கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 3,338 
 
 

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

பேயைக் கண்டவர்கள் கிடையாது. ஆனால் அதன் குணங்களைத் தெரிந்து கொண்டவர்களைப்போல ஜனங்கள் பேசிக் கொள்கிறார்கள். பேயின் உருவம் தெரியாது என்றும், அது மனிதர்களைப் பிடித்துக் கொண்டால், அவர்கள் செய்யும் சேஷ்டைகளின் மூலம், பேயின் போக்குத் தெரிந்து கொள்ள முடியுமென்றும் பேசுகிறார்கள். இந்தப் பைத்தியக்காரத்தனமான எண்ணம் எவ்வளவு விபரீதமான நடவடிக்கைகளுக்கு இடம் தருகிறது. என்னைக் கொட்டி வேதனை கொடுத்த தேளை அடிக்க நான் என் அப்பாவின் தடியை எடுத்தேன். எனக்குப் பேய் பிடித்திருப்பதாக நம்பியதால், நான் தடியை எடுத்ததும், தங்களுக்கு ஆபத்து வரும் என்று பயந்து, என் தகப்பனாரும், புருஷனும் ஓடினார்கள். என்னால் சிரிப்பைத் தாங்க முடியவில்லை. மகா சூரர்கள், வீரர்கள் இந்த ஆண்பிள்ளைகள்! எதிலே! பெண்களை மிரட்டுகிற விஷயத்திலே! நான் என்ன சின்னப் பிள்ளையா? எனக்கென்ன பயம் என்று பெருமையாகப் பேசுவார்கள். பெண் என்றால் பயங்காளி, ஆண்களேதான் தைரியசாலிகள் என்று எப்படியோ ஒரு தப்பான எண்ணத்தை நாட்டிலே பரப்பி விட்டார்கள். இரண்டு ஆடவர்கள் ஓடினார்கள், நான் கையிலே தடியை எடுத்ததும்! அவ்வளவு பயம்! பேய் என்ன செய்துவிடுமோ, என்ற பயம்.

தேளை அடித்துவிட்டு வெளியே வந்து அப்பாவைக் கூப்பிட்டேன். அவர் என் வார்த்தையிலே நம்பிக்கை வைத்து உள்ளே வர நெடுநேரம் பிடித்தது. இதற்குள் வீட்டு வாசற்படி அருகே ஒரு சிறு கூட்டம். வழக்கப்படி என் கணவருக்கு உபசார மொழிகள்; அவரும், வழக்கமான நடிப்பைச் செய்தார். தேளைக் காட்டினேன், அப்பாவுக்கு. அப்போதுதான் நம்பினார், உண்மையில் என்னைத் தேள் கொட்டியதனால்தான் அலறினேன் என்று. ஏதோ மருந்து தடவினார்கள். அன்றைய பொழுதை ஒருவாறு கழித்தேன். மறுதினம் நான் என்ன சொல்லியும் கேட்காமல், என் தகப்பனார் நிர்ப்பந்தப்படுத்தி, என்னை ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். பேய் ஓட்டும் இடமாம் அது. அங்கு போய், ஒரு பெரிய குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, நானும் என் அப்பாவும் எங்களுக்கு உதவியாக வந்த வேலைக்காரியுடன் தங்கினோம்; கிராமம் சிறிய அளவு; ஆனால் பச்சைப் பசேல் என்று இருக்கும். எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும் அழகான தோப்புகள். சுற்றிப் பார்க்குமிடங்களிலெல்லாம், விதவிதமான பட்சிகள். இந்தக் கிராமத்திலே தங்கியிருந்த ஒரு பக்கிரி, பேயோட்டுவதில் நிபுணன் என்று அந்தப் பக்கத்து வதந்தி. அதனால், என் தகப்பனார் என்னை அங்கு அழைத்து வந்தார். எனக்கு ஒரு துளியும் விருப்பம் கிடையாது, அங்கு போக. என் கணவரிடம், நான் புறப்படுவதற்கு முன்பு, தனியாகச் சந்தித்து, என் மனதைத் திறந்து பேசினேன். “எப்படியோ நமது இன்ப வாழ்வு கெட்டுவிட்டது. என் சகவாசம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. கல்லென்றாலும் கணவன் தான், புல்லென்றாலும் புருஷன் தான். ஆனால் நீங்கள் என் தலைக்குப் பாறையாக இருக்கிறீர்! ஆகையால், என் மனமும் முறிந்துவிட்டது. தங்கத்தைக் கலியாணம் செய்து கொள்ளுங்கள், நான் தடை செய்யவில்லை என்று உம்மிடம் கூறினேனே, அன்று இரவு, அதோடு என் அல்லல் தீர்ந்துவிட்டது என்றுதான் நான் மனமார நம்பினேன். அன்று இரவு, நீங்களும் என் துக்கத்தை எல்லாம் துடைத்து விடுவதுபோலவே நடந்து கொண்டீர். ஆனந்தமாகக் கழிந்தது அந்த இரவு; என் கடைசி இன்ப இரவு அதுதான். இனி அத்தகைய இரவு கிடையாது. மறுதினமே உங்கள் மனம் மாறிவிட்டது. இனி நானும், நம்பிக்கையை இழந்துவிட்டேன். கட்டின தாலி ஒன்றுதான் இனி நாம் கணவன் மனைவி என்பதைக் காட்டும் அறிகுறியாக இருக்கும். உம்மை நான் இழந்துவிட்டேன். இனி மறுபடியும் பெற முடியாது. பெறவும் முயலமாட்டேன். உம்மை நான் வேண்டிக் கொள்வதெல்லாம் ஒரே ஒரு விஷயமாகத்தான். உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னை அந்தப் பேயோட்டும் இடத்துக்கு அனுப்பாதீர்கள். அங்கே எத்தனை புண்யகோடி இருப்பார்களோ? என்னென்ன பழி பிறக்குமோ, என்ற பயம் என்னைக் கொல்கிறது. என்ன காரணமோ தெரியவில்லை, ரங்கத்தை அவள் புருஷன் கைவிட்டார் என்று மட்டும் உலகம் கூறட்டும்; வேண்டுமானால் ரங்கத்தைப் பேய் பிடித்துக் கொண்டதால், அவள் கணவன், இரண்டாம் கலியாணம் செய்து கொண்டான், ரங்கம் மாட்டுக் கொட்டகையிலே கிடக்கிறாள் என்று பேசட்டும்; ரங்கம் கெட்டு விட்டாள் என்று பேசுவதற்கு மட்டும் இடம் தரவேண்டாம். குடிவெறியிலே உளறினான் அந்தக் கோணல் சேட்டைக்காரன், பூஜாரி, புண்யகோடி. அதற்கு எனக்கு விபசாரிப் பட்டம் சூட்டினீர். இப்போது என்னை வேறோர் பேயோட்டியிடம் போகச் செய்கிறீர் சிகிச்சை பெற. இங்கு போவதால், என் மீது அபவாதம் ஏற்பட்டால் என் கதி என்ன ஆவது? விபசாரி என்று உலகம் தூற்றுவதற்குமா நான் இடமளிக்கவேண்டும்? என்னைப் பிடித்த பேய் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதை ஓட்டுவதற்கு முயற்சி எடுப்பதாகக் கூறி என் மானத்தை ஓட்டி விடாதீர். தயவு செய்யுங்கள். என்னிடம், இனி நீர் பேச வேண்டாம்; அன்பு காட்ட வேண்டாம்; தோட்டத்திலேயே கிடக்கிறேன். நான் ஏதேனும் தொல்லை தருவேன் என்று பயம் ஏற்பட்டால், என்னைக் கட்டிப் போடுங்கள். ஆனால், விபசாரி என்ற பழி பிறக்கும்படியான மார்க்கத்திலே என்னைத் துரத்தாதீர். பாவி புண்யகோடி, நான் மயக்கமுற்றுக் கிடந்த நேரத்தில், என் மச்சம் முதலிய அடையாளத்தைக்கூடக் கண்டு கொள்ளவும், கேவலமாகப் பிறகு பேசவும் துணிந்தான். இப்போது நீங்களும் வரமுடியாது என்று கூறுகிறீர். என்னை என் தகப்பனாருடன் அனுப்பி வைக்கிறீர். அங்கே என்னென்ன பழி பிறக்குமோ என்றே நான் பயப்படுகிறேன். வேண்டாம். நாம் சில காலமாக இருந்து வந்த இன்பத்தின் பேரால் உம்மைக் கேட்கிறேன். என்னை இங்கேயே இருக்கவிடுங்கள்” என்று நான் கண்ணீரும் கம்பலையுமாக இருந்துகொண்டு கேட்டேன்.

உன் அப்பாவின் மனம் இளகவில்லை. போக முடியாது என்று பிடிவாதம் செய்து பார்த்தேன். பிடிவாதம் செய்யச் செய்ய பேயின் சேஷ்டை அதிகமாகிவிட்டது என்றே என் அப்பாவும் ஊராரும் நம்பினார்கள். ஆகவே, பலாத்காரமாக என்னை அழைத்துக் கொண்டு போனார்கள் அந்தக் கிராமத்துக்கு. என் முயற்சிகள் தோற்றுவிட்டன. என்ன செய்வது இனி, எப்படியாவது நான் தொலைய வேண்டும் என்பதுதான் உன் அப்பாவின் எண்ணம். நானும் தற்கொலை செய்து கொள்வது என்று ஏதேதோ யோசித்தேன் மகனே! எனக்கு மனம் வரவில்லை சாக. என்னை அவரே கொல்லட்டுமே, நானாக ஏன் சாகவேண்டும் என்று எண்ணினேன். ஆடுகூடத் தானாக வெட்டுபவனிடம் போய் நிற்பதில்லையே! அதனுடைய சக்திக்குத் தகுந்தபடி, தப்பித்துக் கொள்ளக் கொஞ்சம் போராடித்தானே பார்க்கிறது. என்னைக் கொட்டிய தேள், சுலபத்திலே கொல்லப்படுவதற்கு இடந்தரவில்லையே. ஒளியவும், நழுவவும் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து பார்த்துவிட்டதே. கொடுமைக்கு ஆளான நான் மட்டும் ஏன் அவருக்கு வாழ்க்கைப் பாதை அமைத்துக் கொடுப்பதற்காகச் சாகவேண்டும். பேராசைக்காரர், கொடிய சுபாவக்காரர், வஞ்சகர் உன் அப்பா, ஏன் அவர் இன்னும் ஒருபடி முன்னேறி, கொலைகாரராகக்கூடாது! என்னைக் கொல்லட்டும். நானாகச் சாகக்கூடாது. நான் வாழத்தான் வேண்டும். அது வேதனை நிரம்பிய வாழ்க்கையாக இருந்தாலும் பரவாயில்லை. நான் உயிரோடு உலாவுவதே அவருக்கும் அந்த ஆள் விழுங்கித் தங்கத்துக்கும் வேதனை தரும் அல்லவா! அது போதும்! என்று எண்ணினேன். எனக்குச் சாகத் துணிவு இல்லை என்பதல்ல, இஷ்டம் இல்லை. உயிரோடு இருந்து போராட வேண்டும் என்று தோன்றிவிட்டது. இனி அவர் என் கணவரல்ல, என்னை வஞ்சித்து வாழ விரும்புவர். இனி அவருடைய வஞ்சனையுடன் போராடி, ஒரு பெண்ணை அவ்வளவு எளிதாகத் தோற்கடிக்க முடியாது என்பதைக் காட்ட வேண்டும் என்று உறுதி பிறந்தது. ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே எனக்குப் பயம். அதாவது, என் மீது பழி ஏதும் ஏற்படாமலிருக்க வேண்டுமே என்பதுதான். தவறி நடந்து விட்டாள், வழுக்கிவிட்டாள் என்ற வதந்தியைப் போல, பெண்களை நாசமாக்கக்கூடிய கருவி வேறு இல்லையே. ஊர் முழுதுமல்லவா, எதிரியாகிவிடும் அப்போது. அந்த ஒரு பழி மட்டுமே வராதபடி பாதுகாத்துக் கொண்டு, உன் தகப்பனாரை நேருக்கு நேர் தைரியமாக நின்று சந்தித்து, “உன்னுடைய அதிகாரத்துக்கும் அளவு உண்டு. உன் கொடுமையைச் சகித்துக் கொண்டு இருந்தாக வேண்டும் என்று ஒன்றும் இல்லை” என்று கூற வேண்டும் என்று தோன்றிற்று. என் மீது விபச்சாரிப் பட்டம் சூட்டிவிட்டால் எனக்கு அந்தத் தைரியம் வராது. நெஞ்சிலே களங்கமில்லாததால் ஒரு வேளை தைரியம் வந்தாலும், ஊரார் என்னையே தூற்றுவார்கள். பெண், விபசாரியாகிவிட்டாள் என்ற பேச்சைக் கேட்ட மாத்திரத்திலே ஆண்கள் ஆளுக்கொரு கல்லைக் கையிலே தூக்கிக்கொள்வார்கள். அந்தப் பெண்ணின் வீட்டு மக்கள், உற்றார் உறவினர் இவர்கள் மட்டுமா, வழியில் வருகிறவன் போகிறவன் கூட அல்லவா வசை புராணம் பாடுவான் தைரியமாக. எல்லோரும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உயிரை வாங்குவார்களே தவிர, அவளுடைய விபசாரம் சாத்யமானது ஒரு ஆணினால்தானே என்று யோசிக்கமாட்டார்கள். யோசித்தாலும் அவனிடம் கொஞ்சம் அச்சத்தோடுதான் பேசுகிறார்கள். அவனே கூட என்ன சொல்கிறான். “என்னை என்னடா மிரட்டுகிறீர்கள்; போய் அவளைக் கேளுங்கள். உங்கள் வீட்டிலே உள்ளவளை அடக்கி வைக்காமல் என்னிடம் வம்பு செய்தால் என்ன அர்த்தம்? அவள் இஷ்டப்பட்டாள். நான் என்ன சன்யாசியா? போடா போ” என்று கூறிவிடுகிறான். ஆகையால் விபசாரி என்ற பழிமட்டும் என்மீது தாக்காதபடி பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டால் போதும் என்பதிலே நான் அவ்வளவு கவலைப்பட்டேன். அன்புக்கு அன்பு திரும்பக் கிடைக்கும் என்று காத்திருந்து பார்த்தேன். உன் அப்பா என்னை மிருகமாக்கினார். அவர் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள எண்ணினேன். நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் தான் பேய் பிடித்தவளாயிற்றே! ஊரார் என்னையா கோபிப்பார்கள்! பேயைத்தானே திட்டுவார்கள். சாதாரணமான மற்ற பெண்கள் பெற முடியாத உரிமை எனக்குப் “பேய்” மூலமாகக் கிடைக்கிறது. ஏன் நான் அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது? நான் விரும்பினால் திடீரென்று பாய்ந்து சென்று உன் அப்பாவின் தலைமீது தண்ணீர்ச் செம்பை வீச முடியும். அவர், ‘ஐயோ! ஐயோ!’ என்று அலறும் சங்கீதத்துக்கு ஏற்றபடி ஆனந்தத் தாண்டவமாட முடியும்! என்ன செய்வார் அவர்? குய்யோ முறையோ என்று கூவுவார். மக்கள் கூடுவர், வாயில் வந்தபடி அவர்களையும் ஏசலாம், யார் என்ன செய்ய முடியும்! நான் தான் பேய் பிடித்தவளாயிற்றே! திடீரென்று தங்கத்தின் காதைக் கடிக்கலாம்; உன் அப்பாவின் காலை ஒடிக்கலாம்; செய்து வைத்திருக்கும் சாப்பாட்டைக் குப்பையிலே எடுத்து வீசலாம். குப்பைமேட்டின் மீது வீட்டுச் சாமானை எறியலாம்; கதவுகளை உடைக்கலாம்; துணிகளைக் கொளுத்தலாம்; நடு இரவில் நல்ல தூக்கத்திலே உன் அப்பா இருக்கும் போது பயங்கரமாக கூச்சலிடலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். என் வாழ்வைப் பாழ்படுத்திய உன் அப்பாவின் வாழ்விலே ஒரு நிமிஷ நேரம் கூட நிம்மதி இல்லாதபடி செய்யலாம்.

என்ன செய்தாலும், ஊரார் என்னைத் தூற்றமாட்டார்கள். “ரங்கம் பாவம் படாதபாடு படுகிறாள்! எவ்வளவு நல்ல பெண். பாழாய்ப் போன பேய் பிடித்துக் கொண்டு அவளை ஆட்டிப் படைக்கிறது” என்று பேசுவார்களே தவிர, என்மீது கோபிக்கமாட்டார்கள். பேயைச் சாக்காக வைத்துக் கொண்டு உன் அப்பாவின் மீது படை எடுக்க முடியும். மிஞ்சிப் போனால், கைகாலைக் கட்டிப் போடுவார்கள். போடட்டுமே! இரண்டு நாட்கள் சும்மா இருப்பது. பிறகு தானாகக் கட்டுகளை அவிழ்த்துவிட்டுவிடுவார்கள். பிறகு ஆரம்பிக்கிறது பேயாட்டத்தை! இதுபோல எண்ணினேன்! எண்ணுவதிலேயே கூட இன்பம் பிறந்தது. சொத்துக்கு ஆசைப்பட்டு தங்கத்தைக் கலியாணம் செய்து கொள்ளத் தந்திரமான திட்டமிட்டு, அந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள, நான் ஒருத்தி தடையாக இருக்கிறேன் என்று அறிந்து, என்னைப் பேய் பிடித்துக் கொண்டதாகக் கூறினார், உன் அப்பா. அன்பினால் அவருடையை மனதை என் பக்கம் திருப்ப முயன்றேன், முடியவில்லை. இனி எந்தப் பேயின் பேரில் சாக்கிட்டு அந்தப் பேராசைக்காரர், என்னைக் கொடுமை செய்தாரோ அந்தப் பேயின் சாக்கை வைத்துக் கொண்டே, நான் அவருடைய வாழ்வைக் கொட்டிக் கொட்டி வேதனையை உண்டாக்குவது என்று தீர்மானித்தேன். மகனே, உன் தாய் எப்படி இவ்வளவு கல்நெஞ்சு கொண்டாள் என்று யோசிக்கிறாயா? அப்படி நான் எண்ணினது தவறு என்று கூறுகிறாயா? என் மீது தவறு இல்லையடா, கண்ணா!

ஒருநாள் ரங்கோனில், நான் சமையற்கட்டில் இருந்தபோது, ராதா, ‘ஆ!’ என்று அலறும் சத்தம் கேட்டு, “என்னடி கண்ணு!” என்று கேட்டுக் கொண்டே கூடத்துக்கு வந்தேன். ராதா உதட்டிலே ரத்தம் இருக்கக் கண்டேன். “என்னடியம்மா?” என்று கேட்டேன். “அம்மா, வேடிக்கைக்காக எடுத்து விளையாடிக் கொண்டிருந்தேன் சீதாவை. அந்தத் துஷ்டை பாரம்மா, என் உதட்டைக் கடித்துவிட்டாள்” என்றாள் ராதா. சீதா, ஒரு பெண்ணல்ல, கிளி; ராதா அன்புடன் வளர்த்து வந்த கிளியை, அவள் ஏதோ கொஞ்சம் சீண்டிவிட்டாள்; அதற்குக் கிளி அவள் உதட்டைக் கடித்துத் தண்டனை தந்தது. வேடிக்கை கூட கொஞ்சம் வேதனையை உண்டாக்கினால் பச்சைக் கிளிக்கும் பதைபதைப்பு வருகிறது. என்னிடம் உன் அப்பா விளையாடவில்லை; என் வாழ்வைச் சிதைக்கும் விளையாட்டிலே ஈடுபட்டார். கொடுமை செய்தார், கேவலம், பணத்தாசை பிடித்து. எனக்குக் கோபமும், பழிவாங்க வேண்டுமென்ற உணர்ச்சியும் வராதா? யாருக்கும் ஏற்படக்கூடிய எண்ணம்தான் அது. ஆகவே, நான் கொண்ட எண்ணம் தவறு அல்ல, என்னை அவர் தவிக்கவிட்டுத், தான் சுகமாக வாழ்வதற்காக என்னைக் கேவலப் படுத்தத் துணிந்தார். ஏன் நான் அவருடைய சுகத்தைக் கெடுக்கக் கூடாது? அதிலும் எனக்குப் பேயின் தயவினால் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் வேறு துணையாக இருக்கிறது. என் வாழ்வுக்கு ஆனந்தம் தர வேண்டிய கடமை அவருக்கு. அவரோ அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டார். பேய் கெட்டது என்பார்கள். அந்தப் பேய் செய்யக்கூடிய பெரிய உபகாரமும் இருப்பதை எண்ணிப்பார்த்தபோது நான் சந்தோஷப்பட்டேன்.

கிராமத்திலே சில நாட்கள் தங்குவது, பேயோட்டுவதாகச் சொல்லும் புரட்டனின் பூஜை முதலிய வீண் காரியங்களைக் கொஞ்ச நாட்களுக்குச் சகித்துக் கொள்வது, அவனாகப் பார்த்துப் பேய் நீங்கிவிட்டது என்று கூறும்படி ஒழுங்கான முறையிலே நடப்பது, பிறகு வீடு திரும்புவது. அங்கேயும் சில தினங்கள், நிம்மதியடைந்ததாகவே பாவனை செய்வது, பிறகு திடீரென்று உன் அப்பாவின் மீது பழி வாங்கும் காரியத்தைத் துவக்குவது என்று தீர்மானித்தேன். அதாவது, என்னை நீக்கி விட உன் அப்பா என் மீது ஏவிய ‘பேய்’ இருக்கிறதே, அதனை அவருடைய கொடிய குணத்துக்காக அவரைத் தண்டிக்கும்படி, அவர் மீது, நான் ஏவிவிடுவது என்று திட்டமிட்டேன். இந்த எண்ணத்தால் எனக்கோர் வகையான ஆனந்தம் உண்டாயிற்று. என் அப்பா, “ஒரே நாள் பூஜையிலே, பிரக்யாதிபெற்ற பக்கிரி, குழந்தையின் முகத்திலே, களை வரும்படி செய்துவிட்டான்” என்று கூறிக்கொண்டார், என் முகப் பொலிவைக் கண்டு. “பைத்தியக்கார அப்பா! உன் மகளைப் பேயும் பிடித்துக் கொள்ளவில்லை, பூதமும் தூக்கிக் கொண்டு போகவில்லை; உன் மருமகனின் வஞ்சகம், என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டது” என்று நான் சொன்னால் அவர் நம்புவாரா? அந்தப் புரட்டன் சொன்ன அத்தனை புளுகுகளையும் நம்பினார்.

பேயோட்டும் பக்கிரி, முதல் தரமான புரட்டன் என்பது அவனைப் பார்த்த முதல் நாளே எனக்கு விளங்கிவிட்டது. என்னைப்போலப் பேய் பிடித்த பல பெண்கள் அங்கே வந்திருந்தார்கள். அந்தக் கிராமத்திலேயே, அவனுடைய வீடுதான் மாடி வீடு, மற்றவை குடிசைகள். பக்கிரி, ஏழைகளுக்கு இலவசமாகப் பேயோட்டுவது, பணக்காரர்களிடம் கூட வற்புறுத்துவதில்லை. இஷ்டப்பட்ட காணிக்கை செலுத்தலாம் என்று கூறுவது, இந்த முறையிலே நடத்தி வந்தான், வியாபாரத்தை. இதிலே, அவன் கையாண்ட தந்திரம் என்னவென்றால், ஏழைகளுக்கு இரண்டொரு நாட்களிலே பேய் ஓடும்படி செய்துவிடுவான். அல்லது, இன்னும் இரண்டு வருஷம் கழித்துவந்தால்தான் இந்தப் பேயை ஓட்ட முடியும், என்று சொல்லி அனுப்பிவிடுவான். பணக்காரர்கள் பேயோட்டிக் கொள்ளச் சென்றாலோ, கொஞ்சத்திலே விடமாட்டான். நாற்பது நாள் முழுக்கு, முப்பது நாள் கோயிலைச் சுற்றுவது, பத்து நாள் பச்சிலைத் தைல ஸ்நானம்; பிறகு பூஜை. அதன் பிறகு விசேஷ பூஜை. இப்படி மாதக்கணக்கிலே கடத்திக் கொண்டே போவான். ஒரு வாரத்துக்கொரு முறை வெள்ளி, பொன் ரட்சைகள் தயாரித்துத் தந்தபடி இருப்பான். இதற்கெல்லாம் பிடிக்கும் செலவு தவிர, வேறு பணம் தானாகக் கேட்பதில்லை என்று கூறி இதன் மூலமாகவே, பத்து காணி நல்ல நஞ்சையும், ஊருக்குப் பக்கத்திலேயே ஒரு தோப்பும் வாங்கிவிட்டான். மாடி வீடு கட்டிக் கொண்டான். மூன்று பெண்களை நல்ல இடத்தில் கலியாணம் செய்து கொடுத்தான். அந்த மருமகப் பிள்ளைகளைப் பெரிய உத்தியோகஸ்தர்களின் தயவு தேடி நல்ல வேலையில் அமர்த்தி விட்டான். இவ்வளவும் ‘பேயோட்டும்’ புரட்டிலே சாதித்துக் கொண்டான். மகாராஜாக்களும் மிட்டாதாரர்களும் ஹைகோர்ட் ஜட்ஜுகளும் தந்த சர்டிபிகேட்டுகள் ஒரு கத்தை வைத்துக் கொண்டிருக்கிறான். பெயர்தான் பக்கிரியே தவிர, ஆள் ஜமீன்தாரரைப் போலத்தான். கையிலே காப்பு, காதுகளிலே கடுக்கன், கழுத்திலே தங்கத்தால் சங்கிலி, அதிலே ஏதோ ஒரு பெரிய ரட்சை, கல்லிழைத்தது, பூஜை அறையிலே வெள்ளிப் பாத்திரங்கள், இவ்வளவு வைபவம் இருந்தன. இரவு பன்னிரண்டு மணிக்கு அவனிடம் “பராசக்தி” பிரசன்னமாகிப் பேசுமாம். அந்தப் பக்கிரி, என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மரியாதையுடன் “உட்காரம்மா! உட்கார்!” என்றான், உட்கார்ந்தேன்.

“இதோ குழந்தை! இதை வாயில் போட்டுக்கொள்” என்று ஏதோ ஒரு சூரணத்தைக் கொடுத்தான். இனிப்பாகத்தான் இருந்தது. “கசப்பு அதிகமாம்மா?” என்று கேட்டான். “இல்லையே! தித்திப்பாகத்தான் இருந்தது” என்று நான் சொன்னேன். பிறகு அவன் அப்பாவைப் பார்த்து, “பயப்பட வேண்டாம். குழந்தைக்குப் பேய் முற்றிவிடவில்லை. சர்க்கரை எப்போது இனிக்கிறதோ, அதிலிருந்து நிலைமை மோசமில்லை என்று தெரிகிறது. சில பெண்களுக்குச் சர்க்கரை கூடக் கசப்பாகிவிடும். பேயின் சேஷ்டையால்” என்று சொன்னான். உன் அப்பாவையே சட்டை செய்யப் போவதில்லை இனிமேல் என்று தீர்மானித்துவிட்ட எனக்கு, இந்தப் புரட்டனிடம் என்ன பயம்? நான் பேசலானேன்.

“சர்க்கரை இனிப்பாகத்தானே ஐயா இருக்கும். அதற்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்?”

“சர்க்கரை இனிப்பாகத்தான் இருக்கும் குழந்தே! ஆனால் அதுகூடக் கசப்பாகிவிடுவதுண்டு.”

“ஆமாம்! அதற்குப் பேய் பிடிக்கவேண்டியதில்லையே. பல நாள் ஜுரம் அடித்தால் வாய் கசக்கிறது.”

“ஜுரம் வேறு, பேய் பிடிப்பது வேறு.”

“ஆமாம்! அதை யார் இப்போது மறுத்தார்கள். பேய் பிடித்திருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்வதற்குச் சர்க்கரை இனிப்பா, கசப்பா என்று பார்ப்பது ஒரு பரீட்சையா? வேடிக்கையாக இருக்கிறதே!”

“குழந்தே! நீ இப்படியே சந்தோஷமாக இருந்தால் போதுமம்மா.”

“அது கிடக்கட்டும்; எத்தனை நாள் ஆகும் பேய் போக?”

“சீக்கிரத்திலேயே முடியும், கவலைப்படாதே.”

“பேய் ஓடுமா, ஓட்டுவீர்களா?”

“ஓடும் பேயும் இருக்கிறது, ஓட்டவேண்டிய பேயும் இருக்கிறது.”

“ஓட்டினாலும் ஓடாத பேய் கிடையாதோ?”

“பக்கிரி ஓட்டினால் ஓடாத பேய் கிடையாதம்மா. பக்கிரியா ஓட்டுகிறான், பராசக்தியல்லவா ஓட்டுகிறாள்.”

“பராசக்தி, உனக்கு அருளைத் தந்தது ஏன்?”

“என் பூஜா பலன்.”

“என்னைப் பேய் பிடித்துக் கொண்டது ஏன்?”

“உன் வினை!”

“என் வினையை, உன் பூஜை பலன் தீர்த்துவிடுமா?”

இப்படிப் பேச்சு முற்றிக் கொண்டே போயிற்று, எங்கள் இருவருக்கும். பதில் கூற முடியாமல் திணறினான், பக்கிரி.

ஆனால், அந்தத் திணறலை மறைக்க, அடிக்கடி ‘பராசக்தி, பராசக்தி’ என்று உரக்கக் கூவிக்கொண்டிருந்தான். பேயோட்டும் பக்கிரியின் வாயை அடைத்துவிட்டோ ம் என்று ஒரு மகிழ்ச்சி எனக்கு. ஆனால், அந்தப் புரட்டன் சாமான்யமான பேர்வழியல்ல. கொஞ்சநேரம் கண்களை மூடிக்கொண்டிருந்துவிட்டு, பிறகு என் தகப்பனாரைப் பார்த்து, “ஐயா உன் மகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய், இன்னது என்று பராசக்தி கூறிவிட்டாள். மற்றப் பேய்களை ஓட்டுவதற்கும் இதற்கும் அதிக வித்தியாசமுண்டு. மற்றப் பேய்கள் முரட்டுத்தனம் செய்யும். இந்தப் பேய் முரட்டுத்தனம் செய்யாது. எப்போதுமே, முரட்டுத்தனம் செய்கிற பேயைச் சுலபத்தில் ஓட்டிவிடலாம். இது அவ்வளவு சுலபமல்ல” என்றான்.

“தங்களாலே முடியாது போகுமா?” என்று தயவு கலந்த குரலிலே கேட்டார் அப்பா.

“முடியும்! ஆனால் கொஞ்ச நாளாகும்” என்றான் அவன்.

“என்ன விதமான பேய்?” என்று கேட்டார் அப்பா.

“அதைத்தான் கண்டுபிடிக்கக் குழந்தையிடம் பேசிப் பார்த்தேன். எப்படிப் பேசிற்று பார்த்தீர்களா? மளமளவென்று பேச்சு இருந்தது. கேள்விமேல் கேள்வி போட்டுவிட்டது” என்றான் பக்கிரி.

“ஆமாம்!” என்றார் என் அப்பா.

“அது குழந்தையின் பேச்சா? பேசுமா அப்படி?” என்று கேட்டான் புரட்டன்.

“சாதாரணமாக சங்கோசப்படுகிற குழந்தைதான். இங்கே தான் கொஞ்சம் தாராளமாகப் பேசிற்று. ஆனால் துஷ்டப் பேச்சு இல்லையே?” என்றார் என் அப்பா.

“துஷ்டப் பேச்சுப் பேசாது. முரட்டுப் பேய்களல்லவா கெட்ட வார்த்தை பேசும். அப்படிப்பட்ட பேய்களை ஒரு மண்டல காலத்திலேயே ஓட்டிவிடலாம். இது சாதுப் பேய்!” என்றான் புரட்டன்.

“சாதுப் பேய் என்று சாமான்யமாகச் சொல்கிறீர். வீட்டிலே நாங்கள் பட்ட கஷ்டம் எவ்வளவு தெரியுமா?” என்று சோகத்துடன் சொன்னார் அப்பா.

“பழமொழியே இருக்கிறதல்லவா, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று, அதுபோல நடந்திருக்கும்” என்று விளக்கம் கூறினான், அந்தப் பூஜாரி.

“சாதுப் பேய், கொஞ்ச நாளிலே போகாதா?” என்று கேட்டார் அப்பா. “ஆமாம்” என்றான் பக்கிரி. “அது ஏன்?” என்றார் அப்பா. “முரட்டுப் பேயாக இருந்தால், போக முடியாது, நீ என்ன செய்யமுடியும் என்று கொக்கரிக்கும். உடனே அதற்குத் தரவேண்டிய தண்டனையைத் தந்து, துரத்திவிடலாம் சுலபத்தில். ஆனால், இந்தச் சாதுப் பேய்க்கு ஆயிரம் விதமான சமாதானம் சொல்லி, காரணம் காட்டி, இது கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூறி முடிய, நாள் அதிகம் பிடிக்கும் ஐயா! உமது மகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய், சாது மட்டுமல்ல, சாமர்த்தியமாகப் பேசக் கூடியது. பேய்களிலே பலரகம் உண்டு. கொலைகாரப் பேய், முரட்டுப் பேய், பொய் பேசும் பேய், வயிற்று வலிப் பேய், அழுகிற பேய் என்று இதிலே ஆயிரத்துக்கு மேலே ‘ரகம்’ இருக்கிறது” என்றான் புரட்டன்.

“பேயிலே மட்டுந்தானா? மனிதர்களிலும் நீ சொன்ன அவ்வளவும் இல்லையா?” என்று நான் கேட்டேன்.

“இல்லை என்று யார் சொன்னார்கள்? மனிதர்களில் பல ரகம்; அதுபோலத்தான் பேய்களிலும். மனிதர்கள் இறந்து போய், பேய் உருவடைந்தார்கள் என்பதுதான் எங்கள் சித்தாந்தம். பேய் உருவிலே இருக்கும்போதும், மனிதராக இருக்கும்போது இருந்த சுபாவம் இருக்கும். அதனாலேதான் பேய்களிலே பல ரகம் இருக்கிறது” என்றான் அந்த புரட்டன்.

“எந்தெந்த ரகமான பேய் பிடித்துக் கொள்கிறதோ அந்தந்த சுபாவம், பேய் பிடித்துக் கொண்ட ஆசாமியிடம் இருக்கும் என்று சொல்கிறீரா?” என்று நான் கேட்டேன்.

“அதேதான். போன வருஷம் இங்கே ஒரு பெண் வந்திருந்தாள், பேயோட்டிக்கொள்ள. சதா சர்வ காலமும் பாடிக் கொண்டே இருப்பாள்” என்றான் பூஜாரி.

“சங்கீதப் பேய் பிடித்துக் கொண்டதோ?” என்று நான் கேலி செய்தேன்.

“உண்மையாகத்தானம்மா. அந்தப் பெண் இருந்த ஊரிலே, ஒரு பையன் அருமையான சங்கீதம் பாடுவான். அதிருஷ்டம் இல்லாததால் ஆதரிப்பவர் கிடைக்கவில்லை. கடைசியில் தூக்கிட்டுக்கொண்டு இறந்துவிட்டான். பேயானான்; பெண்ணைப் பிடித்துக் கொண்டான்” என்று பேயின் சரித்திரமே கூறலானான்.

“அப்படியானால் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய்…” என்று நான் கேட்டேன்.

“எழுத்துக்கு எழுத்து பொருள் கேட்டு, வாதாடிப் பேசவும், எதிரியின் வாயை அடக்கிப் பேசவும், வக்கீலால்தானே முடியும்” என்றான் அவன்.

“அப்படியானால், என்னை வக்கீல் பேய் பிடித்துக் கொண்டதோ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

அத்தியாயம் 8

மனிதர்களிலே பலவகை இருப்பது போலவே பேய்களிலும் உண்டு என்றும், எந்தெந்தச் சுபாவமுள்ள பேய் பிடித்துக் கொள்கிறதோ, அதற்குத் தக்கபடி பேய்ப் பிடித்துக் கொண்டவர்கள் நடந்து கொள்வார்களென்றும், பூஜாரி சொன்னதுடன், நான் வாதாடவும், காரணம் கேட்கவும் தொடங்கியது கண்டு, என்னை ஒரு வக்கீல் பேய் பிடித்துக் கொண்டது என்று தீர்மானித்தது கண்டு, நான் சிரித்தேன். ஆனால், அந்தப் புரட்டனின் பேச்சை மெய்யென நம்பினவர்கள், அவன் சொன்னதிலே சூட்சமம் இருக்கிறதென்று கூறினார்கள். என்ன சூட்சமத்தைக் கண்டார்களோ நானறியேன். ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை கூறி, பூஜாரியின் பேச்சைப் பலப்படுத்தினர். இந்தப் புரட்டனின் பேச்சைத் தட்டிப் பேச முயல்வது வெட்டி வேலை என்று எனக்குத் திட்டமாகத் தெரிந்துவிட்டது. ஆகவே, நான் அவன் வார்த்தையை ஏற்றுக் கொண்டவளாகவே நடித்து வரலானேன். அதனாலே, எனக்கு நஷ்டமும் இல்லை; கஷ்டமும் கிடையாது.

பேயோட்டும் பக்கிரி, பணக்காரன், ஏழை என்ற இரு வகையினருக்காக இரண்டு தனித்தனி முறை வைத்துக் கொண்டிருந்தான் என்று கூறினேனல்லவா? அது போலவே முரட்டுப் பேய்களை விரட்ட ஒரு முறையும், சாதுப் பேய்களை ஓட்ட மற்றோர் விதமும் கையாண்டு வந்தான். வக்கீல் பேய் பிடித்துக் கொண்டது என்று தீர்மானித்து விட்டதால் என்னை ஓட்டுவதற்குக் கையாண்ட முறை, அதிக உபத்திரவமற்றதாகவே இருந்தது. சூடிடுவது, நாளைக்குப் பத்து வேளை குளத்தில் மூழ்கச் செய்வது போன்ற கடுமையான முறைகள் கிடையாது. காலையிலே எலுமிச்சம் பழம் தேய்த்து ஸ்நானம்; கொஞ்ச நேரம் சூரிய நமஸ்காரம்; பிறகு, ஒரு மைல் அளவுக்கு வேப்ப மரங்கள் நிறைந்திருக்கும் சாலையிலே உலாவுவது; பகலில், யாராவது ஏதாவது கதை படிப்பது, நான் கேட்டுக் கொண்டிருப்பது, மாலையிலே பூஜையில் உட்காருவது, இரவு படுக்கப்போகும் முன்பு, அவன் தரும் ‘மந்தரித்த’ விபூதியைப் பூசிக் கொள்வது என்ற இந்த விதமாக அமைந்திருந்தது, பேயோட்டும் முறை. பெரிய இடம், ஏதோ குமுறல் நேரிட்டுவிட்டது, கொஞ்ச நாளைக்கு மன அமைதியுடன் இருந்து வந்தால், பழையபடி சுபாவமாக இருக்கும் என்று அவன் யூகித்துக் கொண்டான். அதனாலேதான், என் விஷயத்திலே, ஒரு நல்ல வைத்திய சிகிச்சை போன்ற பேயோட்டும் முறையைக் கைக்கொண்டான். என்னிடம் பணம் இருக்கவே, அவன் ‘பேயின் முறையில் நடந்து கொள்ளாமல் மனிதத் தனத்துடன்’ நடந்துகொண்டான். பாவி, சிலரை இம்சையே செய்துவிட்டான். ஏழைகளுக்கு இரும்புக் கோலால் சூடு, பணக்காரர்களுக்கு மெல்லிய மிருதுவான ‘பிரம்பி’னால் தடவிக் கொடுப்பது. ஏழைகளைப் பிடித்திருக்கும் பிசாசு முரட்டுக்குணம் படைத்தது; பணக்காரர்களைப் பிடித்திருப்பதோ, நாசூக்கான சாதுவான பிசாசு! இப்படி அந்தப் புரட்டன் பிசாசுகளிலே கூட இரண்டு வர்க்கங்களைப் பிரித்து வைத்தான்.

கிராம வாழ்க்கை, நல்ல காற்று, குளிர்ந்த நீரில் குளித்தல், காலை மாலை உலவுதல், பகலில் சந்தோஷமாகப் பொழுது போக்குவது ஆகியவற்றால் எனக்கு ஆரோக்கியம் அதிகரித்தது; அழகும் அதிகரித்தது. அப்பா பார்த்து பார்த்து ஆனந்தப்படுவார். “முகத்திலே இப்போதுதானே பழைய களை இருக்கிறது” என்பார். பேயோட்டியும் தன்னுடைய பூஜை வெற்றிபெற்று வருவதாகக் கூறினான். “ஆனால் முதலியார்! அம்மாவைவிட்டு அந்தப் பேய் அடியோடு போய்விடவில்லை. மறுபடியும் மறுபடியும் வருகிறது. அதனாலேதான், சந்தோஷமாக இருந்து கொண்டே வருகிறார்கள்; திடீரென்று என்றைக்கேனும் ஓர் நாளைக்கு முகத்தைச் சுளித்துக் கொண்டு, யாரிடமும் பேசாமல் இருக்கிறார்கள்” என்றான். அவன் அறியான் காரணத்தை! எனக்கு உன் அப்பாவின் தொல்லையின்றி, வேடிக்கையாகக் கிராமத்திலே வாழ்வது மன நிம்மதியைக் கொடுத்தது என்ற போதிலும், ஒவ்வோர் நாள், எனக்கு உன் அப்பாவும் தங்கமும் ஊரிலே… என்ற கவனம் வரும்; உடனே முகம் சுருங்கும், ஒருவரிடமும் பேசமாட்டேன்; சாப்பாடும் பிடிக்காது. தூக்கமும் வராது; படுக்கையில் புரள்வேன். இதைத்தான், சோகம், பேயின் சேஷ்டை என்று பேயோட்டி கூறுவது. அந்தச் சோகத்தை அவனுடைய பன்னீர் கலந்த விபூதி போக்கிவிடுவதாக அவன் எண்ணிக் கொள்வான். உண்மையில், என் மனக் கஷ்டத்தைப் போக்கியது அவன் தந்த விபூதியல்ல. துளசியின் தயவால் ஓரளவு என் துக்கம் குறையும்; துளசி அவனுடைய இரண்டம் தாரம். கொஞ்சம் படித்தவள், ஏழை வீட்டுப் பெண்; அவனிடம் பணம் இருக்கவே, வயது ஏறுமாறாக இருந்தும், வாழ்க்கைப்பட்டவள். அதனாலே, அவள் குறைபட்ட மனதுடன் இருப்பதாக யாருக்கும் காட்டிக் கொண்டதில்லை; என்னிடம் கூட! நான் உண்மையைக் கண்டுபிடிக்கவே பத்து நாளாயிற்று. மனதிலே இருந்த குறையை மறைத்துக் கொண்டு, முகத்தை மலரச் செய்து கொண்டு துளசி வாழ்ந்து வந்தாள். பெரும்பாலும் பகலிலே எனக்குக் கதை படிப்பவள் அவள் தான். அந்தக் கதைகளில் இடையிடையேதான் அவள் தன்னுடைய சுயசரித்திரத்தையும் எனக்குத் தெரிவித்தாள்; அழுது கொண்டல்ல, சிரித்துக் கொண்டே. அந்தச் சிரிப்பு சந்தோஷம் மேலிட்டு வந்ததல்ல; உலகிலே நடக்கும் அக்ரமங்களைக் கண்டு கேலி செய்யும் சிரிப்பு அது! துளசிதான் என் சோகத்தைப் போக்குவாள், பல கதைகள் கூறி.

“அக்கா! உங்களுக்கெல்லாம் நூறு பேய் பிடித்துக் கொண்டாலும் பயமில்லை; என் புருஷர் ஓட்டிவிடுவார். ஆனால் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேயை ஓட்டவே முடியாது” என்பாள் துளசி. “அது என்னடி துளசி! அப்படிப்பட்ட பிரமாதமான பேய்? ஜெகம் புகழும் உன் புருஷனால் கூட ஓட்ட முடியாத பேயும் உண்டா?” என்று நான் கேட்பேன்.

“அவர் எல்லாப் பேயையும் ஓட்டுவார் அக்கா! ஒரே ஒரு பேயை மட்டும் அவரால் ஓட்டமுடியாது” என்று துளசி பெருமூச்சுடன் கூறுவாள். “அது என்ன பேய்?” என்று நான் கேட்பேன். “அதுவா? இதோ பார் அக்கா! அந்தப் பேய் என்னைப் பிடித்துக் கொண்டதற்குச் சாட்சி” என்று கூறிக்கொண்டே தன் தாலியை எடுத்துக் காட்டிவிட்டுச் சிரிப்பாள். மிகக் கஷ்டமான நிலைமையை மிகச் சாமர்த்தியமாகத் துளசி சமாளித்துக் கொண்டு வந்தாள். மனதுக்குத் துளியும் பிடிக்காத கணவனிடம், ஒரு துளியும் அதிருப்தியை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்வது சாமான்யமான காரியமா? துளசியின் துணை எனக்கு மிகுந்த நன்மை செய்தது. என் மனதிலே தோன்றும் எண்ணங்களை அவளிடம் கொட்டுவேன். அவள் தன் குறைகளை என்னிடம் கூறுவாள். பத்து நிமிஷம் படிப்பாள்; அரைமணி நேரம் அதை ஒட்டிப் பேசுவாள். இப்படி, ஒவ்வோர் தினமும் நிம்மதியாக இரண்டு மணி நேரம் இருப்போம். “அக்கா என் மூத்த மகள் வருகிறாள் வியாழக்கிழமை” என்று ஒரு சேதியுடன் வருவாள். “உன் மூத்த மகளா போடி போ! உன் வயிற்றிலேதான் இன்னமும் ஒரு பூச்சி புழுகூட…” என்று நான் கேலி செய்வேன். மகனே! நான் கொஞ்சம் பெருமையுடனும் கொஞ்சம் கர்வத்துடனும் அதைச் சொல்வேன். ஏன் தெரியுமா? அந்தச் சமயம்தானடா கண்ணே, நீ என் கருவில் உதித்தது! நான் ‘தலை முழுகி’ இரண்டு மாதமாகி விட்டது. இன்னும் எட்டே மாதம் இருக்கிறது கட்டித் தங்கத்தைப் பெற! அந்த சந்தோஷத்திலே நான் இருந்ததால், துளசியைக் கேலி செய்வேன். “உனக்கு ஏதடி குழந்தை?” என்று. துளசி சொல்வாள், “ஒன்றுக்கு மூன்று, நமக்கு ஒரு துளி உபத்திரவமும் இல்லாதபடிக்கு அந்த உத்தமி பெற்று வைத்துவிட்டுப் போய்விட்டாள்” என்பாள். அதாவது பேயோட்டும் பக்கிரியின் முதல் தாரத்துக்கு மூன்று பெண்கள். அதைக் குறிப்பிடுவாள் துளசி, வேடிக்கையாக.

இரண்டு மாதம் நான் தலைமுழுகவில்லை! மகனே! அந்த வார்த்தையின் முழுப்பொருளும் அந்தப் பொருள் தரும் களிப்பும் ஆண்களுக்குத் தெரியாது. அவர்களால் அந்தப் பொருளை முழுதும் புரிந்துகொள்ளவோ ரசிக்கவோ முடியாது. அது பெண்களின் வாழ்க்கையில் மகத்தானதோர் வெற்றி! அந்த வெற்றிதான், அவர்கள் வாழ்க்கையோடு போராடிப் போராடிப் பெறுவது. வேறு எதைக் கண்டார்கள்? பல வெற்றிகள் இருந்தால் மகிழ்ச்சி பங்கிட்டுவிட வேண்டிவரும். அது ஆண்களுக்கு! ஒரு புதிய தோட்டம் வாங்கினோம், புது வீடு கட்டினோம், புது வியாபாரம் செய்தோம் என்று எத்தனையோ வகை வகையான வெற்றிகள் ஆண்களுக்குக் கிடைக்க வழி இருக்கிறது. பெண்களுக்கு அது இல்லை! அவர்கள் அடையக்கூடிய ஒரே வெற்றி, குழந்தை! தலை முழுகவில்லை என்றால், அந்த வெற்றிக்கு அருகதையாகிவிட்டார்கள் என்று பொருள். இன்ப வாழ்க்கையின் ‘பலனைக்’ காணப் போகிறார்கள்! பெண், மனைவியானாள்! மனைவி தாய் ஆனாள்! பூத்துக் காய்த்துக் கனி குலுங்கிற்று என்பதுபோல. அத்தகைய வெற்றி எனக்குக் கிடைக்க இருந்தது. மாதம் இரண்டு; வாயிலே லேசான கசப்பு! மாலை வேளைகளில் கொஞ்சம் தலைசுற்றும். கைகளிலே ஒருவிதமான ஓய்ச்சல்! ஆமாம்! துளசிக்கு அது தெரிந்துவிட்டது. ஆணா பெண்ணா என்று தர்க்கிப்பாள், என்னிடம். நான் பிடிவாதமாகப் பெண் என்பேன். அவள், வேடிக்கையாக என் வயிற்றண்டை தன் காதை வைத்துக்கொண்டிருந்துவிட்டு, “அக்கா! நிச்சயமாகப் பெண்ணல்ல! ஆண்” என்று கூறுவாள். “உன்னிடம் பேசினானா?” என்று நான் கேட்பேன். “ஆமாம்” என்பாள் துளசி. “எனக்கு ஒரு பெண் கொடு மாமி! என்று கேட்டிருப்பான்” என்று நான் அவளைக் கேலி செய்வேன். அவள் சளைக்கமாட்டாள். “அது போலத்தான் கேட்டான், ஆகட்டுமடா கண்ணா! நீ வளர்ந்து பெரியவனாகி, தாத்தாவாகிறபோது வந்து கேள், பெண் தருகிறேன் என்று நான் சொன்னேன்” என்பாள். அதாவது தன்னைக் கிழவனுக்கு மண முடித்தார்கள் என்பதைப்பற்றி வேடிக்கையாகக் குறிப்பிடுவாள். இப்படி நாங்கள் பொழுது போக்கி வந்தோம். அப்பாவுக்கோ இந்தச் சேதி மனக்குழப்பத்தை உண்டாக்கிவிட்டது; அந்தக் குழப்பத்தை பேயோட்டுபவன் அதிகப்படுத்தி விட்டான். பேய் பிடித்திருக்கும் சமயத்திலே, கருத்தரித்தால் நல்லதா கெட்டதா என்று அப்பா கேட்க, அவன் ஒரு விதத்திலே நல்லது, ஒரு விதத்திலே கெட்டது என்றான். எந்த விதத்திலே நல்லது, எந்த விதத்திலே கெட்டது என்று அப்பாவும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை! “கெட்டதாக முடியாதபடி…” என்று பயந்து போய் அப்பா கூறினார். அவன் ஏதோ ஆண்டவனின் அபிப்பிராயத்தை நேரடியாகக் கண்டு அறிந்தவன்போல, “ஆண்டவன் ஒரு குறையும் செய்யமாட்டார்” என்று தைரியம் கூறிவிட்டு, “இருந்தாலும், எட்டாம் மாதம் வரையில் குழந்தை இங்கேயே இருக்கட்டும். அப்போதைக்கப்போது இருக்கும் நிலவரத்துக்குத் தக்கபடி பூஜைகள் செய்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டான். ஆகவே, நான் தங்கத்தின் எதிரே சென்று, “பைத்தியக்காரி! நான் தாயாகப் போகிறேன். என்னை இனிச் சாமான்யமாகக் கருதிவிடாதே! வாரிசு பிறக்கப்போகிறது, ஜாக்ரதை” என்று பேச்சினால் அல்ல, பார்வையாலேயே தெரிவித்துவிட வேண்டும் என்று ஆசை கொண்டதற்கு அணை போடப்பட்டுவிட்டது. இன்னும் ஆறு மாதங்களுக்கு இங்கே இருந்தாக வேண்டும்! துளசி இருக்கிறாள், பொழுதுபோக்குக்கு. ஆனால், தங்கம் அங்கே இருக்கிறாள் தலைகால் தெரியாமல் கர்வத்தோடு. நான் ‘தலை முழுகாது’ இருக்கிறேன் என்ற விஷயம் தெரிந்ததும், அவளுடைய ‘கர்வம்’ குலையும் அல்லவா? அதைப் பார்க்கவேண்டுமே என்ற ஆவல், என்னைத் தூண்டிற்று. “இருக்கட்டும், இருக்கட்டும், வருகிறேன் தங்கம்!” என்று துளசியைத் தங்கமாகக் கொண்டு பேசினேன்! அதிலே ஒரு சந்தோஷம் எனக்கு!

“அவரிடமிருந்து கடிதம் வந்ததா?” இந்தக் கேள்வியை ஒவ்வோர் நாளும் கேட்பேன் அப்பாவிடம். ஏன் கேட்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே, அவர் “வந்தது – இல்லை” என்று இரண்டிலோர் பதில் கூறுவார். “நான் தலை முழுகாமல் இருப்பதுபற்றி அவருக்கு எழுதினீர்களா? அவர் என்ன பதில் எழுதினார்?” என்று நானாக அப்பாவை எப்படிக் கேட்பது. துளசிதான் இதற்கும் யோசனை சொன்னாள்.

“அக்கா! நீயேதான் அவருக்குக் கடிதம் போடுவதுதானே” என்றாள்.

“போடி, போ! எப்படி? வெட்கமாக இல்லையா எழுத?”

“எழுத வெட்கப்பட்டுப் பலன்?”

“நான் மாட்டேன் போடி, எப்படி இதை எழுதுவது?” இப்படி கொஞ்ச நேரம் வாதாடினேன் துளசியிடம். (என்னைத் தான் வக்கீல் பேய் பிடித்துக் கொண்டிருக்கிறதே!) பிறகு அவள் ஒரு யோசனை சொன்னாள். அதாவது “சாப்பாடு சரியாகப் பிடிக்கவில்லை, வாய் கசப்பாகவும் இருக்கிறது, யாராவது லேடி டாக்டரைக் கேட்டு, கர்ப்பவதிகளுக்கு வலிவு தரும் டானிக் வாங்கி அனுப்பி வைக்கவேண்டும் என்று ஒரு கடிதம் எழுதிப் போடு; அதிலிருந்து அவர் தெரிந்து கொள்கிறார்” என்றாள். சாமர்த்தியமல்லவா அவள் யோசனை. அதன்படியே கடிதம் போட்டேன். நாலாம் நாள் பதில் வந்தது. கவர்! நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். துளசி கவரைக் காட்டினாள். அவருடைய கையெழுத்துதான். என் முகம் மலர்ந்தது. பதில் கிடைத்துவிட்டது, நாலே நாளில். கடிதம் போட்டோ ம்; உடனே பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். என் மீது அவருக்கு கோபம் இல்லை; அன்பு ஏற்பட்டுவிட்டது. ஆமாம், தாய் ஆகப் போகிறேன். இனியுமா என்னிடம் வெறுப்பாக நடந்து கொள்வார். அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு வந்து கடிதத்தைப் படித்தாகவேண்டும் என்ற ஆவல். அவசரமாகச் சாப்பிட்டாலோ துளசி கேலி செய்வாள். ஆகவே, கடிதத்தைப் படிக்கவேண்டுமென்பதிலே அவசரம் கொள்ளாதவள் போல, மெள்ளச் சாப்பிடவேண்டியிருந்தது. சாப்பாடு முடிந்து கூடக் கொஞ்சம் காலதாமதம் செய்தேன்; இல்லையானால் அவள் கேலி பேசுவாள்.

“துளசி! என்ன எழுதி இருக்கிறார் கடிதத்தில் என்று பார்க்கலாம், கொடு” என்று கேட்டேன்; கொடுத்தாள். கடிதமல்லடா கண்ணே! கடுவிஷம் இருந்தது அதிலே!

“தலைமுழுகிவிட்டேன்.” இவ்வளவே, அவர் அனுப்பிய கடிதத்தில் இருந்தது!

மலர்க்கூடையை ஆவலாக எடுக்கும்போது, அதனுள்ளிருந்து கருநாகம் சீறிக் கிளம்புவதுபோல, உன் அப்பா அனுப்பிய கடிதத்தைப் பிரித்ததும் தலைமுழுகிவிட்டேன் என்ற வாசகம் தோன்றக் கண்டேன். அவசரமாகக் கடிதத்தைத் திருப்பி மறுபக்கம் பார்த்தேன். ஒரு எழுத்தும் இல்லை. மறுபடியும் ஒரு முறை கடிதத்திலே தீட்டப்பட்டிருந்த வாசகத்தைக் கண்டேன். மெள்ள அதனை உச்சரித்தேன். உள்ளம் வெந்தது. துளசி வெடுக்கெனக் கடிதத்தை எடுத்துக் கொஞ்சம் தெளிவாக படித்தாள், தலைமுழுகிவிட்டேன் என்ற வாசகத்தை. என் செவியிலே அந்தச் சொற்கள் விழுந்த உடனே கண்ணீர் கன்னத்திலே விழலாயிற்று. தலைமுழுகிவிட்டேன்! யாருடைய வார்த்தை அது? என் கணவரின் வார்த்தை. என்னைத் தலைமுழுகிவிட்டாராம் என் கணவர். இதைவிட வேறு வேதனை தரும் சொல் பெண்ணுக்கு ஏதடா மகனே! நான் தாயாகப் போகிறேன் என்பதைப் பெருமையுடன் அவருக்கு நான் தெரிவிக்க, அவர் என்னைத் தலைமுழுகி விட்டதாகக் கடிதம் எழுதுகிறார். நான் அனுப்பியது பழம்! அவர் எனக்கு விஷம் அனுப்பினார்! என்னைத் தலைமுழுகிவிட்டாராம்; நான் தலை முழுகாமலிருக்கிறேன் என்ற செய்தியைத் தெரிவித்ததும், எனக்குக் கிடைத்த பதில் இது மகனே! எதற்கும், எப்போதும் வேடிக்கையாகவே பேசிவிடும் துளசிகூடத் திடுக்கிட்டுப்போய் நின்றாள், அந்தக் கடிதத்தைக் கண்டு. “என்ன அக்கா இது?” என்று கேட்டுக்கொண்டே என்னை அணைத்துக் கொண்டாள். “துளசி! நான் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறேன். என் கணவன் என்னைக் கைவிட்டுவிடத் தீர்மானிக்கிறார். அலட்சியப்படுத்தினார், இம்சை செய்தார். இப்போது அடியோடு என்னைக் கைவிட்டுவிடத் தீர்மானித்து விட்டார். தலைமுழுகிவிட்டேன் என்றல்லவா எழுதி இருக்கிறார், துளசி! அது என் மானத்துக்கு மரண தண்டனையடி! நான் கர்ப்பவதியாக இருக்கிறேன். இது, நான் குற்றம் செய்தவள் என்பதற்கு அத்தாட்சி என்று கூறுகிறார். ஐயோ! துளசி! நான் என்ன செய்வேன். அவருடைய வாசகம் என்னைப் படுகுழியில் தள்ளும் பயங்கர ஏற்பாடு. நான் அவருக்குத் துரோகம் செய்துவிட்டேன், நான் ஓர் தூர்த்தை என்று தூற்றுகிறார். உன்னை நான் நேசிக்க முடியாது, குடும்பத்திலே உன்னோடு சேர்ந்து வாழமுடியாது, காப்பாற்றவும் முடியாது, நீ எக்கேடோ கெட்டுப் போ! என்று கூறுவது கொடுமை என்பார்கள் துளசி! அவர் கூறுவது அதனினும் கொடுமையானது. விபசாரி! என்று கூசாமல் பழி சுமத்தி என் மானத்தைப் பறித்து உலகம் என்னை இழிவாகப் பேசும் நிலையை உண்டாக்குகிறார்.

“அவளை நான் மனைவியாக இனிக் கொள்ளமுடியாது. அவள் ஓர் விபசாரி” என்று என் கணவர் உலகுக்கு உரைக்கிறார்” என்று நான் கூறி விம்மி விம்மி அழுதேன். “அழாதே அக்கா! அழுது அழுது முகமும் சிவந்துவிட்டதே! இப்படி அழுதால் உடம்புக்கு நல்லதா? அத்தான் ஏதோ வெறியிலே வீணாக எதையோ எழுதிவிட்டார். அதற்காக நீ இப்படிப் பதைக்கலாமா? ஆண்களின் சுபாவம் இப்படித்தான். பெண்ணின் மனம் புண்ணாகுமே என்பது குறித்து எண்ணியும் பார்ப்பதில்லை. அத்தானுடைய அக்ரமமான வார்த்தைக்கு அர்த்தம் இருப்பதாக நினைத்துக் கொண்டு நீ வருத்தப்படாதே. உலகிலே, புத்தியுள்ளவர்களும் சில பேர் இருக்கிறார்கள். இப்படி வெறி பிடித்து, உளறுவதை உண்மை என்று எல்லோருமே ஏற்றுக் கொள்வார்களா?” என்று துளசி என்னென்னவோ சமாதானம் கூறிப் பார்த்தாள்; வழக்கமாக அவள் பேச்சிலே காணப்படும் விறுவிறுப்பு அன்று இல்லை. அவள் எனக்குச் சமாதானம் கூறினாளேயொழிய அவளாலேயே தலைமுழுகிவிட்டேன் என்ற வாசகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. ‘பாவிகள்! பழிகாரர்கள்! கொலைகாரர்கள்! பெண்ணை மண்ணாக எண்ணிக் கொள்ளும் முட்டாள்கள்! இருதயமற்றவர்கள்’ என்று பொதுவாக ஆண்களைத் திட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அவ்வளவும் என் கணவருக்காகவே வீசப்பட்டவை. எனக்கோ உலகமே இருள்மயமானது போலாகிவிட்டது. கடலிலே விழுந்து, அலைகளால் தாக்கப்பட்டு, கை கால்கள் சோர்ந்து போய் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை ஒருவாறு தெரிந்து கொள்ளக் கூடிய அளவு மட்டும் உயிர் இருக்கும் நிலைமை எனக்கு. நான் சின்னவளாக இருக்கும்போது, பல்லியிடம் சிக்கிக் கொண்ட பூச்சியைப் பார்த்திருக்கிறேன். உடலில் ஒரு பாகம் பல்லியின் வாயிலே சிக்கி விடும். பூச்சிக்கு அது தெரிந்துவிடும். மரணத்தின் பிடியிலே இருப்பதுதான் தெரியுமே தவிர அதிலிருந்து மீண்டு கொள்ளும் வலிவு இராது. அந்த நிலையிலே தன்னால் தப்பித்துக் கொள்ள முடியுமா, அதற்குத் தகுந்த சக்தி இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்க முடியுமா? எப்படியாவது சாவின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காகத் துடிக்கும், நெளியும், தலையைத் தூக்கும். பல்லியின் வாயிலிருந்து வெளிப்படுவதற்காகத் தன் பலத்தை முழுவதும் உபயோகித்துப் பார்க்கும். ஒவ்வொரு துடிப்பும் பூச்சியின் வலியை நாசமாக்கவும் உயிரைப் போக்கவும் பயன்படுமேயொழிய விடுதலைக்கு வழியாக முடியாது. பல்லிக்குப் பூச்சியைக் கொல்லும் வேலையும் மிச்சமாகும். தன் பிடியை இறுக்கிக் கொண்டு பல்லி அசைவற்று இருக்கவேண்டியதுதான். பூச்சி போராடுவதாகக் கருதிக் கொண்டு சுவரிலே மோதுண்டு, தானாகச் சாகும். பிறகு பல்லி அதனைத் தின்றுவிடும். அது போன்ற நிலையிலே நான் இருந்தேன். என் கணவரின் கிராதகம் என்ற பிடியிலே சிக்கிக் கொண்ட நான் என் நிலைமையைச் சரிப்படுத்திக் கொள்ள எடுத்துக் கொண்ட ஒவ்வொரு முயற்சியும் என் வேதனையை வளர்க்கப் பயன்பட்டதேயொழிய, என் துயர் நீக்கும் துணையாகவில்லை. நான் என்ன செய்வேன்! கணவனே விபசாரி என்று தூற்றத் துணிந்த பிறகு பேதைப் பெண்ணால் என்ன செய்ய முடியும்? ஆழமான கிணறு தேடுவதன்றி வேறு வேலைதான் என்ன இருக்கிறது?

அத்தியாயம்-9

மகனே! தங்கத்தை அவர் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயன்றேன். அதன் பயன், பேய் பிடித்தவள் என்று ஊராரே கூறும்படியானதுதான். சரி! இனித் தடுத்துப் பயனில்லை. ஆண்களின் மனம் வானம் போன்றதுதான். அதிலே பல நட்சத்திரங்கள் இருந்தே தீரும். ஒளிவிடும் மதி இருந்தாலும், மின்மினியும் இருக்கும், கருமேகமும் இருக்கத்தான் செய்யும். ஆகவே, ரங்கம் இருக்கும்போது தங்கம் ஏன் என்று கேட்டுப் பயன் இல்லை. அவர் தாராளமாகத் தங்கத்தையும் கலியாணம் செய்துகொள்ளட்டும் என்று எண்ணி, என் மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். அதன் விளைவுதான் மின்னல்போல் தோன்றி மறைந்த, அவருடைய அன்பு! அந்த அன்பு, அன்று இரவு மட்டுமே நிலைத்திருக்க முடிந்தது. அந்த இன்ப இரவு, உன்னையும், உலகிலே எந்தப் பெண்ணும் கேட்டுச் சகித்துக் கொள்ள முடியாத பழியையும், எனக்குத் தந்தது. பாழ் மனமே! ஏன் நீ, அன்று அவரிடம் தஞ்சம் புகுந்தாய்? கெஞ்சி அவருடைய கொஞ்சு மொழியைப் பெற்றாய், களித்தாய்! இதோ தருகிறாரே நஞ்சு, அது உயிரைப் போக்கினாலும் பரவாயில்லையே, மானத்தை அல்லவா மாய்க்கிறது’ என்று மெள்ளக் கூறிக் கொண்டே குமுறினேன். விசாரத்தை விநாடியில் துடைத்துவிடும் துளசியும், என் நிலையைக் கண்டு, அழுதுகொண்டே தன் முந்தானையால் என் கண்களைத் துடைக்க முடிந்ததே தவிர, எனக்குச் சமாதானம் கூற முடியவில்லை. எப்படி முடியும்? ‘விபசாரி!’ என்ற பழி சுமத்தப்பட்ட பிறகு, பெண் எப்படி உலகை ஏறிட்டுப் பார்க்க முடியும்? உலகிலே, எத்தனையோ விதமான அக்ரமத்தைச் செய்து வயிறு வளர்ப்பவன் கூட, ஒரு பெண் விபசாரி என்றாகிவிட்டால், கேவலப்படுத்துவான்; கண்டிப்பான். எவ்வளவு கொடூர சுபாவம் இருந்தால் அவர் அப்படிச் சொல்ல மனம் துணிவார் என்பதை நீ இப்போது எண்ணிப் பார். ஏதோ தாய் தன் மகனிடம் கூறுகிறாள் என்று எண்ணவேண்டாம். துர்ப்பாக்கியவதி ஒருத்தி கருணையும் நீதியும் தெரிந்த ஒரு உத்தமனிடம் முறையிடுகிறாள் என்று எண்ணிப் பதில் சொல்லு. வேண்டாமடா மகனே! நீ பேச வேண்டாம். உன் கண்ணீர் போதும், எனக்கு அந்தப் பாஷை தெரியும். இம்சைக்கு ஆளான எனக்கு கடைசிக் காலத்திலேனும், அந்தக் கண்ணீர் ஆதரவு தருகிறது என்று ஆறுதல் கிடைத்ததே அதுவே போதும்.

என் கலியாணம் நடந்த போது, இரவு காலட்சேபம் வைத்தார்கள். நான் பெண்களுடன் உட்கார்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் அவருடைய முகத்தையும் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தேன். காலட்சேபக்காரர், சீதா கலியாணக் கதையைக் கூறினார். அப்போது அவர் பெண்களைப் பற்றிப் பேசிய பெருமையை, நாளெல்லாம் கேட்கலாமா என்று தோன்றிற்று. அவ்வளவு விளக்கி விளக்கிப் பேசினார், விடிய விடிய. உன் அப்பாவோ அந்தக் காலட்சேபக்காரரின் பேச்சைக் கேட்டு அப்படியே சொக்கிவிட்டார். இராகத்தோடு காலட்சேபக்காரர், ‘பெண்ணுக்கு வேண்டியது என்ன? பூஷணமா? போதாது, சம்பத்தா? போதாது. அழகான பங்களாவும் தோட்டமும் இருந்தால் போதுமா? போதாது. வைரமாலையும், பச்சை வளையலும், கல்லிழைத்த ஒட்டியாணமும் கிடைத்தால் போதுமா? போதாது! காசி கொரநாடு சேலை வாங்கிக் கொடுத்தால் போதுமா? போதாது! வேறே என்ன வேண்டும்? தொட்டுத் தாலிகட்டிய புருஷனின் மட்டற்ற அன்பு வேண்டும். அந்த அன்புதான் அவளுக்கு அஷ்ட ஐஸ்வரியத்தைவிட மேலானது” என்று கூறி முடித்தார். சபையிலே, மனைவியை அடிக்காவிட்டால் கை மரத்துப் போய்விடும் என்று எண்ணிக் கொண்டவர்கள்போல வாழ்ந்து வந்த புருஷர்கள் கூட, கரகோஷம் செய்தார்கள். காலட்சேபக்காரர் கூறியது நியாயமான பேச்சு என்பதை ஆமோதிப்பதற்காக உன் அப்பா கரகோஷம் செய்யவில்லை. அவருடைய கண்கள், என் கண்களைச் சந்தித்தன! அவருடைய புன்னகை காலட்சேபக்காரர் சொன்னது சரி என்று மட்டுமல்ல, “இதோ பார்! எந்த அன்பு தான் பெண்களுக்கு அஷ்ட ஐஸ்வரியத்தைவிட மேலானது என்று காலட்சேபக்காரர் கூறுகிறாரோ, அந்த அன்பை நான் இதோ தருகிறேன். ஆனந்தம் கொள்” என்று எனக்குக் கூறுவது போலிருந்தது. நான் வெட்கத்தால் தலை குனிந்து கொண்டேன். சபையிலே சிலர், “மாப்பிள்ளே! காலட்சேபத்தைக் கவனியும்” என்று கூட அவரைக் கேலி செய்தார்கள். பெண்களுக்குப் பரிந்து பேசிய காலட்சேபக்காரர், அழகழகாகக் குடும்ப வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டினார். “மலராவது கசக்கினால்தான் கெட்டு விடும்; மங்கையின் மனமோ மணவாளனின் முகம் கொஞ்சம் கடுகடுத்தாலே போதும் நொந்து போகும்; அவ்வளவு மிருதுவானது பெண் மனம். பெண் மனத்தைப் புண்ணாக்கும் ஆண்களைப் பேய் இனத்தில்தான் சேர்க்கவேண்டும்” என்று காலட்சேபக்காரர் கூறினார். உன் அப்பா தனது பார்வையாலும் புன்னகையாலும் அவர் கூறினதையெல்லாம் ஆமோதித்துக் கொண்டு இருந்தார். வருஷம் பல ஆனபோதிலும், எனக்கு அன்று நடந்தவைகள் அவ்வளவும் நன்றாக நினைவிலே இருக்கிறது. நடுநிசிக்குமேல், எனக்குத் தூக்கம் வந்துவிட்டது. தூங்கினால் கேலி செய்வார்களே என்பதற்காக மிகச் சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தபடி இருந்தேன். இதனால் தூக்கம் அதிகப்பட்டதே தவிர, குறையவில்லை. என்னையுமறியாமல் கண்களை மூடினேன். பக்கத்திலே இருந்த ஒரு சிநேகிதி மீது சாய்ந்தேன். அவள் “கலியாண பெண்ணுக்கு மயக்கம் வந்துவிட்டது” என்று கூறினாள். ஆளாளுக்கும் கூவினார்கள். நான் கண்களைத் திறந்தேன். அவளோ என்னைத் தன் மீது சாய்த்துக் கொண்டு, “அசையாதே கண்ணு! ஒன்று மில்லை பயப்படாதே!” என்று உபசாரம் செய்தாள். காலட்சேபம் நின்றுவிட்டது. ‘கொஞ்சம் பால் கொடுங்கள்’ என்றார் ஒருவர். ஒருவர் ‘விசிறுங்கள்’ என்றார். இன்னொருவர் மெள்ள உள்ளே அழைத்துக் கொண்டு போகும்படி யோசனை சொன்னார். என் கணவர் சாதாரணமாக, கலியாணப் பிள்ளைகள் வெட்கப்படுவார்களே அதுபோலிராமல் “முகத்திலே கொஞ்சம் பன்னீர் தெளியுங்கள்!” என்று உரத்த குரலிலே சொன்னார்.

தூக்க மயக்கத்தைத் தெளிவிக்க என் முகத்திலே பன்னீர் தெளிக்கும்படி பரிவுடன் பேசிய என் கணவர், நான் கர்ப்பவதியாக இருக்கிறேன் என்ற செய்தி கேட்டு ஆனந்தமடைந்திருக்க வேண்டியது முறை. ஆனால், அவரோ என்னைத் தலைமுழுகிவிட்டதாகத் தெரிவித்தார். பெண்ணின் வாழ்க்கை இப்படி ஒரு ஆணின் ஆபாசத்துக்குக் கட்டுப்பட்டு இருக்கும் கொடுமையை யார் எண்ணிப் பார்க்கிறார்கள். மகனே! உன்னைப்போன்ற உத்தமகுணம் படைத்தவர்கள் உலகில் மிகமிகக் குறைவு. உன் மனம் என் அழுகுரல் கேட்டுப் பதைபதைத்தது. உள்ளே ஓடி வந்து, என்னை அடித்த முரடனிடம் சண்டைக்கும் நின்றாய். ஆனால் பொதுவாக ஆடவர்கள் இவ்விதம் செய்யமாட்டார்கள். அதனால், ஆண்கள் இரக்கக் குணமே அற்றவர்கள் என்று நான் கூறுவதாக எண்ணாதே. நாய், பூனை இவைகளிடம்கூட இரக்கம் காட்டும் ஆடவர்களை நான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட கருணாகரர்கள் கூட, மனைவியை புருஷன் அடித்துத் துன்புறுத்தும்பொழுது குறுக்கிட்டுத் தடுக்கமாட்டார்கள். அவன் பெண்ஜாதியை அவன் அடிக்கிறான், நாம் எப்படி அவனைத் தடுக்க முடியும்? போடா உன் வேலையைப் பார்த்துக் கொண்டு என்று அவன் சொல்லிவிட்டால், நாம் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வது என்று, இப்படி உப்புச்சப்பற்ற பேச்சைப் பேசிவிட்டுப் போவார்களேயொழிய, பெண்ணை இப்படி இம்சிக்கலாமா என்று கேட்க முன்வர மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலேதான் பெண்கள் வாழ்கிறார்கள்; என் நிலைமையும் அதுதான். உன் அப்பா, கலியாணமான சில காலம்வரை காட்டிய அன்பும் அக்கறையும், எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, ஒரு புது நம்பிக்கையையும் கொடுத்தது. மற்றவர்களைப்போல் இவர் முரடரல்லர்; கண்ணியம் வாய்ந்தவர். நம்மிடம் அமோகமாக அன்பு வைத்திருக்கிறார். ஆகவே, இவர் நம்மை மிகவும் பிரியமாக நடத்துவார்; நம் வாழ்விலே துன்பம் இராது என்று நம்பினேன். மற்றக் குடும்பத்துப் பெண்களைப்போலக் கசங்கிய கண்களாக இராது என்று நினைத்தேன். அவருடைய சொல்லும் செயலும் எனக்கு அவ்விதமான நம்பிக்கையைத் தந்தது. தங்கம், என் வாழ்க்கையிலே குறுக்கிடும் வரையில், அவர் என்னை அன்புடன் தான் நடத்தி வந்தார். பாபம்! தங்கத்தை மட்டும் குறைகூறிப் பயன் என்ன? உன் அப்பா பேராசைக்கு ஆட்படும்வரை என்னை அன்பாகத்தான் நடத்திவந்தார். பேராசை பிடித்ததும் என்னைச் சித்திரவதை செய்யலானார்.

தலைமுழுகிவிட்டேன் என்று அவர் எழுதிய கடிதத்தைப் பற்றி, நானாக என் அப்பாவிடம் கூற முடியுமா? துளசிதான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். அப்பா, துடிதுடித்தார். ‘மடையன், முட்டாள்’ என்றெல்லாம் திட்டினார். என்னவோ உளறி இருக்கிறான். அவன் எழுதினதற்கு அர்த்தமே இல்லை என்றார். எனக்கு ஆறுதல் தருவதற்காக அவர் அவ்விதமெல்லாம் பேசினாரேயொழிய உண்மையிலேயே அவர் அந்தக் கடிதத்தால் அடைந்த வேதனையை அவருடைய முகம் தெளிவாகக் காட்டிற்று. முடிவில், ‘நானே போய் அவனைக் கண்டித்துவிட்டு வருகிறேன்; இரண்டு நாள் நீ இங்கே தனியாக இரு; வந்துவிடுகிறேன்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். இந்த முறைதான் சரியானது என்று துளசி ஆமோதித்தாள். எனக்கு என்ன செய்வது, எது சிறந்த முறை என்று தெரிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியவில்லை. ஒரே திகைப்பு. இரண்டு நாள் கழித்து, அப்பா திரும்பி வந்தார். “என்னப்பா விஷயம்?” என்று நான் ஆவலுடன் கேட்டேன். ‘ஒன்றுமில்லையம்மா! அவன் ஒரு மடையன். என்னவோ ஒரு விதமான பைத்தியக்காரச் சந்தேகம் கொண்டிருக்கிறான். இது என்னடா அசட்டுத்தனம் என்று கேட்டால், விழிக்கிறான். ஒரே குழப்பம். ஒழியட்டும். இப்படிப்பட்ட புத்தியற்றவர்கள் தாமாகத் திருந்தவேண்டுமேயொழிய, நாம் சொல்லித் திருத்த முடியாது என்று விட்டு விட்டேன். அவன் கிடக்கிறான்; உனக்கென்னமா கவலை? நீதானே அந்த வீட்டு எஜமானி. என்ன செய்துவிடுவான் அவன்; சும்மா விடுவேனா நான்” என்று என் அப்பா பேசினார். அவர் சொன்னது சமாதானமா, தீர்ப்பா, குற்றச்சாட்டா என்று தெரியவில்லை. உன் அப்பாவிடம் ஏதேதோ பேசிப் பார்த்திருக்கிறார். அவர் ஒரே பிடிவாதமாக இருந்திருக்கிறார். தன்னால் ஒன்றும் சாயாமல் போனதை மறைக்க, என் தகப்பனார் ஏதோ பேசித் தீர்க்கிறார் என்பது தெரிந்தது. என் மனதிலே இருந்த குழப்பத்திலிருந்து ஒரு புது உறுதி பிறந்தது. நேரே வீடு போவது, என்னை அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். தைரியமிருந்தால், “என் மனைவி விபசாரி. அவளை நான் விலக்கி விட்டேன்” என்றும் சொல்லட்டும். என்னை ஊரார் தூற்றுவார்கள்; சகித்துக் கொள்கிறேன். ஆனால், அதேபோது, ஊருக்குப் பெரியவர், கௌரவமான குடும்பம். செல்வமும் செல்வாக்கும் படைத்தவர் என்று புகழப்படும் இவரையும், எதிரே இல்லாவிட்டாலும் தலை மறைவாக ஏளனம் செய்யும். அதனால் வரும் இழிவையும் அவமானத்தையும், என்னை இம்சித்ததற்குத் தண்டனையாக அவர் அடையட்டும் என்று எண்ணினேன். பூஜை, பூஜாரி, பேய், எதையும் பொருட்படுத்தவில்லை. துளசியின் அன்பு மொழிக்கு மட்டும், கொஞ்சம் சிரமத்துடன் சமாதானம் கூற வேண்டியதாயிற்று.

அப்பாவை அழைத்துக் கொண்டு, வீடு வந்தேன். பேயோட்டிக் கொள்வதற்காகவென்று நான் வீட்டிலிருந்து கிராமத்துக்குப் புறப்பட்ட போது, சாதுவாகத்தான் சென்றேன். பிறகு எதற்கும் பயப்படாதவளாக, வீட்டுக்குள் நுழைந்தேன். அடக்கம் பெண்களுக்குப் பூஷணம் என்பார்கள்; நான் அதன் படிதான் நடந்து வந்தேன். கிராமத்தை விட்டு மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்தபோதோ அதிகாரி என்ற முறையிலே புகுந்தேன். இனி, அடக்க ஒடுக்கம், பரிவு, பாசம், இவைகளை நான் ஏன் கொள்ள வேண்டும்? புருஷனின் குரலைக் கேட்டாலே பயந்து, அவர் காலால் இடும் வேலையைத் தலையால் செய்து தீரவேண்டும் என்று நான் இருப்பானேன்? அடங்கி ஒடுங்கி இருந்து பார்த்தாகிவிட்டது. கொடுமைகளைத் தாங்கிக் கொண்டேன். இழிவைப் பொறுத்துக் கொண்டேன்; சித்திரவதை செய்தார், சகித்துக் கொண்டேன். இவ்வளவுக்கும் பிரதிபலன் என்ன பெற்றேன்? தலைமுழுகிவிட்டேன் என்று அவர் எழுதிய கடிதந்தானே? புருஷனிடம் இடிபட்டு அடிபட்டு, இம்சைகளைப் பெற்றுக் கொண்டு, பெண் எதைப் புகழாகப் பெறுகிறாள்? அவள் உத்தமி, பத்தினி, பதி சொல் கடவாத பாவை என்ற பட்டங்களைத்தானே! எனக்குத்தான் என் கணவர் விபசாரிப் பட்டம் கட்டிவிட்டாரே; இனி பத்தினி, உத்தமி என்ற பட்டம் கிட்டும் என்பதற்காக நான் ஏன் பாடுபடவேண்டும். கொஞ்சமும் இரக்கமின்றி என்னைத் ‘தலைமுழுகிவிட’ அவருக்கு மனம் இடந்தந்தான பிறகு, நான் ஏன் சாதுவாக இருக்க வேண்டும்? இருந்துதான் நான் என்ன சுகத்தைக் காணப் போகிறேன்? எனவே, ஓர் புதிய உறுதியுடன் வீட்டுக்குள் பிரவேசித்தேன். உலகறிய என்மீது குற்றம் சாட்டி, அதற்கு ருஜு காட்டி, என்னை வீதியிலே விரட்டட்டும். அதுவரையில், இந்த வீட்டில் நான் ஆட்சி செய்வேன். அவரை ஆட்டிப் படைப்பேன் என்று திட்டமிட்டேன். வீட்டுக்குள் நுழைந்ததுமே, புதிய முறையில் வேலை துவங்கினேன். நான் உள்ளே வந்த போது அவர் வீட்டிலே இல்லை. அப்பா, என்னைத் தனியாக விட்டுப் போக விரும்பவில்லை. நானாகவே அவரைப் போகச் சொன்னேன். வேலைக்காரியைக் கூப்பிட்டேன். “எங்கே அவர்? எத்தனை மணிக்கு வெளியே சென்றார்? யார் கூடச் சென்றார்?” என்று மளமளவென்று கேள்விகளை அதிகாரத் தோரணையில் பூட்டினேன். அவ்வளவு உரத்த குரலிலேயும் முடுக்காகவும் நான் அதுவரை பேசி அவள் கேட்டதில்லை. ஆகவே அவள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டாள். ஒரு வேளை “பேய்தான் பேசுகிறது” என்று தான் எண்ணிக்கொண்டிருப்பாள்.

“என்னடி சமையல் இன்று?” என்று கேட்டேன். அவள் சொன்ன பண்டங்கள் யாவும் அவருக்குப் பிரியமானவை. உடனே அவைகளை மாற்றினேன். அவருக்குப் பிடிக்காத வெண்டைக்காயைக் குழம்பு வைக்கச் சொன்னேன். அவருக்குக் கொத்தமல்லித் துவையல் பிரியம்; அதைச் செய்யவேண்டாம் என்று உத்தரவு போட்டேன். கீரைத் தண்டு ஒரு பதார்த்தத்திலே சேர்ந்ததா என்று சலித்துக் கொள்வார் அவர். அதைக் கூட்டுச் செய்யச் சொன்னேன். அவருக்கு ‘இரசம்’ இல்லாவிட்டால் சாப்பாடு பிடிக்காது. அன்று அது தேவையில்லை என்றேன். தயிருக்குப் பதில் மோர், தலைவாழை இலைக்குப் பதில் பொத்தல் ஆல இலை, நெய் வாடை அடிக்கும் ‘ரகம்’. இப்படி சமையற்கட்டிலே என் போர் துவக்கப்பட்டது. சாப்பாடு தயாரானதும், வேலைக்காரியைப் பரிமாறச் சொல்லி சாப்பிட்டுவிட்டு, உள்ளே படுத்துக்கொண்டு, “நான் நாலுமணி நேரம் தூங்கி ஆகவேண்டும். இடையிலே எழுப்பாதே. தூங்கி எழுந்திருப்பதற்குள் காப்பி தயாராக இருக்கட்டும்” என்று உத்தரவு போட்டுவிட்டு, மெத்தை மீது வழக்கமாகப் போடுவதைவிட அதிகத் தலையணைகள் போட்டுக்கொண்டு, படுத்துக் கொண்டேன்.

பகல் ஒரு மணிக்குமேல் அவர் வந்தார். கூடத்திலே என் சாமான்கள் கிடந்தன. அதிலிருந்து தெரிந்து கொண்டிருப்பார், நான் வந்திருக்கிறேன் என்பதை. பைத்தியக்கார மனுஷர், நான் எந்தக் கோலத்திலே வந்திருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை.

“எங்கே ரங்கம்?” என்று வேலைக்காரியைக் கேட்டார். எங்கே ரங்கம்? முன்பெல்லாம், எதிரே நிற்பாள். கையில் தண்ணீர்ச் செம்புடன், முகத்தில் சந்தோஷத்துடன்; சாப்பிட்டிருக்க மாட்டாள்! எங்கே ரங்கம்? வந்து பாரேன்; இதோ இருக்கிறாள் ரங்கம்; வெல்வெட்டுத் தலையணை தலைக்கும் காலுக்கும் போட்டுக்கொண்டு, ஒய்யாரமாகக் கண்களைப் பாதி அளவுக்கு மூடிக்கொண்டு வெற்றிப் புன்னகையுடன் கட்டிலின் மீது படுத்துக் கொண்டிருக்கிறாள்! தூக்கம் பூரணமாக வரவில்லை, வரச் செய்கிறாள். பதினோரு மணிக்குச் சாப்பிட்டாள். கொஞ்சநேரம் கதைப் புத்தகம் படித்தாள். படித்தபடி தூக்கம் வருவது போலிருந்தது. புத்தகத்தை கீழே வீசி எறிந்தாள். எவனோ கதாசிரியன், உத்தமிகளின் இலட்சண விளக்கத்தை எழுதி இருந்தான் அதிலே. இதோ, படுத்துக்கொண்டிருக்கிறாள். எங்கே இருப்பாள் ரங்கம் என்று கேட்கிறாயே. எங்கே இருப்பாள். ஒரு செல்வக் குடும்பத்திலே பிறந்து, செல்வவானுக்கு வாழ்க்கைப் பட்டவள்? பகல் ஒரு மணிக்குத் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பாளா, நெல் குத்திக் கொண்டிருப்பாளா, அடுப்பு ஊதிக் கொண்டிருப்பாளா? வேலைக்காரி சமைத்தாள்; வேளையோடு சாப்பிட்டாள்; ஓய்வாகப் படுத்துக் கொண்டிருக்கிறாள். நாலு மணிக்கு எழுந்திருப்பாள்; காப்பி சாப்பிடுவாள், ஒரு அரைமணி நேரம் தோட்டத்திலே உலவுவாள்; பிறகு கோயிலுக்கோ, கோமளம், கோகிலம், குந்தளம் போன்ற சிநேகிதி வீட்டுக்கோ போய் வருவாள், பொழுதுபோக்காக! இப்படி எல்லாம் நான் கூறினேன். என் எதிரே இருந்த பெரிய நிலைக் கண்ணாடியில் தெரிந்த என் உருவத்துக்கு. அவர் கூடத்திலே வேலைக்காரியைக் கேட்டார் “எங்கே ரங்கம்!” என்று.

மகனே! முன்பு அவர் ‘எங்கே வேலைக்காரி?’ என்று என்னைக் கேட்பார். இப்போது வேலைக்காரியைக் கேட்டார், எங்கே ரங்கம் என்று. “அம்மா உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னாள் வேலைக்காரி. பிறகு அவள் தான் சாதம் போட்டாள். சமையற்கட்டிலே நடந்த சம்வாதம் எனக்குச் சங்கீதமாக இருந்தது.

“இதென்ன சனியன். வெண்டைக்காய் ஏன் செய்து தொலைத்தாய்?”

“அம்மாதான்…”

“என்னவாம் அம்மாவுக்கு? அம்மா! துவையல் எங்கே?”

“செய்யவில்லை.”

“செய்யவில்லையா?”

“ஆமாம். அம்மா வேண்டாம் என்றார்கள்.”

“இதென்ன பெரிய இழவு! இது என்ன வீடா, சுடுகாடா?”

“பேஷ்; சபாஷ்! அற்புதம்!” என்று கூறலாமா என்று தோன்றிற்று எனக்கு, அவருடைய பதைப்பான பேச்சைக் கேட்டு, எதையோ தூக்கிக் கீழே வீசுகிற சத்தம் கேட்டது. “நான் என்னங்க செய்வது? அம்மா…” என்று அழுகுரலில் வேலைக்காரி பேசுகிற சப்தம் கேட்டது. பிறகு கூடத்திலே வந்து உலவிக் கொண்டே பேசலானார், உன் அப்பா.

“இந்த வீட்டிலே மனுஷன் எப்படி வாசம் செய்ய முடியும்! பேயைப் பெண்டாகக் கொண்டால் இந்தக் கதிதான்” என்றார். சில விநாடிகள் பேச்சு இல்லை; காலடிச் சத்தம் மட்டும்தான் கேட்டது.

“மங்களம்! இதோ பார், இனி இங்கே இதுபோல நடக்கக்கூடாது!” என்றார். மங்களம் என்ன செய்வாள்? எஜமானி போடும் உத்தரவின்படி நடக்கவேண்டியவள்தானே! “அம்மா சொன்னாள், அம்மா சொன்னாள் என்று வீட்டைக் குட்டிச் சுவராக்கக்கூடாது. அம்மாவுக்கு இங்கே யாரும் இந்த அதிகாரமெல்லாம் தரவில்லை. தெரிகிறதா? இந்த வீட்டிலே என் இஷ்டப்படிதான் சகலமும் நடக்க வேண்டும். ஜாக்ரதை, தோலை உரித்துவிடுவேன்” என்றார் மிரட்டலாக. தோலை உரித்து விடுவேன் என்றாரே தவிர, யாருடைய தோலை என்பதைக் கூறவில்லை. கூறத் தைரியமில்லை. வேலைக்காரி பதில் ஏதாவது பேசினாலாவது அவர் கோபத்தை வெளியே கக்கிவிட்டு நிம்மதி அடைந்திருப்பார். அவள் பேசாமல் இருக்கவே அவருடைய கோபம் வலிவு அதிகரித்தது. அந்தக் கோபத்தை நாற்காலிமேல் காட்டுகிறார், விசிறியின்மேல் காட்டுகிறார், தெருக் கதவின் மீது வீசுகிறார், கடைச் சிறுவன் மீது காட்டுகிறார், தோட்டக்காரன் மீது போடுகிறார். கோபத்தை எங்கெங்கோ பாய்ச்சுகிறாரே தவிர, ரங்கத்தின் மீது வீசத் தைரியமில்லை. ரங்கம் உள்ளேதான் சயனித்துக் கொண்டிருக்கிறாள்; கூடத்திலே குதிக்கிறார், கூவுகிறார்; உள்ளே நுழைந்து ஒரு வார்த்தை கேட்க முடியவில்லை. கேட்டிருந்தால் எரிமலை வெடித்திருக்கும். நெடுநேரம் இவருடைய ‘திட்டு’களைக் கேட்டுக் கொண்டிருந்த வேலைக்காரி, “நான் யார் பேச்சைக் கேட்பது? அம்மா ஒரு விதமாகச் சொல்லுகிறார்கள், நீங்கள் அதற்கு நேர்மாறாகச் சொல்கிறீர்கள்; நான் யாருடைய அதிகாரத்துக்கென்று அடங்கி நடப்பது” என்று கெஞ்சும் குரலில் பேசினாள். ஐயோ பாவம், நம்மாலே அவளுக்குக் கஷ்டம் வருகிறதே என்று ஒரு விநாடி யோசித்தேன். பிறகு மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். சே! வேண்டுமானால், அவளுக்குத் தனியாகச் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அவள் கஷ்டப்படுகிறாள் என்பதற்காக நமது போர்முறையை மாற்றிக் கொள்ளக்கூடாது. இந்தப் போர் முறை வெற்றி தருகிறது. ஆகவே இதனைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டேன். தன் கோபத்தை எங்கு காட்டுவது என்று தெரியாது திண்டாடிய என் கணவர், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கடைக்குப் போய் விட்டார். முன்பெல்லாம் சாப்பிட்டானதும் மூன்று மணி வரையில் படுத்துத் தூங்குவார்; நான் காப்பி போட்டுக் கொடுத்தான பிறகுதான் போவார். சாப்பிட்டு அரைமணி நேரமாகவில்லை, ஓடினார் கடைக்கு; நான் ஒய்யாரமாகப் படுத்து உறங்கினேன். அவரும் நானும் பழைய நாட்களிலே ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தோமே, அப்போது எனக்கு இருந்த சந்தோஷம் ஒருவிதம். அவருடன் ‘போரிடுவது’ என்று திட்டமிட்டு, படை எடுப்பின் துவக்கத்திலேயே அவர் தோற்று ஓடினபோது நான் கொண்ட சந்தோஷம் வேறோர் விதமாக இருந்தது. எனக்கு இந்த இரு சந்தோஷங்களின் வகைகளை விளக்கச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இரண்டும் வேறு வேறு வகை என்பதில் மட்டும் சந்தேகமில்லை. இனிப்புப் பண்டங்களிலேயே, இனிப்பளிக்கும் முறையிலும், இனிப்பின் தன்மையிலும் வித்தியாசம் இல்லையா? அதுபோலவே, அந்த இருவகைச் சந்தோஷங்களிலேயும் வித்தியாசம் இருந்தது. காசி அல்வா தின்னும்போதும் இனிப்புதான்; கரும்பைத் கடித்துத் தின்னும்போதும் இனிப்புதான், என்றாலும் வித்தியாசம் இருக்கிறது பார் மகனே! அது போலிருந்தது. உத்தரவின்படி நாலு மணிக்கு வேலைக்காரி காப்பி கொடுத்தாள்; சாப்பிட்டேன்; குளித்தேன்; அதுவும் புது வழக்கம்! அலங்காரம் செய்து கொண்டேன்.

– தொடரும்…

– திராவிடநாடு, 1947.

– ரங்கோன் ராதா (நாவல்), முதற் பதிப்பு: 2002, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *