மைதானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 14,384 
 

காகம் குருவிகூடப் பறப்பதாகத் தெரியவில்லை, அவ்வளவு அமைதியாக வெளிச்சோடிக் கிடந்தது அந்த வீதி. நேரம் என்னவாக இருக்கும், பத்துமணியைத் தாண்டி இருக்குமோ? மணிக்கூட்டினைப் பார்க்கின்றேன், வெளிர்நீல கண்ணாடியிலான ஒறிஜினல் மொண்டியாவில் சரியாக பத்துமணிக்கு ஜந்து நிமிடம் இருக்கின்றது. நான் நினைத்துவந்த நேரம் சரியாக இருந்ததில் மனதாரத் திருப்திப்பட்டுக் கொண்டேன்.

பாடசாலைக் கேற்றைத் தாண்டும் பொழுது, எனக்குள் ஒரு வேகத்தை ஏற்படுத்திக் கொண்டு, எதோ தற்செயலாக பஸ்ஸைத் தவறவிட்டதுபோல் பாசாங்கு செய்தபடி, அலுவலகத்துள் நுளைகின்றேன்.

அலுவலகத்துள் நுளைவதற்கு முன்பே அதனை நுணுக்கமாக அவதானித்துவிட்டேன். அதிபர் பரபரத்துக் கொண்டு மணிக்கூட்டைப் பார்ப்பதும் கேற்றைப் பார்ப்பதுமாக இருப்பது தெரிகிறது. நான் அதனை அவதானிக்காதது போல

“சேர் பஸ்ஸைத் தவறவிட்டிட்டன் அதுதான் பிந்திப்போச்சு……..”

வார்த்தைகளை முடிக்காமல் இழுக்கின்றேன்.

“தம்பி…… நடந்தது தெரியுமோ? அந்த மலசலகூடத்தை ஆரோ உடைச்சுப்போட்டினம்”.

நான் பிந்திவந்ததோ அதற்கான காரணமோ பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், உடைக்கப்பட்ட மலசலக்கூடம் பற்றியே அவரது கவனம் இருந்தது. ஏற்கனவே நான் எதிர்பார்த்திருந்த செய்திதான். ஆனால் இப்பொழுதுதான் அறிவதுபோல் வியப்பினைக் காட்டிக்கொண்டேன்.

“சேர்… ஒருக்காப் பார்ப்போமோ?… “ என்று கேட்கிறேன்.

“சரி தம்பி வாரும் பார்ப்பம்” என்றபடி அலுவலகத்தைவிட்டு வெளியேறுகின்றார் அதிபர்.

கட்டையாக வெட்டப்பட்ட கேசங்கள் தலையை மேவி நேர்த்தியாக வாரிவிடப் பட்டிருக்கின்றன. இளநரையுடன் கூடிய கட்டை மீசை, ஜந்தடியைத் தாண்டாத உயரம், காகத்தின் மினுமினுப்புடன்கூடிய கறுப்பு நிறம். புன்முறுவல் தவழும் வதனம், கலகலப்புடன் ஆனால் வார்த்தைகளை அளந்து, தேவையான தொனியுடன் பேச்சுக்கலை பயிலும் மாணவர்களுக்குரித்தான அக்கறையுடன் பேசும் சுபாவம் உள்ளவர்தான் அதிபர், இன்று முகத்தில் புன்முறுவல் இல்லை. வார்த்தைகள் வெளிவரத் தயங்குகின்றன.

அதிபரின் உள்ளக்கிடக்கையினை எற்கனவே அறிந்தவன் என்றவகையிலும், அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்தவன் என்னற வகையிலும், நிலைமையினைத் தெரிந்துகொண்டு அமைதியாகப் பின்னே செல்கின்றேன்.

இரண்டாவது பாடவேளை, வகுப்புகளில் பாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.சில வகுப்பறைகளில் ஆசிரியர்கள் வரவில்லைப் போலும் சத்தம் போட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் அதிபரைக்கண்டு அமைதியாகின்றனர். ஒரு சில ஆசிரியர்கள் பாடம் நடத்துவதுபோல் பாசாங்கு செய்தாலும் என்னையும் அதிபரையும் நோட்டம் விட்டபடியே இருக்கின்றனர்.

இரண்டாவதாக இருந்த ஆரம்பப்பிரிவு கட்டிடத்தொகுதிக்குப் பின்புறம்தான் விளையாட்டு மைதானம் அமைந்திருந்தது. உண்மையில் விளையாட்டு மைதானத்திற்குரிய இடத்தில் முக்கால்வாசிப்பகுதியும் பற்றை மண்டிக்கிடந்தன. அவற்றில் காட்டு நெல்லிகள், விண்ணாங்கு, பூநாறி, சூரை, என்பனவும் பெயர் தெரியாத அப்பிரதேசத்திற்கே உரிய தாவர இனங்கள் மதத்துவளர்ந்திருந்தன. இடையிடையே இரண்டு மூன்று பாலை, முதிரை மரங்களும் நெடுத்துநின்று நிழல் கொடுத்துக்கொண்டிருந்தன. இப்பற்றை பற்றி இதுவரை யாரும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லை வேலிமட்டும் கவனமாக முட்கம்பிகளால் நன்கு சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.

கடந்த பத்து வருடங்களாய் இப்பாடசாலையில் விளையாட்டுப் போட்டிகளோ, விழாக்களோ நடைபெறவில்லை என்பதையும, எப்படியும் இந்தத் தவணைக்குள் விளையாட்டுப் போட்டியை நடாத்தும் தனது எண்ணத்தினைக் கூறி, ஆசிரியர்களின் விருப்பத்தினையும் ஒத்துழைப்பினையும் வழங்கவேண்டி நின்றார் அதிபர். வழமையாக திங்கட்கிழமை இடைவேளைக்கு முன்பு நடைபெறும் ஆசிரியர் கூட்டத்திலேயே இவ்விடயம் பிரஷ்தாபிக்கப்பட்டது.

க.பொ.த. உயர்தரம் வரையிலான வகுப்புகள் உள்ள, சுமார் 500க்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட மகா வித்தியாலய தரத்திலான பாடசாலையில் 16ஆசிரியர்கள் உள்ளனர். அதில் ஆங்கில ஆசிரியர் உட்பட பத்துபேர் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் நான்குபேர் மட்டும் புதிதாக நியமனம் பெற்றுவந்த ஆசிரிய தராதரம் உள்ள ஆசிரியர்கள், இருவர் தொண்டர் ஆசிரியர்கள், அதிபரின் கோரிக்கையை அடுத்து ஆசிரியர்கள் மத்தியில் ஒரே அமைதி. நான் எல்லோர் முகங்களினையும் பார்க்கின்றேன். இரண்டொரு ஆசிரியர்கள் முகங்களில் நக்கல் கலந்த சிரிப்பொன்று காணப்படுகிறது. அவர்கள் பற்றிய கணிப்பு ஒன்று எனக்கு ஏற்கனவே உண்டு. நாம் பாடசாலைக்கு வந்தபுதிதில் வகுப்பறைக்கு ஒழுங்காய் போவது, வகுப்பறையில் கற்பித்தல் தொடர்பான பிரச்சனைகளை இடைவேளைகளில் கலந்துரையாடுவதை அவதானித்த அந்த ஆசிரியர்,

“தம்பிமார் புது விளக்குமாறு நல்லாய்க் கூட்டும்”.

என்று கிண்டலடித்தது நல்ல ஞாபகம். இவ்விடயம் ஆரம்பத்தில் எமக்குப் பெரிய மனப்பாதிப்பினை ஏற்படுத்தியதுண்டு. ஆசிரியர் என்பவர் மதிப்புக்குரியவர், அவரது சேவை மகத்தானது என்று நினைத்து நடப்போரை மதித்து உற்சாகப்படுத்தி, தக்கசமயத்தில் வழிகாட்டவேண்டிய மூத்த ஆசிரியர்கள் கிண்டலடிப்பதும் சலிப்பூட்டுவதும் புரியாத புதிராகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் அவர்களின் மனப்போக்கினைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களைப் பொறுத்தமட்டில் வருமானமும் தமது சுய முன்னேற்றமுமே பிரதானமானது. மாணவர்களைப் பொறுத்தவரை படியாத மாடுகள், வேலை வாங்கமட்டுமே லாயக்கானவர்கள், படிப்பு என்பது ஜென்மத்திற்கும் கிட்டாத விஷயம், எனவே இவ்வாறான முடிவில் உள்ளவர்களுக்கு முன்னர, நாம் சாதிப்போம் என்று நம்பிக்கையுடன் உழைப்பது, பொரிமாத் தோண்டிகளின் கதைபோல் மூடத்தனமாகவே தென்பட்டிருக்கவேண்டும்.

புதிதாக நியமனம் பெற்றவர்கள் என்னுடன் மூன்று பேர்கள், நாம் எதாவது கதைத்தால் கற்றுக்குட்டிகளுக்கு என்ன தெரியும் என்பதுபோல் மீண்டும் நக்கல் பார்வைக்கும் ஏளனத்திற்கும் ஆளாகவேண்டிவரும் என்பது தெரிந்ததால், புதிதாகவந்த அதே ஊரைச்சேர்ந்த கணித ஆசிரியரைப் பார்க்கின்றேன். அவர் இரண்டு வருடத்திற்கு முன்புதான் பயிற்றப்பட்ட கணித ஆசிரியராகி, யாழ்ப்பானத்தில் உள்ள பிரபல்யமான பாடசாலையில் சேவையாற்றிய அனுபவத்துடன், சொந்த ஊருக்கு மாற்றமாகி வந்துள்ளார். அவர் இளமைத் துடிப்பும், பாடசாலையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை பலசந்தர்ப்பங்களில் வெளிக்காட்டி உள்ளர். அவர் என்னைப் பார்க்கிறார். நான் பதிலுக்குச் சமிக்கை காட்டுகிறேன்.

கணித ஆசிரியர் எழுந்து “சேர் நீங்கள் விரும்புகிறவாறு இந்தத்தவணையில் விளையாட்டுப்போட்டியைச் சிறப்பாக நடத்த வேண்டும். எமது ஆதரவு எப்பவும் உங்களுக்குக் கிடைக்கும்”. என்று தனது ஆதரவுக்கு அடையாளமாக கைதட்டி ஆரம்பித்துவைத்தார். எனது நண்பர்களும் தொடர்ந்து கைதட்ட, மூத்த ஆசிரியர்களும் மூன்று நான்கு பேர்கள் தொடர்ந்து கைதட்டி அதிபருக்கு ஆதரவாக நிலைமை மாற்றப்பட்டது. மீதிப்பேர் ஒன்றும் செய்யமுடியாமல் மௌனமாக இருந்தனர்.

அதிபர் எமது பாடசாலைக்கு வருவதற்கு முன்பு பயிற்றப்பட்ட விளையாட்டுத்துறை ஆசிரியர் மட்டுமல்ல, யாழ்மாவட்ட விளையாட்டு போட்டிகளின் பொறுப்பாளராகவும் இருந்த அனுபவம் வாய்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிபரே தொடர்ந்து பேசினார்.

“நீங்கள் எனது கோரிக்கையை ஏற்று விளையாட்டப்போட்டியை நடாத்தச் சம்மதமென்றால் உங்களில் இருந்து ஒருவரை விளையாட்டுப்போட்டிக்குப் பொறுப்பான செயலாளரைத் தெரிவு செய்யுங்கள்”.

அதிபர் மீண்டும் பந்தை எம்மீதே வீசினார். தக்க தருணம் சில வினாடிகள் தாமதித்தாலும் நிலைமை தலைகீழாக மாறலாம் எனவே, நான் எழுந்து கணித ஆசிரியரை விளையாட்டுச் செயளாலராகப் பிரேரிக்கின்றேன் என்று ஆரம்பித்து வைத்தேன். சொல்லி வைத்தாற் போல் நண்பர் ஒருவர் அதனை வழிமொழிந்தார். எல்லோரும் கைதட்டி முழு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது. கணித ஆசிரியர் எழுந்து புதிய பிரச்சினையை எழுப்பினார். எமக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதாவது தனக்குத் தனித்துச் செய்யமுடியாதெனவும் இன்னொருவரும் தன்னுடன் இணைச் செயலாளராகச் சேர்ந்தால் செய்யமுடியும் என்றும் கோரிக்கை வைத்தார். தக்க சமயத்தில் அதிபரே வழியைக்கண்டுபிடித்து, என்னை இனைத்துக்கொள்ளுப்படி கேட்டுக்கொண்டார். உடனே நண்பர்களில் ஒருவரும் ஆங்கில ஆசிரியரும் பிரேரித்து வழிமொழிந்தனர். நானே தொடங்கிவைத்தது மறுக்கமுடியவில்லை. இப்போது விளையாட்டுப்போட்டி நடாத்தும் பொறுப்பு என்மீதும் சுமத்தப்பட்டுவிட்டது. இவ்வாறு அன்று கூட்டம் நிறைவெய்தியது.

அன்று மாலையே நாங்கள் அதிபருடன் விளையாட்டுப் போட்டி நடாத்துவதுபற்றி ஆலோசித்தோம். அப்பொழுதுதான் விளையாட்டு மைதானம் சிறிதாக இருப்பதாகவும் பற்றைகளை வெட்டி விஷ்த்தரிக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இல்லங்கள் பிரித்தல், ஆரம்பக்கட்ட நிர்வாக நடவடிக்கைகள் எனப் பிரஷ்தாபிக்கப் பட்டது. போட்டி விதிகள், படிவங்கள் யாவற்றுக்கும் அதிபரே பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஒரு வெள்ளிக்கிழமை சிரமதான நாளாகப் பிரகடனப்படுத்தி, மாணவர்கள் கத்தி, கோடரி, மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் பற்றைவெட்டுவதற்கும், விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும் வரும்படி அதிபர் அறிவித்தல் வழங்கினார். அதன்படி சிரமதானம் ஆரம்பித்து பற்றைகள் வெட்டும் பணியில் மாணவர்கள் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதே நேரம், நாம் அதிபருடன் 400 மீற்றர் அளவுடைய மைதானம் அமைப்பதற்குள்ள சாத்தியப்பாடுகள் பற்றி, அளவுநாடாவுடன் ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

அனேகமாக நாம் நினைத்தது போல் 400 மிற்றரில் மைதானம் அமைக்கக் கூடிய இடம் போதுமான அளவு இருந்தது. இது எனக்கு ஏனோ மகிழ்ச்சியைத் தந்தது. இதற்கு ஒரு காரணமும் உண்டு. விளையாட்டுப் போட்டிகள் நடாத்துவதுபற்றி முடிவுசெய்தபின், ஒரு மூத்த ஆசிரியர்

“இஞ்ச எங்க மைதானம் இருக்கு, சும்மா புலுடா விடப்போறாங்கள்”

என்று, இன்னொரு ஆசிரியருடன் கதைத்தது, எனது காதில் விழுந்ததுதான். அன்றே நான் நினைத்துக் கொண்டேன், யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்யமான பாடசாலைகள் தரத்திற்கு ஒரு போட்டியை ஏற்பாடு செய்து, நடாத்திக் காட்டுவதென.

கிணறுவெட்டப் பூதம் கிளம்பிய கதைபோல, மைதானத்தின் நடுவில் கைவிடப்பட்ட மலசல கூடம் ஒன்று பற்றைக்குள்ளிருந்து தலை நீட்டியது. மாணவர்களில் ஒருவன் ஓடிவந்து என்னிடம்தான் முதலில் கூறினான். சென்று பார்த்தபோது, எனது மைதானக் கனவு சுக்குநூறாகியது போலவே தென்பட்டது. அதிபருடன் அவ்விடத்தைச் சுற்றிப்பார்த்தோம். ஒரு சில நிமிட அமைதியின் பின்பு அதிபர் கூறினார்,

“தம்பி இது மைதானத்திற்கு இடைஞ்சல்தான், இருப்பினும் எமக்கு உடைக்கும் அதிகாரம் இல்லை. அனுமதி பெறுவதாயின் எப்படியும் ஒரு மாதத்திற்கு மேல் எடுக்கும்”.

அதிபரைப் பொறுத்தவரையில் அவர் கூறியது, முற்றிலும் உண்மையானதே. முறைப்படியான அனுமதி இல்லாமல் உடைக்கப்பட்டால், அதிபர் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டும். சிலவேளை பென்சன் இல்லாமல் அல்லது வேலை இல்லாமலும் போகலாம். இப்படியானவற்றுக்கான முன்னுதாரணங்கள் நிறையவே உண்டு. பலாலி ஆசிரிய கலாசாலையில பட்டுப்போன மரத்தினை, அனுமதி இன்றி வெட்டியமையால் அதன் அதிபர் கொடுத்த விலை மிகமிக அதிகமாகும்.

இணைச்செயலாளர் உட்பட எனது நண்பர்களுக்கு முகம் வாடிவிட்டதை அவதானித்தேன். எனக்கும்தான் ஆனால் நான் வெளிக்காட்டவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை அப்பொழுதே தீர்மானித்து விட்டேன். அது அதிபரைப் பாதிக்காமல் சட்டப்பாதுகாப்பும் செய்யப்பட வேண்டும் என்பதையும் முடிவுசெய்து விட்டேன். இவையாவும் எனக்குள் நான் மௌனமாக எடுத்த முடிவுகள். நண்பர் யாருடனும் கலந்துரையாடவில்லை.

“சேர் இதை நடுவில் விட்டு மூடி மறைத்துக்கட்டுவம், இல்லாட்டில் வேறு ஒரு பக்கத்தில் மைதானத்தைச் சிறிதாக அமைப்பம்”.

என்று அதிபரிடம் கூறினேன். செய்வதறியாது குழம்பியிருந்த அதிபருக்கு இப்பொழுதுதான் ஒரு வழிகிடைத்த நிம்மதி, எனது கருத்தை ஆமோதித்தார். ஆனால் நண்பர்களுக்கோ மாணவர்களுக்கோ எனது கருத்துப் பிடிக்கவே இல்லை. முகத்தைச் சழித்துக்கொண்டனர். அதில் தமது எதிர்ப்பினைக் காட்டுபவர்களை நான் அவதானிக்கத் தவறவில்லை. அதிபருடன் நான் கதைத்த சில நிமிடங்களில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று என்னையே ஏசிக்கொண்டனர். இவை எல்லாம் எனக்கு விளங்கிய போதும் விளங்காதது போல் அவ்விடத்தில் நின்றேன்.

மைதானத்தின் மத்தியில் மலசலகூடம் கண்டுபிடிக்கப்பட்டபின் சிரமதான வேலைகள் அனைத்துமே ஸ்தம்பித்துப் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். நேரமும் பதினொரு மணியைத் தாண்டி விட்டது. வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போகும் ஆசிரியர்கள் பன்னிரண்டரை மணிக்கு வெளிக்கிடும் நேரம். எனவே அத்துடன் சிரமதானம் நிறுத்தப்பட்டு, அடுத்த செவ்வாய்க்கிழமை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

மைதானத்தில் மாணவர்களைத்திவிர வேறுயாரும் இல்லை. நான் தனித்து அந்த மலசல கூடத்திற்கு அருகில் செல்கின்றேன்.

“யார் இந்த மலசலகூடத்தைக் கண்டுபிடித்த கொலம்பஸ் வீரன்”

என்று மாணவர்களிடம் வினவுகின்றேன். மாணவர்கள் எனது வினாவிற்கு வேண்டா வெறுப்பாக இரண்டொரு மாணவர்களை அடையாளம் காட்டுகின்றனர். அவர்களை அழைத்த நான்,

“கண்டுபிடித்ததுதான் நீங்கள் செய்த குற்றம். அதற்குப் பிராயச்சித்தமும் நீங்களே தேடிக் கொள்ளுங்கள்”.

அதற்குமேல் நான் எதுவும் பேசவில்லை. அவ்விடத்தை விட்டு அகன்று விட்டேன். இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியரின் செயலா இது? எனக்குள்ளே ஆயிரம் கேள்விகள்.

மாணவர்கள் பயன்படுத்த முடியாது இடிந்து எச்சமாக இருக்கும் மலசல கூடம், மாணவர்கள் மகிழ்ச்சியாக விளையாடும் மைதானத்துக்கு நடுவில் இடைஞ்சலாகவும் அசிங்கமாகவும் காட்சியளிக்க விட்டு, பாதுகாப்பதுதான் ஆசிரியரின் கடைமையா? உதவாத சட்டத்தை உயர்த்திப் பிடிப்பதால் யாருக்கு லாபம். வேணுமானால் “கண்டறியாத விளையாட்டுப்போட்டியாம்” என்று கிண்டல் செய்யும் கூட்டத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

சட்டங்கள், விதிகள் இருக்கின்ற வளங்களைப் பாதுகாக்கவோ? மேலும் விருத்திசெய்யவோ? பயன்பட வேண்டும் இல்லாமல் சீரழிப்பதற்குப் பயன்படக் கூடாது. சென்ற வருடம் பாடசாலைக்குப் புதிய கிணறு அமைக்கும்போது இப்பிரச்சினை மேற்கிழம்பி, இறுதியில் பயன்படாத சட்டம் தூக்கி வீசப்பட்டது நல்ல உதாரணம்.

பாடசாலையில் பழையகிணறு ஒன்று ஏற்கனவே உண்டு, ஆனால் கோடைகாலத்தில் கிணற்றில் ஒரு சொட்டு நீர்தானும் இருக்காது. கோடைகால வெய்யிலில் நீர் இல்லாமல் மாணவர்கள் அயல்வீடுகளுக்குச் சென்று, ஏச்சும்பேச்சும் வாங்கியும் படும்பாடு சொல்லும் தரமன்று. அதனால்தான் புதிய கிணறு வெட்ட நிதி ஒதுக்கப்பட்டு, வேலை ஆரம்பிக்கும் போது, மீண்டும் பழைய கிணற்றின் விட்டத்திலேதான் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இது யாழ்மாவட்டத்திற்கு ஆக்கப்பட்டது, கிளிநொச்சி மாவட்டத்தின் தரை அமைப்பு, நீரூற்றுக்கள் என்பன வேறானவை. யாழ்மாவட்டத்தில் நீரூற்று கீழிருந்து மேலெழும்புவன ஆனால் கிளிநொச்சியில் நிலக்கீழிருந்து பக்கங்களால் கசிவன, என்ற யதார்த்தத்தினை யாருக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இதுபற்றி விளக்கி எழுதிய அதிபரின் கடிதத்திற்கு எல்லாம் பதில் ஒன்றேதான்.

அச்சமயத்தில் எதோ விடயமாக கிளிநொச்சிக்கு வந்த, கல்விப்பணிப்பாளரை அதிபர் அழைத்துவந்து, பழைய கிணற்றினைக்காட்டியபோது அவர் வியந்துபோனனார். மேலும் கிணற்றுள் வவுசர்மூலம் நீர் நிறைக்கப்பட்டே, அனுமதி பெறப்பட்ட ரகசியத்தினையும், பாடசாலை அயலில் உள்ள நலன்விரும்பி ஒருவர் கூறியபோது, பணிப்பாளரால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. சட்டம் எப்படி ஏமாற்றப்படுகிறது என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்.

அன்றே பணிப்பாளர் புதிய உத்தரவு பிறப்பித்தார். பொறியியலாளர் நேரில்வந்து, நீர்ப்பாசன இலாகாவுடன் சேர்ந்து புதிய திட்ட வரைபினைத் தயாரிக்க வேண்டும் என்று, அதன்படி கிணற்று விட்டத்தின் அளவு அதிகரிக்கப்பட்டது, ஆனால் நிதி அதிகரிக்கப்படமாட்டாது என்று புதிய சிக்கல் தோன்றியபோது, பாடசாலை அபிவிருத்திச் சபை, மீதி நிதியைப் பொறுப்பேற்று, சிரமதான மூலமே கிணறு வெட்டப்பட்டமை இன்றும் பசுமையாக உள்ளன.

ஆசிரியத் தொழிலை, பாடசாலையை, மாணவர் நலனை நேசிப்பவர் என்ற வகையில், செய்யும் காரியம் என்னவென்ற அறிவுடன், தேவையில்லாத சட்டத்தையும் காலதாமதத்தையும் தவிர்ப்பதற்கு எடுத்த முடிவு. ஆணி அடிக்கவேண்டிய இடத்தில் அடிக்கப்பட்டாயிற்று. வெள்ளிக்கிழமை மாலையே மலசல கூடம் தகர்க்கப்பட்டிருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதுதான் திங்கட்கிழமை பிந்திவந்தேன்.

“தம்பி இஞ்சபாரும்”

அதிபர் எனக்குக் காட்டுகின்றார். பாழடைந்த மலசல கூடம் தரைமட்டமாக்கப் பட்டிருந்தது, அதுவும் நேர்த்தியாக. மைதானம் அமைப்பதில் இனிமேல் எந்தப்பிரச்சனையும் இருக்காது. நானை சிரமதானத்தினைத் தொடரலாம் என்று கணக்குப் போட்டுக் கொள்கின்றேன். அதிபருக்காக வியப்பினைக் காட்டிக்கொள்கின்றேன்.

“சேர் விதானைக்குச் சொல்லி, லொக்கிலை எழுதியிட்டு பொலிசிலையும் என்றி போட்டிட்டு, சீயோவுக்கும் சொல்லுவம். அவர் சொல்லுறபடி என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வம் சேர்”.

என்று நான் அதிபரிடம் சொல்லுகின்றேன். அதிபரும் அப்படித்தான் ஜோசித்திருக்க வேண்டும். உடனடியாகவே அனைத்துச் சம்பிரதாயங்களும், அன்று மாலைக்குள் நிறைவேற்றப்பட்டன.

“நீங்கள் இடத்தைச் சுத்தப்படுத்தி மைதானத்தை அமையுங்கோ, என்றிக் கொப்பியை லொக்கிலை ஒட்டிவையுங்கோ”.

என்று சீயோ சொன்னபின்னர்தான் அதிபர் வழமையான நிலமைக்கு வந்தார். இதுவரை அவரது நிம்மதியைக் கெடுத்தமைக்காக நான் அவரிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

அடுத்தநாள் சிரமதானம் நடக்கும்போது, நண்பர்களுக்கு என்ன நடந்தது என்பது கசியத் தொடங்கிவிட்ட போதிலும் யாரும் நேரடியாக என்னிடடம் கேட்கவில்லை. நானும் அதுபற்றி மூச்சும் விடவில்லை.

திட்டமிட்டபடி விளையாட்டுமைதானம் 400 மீற்றரில் அமைக்கப்பட்டது. மிகச் சிறப்பாக அனைத்துப் போட்டிகளும் ஒழுங்கமைக்கத்தொடங்கினோம். மாணவர்கள் மூன்று இல்லங்களாக வகுப்புப் பதிவுப்புத்தகத்தின் ஒழுங்கின்படி பிரிக்கப்பட்டன. மேலும் வயதுப்பிரிவுகள் யாவும் எம்மாலேயே வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டு பிறந்த திகதியும் எழுதப்பட்டு மூன்று இல்லத்துக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டன. மேலும் யார் யார் எந்தப் போட்டிகளில் பங்குபற்றுகிறார்கள் என்பதின் பிரதிகளும் எல்லா இல்லங்களுக்கும் வழங்கப்பட்டன. இதன் மூலம் எந்தவிதமான ஆள்மாறாட்டங்களும் செய்யமுடியாமல் நேர்மையாகவும் நம்பகத்தன்மையுடனும் திறமைக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டது. எந்த விடயங்களும் மறைத்து வைக்கப்படாமல் சகலரது பார்வைக்கும் வைக்கப்பட்டதோடு, போட்டி முடிவுகளும் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு, புள்ளிகள் பதியப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டது.

பத்து வருடங்களுக்கு முன்பு அம்மன் கோவில் திருவிழாவில், இரு சமூகத்து இளைஞர்களுக்கு இடையில் நடைபெற்ற கைகலப்பு பின்னர் வன்மமாகமாறி அடுத்து திருவிழாவில் பழிவாங்கவதற்குச் சதித்திட்டம் தீட்டவைத்தது. சமாதானம் ஆவதுபோல் நடித்து, இணைந்து நாடகம் போடுவதாகப் பயிற்சியிலும் ஈடுபட்டனர். திருவிழா அன்று நாடகம் மேடையேற்றப்பட்டது. சண்டைக்காட்சி மிகத்தத்துரூபமாக இருப்பதாகச் சபையோர் கைதட்டி ஆரவாரித்தனர். ஆனால் உண்மையில் நடந்தது கொடூரம். உயர்சாதி எனச்சொல்லிக் கொள்வோர் உண்மையான வாளுடன் மேடையிற் தோன்றி அப்பாவிகளை, மக்கள் பார்த்துரஷிக்கக் கொலைவெறியாடினர். ஆறுபேர் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அம்மன் சந்நிதானத்தில் சாதித்திமிருக்கு நரபலி கொடுக்கப்பட்டது.

அன்றுடன் நின்ற விழா எமது பாடசாலை விளையாட்டுப்போட்டியுடன் மீண்டும் ஆரம்பமாகின்றது. ஆனால் பழையபகை அதுவும் கொலைப்பாதகம் எமக்குப் பயம் இருக்கத்தான் செய்தது. புதிய தலைமுறையிடம் வைத்த நம்பிக்கையே, எமக்குத் துணிச்சலைக் கொடுத்தது, இருப்பினும் முன்னேற்பாடாக எதாவது செய்யவேண்டும் என்று ஜோசித்தோம். அப்போதுதான் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரை அழைப்போம் என்ற கோரிக்கை பெற்யோரால் முன்வைக்பட்டமை ஏற்றுக்கொள்ளப்படது. பிரதம அதிதி பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் பொலிசாரின் பாதுகாப்பினைப் பெறுவதும் எமக்கு இலகுவாகவும், காரணம் சொல்ல வசதியாகவும் போய்விட்டது.

குறித்த தினத்தில் எவ்வித குழறுபடிகளும் இன்றி, மிகச்சிறப்பாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பிரதம அதிதி தமது உரையில், மிகவும் பின்தங்கிய ஒரு விவசாயக் கிராமத்தின் யாழ்நகரப் பாடசாலைக்குச் சமமாக அனைத்து அம்சங்களும் அமைந்திருந்தமையினப் பாராட்டினார். அதிபரினால் பயிற்சி அளிக்கப்பட்ட, உடற்பயிற்சிக் கண்காட்சியினை வியந்து பாராட்டிப் பேசினார். மேலும் அவருக்கு கிராமத்தின் பிரச்சினை தெரியும் என்பதால், கிராம மக்களும் அயற்கிராம மக்களும் மகிழ்ச்சியாகக்கலந்து சிறப்பித்தமையினையும் பாராட்டினார்.

ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னர் சொல்லமுடியாத ரகஷியங்கள் புதைந்திருக்கும் என்பது என்னவோ இவ்விடயத்தில் நூறுவீதம் பொருந்தியிருந்தது. தம்மிடம் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை மாணவர்கள் கண்டுகொள்ளவும், தமது சகாக்களுடன், ஆசிரியயர்களுடன், சமூகத்துடன் ஆரோக்கியமான உறவினை வளர்த்துக் கொள்ளவும் அன்றைய விளையாட்டுப்போட்டி களம் அமைத்துக் கொடுத்தது என்றவகையில் என்நினைவுகளில் இன்றும் பசுமையாகவே.

அழகுற அமைக்கப்பட்ட மைதானமும் அதன் ஒருபக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப் பட்டிருந்த இல்லங்களும் அந்த மாலைவேளையில் ரம்மியமாகக் காட்சியளித்தன. எம்முடன் முரண்பட்ட மூத்த ஆசிரியர்கள் பொறாமையினையும் பகைமையினையும் மறந்து, மிகவும் நேர்மையாகவும் சிறப்பாகவும் போட்டிகள் நடைபெற்றமையினைப் பாராட்டி, அன்றைய மகிழ்ச்சியிலும் பின்னர் நடைபெற்ற இராப்போசனத்திலும் பங்குபற்றி நட்பினைப் பரிமாறிக் கொண்டமை நாம் எதிர்பார்க்காத சாதனையேதான். விளையாட்டின் மூலம் எவ்வளவோ சாதனைகளைச் செய்யலாம் என்பதற்கு எமது பாடசாலை விளையாட்டுப் போட்டி, சிறந்த ஒரு உதாரணமாகக் கனகாலம் அவ்வட்டாரத்தில் பேசப்பட்டுக்கொண்டே இருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *