மேய்ப்பர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 12, 2021
பார்வையிட்டோர்: 10,792 
 
 

எனது தந்தையின் பிறந்த தினத்தை நினைவிருத்தி (29.08.1926 – 08.12.1995) அவரது ‘மேய்ப்பர்கள்’ சிறுகதையை அனுப்புகிறேன் – நன்றியுடன் நவஜோதி


”என்னா மொதலாளிங்க மவனா? அடிபாவி, மோசம் போனேடி. நாசப் படுத்திற மொதலாளிங்களாலதான் நாமெல்லாம் இந்தக் கேடுகெட்ட நாத் தச் சீவியத்துக்கு ஆளாயிருக்கோம்’டி. அதெப் புரிஞ்சுக்காம மொதலாளி வமிசத்தையா நம்பினே? டியே, மொதலாளிங்க ஆதாயம் பாக்காமக் கருமாதி பண்ணாங்கடி”

“ஏ புள்ள காவேரி,அந்தாளு அந்தால வந்து இம்புட்டு நேரமாக் காத்துக்கிட்டிருக்கு. நீயி என்னா செஞ்சிக்கிட்டிருக்கே? எந்திரிச்சுப் போ புள்ள”

“என்னாத்தே சொல்றே? அவரு காத்துக்கிட்டிருந்தா நம்பளுக்கென்ன வவுத்து வலி? அந்தப் பரிசு கெட்ட சமாச்சாரங்களுக்கெல்லாம் நானு ஒருக்காலும் சம்மதிக்கமாட்டேங்’கிறேன்”

“இம்புட்டுக் காலமா கண்டிப் பட்டணத்துச் சாலையோரங்கள்ல கெடக்கிறவங்க சிவியம் இன்னும் பரிசு கெடாம இருக்குதென்னு நெனப்பா? இப்ப என்னா புள்ளே ‘பரிசு கெடுறென்’கிற சமாச்சாரத்தெப் புதுசாப் பேசுறே?”

“ஆத்தாஞ்சி,நீயி எம்புட்டு நாக்கு வளைச்சுச் சொன்னாலும் உம் மனசு சம்மதிக்காது. எனக்கு உந்தச் சள்ளும் வாணாம் கிள்ளும் வாணாம். இனிமே உப்பிடியான பேச்சை வுட்டுத் தள்ளாத்தே. இதுக்கு நா சம்மதிக்க மாட்டேங்’கிறேன்”

“அடி மூதி,இத்தின வாட்டியும் நம்ப மனசு சம்மதிச்சா எங்க சிவியம் நடந்திட்டு வருது? ‘கண்டித் தெவிச்சு முடுக்கே கதி’யின்னு வந்து கெடக்கிறமே,இதும் நம்ப மனசு ஒத்தா நடக்குது புள்ளே?”

“அப்புடீன்னா,தோட்ட லயத்தேவுட்டுக் கண்டிப் பட்டணப் பக்கமா ஏன் கூட்டியாந்தே?”

“நீயி அதக் கேக்றியா?”

“ஆமா’ன்னே”

“தோட்டங்கள எடுன்னு நம்ம சங்கத்தாக்களுங்க கேட்டாங்க. ‘அது சரி’ன்னுதான் நாம் நெனச்சோம்,ஆனா,எடுத்தவுங்க பெரிய பெரிய வெளித்தோட்டங்களை வுட்டுப்புட்டு சின்ன ஊர்த் தோட்டங்கள எடுத்து மறுவாட்டியும் அதிகாரிங்கட கைக்கு மாத்தினாங்க. தோட்டங்களை எடு’ன்னு கேட்டது மொதலாளிங்களுக்குப் பொறுக்கலே. அதெச் சாட்டா வச்சு,எடுத்த தோட்டத்தில செஞ்சுண்ட நம்ப வேலைய நிப்பாட்டி,நம்பளையெல்லாம் லயத்தை வுட்டே தொரத்திட்டாங்க. இப்போ இப்படி ஆச்சு”

“அதுக்காவ,பொண்ணாப் பொறந்தவங்க மானம் மருவாதிய வுட்டுடறதா’ங்கறேன்!”

“நம்பளாட்டம் கொழும்பு கண்டிச் சாலையோரங்கள்ல வந்து கெடக்கிற பொண்ணுங்கல்லாம் ஆளுக்கு நாலு ஆம்பொடையாங்களப் புடிச்சு வச்சுக்கிட்டுச் சீவிக்கிறா. அவளுகளுக்கு இல்லாத மானம் மருவாதியா நம்பளுக்கு வேணும்கிறே?”

“என்னமோ,நானு அதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்”

“ஒன்னப்போல நானு மானம் மருவாதியப் பாத்திருந்தா,நீயி இம்புட்டு பெரிய பொண்ணாட்டம் கண்ணுக்கு ஆசையா வளர்ந்திருப்பியா?”

“அதுக்கு இப்ப என்னா வந்துட்டுது’ங்றேன்?”

“வேளை வந்தாப்பல விலையும் வந்துட்டுதடி. ‘மாட்டேன்’னாம எழுந்திரிச்சுப் போ புள்ளே. நா சொல்லித்தான் அந்தாளு வந்து காத்துக்கிட்டிருக்காரு”

“அங்…ங்ஙங்க்…”

“என்னது,நா சொல்லிக்கிட்டிருக்கேன். நீயி மூக்கால சிணுங்கிக்கி;ட்டிருக்கே?”

“ஆத்தாஞ்சி,நீ என்ன சொன்னாலும் எம்மனசு ஒத்துக் கொள்ளலே”

“ஏ புள்ளே,நாம பாவம்’னு ஆசையோட வந்து அப்பப்ப ஒதவி செஞ்சுக்கிறவங்களையும் ஒதறிவுட்டோம்’னா,அப்புறம் நம்ப வாய வயித்துப் பசிக்கு எங்கடி போறது?”

“ம்ம்…”

“ஏன்டி பெருமூச்சு வுடறே? இதிலே என்னடி கொறைஞ்சிரப்போவுது’ங்றேன்?”

“ஆத்தாஞ்சி,என்னை அலட்டிக்காதே. வோணும்’னா ஒன்னு செஞ்சுக்கோ”

“என்னது?”

“இம்புட்டுக் காலமா நியி எப்புடி நடந்துக்கிட்டியோ,இப்பவும் அப்புடி நடந்துக்கோ. நாவோணாம்’கலே. அதே வுட்டுட்டு இன்னிக்குப் புதுசா என்னையப் புடிச்சு உசிர வாங்கிக்காதே?”

“ஆமாண்டி புள்ளே,நீ நெசத்தத்தாண்டி சொல்லிப்புட்டே,ஆம்பொடையாங்க மனசு எப்பவும் புதுசு’ங்கள்லதாண்டி தாவும்,அதுக்காவத்தான் அந்தாளு இன்னிக்கு ஒனக்காவ இப்புடி வந்து நிக்கிறாரு. வவுத்துச் சோத்துக்குப் பணங்காசு தர்றவங்கல்லியா? எந்திரிச்சுப் போ புள்ளே”

“ஆத்தாஞ்சி,இனிமேப்பட்டு இந்த எழவுப் பேச்சை ஏங்கூட வச்சுக்காதே. நீ ஏம்மனசை இன்னும் புரிஞ்சுக்கலே. அதான் மானம் மருவாதி பாக்காம மனசுக்கு ஒப்பாத வெசயத்தெயெல்லாம்,‘பண்ணுடி’ ‘பண்ணுடி’ன்னு அனுமார் புடியிலே நிக்கிறே”

“அனுமார் புடியிலே இப்ப யாரு நிக்கிறா? சரி,நீயி அறுதியா என்ன சொல்றே?”

“இதுக்கு நான் மாட்டேன்’னா மாட்டேன்”

“ஏ கழுதே. நீயி உசிரோட சீவிக்க ஒனக்கு ஆசையில்லையாடி?”

“அப்புடி நடந்துதான் சீவிக்கணும்’னா கண்டி வாவி ஆத்தில வுழுந்து செத்துப்புடறேன். சம்மதமா?”

“ஏன்டி இந்தாட்டம் பேசுறே? சரி ஒன் மனசுக்க என்னதான் நெனச்சுக்கிட்டிருக்கே; அதெயாச்சும் சொல்லேண்டி?”

“நானு ஒருத்தரே ஏம் மனசுக்குள்ளே வச்சுண்டிருக்கேன். அவரைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப்போறேன்”

“ஹ ஹ…அடி ஆத்தே,இது என்னா புதுமையடி?”

“என்னது,உப்புடிப் பரிகாசமாக் கொட்டிக் கொமட்டிச் சிரிக்கிறே?”

“பொழைக்கத் தெரியாத மோட்டுப் புள்ளே. தெவிச்சி மூடுக்குங்கள்லே கெடக்கிற ஒன்னை எந்த ராஜாடி கல்யாணங் கட்டிக்கப் போறான்? நெனச்சுப் பாரடி,ஒனக்கே சிரிப்பு வரும்?”

“ஆ… அவரு பேரும் ராஜாதான். சரியா ஒன் வாயாலயே சொல்லிப்புட்டே. நெசம்மா அவரைத்தான் கட்டிக்குவேன்”

“அதாரடி அந்த ராஜா’ங்கறேன்?”

“சங்கரப்புள்ள கம்பனி மொதலாளியட மூத்த மவன். ‘ராஜா’ன்னு பேரு”

“என்ன,மொதலாளிங்க மவனா? அடி பாவி,மோசேம் போனேடி. நாசப்படுத்திற மொதலாளிங்களாலதான் நாமெல்லாம் இந்தக் கேடுகெட்ட நாத்தச் சீவியத்துக்கு ஆளாயிருக்கோம்’டி. அதெப் புரிஞ்சுக்காமப்போயி மொதலாளி வமிசத்தையா நம்பினே? டியே,மொதலாளிங்க ஆதாயம் பாக்காமக் கருமாதி பண்ணாங்கடி”

“சும்மா போவாத்தே. நீயி,சிங்கள மொதலாளி- துலக்க மொதலாளிங்க மாதிரி இவரெ நெனச்சுக்கிட்டே. இவரு நம்ப ஆளு. ஒன்னை ஏமாத்தின சிங்கள – துலுக்க மொதலாளிங்களாட்டம் இருக்க மாட்டாரு”

“அடி மூதி. ‘சீனி’ண்ணா நாக்கு இனிக்காதடி. மொதலாளிங்க எந்த ஆளென்னாச்சும் ஒரே சாம்புளாத்தாண்டி நடந்துக்குவான். என் அனுபவத்தே முன்னாடி நீயே சொல்லுப் புட்டியே,அப்புறம் என்ன பேச்சு’ங்கிறேன்”

“நீயி ஒன்னமாதிரி நெனச்சுக்காதே ஆத்தா. நா அவரெக் கட்டிக்கி;ட்டு ராஜாத்தியாட்டம் இருப்பேன்; இருந்து ஒன் கண்ணால பாத்துக்கோ”

“இருப்பேடி இருப்பே. கண்ணாண ஒனக்குப் புத்தி கெட்டுப் போச்சு. சரி செஞ்சுக்கோடியம்மா,செஞ்சுக்கோ”

ழூழூழூழூழூழூழூழூழூழூ

“ஏ தங்கம்மாளு,ஏது ராத்திரி முழுக்க ஒன் பொண்ணு காவேரி கூட சச்சரவு பண்ணிண்டே. என்னா சமாச்சாரம்?”

“அதெ ஏன் மாரியாத்தே கேக்கிறே? ‘கண்ணுன்னு லச்சணமா வளர்ந்துட்டேங்’கிற நெனப்பாலே அவளுக்கு இந்தார எடுப்பு. அதான் அவ மூளையக் கெடுத்துப் பூட்டுது. நானோ வவுத்துப் புள்ளக்காரி. சம்சாரிக் இனிமே ஒடம்பு எடம் குடுக்குமா?

“நீ சொல்றது நெசந்தான். ஆனா,பொண்ணு ஒத்துக்காட்டி நாம என்னா பண்றது?”

“அப்புடீன்னா சாப்பாட்டுத் தீனிக்கு எங்கிட்டுப் போறது? இம்புட்டு நாளா இச்சைப்படுறவங்களுக்கெல்லாம் வகை சொல்லி அடிச்சுண்ட தேகம்டி. ஆனா,மேலைக்குத் தாங்குமா’ங்கிறேன்”

“தோட்டத்தே வுட்டுக் கௌம்பினப்போ அந்தடியலா இந்தியாவுக்குப் போறப்பட்டிருக்கலாமில்லையா?”

“போட்டுக்கச் சட்டை,படுத்துக்க எடம்,உடுத்துக்கத் துணி,மூட்டிக் காச்சிக்க அரிசி – ஒண்ணுக்குமே வழியத்து நாதியா வந்த நாம இந்தியாவுக்குப் போறத நெனக்க முடியுமா? ஒருத்தன் கூப்பன் கேக்கிறான்; அடுத்தவன் போட்டோ’ங்கறான்; இன்னொருத்தன் ‘ பாஸ்போட்’ மட்டை கொண்டா’ங்கறான். நா இதுக்கெல்லாம் எங்க போறது – என்னா பண்ணுறது? ஒண்ணுமாப்புடிபடல்லே”

“நெசந்தாண்டி. ‘தொட்டங்கள் எடுத்துக்கிட்டாத் தொல்லை தீரும்’னாங்க. இப்ப என்னென்னா,தொல்லை தீர்றத்துக்கே வழியக் காணோம்”

“ஆமா,புதுசா நேத்து ராத்திரி வந்தாரே,அந்த ஆளுவட எப்புடிச் சகவாசம் வச்சுண்டே?”

“ ஒரு நாளு கூட்டத்தோட கூட்டமா வந்து,சாவடி ஓரமா,ஒரு ஓட்டல் ஸ்தோப்பபில ஒதங்கிட்டம். ஒரு சாமத்தில் ஓட்டல் மொதலாளி வெளிய வந்தாரு வந்தாரா,வந்து,‘ஏய்,எழுந்துக்கோ,தூங்கிக்க வேறு எடமில்லையா? எழுந்திரிச்சுப் போயிருங்க’ன்னு மொறைச்சாரு. மொறைச்சாரா,நா அருண்டு முழிச்சுண்டேன். அவரு உள்ளே போயி,வாளி நெறயத் தண்ணிக் கொண்டாந்து ஸ்தோப்புப் படியிலே அடிச்சு ஊத்தினாரு. ஊத்தினாரா,இதெப் பாத்துண்டிருந்த எதிர்க்கடைத் துலுக்க முதலாளி நீனு நம்மக் கடைத் தாவரத்தில வந்த படுத்துக்கோ’ன்னு எடங்குடுத்தாரு. குடுத்தாரா,அப்புடி அண்ணெக்கு எடங் குடுத்தவருதான். அப்புறம் அன்னேலிருந்து அந்தச் துலுக்க மொதலாளிதான்…”

“என்னா’ங்கறே? துலுக்கன் கூடவா சகவாசம் பண்ணிண்டே?”

“சும்மா போ மாரியாத்தா,தோட்டங்கள்ல நம்ப இந்துக் கங்காணிங்கதான் இருந்தாங்க. அந்தக் கங்காணிங்களுக்கு இயங்கினாத்தானே ஒழுங்கா வேலை குடுப்பான்? இந்தச் சமாச்சாரம் ஒனக்குத் தெரியாதா? அந்த வெசயத்தில முத்துமாரியம்மன் கண் முழிச்சாலும் நம்ப இந்துக் கங்காணிமாரு எரக்கங்காட்டமாட்டான். வெள்ளைக்காரத் தொரைகூடச் சேந்துகிட்டு இந்துக் கங்காணிங்க பண்ணிக்கிட்ட கொடுமையாலதான் நம்பளுக்கு இந்தக் கதி’ங்கிறேன். ஆனா,இந்தாளு ‘துலுக்கன்’னா ச்சும் சும்மா கெடக்கிற நம்பளுக்கு எம்புட்டு ஆசையோட ஒதவுறாரு தெரியுமா?”

“ஆளு புடிச்சா மனசும் புடிக்கும் மனசு புடிச்சா ஆளு விலகாது’ங்கிறே; என்ன,அப்புடித்தானே?”

“அது நெசந்தான் மாரி. ஆனா,அந்தாளு இப்பல்லாம் ஒர மாதிரி விலகிடுமாப் போலப் பேசிக்கிட்டு வர்றாரு”

“அடியாத்தே,அதேன்டியம்மா அப்புடி?”

“இப்ப,அந்தாளுக்கு நம்ப பொண்ணு காவேரி மேலே ஒரு கண்ணு வுழுந்துட்டுது. அதூன் வெசயம்”

“அட பாவியாண்டானே! ஏன்டி அப்புடிப் புத்தியப் புரட்டிப்புட்டான்?”

“அப்புடித் திட்டிக்காதே. ஆராரோ வந்தாக் வந்தாப் பல போனாங்க. ஆனா,இந்தாளு வுட்டுடலே. நானு அந்தாளுக்கு ரண்டாம் வாட்டி வவுத்துப்; புள்ளக் காரியாயிட்டேன். அப்புறம் அந்தாளு காவேரிய நெனச்சுண்டு ஒருநாளு வாய்வுட்டே கேட்டுப்புட்டுது. எனக்கு மறுத்துச் சொல்ல மனசு வரல்லே. இம்புட்டுக் காலமா வவுத்துப் பசியத் தீத்த மனுஷனில்லையா? ஆனா,நம்ப பொண்ணு காவேரி சத்தெக்கும் மாட்டேன்’னு மறுத்துட்டா. காலத்தெ அறிஞ்சு நடந்துக்க அவளுக்குத் தெரியலே. ஏதோ மானம் மருவாதின்னு புதிசாப் பேசிக்கிறா.”

“மூளை கெட்ட பொண்ணு. இத்தாரி ரோசினை வந்துட்டா,இனிமெ அவ உருப்பட்டாப்பலதான்”

“ஒண்ணுமில்ல மாரி,அவளுக்கு வேற ஒரு ரோசினை தொட்டுண்டுது”

“என்னாது?”

“ராஜா’ன்னு ஒருத்தரு. சங்கரப்புள்ள கடே மொதலாளிங்க மூத்த மவனாம். அவர்லே இவ மனசு வச்சுட்டாளாம். அவரெக் கட்டிக்கப் போறாளாம்.”

“டியே தங்கம்மாளு,சாமி சத்தியமா இந்தப் பேச்சைக் கேட்டாச் சிரிப்பாத்தான் வருது. இது சொப்பணத்திலயும் நடக்கிற காரியமா’ங்கிறேன்”

“அப்புடித்தான் நானும் எடுத்துச் சொல்லிப் பார்த்தன். அவ கேக்கிறதாக் காங்கலே. இந்த ஆசைய அவ தன்னில மூட்டிண்டு,தன்னால அழிஞ்சிடப் போறா. நீதான்அவளுக்குப் புரியும்படியாச் சொல்லி வழி காட்டணும்’கிறேன்.”

“என்னயி என்னா பண்ணச் சொல்றே?”

“நம்ப நெலவரத்தெ எடுத்துச் சொல்லி,அவ மனசை மாத்திட்டீன்னா,அப்புறம் நான் பார்த்துக்கிடறேன்.”

“சரி,காளியாத்தாள வேண்டிண்டு முயற்சி பண்ணிக்கிறேன்.”

“காவேரி,என்ன சங்கதி? நீ வந்த காரியத்தைக் கவனியாமல்,மாடியப் பாத்திட்டு மிலாந்திக்கொண்டு நிக்கிறாய்?”

“ஆமா தொரே,இம்புட்டுப் பெரிய வூடு’ங்கிறதெ நீங்க ஏங்கிட்டச் சொல்லலியே? ‘பளிச்சுப் பளிச்’சென்னு கண்ணாடிப் பளிங்காட்டமின்னா கெடக்குது?”

“அது கிடந்திட்டுப் போகட்டும். நீ இஞ்சால வந்து பாத்றூமுக்க

போய்,சவுக்காரம் போட்டுக் குளிச்சிட்டு வா.”

“நானு எங்காத்தா கூட நேத்து ராத்திரி தெவிச்சி மொடக்குப் பைப்பில குளிச்சுப்புட்டேன் தொரே”

“அதுக்கென்ன பரவாயில்லை. இப்பயும் ஒருக்காக் குளிச்சுப்போட்டு,இந்தச் சட்டையையும் சீலையையும் உடு.”

“சரி,ஆகட்டுங்க.”

“என்ன சங்கதி,விடுப்புப் பாக்கிற மாதிரி உடுப்புகளைப் புதுமையாகப் பாக்கிறாய்?”

“ரொம்ப ஜோரா இருக்குங்க தொரே,”

“அப்பிடியா? அது சரி,இப்பிடிச் சீலை சட்டைய,நீ உன்ர சீவியத்தில கண்டிருப்பியே?”

“இல்லீங்க. ஆத்தா பாவம்,அது என்னா பண்ணும்? வேல வெட்டி இல்லாமத் தெருத் திண்ணயிங்கள்ல கெடக்கிற ஜென்மங்க’ன்னு ஒங்களப் போல எரங்கி ஆரு ஒதவுவா? இம்புட்டு நாளா இப்புடி ஒருத்தரும் மனமாக குடுக்கலே. குத்தவங்ககூட ஆத்தாவுக்குக் கந்தல் ஊத்தயத்தான் குடுத்தாங்க. இந்தாட்டம் புத்தம் புதுசா ஒருத்தரச்சும் குடுக்கல.”

“உன்ர கொப்பர் எங்க இருக்கிறார் ?”

“கொப்பர்’னா?”

“உன்ர அப்பா.”

“ஓ…அப்பாங்களா? முந்தி ஒரு வாட்டி எங்கப்பாவக் ‘கள்ளத் தோணி’ன்னு புடிச்சுண்டு போனாங்களாம். அந்தால அவரு லயத்துக்கே திரும்பி வரல்லே’ன்னு ஆத்தா சொல்லிக்கினும். நானு அப்போகுஞ்சுப் புள்ளே. எனக்கு என் அப்பாவச் செம்மளாத் தெரியாதுங்க”

“அப்ப,உன்னாட ரண்ட சகோதரங்கள் இருக்கே. அதெப்பிடி?”

“ஹி…..ஹி….ஹி…”

“என்ன,உப்படிச் சிரிக்கிறாய்?”

“அப்புத்தளயில இருக்கிறபோ,அந்த ரவுண் கடைச்சாப்பு முதலாளி பொடிமாத்தயா’ங்கிறவரு ஆத்தாவுக்கு ஒதவினாரு. அப்புறம் வுட்டுட்டாரு. ஆப்ப நல்ல செவப்பா ஒரு தம்பி பொறந்திச்சு”

“அந்தத் தம்பி இப்ப எங்க?|

“போன வருஷ வாக்கில ஒரு நாளு ஒரு ஒட்டல் ஓரமாக் கெடந்த தீனுத் தொட்டிக்குள் அந்தத் தம்பி சோத்து இல பொறுக்கிட்டிருக்கப்போ,தொட்டிக்க சறுக்கி வுழந்து மண்டை பொளந்து ரத்தம் ரத்தம்மா ஓடிச்சு,ஒரு கெழமையால அதுவும் செத்துப் பூட்டுதுங்க”

“அப்படியா சங்கதி. அதை நினைச்சு இப்ப ஏன் வீணாய் அழுகிறாய்? சரி சரி,நீ இனி அழாதை. அதை மறந்திட்டு இனி உன்னைப்பற்றி யோசி”

“தொரே,ஏம் மனசுக்குள்ளே ஒண்ணுதோணுண்டுது. அதெ ஒங்க கிட்டச் சொல்லோணும்’னு இம்புட்டு நாளா நெஞ்சிலே நெனச்சுக்கிட்டிருக்கேன்”

“என்ன சங்கதி. இருந்தாப்போல பெரிய குண’;டொன்றைப் போடுறாய்? ‘சட்’டெண்டு சொல்லு”

“நா ஓங்கமேலதான் மனசு வச்சிருக்கேன். ஒங்களக் ‘கட்டிக்கணும்’கிறதாலே ஆத்தா பண்ணிண்ட கூத்துக்கெல்லாம் எடம் குடுக்காம,அதான் இப்பவும் ‘சுத்தமா’ இருக்கேன்”

“அஹ…ஹ ஹ…ஹி ஹி…”

‘‘என்னா தொரே. அப்புடி நமட்டிச் சிரிச்சுப்பிட்டீங்க?”

“இதை நீ சொல்ல,எனக்கு எவ்வளவோ ஆனந்தம் வருகுது. அந்தச் சந்தோஷத்தை என்னால அடக்கேலாமக் கிடக்கு. அதுதான் என்னையறியாமல் சிரிப்புச் சிரிப்பாய் வருது”

“அப்புடீங்களா? அப்போ என்னயக் கட்டிக்கடுவீங்க தானே?”

“நிச்சயமாகக் கட்டுவன்”

“சாமி சாத்தியமாச் சொல்லுங்க”

“கடவுளாணை,உன்னத்தான் கலியாணம் செய்வன்”

“ஹி…ஹி…”

“என்ன காவேரி,உப்பிடிச் சிரிச்சாப் போதுமா?”

“அப்போ,என்னா பண்ணணும்’கிரீங்க?”

“முதல்ல நீ உடுத்திருக்கிற உந்தக் கிழிஞ்ச பாணிச்சீலை சட்டையைக் கழட்டி வை. வச்சிட்டு,அந்த அறைக்குள்ள போய் குளிச்சிட்டு வா. இந்தா சவுக்காரம். இன்னுமொரு முக்கிய கருமம் இருக்கு. நீ குளிச்சிட்டு வந்த பிறகு சொல்றன்”

“அதெ இப்பவே சொல்லுங்க’ன்னா?”

“இரண்டு ரா முழுக்க இஞ்ந என்னோட தங்கி இருந்திட்டு,விடியப் புறமாக நீ போகலாம்”

“அம்…ம்….”

“என்ன சங்கதி,சொன்னவுடனே முகம் கறுத்துப்போச்சு?”

“அது கூடாதுங்க தொரே. அந்த வெசயங்கள நம்;ப கலியாணத்துக்கப்புறமா வச்சுக்கலாம் தொரே”

“நீ சரியான மடைச்சி. உன்னையே கலியாணம் முடிக்கப் போறன். பேந்தன் பயந்து பின்னடிக்கிறாய்?”

“அப்புடீங்களா?”

“பேந்தென்ன,அப்புடித்தான்”

“:சரியுங்க. நீங்க சொல்றமாதிரி நடந்துக்கிறேன். தொரே,ஒண்ணு கேக்கிறேன்…”

“என்ன விசயம்?”

“என்னயக் கைவுடமாட்டீங்கதானே?”

“வெறும் பேய்ச்சி. நீ உந்தத் தமிழ் வசுக்கோப்பில நடிக்கிற பெட்டையள் கேக்ற மாதிரிப் பறையிறாய்?”

“மன்னிச்சுங்கோங்க….ஹி…ஹி…ஹி”

“எட,அவவின்ர புளுகத்தைப் பார்…”

“பின்னே. கடவுளாட்டம் சக்தி வாக்காச் சொல்லிப்பூட்டிங்க. அப்ப எனக்கு புளுகம் வாரதுங்களா?”

“பேந்தென்ன,கட்டாயம் வரத்தானே வேணும்? சரி,சுணங்காமல் போய்க் குளிச்சிட்டுக் கெதியா வா”

ழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூ

“என்ன தங்கம்மாளு,ஒன் பொண்ணு காவேரிய மட்டிட முடியாமலிருக்கே? பொட்டுப் பூசல் மா போட்டுப் புதுப்புதுப் புடவை கட்டிண்டு டவுணுப் பொண்ணாட்டம் மினுங்கிட்டிருக்கா. வாசி அடிச்சிருக்காப் போல தோணுதே?”

“நெசந்தாண்டி மாரி. ஆனா,அவ கோலம் எனக் கொண்ணுமாப் புடிபடல்லே”

“ஆமா,ஒரு துலக்குப் பொடியாளு. வந்துகிட்டிருந்துதே கொஞ்ச நாளா இந்தாள இந்தப் பக்கங் காங்கலியே?”

“ அந்தாளு பேச்சை இவகிட்ட எடுத்தேன்: மாட்டேன்’னு ஒத்தக் கால்ல நின்னார். ஒங்கிட்ட ரோசினை கேட்டேன். நீயும் கையாளறிப்புட்டே,‘ஆசைப் பட்டது கெடைக்கேலேன்னா ஆம்புளேங்கிற ஜாதி அடுத்த கண்ணும் பாக்கான் னுவாங்க. இவ ‘மாட்டேன’டெத அந்தப் பொடியாளு புர்pஞ்சுக்கிட்டான். அப்புறம்,‘நீயும் வோணாம் ஓம் பொண்ணும் வோணாம்’னு வுட்டுட்டான் இப்ப வர்றதே இல்ல”

“சங்கரப்புள்ள கடே மொதலாளி மவன்’னு காவேரி ஏதோ சொல்லிக்கிட்ருந்தாள்’னியே,அந்தச் சமாச்சாரம் என்னாச்சு?”

“அதானே,அவ மூளை கெட்டுப்பூட்டா’ன்னேன். அவ சித்தத்தெ மாத்திக்க,நீயி,‘இந்தா பண்ணுறேன்’னுட்டுப் போனே,அப்புறம் ஒண்ணும் பண்ணக் காணோமே?”

“கோவிச்சுக்காதே தங்கம்மாளு… எப்படியாச்சும் இன்னிக்கு ரண்டிலொரு முடிவு கேட்டுச் சொல்லிப்புடுறேன்”

“இந்தால இப்படிச் சீரழிஞ்சு மாயிறதவுட இந்தியாக்குப் போயிடலாமென்னா,ஒவ்வொருத்தன் ஒவ்வொண்ணாச் சொல்றான். ‘தமிழன் ஆட்சி செய்யிற நாட்டில் தமிழனுக்குப் பஞ்சம் பட்டினியில்லே’ங்கிறான் ஒருத்தன். ‘ஏழைத் தமிழ் நாட்டில பணக்காரனுக்காவத் தமிழன் ஆட்சி செய்யப் போய்த்தான் பஞ்சம் பட்டினி தலைவிரிச்சாடுது”ங்கிறான் இன்னொருத்தன். ‘ஏதன்னாச்சும் இருந்துட்டுப் போவுது,இங்கின இடிபட்டுச் சீரழியிறதை விடக் கப்பல் ஏறியிடலாம்’ன்னா அதுக்கும் வழி தெரியல்லே. அந்தத் துலுக்கப் பொடியாளுதான்,‘கப்பல் ஏத்தியிடறேன்’னுது. அதுக்கு நம்ம பொண்ணு காவேரி ஒத்துண்டா’ன்னா கப்பலேறிப் போயிடலாம்,அவன் இவளை என்ன புடிச்சா தின்னுடுவான்? இதெ அவகூடப் பேசி இன்னிக்கே அவ மனசைத் திருப்பியிடறியா?”

“சரி தங்கம்மாளு,பார்த்துக்கிடறேன். அது சரி,ரண்டு மூணு ராத்திரி காவேரிய இந்தத் தெவிச்சிப் பக்கம் காணமே?”

“அன்னேயில இருந்து மல்லுக்கட்டிண்ட அவ ஏங்கூட ஒறங்கறதில்லே,அடுத்த முடுக்குச் சந்தித் தெவிச்சிலே மத்தப் பெண்ணுங்கூட கெடந்திட்டு விடிய வெள்ளப்பிட வருவா. நானும் அவ போக்குக்கு வுட்டுட்டேன்”

“வயசுப் புள்ள சாயல் கண்ணுக்குள்ளகுத்தும்,பாங்க அனமட்ட அவள ஒன்கூட வச்சுண்ட…”

“ஆத்தேடி. அவள அப்புடி நெனச்சுக்காதே. பொண்ணாப் பொறந்தவ புதுசா ஒருத்தனை விரும்பியிட்டா’ன்னா கட்டேயில போறமட்டும் மறக்க மாட்டா. இவ அந்தத் தொரையில புதிசா மனசு வச்சுண்டபோதே அவ அடுத்த ஆள்கூடக் கெட்டு நடக்கமாட்டா’ன்னு தெரிஞ்சுட்டேன். ஆனா,அது அவளுக்குக் கண்ணுப் பூஞ்சாணம்’கிறத அவ புரிஞ்சுக்கலே. அதான் நல்லாப் புத்தி சொல்லி அவள் சித்தத்தே மாத்திக்கோ’ங்கிறேன்”

“சரி தங்கம்மாளு. நீயி,ஆவுதி ஆத்துப்படாதே. எப்புடியாச்சும் திருப்பிடப் பாக்கிறேன். வெசனப்படாம இருந்துக்கோ”

“காவேரி,உனக்கு ஆயுள் கெட்டி. நான் நினைக்க,நீ வாறாய். உன்ர அழகுக்கும்,உடல் அமைப்புக்கும்,நிறத்தக்கும் நீ எங்க இடத்துப் பெட்டை யெண்டால்,என்ன சோக்காயிருக்கும் தெரியுமே?”

“ஒங்க எடத்துப ;பொண்ணுதான் புறியம்’ன்னா,ஏன் ஏன்னியத் தொட்டீங்க?”

“மடைப்பெட்டை,உன்னை நான் எங்கட இடத்துக்குக் கொண்டுபோய்,அங்கவச்சுத்தான் கலியாணம் பண்ண யோசிச்சிருக்கிறன்”

“அப்புடீன்னா,இம்புட்டு நாளுமா நாம்ப ‘ராசியமா நடத்திக்கிட்ட வர்றவெசயம்?”

“அதுவும் ரகசியமாக இருக்கட்டுமன். இந்தக் கருமங்களெல்லாம் அதுக்காகத்தான். நீ ஒண்டுக்கும் யோசியாதை,எல்லாம் வெண்டுதாறன்”

“நாம் என்ன சண்டைக்கா போவச் சொல்றேன்? அஞ்சு மாசமா இப்புடித்தான் சொல்லிக்கிட்ட வர்றீங்க. ஆத்தா,‘இந்தியாவுக்குப் போயிடணும்’னு ரோசிச்சது. நான்தான் ஒங்கள நெனச்சுண்டு அந்த ரோசினையக் கைவுட்டுண்ணுட்டேன்”

“நானும் அப்படித்தான் இப்ப யோசிச்சிருக்;கிறன்”

“எப்புடி?”

“சிங்களப் பகுதியில இருந்து இனியும் நாங்கள் ‘சுதந்திர’மாக வாழ ஏலாது. அவங்கட ஏகாதிபத்தியத்தில தமிழர் சந்தோஷமாகவும் சீவிக்க முடியாது. ஆனபடியால்,நீ இந்தியாவுக்குப் போகத் தேவையில்லை. எங்கட இடத்துக்கே வரலாம்”

“வனத்த முல்லைக் காட்டுக்கோ?”

“இல்லை,கொழும்புக் கோட்டைக்கு”

“சரி,ஒங்க இஷ்டம். எப்பங்க அங்கிட்டுப் போறது?”

“சிறீலங்காக் கட்சி விழுந்து,ஐக்கிய தேசியக் கட்சி வந்த பிறகு”

“ அது எப்பங்க வரும்?”

“வலு சுறுக்கில”

“ ‘சுறுக்கில’ன்னா?”

“கெதியாக”

“வந்தாப்புறம்?”

“ரண்டுபேரும் தனி இன்பங்காணலாம்”

“ நெசமுங்களா?”

“ சத்தியமாக – மெய்யாக”

“அங்க சாதி வெத்தியாசம் பாக்கிறவங்க”ன்;னு பேசிக்கிறாங்க,நெசமங்களா?”

“இந்தத் தோட்டக்காடு – சிங்களப் பகுதிக்கயும் சாதி வித்தியாசம் இருக்கு. ஐக்கிய தேசியக் கட்சி வந்தால்,பிறகு கொழும்பில சாதி வித்தியாசம் மருந்துக்கும் இராது”

“அப்புடீங்களா? நாம கொழும்புக்குப் போனாப் புறம்…?”

“நீதான் என் ராசாத்தி”

“அப்பா,நீங்க என் இதய ராஜா?”

“ஓம் நிச்சயமாக”

“ராஜா,ராஜா”

“சரி,இப்புடிக் கிட்ட வா”

“ஹி…ஹி… இன்னிக்க கூச்சமா இருக்கு… போங்கோன்னா…”

“கள்ளி”

ழூழூழூழூழூழூழூழூழூ

“ஏ புள்ள காவேரி,ஏது கண்ணாம்பூச்சி வெளாட்டில எறங்கிட்டே?”

“ஓ,மாரியாத்தாவுங்களா? வாங்க ,ஏது என்ன சமாச்சாரம்,ஓண்ணுமாப் புரியலியே?” எப்புடிப் புரியும்கிறேன். ஒன் ஆத்தா நாயி படாதபாடுபட்டு,ஏறாதபடியெல்லாம்,ஏறி பார்க்காத மொகமெல்லாம் பார்த்து ஒன்ன இந்தப் பெரிய பொண்ணாட்டமா வளத்துட்டா. நீயி,அவ ஆசையில மண்ணைப் போட்டுட்டியே?”

“ஓ…நீங்க அந்த வெசயத்தெக் கௌப்புறீங்களா? மாரியாத்தாக்கா,‘பொண்ணு’ன்னு தெருவால போறவுங்க வாறவுங்கெல்லாம் தொட்டுண்டு போற பண்டமில்லே. மனுஷாளுக்கு மானம் மருவாதி பத்தாரம் இருக்க வோணும்”

“அது நெசந்தான் புள்ளே. இதுங்களெப்பாத்தா ஒங்கெதி என்னாவும்?”

“அதுக்காவ?”

“அதுக்காவத்தான் பொழைச்சுத் திங்கிற புத்தியப் பாத்துக்கோ’ன்னேன்”

“நானு பாத்துக்கிட்டேன்”

“என்ன பாத்துக்கிட்டே?”

“நானு மனசுவெச்ச அவரெக் கட்டிக்கப்போறேன். என்னைக் கட்டிக்கிறேன்’னு அவரும் சத்தியம் பண்ணிச் சொல்லிப்பூட்டாரு”

“அடி பாவிப்பெண்ணே,நீ நல்லா ஏமாந்துட்டே’டி தெருத் திண்ணையில கெடந்து பிச்சைத் தீனுக்குக் கையேந்திக் கிட்டிருக்கிற நம்ப சாதிய எவன்டி பொண்டாட்டியாக்கிக்க வருவான்? அதும்போக மொதலாளிங்க சாதிப் புள்ளையாண்டான் ஒன்னக் கட்டிக்க வருவானு’ங்கிறியா? அந்த மொதலாளி மவன் சரியாத்தான் ஒன்ன ஏமாளியாக்கிப்புட்டான்”

“அவரு அப்புடி ஏமாத்திக்கிற ஆளில்லே. சாமி மேலே சத்தியம் பண்ணத் தந்திருக்காரு”

“சத்தியவந்தரான அரிச்சந்திர ராசாவாட்டம்தான் அவங்க வேஷம் போட்டுண்டவங்கடி. ஆமா,அந்தாளுங்கூடப் புளங்கிட்டு வர்றியா?”

“ஆமா”

“எம்புட்டுக் காலமா?”

“நாலு அஞ்சு மாசமா”

“நீயி என்ன புடிய வச்சிண்டு புளங்கிட்டு வர்றே?”

“அதான் சொன்னேன்,‘சாமி மேலே சத்தியம் பண்ணியிருக்கார்’ன்னு”

“அப்புறம்?”

“வோணும்’கிற காசு பணம் தந்திருக்கார். சீல,சட்டை,கொலுசு வாங்கித் தந்திருக்கார். இன்னும் என்னமோ எல்லாம் பண்ணிக்கிறதாகப் புதுசா வாக்குக் குடுத்திருக்காரு”

“அதென்னடியம்மா புது வாக்கு?”

“என்னா,பரியாசம் பண்ணிண்டு கேக்கிறே? கொழும்புக்கு அழைச்சிண்டு போயி,அங்கதான் கட்டிக்கிறதாகச் சொல்லியிருக்காரு”

“அழைப்பாரு,நீயி காத்துக்கிட்டிரு. சரி,எப்ப அழைச்சிண்டு போவாரு?”

“ஐக்கிய தேசியக் கட்சி பவருக்கு வந்தாப்புறம்,அவுங்க தொண்டரு மூதாவில கட்டிக்கிட்டாச் சந்தோஷம்’னாரு”

“ இம்புட்டு வளந்தும் ஒலகம் தெரியாத பச்சைப் புள்ளையாட்டம் இருக்கிறியே? ஒண்ட சீரத்த கதெயக் கேட்டாச் சிரிப்பாத்தான் வருதடி. ஒன் ஆத்தா சொன்னாப்பல ஒனக்கு மூளைதான் கெட்டுப் போச்சு’ங்கிறேன்”

“எனக்கொண்ணும் மூளை கெட்டுப்புடலே,நா அவரேக் கட்டிக்கிறப்போ,கலியாணத்தண்ணு தப்பாம வந்துக்கோ’ங்கிறேன்”

“அப்போ நீயி,ஆணையில ஏறிக்க் நானு பூனையில வந்துடறேன்”

“என்னா,பரியாசமா பண்றே?”

“பரியாசமில்லேடி,பரிதாபமாக் கெடக்கு’ங்கிறேன்”

ழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூ

“மாரியாத்தாக்கே,ஏது தங்கம்மாளும் அவ பொண்ணு காவேரியும் கொஞ்ச நாளா மினு மினுத்துண்ட இருக்காங்க,ஏதாச்சு ‘புதுச்சாமி’கண்ணு விழுந்துட்டுதோ?”

“அதெயேண்டி பார்வதி கேக்கிறே? புதுச்சாமி கண்ணு இவவுல விழலே,அவரு கண்ணிலதான் இவ வுழுந்துட்;டா”

“அதாரு மாரியக்கா புதுச்சாமி?”

“சங்கரப்புள்ள கம்பனி மொதலாளிங்கட ஒரு மூத்த மவன்”

“என்னது சொல்லிப்புட்டு ஒன் பாட்டுக்குக் குமட்டிச் சிரிக்கிறே?”

“மொதலாளிங்கிற சாதியில நாம காலம் காலமா இம்புட்டு நரகத்துக்காளா யிருக்கோம்’கிறதெப் புரிஞ்சுக்காம,அந்தச் சாதியாளை நம்பி நடக்கிற நம்ப சாதிய நெனச்சா ஏளனமாச் சிரிக்காம,சந்தோஷமாவாச் சிரிப்பா?”

“ நெசந்தானக்கே. அது கெடக்க,இதே காவேரிக்கிட்டச் சொல்லப்;

பார்த்தீங்களா?”

“ஆமா,நானு அதே எடுத்துச் சொல்லப்போக,அவ எனக்கே ஒபதேசம் பண்ண ஆரம்பிச்சுட்டா”

“ கடேசியா எப்ப சொன்னே?”

“ஒரு மாசத்துக்கு மேலாவுது”

“ஆமா,ரண்டு நாளா காவேரியயும் அவ ஆத்தாவயும் இந்தப் பக்கம் காங்கலியே?”

“ நானும் கவனிச்சுண்டேன். ரண்டு நாளா இந்தால காங்கலத்தான். ஒரு வேளை கண்டி கட்டுக்கலப்பிள்ளையார் கோயில் மேட்டுக்குப் போயிருப்பாங்களோ?”

“நானு நேத்து ராத்திரி அங்கிட்டாலதான் வந்தேன். எங் கண்ணில படலயே?”

“ஓ…எனக்கு இப்பத்தான் நெனப்பு வருது. கண்டி வாவிப் பக்கமா தலதாமாளிகை ஓரமா நேத்துச் சாயங்காலம் சுத்திக்கிட்டிருந்தா’ன்னு பெட்டி வெத்தலைக் காரப் பாப்பாத்திட குட்டிப்புள்ள சொல்லிச்சு”

“தங்கம்மாளு பாவம்; வவுத்துப் புள்ளக்காரி. சுமந்துகிட்டு அலையறாபோல”

“அப்பொ எழுந்துக்கோ. அந்தால போயி அழைச்சுண்டு வந்த அவசொகம் பார்ப்பம்”

“சரி எழந்துக்கோ”

“என்னா,நடைபரிய மாட்டேங்குது?”

“தங்கம்மாளுக்கு மட்டுமா வவுத்துப்புள்ள?’

“நானும் இப்பம் வவுத்துப் புள்ளக்காரிதான். என்னா,ஒனக்கு அப்புடி ஏதும் உண்டுமா?”

“ஆமா,மூணுமாசமாவுது”

“டியே,சத்தே நில்லுடி!”

“என்னா’ங்கிறே?”

“அந்தால வாவிக் கொளத்தெப்பாருடி. ஈ மொச்சாப்ல ஆக்களுங்க குமிஞ்சுக்கிட்டிருக்கே?”

“ஆமா. மாரியக்கா. ஏடி அக்கம்மா,அங்கபாரு பொலிசுக்காரங்கடி!”

“ஆ…!”

“என்னாங்கிறே?”

“அய்யோ ஆத்தாடி!”

“ஏன் ‘அல்யோ’ங்கிறே?”

“மூணு பொணம் கெடக்கடியக்கா. அங்கிட்டுப் பாரம்மாத்தே”

“ங்..ங்க்…ங்கய்யோ…”

“ஏம்மா எந் தங்கம்மாளு…”

“ஏண்டியம்மா நீ வுழுந்தே?

“எங்க கண்ணு காவேரி…”

“சங்கயின்னு மாண்டியோடி?”

“வவுத்துக் கொழந்தையோட…”

“வாவியில ஏன் மடிஞ்சே?”

“ஒலகம் சுமை கூட்ட…”

“ஒன் சுமைய றக்கிண்டியோ?”

“ஊரான் பசி போக்கி…”

“உன்னுயிரை மாச்சுண்டியோ?”

“ஆரமற்ற பாவியளாய்…”

“அந்தலைந்து மாண்டியளோ?”

“ த்சூ… ஏய் இந்தா இதில நிண்டு சத்தம் போட்டுக் கத்தாதே. இஞ்சால நீதிவான் வந்திருக்கிறார். இங்கே இருந்து ஒப்பாரி வச்சு அழக்கூடாது,தெரியுமா?”

“ ஆ…பொலிஸ் அய்யாவங்களா? சாமி சாமி,இவ எங்ககூட இம்புட்டு நாளா இருந்தவ சாமி. அழுதீந்து நெஞ்சாறன்னாச்சும் வுடுங்க சாமி”

“யேஸ் … பி.ஸி. கோல் தெம்?”

“நீதிவான் தொரே என்னங்கிறார் சாமி?”

“உங்;களை வரட்டாம். இங்கே கிடக்கும் மூன்று பிணங்களையும் உன்னால் அடையாளம் காட்ட முடியுமா?”

“முடியுங்க சாமி”

“இந்தப் பிணம்?”

“தங்கம்மாளு சாமி”

“இந்தச் சவம்?”

“தங்கம்மாளிட சின்னப் புள்ளயிங்க”

“அந்தப் பிரேதம்?”

“தங்கம்மாளு மூத்த பொண்ணு காவேரியுங்க”

“ அவ புருஷன்?”

“எப்பவோ செத்துப் பூட்டாருங்க”

“காவேரியின கணவன் எங்கே வசிக்கிறார்?”

“அவ கலியாணமே பண்ணலீங்க சாமி”

“காவேரி திருமணம் புரியவில்லை என்பது உனக்கு நன்றாகத் தெரியுமா?”

“வடிவாத் தெரியுங்க சாமி”

“நீ பொய் சொல்கிறாய். இந்தப் பெண் கலியாணம் செய்திருக்கிறாள். அவள் நான்கு ஐந்து மாத கர்ப்பிணி.”

“ஆ…அய்யோ!”

“ஏன் அதிர்ந்துபோய் முழிக்கிறாய்? இந்தத் தாயும் பிள்ளைகளும் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதை உன்னால் கூற முடியுமா?”

“இல்லீங்க சாமி. அவ தற்கொலை செஞ்சுக்கலே சாமி;. சாமி சத்தியமாச் சொல்றேங்க சாமி. எந்த மனஷாளும் தற்கொலை பண்ணிக்கவே மாட்டாங்க சாமி”

“அப்போ,நீ எப்படிக் கருதுகிறாய்?”

“இந்த ஊரு ஒலகத்திலேயுள்ள பணக்காரச் சாதிங்க ஒண்ணாச் சேந்து ‘கொலை பண்ணிட்டாங்க சாமி. ஆமாங்க சாமி,அவங்கதான் கொலை செஞ்சுட்டாங்க சாமி… அவங்கதான் கொலை செஞ்சுட்டாங்க சாமி… அவங்கதான் கொலைகாரங்க. அந்தக் கொலைகாரச் சாதிய வுட்டுட்டீங்களே சாமி?”

“த்சூ…இங்கே நீதிவான் இருக்கிறார். சத்தம் போட்டுக் கத்தாதே,நிறுத்து!”

அனுப்பியவர்: நவஜோதி ஜோகரட்னம்

– 1976 கலைமகள்

– அகஸ்தியர் கதைகள், முதற் பதிப்பு: 1987, ஜனிக்ராஜ் வெளியீடு, ஆனைக்கோட்டை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *