யார் தெய்வம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2022
பார்வையிட்டோர்: 2,355 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“டேய், சொக்கலிங்கம், எங்கேயடா கார்? கம்பெனிக்குப் போக நாழிகை ஆகிவிட்டதே!” என்று டிரைவரைக் கேட்டார் சங்கரலிங்க செட்டியார்.

“சின்ன எசமான் கொண்டு போயிருக்கிறார். இதோ அஞ்சு நிமிஷத்திலே வந்துவிடுவார்” என்று பதில் அளித்தான் சொக்கலிங்கம்.

“அஞ்சு நிமிஷமாவது, பத்து நிமிஷமாவது! அவன் எந்தச் சிநேகிதனை எங்கே கொண்டு போய்விடப் போயிருக்கிறானோ! கார் நமக்குச் சமயத்துக்கு உதவுகிறதில்லை; ஊராருக்கெல்லாம் உதவுகிறது. ஜம்பத்துக்கு நமக்கும் கார் இருக்கிறது, டிரைவர் இருக்கிறான் என்று சொல்லிக் கொள்கிறோம். இவன் என்னடா என்றால், பொழுது விடிந்தால் பொழுது போனால் காரை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றுவதும், ஊரார் கைங்கரியம் செய்வதுமாகவே இருக்கிறான். எப்படியாவது போகட்டுமென்றாலோ, மனசு கேட்க மாட்டேனென்கிறது. போகிற இடத்துக்கு டிரைவரைக் கூட்டிக்கொண்டு போனால் என்ன? சிறு பிள் ளைத்தனம், கண் மண் தெரியாமல் ஓட்டுகிறானாம். அந்த ‘ஸ்டீயரிங்’கைக் கையிலே பிடித்தாலே எல்லாப் பயல் களுக்கும் ஒரு வெறியல்லவா வந்து விடுகிறது ? நாள் தவறாமல் கார் விபத்து என்ற சமாசாரம் பத்திரிகையில் வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குப் பகீர் என்கிறது ….”

“சின்ன எசமான் வந்துவிட்டார்” என்று டிரைவர் இடையிலே அவர் பிரலாபத்தை நிறுத்தினான்,

“வந்துவிட்டானா? எங்கே, இப்படிக் கூப்பிடு.”

ராமமூர்த்தி வந்தான். கட்டிளங்காளை. ஒய்யாரமான கோலம். வாட்ட சாட்டமான மேனி.

“என்ன, கூப்பிட்டீர்களா?”

“ஆமாம்; இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?”

“என் சிநேகிதன் ஒருவனைப் பார்க்கப் போயிருந்தேன்,”

“தினமும் இந்தச் சிநேகிதர்கள் தாமா? போகிறது தான் போகிறாயே, இந்தச் சொக்கலிங்கத்தை ஒட்டச் சொல்லி அழைத்துப் போகக் கூடாதா?”

“அவனுக்கு ஓய்வு வேண்டாமா?”

“அவன் இங்கே என்ன, இருபத்துநாலு மணி நேர முமா கார் ஓட்டுகிறான்?”

“நம் காரை நாமே ஓட்டுவதில் எத்தனையோ நன்மை உண்டு”

“நன்மை உண்டு என்று சொல்லுகிறாயே ஒழிய, அதில் இருக்கிற தீமையைத் தெரிந்து கொள்ளவில்லையே! பல வருஷம் டிரைவராக இருந்தவனெல்லாம் பிளாட் பாரத்தின் மேலே வண்டியை ஓட்டி ஆட்களைச் கொலை பண்ணிவிடுகிறான். நீ இன்னும் சரியாகக் கார் விடக் கற் றுக்கொள்ளவில்லை. ஏதாவது ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது?”

“அப்படி யெல்லாம் முட்டாள் தனமாக நான் நடந்து கொள்வேனென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?”

“முட்டாள் தனமா? ஆனைக்கும் அடி சறுக்கும் என் பார்களே! அப்படிப் போதாத காலமாக இருந்து ஏதா வது நேர்ந்தால் ஆபத்து , அவமானம், நஷ்டம் எல்லாம் வந்து விடுமே!”

“என்ன இப்படி ஒரே காபராப் படுகிறீர்களே; உல கத்தில் கார் வைத்திருக்கிறவர்களெல்லாம் தாங்களே ஓட்டுவதென்பது வழக்கமாக வந்து விட்டது இப்போது நீங்கள் கர்நாடகமாகப் பேசுகிறீர்களே! உங்கள் பேச்சை யாராவது கேட்டால் சிரிப்பார்கள்.”

சங்கரலிங்க செட்டியார் கர்நாடகப் பேர்வழி என் பது வாஸ்தவந்தான். ஆனாலும் அவர் பயப்பட்டதற்குக் காரணமும் இல்லாமற் போகவில்லை. டிரைவர் சொக்க லிங்கமே சொல்லியிருக்கிறான், “சின்ன எசமான் கையிலே காரு காத்தால்ல போவுது” என்று. அவன் ஆச்சரியப் பட்டுச் சொன்னான். செட்டியாருக்கோ அடிவயிற்றில் பகீரென்றது. ராமமூர்த்தி காரைக் கொஞ்சம் உற்சாகத் தோடு ஓட்டுவான். தனக்குப் பின்னால் யாராவது குழல் ஊதினால் போதும்; லேசிலே அவனுக்கு இடம் கொடுக்க மாட்டான். இந்த வெறி எப்படியோ குதிரை வண்டிக்காரன் முதல் கார் ஓட்டுகிறவர் வரையில் எல்லோருக்கும் பொதுவாகப் போய்விட்டது.

அன்று காலை சரியாக ஆறு மணி இருக்கும். அவசர அவசரமாக யாரையோ பார்ப்பதற்காகக் காரிலே புறப் பட்டான் ராமமூர்த்தி. ஐந்து மைல் போகவேண்டும். பத்து நிமிஷத்தில் போய்விடலாம், ரோட்டில் தடையில் லாமல் இருந்தால். அவன் வேகமாகப் போனான். இரண்டு மைல் போயிருப்பான், முன்னால் ஒரு குதிரை வண்டி போய்க்கொண்டிருந்தது. எதிரில் இருந்து ஒரு மொட்டை வண்டி மூங்கிற் கழிகளைப் பாரமாக ஏற்றிக்கொண்டு வந் தது. குதிரை வண்டிக்கு அருகில் கார் வரும்போது வலப் பக்கத்தில் மூங்கில் வண்டி வந்து விட்டது. வண்டிக்காரன் நேராக ஓட்டாமல் வண்டியை ஒடித்தால் மூங்கில் வழியைத் தடுத்துவிடும். ஆகவே அவன் கண்ணை மூடிக் கொண்டு நேரே ஓட்டினான்.

எப்படி நேர்ந்ததென்று தெரியாது; முன்னே போன குதிரை வண்டியின் மேல் கார் மோதிவிட்டது. குதிரை முன்னாலே தள்ளப்பட்டுக் கீழே விழுந்தது. வண்டிக் குள்ளே இருந்தவர்கள் கீழே விழுந்தார்கள்.

ராமமூர்த்தி ‘பிரேக்’ போட்டான். காருக்கு அவ் வளவு சேதம் இல்லை. ஆனால் இதுவரைக்கும் இத்தகைய விபத்து நேர்ந்ததே இல்லை. அதுவும் அன்று காலை நேரத் தில் யாரோ ஒரு காலேஜ் மாணவிக்கு உபகாரம் செய்வதற்காக அவன் போய்க்கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. வேர்த்து வெலவெலத்துப் போயிற்று.

மூங்கில் வண்டிக்காரனும் அவனுடன் இருந்த கூட் டாளியும் இறங்கி வந்துவிட்டார்கள். குதிரை வண்டிக் காரனும் வந்துவிட்டான்.

வண்டியிலிருந்து விழுந்தவர்கள் இரண்டு மூன்று பேர் . யாரோ ஒரு பெண்; இருபத்தைந்து வயசு மனிதன் ஒருவன்; மற்றொரு கிழவன். அவர்களுக்குப் பலமான அடி இல்லாவிட்டாலும் கொஞ்சம் சிராய்த்து விட்டது.

ராமமூர்த்தி கூட்டத்தைக் கண்டதும் அதிகமாகப் பயந்துவிட்டான்; எப்படித் தப்புவது என்று தோன்றவில்லை. சில நிமிஷ நேரம் அவன் நரக வேதனையை மானசிகமாக அநுபவித்தான். மெதுவாகக் குதிரை வண்டிக்காரனைக் கூப்பிட்டான். பத்து ரூபாய் நோட்டை அவன் கையில் அழுத்தினான். “அவர்கள் எங்கே போக வேண்டும்? கேட்டுச் சொல். இந்தக் காரிலேயே கொண்டு போய் விட்டு விடுகிறேன்” என்றான்.

ரூபாய் கையில் வந்தவுடன் வண்டிக்காரன் கோபமெல்லாம் எங்கேயோ ஓடி ஒளிந்து விட்டது. “அது கிடக்குது ஐயா! நீங்க வேணுமுன்னா வந்து மோதினீங்க? அந்த மூங்கி வண்டி வராட்டி நீங்க ராச பாட்டையாப் போயிருப்பீங்க” என்று சொல்லி, “நீங்க போங்க. அவங்களை நான் பார்த்துக்கிறேன்” என்று தைரியம் கூறினான். ராமமூர்த்தி மறு பேச்சுப் பேசாமல், தலை தப்பியது வியமென்று வீட்டுக்குக் காரைத் திருப்பி விட்டான். வரும்போது அவனுக்கு எவ்வளவோ யோசனை. ‘விழுந்தவர்கள் ஏன் நம்மிடம் வந்து ஒன்றும் பேசவில்லை அவர்கள் யாராவது போலீஸ்காரனுக்குச் சொல்லிவிட்டால் என்ன செய்வது?’ என்றெல்லாம் அவன் மனசு உதைத்துக் கொண்டது. அன்று ராத்திரி முழுவதும் அவனுக்குத் தூக்கமே இல்லை.

பிறகு நாலு நாள் காரின் முன் ஹீட்டில் கூட அவன் உட்காருவதில்லை. ஏதாவது கேஸ், கீஸ் வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். தகப்பனாருடைய வாக்குப் பலித்துவிடுமோ என்ற எண்ணம் வேறு. பிறகு அவர் முன் தலை காட்டுவது எப்படி?

ஒரு வாரம் ஆயிற்று. ஒரு நாள் சாயங்காலம் வீட்டு வாசல் பக்கத்தில் உள்ள மேடைமேல் அமர்ந்து கொண்டிருந்தான் ராமமூர்த்தி. அப்போது யாரோ இரண்டு பேர் காம்பௌண்டுக்குள் நுழைந்து வந்தார்கள். ஆண் பிள்ளை ஒருவன்; பெண் பிள்ளை ஒருத்தி; அந்த ஆள் கையில் ஏதோ சிறிய கூடை வைத்திருந்தான். அந்தப் பெண்ணைப் பார்த்தால் எங்கேயோ கண்டமாதிரி இருந்தது. நினைத்துப் பார்த்தான் ராமமூர்த்தி. ‘ஆம், குதிரை வண்டியிலிருந்து விழுந்த பெண்தான்!’ அவனுக்கு மூச்சே ஒரு கணம் நின்று விட்டது.

“யார்?” என்று வாய் கேட்டது. மனமோ நடுங்கியது.

வந்தவன் ஒன்றும் பேசவில்லை. நேரே நெடுஞ்சாண் கிடையாக ராமமூர்த்தி காலில் விழுந்தான். பிறகு கூடையிலிருந்து வெற்றிலை பாக்குப் பழம் எடுத்து அவன் முன் வைத்தான். “ஹூம்! நீயும் உளுந்து கும்பிடு” என்று அந்தப் பெண்ணை ஏவினான். அவளும் வணங்கினாள். ராமமூர்த்திக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவன் பிரமையைப் போக்க அந்த ஆளே முன் வந்தான்.

“சாமி, எங்க அத்தை புருசன் சொக்கலிங்கம் சொன்னாரு, எசமான் தான் அந்தக் காரு ஓட்டினவருன்னு” என்று ஆரம்பித்தான்.

“அண்ணைக்கித் தெய்வம் மாதிரி நீங்க காரை இடிக்கங் காட்டியும் அந்தக் கெயவனுக்குப் புத்தி வந்துதுங்க. மறுநாளே இவளைக் காசுக்கு வித்துப்புடறதுன்னு கொண்டு போனானுங்க.”

“என்னா இப்படிச் சொல்றே? அவங்க ஏதாச்சும் நெனச்சுக்கப் போறாங்க.”

“பின்னே என்ன எசமான்? தாயில்லாப் புள்ளெயேத் தகப்பன் காரன் நல்லா வளத்து, அது இஸ்டம் போலக் கட்டிக் குடுக்கிறது நாயமுங்க. எவனோ ஒருத்தன் தன்னைக் காட்டியும் கௌவன், அவனுக்குப் பணம் இருக்குதுன்னு கொண்டு போய்த் தள்ளிடுறதுங்களா? அது என்னாங்க, யோக்கியமான காரியமா? வெலைக்கு விக்கிறமாதிரி இல்லேங்களா? சாமிக்கே பொறுக்கல்லே. வண்டி யெக் கொடெ சாச்சுப் பிடுத்துங்க. நீங்கதான் தெய்வமா வந்து ஒதவினீங்க.”

அவன் உற்சாகத்தில் தலைப்பு, நடு ஒன்றும் தெரியா மல் பேசினான். ராமமூர்த்திக்குத் தெளிவாகவில்லை,

“ஆமாம்! அந்தக் குதிரை வண்டியிலே இந்தப் பெண் எங்கே போனாள்?” என்று கொஞ்சம் தைரியம் பெற்றுக் கேட்டான்.

“அதுதானுங்க, இதோட தகப்பன்காரனும் சித்தப்பன்காரனும் சேந்துக்கிட்டுப் பண்ணின ரோசனைங்க. இவ தாயார்க்காரி போன வருசத்துக்கு முந்தின வருசம் பூவுங் குங்குமமுமாப் போயிட்டா. அவ இருக்கச் சேலே இவளை எனக்குக் கொடுக்கணு மின்னு பேச்சு இருந்துதுங்க. அப்பாலே பாருங்க, இந்தக் கெயவனுக்குக் காசாசை வந்திடுச்சு. அவன் தம்பிக்கு மச்சானாம் ஒரு கெயவன்; அவன் கிட்டே கொண்டு போய்த் தள்ளப் போனாங்க. அந்த மவராசி தெய்வமாயிருந்து தன்னோடெ ஆசையை நெறைவேத்திக்கினா.”

“விசயத்தே நல்லாத்தான் சொல்லேன்” என்றாள் அந்தப் பெண்.

“இன்னும் என்னாத்தைச் சொல்லுறது? வண்டி உயுந்ததும் கெயவனுக்குப் புத்தி வந்தது. சித்தப்பன் காரன் ஒபதேசம் பலிக்கல்லை.”

“ஆமா! நான் செஞ்சதையும் சொல்லேன். எனக்கு அப்பிடித் தோணாட்டி இதெல்லாம் நடக்குமா?” என்று மறுபடியும் அந்தப் பெண் பேசினாள்,

“இவ பெருத்த கில்லேடிங்க. அந்தக் கெயவன் இவ கிட்டே அம்பிடாமே தப்பிச்சிக்கினான். அது கெடக்குது. இவ ஒரு தந்தரம் பண்ணினா பாருங்க. கீயே உயுந்து எயுந்திருந்த உடனே அம்மா ஒன் வாக்குப் பலிச்சுதுன்னா. அதென்ன வாக்குன்னு அப்பன் காரன் கேக்க, நேத்துச் சொப்பனத்திலே அம்மா வந்து நான் பாத்துக்கிறேன், பயப்படாதேன்னு சொன்னதாக இவ சொல்ல, அதை அந்த அப்பாவி நெசமான் காட்டியுமுன்னு நம்பிக் கிட்டான்.

“அப்பாலே தம்பி பேச்சு காதிலே உயலை. சாமி எங்களைப் புருசன் பொஞ்சாதியா ஆக்கிட்டுது. எல்லாம் நீங்க நட்ட மரமுங்க.”

“அது சரி; நான் தான் அன்று வண்டியில் மோதினவனென்று உனக்கு எப்படித் தெரியும்?”

“அதென்ன அப்பிடிச் சொல்றீங்க? இந்தப் பொண்ணு அங்க அடையாளம் சொல்லிச்சு. எங்க அத்தை புருசன் உங்களைக் காட்டியிருக்காரு வண்டி யோடே மாதிரியும் இவ சொன்னா. கண்டு பிடிச்சிட்டேனுங்க. நல்லா ஆசீர்வாதம் பண்ணுங்க.”

அவன் மறுபடியும் தன் காலில் விழும் பொழுது ராமமூர்த்திக்குத் தன் கண்களையும் காதுகளையும் நம்பவே தோன்றவில்லை.

– பவள மல்லிகை (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *