முல்லேரியா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 10, 2022
பார்வையிட்டோர்: 4,619 
 
 

மலேரியா எண்டால் தெரியும். சிலவேளை மலேரியாக் காய்ச்சலில் விழுந்து குயினைன் குளிசைகளை நாலு மூண்டு ரெண்டு எண்டு விழுங்கி ஒரு மாதிரிச் சுகப்பட்டு எழும்பின வராயும் நீங்கள் இருக்கலாம்.

லவேரியா ?

கருப்பட்டியும் தேங்காப் பூவும் சேர்த்திடித்து இடியாப்பத்துக் குள் பொதிந்து வேக வைத்த, ‘பற்றிஸ்’ மாதிரியான வடிவத்தில் அமைந்த ஓர் இனிப்புப் பலகாரம். சிங்களவரின் கொழுக்கட்டை! கொழும்புப் பக்கம் இருந்திருந்தால் வாயூறி ஊறிச் சாப்பிட்டு இருப்பீங்கள்.

லெமூரியா?

முள்ளிவாய்க்காலுக்க காணாமல் போன தமிழ்ச் சனங்கள் போல எப்பவோ இருந்து பிறகு காணாமல் போய் விட்டதாகச் சொல்லப்படும் ஏதோ ஒரு கண்டம். இந்து நாகரிகம் படிச்சிருந் தால் சிலவேளை கேள்விப் பட்டிருப்பியள். நான் இ.நா. படிச்ச தில்லை. ஆனால் கேள்விப் பட்டிருக்கிறன்!]

மஞ்சூரியா?

‘மப்’பில தேடினால் [தமிழ் மப்பில்லை. English ‘மப்’] ஆப்பிரிக்காப் பக்கம் இப்பவும் தட்டுப்படக் கூடும். சில வேளை பெயர் மாத்துப் பட்டிட்டுதோ தெரியாது. [நான் ‘ மப்’ பாத்துக் கனகாலம்; அடிச்சுக் கொஞ்சக் காலம்தான்.]

மலேரியா, லவேரியா. லெமூரியா, மஞ்சூரியா……. எண்டு கொண்டு ஏனிந்த எடுபாடாக்கும் எண்டு நீங்கள் காத்திரமா யோசிக்கலாம். யோசியாதையுங்கோ. ‘அது’ வர முந்தி நான் விஷயத்துக்கு வாறன்.

முல்லேரியா –

தெரியுமோ? தெரிஞ்சால் உங்களுக்கு என்னைப் போல ஆக்களோட சங்காத்தம் இருக்கெண்டு கருத்து. தெரியாட்டில் இண்டைக்கெண்டாலும் தெரிஞ்சு கொள்ளுங்கோ. பின்னடிக்கு அது பிரியோசனப் படக் கூடும்.

‘அங்கொடை’ – தெரியும்தானே? அது போலத் தான் முல்லேரியாவும். அங்கொடைக்குக் கிட்டத்தில தான் அமைவிடம். முழு லூசுகளுக்கு அங்கொடை எண்டால் அரை லூசுகளுக்கு முல்லேரியா. மூண்டு தரமெண்டாலும் அங்க நான் போய் வந்திருப்பன். இப்ப உங்களுக்குச் சாடையா விளங்கியிருக்கும் என்னைப்பற்றி. விசர் ஆஸ்பத்திரிக்கு வேற ஆர் போவினம்? ஒண்டில் இடாக்குத்தர். அல்லது….?

நான் அந்த அல்லதில் அடக்கம். ஓம். நான் ஒரு பைத்தியம். எப்பவும் இல்லை. அப்ப அப்ப. ஆர்தான் பைத்தியம் இல்லை? எல்லாருக்குள்ளையும் ஒரு பைத்தியக்காரன் இருக்கிறானாம் எண்டு ஆரோ சொன்னானாம். சொன்ன ஆளும் கொஞ்சம் பைத்தியமாத்தான் இருந்திருக்கும்.

உப்புப் போடாத[பெறாத] விஷயங்களுக்காக எல்லாம் பெண் சாதி மாரைப் போட்டுக் கும்மிற புருசன்மாரில இருந்து, – காசுக்காக, காதலுக்காக, புகழுக்காக ,பதவிக்காக எண்டு ஒவ்வொருத்தரும் ஆடுற பைத்தியக்காரக் கூத்துகளைப் பார்க்கும் போது அது உண்மை தான் எண்டு விளங்கும்.

ஆனாலும் எங்களைப்போல ஆக்களைப் பைத்தியம் எண்டு சொல்லக் கூடாதாம் . ‘மன நோயாளி’ எண்டு மரியாதையாத் தான் சொல்ல வேணுமாம்.

ஆரும் உங்கிட காலை அடிச்சு முறிச்சுப் போட்டால் நொண்டித் தானே நீங்கள் நடப்பியள். ஆனால் அவையள் உங்களை நொண்டி எண்டாயினம். கால் ஊனமுற்றவர் அல்லது மாற்றுத் திறனாளி எண்டு கனிவாச் சொல்லுவினம். அப்ப உங்கிட மனசு குளிர்ந்து போயிடுமாம்.

மன நிலை சரியில்லாத ஆள் எண்டதால தான் நான் இப்பிடி அலம்பிறன் எண்டு நீங்கள் நினைப்பியள். எண்டால் அதிலையும் பிழையில்லை. என்னைப் போல எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் எண்டு சொல்லிக் கொள்றவை எல்லாருமே மறை கழண்ட கேசுகள் தான்.

நாடு, இனம், மதம், மொழி எண்டு ஏதோ ஒண்டைக் கட்டிப் புடிச்சுக் கொண்டு, அதுகளுக்காகச் சண்டை பிடிச்சு மண்டைய உடைச்சுக் கொள்றவ எல்லாரும் எங்களை விட மோசமான மனோ வியாதிக்காரர்.

அப்படிப் பாத்தால் ஒட்டு மொத்தமா எல்லாரையும் அங்கொடையிலயோ முல்லேரியாவிலேயோ தான் கொண்டந்து போட வேண்டிக் கிடக்கு. இடப் பிரச்சினையால விட்டு வச்சிருக் கினம் போல.

நான் முதன் முதலாக முல்லேரியாவின் முற்றத்தில் காலடி பதித்தது பதினெட்டு வயதில். அந்த வயதில் அது வரக் கூடாத வருத்தம் தான். ஆடிப்பாடி ஓடித் திரிந்து அனுபவிக்க வேண்டிய வயது.

நானும் ஆடிப்பாடிக் கொண்டுதான் இருந்தன். ஆனால் எனது ஆட்டம் ஒரு தள்ளாட்டமாக, எனது பாட்டு ஒரு அபஸ்வர சங்கீதமாக மற்றவர்களுக்குத் தெரிந்தது.

நானும் அங்க இங்க எண்டு ஓடித் திரிஞ்சு கொண்டு தான் இருந்தன். ஆனால் அதுகூட ஒரு நிதானமில்லாத, ஒரே இடத்தில இருக்க முடியாததால் ஓடுப்பட்டுத் திரிவதாகத்தான் தெரிந்தது.

எல்லோரும் என்னையே பார்ப்பது போல, கண் காணிப்பது போல ஓர் உள்ளுணர்வு. உண்மையும் அதுதான். அம்மா அப்பா அண்ணன் தம்பி என்று எல்லோரும் என்னையே உற்று உற்றுப் பார்த்தார்கள்; மறைந்தி ருந்து அவதானித்தார்கள். உள்ளூர ஒரு பயத்துடன் தான் என்னோடு பழகினார்கள்.

எனது நடத்தை அவர்களைக் கலவரப்படுத்தியது. அவர்களின் நடத்தை எனக்கு எரிச்சல் மூட்டியது. எனது உறவுகளை ஒரு கோபப் பார்வையுடனும் சந்தேகப் பார்வையுடனுமே என்னால் அணுக முடிந்தது. என்னுள் நிகழ்ந்து விட்ட ஒரு மாற்றத்தை, என்னுடன் தொற்றிக் கொண்டு விட்ட ஒரு பரபரப்பை என்னால் உணர முடிந்தது. என்னுள்ளிருந்து ஒரு வன்முறையாளன் வெளிக் கிளம்பத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். எதையும் எவரையும் அடித்துத் துவம்சம் செய்து விடக்கூடிய ஆற்றல் என்னுள் பிரவகிப்பதை என்னால் உணர முடிந்தது.

வீட்டில் நானிருக்கும் வேளைகளில் ஒரு கனத்த மௌனம் கோலோச்சி யது. ஒருவரோடொருவர் நயன பாஷையில் தம்முள் பேசிக் கொண்டார்கள். நானில்லாத வேளையில் ரகசியமாகக் குசுகுசுத்துக் கொள்வார்கள். நான் பிரசன்னமானதும், எனது தலை தெரிந்ததும் ‘கப் சிப்’ பென்று பேச்சு அடங்கி விடும். சொந்த வீட்டிலேயே நான் அந்நியன் ஆக்கப்பட்டேன். எனது அசாதாரண நடத்தைகளை என்னாலேயே கட்டுப் படுத்த இயலவில்லை. யாராலோ ஆட்டுவிக்கப்படும் ஒரு கைப் பாவை போல நான் இயங்கிக் கொண்டிருந்தேன்.

ஒரு வேளை மூர்க்கமாகவும் மறுவேளை ஆதரவைத் தேடும் ஒரு அனாதைச் சிறுவனைப் போல பாவமாகவும் ஏன் நடந்து கொள்கிறேன்? என்னாலேயே என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

மற்றவர்களுக்கு நான் ஒரு புதிராகிப் போனேன். புதிருக்கு விடை தேடி ஐயாவும் அம்மாவும் களைத்துப் போனார்கள். இன்று மாறி விடும் நாளை திருந்தி விடும் என்ற அவர்களின் எதிர்பார்ப்புகள் கானல் நீராகிப் போக, அம்மா சாத்திரியைத் தேடி எனது சாதகத்துடன் ஓடினா.

சாத்திரி முழுப் பழியையும் ராகு கேதுக்களின் தலையிலும் சனியின் நீசப் பார்வையிலும் போட்டு விட்டுத் தப்பிக் கொண்டார். அம்மாவின் பரம்பரையில் யாருக்கேனும் இப்படிச் சித்த சுவாதீனம் வந்ததோ எனும் ஆராய்ச்சியில் ஐயா இறங்கிவிட்டார்.

அண்ணன்தான் முல்லேரியாவுக்குக் கொண்டு போகும் முடிவை எடுத்தார். முடிவெடுப்பது சுலபமாக இருந்தாலும் அதைச் செயல் படுத்துவது அவ்வளவு இலகுவாக அவருக்கு இருக்கவில்லை.

“பைத்தியக்கார ஆசுப்பத்திரிக்கு உன்னைக் கூட்டிக் கொண்டு போகப் போகிறோம் வா” என்று கூப்பிட்டவுடன் வாலையாட்டிக் கொண்டு பின்னால் போகும் நாயைப் போல போவதற்கு நானென்ன ஒன்றும் தெரியாத சின்ன ‘பபா’வே?

கொழும்புக்குச் சற்றுத் தூரமாக இருக்கும் ஏதோ ஒரு ஊரில் இருக்கும் தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டுக்கு எல்லோருமாக ஒரு ;விஸிற் போவதாக ஒரு பொய்யைக் கூறித்தான் என்னை அவர்கள் காரில் ஏற வைத்தார்கள்.

காரின் பின்சீற்றில் என்னை நடுவில் இருத்தி அண்ணன் ஒரு புறமும் அண்ணனது சகலன் ஒரு மறுபுறமுமாக இருந்த போதே விஷயம் ஏதோ பிழைக்கிறதென்று எனது மனதிலும் சாதுவாகப் பொறி தட்டியது. என்றாலும் ‘என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாமே’ என்பதான ஒரு விநோதப் பிரியமும் உள்ளூர உந்த, பேசாமல் வீதியைப் பராக்குப் பார்த்தபடி இருந்துவிட்டேன்.

ஆஸ்பத்திரி வாசலை மிதித்தும் விஷயம் வடிவாக விளங்கி விட்டது. நான் ஓடி விடாமல் இரு புறமும் காபந்து பண்ணியபடி உள்ளே அழைத்துச் சென்ற போது வழி வழியே நின்ற ‘பைத்தியங்கள்’ எங்களை வரவேற்று இளிக்க நானும் பெருமிதமாக அவர்களைப் பார்த்துப் புன்னகை புரிந்து வைத்தேன்.

டொக்ரரின் அறைக்குள் நுழைந்ததும் அவருக்கு முன்னால் இருந்த நாற்காலியில் நானாகப்போய் அமர்ந்து கொண்டேன். எடுத்தவாக்கிலேயே நான் கற்ற ஆங்கிலத்தில் செப்பமாகவும் சரளமாகவும் சளசள வென்று இளக்கி விட ஆரம்பித்தேன். பாவம் டொக்டர். சிங்கள மீடியத்தில் ஆங்கிலம் படித்தவர் போலும். பேய்முழி முழித்த மனுசனுக்கு முதலில் யார் ‘பேஷண்ற்’ என்றே புரியவில்லை.

நான் அண்ணனைக் காட்டி அவருக்குத்தான் சாடையாகச் சுகமில்லை அவரை அனுமதிக்கத் தான் கூட்டி வந்திருக்கிறோம். எனப் ‘பிளேட்’டைத் திருப்பிப் போடவும் அண்ணன் கலவரமாகிவிட்டார். ஏற்கெனவே அண்ணன் கொஞ்சம் ‘நேர்வஸ் ரைப்’ வாய் குழறிப் பேச்சுத் தடுமாறிப் பைத்தியம் தனக்கல்ல எனக்குத்தான் என்பதை விளங்கப்படுத்த அவர் செய்த அபிநயங்களும் எடுப்புச் சாய்ப்புகளும் ‘பைத்தியம்’ அவராகத் தான் இருக்க வேண்டும் எனும் சந்தேகத்தை டொக்டரிடத்தில் ஊர்ஜிதம் செய்ய வைத்துவிட்டன.

டொக்டர் கண்ணால் சாடை செய்ய அருகில் நின்ற அட்டென்டன்மார் இருவர் அண்ணனை அமத்திப் பிடிக்க இரு புறமும் நெருங்கி விட்டனர். இடையில் ஐயா குறுக்கிட்டு விஷயத்தை விளங்கப்படுத்த மினக்கெடவும் [ஐயா இதற்குள் எப்படி வந்தார் என்று உங்களுக்குக் குழப்பமாக இருக்கிறதா? அவரும் புறுபுறுத்தபடி எங்களுடன் வந்ததை நான் தான் சொல்ல மறந்து போனேன். Sorry ! குடும்பமே ‘கழண்ட கேஸுகள்’ தானோ என்று டொக்டர் குழம்பிப் போனார்.

இப்படியாக எதிர்பாராத ஒரு கூத்து அரங்கேறிக் கடைசியில் நான் தான் நோயாளி என்பது உறுதியானதும் டொக்டர் கடுப்பாகி விட்டார். கொஞ்ச நேரம் புளுத்த ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கித் தன்னையே ஒருத்தன் முட்டாளாக ஆக்கி விட்டானே என்று நினைக்கப் புண்ணில் புளிப் பத்தினதுபோல ஆகிவிட்டது அவருக்கு.

பொலீஸ் நிலைய ‘ரிமாண்ட்’ அறைகள் போல அங்கும் சில அறைகள் உள்ளன. கொஞ்சம் கடுமையான ‘மென்ரல்’களை அதற்குள் அடைத்து வைத்து வழிக்குக் கொண்டு வருவார்களாம். ஜெயிலுக்கும் அதற்கும் அவ்வளவாக வித்தியாசம் இராது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளிருப்போர் கைதிகள் போலத் தான். சூழ்நிலைக் கைதியாக நானும் கம்பி எண்ண நேரிட்டது அந்த முல்லேரியாவில் தான்.

அந்தக் காராக்கிரஹமும் ஒரு விதத்தில் எனக்குக் கருணை காட்டியது. ஆரியதாஸ என்ற மறக்க முடியாத ஒரு நண்பனை, உடன் பிறவாச் சகோதரனை நான் சந்தித்தது அங்குதான்.

சொல்லப் போனால் ஆரியதாஸ எல்லா விதத்திலுமே எனக்கு நேர் எதிரானவன். இனத்தால், மதத்தால், படிப்பால், வர்க்கத்தால் ஏன் இருப்பிட அமைவால் கூட நாமிருவரும் நேரெதிர்த் துருவங்கள்.

நான் தமிழன்- சிறுபான்மை இனத்தவன்; அவனோ சிங்களவன் – பெரும்பான்மைச் சமூகத்தவன். நான் பிறப்பால் இந்து. அவனோ புத்த சமயத்தவன். நானோ பல்கலைக் கழகம் கண்டு கலைமாணிப் பட்டத்துடன் வெளிவந்தவன்; அவனோ மழைக்குக் கூடப் பள்ளிக் கூடப் படியேறாது எட்டு மூலைப் பட்டம் விட்டுத் தேறியவன். நான் கல்லூரி விரிவுரையாளரான அரைப் பணக்காரரின் மகன்; அவனோ அன்றாடங் காச்சியான ஒரு கூலித் தொழிலாளியின் மகன். நான் பிறந்ததோ வட புல உச்சியைத் தொட்டுக் கொண்டிருக்கும் பருத்தித்துறையில்; அவனோ தென்பகுதி மூலையில் குந்திக் கொண்டிருக்கும் – இலங்கை வரை படத்தில் கூடப் பெயர் வராத – ஒரு குக்கிராமத்தில். இவை அனைத்துக்கும் மேலாக அவன் பலசாலி; சண்டியன். நானோ நோஞ் சான்; சக்கட்டை.

இவ்வளவு வேற்றுமைகள் எமக்குள் இருந்த போதிலும் கூட எம்மை ஒன்று சேர்த்து வைத்தது அந்த முல்லேரியாவின் இரகசியக் குகை! என்னைக் கண்டவுடன் ஏனோ அவனுக்குப் பிடித்துக் கொண்டுவிட்டது. வாத்ஸல்யத்துடன் என்னைத் தழுவிக் கொண்டான். ‘யாளுவா’ என உரிமையோடு என் தோள் மீது கைபோட்டுக் கொண்டான்.

அவனது நெருக்கம் முதலில் எனக்கு உவப்பானதாக இருக்கவில்லை. சிங்களவர்களைப் பற்றி எனது மனதில் உருவாக்கப்பட்டிருந்த படிமம் அவனை என்னிலிருந்து அந்நியப்படுத்தியது.

ஆனால் பாசாங்கில்லாத அவனது நேசம், அவன் கண்களில் தெரிந்த அந்தக் களங்கமில்லாத அன்பின் வெளிப்பாடு, கொஞ்சம் கொஞ்சமாக எனது இதயத்தில் ஊடுருவி முற்று முழுதாக அவனை அங்கீகரிக்கச் செய்து விட்டது.

முல்லேரியா ஒரு சிங்களவர்களின் சரித்திரப் புகழ் வாய்ந்த ஸ்தலம். அதையிட்டுச் சிங்களவர்கள் பெருமைப் பட்டுக் கொண்டாலும் பிழையில்லை. முழு நாட்டையுமே அப்படியாக ஆக்கிவிடத் துடிப்பவர்களுக்கு இதுவும் ஒரு அற்ப சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகட்டுமே!

தமிழர்களை மருந்துக்குக் கூட அங்கு [ஆமாம் ஆஸ்பத்திரியில் தான்] காண முடியாது. ‘நமக்கெதற்கு வம்பு’ என்று வட+ கிழக்குத் தமிழர்கள் அந்தப் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. மலையகத் தமிழ் ‘லூசுகள்’ மட்டும் ‘நட்’ இறுக்கக் கொஞ்சம் எட்டிப் பார்ப்பதுண்டு. ஆனாலும் தமிழருக்கு எதிரான துவேஷம் எங்கும் போல அங்கும் இருக்கத் தான் செய்தது. கொழும்பில் இருந்ததால் எனக்கும் ஓரளவுக்குச் சிங்களம் கதைக்கத் தெரிந்திருந்தது. ஆனால் அதுவே வில்லங்கமாகவும் போய் விட்டது. என்னைச் சீண்டிப் பார்ப்பதற்காக ஒரு சில ‘சகோதரங்கள்’ என்னுடன் கதை கொடுத்து என் வாயைக் கிண்டிப் பார்ப்பர். அந்த வேளைகளில் ஆபத்பாந்தவனாக அங்கு வந்து நிற்பான் ஆரியதாஸ. அவனை மீறி என்னுடன் யாரும் ‘நொட்ட’ முடியாது.

‘சண்டியன்’ என்றுதான் அவனுக்கு அங்கு பெயர். அவன் புஜபலத்துக்கு முன்னால் பணியாதவர் எவருமிலர். என்மீது ஒரு துரும்பு கூட விழாது என்னை அவன் பாதுகாத்தான். ஏதோ எனக்குக் கடமைப்பட்டவன் போல எனக்காகத் தொண்டு செய்தான். அவனுக்காக நான் எதுவுமே செய்ததில்லை. ஆனாலும் என்னிடத்தில் எதையுமே எதிர்பாராது, ‘எங்கிருந்தோ வந்த’ பாரதியின் கண்ணனைப் போல ஆரியதாஸ எனக்கு ஆகிவிட்டான்.

எனக்காக அவன் பலருடனும் சண்டை போட்டு அவர்களது பகையையும் சம்பாதித்துக் கொண்டான். அவனது வன்முறைகள் காரணமாகப் பலதடவைகள் ‘ஷொக் ட்ரீட்மென்ற்’ கொடுக்கப் பட்டும் அவனியல்பு மாறவில்லை.

Shock Treatment – அதிர்ச்சி வைத்தியம். ஓ! அதை நினைத்தாலே நெஞ்சு பதறி உடல் விதிர்க்கிறது; மூளை விறைக்கிறது. மின் கதிரைப் பாய்ச்சி மரண தண்டனைக் கைதிகளை ஒரே நொடியில் சாகடித்து விடுவார்களாம். ஆனால் இந்தப் பைத்தியக்கார வைத்தியர்களோ மின்னோட்டத்தை, விட்டு விட்டுப் பாய்ச்சி அணுவணுவாகச் சித்திர வதை செய்து கொல்லாமல் கொல்கிறார்களே. என்ன கொடுமையப்பா!

இது சிகிச்சையா அல்லது தண்டனையா? இதைக் கண்டு பிடித்த மேதாவி உயிரோடிருந்தால் அவன் மின்சாரம் தாக்கிச் சாகட்டும். அனுபவித்தவனுக்குத் தானையா தெரியும் அந்த வாதனையும் வேதனையும். பிரசவ வலி என்கிறார்களே அதைவிட இது ஒன்றும் குறைந்ததாக இருக்க முடியாது.

என்னைப் போன்ற ஒருவனால் இதையெல்லாம் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஆனால் ஆர்யாதாஸோ எத்தனை முறை என்றாலும் பூ என்று ஊதித் தள்ளி விட்டு வெற்றி வீரனைப் போல வந்து நிற்பான். அவன் முன்னர் சிங்கள ஊர்காவல் படையில் இருந்தவனாம். நாட்டைக் காக்கப் போகிறேன் என்ற பூரிப்புடன் எடுபட்டுப் போனவன். உள்ளே போனபின் பெற்ற/கற்ற கசப்பான அனுபவங்கள்; சொந்தக் சகோதரர் கள் போன்றவர்களைக் கொன்று குவிக்க நேரிட்ட அவலம்; கண் முன்னே அவன் காண நேரிட்ட கோரச் சாவுகள் – அவனது இளகிய இதயத்தை ஈட்டி கொண்டு ஊடுருவ, ‘போதுமடா சாமி’ என்று சொல் லாமல் கொள்ளாமல் ஓடி வந்தவன் தான் இப்போ இங்கு வந்து சேர்ந் திருக்கிறான்.

உண்மையாகவே அவன் மனம் பேதலித்துப் போய் வந்தானா அல்லது ஆட் பறறாக் குறையால் மீண்டும் இழுத்துக் கொண்டு போய்ப் படை யில் சேர்த்து விடுவார்களோ என்ற அச்சத்தினால் புத்தி சுவாதீனமற்றவனாக நடித்து இங்கு வந்து சேர்ந்தானோ தெரியவில்லை.

அப்பாவித் தமிழர்களுக்குத் தன்னையறியாமலே தானிழைத்து விட்ட அநீதிகளுக்குப் பிராயச் சித்தமாகத் தான் எனக்குத் தொண்டூழியம் செய்து தனது மனப்பாரத்தைக் குறைத்துக் கொண்டானோ..? அதுவும் தெரியவில்லை.

ஆனால் அவன் என்பால் காட்டிய அன்பில் எந்த உள் நோக்கமும் என்னால் காண முடியவில்லை. அவன் தாய் ஒருமுறை அவனைக் காண கிரிபத்தும் ‘காவ்ங்’கும் தொதோலும் கையுமாக வந்தபோது எத்தகைய அன்புடனும் ஆதுரத்துடனும் அதை அவன் என்னுடன் பகிர்ந்து கொண்டான். என்னைத் தனது உடன் பிறவாச் சகோதரன் எனத் தாயிடத்தில் அவன் அறிமுகப் படுத்திய போது அந்தத் தாயும் அதை ஏற்றுக் கொண்டவள் போல என் கரம் பற்றி, ‘புத்தா’ என நிஜமான பிரியத்துடன் தடவிக் கொடுத்த அந்த வேளையில் நானும் அந்த அன்புச் சிறையில் அடைக்கலமாகி விட்டேன்.

ஆரியதாஸவின் அருகாமை அங்கிருந்த மற்றவர்கள் சிலரது மனங் களையும் என் பால் ஈர்த்து விட்டது. அதனால் எமது நட்பு வட்டமும் விரிந்து கொண்டு போனது. சிகிச்சை முடிந்து சில மாதங்களின் பின் நான் வீடு திரும்பியபோது வீடு எனக்கு அந்நியமாகிப் போனது.

தொத்து வியாதிக்காரனிடத்தில் இருந்து விலகி இருப்பது போல என்னை விட்டு ஒவ்வொருவரும் எட்டியே இருந்து கொண்டார்கள். அதிகம் பேச்சுவார்த்தைகள் வைத்துக் கொள்ளாமல் சர்வ ஜாக்கிரதையாகவே என்னுடன் பழகினார்கள் போலிருந்தது. உறவினர் நண்பர்கள் என வீட்டுக்குப் புதிதாக வந்தவர்கள் என்னை எதிர் கொண்டபோது அவர்களின் கண்களில் ஒரு மிரட்சி தென்பட்டது.

இடைப்பட்ட ஒரு சில மாதங்களுள் எனது முகம் அவ்வளவு பயங்கரமானதாக மாறி விட்டதா என்ன? கண்ணாடியின் முன் நின்று எனது முகத்தை நானே பார்த்துக் கொண்டேன். மழிக்கப்படாத மீசை தாடி யில் ஓர் அரை ஞானி போலத் தோற்றம் கொண்டிருந்தேன். பார்க்கப் பயமொன்றும் வரவில்லை. சிரிப்புத் தான் வந்தது. உரக்கச் சிரித்துக் கொண்டேன். சிகரெட் கறை படிந்து பற்களின் அழகைப் பாழ் படுத்தி இருந்தது. அந்தப் பழக்கத்தை விட்டொழித்து விட வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

திடீரென ஏதோ உள்ளுணர்வு உந்தத் திரும்பிப் பார்த்தேன். தூண் மறைவுகளில் இருந்து வெடுக்கெனச் சில தலைகள் உள்வாங்கப் பட்டன. வீட்டுக்குள்ளேயே நான் மற்றவர்களால் வேடிக்கை பார்க்கப்படும் ஒரு விலங்குபோல் ஆகிவிட்டேன். வெளியே புறப்பட்டுப் போனாலும் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் முகங்களில் எல்லாம் அதே அச்சம் கலந்த விடுப்புப் பார்வை.

நான் நானாக இருக்க முடியாத இந்த வீட்டை, ஊரை, உலகத்தை எனக்குப் பிடிக்கவில்லை. இது எனக்கான உலகமில்லை. எனது உலகம் விரிந்து பரந்தது. அங்கு அன்புக்குத் தடையில்லை. அர்த்தமற்ற பேதங்கள் அங்கில்லை. என் சொர்க்க வாசல் எனக்காகத் திறந்திருக்கிறது. அதை நோக்கி நான் அடியெடுத்தது வைக்கப் போகிறேன். ஆமாம். முல்லேரியா என்னை வரவேற்கத் காத்திருக்கிறது!

‘மறைமுதல்வன் சிறுகதைகள்’ [2020 ] நூலில் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *