குளிர் நிறைந்த அதிகாலைப் பொழுது பறவைகள் தங்கள் பயணம் தேடி பறந்து செல்கின்றன. சூரியன் மெல்ல எழுந்து வந்து தன்முகத்தைக் காட்டியது. ஒவ்வொரு உயிர்களும் புதிய நாளுக்கான உத்வேகத்துடன் செல்ல ஆயத்தமாகின்றன. ஊரிலிருந்து சற்று தள்ளி ஒரு அரசுமேல்நிலைப்பள்ளி. ஒற்றைப்பெடல் போட்டுக்கொண்டு ஒரு மாணவன் சைக்கிளில் பள்ளிக்கு வந்தான். நேரம் ஆக ஆக மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். பள்ளி அன்றைய நாளை குதூகலமாக்க நினைத்துக் கொண்டிருந்தது. சிறுவயது குழந்தைகள் அந்தப் பள்ளியைக் கடந்து தன் தொடக்கப்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். பட்டாம்பூச்சிகளும் அவர்களுடன் சேர்ந்தே சென்றன.
வெகுதூரத்திலிருந்து வந்து பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கொண்டே இருந்தனர். ஒருவர் பின் ஒருவராக ,அன்றைய நாளில் தான் நடத்தப்போகும் பாடங்கள் குறித்த செய்திகளைப் பறிமாறிக் கொண்டே வந்தனர். ஆசிரியர் முகம்மது தன் வகுப்பில் மாணவர்கள் நடந்து கொள்ளும் சூழலைத் தன் சக ஆசிரியர் தமிழ்ச்செல்வனிடம் சொல்லிக் கொண்டே வந்தார். தமிழ் சார் மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு அறியாமை என்று சொல்வதா ? அகங்காரம் என்று சொல்வதா என தெரியவில்லை. ஏன் சார் என்னாச்சு ,அத ஏன் சார் கேக்கிறீங்க வகுப்பில் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதில்லை. எல்லாம் தெரிந்த மாதிரி நடந்துக்கிறாங்க என்று பேசிக் கொண்டிருக்க பள்ளி வந்தவுடன் இருவரும் தலையாசிரியர் அறைக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுச் சென்றனர்.
முகமது சார் என்ன ஒரே உற்சாகமா இருக்கீங்க போல என்று ஆசிரியர் நூர்ஜஹான் கேட்டர். அதெல்லாம் ஒன்றுமில்லை டீச்சர் . வகுப்பறைக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்ற செயல் என்றாலே உற்சாகம் வரத்தானேச் செய்யும் என்று சொல்லி தன் வகுப்பறை நோக்கி செல்கின்றார்.
என்னப்பா எல்லா மாணவர்களும் வெளியில இருக்கீங்க? வாங்க உள்ளேப் போகலாம். அட சும்மா இருங்க சார். காலையில நீங்க வந்தவுடன் ஆம்பிச்சீட்டீங்களா? சும்மா போய் எங்கனா உட்காருங்க. ஏம்ப்பா இப்படி சொல்ற வாங்க இன்னிக்கு கணக்குல வடியவியல் பாடம் பார்க்கலாம். “தோ பார்ரா சார் வடிவியல்” பாடமெல்லாம் நடத்தப் போராராம். ஏம்பா இப்படி பேசறீங்க உள்ளே வாங்க. பிறகு என்னன்னு பேசிக்கலாம். அதற்கு மாணவர்கள் நான் ஏன் வகுப்பறைக்கு வரணும் என்று கேட்கின்றனர்.
வகுப்பறைக்கு வரமா வேற எங்க போப்போறீங்க என்று ஆசிரியர் கேட்டார். எங்கள் வகுப்பறை இனிமேல் நாலு இடத்தில் இருக்கும். என்னப்பா சொல்ற ,அட ஆமா சார். நாங்கள் எல்லா ஸ்கூலிலும் விசாரிச்சுட்டும். அங்கு படிக்கிற +1 ,+2 ஸ்டூடன்ஸ் வகுப்புல உட்கார மாட்டார்கள். ஆசிரியர்களைக் கிண்டல் செய்வதும் ,மாணவர்களைக் கேலி செய்வதும் என பல வேலைகளில் ஈடுபடுகின்றனர். நாங்களும் இனிமேல் அப்படித்தான் இருப்போம்.
மணி ஏம்பா இப்படி சொல்ற என்று ஆசிரியர் முகமது கேட்டார். நம்ம ஸ்கூல் பேரு வெளியில தெரியவெண்டாமா? தெரியனும்தான் ஆனால் நல்ல விதமா நல்ல பள்ளி என்றும் தேர்ச்சி சதவிதத்தில் சிறந்த பள்ளி என்றும் பெயர் தெரிய வேண்டும். சார் அப்படியெல்லாம் பெயரெடுக்க ரொம்ப நாளாகும். மற்ற பள்ளி மாணவர்கள் செய்வது போன்று நாங்களும் செய்யப் போகிறோம்.
இப்படியெல்லாம் சொல்லாத மணி. சார் நல்லவன்னு பேர் வாங்க லேட்டாகும். கெட்டவன்னு பேர் எடுப்பது ரொம்ப ஈசி சார். ஏம்பா மணி நல்லபள்ளி என்றுதான் நாம் உதாரணமாக இருக்க வேண்டும். டேய் ரமேஷ் என்னடா இவுரு இப்படியெல்லாம் பேசறாரு. நீங்க எல்லாம் சும்மா இருக்கீங்க. சார் ஸ்கூலுக்கு வந்தீங்களா ஒழுங்கா போனமா என்று இருங்கள். அதான் உங்களுக்கு நல்லது. ஆனால் ஆசிரியரோ எல்லாரும் கேட்டுக்கோங்க . இந்தப் பள்ளிக்கூடம் உங்களுக்குக்காதான். அட சூப்பரு, அதத்தான் நாங்களும் சொல்றோம். நாங்க நெனச்சபடி இருக்க எங்கள விடுங்க.
தினமும் நான் சொல்றமாதரிதான் பாடம் கேட்பீங்க எழுதினீங்க இப்ப என்ன ஆச்சு. ஒழுங்கா க்ளாசுல போய் உட்காருங்கள் என்று சொல்ல மாணவர்கள் சத்தம் போட்டனர். மாணவர்கள் கூட்டத்திலிருந்து ஒருவன்” டேய் முகமது மூடிட்டு போ “ என்று சொல்கிறான். ஏம்பா தம்பீங்களா நான் எவ்வளவு நேரம் வகுப்புக்கு போங்கள் என்று சொல்வது. மணி திரும்பி சார் உங்களுக்கு காது கேட்காதா? அதற்கு முகமது கேட்கும் மணி எதற்கு அப்படி கேக்கிற . இல்ல சார் உங்கள என் பிரண்ட் டேய் முகமது என்று சொன்னான் கேட்கவில்லையா? எல்லாம் எனக்கும் கேட்டது. என்ன செய்வது நீங்கள் மாணவர்கள் ஆயிற்றே. நீங்கள் என்ன செஞ்சாலும் உங்களுக்குத்தான் அரசும் மீடியாவும் பெற்றோரும் பரிஞ்சி பேசறாங்களே. எங்கள போன்ற ஆசிரியர்களுக்குப் பிரச்சனை என்றால் யாரும் கேட்க மாட்டார்கள்.
அப்படி சொல்லுங்க உங்களுக்கும் தெரிஞ்சி இருக்குதானே. ஒழுங்கா போங்க என்று மாணவர்கள் ஒன்றாக கூறினர். தம்பிகளா வகுப்பறையே உங்களுக்குத்தான். நான் மட்டும் உள்ள போய் என்ன செய்யப்போறேன். எல்லாரும் உள்ள வாங்கப்பா என்று ஆசிரியர் கூறினார்.
மாணவியர்கள் சிலபேர் “சார் நம்ம நல்லதுக்குதான சொல்றாரு. ஒழுங்கா க்ளாசுக்கு வாங்க என்று கூறுகின்றனர். “தோடா வந்துட்டா பாரு ஒழுங்கா நீயே போயிடு” இல்லனா அசிங்கப்பட்டு போயிடுவ போ . சரிப்பா என்னைக்கு நீங்க ஆசிரியர் சொல்றத கேட்டீங்க.பத்தாவதுலேயே நாங்கதான் பார்த்தோமே என்று மாணவியர்கள் சொல்லிவிட்டு அவர்கள் வகுப்பறைக்குச் சென்றனர். ஆசிரியர் முகமது நீங்கள் வகுப்பறைக்கு வரலைன்னா நானும் இங்கதான் இருப்பேன் என்று சொல்ல மாணவர்கள் மீண்டும் கத்தத் தொடங்கி விடுகின்றனர்.
மணி இதோ இருப்பா வரேன் என்று சொல்லி பள்ளியைவிட்டு வெளியே சென்று சில மாணவர்கள் பத்து நிமிடம் கழித்து மீண்டும் வந்தனர். “எங்கப்பா வாத்தியாரு. ஏய் எல்லாரும் தள்ளுங்கள்” . வாத்தி முகமது சொன்னா புரிஞ்சிக்கமாட்டீயா. ஒழுங்கா வகுப்புக்குப் போ இல்லனா போய் ஸ்டாப்ரூம்ல இருங்க . எங்ககிட்ட வந்து சிக்கிடாத ஓகேவா என்று ஒரு மாணவன் சொல்ல அங்கிருந்த இருபது மாணவர்களும் ஆமாம் ஆமாம் என்று சத்தம் போட்டனர். உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன். புரிஞ்சிகோங்க என்று சொன்னார் முகமது. பார்ரா மறுபடியும் புராணத்த ஆரம்பிச்சிட்டாரு என்று சொல்லிக்கொண்டு இருக்க இதுவரை நிதானமாக இருந்த முகமது சற்று கோபமானார்.
ஒழுங்கா வகுப்பறைக்குப் போங்க இல்லன்னா அடிச்சிடுவேன்..வாத்தி நீ மட்டும் அடிச்சிப்பாரு அவ்வளவுதான் என்று ஒரு மாணவன் சொல்ல அனைத்து மாணவர்களும் முகமதுவைச் சூழ்ந்து கொண்டு நீ அவ்வளவுதான் அவ்வளவுதான் என்று சத்தம் போட ஆரம்பித்தனர். முகமது கோபமாக ஒரு மாணவனை அடிக்க கையை ஓங்கினார். மணி சட்டென்று ஆசிரியரைத் தடுத்து ஒரு அறை விட்டான்.திடுக்கிட்டு போய் முகமது அதிர்ச்சி அடைந்தார். வகுப்பறைக்கு உள்ளே உள்ள மாணவர்களும் வெளியே உள்ள மாணவர்களும் பார்க்க தான் அடிவாங்கிட்டோமே என்று அவமானத்தில் அவதியுற்றார்.
மாணவர்களில் மணியைப் பார்த்து ஏண்டா நம்ம ஆசிரியரை அடிச்ச என்று கேட்டனர். பின் என்னப்பா இவர் நம்ம பசங்க மேல கைய வைக்கப் பாத்தாரு. அதான் நான் அடிச்சிட்டேன் என்று சாதாரணமாக கூறினான் . ரம்யா என்ற மாணவி ஆசிரியர் நம்பள அடிப்பது நம்ம நல்லதுக்குதான என்று மணியைப் பார்த்து கேட்டாள்.
ஆமாம் ரொம்ப சொல்ல வந்திட்டாரு. எங்கள பாத்துக்க எங்களுக்குத் தெரியும். முதல்ல அவரைப் பாத்துக்கச் சொல்லு என்று மாணவர்கள் கோரசாக கத்தினர். இவர்களின் சத்தம் கேட்டு தலைமையாசிரியர் தன் பணியை நிறுத்தி விட்டு வெளியே வந்து பார்க்கின்றார். முகமது சார் என்னாச்சு. எல்லா மாணவர்களும் வெளியில நிக்கறாங்க. எல்லா மாணவர்களும் வகுப்புச் செல்லுங்கள் என்று கூற மாணவர்கள் முடியாது என்று கத்துகின்றனர். ஒரு மாணவன் வாயாலே மேளம் அடித்துக் கொண்டிருந்தார்.
முகமது சார் என்ன ஒரு மாதிரி இருக்கீங்க. என்ன நடந்தது என்று சொல்லுங்கள் என தலையாசிரியர் கேட்டார். சார் மணி என்னை அடிச்சிட்டான் சார். என்னது மணி உங்கள அடிச்சிட்டான்னா? என்னப்பா மணி இதெல்லாம். பாடம் சொல்லித்தர ஆசிரியரை அடிக்கத்தான் பள்ளிக்கு வந்தியா? . இல்ல சார் எங்கள அடிக்க கை ஓங்கினாரு அதான் நான் அடிச்சேன். இங்க பாருங்க ஸ்டூடன்ஸ் உங்களுக்கு எல்லாம் சாதகமாக இருக்குன்னு மட்டும் நெனச்சிடாதீங்க. எல்லாத்துக்கும் ஒரு லெவல் இருக்கு. அதுக்கு மேல போனா சிக்கல் உங்களுக்குத்தான் என்றார். என்ன சார் எங்கள மிரட்றீங்களா ? ஏன் உங்களுக்கும் ஏதாச்சும் வேணுமா என்று நக்கலுடன் சிரித்துக் கொண்டே சில மாணவர்கள் கேட்டனர்.
உங்க அப்பா அம்மா நீங்கள் படிக்கத்தான் பள்ளிக்குப் போறீங்க என்று நெனச்சபடி இருக்காங்க. படிச்சி நல்லா வருவீர்கள் என்று ஆசப்படறாங்க. தான் அடையாததை எல்லாம் நீங்க பெறனும்னு நெனைக்கிறாங்க .அவுங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீங்க. “பார்ரா சொல்ல வந்திட்டாரு நம்ம தலைமை ஆசிரியரும் அட்வைஸ்” . சார் எங்க அப்பா அம்மா குழந்தை குட்டி பற்றியெல்லாம் நாங்க பாத்துக்கிறோம். ஒழுங்கா வேலைக்கு வந்தம்மா உட்கார்ந்தம்மா என்று இருந்திட்டு சாயந்திரம் எந்த பிரச்சனையும் இல்லாம வீட்டுக்குப் போற வழியப் பாருங்க.
தம்பி ஒன்று சொல்றேன் தெரிஞ்சிக்கோ. நீங்கள் செய்யற எல்லாத்தையும் வெளியல இருக்கிறவங்க பார்த்திட்டுத்தான் இருக்காங்க கவனமாக இருங்கள். அரசாங்கமும் அதிகாரிகளும் சமூக செயல்பாட்டாளர் என உலகமே பாத்திட்டு தான் இருக்கு. கவனமாக இருங்கள் சரியா. யாராவது உங்களப் பற்றி ஒரு புகார் தரமாட்டங்களா என்று காவல்துறையும் காத்திட்டு இருக்கு. உங்களப்பத்தி சொல்ல கொஞ்ச நேரம் ஆகாது. ஆனால் உங்கள் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு என்றுதான் எல்லாரும் பாக்கிறாங்க.
சார் எங்களுக்கு எல்லா சப்போட்டும் இருக்கு. ஆசிரியர்களாகிய உங்களுக்குத்தான் எந்த பாதுகாப்பும் இல்ல. அதனால சூதானமாக பிழைச்சிக்கோங்க என்று சொல்லிக் கொண்டே மாணவர்கள் அனைவரும் வெளியே நின்று கொண்டிருந்தனர். அதில் ஒரு மாணவன் தன் பாக்கெட்டில் வைத்திருந்த சிகரெட்டை எடுத்து பத்த வைத்துக்கொண்டு இருந்தான். மற்ற மாணவர்கள் காதில் கேட்கக்கூடாத வார்த்தைகளைப் பேசிக்கொண்டு சென்றனர்.
தலைமை ஆசிரியர் திகைத்துக்கொண்டு நிற்க வகுப்பிற்குச் சென்று வந்த மற்ற ஆசிரியர்களும் ஒவ்வொருவராக தங்களுடைய வகுப்பிற்குச் சென்றனர். ஆசிரியர்கள் ஒழுங்காக வேலைப் பார்த்து என்ன பிரயோஜனம். யாருக்காக பள்ளி இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளலாமல், நடப்பு சிறு சிறு இன்பங்களிலே கவனம் செலுத்தும் மாணவர்களின் நிலை என்று மாறுமோ என்று நினைத்துக்கொண்டே தன் அறைக்குச் சென்றார் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர். மீடியாவும் இளைய தலைமுறையினருக்கு நல்லதைக் கற்றுத்தராமல் கெட்டதையே போதிக்கின்றன. நாம் என்ன செய்வது என்று முகமது ஆசிரியரும் அடுத்த வகுப்பிற்கு பயணிக்கலானார்.