முறுங்கையை விட்டு இறங்காதவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 1,456 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சினம் தலைக்கேறியது. இது என்ன காட்டுமிராண்டித்தனம்? இவர்கள் மனிதர்களா, வேறு ஏதாவதா? சீருடைகளை அனிந்தவுடனேயே இவர்கள் எல்லோரிடமும் சிங்கத்தின் கொடூரம் புகுந்துவிடுகின்றதா?

புரிந்துணர்வு உடன்பாட்டின்படி படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் போகும்போது எமது அடையாள அட்டைகளைக் காட்டவேண்டும். உடல் சோதனைக்கு உட்படவேண்டும். முகமாலைச் சோதனைச் சாவடியில் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டுதான் உள்ளே வந்தோம். இனி, தரைப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து, கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தீவுப் பகுதிக்கு போவதற்கு மறுபடியும் ஒரு முறை எல்லாவற்றையும் காட்டவேண்டும்.

இந்த இரண்டாவது சோதனை ஆரம்பத்தில் உடன்படிக்கையில் இருக்கவில்லை. கடற்படையினரின் பிடிவாதத்தால் பின்னர் சேர்க்கப்பட்டது. நாம் முரண்படவில்லை. ஏதோ தமது மன நிறைவுக்காக மறுபடியும் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளட்டும். எமக்கென்ன குறைந்தது?

நாம் நினைத்தால் எங்கேயும் எல்லாவற்றையும் நகர்த்தமுடியும் என்பது படைத்தரப்பினர் அறியாததல்ல. இரண்டாம் முறையும் எல்லாவற்றையும் கவிழ்த்து கொட்டுவதில் ஏதோ அவர்களுக்கு அற்ப திருப்தி கிடைத்தால், அதை ஏன் நாம் கெடுக்க வேண்டும்? கவிழ்த்துக் கொட்டட்டும். திருப்பி அடுக்குவதுதான் சற்றுச் சிரமமான விடயம்.

வழமைபோலவே உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்வரை மில்லி மீற்றர் மில்லி மீற்றராகத் தடவல். எமது ஈரலையும் இரப்பையையும் தவிர ஏனைய எல்லா உறுப்புக்களையும் தடவுவார்கள். தடவித் தொலையும் வரை நான்கு சதுர அடி பரப்பளவுள்ள சோதனைக்குழாயின், மன்னிக்கவும், சோதனைக் குடிலின் முகட்டைப் பார்த்துக் கொண்டிருப்போம். வேறென்ன செய்வது?

அந்தப் பெண் சிப்பாய் என்னைத் தடவத் தொடங்கினார். திடீரென நின்றார். நான் அவரது எந்த அசைவையும் பொருட்படுத்தாமல் நின்றேன். ஐயங்களெழுந்தால் வினாவவேண்டியது அவரேயன்றி நானல்ல. எல்லாவற்றையும்விட, அது என்ன” என்றொரு கேள்வியே என்னை அவர் கேட்கவேண்டிய தேவையில்லை. அவர் ஒரு பெண். அவருக்கு அது புரிந்திருக்கவேண்டும். ஆனாலும் என்னை அவர் கேட்டார்.

“என்ன இது?”

இது என்ன விசர்க் கேள்வி? தெரரியாமல் கேட்கின்றாரா? அல்லது தெரிந்துதான்…? அவர் கண்களைப் பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை.

“Sanitary Pad” என்றேன். “ஏய் கழட்டு” என்றார். சினம் தலைக்கேறியது. ‘என்னை ஏய் என்று கூப்பிட நீ யார்? உனக்கு ஏன் கழட்டி காட்டவேண்டும்? காட்டுவதற்கு அதில் என்ன இருக்கும் மடச் சாம்பிராணி? நான் ஒரு இராணுவம். நீ வேறொரு இராணுவம். இரு நாட்டு இராணுவங்களுக்கிடையிலான உறவுகள், மரியாதையான முறையில் இருக்கவேண்டும்.

உங்களுடைய சோதனைக் குடிலின் வாசலுக்கு ஒழுங்கான மறைப்பு இல்லை. கீலங்களாக கிழிந்த நிலையில் தொங்கிக்கொண்டிருக்கும் மறைப்புத் துணி கடற்கரைக் காற்றுக்குக் கிளம்பி தலைக்கு மேலே படபடக்கிறது. அருகருகே நடமாடிக்கொண்டிருக்கும் கடற்படையினர் விரும்பினால், வெளியில் நின்றே இங்கே நடப்பவற்றைப் பார்க்கலாம். இந்த அழகில் நீ என்னை தடவுவதுபோதாதென்று…’ சிரமப்பட்டு கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு,

“கழட்டேலாது” மிகச் சதாரணமாகச் சொல்லி முடிப்பதற்கிடையிலேயே அவர் எனது உடையைக் களைய முற்பட்டார்.

என்னால் கோபத்தை தட்டுப்படுத்தமுடியாமல் போய்விட்டது. காது நரம்புகளுள் இரத்தம் வேகமாகப் பாய்வதை உணர்ந்து கொண்டேன். கைகளும் கால்களும் இறுகி முறுக்கேறத் தொடங்கின. என்னுடைய அம்மாவின் முன்னால்கூட நான் அப்படி நின்றது கிடையாது. நீ யார் என்னைப் பார்ப்பதற்கு?

இந்த நான்கு சதுர அடிக் குடிலினுள் தனித்து நிற்கும் அந்தச் சிப்பாயின் முகத்தில் காலைத் தூக்கி அடித்தால், வெளியில் நிற்கின்ற எல்லாருமே கவனிக்கப்போவதில்லை. மனதுக்குள் ஓடிய சிந்தனையை முகம் வெளிக்காட்டியதோ அல்லது எனது கால் என்னை அறியாமலே மேலே உயர்ந்துவிட்டதோ தெரியவில்லை. அந்தச் சிப்பாய் சட்டென வெளியில் பாய்ந்தார். தன் மொழியில் கத்தினார்.

அருகேயிருந்த சோதனைக் குடிலருகே நின்ற கடற்படையினர் பாய்ந்து வந்தனர். இன்னொரு புறமிருந்த பெண் கடற்படையினர் ஓடி வந்தனர்.

ஒரு கடற்படை வீரன் குடில் வாயிலருகே வந்து, ஆயுதத்தின் சுடுகுழலால் வாயிலின் பாதியை மறைத்தபடி நின்றார். என்ன மிரட்டலா? என்னையா? எந்த நேரமும் சாகத் தயாராக கழுத்தில் சயனைட் குப்பியோடு நிற்கும் என்னை உனது ஆயுதம் என்ன செய்யும்?

நீட்டிக்கொண்டிருந்த சுடுகுழலைப் பொருட்படுத்தாமல் நான் வெளியே வந்து மரத்தோடு சாய்ந்து நின்றேன். தூரத்தே காரைநகர் பச்சை நிற மரக்கூட்டமாக தெரிந்தது. பொன்னாலைக்கும் காரைநகருக்கும் இடையிலிருந்த தரவைக் கடல் சூரிய ஒளியில் தகதகத்தது.

அந்தப் பெண் சிப்பாய் தன் சக சிப்பாய்களிடம் ஏதோ உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தார். கடற்படை வீரர்கள் என்னிலிருந்து சற்றுத் தூரத்தில் நின்று கொள்ள, உயர் அதிகாரி போன்ற ஒருவர் மட்டும் முன்னே வந்தார்.

“What is the Problem?” (என்ன பிரச்சினை) என்றார்.

அமைதியாக நிமிர்ந்து பார்த்தேன். இவர்களுக்கு எதை விளங்கப்படுத்த முடியும்? ஏன் விளங்கப்படுத்தவேண்டும்?

“Nothing* (ஒன்றுமில்லை ) என்றேன். அதற்குள் அந்தப் பெண் சிப்பாய் ஓடிவந்து இவரிடம் ஏதோ உரத்த குரலில் சொன்னார். இவர்தான் இங்கு சோதனை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரியோ? இவர் என் பக்கம் திரும்பி,

“This is usual checkup. You must co operate with us” (செக்கிங் வழமைதானே. நீங்கள் ஒத்துழைக்கவேண்டும்” என்றார்.

“We are co operating for nine months. Your action is not a decent one.” (ஒன்பது மாதமாக ஒத்துழைத்துக்கொண்டுதான் இருக்கின்றோம். இப்போது நடந்தது சோதனை இல்லை, அநாகரிகம்)” என்றேன்.

நிலைமையை புரிந்து கொள்வது அவருக்கு சிரமமானதாகவே இருந்தது. என்னோடு வந்து சோதனையை முடித்துவிட்டு, எனக்காக காத்துக்கொண்டிருந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். என்ன நடந்திருக்கும் என்று அவர்கள் விளங்கிவிட்டிருந்ததை அனல் வீசிக்கொண்டிருந்த அவர்களின் கண்கள் உணர்த்தின.

என்னோடு பேசவந்த அதிகாரியிடம், என்னை தன் விருப்பப்படி சோதிக்க முயன்று தோற்ற பெண் சிப்பாய் மறுபடியும் தன் மொழியில் ஏதோ உரத்துக் கூறினார். அந்த அதிகாரியின் முகம் சங்கடத்துக்குள்ளானது. அருகில் நின்ற இன்னொரு அதிகாரி கேலியாகச் சிரித்தார். “ஆ… நல்லா செக்… செக். கட்டுநாயக்கா தெரியும்தானே” என்றவாறு போனார்.

உங்களுடைய முட்டாளத்தனமான கதைகளை நிறுத்த மாட்டீர்களா? கட்டுநாயக்காவுக்குப் போனவர்கள் அங்கேயா குண்டுகளை வைத்துக் கொண்டுபோனார்கள்? எனது கொதிநிலை உச்சத்துக்குப் போய்விட்டது.

நிலத்தை பார்த்தவாறு நின்ற அதிகாரி திரும்பி நடந்தார். நாலடி வைத்தவர் அந்த இடத்தில் நின்றவாறே என்னை நோக்கித் திரும்பினார். எனது கண்களைச் சந்திக்கச் சிரமப்பட்டார். குனிந்தபடியே என்னருகே வந்தார். தயக்கத்தோடு மெல்லச் சொன்னார்.

“They are also girls. So its not a Problem for you.” (இவர்கள் பெண்கள்தானே. உங்களுக்கு பிரச்சனை இருக்காது.)

ஓகோ! அப்படியெனில், உங்களுக்கும் விடயம் விளங்கிவிட்டதா? விளங்கிய பின்பும் ஒத்துழைப்புப் பற்றி கதைக்கும் உங்களோடு கதைப்பதற்கு என்ன இருக்கிறது? பதிலொன்றும் சொல்லாமல் அவரின் கண்களைப் பார்த்தேன். அவர் நிலத்தைப் பார்த்தார். நடந்து போனார்.

எனக்கு சினத்தை ஏற்படுத்திய கதாநாயகி என்னை பார்த்தார். நான் என்னுடைய ஆட்களைப் பார்த்தேன். என்னோடு கூட வந்தவர் உந்துருளியைத் திருப்பிக்கொண்டு என்னருகே வந்தார். மற்ற நால்வரோடும் கண்களால் பேசிவிட்டு, நாங்கள் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினோம்.

வழியில் ஒன்றுமே பேசவில்லை. தளத்துக்குப் போனோம் வாசலில் நின்றது மகிழினி. அவளிடம் எல்லாவற்றையும் கொட்டவேண்டும் என நினைத்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தேன்.

“ஏன் திரும்பி வந்துவிட்டாய்?” மகிழினி கேட்டிருக்கவேண்டுமே. ஏன் கேட்காமல்… பளீரென மனதில் பொறி தட்டியது. நேற்று மகிழினி காரைநகருக்குப் போகப் புறப்பட்டாள். பின் திருப்பிவந்து விட்டாள். ஏன் என்று கேட்டேன். பதில் வரவில்லை. வேலை நெருக்கடியில் மறுபடியும் அதைக் கேட்க மறந்துவிட்டேன். என்னுடைய அதே நிலையில் இருந்த மகிழினியிடம் நினைவாக அதை நான் கேட்டிருந்தால்… நான் இன்று தயார் நிலையில் போயிருக்கலாம். கேள்வி கேட்ட அந்த கணமே, தன்னை நிலைப்படுத்திக்கொள்ள எதிரிக்கு வந்த வாய்ப்பையுமே கொடுக்காமல் அவரின் முகத்தை முதுகுப் பக்கம் திருப்பி விட்டிருக்கலாம். எதுவுமே நடக்காதது போல்; வெளியில் வந்து நான் காரைநகருக்கே போயிருக்கலாம். திரும்பி வரும்போது கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதையும் சமாளிக்கலாம்.

“ஏன் திரும்பி வந்துவிட்டாய்?” என்ற கேள்வியை ஏன் மகிழினி கேட்கப்போகிறாள்? அனைத்தும் உணர்ந்த ஞானிபோல அவள் என் முன் இருந்தாள்.

“என்ரை நிலையிலைதான் நீயும் போறாய் எண்டு எனக்கு தெரியாது நதி. தெரிஞ்சிருந்தா நேரத்துக்கே நான் சொல்லியிருப்பன்” என்றாள்.

“எனக்கு கட்டுப்படுத்தேலாமல் கோபம் வந்திட்டுது மகிழினி. அடிச்சா என்ன எண்டுகூட யோசிச்சனான்” சிறிது நேர அமைதிக்குப் பின் மகிழினி சொன்னாள்.

“காலையில் நீங்கள் போனாப்பிறகு, முன் வீட்டுப் பிள்ளை கொஞ்ச நேரம் வந்து கதைச்சுக்கொண்டிருந்தா. நேற்றையான் நேவிக்காரனின்ர கதையைச் சொன்னன். நாங்கள் இஞ்ச வாறதுக்கு முதல், பள்ளிக்கூடம் போய் வாற நேரங்களில் தங்களுக்கும் பொடிச் செக்கிங் நடக்கிறதாம். திடீரென்று ரவுண்டப் பண்ணி மறிப்பாங்களாம். றோட்டிலேயே தங்கடை வெள்ளைச் சட்டையைத் தூக்கிப் பாக்கிறவையாம். அதுக்காகவே தாங்கள் அந்த நாட்களில் பள்ளிக்கூடம் போறதில்ல எண்டு அந்தப் பிள்ளை சொல்லிச்சுது.”

– வெளிச்சம் புரட்டாதி கார்த்திகை 2002, மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *