கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 12, 2023
பார்வையிட்டோர்: 1,340 
 

(1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சரியா ரெண்டு மணி இருக்கும். அப்பத்தான் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தேன்.

எங்க வீட்டுக்கும் அடுத்த வீட்டிலே- அதான் செங்கமலம் வீட்டுலே – என்னமோ பரபரப்பா இருந்துச்சு. யாராரோ புதுப்புது ஆளுக கொரலு கேட்டிச்சு.

‘என்னடாது’ன்னு நின்னு பார்த்தேன். ஒன்னும் வௌங்கலே. சர்த்தான் ‘என்னமோ’ன்னுட்டு வீட்டுக் குள்ளே போயி இடுப்புப் படங்கை அவுத்துப் போட்டு பைப்படிக்குப் போனேன். போகையிலேயும் லேசாத் திரும் பிப் பார்த்தேன். யாரோ ரெண்டு மூணு ஆளுக கீழே பாய் விரிச்சு குந்தி இருந்தாங்க. எங்க தோட்டத்து ஆளுக மாதிரியும் தெரியல்லே. பரபரப்பு மட்டும் தெரிஞ்சுது.

பைப்பைத் தொறந்து கைகால் கழுவுனேன். கணுக் காலுக்குக் கீழே சப்பாத்துப் போட்டாப்லே ஒரே செம் மண்ணு. மொழங்காலுக்கு கீழே குச்சிக கீறி வெள்ளை வெள்ளையாக கோடுக.

தோட்டத்திலே ஸ்டோர் வேலையைத் தவிற வேற எந்த வேலைக்குப் போனாலும் இந்த அடையாளம் இருக்கும்.

கெண்டைச் சதையில தண்ணியை ஊத்தி கழுவயிலே அந்தப் புள்ளை – அதான் செங்கமலம் நெனைவு வந்திடும்.

ஒரு நா இப்பிடித்தான் கை கால் கழுவிக்கிட்டு இருக் கையிலே, பக்கத்திலே நின்னு அது பார்த்துக்கிட்டே இருந்துச்சு.

‘என்னா பார்க்குறே’ன்னேன்.

‘கணக்கப்பிள்ளே வீட்டுலே இருக்கே ஒரு கருங்காலி மேசை, அதைப் பார்த்து இருக்கியா’ன்னுச்சு.

ஆமான்னேன்.

‘அந்த மேசைக் காலுக மாதிரி இருக்கு ஓங்காலு ரெண்டும்’ அப்பிடீன்னுச்சு.

என் காலிலே நெசமாவே கெண்டைச் சதை கொஞ் சம் உப்பல்தான். அது அசிங்கமா இருக்கோ, அழகா இருக்கோ தெரியல்லே. ஆனா கருங்காலி மேசைக் காலுன்னா மேலே உப்பி கீழே குறுகி அழகாகத்தான் இருக்கு.

வீட்டுக்குப் போகையிலே செங்குவோட தம்பிப் பயல் ஒருத்தன் வெளியே ஓடியாந்தான். எங்க வீட்டு வாசலிலே நின்னு ‘எலே தொரைராசு’ன்னு கூப்பிட்டேன்.

பயல் புதுக் கமிசு, கால் சட்டை எல்லாம் போட்டு அழகா இருந்தான்.

எனக்கு முன்னாலே வந்து நின்னு ‘என்னா’ன்னான். ஓங்க வீட்டிலே என்னடா விசேசம்’னு கேட்டேன். அந் தப் பயலுக்கு ஒழுங்கா சொல்லத் தெரியல்லே, மேலேயும் கீழேயும் பார்த்துட்டு, ‘அதா… ம்… வந்து அக்காவுக்கு கல்யாணம்’னான். எனக்கு சிரிப்பு வந்திச்சு. இந்தப் புள்ளைக என்ன புள்ளைகளோ என்னமோ? நாலு மனுச கூடி கொஞ் சம் கலகலப்பா இருந்தாப் போதும், அதுக்குப் பேரு ஒண்ணு கலியாணம் இல்லாட்டி ஆடிப் பூசை.

‘அடப் போடா’ன்னுட்டு உள்ளுக்குப் போயிட்டேன், இருந்தாலும் மனசிலே கொஞ்சம் ‘நறுக்’குன்னு இருந்துச்சு.

‘நானும் செங்கமலமும் எவ்வளவு உசுருக்கு உசுரா இருக்கோம்’கிறது அவுக வீட்டிலேயும் சரி, எங்க ஆயி அப் பனுக்கும் சரி நல்லாத் தெரிஞ்சு இருக்கணும். இன்னய நேத்தைய பழக்கமா என்ன? அடேயப்பா! சின்னப் புள்ளை களா இருக்கிற காலத்திலே இருந்து நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் திரிவோம். இஸ்கூலுக்கு போக ஆரம்பிச்ச காலத்திலே செங்கமலம் தான் என்னைக் கூட்டிக்கிட்டு போகும் வரும்.

நான் ஆனா, ஆவன்னா படிக்கையிலே அது ஒண்ணாங் சிளாசோ என்னமோ!

அடடே! இப்பத்தான் நெனைவு வருது, செங்கமலம் என்னைவிட ஒரு வயசு மூப்பு!

அதுனாலே என்ன?

வேலைக்குப் போற காலத்திலேயும், இப்படித்தான். எனக்கு முன்னாடியே அதை பேரு பதிஞ்சிட்டாங்க. நான் வேலைக்கு போகையிலே அவுக எல்லாம் பழைய ஆளுக.

நல்லா ஞாவுகம் இருக்கு.

மொதல் மொதலா வேலைக்கு போற அன்னைக்கு எனக்கு கொழுந்து வேலைதான் கெடைச்சுது. புதுசா பேரு பதிஞ்ச-ஒரு பத்துப் பதினைஞ்சு புள்ளைக இருக்கும் எங்களையெல்லாம் கொஞ்ச நாளைக்கி கொழுந்து வேலையிலே போட ணும்னு சொல்லிட்டாங்க.

‘சர்தான்’னு புதுக் கூடை ஒன்னை வாங்கி தலையிலே மாட்டிக்கிட்டு கெளம்பினேன். எங்க ஆயாதான் எனக்கு படங்கு கட்டி தலையிலே துணியைப் போட்டு, கூடையை இப்படித்தான் போட்டுக்கிடணும்’னு சொல்லி நெத்தியிலே விவிதியைப் பூசிவிட்டு வாசலிலே நின்னு ‘செங்கமலம்’ னு கூப்புடுச்சு. ‘என்ன அத்தே’ன்னு சத்தங் குடுத்திச்சு அது.

‘மலைக்கு போகையிலே வந்து எங்க தம்பியையும் கூட் டிக்கிட்டுப் போ’ன்னுச்சு ஆயா. கொஞ்ச நேரத்துலே செங்கமலம் வந்துது.

‘அனுபவம்’னாலே தனி தான்.

நானும் கூடை போட்டிருக்கேனே! நடு மண்டையிலே வளைஞ்சு நின்ன கயிறு எப்படியோ நழுவி நழுவிக்கிட்டே போகுது. சும்மா சும்மா இழுத்துவிட்டுக் கிட்டேன். இருந் தாலும் ஞாவுகப் பெசகா தலை ஒசரும் போது கூடை தரையிலே தான்.

செங்கமலம் என்னடா’ ன்னா கூடையை முதுகோட ஆணிவைச்சு அடிச்ச மாதிரி என்ன அலட்சியம்!

என்னை இந்தக் கோலத்திலே பார்த்ததும் அதுக்கு சரியான சிரிப்பு. ‘முள்ளு மம்மட்டியை எடுத்துக்கிட்டு ஆம்புளையா லெட்சணமா வேலைக்கு வேலைக்கு போகாமே பொம்பு ளைக மாதிரி கூடையை போட்டுக்கிட்டு… வெக்கமில்லே?’ அப்படீன்னு கேலி பண்ணுச்சு.

எனக்கு வெக்கமாகத்தான் இருந்தது. என்ன பண்றது? போகச் சொல்ற வேலைக்குத் தான் போறதா?

‘பார்த்தியா ஆயா’ன்னு ஆயாகிட்டேச் சொன்னேன். சரிதாண்டி ஆத்தா! ஒரேதாத்தான் கேலி பண்ணாதே! பயந்துடப் போறான்’னு சொல்லி விட்டு ‘ஓம் பக்கத்துலே நிப்பாட்டிக்க’ன்னு சொல்லி எங்க ரெண்டு பேரையும் அனுப்பி வைச்சுது.

எங்க ஆயா அப்ப வேலைக்கு வர முடியாத நெலமை.

அந்தா வாசல்லே நின்னு வெளையாடிக்கிட்டு இருக் கானே ஏந்தம்பி, அவன் அப்ப வயித்திலே!

ஆக செங்குவும் நானும் வேலைக்குப் போனோம். மொத நாளு அனுபவம் எனக்கு புதுசாத்தான் இருந்துச்சு இம் புட்டுக்கும் நான் ஆயாவுக்கு தேத்தண்ணி, சோறு கொண்டு போகையிலே பார்த்த கங்காணிதான், கணக்கப் பிள்ளைதான். இருந்தாலும் அன்னைக்கு ஒரே ஒதறலா இருந்துச்சு.

அதுலேயும் எங்களுக்கு வந்திருந்த கங்காணி காட்டுக் கத்தலா கத்துவது. தொண்டையும் ஆனைத் தொண்டை கேக்கணுமா?

அந்த ஆளு சத்தம் கேட்டாவே எனக்கு ஒடம்பெல் லாம் பதறத் தொடங்கிவிடும். இந்த பதற்றத்திலே எனக்கு ஒழுங்காவே கொழுந்து எடுக்க கை வரல்ல. நல் லாச் சொல்றதுன்னா எனக்கு கொழுந்து எடுக்கவே தெரி யல்லே.

அந்தத் தேயிலைக் காட்டிலே பொறந்து வளர்ந்து பதி னேழு வருஷத்துக்கப் பொறகு அன்னைக்குத்தான் கொழுந் துன்னா என்னான்னு செங்கு சொல்லிக் குடுத்துச்சு!. இது நல்ல ‘கொமிட்’ இல்லே?

மரத்துலே பக்குவமான கொழுந்தை வச்சிப்பிட்டு போயிடக் கூடாதாம். துப்புரவா எடுக்கணுமாம். அதே சமயம் குத்தங்கொறை இல்லாமே எடுக்கணுமாம்.

ஐயய்ய! நான் பட்ட பாடு… நான் ஒரு மரம் எடுக்குறதுக்குள்ளே செங்கமலம் பத்து மரத்திலே கொழுந்து எடுத்துடும். என்னைப் பார்த்து, ‘சுருக்காவா! ஆளோட வா’ன்னு சொல்லிக்கிட்டு அது என்னாலே முடியாத காரி யம்னு தெரிஞ்சு – என்னோட நெறையையும் சேர்த்து எடுத் துக்கிட்டு போச்சு.

‘பெரிய அநியாயம் என்ன’ன்னா நெஞ்சு ஒசரத்துக்கு வளர்ந்து இருக்கிற அந்த தேயிலைச் செடிகதான்.

‘கவாத்து வெட்டி நாலைஞ்சு வருஷம்ஆன பழைய மலை. ஒவ்வொரு செடியையும் நீஞ்சிக் கிட்டு போறதுக்குள்ளே ஆயிரம் தரம் கூடை நழுவி நழுவி விழுந்துடும்.

இத்தனை ரகளைக்குப் பொறகு பத்து மணிக்கு கொழுந்து நிறுக்க கூப்பிடையிலே கூடையைப் பார்த்தா திகீர்ன்’ னு இருந்துச்சு. பெரிய கோயில் அண்டாவிலே ஒண்ணு ரெண்டு சோத்துப் பருக்கை ஒட்டிக்கிட்டு இருக்கிற மாதிரி கொஞ் சூண்டு கொழுந்து – ரெண்டு றாத்தலாவது தேறுமோ என் னமோ-இருந்துச்சு.

‘இஞ்ச பாரென் செங்கு’ன்னு கூடையைக் காட்டினேன். கொழுந்து நிறுக்கிற இடத்துக்கு போகாமே நின்னுடலா மா’ன்னு கூட யோசிச்சேன். அதுலேயும் செங்கமலம் கூடைக்கிட்டே என் கூடையை வச்சுப் பாக்கையிலே எனக்கே என்மேலே கோவம் கோவமா வந்துச்சு.

செங்கமலம் என் கூடையை எட்டிப் பார்த்துட்டு ‘என் னது இப்பிடி கெளை கெளையா ஒடிச்சுப் போட்டிருக்கே’ன்னு

சொல்லி விட்டு, சரியில்லாத கொழுந்து, முத்தின எலை, காம்புகளை எல்லாம் பொறுக்கி வீசுச்சு.

ரெண்டு எலையும் ஒரு அரும்புந்தான் கொழுந்து, என் கூடையிலே அஞ்சு எலை, ஆறு எலை கொழுந்துக கூட வாது வாதா கெடந்துச்சு!

அப்புறம் தன்னோட கூடையிலே இருந்து நெறைய அள்ளிப் போட்டுச்சு. கொழுந்து நிறுக்கையிலே கணக்கப் பிள்ளை ‘ஒம்பது றாத்தல்னு சொன்னாரு.

‘தேவலையே’ அப்படீன்னது கங்காணி. கங்காணி. அப்புறம் கணக்கப்பிள்ளைக்கிட்டே ‘புதுப்பயலுங்க’ன்னது. கணக்கப் பிள்ளை திரும்பிப் பார்த்துட்டு ‘…ம்..’ அப்பிடீன்னாரு!

எனக்கு கொஞ்சங்கூட சந்தோஷமே இல்லே. இருந் தாலும் கொஞ்ச நாளிலேயே ஞாயமா கொழுந்து எடுக் கப் பழகிட்டேன்.

அன்னைக்கும் சரி, கொழுந்திலே ஒரு ஆறேழு மாசம் நின்னிருப்பேன்-மத்த நாளுகள்ளேயும் சரி நான் செங்கம லத்துக்கு பக்கத்திலேயேதான். எங்க மலையிலே வேலை செஞ்ச ரெண்டு மூணு கெழவிக கூட கேலி பண்ணுங்க. ‘லயத்திலேயும் பக்கத்து வீடு’ மலையிலேயும் பக்கத்து நெறை. என்னடாது! யாரும் கொத்திக்கிட்டு போயிரு வாகன்னு காவ காக்கிறியா?’ அப்படீன்னு சொல்லி சிரிக் குங்க. வெக்கத்தோட நான் செங்கமலத்தைப் பார்ப்பேன், அதுவும் மூக்கும் கண்ணும் சுளிக்க சிரிக்கும்.

அதுக அப்பிடி கேலி பண்ணையிலேயும் சரி, இல்லாட்டி எங்க ரெண்டு பேரையும் சேர்த்து பேசயிலேயும் சரி, எனக்கு உள்ளுக்குள்ளே சந்தோஷமா இருக்கும். ஆனா நான் எப்பவும் மரியாதைக் கொறவா நடந்துக்கிட்டதே இல்லை.

என்னதான் ஆசைன்னாலும் அதது நடக்க வேண்டியது நடந்த பொறகுதானே பாசம் நேசம் எல்லாம்.

***

சாப்பிட்டு முடிச்சு வெளியே வந்தேன். மடியிலே பீடி இல்லே. சாப்பிட்டு முடிச்சதும் எனக்கு ஒரு ‘தம்’ அடிக் கணும். இல்லாட்டி தின்ன சோறு நெஞ்சுக்கிட்டே இருக் கிற மாதிரி இருக்கும்.

மெள்ள பழனி வீட்டுக்கு கெழம்பினேன். அங்கே தான் பீடி கெடைக்கும். அவன் கடை வச்சிருக்கான். கடை என்ன கடை? லயத்து திண்ணையிலே பலகையாலே அலுமாரி மாதிரி செஞ்சு கொஞ்சம் சாமான் வச்சு இருக் கான். பீடி, சுருட்டு, சிகரட்டு, வெத்திலை இதுக தான். மிஞ்சினா ரெண்டு மூணு மீன் சுண்டு இருக்கும்.

அவசரத்துக்கு பழனி வீடு தான். இல்லாட்டி ஒண் ணரை கட்டை தூரம் நடக்கணும்.

நல்ல வேளை பழனி இருந்தான். ஒரு கட்டு பீடி வாங்கி திண்ணையிலே இருந்தே ஒண்ணைப் பத்த வைச்சேன்.

“என்னடா காயாம்பூ! உன் சோடியை விட்டுட்டே போல இருக்கே”ன்னான் பழனி.

“என்ன ஒளர்றே! நாட்டுப் பக்கம் போய்ட்டு வந் தியா”ன்னு கேட்டேன்.

‘நாட்டுப்பக்கமா’ன்னு சிரிச்சான். அப்புறம் ‘நெசமாத் தாண்டா கேக்கிறேன். செங்கமலத்துக்கு கலியாணமாம். நெசமாடா?’ன்னான்.

செங்குவோட தம்பிப்பய ஒளர்றான்னு நெனைச்சு என்னை நானே அடக்கிட்டாலும், மனசுக்குள்ளே அரிப்பா இருந்த சந்தேகம் இப்ப வலுத்துச்சு. என் மொகம் என்ன போக்கு போச்சோ தெரியல்லே. பழனி ‘கெக்கெக்கே’ன்னு சத்தம் போட்டு சிரிச்சான்.

அந்தச் சிரிப்பு என்னை உசுரோட நெருப்பிலே வச்சு கொளுத்துறாப்பிலே இருந்துச்சு. இன்னம் கொஞ்ச நேரம் அவன் கிட்டே இருந்தா அழுதாலும் அழுதுடுவேன் போல இருந்தது. என்னாலே தாங்கவே முடியல்லே. என்ன அநியா யம்! நான் கடைசியிலே ஒரு துரும்புக்கு ச ம மா போயிட் டேனே ! இவ்வளவு நாள் எப்படி பாசமா பழகி இருப்பேன், எப்பிடி உசுரா இருந்திருப்பேன்! அவ்வளவும் பொய்யாப் போச்சா?

அடச் சீ!

அவளை கவாத்து கத்தியாலே கூறு கூறா வெட்டிக் கொல்லுவேனே தவிற இன்னொருத்தன் கையில கொடுக் கிறதா?

ஒண்ணுமே பேசாமே ‘விருட்’டுன்னு கெழம்பினேன். பழனி கூப்பிட்டு என்னென்னமோ கேட்டான். எனக்கு ஒண்ணுமே மண்டையில ஏறல்லே. என்னத்தையோ சொல் லிவிட்டு வந்தேன். ஒடம்பெல்லாம் ரத்த ஓட்டம் நின்னது மாதிரி ஒரு தளர்ச்சி,

சும்மா சும்மா, நெஞ்சை அடைச்சுக்கிட்டு பெருமூச்சு வந்திச்சு. என்னாலே என்னையே கட்டுப்படுத்திக்க முடியல்லே.

வீட்டு வாசல் படிக்கிட்டே போகையிலே பீலியடிப்பக் கம் செங்கமலம் நிற்கிறது தெரிஞ்சுச்சு. திரும்பிப் பார்த் தேன். செங்கமலம் செவப்பா இல்லாட்டியும் ஒரு பொது நெறம். புதுச் சீலை ஒண்ணு கட்டி இருந்துச்சு. பச்சை கட் டம் போட்ட மஞ்ச நெற சீலை.

கலியாணம் கூடுனாலே பொண்ணுக்கு ஒரு பொலிவு வருமாமே? அதுக்கு அந்தப் பொலிவு முகத்திலே தெரிஞ் மூக்கிலே காதுலே எல்லாம் புதுசர் நகைமின்னுச்சு.

அவுக வீட்டு வாசலுக்கு கொஞ்சம் தள்ளி ஒருத்தன் நின்னுகிட்டு இருந்தான். மாப்பிள்ளே போலே இருக்கு!

எம் மாதிரி கூலி வேலைக்காரன் தான்! தலையைக் குனிஞ் சிட்டு வந்த அந்தப் புள்ளகிட்டே என்னமோ சொன்னான் போலேயிருக்கு…… அது மொகத்தை நிமிர்த்தி அவனை வெக்கத்தோட சிரிச்சிட்டு பாத்திச்சு.

அப்பா! அந்தப் பார்வை, அந்தச் சிரிப்பு…

என்னை நெருப்பாலே சுடுறமாதிரி இருந்தது. பாய்ஞ்சு போயி ரெண்டு பேரையும் கொல்லுவோமாங்கிற மாதிரி ஒரு ஆவேசம் வந்திச்சு. பேசாமே வீட்டுக்குள்ளே போயிட் டேன். எவ்வளவு நேரம் இடிஞ்சு போய் உட்கார்ந்திருந் தேனோ தெரியாது. வாசலிலே ‘அத்தே’ங்கிற கொரலு கேட்டுச்சு.

அவுக தான்! மகாராணி மாதிரி வந்தாக!

அவ்வளவு நேரமும் குமுறிக்கிட்டு இருந்த ஆத்திரம் அதைக் கண்ட ஒடனே மலசு பொங்கிக்கிட்டு வந்திச்சு. கழுத்தை நெறிச்சு கொல்லுவோமான்னு ஒரு ஆவேசம், இல்லாட்டி தோளிலே தூக்கிப் போட்டுக்கிட்டு எங்காச்சும் ஓடிப்போகலாமான்னு ஒரு துடிப்பு வந்திச்சு.

இங்கே ஏன் வந்தேன்னு கேட்க வாயெடுத்தேன். சொல் வரல்லே. விக்கலும் விம்மலுமாகுமுறி அழுதிட்டேன். என் னாலே தாங்கிக்க முடியல்லே. துணியை எடுத்து மொகத் தைப் பொத்திக்கிட்டு சுவத்திலே சாஞ்சிட்டேன்.

எனக்கே வெக்கமாகவும் இருந்திச்சு. கண்ணை தொடைச் சுக்கிட்டு திரும்பிப் பார்க்கிறேன். செங்கமலம் என்னையே பார்த்துக்கிட்டு நின்னுச்சு. அதுக்கு ஒண்ணும் வௌங்கல்லே போலே இருக்கு. என் மனசிலே இவ்வளவு ஆசையை வளர்த் துப்புட்டு மோடைச்சி மாதிரி நிக்கிறதைப் பார்க்கையிலே எனக்கு வயித்தெரிச்சலா இருந்துச்சு.

‘இங்கே ஏன் வந்தே போ வெளியே’ன்னேன். சடார்னு அது மொகம் கறுத்துப்போச்சு.

“என்ன காயாம்பூ”ன்னுச்சு

என்ன நடக்குதுன்னு எனக்கே அறியமுடியாத நெலை யிலே…

“பாவம்…”னுச்சு

விட்டேன் ஒரு அறை! அதோட கழுத்திலே கையை வச்சு வாசல்வரைக்கும் தள்ளிவிட்டு “போ! தொலைஞ்சு இனிமே இந்த வீட்டுக்குள்ளே வராதே”ன்னு உறுமிப்புட்டு வந்தேன்.

செங்கமலம் வாசலிலே நின்னு என்னையே பார்த்துக் கிட்டு நின்னுச்சு. அப்புறம் மறுபடியும் உள்ளேயே வந்தது. கிட்டே வந்து, ‘காயாம்பூ’ ன்னு கூப்பிட்டிச்சு. ஆயிரம் தரம் சொன்ன அதே பேருதான். ஆனா இப்ப கூப்பிடை யிலே செங்குவோடை குரல் அடங்கி பாசமா மனசுக்கிட்டே ரொம்ப நெருங்கி வந்து கூப்பிடற மாதிரி இருந்துச்சு!

நிமிர்ந்து பார்த்தேன்.

அது அழுகையா இல்லே சிரிப்பான்னு சொல்ல முடி யாத மாதிரி கண்ணுலே நீரும், வாயிலே சிரிப்புமா என்னைப் பார்த்து “நா ஒன்னைவிட மூத்தவ இல்லே. என்னை ஒன்னோட அக்காவா நெனைக்க முடியல்லியா? நா ஒன்னை எந்தம்பியாத்தான் நெனைச்சேன் …” அப்படீன்னுச்சு.

நான் தலையைக் குனிஞ்சுக்கிட்டேன். எங்கேயோ எனக்கு ‘பளீர்’னு அடிபட்டது மாதிரி இருந்தது.

மழைக் காலங்களில் வேலை செய்றபோது பொகை மூட்டம் மூடிக்கிடும். அந்த நேரத்திலே இந்த உலகத்திலேயே நாம நிக்கிற இந்த இடம் மட்டும்தான் பாக்கி. மத்ததெல் லாம் பாழ் வெளிங்கிற மாதிரி ஒரு நெனைவு வரும் அப்பிடித் தான் இருந்துச்சு.

எல்லாம் வெறிச்சோடிப் போனமாதிரி …

– ஒரு கூடைக் கொழுந்து, முதற் பதிப்பு: ஏப்ரல் 1980, வைகறை பப்பிளிகேஷன்ஸ், இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *