அந்தக் குளிர்கால இரவின் சுகமான தூக்கம் அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அது கனவில் வரும் ஓசையா அல்லது நிஜம்தானா?.. தூக்கத்திலேயே குழம்பினான். மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை கேட்கவே, எழுந்திழுருக்க மனமில்லாமல் எழுந்தமர்ந்து கண்களைக் கசக்கினான். இரவு விளக்கின் மங்கலான வெளிச்சத்திலும் அவனால் முழுதாக கண்களைத் திறந்து பார்க்க முடியவில்லை. கண்களை இடுக்கியவாறு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தபொழுது மணி ஒன்றரையைக் காட்டியது. இந்த முறைக் கதவு தட்டப்படும் ஒசையோடு, “குமாரு..குமாரு..” என்று பக்கத்து வீட்டு வேங்கடசாமியின் குரலும் சேர்ந்து கேட்கவே, மெல்ல எழுந்து கதவைத் திறந்தான்.
அரைக்கை வெள்ளைச் சட்டையும், மடித்துக்கட்டிய லுங்கியும், தலையில் முண்டாசுமாக வேங்கடசாமி தயாராகா நின்று கொண்டிருந்தார்.
“நேரமாச்சு குமாரு.. சீக்கிரமா கிளம்பு..” என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்காக காத்திராமல் நகர்ந்து சென்று தன் வீட்டு வாசற் படிக்கட்டில் அமர்ந்து சிகரெட் ஒன்றை புகைக்க ஆரம்பித்தார்.
கொல்லைப்புறம் சென்று சில்லென்றிருந்த தொட்டித் தண்ணீரில் முகத்தைக் கழுவித் துண்டில் துடைத்தவாறே யோசித்தான். “ஃபேன்ட் போட்டுப் போகலாமா.. இல்லை இப்படியே லுங்கியோடே போகலாமா?” … வெளியில் வேங்கடசாமி மடித்துக்கட்டிய லுங்கியுடன் நிற்பது நினைவில் வந்தது. “ஆமா என்ன பெருசா ஃபேன்ட் வேண்டிக் கெடக்கு..” என்று தனக்குள் முணுமுணுத்தவனாக சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு கட்டியிருந்த லுங்கியோடு வெளியில் கிளம்பி வந்தான். வேங்கடசாமி அதற்குள் அந்த சிகரெட்டை புகைத்து முடித்திருந்தார். “தலைக்கு ஒன்னும் மாட்டிக்கெடலயா? பனி அதிகமா இருக்கு..” என்றார். “பரவாயில்ல.. இருக்கட்டும்..” என்று சொல்லிவிட்டு அவருடன் புறப்பட்டான்..
வீட்டிலிருந்து சுமார் இரண்டு மைல் தூரம் இருக்கும் அந்த காய்கறி மார்க்கெட். அங்குதான் வேங்கடசாமி தக்காளி மண்டி வைத்திருந்தார். கே ஆர் வி என்று சொன்னால் அந்த காய்கறி மார்க்கெட்டில் அவரைத் தெரியாதவர்கள் கிடையாது. சைக்கிள் ஓட்டத் தெரிந்திருந்தாலும், கால் நடையாகவே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடைய நடைவேகத்திற்கு குமாரால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவரைப்பின் தொடர்ந்துதான் செல்ல முடிந்தது. ஐம்பது வயதைக் கடந்திருந்தாலும் அவரின் நடைவேகமானது தன்னால் ஈடு கொடுக்க முடியாத அளவிற்கு இருப்பதை எண்ணி ஆச்சரியப்பட்டான்.
இதுநாள்வரைப் பள்ளிக்கூடம், நண்பர்கள், வீடு என்றிருந்த அவன் வாழ்க்கை இனி அப்படியிருக்கப் போவதில்லை என்றெண்ணும் போது அவனின் நடை வேகம் இன்னும் குறைய ஆரம்பித்தது. தன்னுடைய வேகத்திற்கு அவனால் ஈடு கொடுக்க முடியவில்லை என்றுணர்ந்த வேங்கடசாமி திரும்பி நின்று அவனைப்பார்த்தவாறே, “இன்னைக்கு மொத நாள்ல .. கொஞ்ச கஷ்டமாத்தா இருக்கும்.. ” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்தார்.
முதல் நாள் என்று அவர் சொன்னது அவனுக்கும் சிரிப்பை வரவைத்தது. பள்ளிப்படிப்பை முடித்தவுடனேயே எத்தனை பேருக்கு இந்த மாதிரி ஒரு உத்தியோகம் கிடைத்திடும் பாக்கியம் அமையும் என்று தன்னைத்தானே உள்ளூர கேலி செய்து கொண்டான்.
ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்த தெருக்களிலும் சாலைகளிலும் தெரு நாய்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. தங்களின் தனிப்பட்ட உலகமான அந்த குளிர்கால இரவு நேரத்தில் அந்நியர்களைப் போல் நுழைந்த மனிதர்களை எதிரிகளாய்ப் பார்த்து உறும ஆரம்பித்தன. இதற்குமேல் தனியாக நடப்பதை ஆபத்தாய் உணர்ந்த அவன் தன் நடையைத் துரிதப்படுத்தி வேங்கடசாமின் நடை ஒட்டத்திற்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தான்.
மார்க்கெட்டை நெருங்க நெருங்க மனித நடமாட்டமும் சரக்கு வண்டிகளின் போக்குவரத்துமாக மெல்லிய பரபரப்பு தென்பட ஆரம்பித்தது. காய்கறிச் சந்தையின் மக்கிய வாடை அந்தக் குளிர்க் காற்றில் நன்றாகவே அவன் நாசியைத் துளைத்தது.
மணி அப்பொழுது இரண்டரை ஆகியிருந்தது. இன்னும் அந்த காய்கறி மார்க்கெட்டிலுள்ள பல கடைகள் ஆள் அரவமின்றி இருட்டாகத்தான் காணப்பட்டன.
வேங்கடசாமி தன்னுடைய 34ம் நம்பர் கடைக்கு வந்து பரண் மேல் மறைத்து வைத்திருந்த இரண்டு குண்டு பல்புகளை எடுத்து ஹோல்டர்களில் மாட்டினார். பரணுக்கு கீழே தொங்கிக் கொண்டிருந்த சாக்குப்பையில் மறைவாக நுழைத்து வைத்திருந்த லைட் சுவிட்சை ஆன் செய்தார். குண்டு பல்புகளின் வெளிச்சத்தில் கடை ஒளிர ஆரம்பித்தது. அந்த பல்புகளின் வெப்பம் அந்த குளிருக்கு கதகதப்பாகவும் இதமாகவும் அவனுக்கு இருந்தது.
கடையின் மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டிகளைப் பார்த்தான். மொத்தமாக ஏழு பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “அது நேத்து மிஞ்சிப்போன சரக்கு.. ” என்று சொல்லிக்கொண்டே சாக்குகளை எடுத்து கீழே விரிக்க ஆரம்பித்தார். அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து அதிலிருந்த சரக்கை கீழே விரித்திருந்த சாக்கில் கொட்டினார்.
கடையின் கல்லாப்பெட்டியின் அடியிலிருந்த இரண்டு பழைய துண்டுத் துணிகளை எடுத்து ஒன்றை அவனிடம் நீட்டினார். “ஒவ்வொரு பெட்டியா கை பாக்கணும்.. காய் தனியா, பழம் தனிய, உடைசல் தனியா பிரிக்கனும்..” என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு தக்காளியையும் அந்தப் பழைய துணியைக்கொண்டு துடைத்து மூன்று வகையாகப் பிரிக்க ஆரம்பித்தார். அழுகிய தக்காளிகளைத் தூர எறிந்தார். அவர் செய்வதைப் பார்த்துக்கொண்டே அவனும் தக்காளிகளை துடைத்து கைப்பார்க்க ஆரம்பித்தான்.
“ஒரு பெட்டிக்கு இருபத்தஞ்சு கிலோ சரக்கு இருக்கும்.. நேத்திக்கு கிலோ ஏழு ரூபான்னு வித்தோம்.. இன்னைக்கு கொஞ்ச சரக்கு வரத்து கம்மியா இருக்குன்றதால கிலோ பத்து ரூபாக்கு விக்கலாம்.. இருந்தாலும் லாரி சரக்கு வந்தாத்தான் இன்னைக்கு நெலவரம் என்னன்னு தெரிய வரும்..லாரி சரக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும்..” என்று சொல்லிக்கொண்டே தன் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தார். ” வழக்கமா நம்ம கடைக்கு அம்பது பெட்டி எறங்கும்.. இன்னைக்கு சரக்கு டிமாண்ட்ங்கிறதால அஞ்சு பொட்டி கம்மியாத்தான் வரும்னு முத்துக்குமார் நேத்து போன்லயே சொல்லிட்டார்..” என்று பெட்டிகளைக் கை பார்த்துக்கொண்டே மார்க்கெட் நிலவரங்களை அவனுக்கு விளக்கினார்.
பெட்டிகள் கைப்பார்த்து முடிந்தவுடன் பழமாக இருந்தவையும், உடைசலும் போக, காய்களை மட்டும் திரும்பவும் பெட்டிகளுக்குள் நிரப்பியதில் மீண்டும் மூன்று பெட்டிகள் மூலையில் அடுக்கப்பட்டன. இப்போது, எத்தனைக் கிலோ பழங்கள் இருப்பு உள்ளதென்றுப் பார்க்க தராசை எடுத்து எடைபோட ஆரம்பித்தார். இடையே தராசை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று அவன் கையில் தராசைக் கொடுத்து எடைபோட சொல்லிக் கொடுத்தார். உடைசல் போக பழங்கள் மட்டும் தொன்னூற்றைந்து கிலோ தேறியது.
இதற்கிடையே பெரும்பாலான கடைகள் திறந்து விடியற்காலை மார்க்கெட் வியபாரம் சிறிதாக சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது.. இன்னும் லாரி சரக்கு வராததால் கவலையடைந்த வேங்கடசாமி “நான் முத்துக்குமார் கடை வரைக்கும் போய் விசாரிச்சுட்டு வந்திடறேன்..இங்கதான் மூணாம் நம்பர் கடை..அதுவரைக்கும் கடையப்பாத்துக்க..” என்று சொல்லிக் கொண்டு செருப்பை அணிந்தார்…
மூன்று கடைதூரம் நடந்து சென்றவர், ஏதோ நினைத்தவராக திரும்பி அவனிடம் வந்து, ” இடையிலே யாராச்சும் வந்தா கிலோ ஒம்பது ரூபான்னு போட்டுக்கொடு.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆளுக வர ஆரம்பிச்சுடுவாங்க.. நல்லூரு கோஷ்டியும் கொஞ்ச நேரத்துல வந்துரும்.. பாத்துக்க..” என்று சொல்லிவிட்டு பக்கத்து கடைக்காரரிடம், “புதுப்பையன்… கொஞ்சம் பாத்துக்க துரை..” என்று சொன்னபடியே நூறு ரூபாய் சில்லறையும் குமாரிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.வாங்கிய சில்லறையைக் கல்லாவில் போட்டுவிட்டு முக்காலியில் அமர்ந்து கொண்டான்.
சிவப்பு நிற பழுத்த தக்காளிகளைப் பார்த்தவுடன் போன வருடம் பாட்டனியில் படித்த தக்காளியின் தாவரவியல் பெயர் அவனுக்கு ஞாபகத்தில் வந்தது..
“லைக்கோபெர்சிகம் எஸ்குலென்டம்.. ”
“லைக்கோபெர்சிகம் எஸ்குலென்டம் கிலோ ஒன்பது ரூபா..”யென்று வாயில் முணுமுணுத்துக்கொண்டான்.. அவனுக்கு சிரிப்பு வந்தது..
கடைத் தராசைக் கையில் தூக்கி இங்குமங்கும் அலைபாயும் அதன் முள்ளானது மெல்ல மையமாக வந்து நிற்பதை பார்த்துக் கொண்டே தன் எண்ண ஒட்டங்களை அலைபாய விட்டுக் கொண்டிருந்தான்.. இந்தத் தராசில் எடை போடுவதற்காகத் தான் அல்ஜீப்ராவையும், இன்டக்ரல் கால்குலசையும் விழுந்து விழுந்து படித்தோமா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டபோது இதயம் பாரமாவதை உணர்ந்தான்.
வேங்கடசாமி சொன்னபடியே சிறிது நேரத்திலெல்லாம் கடையைத் தேடி ஆட்கள் வர ஆரம்பிக்க அவர் சொன்ன விலைப்படியே அவர்கள் கேட்ட அளவிற்கு எடை போட்டுத்தர ஆரம்பித்தான்.. பக்கத்துக்கடை துரை அவன் வியபாரம் செய்வதை ஓரக்கண்களால் பார்த்துக்கொண்டே தன் கடை வியபாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அதுவரைத் தனித்தனி நபர்களாக வந்த வாடிக்கையாளர்களுக்கு எடை போட்டு காசை வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்டிருந்த அவன் மொத்தமாக நாலைந்து பேர் கொண்ட ஒரு கூட்டம் கடையை மொய்த்தவுடன் ஒரு வித படபடப்புக்கு உள்ளானான். ஒவ்வொருவரும் கேட்ட அளவில் எடை போட்டு கொடுத்து முடிக்க.. விரித்து வைத்திருந்த தக்காளி இருப்பு மொத்தமும் விற்றுத்தீர்ந்து போனது.
இனி லாரி சரக்கு வந்தால்தான் மற்ற வியபாரம் என்றாகிப்போனது. கொஞ்ச நேரத்திலெல்லாம் லாரி சரக்கு கடைக்கு வர ஆரம்பிக்க, வேங்கடசாமியும் வந்து சேர்ந்தார்.
இருப்புத் தக்காளிகள் அனைத்தும் காலியாகிப் போனதைப்பார்த்து, “அதுக்குள்ள எல்லாம் வித்துடுச்சா.. ?” என்று கேட்டவாறே கல்லாப் பெட்டியில் இருந்த காசை எண்ணத் தொடங்கினார். லாரி சரக்கு பெட்டிகளை வாங்கி கடையின் மூலையில் அடுக்க ஆரம்பித்தான் அவன் . காசை எண்ணி முடித்த வேங்கடசாமியின் முகத்தில் குழப்பரேகை தென்பட, அவனைப் பார்த்து, “கிலோ ஒம்பது ரூபான்னுதானே போட்ட குமாரு..?” என்றார்
“ஆமா..”
“நா கொடுத்த நூறு ரூபாவும் சேர்த்தா.. மொத்தமா தொன்னூத்தஞ்சு கிலோவுக்கு தொள்ளாயிரத்து அம்பத்தஞ்சுல இருக்கனும்..ஆனா தொன்னூறு ரூபா கம்மியா இருக்கே..” என்று அவர் சொன்னவுடன் படபடப்பில் அந்தக் குளிரிலும் அவனுக்கு வியர்த்துப் போனது. ஒன்றும் புரியாமல் விழித்தான் அவன். எங்கு ஏமாந்தோம், எப்பொழுது ஏமாந்தோம், யாரிடம் ஏமாந்தோம் என்று புரியாமல் குழம்பினான். தன்னுடைய கவனக்குறைவை எண்ணித் தன்னையே நொந்து கொண்டான். வேங்கடசாமி தன்னைப்பற்றி என்ன நினைப்பார்..? வந்த முதல் நாளே கல்லாவில் கை வைத்து விட்டானே.. என்று தன்னைப்பற்றித் தவராக நினைக்கக் கூடுமே என்று நினைத்த பொழுது அவனுக்கு நெஞ்சை அடைத்து கொண்டு வந்தது..அவன் கண்கள் கலங்கியதைப் பார்த்த வேங்கடசாமி..”பார்த்து கவனமா இரு குமாரு.. கொஞ்சம் அசந்தா ஏமாத்திட்டுப்போய்டுவானுங்க..” என்று சொன்னவுடன்தான் அவனுக்கு உயிரே வந்தது போலிருந்தது.
அன்றைய வியபாரம் முடிந்த பொழுது, வேங்கடசாமி அன்றைய நாள் கூலியாக எழுபது ரூபாயை அவனிடம் நீட்டினார்.. வாங்க மனமில்லாமல் “பரவாயில்ல வேண்டாம்.. நா வேற இன்னைக்கு தொன்னூறு ரூபா ஏமாந்துட்டேன்..” என்று தயங்கினான் அவன்..
“புடி குமாரு.. இனிமே கவனமா இருந்துக்க..”என்று புன்னகைத்தவாறே அந்தக் காசை அவன் கையில் அழுத்தினார்.
அவன் ஏமாந்தானோ.. இல்லை ஏமாற்றப்பட்டானோ.. பள்ளிக்கூடம் கற்றுத் தராத வாழ்வியல் பாடங்களை அந்த காய்கறி மார்க்கெட்டும் வேங்கடசாமியும் அவனுக்கு கற்றுத்தர ஆரம்பித்திருந்தார்கள்.
அன்றைய முதல்நாள் அனுபவம் அவனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத பாடமாக அமைந்திருந்தது.
First class.