மாய குதிரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 6,616 
 
 

நொடிக்கும் குறைவான நேரத்தில், ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மணல் மேட்டில் குடை பிடித்து நடக்க இந்த மனத்தால் முடிகிறது. அடுத்த கணம், என் வீட்டு மொட்டைமாடியில் என்றோ விட்டு சென்ற தோழியுடன் அமர்ந்து கதை பேச முடிகிறது…. மனம் எங்கு வேண்டுமானாலும் செல்லும் மாய தந்திரம் படைத்தது.. ஆனால் எங்கோ சென்று விட்ட தோழியை அழைத்து வந்து வீட்டு மொட்டை மாடியில் அமர வைத்து கதை பேசுவது மனதின் பயணமில்லை….. அது கற்பனை…

சரி, இன்னொரு வகையில் விளக்க முயற்சிக்கிறேன்…..

ஒரே ஒரு முறை நேரில் பார்த்த மரத்தை கற்பனையில் கொண்டு வந்து, இது வரை பார்க்காத பறவையை அந்த மரத்தில் அமர வைப்பதில் விளங்க முயற்சிக்கும் விஷயம், மரம் கற்பனை என்பது. ஏனெனில், பார்த்தோ, கேட்டோ மனதிற்குள் சென்ற ஒன்று தான் கற்பனைக்குள் வரும் என்பது விஞ்ஞானம். இதுவரை பார்க்காத பறவையை, அந்த கற்பனை மரத்தில் அமர வைத்து, அது பறவைதான் என்று சொல்வது மனதின் பயணம் அறியும் மெய்ஞானம்.

ஆக, கற்பனைக்கும், நிஜத்துக்கும் இடையே ஒரு இடைவெளி, எறும்பாய் ஊரிக் கொண்டிருப்பதை, தன்னை விடுவித்துக் கொண்ட இலையொன்றின் காட்சி காணும், எழுத்தாளனும், உழவனும் ஒரு சேர பேசுவதாக அமைகிறது, விளக்கமும், விளங்குதலும், சுவரும் ஓவியமுமாக ….. சில்லிடும் பனியில், தெரிந்தும், தெரியாமலும் பயணிக்கும் முகப்பு வெளிச்சமாக…….

அவனுக்கு வேலை கிடைக்கவில்லை….. எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தான் …. எல்லா பதிலுக்கும் ஒரு கேள்வி வைத்திருந்தார்கள்.கேளுங்கள் தரப்படும்….. நம்பிக்கையோடுதான் வேலை கேட்டான்.. அவர்களும் கேட்டார்கள், அதே நம்பிக்கையோடு.. என்னவெல்லாமோ செய்து பார்த்தான். உடல் மொழி, தெரிந்த மொழி என்று, முகம் மாற்றி, புன்னகை மாற்றி, மௌனமாய் பார்த்து, கவனமாய் பார்த்து.. இன்னும் என்னவெல்லாமோ செய்து பார்த்தான்.. இனி அழுகைதான் மிச்சம்.. அதையும் செய்து விடலாமா என்று கூட தோன்றியது …..ஒரே நேரத்தில் நான்கு பேர் கேள்வி கேட்கலாம். ஒரே நேரத்தில் வெவ்வேறு பதில்களை நான்கு பேருக்கும் எப்படி சொல்வது… என்ன கார்பரெட்டொ , உலகமயமாக்கலோ….? அவர்களாகவே ஒரு இலக்கணம் வைத்துக் கொள்கிறார்கள். பணம் செய்யும் பித்தில் , பாம்பு புத்தே கெத்தாய் கத்துகிறது.. இப்படி விளங்காத எதுகை மோனை சொல்பவரை உற்று நோக்குங்கள்….வெளிநாட்டு நிறுவனத்தில், பர்கர் உண்டபடியே இரவு வேலை செய்பவராக இருப்பார்….

கேள்விக்கு பதில் தெரியாத, சொல்ல முடியாத நேரத்தில் இப்படி சம்மதமே இல்லாமல் சிந்தனை சுழலுவது கூட தேடல் தான்….கண்கள் கலங்கியபடியே வெளியே வந்தான்.. வெளியே வந்த கட்சி அப்படியே புகைப்படமாகி நிற்க……..

அதே போல் ஒரு நேர்முகத் தேர்வில் இன்னொருவன் அமர்ந்திருக்கிறான்….

எதிரே இருப்பவரின் பாவனைகளில், உடல் மொழிகளில் கேள்வியை கணிக்க முடிந்தாலும் ஏனோ நினைத்ததை பதிலாய் வெளிப்படுத்த முடியவில்லை.. எல்லாம் புதிதாகவே தெரிகிறது… ஏனோ புதிராகவே விளங்குகிறது…..கடைசியில், என பெரிய கடைசி, கடைசி என்ற ஒன்று உண்டா.. நாம் நினைத்துக் கொள்கிறோம் கடைசி என்று.. சரி கடைசி என்ற நினைப்பில், அவனுக்கு வேலை இல்லை என்றானது .. வெளியே வந்தான்….

முதலில் வேலையில்லை என்று வெளியே வந்து, புகைப் படமாய் நின்றவன், உயிர்தெழுந்து, மனது கனத்துக் கிடக்க நடக்கிறான்…. இரண்டாவது வந்தவனும் கனத்த மனதுடன் நடக்கிறான்….

இருவருமே, ஏதேதோ சிந்தனையில் உலகம் மறந்து, ஒருவரையொருவர் எதிரெதிரே கடக்கிறார்கள்.. இருவரின் மனதுக்குள்ளும் மரணம் என்ற ஒற்றைச் சொல் விஸ்வரூபம் எடுக்கிறது… பேசாமல் செத்து விட்டால் என்ன?

இந்த மரணம் அழ வைக்கும் .. பயம் கொடுக்கும். இறந்த பின் அமைதி கொடுக்கும். பிரச்சனையில் சிக்கிய எத்தனையோ பேர், தற்கொலையால் தீர்வு கண்டிருக்கிறார்கள். என்ன, உறவும் ஊரும் கொஞ்ச நாட்களுக்கு தட தடக்கும்..பட படக்கும் …. பின் தொலைக் காட்சி பெட்டிக்குள் ஓடி போய் ஒளிந்து கொள்ளும்….நாம் தப்பித்துக் கொள்ளலாம். மரணம் கூட சுயநலம் தான்.. முதலில் வந்தவனுடைய கற்பனை சிறகு தற்கொலையின் வீரியத்தோடு சிறகடித்தது….

இந்த மரணம், அழ வைத்தாலும் ஏதோ சொல்கிறது.. உயிரின் தேடலே மரணம். உயிர், பிரிந்த பின் எங்கு செல்லும், வானம் நோக்கியா… பிரபஞ்சம் தாண்டியா…? பால்வீதியில், பெட்டிக் கடை வைத்து பிழைத்துக் கொண்டிருக்குமா…..! என்ன நடந்தாலும், இந்த வேதனையை போக்கி விடும் நண்பன் அல்லவா.. இந்த தற்கொலை. இரண்டாவது வந்தவனுடைய மனம், பயணித்து ஒரு எல்லை வரை மரணத்தை கணித்து வந்தது….

இருவரும் எதிரெதிர் கடையில், நைலான் கயிறு வாங்கினார்கள்…..

மரணத்தை பார்த்த பிறகு, என்ன புரியும் என்பதை இருவருமே , ஒவ்வொரு மாதிரி புரிந்து வைத்திருந்தார்கள்.. எடுத்த முடிவு, எக்காரணத்தைக் கொண்டும் மாறி விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார்கள். கயிறு உறுதியானது தானா என்பதை இருவருமே, இழுத்துப் பார்த்து உறுதி செய்தார்கள்….சுற்றும் முற்றும் பார்த்தவர்கள், தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு எதிரெதிர் திசையில் நடக்க ஆரம்பித்தார்கள். இதுதான் தீர்வு என்று முடிவெடுத்த பின், சரி தவறு யோசிக்கத் தேவையில்லை என்பதை நன்கு புரிந்திருந்தார்கள்….

அவரவர், வீட்டுக்குள் ஒரு வித நடுக்கத்தோடும், படபடப்போடும், பரிதவிப்போடும், கலங்கிய கண்களோடும் அமர்ந்திருந்தார்கள். வர வேண்டிய மரணம், வராமல் போவதேயில்லை, வேண்டாம் என்பவர்க்கும்……துணிந்தவனுக்கு தூக்கு மேடை தூக்கு மேடையேதான் ….

முதலில் வந்தவன், ஸ்டூலைப் போட்டு அதன் மீது ஏறி நின்று, மின் விசிறியில் சுருக்கு கயிறை மாட்டினான்….. கழுத்தில் கச்சிதமாக பொருத்தி முடிச்சை இறுக்கினான்…..இரண்டாவதாக வந்தவனும், கயிறாய் கழுத்தோடு கட்டி, இதோ கால், நின்று கொண்டிருக்கும் ஸ்டூலை தட்டி விட தயாராகி இருந்தான்….

இருவரின் கால்களுமே நடுங்குகிறது….. இருவருமே, அறையின் கதவின் தாள்பாளை ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள்….இன்னும் சில மணித்துளிகளில் கற்பனை சிறகு, மனப் பறவையுடன் கலந்து சுதந்திரமாய் பறக்க போகிறது…..

கனத்த மௌனம் …. கலைத்தது, ஏதோ ஒரு ஸ்டூல் வேகமாக கீழே விழுந்த சத்தம்…..

முதலில் வந்தவன், வேக வேகமாய், கழுத்தின் கயிறை இளக்கி , விலக்கி , கீழே இறங்கி ஜன்னலைத் திறந்தான்….
இரண்டாவது வந்தவனும், வேக வேகமாக கீழே இறந்கி , சத்தம் வந்த திசையில் இருந்த ஜன்னலைத் திறந்தான்…..

இரண்டு ஜன்னல்களுக்கிடையேவும் தெரிந்த அறையில் ஒரு ஜோடிக் கால்கள் தொங்கியபடியே, ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டிருந்தது….

கண்கள் விரிய இருவரும், எதிரெதிர், அவரவர் ஜன்னல் வழியாக, இடையில் இருந்த வீட்டில், திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே தொங்கி கொண்டிருந்த மரணத்தை பார்த்தார்கள்….

மரணம் என்பது அப்படி, இப்படி என்பது கற்பனை. மரணம் வந்தால் இறந்து விடுவோம் அதற்கு பின் என்ன என்பதான தொடர்தல் மனதின் பயணம்….இரண்டையும் சிறை கம்பிகளாக்கி, நடுவில் நிஜமாய் மரணித்து கிடப்பது, கற்பனையும், மனதின் பயணமும் ஒரு சேர சேரும் நொடிகளின் புள்ளி என்பதாகவே, இப்போதைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கிறேன்…..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *