கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 4, 2021
பார்வையிட்டோர்: 2,024 
 
 

(2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வானொலியிருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்திருந்தது. இன்று உடம்பிற்கு சரியில்லை. நோய்க்கான சமிக்ஞை தென்பட்டது. மேனிக்குள் அரக்கன் புகுந்து கொண்ட வலி, உளைச்சல், எல்லாம் நீரிழிவு நோயின் உபாதை. உடலெங்கும் பரவியிருந்தது. இன்றைய யுகத்தில் சர்க்கரை நோயை விலைக்கு வாங்கிக் கொண்டு சங்கடப்படுவோர் ஏராளம். கட்டுப்பாடான உணவு, நேரத்திற்கு மாத்திரை, தினமும் தேகாப்பியாசம் என்றிருந்தால் நோயின் உக்கிரம் தணிந்திருக்கும்.

அசட்டையாக இருந்து குருதியேற்றங்களை அலட்சியம் செய்வதால், மேனியில் சீனியேறி சங்கடங்களை தோற்றுவிக்கும். இது கடுமையான நோய்களோடு கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்டு மனிதன் மேலூர் போவதற்கு இலவச விசா தருகிறது.

ஒவ்வொரு வெள்ளி தோறும் இரவு எட்டு இருபதுக்கு, எனது வாழும் கதைகள், நிகழ்ச்சி வானொலியில் நீண்ட காலங்களாக ஒலிபரப்பாகி வந்தது. இன்றைய ஒலிப்பதிவை திடீரென தள்ளிப் போடவியலாத சங்கடம் எனக்கு. ஊரிலிருந்து சிரமப்பட்டு, பஸ் எடுத்து, கொழும்பு புறக்கோட்டையை வந்தடை கிறேன். தலைநகரின் பேய் வெப்பம் குருதியணுக்களைக் குடைகிறது. கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு வந்து நின்று, நூற்றிப் பதினைந்தாம் இலக்க பேருந்துக்காய், கால் கடுக்கக் காத்து நிற்கிறேன். பேருந்துகள் இராட்சத பெருமூச்சுடன் விரைந்து வருகின்றன. பிரயாணிகளை பொதிகள் ஏற்றுவதைப் போன்று அள்ளிப் போட்டுக் கொண்டு நெரிசலில் ஊர்கின்றன.

சனியன் பிடித்த நூற்றிப் பதினைந்து இன்னும் காண வில்லை. இது எப்போதும் இப்படித்தான். எப்போதாவது அபூர்வமாக வரும். அல்லது வராமலேயே காலை வாரிவிடும். இந்த பஸ்ஸில் போவதில் ஒரு நன்மை உண்டு. நேராகச் சென்று, ரூபவாஹினி தரிப்பிடத்தில் இறங்கிவிடலாம். ஒரு பொடிநடை போட்டதும் வானொலி நிலையத்தை எட்டி விடலாம். வேறு மார்க்கமாக வருவதென்றால் சிரமம்தான்.

ஐம்பது நிமிட நீண்ட நேரக் காத்திருப்பின், பின் நூற்றிப் பதினைந்து, சாவகாசமாக தூரத்தில் வருவது தெரிகிறது. வெறுப்புடன் கைக் கடிகாரத்தில் விழி புதைக்கிறேன். ஒலிப்பதிவு நேரத்திற்கு இன்னும் ஐந்து நிமிடங்களே எஞ்சியிருந்தன. இது ரதத்தினைப் போல், அசைந்தசைந்து மெல்லப் போய் சேர அரை மணித்தியாலமாவது எடுக்கும். காலை ஆகாரம் எடுக்கத் தவறியதால் வயிற்றுக்குள் வன்முறை வேறு. உடலின் பதைபதைப்பு, வெய்யிலின் அனல் வெப்பம், வியர்வை சுரப்பு இத்தியாதி, நெருக்கடிகள்.

எப்படியோ வந்து சேர்ந்து கலையகத்தினுள் காலடி எடுத்து வைக்கிறேன். நிகழ்ச்சி தயாரிப்பாளர், வழுக்கைத் தலையும், மூக்குக் கண்ணாடியுமாக அதிர்ப்தியுடன் என்னை வெறித்தார். அப்படியொன்றும் குறித்த நேரத்தில் சடுதியாக அங்கு ஒலிப்பதிவுகள் நிகழ்வதில்லை . அறை ஒழுங்கு செய்தல், கலைஞர் வருகை தாமதம் என பொழுது வெறுமனே கரைந்து விடும். என்றாலும் நிகழ்ச்சியை வழங்குபவர், குறித்த நேரத்தில் வந்திருக்க வேண்டுமென்பதில், ஒரு தொன்மையான மரபு பேணப்படுகிறது.

நிகழ்ச்சி ஒலிப்பதிவு முடித்து வரவேற்பறையில் வவுச்சருக்கு காசு பெற்று வெளியே வர, பகல் இரண்டு மணியைத் தாண்டி விட்டது. மீண்டும் திரும்பிச் செல்லும் உந்துதலில் பேருந்துக்காக தவமியற்றும் காத்திருப்பு. புறக்கோட்டை சென்றடைந்தால், செட்டித் தெரு அன்னபூர்ணாவில் பசி போக்க அன்னமெடுக்கலாம் என்ற கரிசனையில், விரைந்து வந்த பேருந்தொன்றில் ஏறித் தொற்றிக் கொள்கிறேன்.

பசிக்களைப்பில் கால்கள் நடுங்கின. உலகில் வாழும் காலம் வரை, மனித இருப்புக்கு இரண்டு விடயங்கள் முக்கிய மானவை என்பது தற்போதைய என் கணிப்பு. ஒன்று பணம், மற்றது உடலாரோக்கியத்துடன் கூடிய இளமை முறுக்கு. இவற்றை எங்கோ – எப்போதோ, தொலைத்துவிட்ட ஜீவித இருப்பின் மீது, எனக்கிப்போதும் கசப்பு.

பஸ்ஸின் நெரிசலில் உப்பு மூடைகள் அசைந்தன. வியர்வை நெடி, நெருக்கித் தள்ளும் மனித அழுத்தம், இந்தக் கஷ்டத்திற்குள்ளும் ஒரு கற்பனை வேறு சுரக்கிறது. எழுத்தாளன் ஆயிற்றே, கற்பனைகளோடு உள்ள ஆத்மார்த்த சிநேகம் வேறு எதில் இருக்கிறது? ஜம்மென்று உட்கார்ந்து கொண்டு பிரயாணம் செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், எத்தனை உவப்பான தாயிருக்கும்? கற்பனைகள் தான் எவ்வளவு இனிமையானவை? காரிய சித்தி கைகூடுகிறதோ, இல்லையோ? நமது மனம், கற்பனை நெகிழ்ச்சிகளில் சுகம் காண்கிறதே. கற்பனை பண்ணிப் பார்க்கிற அடிப்படை சுதந்திரமாவது நமக்கு எஞ்சியிருக்கிறதே. அதனால் தப்பிப் பிழைத்தோம். இது என்ன ஆச்சரியம்? கற்பனை கூட இத்தனை கெதியில் காரிய சித்தி ஆகிவிடுமா?

ஒரு கனவான் இருக்கையிலிருந்து எழுந்து நிற்கும் பிரயத்தனம். அடுத்த தரிப்பிடம் வந்ததும் அவர் இறங்கிவிடக் கூடும். தவளையைக் கவ்விய பாம்பாக அந்த இருக்கையை ஆக்கிரமித்ததின் பின்புதான், ஒழுங்காக மூச்சு வந்தது. ஜன்னலோர இருப்பு, இதமான காற்று, ஜில்லென்று முகத்தோடு உறவாடியது. பசிக்களைப்பு, சோர்வு, இவற்றின் கிளர்வினால் ஒரு குட்டித் தூக்கமே வந்துவிட்டது என்றால் அதை யாரால் தடுத்து நிறுத்திவிட இயலும்? இடத்திற்கிடம், அசைந்தசைந்து மெல்ல ஊர்ந்து, நடைபயில்கிறது பஸ். இடைக்கிடையில் கண்விழித்து புறக்கோட்டை அண்மித்துவிட்டதா? என நோட்ட மிட்டேன்.

மருதானை பழைய காமினி தியேட்டரின் முன்னால் தேர் தரித்து நின்றது. மீண்டும் குட்டித் தூக்க ரசனையில் விழிகள் கிறங்கின. சிறிது நேரம் சென்றிருக்கும் திடுக்குற்றுத் தடுமாறி விழித்தேன். பஸ்ஸுக்குள் என்னைத் தவிர வேறு எவருமில்லை. வெளிச்சோடிப் போயிருந்தது. பஸ் நிறுத்தியிருக்கிறது. இந்த ஓட்டுனரும் கண்டக்டரும், எங்கு போய் தொலைத்தார்கள்?

தலை கிறுகிறுக்கத் தடுமாறி, பதை பதைத்து சுற்றும் முற்றும் பார்த்தேன். பீதியும், அச்சமும் அடிவயிற்றைக் கவ்வியது. உள்ளேயிருந்த பயணிகள் எல்லோரும், தங்கள் பைகளைச் சுமந்தவண்ணம் வரிசையில் தெருவில் நின்றார்கள், ஆமிக்காரர் மூவர், ஒவ்வொருவராக பயணிகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். அவசரமாக எழுந்து போய் வரிசையில் ஒட்டி நிற்பது சங்கை, என்ற உணர்வோடு எழுந்து நிற்க முனைகையில், ஒரு இராணுவ வீரன் சிங்களத்தில் கடுமையாகத் திட்டியவாறு, என்னை நோக்கி வந்தான்.

கால்கள் இரண்டிலும் திமிர்த்தலுடன் கூடிய பொல்லாத வலி. எல்லாம் கும்பகர்ண நித்திரையால் வந்த சாபக்கேடு. நான் மட்டும் பஸ்ஸுக்குள் இவ்வளவு நேரம் மந்தியைப் போல் குந்தியிருந்திருக்கிறேன். இனி என்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி வருமோ? போராளிகள், குண்டுக் கலாசாரத்தினால், முழுநாட்டையே உலுப்பிக் கலைத்துக் கொண்டிருந்த காலப் பரப்பு அது. இராணுவச் சோதனைகளும், கெடுபிடிகளும் நிறைந்திருந்தன.

“உனக்கு மட்டும் வேற சட்டமா? கீழே இறங்கி வரமாட்டாயா? நீ என்ன பெரிய ஆளா? கீழே இறங்கி வா ஓய்!” ஆமிக்காரன் உறுமினான்.

எனக்குத் தொண்டை வரண்டது. நாவு தடுமாறியது. “என்னை மன்னிக்க வேண்டும். நான் ஒரு நோயாளி. அசதியில் தூக்கம் போயிட்டுது. என்னை நம்புங்கள், பிளீஸ்!” என்று நெகிழ்வாக சிங்களத்தில் விடை சொன்னேன்.

இவர்களிடம் மிருகத்தனமாக அடிவாங்கிச் சாகும் மிருக பலம் என்னிடம் சிறிதுமில்லை என்பது எனக்கு மட்டும் தெரிந்த யதார்த்தம்.

பாதையில் நின்று சுற்றுமுற்றும் பார்த்தேன். எதிர்திசையில் லேக் ஹவுஸ் கட்டிடம் விறைத்து நின்றது. அடையாள அட்டையை துருவினேன். அதை முன்கூட்டியே கையில் எடுத்து வைத்துக் கொள்வது உசிதம் அல்லவா? திடீர் அதிர்வில் நிலைகுலைந்துவிட்டேன்!

அடையாள அட்டையைக் காணவில்லை.

பொக்கட்டிலும், பையிலும் துருவித் துருவி தேடியாயிற்று. பலன் பூஜ்யம்.

எங்கு தான் தவறவிட்டேன். கலையகத்தில் வவுச்சருக்கு காசெடுக்கும் போது கையில் இருந்ததே. எப்படித் தொலைந்து போயிருக்கும்? வரவேற்பு மண்டப மேசையில் மறதியாய் விட்டுவிட்டேனா? தொலைந்த பொருள் நினைவு தீட்சண்யத்தில் சிக்க மறுக்கிறது. எனது கால்களிரண்டும் கிடுகிடா நடுங்கத் தொடங்கிவிட்டன. இது என்ன சோதனை? அடையாள அட்டையின்றி இவர்களிடம் மாட்டிக் கொண்டு, என்ன பாடுபடப் போகிறேன்?

பசித்த வயிற்றுக்கு சாப்பிட்டுவிட்டு அப்படியே போய் பூபாலசிங்கம் புத்தகசாலையில் சஞ்சிகைகள் சிலவற்றை வாங்கிக் கொண்டு வீடு போய் சேரலாம், என்ற எண்ணமெல்லாம் மண்ணாய் போய்விட்டதே! கொழும்புக்கு வரும் பொழுது, கணையாழி காலச்சுவடு, தாமரை, மல்லிகை என்று எனது இரசனைக்கேற்ற இலக்கிய இதழ்களை வாங்குவது வழக்கம்.

இவற்றை படிக்கத் தவறினால், நெஞ்சுக்குள் ஏதோவொரு இழப்பு, நெருடல். வயிற்றுப் பசி மட்டும் தீர்ந்தால் போதுமா? அறிவுப் பசியை, இலக்கிய தாகத்தை தீர்க்க வேண்டுமே. இந்த சிக்கலில் இருந்த எப்போது விடுபடுவேன்?

என்னை முறைத்துப் பார்த்து விட்டு, “அடையாள அட்டை எங்கே?” என்று ஆமிக்காரன் கேட்டான்.

“காலையில் வரும் போது கொண்டு வந்தேன். இடையில் எங்கோ தவறிவிட்டது” என்று பதிலிறுத்தேன்.

பரிதாபம் இழைந்த குரலில். சிகப்பாய் புஜத்தில் மூன்று நட்சத்திரங்கள், மினுங்கும் சீருடை உத்தியோகத்தர், ஒரு எள்ளல் தோரணையில் என்னை சீற்றத்தோடு முறைத்தார். “உன்ன கேம்புக்கு கொண்டு போய் விசாரிக்கிற முறையில விசாரிச்சா உண்மை வெளிவரும்” எனக் கூறினான். அவனது பயங்கரத் தோற்றம் பீதிகொள்ளும்படியாக இருந்தது.

நான் மிகவும் நளினமாக எனது நிலையினை எடுத்துக் கூறினேன். “நான் கிரிமினல் அல்ல. சமூகத்தால் மதிக்கப்படு கின்ற ஒரு பிரஜை.” எனது விசிட்டிங் கார்டினை அவர் கையில் கொடுத்தேன்.

அதில் கலாபூஷணம், சமாதான நீதிவான், கவிஞர், எழுத்தாளர் என்றெல்லாம் பொறிக்கப்பட்டிருந்தும் என்ன பயன்? சந்தேகம் தீர்ந்தபாடில்லை. அவர் நெஞ்சிலிருந்து ஈரம் சிறிதும் பிறக்கவில்லை. “இல்லை! உன்னை கேம்பிற்கு கொண்டு போகப்போறோம்!”

நான் நெஞ்சுடைந்து பத்திரிகையாலய ஏறுபடிகளை விரக்தியாய் வெறித்தேன். திடீரென ஞாபகத்திற்கு வந்த ஒரு விடயத்தை அவர்களிடம் கூறினேன். “அதோ தெரியும் பத்திரிகை யாலயத்தில், தமிழ் தினசரியொன்றில் பிரதியாசிரியராகப் பணிபுரிபவர் எனது நண்பர். நீங்கள் அவரிடம் என்னைப் பற்றி விசாரித்தறிந்து விட்டு என்னை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போங்கள்” என்றேன்.

வேதாளம் முருங்கை மரத்திலிருந்து சற்று கீழிறங்கு வதாக எனக்குத் தெரிந்தது. நானும் ஆமிக்காரர் ஒருவரும் பிரதியாசிரியர் சூரியனின் வருகைக்காக, கீழே வரவேற்பு மண்டப வாயிலில் காத்திருந்தோம்.

சூரியனை அரபு மொழியில் எப்படி அழைப்பார்களோ அதுதான் அவரது நாமம். அவர் மிகப் பிரசித்தமான பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர். சமாதானம் மலர, வெள்ளிச் சிறகசைக்கும் வெண்புறாவை நெக்குருகும் பாடலினால் அழைத்து, எல்லோரினதும் நெஞ்சங்களை ஆகர்சித்துக் கொண்டவர். உதட்டில் நெளியும் புன்முறுவலோடு கண்ணாடி அணிந்த மெலிந்த சரீரவாகு கொண்ட சூரியன் மாடிப்படி களிலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்தார். ஓடிச்சென்று அவரது கைகளைப் பற்றிக் கொண்டு எனது நிலையினை விளக்கினேன். கீழிறங்கி பாதைக்கு வந்து அந்த மூன்று நட்சத்திர உத்தியோகத்தரோடு சிறிது நேரம் சிங்களத்தில் வாதம் புரிந்தார்.

பத்திரிகையாளனோடு எதற்கு வீண்வம்பு, என்ன ஞானோதயமோ தெரியவில்லை, மூன்று நட்சத்திரம் என்னைப் போக அனுமதித்து, போன உயிர் திரும்பி வந்ததில் மகிழ்ந்து நண்பன் சூரியனை ஆரத் தழுவினேன்.

அவர் எனக்கு ஆறுதல் கூறினார்.

“எச்சந்தர்ப்பத்திலும் மனம் தளரக்கூடாது. மனதில் உறுதி வேண்டும் என்ற பாரதியின் பாடல்வரிகளை மறந்து போனீரா?” என்று என் தோளில் கையழுத்திக் கேட்டார். இலக்கிய வானில் தன்னிகரற்று சுடர்ந்த சூரியனின் திடீர் இழப்பு, இன்றும் மனதில் துயரங்களை சொரிகிறது.

– எம்.எச்.எம்.ஷம்ஸ் நினைவாக, தினக்குரல் 16.1.2005 – நிஜங்களின் வலி சிறுகதைத் தொகுப்பு , மீரா பதிப்பகம், முதற்பதிப்பு: 23.05.2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *