உப்பிலிபாளையம் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார் கூத்தபிரான்.
உக்கடம் செல்ல வேண்டும்.
தேர்வுத்தாள் திருத்தும் பணி இன்றோடு முடிந்து, இத்தனை நாட்களுக்கான சம்பளமாக ரூபாய் பத்தாயிரம் கையில் இருந்தது.
சரியாக சொகுசுப் பேருந்து ஒன்று வந்தது. ஏறலாம் என்று ஓடிய போது, இது ஒன்பது ரூபா பஸ். கொஞ்ச நேரத்துல மூணு ரூபா பஸ் வந்துடும் என்றார் சக பயணி.
ஒன்பது ரூபாய், எட்டு ரூபாய், ஆறு ரூபாய், மூன்று ரூபாய் என ஒவ்வொரு பஸ்ஸூக்கும் விதவிதமான கட்டணங்கள் இருக்கும் விநோதத்தைப்பற்றி யோசித்தபடியே, வீட்டுக்குப் போக என்ன அவசரம். சாதாரண கட்டண பஸ் வரட்டுமே என்று நின்று விட்டார் கூத்தபிரான்.
சில நிமிடங்களில் அந்தப் பேருந்து வந்தது. சரியான கூட்டம். சிரம்பபட்டு ஏறி, பின்புறம் சென்றுவிட்டார்.
நெரிசலில் நசுங்கி, கால்கள் மிதிபட்டு நெளிந்தார். வியர்வை நாற்றமும், சாராய நெடியும் வேறு வியிற்றைக் கலக்கியது.
எப்படியோ உக்கடம் வந்தாயிற்று. வேகமாக கீழே இறங்கியவர் ஒரு டீக்கடையில் டீ சொல்லிவிட்டு பாக்கெட்டில் கையை விட்டால், அது கிழிபட்டிருந்தது. பர்ஸைக் காணவில்லை.
கூட்டமான பஸ்ல பணத்தோட வரக்கூடாது சார், வந்தா இப்படித்தான் என்றான் டீக்கடைக்காரன்.
6 ரூபாய் மிச்சப்படுத்தப் போய் 10 ஆயிரத்தைப் பறிகொடுது விட்டு தொங்கிய முகத்தோடு வீட்டுக்கு நடந்தார் அவர்.
– த.வாசுதேவன் (மார்ச் 2013)