(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கிராமத்திற்கு நிறைகுடம் போல், அமைதியாக ஆனால் மிகத் தெளிவாக வரட்சிகளைக் கண்டு வற்றிப் போகாத அந்தப் பெரிய குளத்தை நோக்கி அவன் நடந்து கொண்டிருக்கிறான்.
நேற்று நடந்து முடிந்த சம்பவம் அவன் நெஞ்சைப் பிளந்து தலைகுனியச் செய்து விட்டது. கடந்த காலங்களில் இப்படி எத்தனையோ தலைகுனிவுகளை எதிர்நோக்க வேண்டி யிருந்தாலும் படித்த கூட்டத்திலிருந்து அவன் இதைச் சற் றும் எதிர் பார்க்கவில்லை. கல்விமான்களுக்கு முன்னால் தலை நிமிர்ந்து நிற்கலாம்: அவர்களும் தலைநிமிர்ந்து நோக்கு வார்கள் என்று தான் அவன் எதிர்பார்த்தான். இப்படி வரண்ட ‘வெறுங்குடமாகி’ நிற்பார்கள் என்று…
ஒருபெரிய துணிமூட்டை முதுகை அழுத்திக் கொண் டிருக்கிறது. கூனிக்குறுகி நடக்கிறான். பொதி அழுத்து கிறதே என்பதற்காக அல்ல. அது பழக்கப்பட்ட தொழில். அவனுக்கு பெரும் சுமை அல்ல.
துணிகளில் உள்ள அழுக்கைப் போக்கி உலர்த்தி, காயவைத்து, தேய்த்து மடித்து பளிச்சென்று எடுத்துக் காட்டுவது அவனுக்குக் கைவந்த கலை. வாழ்க்கை ஒட்டத் திற்காக எடுத்துக்கொண்ட புனிதமான தொழில். கற்றுக் கொண்ட தொழில் நுட்பங்களால் ஒவ்வொரு முறையும் புசு தம் புதியது போல் அழகு காட்டும். அணிகலன்களை அணிந்து கண்ணாடிக்கு முன்னால் அழகு பார்த்து ரசித்து நடைபயிலும் கூட்டத்தைக் கண்டால், ஒருபுறம் கோபம், மறுபுறம் மனம் பூரிக்கும். தன் தொழிலின் வனப்பை அவன் மற்றவர்களிடத்திலிருந்து தானே கண்டு ரசிக்க வேண்டும்.
ஆனால் அவனை அவர்கள் எப்படி நோக்குகிறார்கள்.
அவன் மனத்தைப் பிழிந்தெடுக்கும் அப்பிரச்சினையை அவனாலும் அவனது திறமையை உபயோகித்து ரசிக்கும் அவர்களாலும் முரண்பாடுகளைக் களைந்தெறிய முடியாமல் இருப்பது ஒரு சாபக் கேடா? அல்லது அந்தப் ‘பலப்பரீட் சையில்’ ‘நாங்களும் இப்படித்தான்’ என்று காட்டி விட்டார்களா?
அதுவும் இந்த கற்பிக்கும் அல்லது வழிகாட்டும் சமூகத்தாலும் கூட…
அதுதான் அவனுக்கு குத்தும் மனவேதனை.
“என்னப்பா சங்கன்…ஒன எங்கெல்லாம் தேடியது…என்னெண்டா சந்திரகலாவும் தாயும் மூக்கைச் சிந்திக் கிட்டு இருந்தா, கலாவ பாலனோட அனுப்பிட்டுத்தான் வாறேன். நடந்தது ஏதோ நடந்து முடிஞ்சிது. இப்ப வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது. மூட்டையை நான் தூக்கிக்கிறேன். வெய்யில் ஏற முந்தி வா நடப்போம்.”
ஐம்பதைத் தாண்டி இரண்டொரு வருடங்கள் என்று ஊகித்தாலும், வைரம் போன்ற ஆரோக்கிய உடம்பு வயதை மூடி மறைத்தாலும், காவி நிறச் சாரத்திற்கு மேலால் விடப்பட்டிருக்கும் முழுக்கை வெள்ளை பனியன் ‘வயசாளி’ தோற்றத்தைக் கொடுக்கிறது. கண்களின் ஊடாகவே அந்த நல்ல உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கலாம்.
நண்பன் முத்து பொதியைச் சுமக்க, அவனது சுவடு களைப் பின்தொடர்ந்து அவன் நடக்கிறான். தன் மனச் சுமையை யார் சுமப்பது.?
“மகள் சந்திரகலா இன்னக்கி ஸ்கூலுக்குப் போகமாட்டாள்”என்றுதான் அவன் நினைத்தான். ஆனால் முத்து எப்படியோ சமாதானப்படுத்தி பாலனோடு அனுப்பிவிட்டான் அதில் அவனுக்கு ஒரு திருப்தி.
“சந்திரகலாவுக்கு வயது வந்துவிட்டது” என்று அறிவித்திருந்தாலும், ஏழெட்டு நாட்களுக்குப் பிறகு நேற்றுக் காலை அவன் அவளைப் பாடசாலைக்கு அழைத்துக்கொண்டு போயிருந்தான்.
“என்ன இதெல்லாம்” என்று தொடங்கிய அதிபர், புன்முறுவலை வரவளைத்துக் கொண்டு சம்பிரதாயத்திற்காக சில வார்த்தைகளை உதிர்த்து முடிப்பதற்குள், அவன் தான் கொண்டு வந்த பெரிய ‘தாம்பாளத்தட்டை’ மேசை மீது இறக்கி வைத்தான்.
அவன் சற்று நேரம் விறாந்தையில் ஒதுங்கி இருந்து விட்டு…
“எப்படியோ மகள் சந்திரகலாவும் தன் அண்ண ன் பாலனைப்போலவே அரசாங்க சோதனையில் பாஸ் பண்ணி விட்டால் நல்லம். கலாவும் பாலனைப் போல திறமைசாலி தான், சந்தேகமில்லை. பாலன் முதற் தடவையிலேயே மூன்று திறமை சித்திகளுடன் ‘அட்வான்ஸ் லெவல்’ சித்தியவடந்த வன் தான். இருபது வயதிலேயே மத்திய கிழக்கு நாடுகளின் உத்தியோக மோகம் அவனையும் பீடித்திருந்தது. ஆங்கில மொழியில் கூடுதலான அறிவை ஆங்கில ஆசிரியையிடம் வளர்த்துக் கொண்டிருந்தான். ஒரு டியூட்டறியில் ஆங்கில ‘டைப்பிங்’ பயிற்சி வேறு. அவன் எப்படியும் கடல் கடந்து போகத்தான்…”
தட்டத்தை இறக்கி வைத்து, நீண்ட நேரம் பலதும் பத்தும் யோசித்துக்கொண்டிருந்து போய்விட்டான். தட்டத்தைக் கொண்டு வந்திருந்தபோது இருந்த உற்சாகம் இப்பொழுது அவனை அறியாமலே பறந்து விட்டது
தலைமையாசிரியருக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. ஒரு புத்திசாலித்தனமான யுக்தியைக் கையாண்டு…அந்தப் பெரிய தட்டத்தை ஒரு மூலையில், வெறுமனே இருக்கிற மேசைக்கு, இரு பெரிய வகுப்பு மாணவர்களைக் கொண்டு ‘தண்டனை’ இடமாற்றம் செய்தார். அப்புறம் ‘வேண்டியதொன்று நடக்கட்டும் ….என்ற மனோபாவத்தில் – ‘சந்திரகலாவின் வீட்டிலிருந்து பண்டங்கள் வந்து கிடக்குது’ என்று ஆசிரியர்களுக்கு ‘வாய்மூலம் சுற்று நிருபம் அனுப்பிவிட்டு மெல்ல நழுவிவிட்டார். ‘இனி ஆசிரிய குழாத்தார் பாடுதான்.’
ஒவ்வொரு நாற்பது நிமிட மணியோசையைத் தொடர்ந்து வகுப்பறைகளில் பாடங்கள் சூடுபிடிக்கின்றன. நான்காவது பாட வேளைக்குப் பிறகு இடைவேளை வந்து விட்டது.
கவலைகளைச் சுமந்து சென்றவன். தான் கொண்டுவந்த பண்டங்கள் காலியான பிறகு, வெறுந் தட்டத்தை திருப்பி எடுப்பதற்காக மீண்டும் மெளனமாக வந்து கூர்ந்து அவ தானிக்கிறான்.
ஆசிரியர்கள் கூடிக் கூடிப் பேசிக்கொள்கின்றனர்: அதிபர் உட்படத்தான். ‘என்ன இருந்தாலும் விருந்து கொண்டு வந்து படைக்கும் அளவுக்கு அவனுக்கு என்ன திமிர்’ ஆசிரியர்களுக்காகத் தேநீர் தயாரிப்பு நடக்கிறது. இரண்டு சிறுமிகளுக்கு மும்முரமான வேலை. ‘கன்டீன் வசதியோ…அருகில் நேநீர்க் கடைகளோ இல்லை.’
பாலர் வகுப்பு மிஸ் பையனை கடைக்கு அனுப்புகிறாள்.
மாமரத்து நிழலில் மறைந்து நின்று கொண்டிருந்தவன் கடைக்கு ஓடும் பையனிடம் ‘எங்கேடா தம்பி போறே… ‘ என்று கேட்க, ‘மிஸ்ஸுக்கு பாண் வாங்கப் போறன்’ என்று அவன் தெளிவாகச் சொன்னதற்குப் பிறகுதான் அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. ‘அவர்களும் கிராமத்தில் உள்ள எல்லாரையும் போலத்தான்.’
அவன் இரண்டு நாட்களுக்கு முன் ‘வெளுத்து’ அனுப்பியிருந்த ‘றோஸ்’ நிறச் சேலையைத்தான் பாலர் வகுப்பு மிஸ் பளீரென்று அணிந்திருந்தாள்.
வழக்கம் போல் சில ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். சிலர் நாளாந்தப் பத்திரிகைகளில் மூழ்கி இருக்கின்றனர்.
பதினைந்து நிமிடங்களில் இடைவேளை முடிந்து மீண்டும் வகுப்புகள் களை கட்டுகின்றன.
வித்தியாலயத்தில் பத்துவரை வகுப்புகள் இருக்கின்றன. ஆங்கிலம், தமிழ், கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம், சிங்க ளம் என்று ஒவ்வொரு பாடத்திற்கும் விஷேட ஆசிரியர்கள் உட்பட சுமார் இருபத்தைந்து பேர் கடமை புரிகின்றார்கள்.
அவன் காலையில் வைத்துவிட்டுப் போன தட்டு தீண்டு வாரற்று..இடை வேளைக்குப் பிறகு நான்காவது முறையாக உள்ளறைக்கு நகர்த்தப்பட்ட பண்டங்களுக்கு என்ன வாயிற்று? எவரும் அக்கறை காட்டுவதாக இல்லை.
‘இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல, அது மனிதனை மனிதனாக வாழ வழிகாட்டும் மார்க்கம்’ என்று பேசும் மஃறுப் மாஸ்டர் கூட அன்று பேசாமடந்தை.
திடீரென்று அதிபர் கைக் கடிகாரத்தைப் பார்த்தார்.
கீழ்ப்பிரிவுப் பிள்ளைகளை விடுவிக்கும் நேரம் சரி. அதிபருக்கு ஓர் அற்புதமான யோசனை தோன்றியது.
கீழ் வகுப்புப் பிள்ளைகளுக்கு கொஞ்சத்தைப் பங்கிட்டு விட்டால் என்ன?
அந்த முயற்சியும் படுதோல்வி, சக ஆசிரியர்கள் எல்லாம் வாளாவிருக்கிறார்கள். இந்த ‘அதிபர்’ பதவியின் மீதே அவருக்கு வெறுப்புத் தட்டியது.
“இன்றைக்கு ஸ்கூல்ல பழம், பால்சோறெல்லாம் கொடுப்பாங்க…அதென்னத்தையும் தொடக்கூடாது, வயிற்றுவலி வந்துவிடும். எதையும் தின்னவேணாம்.”
இப்படி பெற்றார் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தித்தான் அனுப்பியிருப்பார்கள். இன்று வரவும் மோசம். இதெல்லாம் அதிபருக்கு புதிதல்ல.
தனது வகுப்பறையிலிருந்து ஆவலோடு அவதானித்துக் கொண்டிருந்த சந்திரகலாவுக்கு ஒன்று புரிந்துவிட்டது.
“தட்டத்திலுள்ள பண்டங்களை எவரும் தீண்டவில்லை; நம் சாதிக்காரர்கள் கொடுத்ததை இவங்க சாப்பிடமாட்டாங்க…”
அவளுடைய முகம் குளக்கரையில் உச்சி வெய்யிலில் வாடும் மலரைப்போல் காட்சியளிக்கிறது.
ஆசிரியர்களைக் கௌரவிக்கவேண்டும் என்பது சங்கனின் நீண்டநாள் ஆசை. இப்படி ஒரு சந்தர்ப்பம் கிட்டியதை நன்கு பயன்படுத்திக் கொண்டான்.
வெளியில் அடுப்பு மூட்டி, புதுப்பானையில், அதி விஷேட மாகத் தயாரித்த வகைவகையான உணவுகள்….
செலவைப்பற்றி அவன் யோசிக்கவில்லை. அவனுடைய வருமானத்தைப் பொறுத்தவரையில் சற்று அதிகம்தான். இதற்காக செலவழித்ததை ஒதுக்கியிருந்தாலும் ஒரு பண் டிகையைக் குடும்பத்தோடும், உறவினர்களோடும் விமரிசை யாகக் கொண்டாடியிருக்கலாம். பின் தங்கிய கிராமங்களில் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது மரபு. அவர்களுக்கு மந்திரிமாரின் கௌரவமும் மதிப்பும் அதற்காகத்தான் அவனும்…
பாடசாலை முடிய பதினைந்து நிமிடங்கள் இருக்கும்போது வழக்கமாக வியாபிக்கும் அந்த இரைச்சலுக்கும் பரபரப்புக் கும் மத்தியில், தட்டத்தில் பரத்திக் கிடந்தவை மர்மமாக மறைந்து விட்டன. இரண்டு பழைய ‘பிஸ்கட்’ பெட்டிக் குள் அவை அடக்கம் செய்யப்பட்டு விட்டதை எவரும் கவனிக்கவில்லை.
அவனுக்கு ஒரே குழப்பமாகவும் புரியாத புதிராகவும் இருந்தது. அதற்குமேல் அவன் அங்கு நிற்கவில்லை.
பாடசாலை விட்டு எல்லாரும் கலைந்து சென்றபின்னர், அதிபர் திருப்பிக் கொடுத்த வெறுந் தட்டத்தோடு சந்திரகலா வீடு வந்து சேர்ந்தாள்.
முத்து சுமையை இறக்கிவிட்டான்.
“அப்ப நீ சுறுக்கா வேலையை ஆரம்பி நான் டவுனுக்குப் போய் பன்னிரண்டு மணிக்கு முன்னால வந்திடுவேன்.”
தென்னந் தோப்புக்குள் நெளியும் ஓர் ஒற்றையடிப் பாதையில் விறுவிறென்று நடக்கிறான். தூரத்தே ரயில் பாதையை ஊடறுக்கும் தார்ரோடு கருப்பாக மின்னுகிறது. அவ்விடத்திலிருந்து பஸ்வண்டி அல்லது ‘பிரைவேட் கோச்’ எடுத்தால், பதினைந்து நிமிடங்களில், மீன்பிடியைப் பிரதான மாகக்கொண்ட பிரதேசத்தின் பிரபலமான முத்துப்புரத்தை அடைந்துவிடலாம்.
நகரைச்சுற்றி ஏழெட்டு மைல்கள் சுற்று வட்டத்தில் உள்ள எல்லா கிராமவாசிகளின் அன்றாடத் தேவைகளுக்கு நகரத்திற்குத்தான் வந்தாகவேண்டும். முந்துப்பந்தி என் னும் இக்கிராமத்தில் இநீதுக்கள் செறிந்து வாழ்கின்றனர். பரந்த தென்னந் தோப்புகளும் வயல்களும் அணிசெய்கின்றன. கள் இறக்குவோர், விவசாயிகள், அரச ஊழியர்கள் என்று பலதரப்பட்டவர்கள் வாழ்கிறார்கள். நாட்டின் நாலா பக்கங்களிலும் கடமை புரிபவர்களை விடுமுறை நாட்களில் தான் காண முடியும். கிராமத்திலுள்ள இந்துக் கோயில் சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பது ஊருக்குப் பெருமை தான்.
சங்கன் மூட்டையை அவிழ்த்து, தண்ணீரில் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து ஊறப்போட்டும் இடத்திலிருந்து பத்துப் பன்னிரண்டு அடி கீழே குளித்துக் கொண்டிருந்த பாலர் வகுப்பு மிஸ்ஸுக்கு வந்தது கோபம். ‘அழுக்கு நீரையா அள்ளிக் குளிக்கிறேன்….சீ…சனியன்’ சற்று மேலே போய் தொடர்கிறாள்.
அவனது இதழ்கடையோரத்தில் ஊமைச் சிரிப்பொன்று நெளிந்து மறைகின்றது. ‘ஓடும் தண்ணீரும், இந்தப் பெரிய குளத்துத் தண்ணீரும் சுத்தமானது’ என்பது தெரியாதா?
துணிகளைச் சோப்புப் போட்டுத் தேய்த்து துவைப்பதற்காக அருகில் உள்ள கல்லின்மேல் குவிக்கின்றான். அவன் அப்படிச் செய்யும் லாவகத்திலேயே அவை சுத்தமாகி விடுகின்றன. பார்க்கிறவர்களுக்கு ‘இதிலே என்ன அருவருப்பு ஒட்டிக் கிடக்கிறது’ என்று கேட்கத் தோன்றும்.
ஆசிரியை அவசரமாகக் குளித்துவிட்டு ஓட்டமும் நடையு மாகச் சென்று மறைகிறாள். நேரம் பிந்தினால், பாடசாலை யில் சிவப்புக் கோட்டுக்குக் கீழே ஒப்பமிட நேர்ந்து விடும். விரைவில் ‘பென்சனில்’ போகவிருப்பதால் ஒவ்வொரு விடயத்திலும் மிகக் கவனம்.
எல்லாவற்றையும் துவைத்து, மீண்டும் மூட்டையைக் கட்டி எடுப்பதற்குள் அவன் உடம்பெல்லாம் வியர்வையில் தோய்ந்துவிட்டது.
டவுனுக்குப்போன முத்துவும் வந்துவிட்டான். அவனோடு ‘டைப்ரைட்டிங் கிளாஸ்’ முடிந்து பாலனும் வருகிறான்.
“நம்ம பாலன் மட்டும் சவூதிக்குப் பெய்த்திட்டா…எல்லாத்துக்கும் ஒரு முழுக்குப் போட்டிடலாம்.” முத்து வின் எதிர்பார்ப்பு.
மூவரும் சேரியை நோக்கி நடக்கிறார்கள். இடைக் கிடை முத்துவும் பாலனும் ஏதேதோ கதைத்துக்கொண்டு முன்னால் செல்கிறார்கள். சங்கன் அமைதியாக நடக்கிறான். ஈரத்துணிகளின் பாரம் இரு மடங்காகி முதுகைக் குத்து கிறது. சற்று நேரத்திற்குப் பிறகு பாலன் சுமக்கிறான். அவன் இளைஞன் தானே!.
நடந்து சென்றவர்கள் மூன்று ஒற்றையடிப் பாதைகள் பிரியும் சந்தியில் சற்று நிற்கிறார்கள். ஒன்றரை மணி பிந்திவிட்டதால், எதிரே சாலையில், இருநூறு யார் தூரத் தில் உள்ள வித்தியாலயம் வெறிச்சோடிக் கிடக்கும்.
மாணவர்களுக்கு அரசு இலவசமாகக் கொடுக்கும் ‘கெயர் பிஸ்கட்’ சிதறல்களைப் பொறுக்கத்தான் காகங்கள் பாடசாலைச் சுற்றாடலில் பறந்து திரிவது வழக்கம்.
ஆனால் அந்த இயல்பான நிகழ்ச்சியில் இன்று ஒரு மாற்றம்.
காகக் கூட்டம் பல்கிப் பெருகி அங்கும் இங்கும் வட்ட மிடும் புதினம் என்ன?
ஒருவேளை விலங்குகள் எவையும் செத்துக் கிடக்கின்றனவோ? ஏதோ ஒன்று மடிந்து நாறிக்கிடக்கிறதோ என்பதைத் துல்லியமாக உலகுக்கு பறை சாற்றுகின்ற காகக் கூட்டம்.
பாடசாலை வழியாகச் சென்றவர்களுக்கு அதைப் பார்த் ததும் விசயம் விளங்கிவிட்டது. கிராமப் புறங்களில் ஒரு கோடியில் சேவல் கூவினாலும் அது யாருடையது என்று பட்டென்று இனங்கண்டு கொள்ள முடியும் தானே.!
விடயம் பரவியதும்-
துணிப் பொதியை ஒரு மரத்தடியில் இறக்கி வைத்து விட்டு, சங்கன், பாலன், முத்து முதலியோருடன் விரைந்தான். அவர்கள் ஓட்டமும் நடையுமாக சென்று பார்த்த போது –
மனிதரால் நிராகரிக்கப்பட்ட பாற்சோறு, பலகாரங் கள், பழங்கள்’ யாவும் அப்படியே குப்பைக் குழியில் கொட்டிக் கிடக்கின்றன.
நாயொன்று பாற்சோற்றைச் சுவைக்கின்றது. காகங் கள் காலால் கிளறிக் கொத்தித் தின்கின்றன. இடைக்கிடை நாய் உறுமிக் குரைத்து காகங்களை விரட்டுகின்றது. போராட்டத்திற்கு மத்தியில் இரண்டுக்கும் உணவாகிக் கொண்டிருக்கிறது.
– மல்லிகை – ஒக்டோபர், 1986.
– இரவின் ராகங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு : ஜூலை 1987, மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம்.