட வயல்ல வேலை செய்ய ஆக்சளுக்குப் பஞ்சம் தான் வரும். எல்லாரும் வயல் வயலெண்டு ஓடுவான்கள் மறுஹா’

‘முன்பெல்லாம் நிறப்பமா நடந்தது. இப்ப இதுகள் ஞாயம் கேக்குதுகள்…’ வெத்திலையில் ‘காட்’ வைத்து அழைச்சாத்தானாம் அப்துல் காதர் லெப்பை வருவார். அவருக்கு ஒரு ‘லெப்பை’ பட்டம். இரண்டெழுத்து ஓதத் தெரிஞ்சாப்ல ஒரு ‘லெப்பை’ பட்டம்…இப்ப அவருக்கு ஒரு கோஷ்டி. ஊர் முன்னேத்தத்துக்கு புறப்பட்டிருக்கு…நாங்களே கலப்பை பிடிக்க வேண்டி வரும். சிறிசுகளும் புதுவிதமாக யோசிச்சி வேலை செய்யத் திட்டம்…மன்சூர் மாஸ்டர் சொல்றதிலேயும் ஞாயம் இருக்கு –

பசித்தவனுக்குச் சாப்பாடு இல்லாட்டி… வயல் விளைஞ்சித்தான் என்னத்துக்கு…எண்டு பொடியன்கள் யோசிக்கத்தொடங்கி இருக்கிறாங்களாம்…

யூசுப் ஹாஜியாரின் மனம் சீறிக் கொண்டிருந்தது.

அப்துல் காதர் லெப்பை அவர்களின் பழைய கல்வீடு ஊர் எல்லையில் அமைந்திருந்தது. அன்று இரவு அவரது குடும்பம் இன்னும் உறங்கவில்லை.

அவர்களுடைய உரையாடல்களும் ரபீயுல் அவ்வல் தலைப் பிறை பற்றியதாகத்தான் இருந்தன-

“மரியம் அடுத்த வருஷம் எங்கட ஊடுகளிலும் தலைப்பிறை கொண்டாடுவம்.”

அப்துல் காதர் லெப்பை அவர்களுடைய குரலில் தெளிவும் தீர்க்கதரிசனமும் இழையோடின.

“மரியம் புள்ளகள் படுத்துட்டுதுகனா?”

“ஓம்”

“தீன் திண்டாங்களா?”

“தேங்காய்ச் சம்பலோட ரொட்டி திண்டுதுகள், முபாரக் இன்னும் ஊர் சுத்திட்டு வரல்ல.”

“அவன ஒண்டும் சொல்லாத, அவன் போர வழி எங்கட ஊர் முன்னேற்றத்துக்குத்தான்..எங்கட காலத்தில செய்ய முடியாத காரியத்த அவங்க செய்றாங்க…நாங்க ஒதவியா இருப்பது தான் புத்தி…”

மரியம் ‘குப்பி’ விளக்கை அணைத்துவிட்டு நித்திரைக்குப் போக ஆயத்தம் –

முன் கதவு தட்டும் ஓசை.

“யாரது?”

“முபாரக்.”

‘சர்’ரென்று தீக்குச்சியைக் கீறி, விளக்கேற்றி கதவைத் திறந்தாள்.

முபாரக், நண்பர்ளுடன் பிரவேசித்தான். காசிம், அபூ, இபுராஹிம். ஜாபிர், றியாழ்தீன்.

கிராம முன்னேற்றச் சங்க உத்தியோகத்தர்கள்.

விடிந்தால் –

‘ஐந்து முப்பது ‘ பஸ் ஏறவேண்டும்.

அரசாங்க அதிபர் காரியாலயத்தில் முக்கிய அலுவலர் நடைமுறைப் படுத்தப் போகும் சில விடயங்கள் சம்பந்த மாக ஒரு சந்திப்பு. கருத்துக்களைச் சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மகஜர் (பெட்டிசம்) ஒன்றைத் தயாரிக்க முன் இராச் சாப்பாட்டை முடித்துக் கொள்ள ஆயத்தம். இன்று முழு நாளும் ‘கிராமசேவகர் போன்றவர்களைக் காணச் சென்றதில் அலைச்சல் அதிகம். மூன்று நாள் நித்திரையின்றி வேட் டைக்குச் சென்று வந்ததைப் போன்று களைப்பும் நித்திரையும்.

முபாரக் பாண் கொண்டு வந்திருந்தான்.

“மாமா ஒங்களுக்கு விசயம் தெரியுமா? இந்த முறை. யூசுப் ஹஜியார் வீட்டு கந்தூரியில மூண்டாம் பந்திக்கு ஆக்கள் இல்லயாம். சபையில் ஒரே கசிலி..”

ஜாபிர், அப்துல் காதர் லெப்பையிடம் கூறிய போது எல்லோரும் சிரித்தனர்.

வருடத்திற்கு ஒருமுறை யூசுப் ஹாஜியார் வீட்டுக்குச் சென்று மூன்றாம் பந்திக்கு நிற்பதிலும் பார்க்க ஒவ்வொரு விவசாயியின் இல்லத்திலும் ஒவ்வொரு வேளைச் சோறு பொங்கப் போகிறது மேலல்லவா –

ஆரம்ப வேலையாக –

குளக்கட்டைத் திருத்தப் போகிறார்கள். தண்ணீர் கிடைக்கப்போகிறது – பாடசாலைப் பிள்ளைகளுக்கு பஸ்வண்டி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது – பாதைகள் திருத்தப்படுகின்றன.

பருவ மழையையே நம்பிக் கொண்டிருந்த காலம் அடுத்த கச்சான் காற்றோடு போய்விடும்.

வரப்போகும் ரபியூல் அவ்வல் தலைப்பிறை மிகக் கோலாகலமாக…

இளைஞர்கள் மகஜர் எழுத உட்கார்ந்தனர்.

– மல்லிகை – ஜுலை 1982

– இரவின் ராகங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு : ஜூலை 1987, மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *