மிஸ்டர் இரக்கசாமி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 5,849 
 
 

” டேய்,உங்கப்பா முகத்திலே அப்படியே எழுதி வெச்சுருக்குடா ‘ என்றாள் கல,கலவெனச்சிரித்துக்கொண்டே கலா…” கட்டின பாவத்துக்கு நானும் ஒண்ணும் சொல்றதில்லடா,உங்கப்பாவ’ என்றாள் மேலும்….

‘அப்படியாம்மா, அப்பா முகத்திலே அப்படியா எழுதி ஒட்டிருக்கு..முகத்திலே பார்த்தா எனக்கு ஒண்ணும் தெரியலையேம்மா ‘ என்று அம்மாவின் நக்கலுக்கு சரிசமமாய் நக்கலடித்துக்கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்த்தான் 12-ஆம் வகுப்பு படிக்கும் கென்னடி.

மனைவியும் மகனும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே ,இடி விழுந்ததைப் போல அமைதியாக உட்கார்ந்திருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. இரக்கசாமி என்று பெயர் வைத்தாதாலோ என்னவோ ,இரக்கப்படுகிறேன் என்று சொல்லி ஏமாளியாகிக் கொண்டிருந்த இரக்கசாமி தனது மனைவியையும் மகனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே பரிதாபமாக முழித்துக்கொண்டிருந்தார்.

மிஸ்டர் இரக்கசாமிக்கு மிகவும் தாராள குணம். எவர் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லக்கூடாது என்று மனதிற்குள் ஒரு பெரிய வைராக்கியம். ஒரு பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளையாகப்பிறந்து ,பெற்றோர்கள் நிறையச்சம்பாரித்து வைத்து அதனை செலவழிக்கும் ஒரு தாராள மனம் படைத்த பிள்ளையாய் மிஸ்டர் இரக்கசாமி இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை….

ஆனால் மிஸ்டர் இரக்கசாமி பிறந்ததிலிருந்தே அட்ட தரித்திரம். கன்னங்கரேர்ன்னு பிறந்திருக்கான்னு உறவுகள் எல்லாம் பிறந்தவுடனேயே பார்த்து முகத்தைச்சுழிக்க, சுத்தியிருந்த உறவுகள் எல்லாம் பழிக்க படாரென்னு மண்ணில் வந்து விழுந்தவுடனேயே வாங்கிக் கட்டிக்கொண்டவர் மிஸ்டர் இரக்கசாமி. சின்ன வயசிலியே அப்பனை முழுங்கிவிட்டான்… அதற்கு இந்த இரக்கசாமியின் முதுகில் இருக்கும் மொக்கப்பய மச்சமே காரணம்ன்னு ஒரு சோம்பேறி சோசியக்காரப் பயல் சொல்லிவைக்க ,அப்பா இல்லாமல் ஆளாகி வருவதற்குள் படாத பாடு பட்டு வளர்ந்து வந்தவன்தான் மிஸ்டர் இரக்கசாமி.

எவராவது பிரச்சனை என்று சொல்லி கடனாக பணம் கேட்டு வந்து விட்டால் அப்படியே உருகிவிடுவான் மிஸ்டர் இரக்கசாமி.சின்ன வயதில் பணத்திற்காக தான் துன்பப்பட்டது,துயரப்பட்டது, அல்லல்பட்டது,அசிங்கப்பட்டது என அத்தனையும் இரக்கசாமியின் மனதிற்குள் ஓடும்.எவராவது தன்னிடம் பணம் கேட்டு வந்து விட்டால் உடனே தன்னை அந்தப் பணம் கேட்டு வந்தவன் இடத்தில் நிறுத்திப்பார்ப்பான். அய்யோ, இவனுக்கு இந்த நேரத்தில் நாம் உதவவில்லையெனில் மனிதனாகத் தான் பிறந்து, வாழ்ந்து,வளர்ந்து என்ன பயன் என்று எண்ணிப் பணத்தைக் கொடுத்துவிடுவான்.

சில நேரங்களில் சிலருக்கு பணத்தைக் கொடுப்பதற்கு முன்பே இப்ப கொடுக்கும் பணம் திரும்ப வராது என்று தெரியும் மிஸ்டர் இரக்கசாமிக்கு.எழுத்தாளர் பிரபஞ்சன் தனது ‘நேற்றைய மனிதர்கள் ‘சிறுகதைத்தொகுப்பில் எழுதிய ஒரு சிறுகதையின் கதாபாத்திரம் போல, திரும்ப வராது என்று தெரிந்தே கடன் கொடுப்பார் மிஸ்டர் இரக்கசாமி.

இப்படி பவுன் 1000 ரூபாய் விற்கும் காலத்திலேயே 1000,2000 என்று மிஸ்டர் இரக்கசாமியிடம் கடன் வாங்கியவர்கள் பலவகையில் அறிமுகமானவர்கள். உடன் வேலை பார்ப்பவர்கள், உறவுக்காரர்கள் ,இலக்கியவாதிகள் எனப் பெரிய பட்டியலே மிஸ்டர் இரக்கசாமியிடம் உண்டு. பலருக்கு கொடுத்தது வீட்டிற்குத் தெரியும்.சிலருக்கு கொடுத்தது வீட்டிற்குத் தெரியாது.ஆனால் கொடுத்த எவரிடமும் அழுத்தி,அழுத்திப் பணத்தைக் கேட்டு திரும்பி வாங்கும் பழக்கம் இரக்கசாமியிடம் இல்லை.கொடுத்தவரிடம் ஒரு முறை இவர் கேட்கும் தோரணையிலேயே கடன் வாங்கிய ஆளுக்குத்தெரிந்துவிடும் இந்த ஆளுக்கு பணத்தைத் திருப்பிக்கொடுக்கவில்லையென்றாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று.

மிஸ்டர் இரக்கசாமி சில நேரங்களில் தனது தாராள குணத்தால் சிக்கலிலும் மாட்டத்தெரிந்தார் என்றாலும் தனது தயாள குணத்தை அவரால் மாற்ற இயலவில்லை.அப்படித்தான் ஒரு போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களைத் தயார்படுத்தும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது நிகழ்ந்தது.

மிகுந்த உயர்பதிவிக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் நிறுவனம் அது. மிஸ்டர் இரக்கசாமி பெரும் மதிப்பு வைத்திருக்கும் ஒருவர் நடத்திக்கொண்டிருந்தார்.அரசு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மிஸ்டர் இரக்கசாமி,பகுதி நேரமாக அந்த நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தார். பகுதி நேரம் என்றால் பகுதி நேரம்தான். பத்துபைசா வருமானம் வராத பகுதி நேர வேலை,இருந்தாலும் தான் எப்போதோ படித்ததை,பகிர்ந்து கொள்ளக் கிடைத்த அரிய வாய்ப்பாக எண்ணி ,மிஸ்டர் இரக்கசாமி அந்த நிறுவனத்தில் போய் பாடங்கள் நடத்திக்கொண்டு இருந்தார்.

மிஸ்டர் இரக்கசாமி போலவே அந்த நிறுவனத்தில் ‘வரலாறு ‘ பாடம் எடுக்க திரு.காந்தி வந்து கொண்டிருந்தார்.’காந்தி ‘என்று சொன்னால் அவர் காந்திதான் என்று மிஸ்டர் இரக்கசாமிக்குத் தோன்றியது. எப்போதும் மிக எளிமையான உடையில் வந்து பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அன்றொரு நாள் அந்த நிறுவனத்தில் பாடம் நடத்தும் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும் அந்த நிறுவனத்தின் நிறுவனர் உணவு விடுதிக்கு அழைத்துச்சென்றார்.உணவு விடுதியில் வேண்டியதைச்சாப்பிடுங்கள் என்று சொன்னபோது, காந்தி மட்டும் 4 இட்லிமட்டும் போதும் என்று சொல்லிவிட்டார். மிஸ்டர் இரக்கசாமி மற்றும் உடன் இருந்தவர்கள் எல்லாம் ஸ்பெஷல் தோசை,சோளாப்பூரி என்று வித விதமான உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது , காந்தி மட்டும் 4 இட்லி போதும் என்று சொன்னதைப் பார்த்து நெகிழ்ந்து போனார் மிஸ்டர் இரக்கசாமி. ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல காந்தியைப் பற்றிய மதிப்பீட்டில் மிக உயர்ந்த மதிப்பெண்ணைப் போட்டுக்கொண்டார் மிஸ்டர் இரக்கசாமி.

திரு. காந்திக்கு வயது 50க்கு மேல் இருக்கும் . இன்னும் திருமணம் முடித்துக்கொள்ளவில்லை. தூத்துக்குடிக்கு அருகில் சொந்த ஊர் என்றாலும் மதுரையில் தங்கியிருந்தார். மதுரையின் ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளிக்கூடத்தில் நிரந்தர ஆசிரியர் வேலை.அந்தத் தனியார் பள்ளிக்கூடத்தில் வரும் சம்பளத்தில் எண்பது சதவீதம் ஏழை மாணவர்களின் கல்விக்காக செலவிட்டு விடுவதாக அன்றொரு நாள் சொல்லிக்கொண்டிருந்தார்.தன்னைப் போலவே மாணவர்களின் நலனுக்காக தனது சொந்தப்பணத்தை செலவழித்து மிஸ்டர் காந்தி வந்து போய்க்கொண்டிருக்கிறாரே என மிஸ்டர் இரக்கசாமி நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

அன்றொரு நாள் அந்த நிறுவனத்தில் பாடம் நடத்திவிட்டு வெளியில் வந்த போது , திடீரென மிஸ்டர் இரக்கசாமிக்கு முன்னால் வந்து நின்றார் காந்தி. அவசரமாக ஒரு 20,000 ரூபாய் கடன் வேண்டும் என்றார் மிஸ்டர் இரக்கசாமியிடம் .உடனே இரக்கசாமி ‘ எதற்காக உங்களுக்குப் பணம் கடனாக வேண்டும் ? ‘ என்று கேட்டார்.

‘கிறிஸ்துமஸ் பண்டிகை சீக்கிரம் வரப்போவதையும், தனக்கு குடும்பம் இல்லை என்றாலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு எப்போதும் தூத்துக்குடியில் இருக்கும் தனது தங்கையின் வீட்டுக்கு கிறிஸ்துமஸ்ஸிற்கு போவதாகவும், போகும்போது எப்போதும் தங்கையின் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள், இனிப்பு வாங்கிச்செல்வது வழக்கம் என்றும், இந்த வருடம் பணத்திற்காகப் பள்ளியின் மூலம் ஜி.பி.எப். பணத்திற்கு விண்ணப்பம் கொடுத்ததாகவும், அது வர தாமதமாகிறது, ஆனால் கிறிஸ்துமஸ் வரப்போவதால் பணம் தேவைப்படுகிறது என்றும்,ஜி.பி.எப். பணம் வந்தவுடன் ஓரிரு வாரத்தில் கொடுத்துவிடுவதாகவும் மிகவும் கவலை தோய்ந்த முகத்தோடு மிஸ்டர் இரக்கசாமியிடம் கோரிக்கை வைத்தார் காந்தி.

மிஸ்டர் இரக்கசாமி உடனே தன்னைக் காந்தியின் இடத்தில் வைத்துப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். ஆனாலும் மிஸ்டர் இரக்கசாமியிடம் பணம் இல்லை. தன்னிடம் பணம் இல்லையென்றும், உடனடியாக ரூ 20,000 தருவது தன்னால் இயலாத காரியம் என்பதையும் காந்திக்கு மிஸ்டர் இரக்கசாமி எடுத்துச்சொன்னார்.ரூ 10,000 மாவது தரும்படி காந்தி மறுபடியும் கேட்க, தன்னிடம் ரூ 500 கூட இப்போது இல்லை என்றும் ,ரூ 10,000 என்பது பெரிய தொகை, தன்னால் இயலாது, தன்னை மன்னிக்கும்படியும், உதவ வேண்டிய நேரத்தில் உதவி செய்ய முடியாமல் போன காரணத்தையும் மிஸ்டர் இரக்கசாமி காந்தியிடம் விளக்க முற்பட்டார்.

காந்தி உடனே மிஸ்டர் இரக்கசாமியின் பேச்சினை இடைமறித்தார். யாரிடமாவது வட்டிக்குக்கூட ரூபாய் 10,000 வாங்கித்தரும்படியும் ,ஓரிரு வாரத்தில் வட்டிப்பணத்தைத்தருவதோடு அசலையும் தானே கட்டிவிடுவதாகவும் தனக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டுமென்றும் , சமூகத்தில் நல்ல நிலைமையில் உள்ள தன்னால் கீழே இறங்கிச்சென்று கடன் வாங்க இயலவில்லையென்றும் , தான் கடந்த 20,25 வருடங்களாக தனது தங்கைக்கும் அவளது வீட்டிற்கும் கிறிஸ்துமஸ் விழாவிற்குச்செய்யும் உதவியைத் தொடர உதவி செய்யும் படியும் மிகவும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார் காந்தி. சரி,நான் கேட்டுப்பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு தனது அலுவலகத்திற்கு வந்தார் இரக்கசாமி.

மிஸ்டர் இரக்கசாமி வேலை பார்க்கும் இடத்தில் ஒருவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தார். சில ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் அவரிடமிருந்து தள்ளியே இருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. காந்திக்கு எப்படியாவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் அலுவலகத்தில் ஓடிக்கொண்டேயிருந்தது மிஸ்டர் இரக்கசாமிக்கு. சரி, வட்டிக்கு கொடுப்பவரிடம் கேட்டுப்பார்த்தாவது காந்திக்கு உதவி செய்ய வேண்டும் என்று இரக்கசாமிக்கு தோன்றியது.

மிஸ்டர் இரக்கசாமி வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் சந்திரனிடம் சென்று, இப்படித்தனக்கு தெரிந்தவர் மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் ,ஜி.பி.எப். பணம் வரவேண்டியது பாதித் தூரத்தில் நிற்பதாகவும்,வந்த உடன் அவர் கொடுத்து விடுவார் என்றும் அவருக்கு ரூபாய் 10,000 கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டார். சந்திரன் மிகத்தெளிவாக, காந்தியைத் தனக்குத் தெரியாது என்றும், உங்களை நம்பி வேண்டுமென்றால் நான் தருகின்றேன், நீங்கள்தான் எனக்கு வட்டி கட்டவேண்டும், அசல் கட்டவேண்டும், நோட்டும் நீங்கள்தான் எழுதிக்கொடுக்க வேண்டும் என்றும் சொன்னபோது, மிஸ்டர் இரக்கசாமி மற்றவற்றிற்கு ஒப்புக்கொண்டு, நோட்டு மட்டும் காந்தியையே எழுதித்தரச்சொல்கிறேன் என்றார்.சந்திரன் மறுத்துவிட்டார். வேண்டுமென்றால் காந்தியிடம் உங்கள் பெயருக்கு ஒரு நோட் எழுதி வாங்கிக்கொள்ளுங்கள். நான் பணம் கொடுப்பது உங்களிடம்தான். எனக்கு நீங்கள்தான் நோட்டு எழுதிக்கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.

மறு நாளே, அலுவலகத்திற்கு வந்த காந்தியை சந்திரனிடம் மிஸ்டர் இரக்கசாமி அறிமுகப்படுத்தினார். சந்திரன் கண்டுகொள்ளவில்லை.அவருக்கு முன்னாடியே சந்திரனின் மனைவி பெயருக்கு மிஸ்டர் இரக்கசாமி ரூ 10,000 க்கு நோட் எழுதிக்கொடுத்தார். மிஸ்டர் இரக்கசாமி பெயருக்கு,அலுவலக முகவரிக்கு ரூ 10,000 க்கு நோட்டை காந்தி எழுதிக்கொடுத்தார். சந்திரன் ரூ 10,000த்தில் முதல் மாத வட்டி 300 ரூபாயை எடுத்துக்கொண்டு ,மீதம் 9,700 ரூபாயை மிஸ்டர் இரக்கசாமியிடம் கொடுத்தார். இரக்கசாமி அந்தப்பணத்தை அப்படியே காந்தியிடம் கொடுத்தார்.மிக்க நன்றி,மிக்க நன்றி,வாழ்க்கையில் இந்த உதவியை மறக்கவே மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே காந்தி மிஸ்டர் இரக்கசாமியிடம் விடை பெற்றுக்கொண்டார்.மிஸ்டர் இரக்கசாமிக்கு மிகப்பெரும் நிறைவு காந்திக்கு உதவி செய்தது குறித்து

இரண்டு மாதம் சரியாக 2-ந்தேதி வட்டிப்பணத்தைக் கொடுத்தார் காந்தி.அப்படியே அந்தப்பணத்தை வாங்கி அலுவலகத்தில் சந்திரனிடம் கொடுத்து வந்தார் மிஸ்டர் இரக்கசாமி. ஜி.பி.எப். பணம் வந்துவிட்டதா என்று ஒரு வார்த்தை மிஸ்டர் இரக்கசாமி கேட்பதற்கு முன்பே ஜி.பி.எப். இன்னும் சில நாட்களில் வந்து விடும் என்று காந்தி சொல்லிக்கொண்டிருந்தார்.. மூன்றாவது மாதம் இரண்டாம் தேதி காந்தி வரவில்லை. 10-ந்தேதி வரை அவர் வரவில்லை. சந்திரனுக்கு வட்டிப்பணத்தை மிஸ்டர் இரக்கசாமியே கொடுத்துவிட்டார்.அந்த மாதம் முழுவதும் காந்தியைப் பார்க்கமுடியவில்லை.போட்டித் தேர்வுக்கு பாடம் நடத்தும் நிறுவனத்திற்கே காந்தி வரவில்லை.தொடர்பு கொள்ளவே முடியவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருக்கும்போதே மூன்று மாதங்கள் வட்டிப்பணத்தை சந்திரனுக்கு மிஸ்டர் இரக்கசாமி கட்டியிருந்தார்.

காந்தி போட்டித்தேர்வு பயிற்சி நிறுவனத்திற்கு மூன்று மாதங்களாக வரவில்லை என்றதும் ஏதோ தப்பாகப்போவது போல தெரிந்தது மிஸ்டர் இரக்கசாமிக்கு. அங்கிருந்த காந்தி வேலை பார்த்த பள்ளியின் முகவரியை எடுத்துக்கொண்டு காந்தி வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திற்கு மிஸ்டர் இரக்கசாமி போனார். அங்கிருந்தவர்களிடம் காந்தியைப் பற்றிக் கேட்டவுடனேயே , நீங்கள் ஏதும் கடன் கொடுத்து இருக்கிறீர்களா? எனக்கேட்டவுடன் திடுக்கிட்டுப் போனார் மிஸ்டர் இரக்கசாமி. அவர்கள் காந்தியைப் பற்றி சொல்லச்சொல்ல கிறுகிறுப்பு வந்தது போல ஆகிவிட்டது மிஸ்டர் இரக்கசாமி.

காந்தி தன்னுடன் வேலை பார்க்கும் 20-க்கு மேற்பட்டவர்களிடம் இப்படி 10,000ம் 20,0000ம் என்று கடன் வாங்கியிருக்கிறார். ஒருவரிடம் வாங்கியது அடுத்தவருக்குத் தெரியாமலேயே கைமாத்து,அவசரம், மருத்துவம் எனப் பல பொய்களைச்சொல்லி பணம் வாங்கியிருக்கிறார். வேறு கெட்ட பழக்கம் இல்லாதவரே என்று ஆசிரியர்கள் தீர விசாரித்தபோது, மதுரையில் பெரிய பணக்காரர்கள் பலர் விளையாடும் சீட்டாடக்கிளப்பில் மெம்பராக இருப்பதும்,சீட்டு விளையாட்டில் பயங்கர மோகம் கொண்டு பணம் கட்டி இழப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆசிரியர்கள் மாற்றி மாற்றி கடனைக் கேட்டபோது, ஒன்றுமே சொல்லாமல் பள்ளிக்கும் வராமல் இரண்டு மாதங்களாக பள்ளிக்கூடத்திற்கும் வராமல் இருப்பது தெரியவந்தது. எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் வராததை,மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் தற்காலிக பணி நீப்பில் இருக்கிறார் என்பது தெரிந்தது.

என்ன செய்வது என்று தெரியவில்லை மிஸ்டர் இரக்கசாமிக்கு. ரூபாய் 300 மாதாமாதாம் வட்டி கட்டுவதை வீட்டில் மனைவியிடம் சொல்லவில்லை. அவராகவே சமாளித்துக்கொண்டிருந்தார். ஆனால் எவ்வளவு நாள் பணம் கட்டுவது? சந்திரனுக்கு அசலும் வட்டியும் கட்டினால்தான் புரோ நோட்டைத் தருவார் …என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே அலுவலகத்திற்கு போய் வந்து கொண்டிருந்தார். வட்டிப்பணத்தை மட்டும் சந்திரனுக்கு கட்டி வந்தார்.

திடீரென்று ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போது மிஸ்டர் இரக்கசாமிக்கு தூத்துக்குடியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘மிஸ்டர் இரக்கசாமியா?’ என்று வினவியவரிடம் ‘ஆமாம் ‘என்றார். தான் காந்தியின் வக்கில் என்றும் அவர் நிறையக் கடன் பட்டு வாழ்க்கையில் நொந்து விட்டார் என்றும்,விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, சொத்துக்கள் ஏதும் இல்லாததால் மஞ்சள் கடிதாசி கொடுத்துவிட்டார் என்றும் ,உங்கள் வீட்டு முகவரி வேண்டும் சில தகவல்கள் அனுப்ப என்றும் கேட்டபோது வீட்டு முகவரியை மிஸ்டர் இரக்கசாமி தொலைபேசியிலேயே கொடுத்தார்.

மறு நாள் வீட்டிற்கு வந்தவுடன் மனைவி கலா அந்தக்கடிதத்தைக் கொடுத்தவுடன் படித்துப்பார்த்து அரண்டு விட்டார் மிஸ்டர் இரக்கசாமி. “மிஸ்டர் இரக்கசாமி, நீங்கள் அரசு வேலை பார்க்கிறீர்கள் ? எப்படி வட்டிக்கு பணம் கொடுத்தீர்கள்?” என்று விளக்கம் கேட்டு காந்தியின் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பி இருந்தார். மனைவி கலாவிடமும்,மகன் கென்னடியிடமும் முழுக் கதையையும் சொன்னார் மிஸ்டர் இரக்கசாமி. முதலில் கோபப்பட்ட கலா பின்பு கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்.

” இளிச்சவாயென்னு ” …” டேய்,உங்கப்பா முகத்திலே அப்படியே எழுதி வெச்சுருக்குடா ‘ என்றாள் கல,கலவெனச்சிரித்துக்கொண்டே கலா…” கட்டின பாவத்துக்கு நானும் ஒண்ணும் சொல்றதில்லடா,உங்கப்பாவ’ என்றாள் மேலும்….

‘அப்படியாம்மா, அப்பா முகத்திலே அப்படியா எழுதி ஒட்டிருக்கு..முகத்திலே பார்த்தா எனக்கு ஒண்ணும் தெரியலையேம்மா ‘ என்று அம்மாவின் நக்கலுக்கு சரிசமமாய் நக்கலடித்துக்கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்த்தான் 12-ஆம் வகுப்பு படிக்கும் கென்னடி.

மனைவியும் மகனும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே ,இடி விழுந்ததைப் போல அமைதியாக உட்கார்ந்திருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. இரக்கப்படுகிறேன் என்று சொல்லி ஏமாளியாகிக் கொண்டிருந்த இரக்கசாமி தனது மனைவியையும் மகனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே பரிதாபமாக முழித்துக்கொண்டிருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *