கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 7,547 
 

அரசு மருத்துவமனை.

வெள்ளை நிறத்தில் மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது.

படுக்கையில் காலில் கட்டுடன் மூர்த்தி படுத்திருந்தான். சவரம் செய்யாத முகம். கண்களில் களையே இல்லை. கலைந்திருந்த தலை அவன் பல நாட்களாக இங்குதான் இருக்கிறான் என்பதைச் சொன்னது. கையில் பச்சை குத்தியிருந்த “லட்சுமி” என்ற பெயரைப் பார்த்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தவன், தன் காலை யாரோ தொட்டுப் பார்ப்பதை உணர்ந்து லேசாகத் திடுக்கிட்டு எழ,

அருகில் இருந்த டாக்டர் அவன் காலைத் தொட்டுப் பார்த்தபடி,

“வலிக்கிதா மூர்த்தி?…”

என்று கேட்டார்.

கண்களில் இருந்த அழுக்கைத் துடைத்தபடி,

“ம்…”

ஆமாம் என்பதுபோல் தலையாட்டினான்.

பக்கத்திலிருந்த நர்ஸிடம் ஏதோ ஆங்கியப் பெயரைச் சொல்ல, அவள் ஒரு சிரிஞ்சில் மருந்தைச் செலுத்திக் கொடுத்தாள்.

சிரிஞ்சை அழுத்தி சிறிது மருந்துத் துளிகளை வெளியே பீய்ச்சிவிட்டுப் பிறகு மூர்த்திக்கு ஊசி போட்டார்.

மூர்த்தி கையில் ஒரு பஞ்சுத் துண்டைக் கொடுத்துத் தேய்த்துக் கொள்ளச் சொல்லும்படி சொல்லிவிட்டு நர்ஸுடன் வந்த டாக்டரை அந்த வார்டின் முனையில் இருந்து பரமசிவம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைக் கடந்து சென்ற டாக்டரிடம்,

“இப்ப எப்படி டாக்டர் இருக்கு?…”

“ம்… கொஞ்சம் பெட்டரா இருக்கு…”

“எப்ப ஃபுல்லா கியூராகும்?…”

“ஒரு அஞ்சாறு நாள்…”

என்று சொல்லிக் கொண்டே அவர் அறைக்குச் செல்ல,

“அஞ்சாறு நாளா?…”

என்று அதிர்ச்சியாகக் கேட்க,

உள்ளே சென்ற டாக்டர் உட்கார்ந்து கொண்டே,

“அதுக்கு ஏன் அவ்வளவு ஷாக் ஆகுறீங்க?… அவரால உங்க வேலை நிக்கிதா என்ன?…”

பரமசிவம் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியுடன் பெருமூச்சு விட்டார்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு.

மூர்த்தியின் கட்டு அவிழ்க்கப் பட்டது.

மூர்த்தி எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

முன்னும் பின்னுமாக இரண்டு முறை டாக்டர் நடக்கச் சொன்னார்.

நடந்தான்.

நின்று கொண்டிருந்த பரமசிவத்திடம்,

“ஹீ இஸ் ஆல்ரைட் நௌ… யூ கேன் டேக் ஹிம்…”

“அவன் உடம்புக்கு வேற ஏதும் பிரச்சனை இல்லேல்ல டாக்டர்?…”

லேசான சலிப்புடன் டாக்டர்,

“ப்ச்ச்…”

என்று சொல்லி நர்ஸிடம் திரும்பி,

“ஃபார்மாலிட்டிஸ்லாம் பண்ணிடுங்க…”

என்று சொல்ல,

நர்ஸ் சரி என்றபடித் தலையாட்டிவிட்டுச் சென்றாள்.

மூர்த்தி முன்னால் நடக்க அவனைத் தொடர்ந்து நடந்த பரமசிவம் தன் பாக்கெட்டிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்துவிட்டுக் கையில் வைத்துக் கொண்டார்.

தன் சீட்டில் வந்து உட்கார்ந்த டாக்டரிடம் சில காகிதங்களை நர்ஸ் வைக்க, அதை டாக்டர் பிரித்துப் பார்க்க, அதனுடன் பரமசிவம் வைத்திருந்த காகிதமும் பின் பண்ணப்பட்டிருந்தது.
அதைப் பார்த்த டாக்டர் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த மூர்த்தியைப் பார்த்தார்.

மீண்டும் அந்தக் காகிதத்தைப் பார்க்க,

அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்,

“கொலைக்குற்றம் சாட்டப்பட்ட மூர்த்தி என்பவர்மீது எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி குற்றம் நிரூபிக்கப் பட்டதால் இபிகோ 302-ஆம் பிரிவின் கீழ் குற்றவாளியை சாகும்வரை தூக்கிலிடும்படி இந்த மதிப்பிற்குரிய நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது…”

என்று எழுதப்பட்டு இறுதியில் பேனாவின் நிப் உடைக்கப்பட்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *