மெளனமான நேரம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 16,769 
 
 

‘தம்… தம்… தம்…
பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம்
எந்தன் சொந்தம்
ஓலையில் வேறென்ன சேதி
தேவனே நான் உந்தன் பாதி’

– சன்னமான குரலில் இந்தப் பாடலைப் பாடிவிட்டு, ‘இப்ப இந்தப் பாட்டைக் கேக்கறப்ப, அவங்க மனநிலை எப்படி இருக்கும் சார்?’ என கிருஷ்ணமூர்த்தி அண்ணாச்சி கேட்டபோது, நாங்கள் ரயிலுக்காக தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தோம்.

கடந்த இரு தினங்களாகப் பதிலை எதிர்பாராத கேள்விகளாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார் அண்ணாச்சி. என்னிடம் விடை பெறுவதற்குள் மனதுக் குள் இருக்கும் கேள்விகளை எல்லாம் கேட்டுவிடும் தவிப்பு அவருக்கு. தன் ஒவ்வொரு கேள்வியின் மூலமும் சின்னச் சின்ன விநோதங்களை எனக்குள் விதைத்துக் கொண்டே இருந்தார்.

நான் ஒரு சினிமாக்காரன். அண்ணாச்சி ஓய்வுபெற்ற ஒரு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர். அவர் ஒரு தீவிர இசை ரசிகர் என்பதுதான் எங்கள் இருவருக்கு மான நுட்பமான இணைப்புப் பாலம். அண்ணாச்சியின் மனைவி அகிலா அண்ணாச்சியைப் பற்றிச் சொல்லும்போது, ”எப்பப் பாத்தாலும் ஏதாவது ஒரு பாட்டைப் பாடிக்கிட்டே இருப்பாருப்பா. வீடு முழுக்க நோண்டி நோண்டி ஸ்பீக்கராப் பதிச்சுவெச்சிருக்காரு. எங்க வீட்டுக்கு வந்து பாரு… தியேட்டர்ல எந்த மூலைல நின்னாலும் பாட்டு கேக்குமே, அது மாதிரி கேக்கும். நான் சமையல் கட்டுல இருப்பேன் ‘கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்குவெச்சான்’னு ஒரு பாட்டைப் போட்டாருன்னா, டண்டக்கு டண்டக்குனு உலை கொதிக்கும். அவருக்கு ஃபேவரைட் பாட்டு… ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…’ அந்தப் பாட்டை அப்படியே டி.எம்.எஸ். மாதிரி பாடுவாருப்பா” என்றார்.

MounamanaNeram

”பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடலைத் தவறாகப் பாடினால்கூட, டி.எம்.எஸ். மாதிரி பாட முடியாது” என்று அண்ணாச்சி சொன்னபோது, நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டேன். அகிலாவுக்கு சிறுகுறிப்பு வரையத் தெரியாது. எதையும் விரிவாகச் சொல்பவர்.

”இந்திப் பாட்டு, மலையாளப் பாட்டு, தெலுங்குப் பாட்டுனு ஒரு பத்தாயிரம் பாட்டு வெச்சிருக்காரு” – இந்த வார்த்தைகள்தான் அண்ணாச்சியைச் சந்திக்கும் ஆர்வத்தைத் தூண்டின. இரண்டு நாட்களுக்கு முன் அண்ணாச்சியை முதன்முதலாகச் சந்தித்தபோது,

‘அம்மா ஜனனி சரணாலயம் நீ’ என்கிற பாடலில் இருந்து தொடங்கியது எங்களுக்குள்ளான நெருக்கம். பாடல் ஒலித்துக்கொண்டே இருக்க, தன் போக்கில் ”உசுரச் சுருக்கி சீசாவுக்குள்ள அடைக்க முடியுமா சார்?” என்றொரு கேள்வி கேட்டார்.

எனக்கு அந்தக் கேள்வியின் அர்த்தம் சட்டென விளங்கவில்லை. அவர் அதை ஒரு பொருட்டாகக் கருதாமல், அடுத்த பேச்சுக்குத் தாவினார். ”ரசனைகூட ஒருவிதத்துல ஆர்ட்தான் சார். ரசிப்புத்தன்மை ஒரு கலைனு யாருக்கும் புரியல. ஒரு எம்.பி.த்ரீ-க்குள்ள பாட்டுகளை அடைச்சுவெச்சுக் கேக்கறது தப்பு சார். அரசியல் கைதிகளைக் கல்யாண மண்டபத்துல அடைச்சுவைக்கிற மாதிரி மூச்சு முட்டும்.”

பாட்டுக்கு மூச்சு முட்டும் என்று அவர் சொன்ன விதம் வித்தியாசமானதாக இருந்தது. அப்பாவித்தனமான ஒரு பாவனையில் மிக நுட்பமான தகவல் களைச் சொல்பவராக இருந்தார் அண்ணாச்சி. ”மத்த எல்லாக் கலைகளும் ஃபிக்ஸ்டா இருக்கிறது சார். ஓவியம்னா, கேன்வாஸ்ல இருக்கும். எழுத்துன்னா, பேப்பர்ல இருக்கும். மியூஸிக் மட்டும்தான் மிதக்குது. இப்ப உங்களச் சுத்தி எவ்வளவு பாட்டு இருக்கு? இந்தக் காத்து முழுக்கப் பாட்டுதானே? என்ன ஒண்ணு, நாம டியூன் பண்ணிக்கணும்.”

ஒரு தேர்ந்த எழுத்தாளனின் சொல்லாடல்களைப் பயன்படுத் தினார். அடிப்படையில் மருத்து வக் கல்லூரிப் பேராசிரியராக இருந்ததால், விரிவுரையாற்றும் தன்மை அவருடைய பேச்சில் இருந்தது. ஏதோ ஒன்றை நோக்கி அவரது பேச்சு நகர்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த ஒன்று எது என்றுதான் புரியவில்லை.

எங்கள் பேச்சுப் பயணத்துக்கு வழித் துணைபோல அவர் சுழலவிட்ட இசைக் குறுந்தகடு மனதுக்கு இதமான பாடல்களை ஒலித்தது. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் ‘விழியில் விழுந்து… இதயம் கலந்து… உயிரில் கலந்த உறவே’ பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.

‘மமதா பதமா மமதபதமமா…

நினித காத பதமா… நினித

காத பதமா…’ பாடலின் இடையில் வரும் ஸ்வரத்தைப் பாடலின்கூடவே பாடியபடி இருந்தார். அவர் எப்போது பாடுவார், எப்போது பேசுவார் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. அண்ணாச்சி அறுபதைக் கடந்திருப்பார்.ஆனால், குரலில் அந்தத் தளர்ச்சி சுத்தமாகத் தெரியவில்லை. அவரை வயோதிகர் என்று சொல்வதில் எனக்குச் சம்மதம் இல்லை. வேண்டுமானால், எழுபதுகளின் இளைஞர் என்று சொல்லலாம். ” ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு’ன்னா, அதில் எப்படி சார் பிரிவு வரும்?” – இந்தக் கேள்விதான் எனக்கு அண்ணாச்சியை அடையாளம் காட்டியது. நான் மிகுந்த எதிர் பார்ப்போடு அவர் அடுத்து என்ன பேசப்போகிறார் என்பதைக் கேட்கக் காத்திருந்தேன்.

”அவங்க ஏன் சார் பிரிஞ்சாங்க?”

25 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவும் வைரமுத்துவும் ஏன் பிரிந்தார்கள் என ஒருவர் கேட்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த முறை அண்ணாச்சி என்னிடம் பதிலை எதிர்பார்த்தார். ஒருவேளை நானும் சினிமாவில் இருப்பதால், அவர்களின் பிரிவுக்கான காரணத்தைச் சொல்வேன் என்று நினைத்திருப்பார்போல. தீர்க்கமாக என்னைப் பார்த்தபடி அமைதியாக இருந்தார்.

”ஒரு மாஸ் மீடியால இது மாதிரி முரண் வர்றது இயல்பான விஷயம்தான்” என்று பொதுவான ஒரு பதிலைச் சொல்லிவைத்தேன். குறுந்தகடு பூங்கதவின் தாழ் திறந்துகொண்டு இருந்தது. அண்ணாச்சிக்கு என் பதில் திருப்தி அளிக்கவில்லை.

அண்ணாச்சி மௌனமாக இருந்தார். அவருடைய மௌனம் ஓர் ஏமாற்றத்தின் வெளிப்பாடாகத் தெரிந்தது. ”காலம் போகப் போக, சில பிரிவுகள் இறுகிப் பாறையா மாறிடும். அதை உடைக்கிறது கஷ்டம்” – நான் மீண்டும் ஒரு பொதுவான பதிலையே சொல்ல நேர்ந்தது. நான் இதைச் சொல்லி முடிக்கவும் ஒரு மணமான காபி கொடுத்தார் அகிலா. காபி சாப்பிடும்போது, நல்ல இசை கேட்கும் ஒரு மகிழ்வான தருணத்தில் எந்த முடிவுக்கும் வர இயலாத இந்த விவாதம் சரி இல்லை என்று எனக்குத் தோன்றியது. அண்ணாச்சியை, இசையைத் தாண்டி அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

நான் பேசத் தொடங்கும் முன்பே அண்ணாச்சி ஆரம்பித்தார். ”அவங்க பிரிஞ்சுட்டதா நினைச்சுட்டு இருக்கிறாங்க சார். உண்மையிலயே அவங்க பிரியலை. இந்தக் காத்துல இருக்கிற பாட்டுல அவங்க சேர்ந்தேதான் இருக்கிறாங்க. ‘வான மகள் நாணுகிறாள்’னா, அந்த நாணத்துக்குள்ள வைரமுத்துவும் இருக்கார்… இளையராஜா வும் இருக்கார்” – அண்ணாச்சி இதைச் சொல்லி முடிக்கவும் நான் உற்சாக மிகுதி யில் சோபாவின் விளிம்பில் ஓங்கிக் குத்திய படி, ”சூப்பர்ணே” என்றேன்.

என்னுடைய உற்சாகம் அண்ணாச்சிக்கும் தொற்றிக்கொண்டது. ஒரு நீண்ட விவாதத் துக்கான கதவுகளைத் திறந்துவிட்டதுபோல உணர்ந்தார். சோபாவில் சாய்ந்து அமர்ந்துஇருந்தவர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

”நீங்கள்லாம் சரியில்ல சார். ஒரு குடும் பத்துல அண்ணன் தம்பிக்குள்ள பிரச்னை வந்தா, கூடி உக்காந்து பேசிச் சமாதானப்படுத்தறது இல்லையா? அது மாதிரி சமாதானப்படுத்தி இருக்கணும். அவங்களைப் பிரிய விட்டிருக்கக் கூடாது” – அண்ணாச்சியின் குற்றச்சாட்டு மிகவும் நேரடியாக இருந்தது. அவர் ‘நீங்க’ என்று குற்றம்சாட்டியது என்னை அல்ல… ஒட்டு மொத்தத் திரைத் துறையை. ஒரு தீவிர இசை ரசிகனின் கோணத்தில் அவர் சொல்லில் நியாயம் இருப்பதாகப் பட்டா லும், அது காலம் கடந்த குற்றச்சாட்டாகவே எனக்குப்பட்டது. இதை நான் அவரிடம் சொன்னபோது சிரித்தார்.

”எது காலம் கடந்தது? இப்ப உங்க ஃபேஸ்புக்ல இல்லேன்னா ட்விட்டர்ல, ‘இளையராஜாவும் வைரமுத்துவும் ஒண்ணு சேரணும்னு விரும்புறவங்க, ஆளுக்கு ஒரு ரூபா அனுப்பிவைங்க’னு ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க சார் பார்ப்போம். நாளைக்கு நீங்க கோடீஸ்வரன். உலகம் முழுக்க அவ்வளவு பேரு இந்த இழப்பை ஃபீல் பண்றாங்க” – அண்ணாச்சி சொன்ன இந்த வார்த்தைகளை எந்த விமர்சனமும் அற்று நான் ஏற்றுக்கொண்டேன்.

அவர்கள் இருவரும் ஒரு தலைமுறையை விரல் பிடித்து அழைத்துச் சென்றவர்கள்தான். உலகெங்கும் ஒரு லட்சம் காதலுக்காவது அவர்களின் பாடல்கள் துணை நின்றிருக்கும். அதே சமயம், அவர்கள் ஒன்றுசேரும் வாய்ப்பு துளியும் இல்லை எனச் சூடம் கொளுத்திச் சத்தியம் செய்யும் அளவுக்கு உறுதியானது அவர்கள் பிரிவு.

அண்ணாச்சியின் இந்த ஆதங்கம் எந்தப் புள்ளியில் வந்து நிற்கப்போகிறது என்கிற ஆர்வம் எழுந்தது. படைப்பாளன் மீது என்னதான் அதிதீவிர பக்தி இருந்தாலும், அவர்களின் தனி மனித உணர்வுகளுக்குள் பயணிக்கும் உரிமை ஒரு ரசிகனுக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்கிற கேள்வியோடு அண்ணாச்சியிடம் ஒரு விவாதத்துக்குத் தயாரானேன் நான்.

ஒரு திட்டத்தோடுதான் அண்ணாச்சி, இளையராஜா – வைரமுத்து ஹிட்ஸைப் போட்டிருப்பாரோ என்கிற எண்ணம் தோன்றியது. ‘காற்றின் தேசமெங்கும் எந்தன் கானம் சென்று தங்கும். நாதம் ஒன்று போதும்… எந்தன் ஆயுள் கோடி மாதம்…’ என்றார் வைரமுத்து.

”ஒருவேளை அவங்க பிரிஞ்சிருக்கிறது தான் இந்தப் பாடல்களை எல்லாம் நாம கொண்டாடிட்டு இருக்கிறதுக்குக் காரணமா இருக்கலாம்ல…” என்றேன்.

”இருக்கலாம். ஆனா, அவங்க பிரிஞ்சு இருக்கிறது நமக்குச் செய்ற துரோகம்” – இப்படி ஒரு வார்த்தையை அண்ணாச்சியிடம் இருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை. துரோகம் என்கிற அவருடைய வார்த்தை கொஞ்சம் அதிகப்படியாகத்தான் தெரிந்தது.

”என்னைப் பொறுத்தவரைக்கும் இசை யைத் தர்றவங்க கடவுள்கள். தெய்வங்கள் தப்பு பண்ணக் கூடாது” என்ற அண்ணாச் சியை மூர்க்கமாக மறுத்தேன்.

”அவங்க ரெண்டு பேரும் படைப்பை விட்டுரலியே. ரசிகர்களையும் விட்டுரலை. இசையே வேண்டாம்… பாட்டே வேண்டாம் னுட்டுப் போயிடலைல்ல. தனித் தனியாப் பாடல்களைத் தந்துட்டுதான் இருக்காங்க. அவங்க பிரிவுக்குப் பிறகு ரெண்டுபேருமே தரமான நல்ல பாடல்களைக் குடுத்திருக்கிறாங்க. அதை எப்படித் துரோகம்னு சொல்வீங்க?’

”விதையை ஒரு இடத்துல போட்டுட்டுத் தண்ணிய ஒரு இடத்துல ஊத்தினா… எப்படி சார் முளைக்கும்? என் மண்ணுக்கான மொழி அவர்கிட்ட இருக்கு. என் மண்ணுக்கான இசை இவர்கிட்ட இருக்கு. ரெண்டும் ஒண்ணா இருந்தாத்தானே சார் அழகு?’

என்னால் அண்ணாச்சியின் உணர்வுக் குப் பதில் சொல்ல இயலவில்லை. மதிய உணவுக்கான அழைப்பு எங்களிடம் இருந்து இளையராஜாவையும் வைரமுத்துவையும் பிரித்தது. அதுவரை சாப்பிட்டு அறிந்திராத சுவையில் மோர்க் குழம்பு இருந்தது. அதில் நான் கரைந்துபோயிருந்தேன். அண்ணாச்சி கனன்றுகொண்டே இருந்திருக்கிறார் என்பதை அவர் அடுத்துப் பேசும்போதுதான் உணர்ந்துகொண்டேன்.

”ஒரு நல்ல வாசனையை நுகரும்போது… ஒரு நல்ல வார்த்தைகளைக் கேட்கும்போது… மனசுக்குப் பிடிச்சவங்க ஞாபகத்துக்கு வருவாங்க… இல்லையா சார்?” என்றார் அண்ணாச்சி. நான் மையமாகத் தலை அசைத்தேன்.

”அப்படின்னா… ஒரு நல்ல டியூன் போடும்போது இளையராஜாவுக்கு வைரமுத்து ஞாபகம் வருமா… வராதா சார்? அதே மாதிரி ஒரு நல்ல பாட்டு எழுதும்போது, வைரமுத்து வுக்கு இளையராஜா ஞாபகம் வரும்தானே சார்?”

நான் அமைதியாக இருந்தேன்.

”வரும் சார்… வரணும். நல்ல இசை… நல்ல எழுத்து… நல்ல மனசுல இருந்துதான் வரும். ரெண்டு பேருமே உயரங்களைத் தொட்டுட்டாங்க. இப்ப அவங்ககிட்ட மிச்சம் இருக்கிறது இந்தக் கோபம் மட்டும்தான். இந்தக் கோபத்தால என்ன பயன் சொல்லுங்க? ‘பாறையில பூ மொளச்சி பாத்தவுக ஆரு… அன்புகொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு…’ அவங்க அன்புக்கும் ஆயுசு நூறா இருக்கணும் சார்” – கோபத்தில் தொடங்கி, கோரிக்கைவைத்து, பிரார்த் தனையாக முடித்தார் அண்ணாச்சி.

ஒரு சின்ன மௌனத்துக்குப் பிறகு, ”நீங்கஎன்ன நெனைக்கறீங்க?” என்றார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. துறை சார்ந்த மனிதர்கள் குறித்து கருத்துச் சொல்வதில் உள்ள தயக்கம் எனக்கு இருந்தது. ஒருவேளை இதுபோன்ற தயக்கம்தான் அவர்கள் இணையத் தடையாக இருந்ததோ என்னவோ?

அதன் பின் ஊருக்குக் கிளம்பும் வரை அவர் இந்த விவாதம் குறித்து எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இப்போது ரயிலுக்குக் காத்திருக்கும் நேரத்தில் மீண்டும் தொடங்குகிறார்.

ரயில் வருவது குறித்த அறிவிப்பு சொல்லப்பட்டதும் நான் என் பையை எடுத்துக் கொண்டு எழுந்தேன். கோச் வரைக்கும் எதுவும் பேசாமல் வந்தவர், நான் படிக்கட்டில் ஏறியதும் ”நல்லபடியாப் போயிட்டு வாங்க சார். எப்பவாவது அவங்களைச் சந்திச் சீங்கன்னா… உங்களைக் கொண்டாடி மகிழ்கிற தலைமுறையோட வாழ்க்கையே முடியப்போகுது. இப்பவாவது ஒண்ணு சேருங்கனு சொல்லுங்க…” என்றார்.

நான் ஆமோதிப்பதுபோலத் தலையசைத்தேன். ரயில் இசைத்தது.

”அவங்க ஒண்ணு சேர்றது இசையில பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலைன்னாலும்… அன்புதான் என்னைக்கும் உயர்ந்ததுனு இந்த உலகத்துக்கு உணர்த்தும்” – ஒரு நெகிழ்வான குரலில் அண்ணாச்சி இதைச் சொன்னதும் அவர் மீதான மதிப்பு இன்னும் உயர்ந்தது.

ரயில் மெள்ள நகர்ந்தது. அண்ணாச்சி திரும்பிச் செல்வதையே பார்த்தபடி இருந்தேன். அந்த ரயில் பயணம் முழுக்க அவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய பாடல்கள் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தன.

‘ஒரு ஜீவன் அழைத்தது… ஒரு ஜீவன் துடித்தது… இனி எனக்காக அழ வேண்டாம்… துளிக் கண்ணீரும் விழ வேண்டாம்… உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…’ – அவர் கள் ஒருவருக்கொருவர் பாடிக்கொண்டதுபோல இருந்தது. கிருஷ்ணமூர்த்தி அண்ணாச்சி யின் கேள்விக்கு யாரும் பதில் சொல்ல முடியாது. அவர்கள் இருவரும்தான் பதில் சொல்ல வேண்டும்.

என்ன செய்வது… சமயங்களில் சப்பரம் தூக்குகிறவனின் வலி உற்சவ மூர்த்திகளுக்குத் தெரிவது இல்லை.

– மே 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *