ரஜினி ரசிகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 9, 2012
பார்வையிட்டோர்: 13,332 
 
 

காமுவின் பிறப்பில் இருந்துதான் இந்தக் கதையைத் துவங்க வேண்டும். 1980-ம் ஆண்டு நெல்லை பார்வதி திரையரங்கில், ‘அன்புக்கு நான் அடிமை’ படம் வெளியான அன்றுதான் காமு பிறந்தான். அப்போது அவனுக்கு 15 வயது. ரஜினிகாந்த்தின் ரசிகனாக உருவான நாள்தான், காமுவின் பிறந்தநாள்.

மான் கொம்பு சண்டையா? அல்லது நாட்டாமைக்கு நாள் குறித்ததா? அல்லது ரஜினியின் தனித்துவமிக்க ஸ்டைலா எது என்று தெரியவில்லை. ‘அன்புக்கு நான் அடிமை’ திரைப்படம்தான் காமுவின் வாழ்வில் ஒரு வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு, கல்லூரி மாணவர்கள் அரியர்ஸ் எழுதுவதுபோல, ரஜினிகாந்த்தின் பழைய, புதிய திரைப்படங்களைத் தேடித் தேடிப் பார்க்கத் துவங்கினான். ‘மின்னல் நெருப்பு’, ‘நான் போட்ட சவால்’ போன்ற மொழி மாற்றுத் திரைப்படங்களைக்கூட விட்டுவைக்கவில்லை.

ரஜினி படங்களைப் பார்க்கத் துவங்குவதற்கு முன், காமு திரைப் படங்கள் மீது அத்தனை ஆர்வம் கொண்டவனாக இருந்தது இல்லை. அதற்கான வாய்ப்பும் அவனுக்கு இல்லை. காமுவின் அப்பா காளியப்பன் ஒரு தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். அவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களைத் தவிர்த்து, வேறு எதையும் பாராதவர். சிவாஜி கணேசனையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது இருக்குமே என்பதால், ‘கூண்டுக்கிளி’ திரைப் படத்தைத் தவிர்த்தவர்.

அவர் இறந்துபோவதற்கு முன், ‘நீதிக்குத் தலை வணங்கு’, ‘பல்லாண்டு வாழ்க’, ‘உரிமைக் குரல்’ எனச் சில படங்களுக்கு காமுவை உடன் அழைத்துச் சென்று இருக்கிறார். காமுவின் கையைப் பிடித்துக்கொண்டு, பேட்டையில் இருந்து டவுன் வரை நடந்தே செல்வார். படம் பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போது, காமுவை எம்.ஜி.ஆர்.போல நடித்துக் காட்டச் சொல்வார். இவை எல்லாம் ஒரு மூன்று நான்கு வருடங்கள்தான் தொடர்ச்சியாக நடந்தது. காமுவுக்கு 10 வயது இருக்கும்போது, அவனது அப்பா காளியப்பன் இறந்துபோனார்.

அப்பாவின் மரணத்தை எம்.ஜி.ஆர். திரைப்பட இழப்பின் மூலம் உணர்ந்தான் காமு. எப்போதாவது எம்.ஜி.ஆர். பட சுவரொட்டிகளைப் பார்க்கும்போது, அப்பாவின் ஞாபகமும் கொஞ்சம் அழுகை யும் வரும். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு காமு பார்த்த முதல் திரைப்படம், ‘அன்புக்கு நான் அடிமை’. எம்.ஜி.ஆருக்குப் பின் எந்த இடை நிறுத்தமும் இல்லாமல், ரஜினிகாந்த்திடம் வந்து இறங்கியவன் காமு.

தன் அப்பா காலத்து எம்.ஜி.ஆர்-தான் இன்றைய ரஜினி என்கிற எண்ணம் காமுவின் உள்ளுணர்வில் இருந்தது. அதுதான் அவனை அத்தனை தீவிரமாக இயக்கிக்கொண்டு இருந்தது. திரைப்படம் மட்டும் அல்ல… காமுவுக்கு உளவியல்ரீதியாகவே ரஜினியுடன் ஒரு நெருக்கம் உண்டு.

ஒடிசலான தேகம், கறுத்த நிறம், முன் பல் கொஞ்சம் துருத்திக்கொண்டு இருக்கும். சின்ன வயதில் மூக்கு வாளிக்காகக் குத்தப்பட்ட துளை வேறு எடுப்பான மூக்கில் பளீரெனத் தெரியும். அவன் வளர்ந்த கடசர் தெருவில் ஏகப்பட்ட முருகன்கள் இருந்ததால், அவனை எல்லோரும் காவன்னா மூனா என்றுதான் அழைப்பார்கள். குடும்பத் தலைவனின் இனிஷியலைக் குடும்பப் பெயராக வைத்துக்கொள்வது, பேட்டையில் இஸ்லாமியக் குடும்பங்களின் வழக்கம். அந்த வழக்கம் எல்லா சமூகங்களுக்கும் ஒட்டிக் கொண்டது.

காவன்னா மூனா… காக்கா மூக்கன்… கருவாப் பயடோய்… எனத் தெருவில் இருக்கும் சிறுவர்கள் கேலி செய்து பாடு வார்கள்.

இந்தக் கேலியைப் பொறுக்க முடியா மல்தான் காமுவின் அம்மா ராமாத்தா, அவனை காமு எனப் பெயர்வைத்து பள்ளியில் சேர்த்தாள்.

பள்ளி நண்பர்கள், தெருச் சிறுவர்களை விட மோசமாக இருந்தார்கள். அவர்கள் அவனைச் செல்லமாகவும் கோபமாகவும் ‘கறுப்பா’ என்றுதான் அழைப்பார்கள். அதிலும் பானா தானா வீட்டு இஸ்மாயி லின் கேலி, எல்லை கடந்து இருக்கும். ”பன மரத்துக்கு யூனிஃபார்ம் போட்ட மாரி வாராம் பாரு காமு” எனச் சத்த மாகச் சொல்வான் இஸ்மாயில். அவனோடு இருக்கும் பத்து பேரும் சொல்லிவைத்ததுபோலச் சிரிப்பார்கள்.

காமுவுக்குப் பள்ளிக்கூடம் மொத்தமும் சேர்ந்து சிரிப்பதுபோல இருக்கும். ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது, எப்படி வெடித்துச் சிரிப்பு வரும் என்று தெரியவில்லை. தினமும் இஸ்மாயில் இதைச் சொல்வான், உடன் இருப்பவர்கள் பெருங்குரல் எடுத்துச் சிரிப்பார்கள்.

இந்த கேலிக்கு எல்லாம் காமுவிடம் இருந்த ஒற்றைப் பதில்… கண்ணீர் மட்டும் தான். வகுப்பு முடிந்ததும் காமராசர் பள்ளிக்கு எதிரே இருக்கும் பேட்டை ரயில் நிலையத்துக்குச் சென்று தனியே அமர்ந்து அழுதுவிட்டு வருவான்.

பெரும் கண்ணீரோடு வீடு திரும்பும் நாளில், ராமாத்தாள் காமுவைத் தன் மடி கிடத்தி ஆறுதல் சொல்வாள். ”கறுப்பு தான் அழகு முருவா, கறுப்பாப் பொறக்கதுக்கு ஏழேழு சென்மத்துக்குப் புண்ணியம் செஞ்சிருக்கணும்” என்பாள் தலை கோதிய படி. ராமாத்தாவின் ஆறுதல்கள் ஒரு போதும் காமுவைச் சமாதானப்படுத்தியது இல்லை. அவள் தலை கோதிவிடுவது மட்டும் பிடிக்கும்.

ஒவ்வொரு முறையும் தீபாவளிக்கு புதுத் துணி எடுக்கிறானோ இல்லையோ, இரண்டு குட்டிக்குரா பவுடர் டப்பா வாங்கிவிடுவான். அந்த அளவு, ‘கறுப்பா’ என்கிற கிண்டல் அவனைப் பாதித்தது.

காமுவின் மீது திணிக்கப்பட்ட இந்த நிற பேதத்துக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தவர் ரஜினி. காமு ரஜினி ரசிகனான பிறகு, தன்னைக் ‘கறுப்பா’ எனக் கேலி செய்பவர்களைப் பார்த்து ஸ்டைலாகத் தலையைக் கோதியபடி, ‘கறுப்புதான்டா சூப்பர் ஸ்டாரு’ என்பான். இஸ்மாயில் முதற்கொண்டு எல்லோரும் அதன் பின் அடங்கிப்போனார்கள். மெள்ள மெள்ள ‘கறுப்பா’ என காமுவைக் கேலி செய்வது குறைந்தது. காமு, ரசிகன் என்கிற நிலையில் இருந்து ஒரு படி மேலே சென்று, ரஜினியின் பக்தனாக மாறினான்.

இந்த உருமாற்றத்துக்குச் சில பொய்களும் சின்னச் சின்ன திருட்டுகளும் காமுவுக்குத் தேவைப்பட்டது. அவன் புத்தகப் பைக்குள் எப்போதும் சுருட்டிவைக்கப்பட்ட ஒரு கலர் சட்டை இருக்கும். பேட்டை ரயில்வே ஸ்டேஷன் மரப் பொந்து ஒன்றைத் தனது புத்தகப் பையை ஒளித்துவைக்கும் இடமாகத் தேர்வு செய்துவைத்து இருந்தான். அம்மா இரவு பகலாக முடையும் கூடைகளும் நார்ப் பெட்டிகளும், ரஜினி பட டிக்கெட்டு களாக மாறின.

காமு இயல்பிலேயே கொஞ்சம் சூட்டிகையானவன்தான். ஆனாலும், துறுதுறுவென அவன் நடப்பது, நிற்பது, திரும்புவது, தலை கோதுவது என அவனது உடல் மொழியில் புதிதாக நிறைய மாற்றங் களைக் கண்டாள் ராமாத்தாள். முடைந்துவைக்கும் கூடைகள் அடிக்கடி காணாமல் போவது அவளுக்கு விநோதமாக இருந்தது.

எப்படியாவது ஓர் அரசு உத்தியோகத்தில் காமுவை அமர்த்திவிட வேண்டும் என்பது தான் ராமாத்தாள் இரவும் பகலும் காணும் கனவு. தன் மகன் தன் கனவில் இருந்து விலகி வேறு பாதையில் செல்கிறானோ என்கிற ஐயம் ராமாத்தாளுக்கு வந்தது.

வாழ்வில் ஒரு முறைகூட திரையரங்க வாசலை மிதித்திராத ராமாத்தாள் காமுவை அழைத்து, ”கூத்தாடிப் பொழப்பு நமக்கு ஆவாதுலே முருவா… நல்லாப் படிக்கணும். அக்காவையும் தம்பியையும் நீதான் கர சேக்கணும்” என்றாள். தன் மகன் திருடுவதையும், பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுவிட்டு சினிமாவுக்குப் போவதையும் நேரடியாகக் கண்டித்து, அவன் மனம் கோணச் செய்துவிடக் கூடாது என்கிற எண்ணம் அவளுக்கு.

முன்பெல்லாம் அம்மாவின் பேச்சுக்கு, வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசும் காமு, இப்போது அமைதியாக அம்மா சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தான். ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை. கூடை முடைந்தபடியே அம்மா தனது வாழ்க்கைக் கஷ்டங்களை காமுவுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டு இருந்தாள். அம்மா சொன்ன எதுவும் காமுவின் காதில் விழவில்லை. ராமாத்தாள் பேசிக்கொண்டு இருக்கையில், காமுவின் மனதுக்குள், ‘மண்ணிலென்ன தோன்றக்கூடும் மழைஇல்லாதபோது… மனிதனோ, மிருகமோ, தாயில்லாமல் ஏது..?’ இந்த வரிகள்தான் ஓடிக்கொண்டு இருந்தன. ‘அம்மா நீ சுமந்த பிள்ளை…’ பாடல் மூலம் தாயை மதிக்கக் கற்றுக்கொடுத்த தலைவனை எண்ணிக் கண் கலங்கினான்.

காமுவின் கலங்கிய கண்களைப் பார்த்தபோது, ராமாத்தாளுக்குத் தன் மகன் தன் எண்ணப்படி நல்ல நிலைக்கு வருவான் என்ற நம்பிக்கை எழுந்தது. ‘நல்லாப் படிக்கணும் முருவா’ என்பதோடு தனது அறிவுரையை முடித்துக்கொண்டாள்.

அம்மாவின் சொல் கேட்டு நடக்க வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும் என காமுவுக்கும் ஆசை இருந்தது. ஆனால், அவனுக்கும் கல்விக்கும் இடையே நிறைய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளி யில், சிவசக்தி, ரத்னா, பார்வதி, ராயல், சென்ட்ரல் என 11 திரையரங்கங்களும் ஒரு விளையாட்டு மைதானமும் இருந்தன. அவற்றைத் தாண்டி, அவனால் கல்விக்குள் செல்ல இயலவில்லை.

ஒவ்வொரு முறை பரீட்சை பேப்பர் கொடுக்கும்போதும், பேப்பரோடு சேர்த்து ஒரு பிரம்படியும் காமுவுக்குக் காத்திருக்கும். காமுவுக்கு என்றே பிரத்யேகமாகச் சுழலும், வகுப்பு ஆசிரியர் பிரதாப் கீர்த்தியின் பிரம்பு. நம்பியாரின் வாளைப்போலச் சுழற்றி அடிப்பார். கையைச் சற்று விலக்கி னால், பிரம்பு முறியும் வரை அடிதான். ரேங்க் வாங்கும் மாணவர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். ஒரு எள்ளலோடு காமுவைப் பார்ப்பார்கள். அடியைவிடவும் அந்தப் பார்வைகள் அதிக வேதனை தரும். அடிக்கடி அந்த வேதனையைத் தருபவன் இஸ்மாயில். தான் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்பதைவிட, இஸ்மாயிலை ஏதாவது ஒரு விஷயத்தில் வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான் காமுவின் பெரிய சவாலாக இருந்தது. கல்வியால் இஸ்மாயிலை வீழ்த்திவிட முடியாது என்பதை காமு உணர்ந்தே இருந்தான்.

அடுத்த வாரம் காமு, இஸ்மாயிலை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பம் ஒன்று தானாக வாய்த்தது. அன்று பேட்டை மீனாட்சி திரையரங்கில், ‘நான் வாழ வைப்பேன்’ படத்தைத் திரையிட்டார்கள். காமு பல முறை பார்த்த திரைப்படம்தான். ஆனாலும், சொந்த ஊரில் பார்ப்பது ஒரு சுகம்.

காமு எப்போதும் தரை டிக்கெட்தான் எடுப்பான். அப்போதுதான் பாடல் காட்சிகள் வரும்போது, திரைக்கு முன்னால் சென்று ஆட்டம் போட முடியும். எப்படியாவது ஒரு 45 காசு தேற்றிவிட்டால் போதும் என யோசித்துக்கொண்டு இருந்தவனிடம் இரண்டு ரூபாய் கொடுத்து, ”முருவா, போய் முடி வெட்டிட்டு வாடா” என்ற ராமாத்தாள், அந்தக் கணத்தில் கண் முன் தோன்றிய கடவுளாகத் தெரிந்தாள். வழக்கமாக முடி வெட்டும் பஷீர் பாயி டம் கடன் சொல்லிக்கொள்ளலாம். தனக்குத் தோதான இரண்டு நண்பர் களை இந்த இரண்டு ரூபாயில் படத்துக்கு அழைத்துச் செல்லலாம். மாரியும் செல்வமும் காது கிழிய விசில் அடிப் பவர்கள். அவர்களை அழைத்துச் சென்றால், சிவாஜி பெயர் வரும்போது ஓவெனக் கத்தவும், ரஜினி பெயர் வரும் போது விசில் அடிக்கவும் சரியாக இருக் கும். காசைக் கையில் வாங்கிய அடுத்த கணம் திரையரங்கம் செல்வது வரைக்கான திட்டம் காமுவுக்குள் தயாராக இருந்தது.

பஷீர் பாயிடம் சொல்லி, முன் நெற்றியில் இருந்த முடிகளை மழித்து தன்னை ஒரு ரஜினிபோல தயார் செய்துகொண்டான். இருப்பதிலேயே ஒரு நல்ல உடையாக எடுத்துப் போட்டுக்கொண்டு, திட்டமிட்ட படி மாரி மற்றும் செல்வத்தோடு மீனாட்சி திரையரங்கம் வந்து சேர்ந்தான்.

அன்று ‘ஆகாயம் மேலே பாதாளம் கீழே’ பாடலுக்கு திரைக்கு முன் எழுந்து நின்று ஆடியது காமுவின் வாழ்வில் முக்கியத் திருப்பமாக அமைந்தது. அந்தப் பாடலுக்கு திரையரங்கில் எழுந்த கைதட் டல் மற்றும் விசில் சத்தங்களில் பாதி காமுவுக்கானது. அன்று முதல் காமு, அந்தப் பேட்டையின் சின்ன ரஜினியாக மாறினான். அவன் சின்ன ரஜினி என்பது மெள்ள மெள்ளப் பள்ளியிலும் பரவியது. இஸ்மாயிலும் அவனது நண்பர்களும் அன்றைக்கு அடங்கியவர்கள்தான். அதன் பின் காமுவிடம் வாலாட்டுவதே இல்லை.

ரஜினியின் ஒவ்வொரு புதுப் பட வெளியீட்டின்போதும்… முதல் நாள் ரசிகர் மன்ற டிக்கெட் காமுவுக்கு மன்றம் மூலம் கிடைத்துவிடும். தனக்குக் கிடைக்கும் ரசிகர் டிக்கெட்டுகளை காமு ஒருபோதும் அதிக விலைக்கு விற்றது இல்லை. தனது கைக்காசைச் செலவழித்து குழந்தைகளைத் திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வான். அப்படிப் போகும்போது, அவன் ‘ராஜா சின்ன ரோஜா’ ரஜினியைப்போலவே இருப்பான். அடுத்த தலைமுறை ரசிகர்களை உருவாக்கிவிடுவது தனது கடமை என எண்ணினான்.

முதல் நான்கைந்து நாட்கள் காமு திரையரங்கில்தான் பழியாகக்கிடப்பான். கல்வியைப் புறந்தள்ளிவிட்டு தர்மத்தின் தலைவனாக, தர்ம துரையாக, உழைப்பாளியாக, மன்னனாக மாறத் துவங்கினான் காமு. தன்னை ஒரு ரஜினியாகப் பாவித்துக்கொண்டபோதும், தனக்கும் ரஜினிக்குமான இடைவெளியை உணர்ந்தவனாகவே இருந்தான். மற்ற ரசிகர்களைப்போலத் தன் பெயருக்கு முன் ரஜினி என போட்டுக்கொள்ளவில்லை. ரஜினி சுந்தர், ரஜினி மாணிக்கங்களுக்கு மத்தியில், காமு… காமுவாகவே இருந்தான்.

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் வருவதுபோல சிகரெட்டைச் சுண்டி வாயில் போடும் வித்தையை, மிகப் பிரயத் தனப்பட்டுக் கற்றுக்கொண்டான் காமு. அவனால் 10 முறை மிகச் சரியாகத் தடு மாற்றம் இல்லாமல் சிகரெட்டை வாயில் போட முடியும். ஆனால், ஒருபோதும் காமு அதைச் செய்தது இல்லை. தலை வனை மிஞ்சுவது தவறு என நினைத் தான்.

காமுவைப் பொறுத்த வரை, தீபாவளி, பொங்கல், பண்டிகை எல்லாம் கிடையாது. ரஜினியின் பிறந்த நாள், ரஜினி பட வெளி யீட்டு நாள், எம்.ஜி.ஆர். பிறந்த நாள், இந்த மூன்றும்தான் திருவிழாக்கள். டிப்டாப் டெய்லரிங் கடை ஆறுமுகம்தான், காமு வின் உடை அலங்கார நிபுணர். போஸ்ட் ஆபீஸில் லீவு ப்ளேஸ் வேலையில் வரும் சம்பளப் பணத்தை, ஆறுமுகத்திடம் கொடுத்துவைப்பான். முத்துவாகவோ, பாட்ஷாவாகவோ, காமுவை மாற்றிவிடுவது ஆறுமுகத்தின் பொறுப்பு.

ஒருநாள் பொறுக்க முடியாமல் ஆறுமுகம், ”காமு, நீ இப்பிடியே ரஜினி… ரஜினினு ஓடிக்கிட்டுத் திரிஞ்சேன்னா… ஒருநா இல்லன்னா ஒரு நா, கஞ்சிக்கு வழி இல்லாம செத்துப்போவே… போ, பொழைக்கிற வழியப் பாரு” என்றார்.

”கஞ்சிக்கு வழி இல்லாம செத்தாலும் கடைசி வரைக்கும் எந் தலைவன் பேரச் சொல்லிட்டுத்தான் சாவேன்” என்ற காமு வின் உறுதியை யாராலும் கலைக்க முடியவில்லை. ராமாத்தாளுக்கு காமுவைப்பற்றிய கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித் துக்கொண்டே இருந்தன. ‘ஒரு கல்யாணம் முடிச்சுவெச்சா, சரியாயிருவான்’ என முடிவு செய்தாள். காமுவுக்கு பெண் பார்க் கும் படலம் துவங்கியபோதுதான், ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கிற கேள்விகள் தமிழகத்தில் அலை எழுப்பிக்கொண்டு இருந்தன. ரஜினி மட்டும் அல்ல… ஒவ்வொரு பகுதி ரஜினி ரசிகர்களும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந் தார்கள்.

காமுவின் முன்னும் இந்தக் கேள்வி வைக்கப்பட்டது. சில கிரகம் பிடித்த மனிதர்கள், ”வாங்க, மாவட்டச் செயலாளர்…” என இல்லாத கட்சிக்குப் பதவி கொடுத்து காமுவை உசுப்பேத்தினார்கள்.

அந்த ஆண்டு ரஜினி பிறந்த நாள் விழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடினான் காமு. பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், அன்ன தானம், ரஜினி பாடல்கள் மட்டும்கொண்ட ஆடலும் பாடலும் நிகழ்ச்சி என விழா அமர்க்களப்பட்டது. ரொட்டிக் கடை முக்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு சுமார் 500 பேர் திரண்டு இருந்தார்கள். ”தலைவா, நீ அரசியலுக்கு வரவில்லை என்றால், எங்கள் மன்றமே தீக் குளிக்கும்” எனச் சூளுரைத்தவர்கள் மத்தி யில் மேடையேறிய காமு, ”எந் தலைவன் தண்ணி மாதிரிடா… அணைய உடைச் சிட்டுத் தண்ணி வெளிய வந்ததுன்னா… தாங்குவியளா? தாங்க முடியாது. அரசிய லுக்கு வராம இருக்கறது எந் தலைவனோட பெருந்தன்மை. உந் தலைவன் இந்த மக்களுக்கு என்ன செஞ்சான்னு கேக்கறாங்க. கடவுள் எல்லா எடத்திலயும் இருக்க முடியாது. அதனாலதான் தாயப் படைச்சான். அது மாதிரி எந் தலைவன் எல்லா எடத்துலயும் இருக்க முடியாதுன்னுதான், எங்கள உருவாக்கிவெச்சிருக்கான். நாங்க செய்வம்டா… எந் தலைவன் பேரால நல்லது செய்வோம். எங்கள் நற்பணி என் தலைவன் பெயர் இந்த உலகில் உள்ள வரை தொடரும்!” என்றான்.

எப்போதும் சொல் ஒன்று, செயல் வேறு என்று இருப்பவன் அல்ல காமு. அன்று முதல் அந்தப் பகுதி மக்களின் குறைகளுக்காகப் போராடும் மனிதனாக மாறினான் காமு. சாதிச் சான்றிதழ் வாங்குவது முதல் ரேஷன் கடைப் பிரச்னை வரை எல்லாவற்றுக்கும் அந்தப் பகுதி மக்கள் காமுவின் உதவியை நாடினார்கள். ரஜினி ரசிகன் துட்டு வாங்கிட்டு செஞ்சி குடுத்தாம்னு ஒரு பேரு வந்துரக் கூடாது என ஒருவரிடமும் பணம் வாங்காமல், அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்தான்.

ஒரு லோக்கல் அரசியல்வாதியைவிட காமுவுக்குப் பேட்டையில் செல்வாக்கு அதிகம் இருந்தது. மக்கள் சேவகன் என்கிற போதையின் உச்சத்தில் காமு இருந்தபோதுதான், அவனுக்குத் திருமணம் முடிந்தது.

தன்னை நம்பி ஒரு பெண் வந்திருக்கிறாள், அவள் வாழ்வுக்கான அடிப்படைத் தேவைகளையாவது நிறைவேற்றித் தர வேண்டும் என்கிற உணர்வு ஒருபோதும் காமுவுக்கு இருந்தது இல்லை. அது திட்டமிட்ட செயல் அல்ல. காமுவாக மனமுவந்து வேலைக்குப் போனால்கூட, யாராவது ஒருவர் அவனை தாலுகா ஆபீஸுக்கு அழைத்துச் செல்வார்கள். மனு எழுதித் தரச் சொல்வார்கள். அவனால், எந்த வேலைக்கும் போக முடியாத சூழ்நிலை இருந்தது.

ராமாத்தாள் தனது கையிருப்பு, சேமிப்பு எல்லாவற்றையும் முதலாக்கி, ஒரு பள்ளிக் கூடத்தில் காமுவின் வேலைக்கு ஏற்பாடு செய்தாள். தாலி தவிர்த்து, காமுவின் மனைவி லட்சுமி கொண்டுவந்த ஒன்றிரண்டு நகைகள்கூட அந்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டருக்குள் மூழ்கி இருந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் பேட்டை ரயில் நிலையத்தை மூடிவிடும் முடிவுக்கு வந்தது ரயில்வே நிர்வாகம். சிறு தொழில் நகரமான பேட்டையில், சிறு முதலீட்டாளர்களின் வியாபாரத்துக்குப் பேருதவியாக இருந்த ரயில் நிலையத்தை மூடிவிடக் கூடாது என்பதற்காக ரயில் மறியல் போராட்டம், உண்ணாவிரதம் எனத் தீவிரமாக இருந்த காமுவால், குறித்த தினத்தில் பணிக்குச் செல்ல முடியவில்லை. தவிரவும், அவன் கைதாகி சிறை செல்ல நேரிட்டதால், அவனுக்கு வேலையும் கிடைக்கவில்லை.

இனி, காமுவை நம்பிப் பயன் இல்லை என முடிவு செய்த லட்சுமி, ஒருநாள் தனது பிறந்த வீட்டுக்குப் பெட்டியைக் கட்டி னாள். ராமாத்தாள் எவ்வளவோ தடுத்தும் லட்சுமி கேட்பதாக இல்லை. காமுவுக்கு லட்சுமியைவைத்து வாழ முடியவில்லையே தவிர, அவளைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவனே அவளை வழி அனுப்பிவைத்தான். அன்று இரவு முழுக்க காமுவின் அறையில், ‘ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்… உலகம்புரிஞ்சு கிட்டேன் கண்மணீ… என் கண்மணீ…’ பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது.

ரயில் நிலையத்தைக் காப்பாற்றியவன் என்கிற வகையில் காமுவின் மேல் பேட்டை மக்களுக்கு ஒரு தனி மரியாதை. காமு அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பலனை எதிர்பாராத ஒரு தவம் போலத் தான் அவன் ஒவ்வொரு காரியத்தையும் செய்துகொண்டு இருந்தான்.

லட்சுமியைத் தொடர்ந்து தம்பியும் அம்மாவும் காமுவைவிட்டு விலகிச் சென்றார்கள். தனித்துவிடப்பட்டான் காமு. காலம் எத்தனை புரட்டிப்போட்டாலும், ரஜினி என்கிற ஒற்றைத் துடுப்பை மட்டும் அவன் எப்போதும் விடாமல் பற்றிக்கொண்டு இருந்தான். ஒருநாள் அதிகாலையில் டிப்டாப் கடை முன் இருக்கும் தண்ணீர் பம்ப் திண்டில் ஒரு பெரிய போர்வையைப் போர்த்தியபடி அமர்ந்து இருந்தான் காமு. காமுவை அந்தக் கோலத்தில் பார்த்த ஆறுமுகத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது.

”என்னடா காமு? ஏன் இப்படி உக்காந்து இருக்க?”

காமு பதில் ஏதும் சொல்லாமல் இருந் தான். ஆறுமுகத்துக்கு காமுவைவிட்டு எல்லோரும் போய்விட்டார்கள் என்பது தெரிந்தபோதும், அவன் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. ‘விடுகதையா இந்த வாழ்க்கை? விடை தருமா எந்தன் கேள்வி?’ என சத்தமாகப் பாடியபடி எழுந்து சென்றான் காமு. ஆறுமுகத்துக்கு காமுவின் நிலையை எண்ணிப் பரிதாபமாக இருந்தது.

அந்தப் பரிதாபத்தின் ஆயுள் இரண்டு நாட்கள்கூட நீடிக்கவில்லை. தலையில் ஒரு ஸ்கார்ப் கட்டியபடி அளவாக ட்ரிம் செய்யப்பட்ட தாடியோடு ஸ்டைலாக ஆறுமுகம் கடையில் வந்து நின்றபடி, ”இது எப்படி இருக்கு?” எனக் கேட்டான்.

”என்னடா புது கெட்டப்பா இருக்கு?” என ஆறுமுகம் கேட்டபோது, பாபா முத்திரையைக் காட்டியபடி, ”தலைவ னோட அடுத்த கெட்டப் இதுதான்… பாபா…” என்று, தனது கெட்டப்பை ஊர் பார்க்க வேண்டும் என்பதற்காக நகர் வலம் கிளம்பினான். ரஜினியின் ரசிகனாக இருக்கும் வரை காமுவை எந்தத் துயரமும் தீண்டிவிடாது என ஆறுமுகத்துக்குத் தோன்றியது.

அதன் பின் ஒரு மூன்று மாதங்கள் காமுவுக்கு பாபா பற்றிய செய்திகளை அறிந்துகொள்வதிலேயே கழிந்தது. யாரா வது உதவி என வந்து கேட்டால், பாபா முத்திரை கட்டுவான் காமு. அப்படிக் காட்டினால், உதவுகிறேன் என்று அர்த்தம்.

ஆறுமுகம், காமுவை எப்படியாவது திசை திருப்பிவிட வேண்டும் என்பதற்காக, அவனை கவுன்சிலர் எலெக்ஷனில் நிற்கத் தூண்டினார். ”அரசியல் வேண்டாம்னு தலைவரே முடிவு பண்ணிட்டாரு… நாம அதுல வரக் கூடாது” என மறுத்தான் காமு.

”இல்லடே, வெளில இருந்து ஒவ்வொரு காரியத்துக்கும் ஒருத்தனைப் புடிச்சுத் தொங்கிக்கிட்டு இருக்கதவிட, உள்ள இருந்தா நல்லதுதானடே. கேட்டவங்களுக்கு சட்டுசட்டுனு உதவி செய்யலாமே!” என்றார். காமுவுக்கு ஆறுமுகத்தின் யோசனை சரி எனப்பட்டது.

அவன் தனது பகுதி மக்களிடம் கருத்துக் கேட்டபோது, ”நீ எங்களுக்கு எம்புட்டோ செஞ்சிருக்க… அதுக்கு நன்றி செலுத்த ஒரு வாய்ப்பு கிடச்சா எங்களுக்குக் கசக்கவா செய்யுது. நாமினேஷன் மட்டும் தாக்கல் பண்ணு… நீதான் கவுன்சிலர்” என உறுதி படுத்திச் சொன்னார்கள்.

மக்கள் தன் மேல் வைத்திருக்கும் அன்புக்காக, காமு நாமினேஷன் தாக்கல் செய்தான். மெழுகுவத்தி சின்னம் அவனுக்கு ஒதுக்கப்பட்டது. பார்ப்பவர்கள் அனைவரும் அவன்தான் கவுன்சிலர் என சூடம் கொளுத்தாத குறையாகச் சத்தியம் செய்து சொன்னார்கள். ரஜினியின் பெயர் சொல்லியோ, ரஜினி போட்டோ போட்டோ ஓட்டு கேட்பது இல்லை என்கிற முடிவில் காமு தெளிவாக இருந்தான்.

காமுவை எதிர்த்து நின்ற ஓர் அரசியல் கட்சி வேட்பாளருக்கு, தான் காமுவிடம் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தது.

காமுவுக்குப் பணம் கொடுத்து விலகச் சொன்னார். காமு மறுத்தான்.

”சரி, போயிட்டு வாங்க தம்பி… வாழ்த்து கள்” என சொல்லி அனுப்பிவைத்தார். அன்றைய இரவு காமுவின் ரத்தத்தால் சிவந்தது பேட்டை. காமுவை அடித்து குற்றுயிரும் குலையுயிருமாக ரொட்டிக் கடை முக்கில் தூக்கி எறிந்தார்கள். அதன் பிறகும் காமு வாபஸ் வாங்க முன் வர வில்லை. என் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என உறுதியாக நம்பி னான். ஆறுமுகம்கூட, ”எதுக்குடே பொல் லாப்பு, பேசாம வாபஸ் வாங்கிரு…” எனச் சொன்னார். காமு விரல் சொடுக்கி, ‘மலடா… அண்ணாமல” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

காமு தன் மக்கள் மீதுவைத்த நம்பிக் கையும் ரஜினி தன் ரசிகர்கள் மீது வைத்த நம்பிக்கையும் ஒருசேரத் தோற்றது அப்போதுதான், காமு மிக சொற்பமான ஓட்டுகளை வாங்கி, தன்னை அடித்துத் துவைத்தவரிடம் தோற்று இருந்தான். ‘பாபா’ படமும் தோல்வியடைந்தது.

காமுவால் இரண்டையும் ஜீரணிக்க முடியவில்லை.

”என்னடே அவ்வளவுதானா?” என தன்னிடம் நக்கலாகக் கேள்வி கேட்பவர் களிடம், காமுவால் தலை நிமிர்ந்து பேச முடியவில்லை. ஊருக்குள் காமுவின் நடமாட்டம் குறைந்தது. தோல்வியின் அவமானம் தாங்காமல் காமு ஊரைவிட்டு ஓடிவிட்டான் என்றும், தற்கொலை முயற்சி செய்தான் என்றும் வதந்திகள் பரவின.

எப்போதாவது அகால வேளைகளில் இரவின் நிசப்தத்தில், ‘விடுகதையா இந்த வாழ்க்கை… விடை தருமா எந்தன் கேள்வி?” எனக் காமு பாடுவது கேட்கும். அது பிரமை என்றும் காமுவின் ஆவி பாடுகிறது என்றும் பேசிக்கொண்டார்கள்.

ஒருநாள் அதிகாலையில் ஆறுமுகம் கடை வாசலில் அமர்ந்து காமு தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டு இருந்தான். அழுக்கு உடையும் பரட்டைத் தலையும் அவனைப் பைத்தியம்போலக் காட்டியது. அவனை நெருங்கப் பயந்தவர்கள், தூர நின்று வேடிக்கை பார்த்தார்கள். ஆறுமுகம் மட்டும் மினர்வா கடையில் ஒரு டீயை வாங்கிக்கொண்டு தைரியமாக காமுவின் அருகே சென்றார். காமுவிடம் டீயைக் கொடுத்துவிட்டு, ”காமு என்ன எழுதிக்கிட்டிருக்க?” என்றார்.

”ஊரு நம்மள மதிக்கலைங்கறதுக்காக, ஊருக்கு நாம செய்ய வேண்டிய காரியத் தைச் செய்யாம விடலாமா? அதான் நம்ம பேட்டைய ஒரு தொழில் நகரமா மாத்தணும்னு, ஒரு மனு எழுதிக்கிட்டு இருக்கேன்… எல்லாரும் கேட்டுக்கிடுங்க… என் தலைவனும் தோக்க மாட்டான், நானும் தோக்கமாட்டேன் ஆமா!” என்றபடி கூட்டத்தைக் கடந்து சென்றான்.

இது நடந்து ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும்… அடிக்கடி காமு காணாமல் போவதும் பின் மீண்டும் வருவதும் நிகழ்ந்தபடியே இருந்தன. அம்மாவின் மரணம், அக்காவின் திருமணம் எதுவும் காமுவுக்குத் தெரியாது. ‘சந்திரமுகி’யின் பெருவெற்றி, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ வெளியானது எதுவும் தெரியாது.

கடந்த மாதத்தில் ஒருநாள் காமு மீண்டும் ஊருக்கு வந்தபோதுதான், ‘உடல் மண்ணுக்கு… உயிர் ரஜினிக்கு… சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தலைவன் நலமோடு திரும்ப வேண்டி, 108 பால் குடம் ஏந்தி திருச்செந்தூருக்கு பாத யாத்திரை. அனைவரும் வாரீர்!’ என்கிற போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

போஸ்டரை உற்றுப்பார்த்த காமு சரசரவென போஸ்டரைக் கிழித்துப் போட்டான். ”கடவுள எப்படிடா ஹாஸ்பிடல்ல வைக்க முடியும்? நீ கவலப்படாதே தலைவா… நான் இருக்கேன்” என்று சிரித்தபடி இருந்த ரஜினி போட்டோவைப் பார்த்துச் சொன்னான். அவன் அப்படிச் சொன்ன மூன்றாவது நாள் ரஜினி நன்றாக இருக்கிறார் என்கிற செய்தி வந்தது.

காமு நன்றாகிவிடுவான் என்கிற நம்பிக்கை மட்டும் யாருக்கும் வர வில்லை.

காமுவை எல்லோரும் மறந்துவிட்டார் கள். கைவிட்டுவிட்டார்கள். ஆறுமுகம், கிருபாபோன்ற சில நண்பர்களுக்கு மட்டும் காமுவைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கும். ஏதாவது, உணவு வாங்கிக் கொடுத்து அனுப்புவார்கள். மற்றபடி இலக்கற்ற ஒரு குழந்தையின் பயணத்தைப்போலத் தொடர்கிறது காமு வின் வாழ்க்கை.

பின் குறிப்பு: இன்னமும் காமு, பேட்டை வீதிகளில் ரஜினி போஸ்டர்களை வெறித்துப் பார்த்தபடி மனு எழுதியபடி திரிகிறான். காமு யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத நல்லவன். என்றேனும் ஒருநாள் காமு மரணிக்கக்கூடும். அன்று அந்த நல்ல ஆத்மாவை எடுத்து நல்லடக்கம் செய்பவர் களுக்கு இந்தக் கதை சமர்ப்பணம்!

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *