மானுடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 3,208 
 
 

சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்னர் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபை ஆண்டு விழாவொன்றை யாழ்ப்பாணத்தில் வெகு கோலாகலமாக நடத்தி முடித்தது. அவ்விழாவுக்கென்றே பாரிய ஆண்டு மலரொன்றையும் வெளியிட்டு வைத்தது. அந்த மாநாட்டு மலரில் நானெழுதிய சிறுகதையே இந்தக் கதை. இம்மலரைத் தயாரித்தவர்கள், மகாசபையைச் சேர்ந்த படைப்பாளிகளே.

எனது மொத்தச் சிறுகதைகளையும் ஒரு பாரிய தொகுதிக்குள் ஒருங்குசேர இணைத்து வெளியிடத் திட்டமிட்டிருந்தேன். எனது படைப்புகள் பல எனது கைவசம் இருக்கவில்லை . அதில் ஒரு சிறுகதை இதுவாகும். இலக்கிய நண்பர் இளங் கோவனின் பாரிய தேடலில் இக்கதை அவரது கைவசம் கிடைக்கப் பெற்றதும் மன மகிழ்ச்சியுடன் தட்டச்சில் பதிந்து எனது கைவசம் சேர்ப்பித்தார். நன்றி.

இனக் கலவரம், இனச் சங்காரம் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் பரம்பரை இயல்பான மானுட உரிமை பெறக்கூட எத்தனை எத்தனை கஷ்ட நிஷ்டூரங்களையும் தாண்டி இன்று கரை சேர்ந்துள்ளது என்பதை கடந்த கால வரலாறு இந்தச் சிறுகதை மூலம் நிரூபிக்கின்றது.

– டொமினிக் ஜீவா

*****

யாழ்ப்பாணப் பட்டின ஆஸ்பத்திரியின் குழந்தைகள் பகுதியான சில்ரன் வார்ட்’டினுள்ளே ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான், ஞானசுந்தரன்.

அவன் கண்கள் அங்குமிங்கும் சுழன்று வட்டமிட்டன. சனங்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். வெள்ளைக் கலையுடுத்த சில நர்ஸுகள் அடிக்கடித் தென்பட்டனர். குழந்தை நோயாளிகளின் பகுதியானபடியால் அதிகமாகப் பெண்கள்தான் அங்கு காணப்பட்டனர்.

மருந்துகளின் நெடி ஞானசுந்தரனின் மூக்கைத் துளைத்தது. புதுவகை மணம் அது!

பகல் பன்னிரண்டு மணிக்கும் ஒரு மணிக்கும் இடைப்பட்ட ஓய்வு நேர மது. இந்த இடை நேரங்களில் ஆஸ்பத்திரி எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் பரபரப்புடனும் காணப்படும். காரணம் – நோயாளிகளைப் பார்வையாளர் களும் இனசனங்களும் பார்த்துப் பேசிப் போவதற்கு இந்த இடைநேரத்தைத் தான் பயன்படுத்துவார்கள்.

சனங்கள் வந்து கொண்டிருந்தனர். சிலர் போய்க்கொண்டிருந்தனர்….

ஞானசுந்தரனும் தன்னுடைய சகோதரியின் மகனைப் பார்ப்பதற் காக வந்திருந்தான். விளையாட்டுத் தனத்தால் வேலியில் ஏறி, கால் சறுக்கி விழுந்தது காரணமாக அவ னின் முழங்கை எலும்பு பிசகி விட்டது. டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத் திருந்தனர். அதைப் பார்த்துப் போகத்தான் ஞானசுந்தரன் வந்திருந் தான். கையோடு சகோதரியின் பகல் உணவை கொண்டு வந்திருந்தபடி யால் சகோதரி சாப்பிடப் போய்விட் டாள். மருமகனுக்குக் காவலாக அவன் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தான்.

நேரம் ஊர்ந்து கொண்டிருந்தது. சாப்பிடப் போன சகோதரியும் இன்னமும் திரும்பி வரவில்லை. பெண் கள் விவகாரமே இப்படித்தான். ஆஸ்பத்திரியாக இருந்தால் என்ன? அடுப்படியாக இருந்தால் என்ன? பேச இரண்டு பேர் கிடைத்து விட்டால்… அவ்வளவுதான்!

நேரப் போக்குக்காக சுற்றும் முற்றும் கண்ணோட்டம் விட்டான் ஞான சுந்தரன். வார்ட்டில் சனங்கள் ஓரளவு நிறைந்து விட்டனர். வெள்ளைக்காரத் தாதி ஒருவர் ஒவ்வொரு கட்டிலாகச் சென்று குழந்தைகளை விசாரித்து விட்டுப் புன்சிரிப்புடன் அவர்களின் கன்னங்களைக் கிள்ளி விட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தாள்.

ஞானசுந்தரன் அதைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு நின்றான். சிந் தனை சுழித்துப் புரண்டது. அவன் சிந்திக்கத் தெரிந்தவன். சுயமாகச் சிந்திக்கும் தனிப்பண்பு கொண்டவன், அவன்.

எண்ணிப் பார்க்கவே முடியாத தொலை தூரத்தில், மேல் நாட்டில் ஏதோ ஓர் ஊரில் பெண்ணாகப் பிறந்து, வளர்ந்து, தேசம் விட்டு மொழியை மறந்து, தாய் – சகோ தரங்கள் – இனசனங்கள் அத்தனை பேரையும் உயிருடனே துறந்து, முன் பின் தெரியாத – பாஷைகளையே முன்பின் புரிந்துகொள்ள முடியாத தேசத்தில், ஊரில் இவர்களால் எப் படிப் புன்சிரிப்புடன் சேவை செய்ய, பாசம் காட்ட, அன்பு போதிக்க முடி கிறது? வெறும்… வெறும் மத நம் பிக்கை கொண்ட எண்ணம் மட்டுந் தானா? அல்லது…

“கொஞ்சம், அந்தக் கரண்டியைத் தாறீங்களா?”

சிந்தனை இழை அறுந்தது. திரும்பிப்பார்த்தான், ஞானசுந்தரன்.

“தோடம்பழத் தண்ணி கரைப்பதற்குக் கரண்டி இல்லை. என்னுடைய மிஸிஸும் சாப்பிடப் போய் விட்டா. அதுதான் அந்தக் கரண்டி…”

பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த பெண் குழந்தையின் தகப்பனாரான அந்த மனிதனை அப்பொழுதுதான் ஞானசுந்தரனால் நன்றாகக் கவனிக்க முடிந்தது. கறுப்புப் பிளானல் நீட்டுக் காற்சட்டை போட்டு, வெள்ளைச் சேர்ட்டுப் போட்டிருந்தான். வயது முப்பது அல்லது முப்பத்திரண்டு தான் இருக்கும். கண்ணுக்குக் கண் ணாடி அழகு செய்தது. நடு உச்சிப் பிரித்துத் தலையை நன்றாக வாரி இருந்தான். சட்டைப் பையில் பார்க் கர் பேனா மினுமினுத்தது. இடது கையில் தங்கச் சங்கிலியிட்ட கைக் கடிகாரம் ஜொலித்தது.

பார்ப்பதற்குப் பிரமச்சாரி போலக் காட்சி தந்த அலட்சியம் செய்ய முடியாத அந்த வாலிபன், பெரிய இடத்துப் பிரமுகனைப் போலக் காட்சி தந்தான். சென்ட் மணத்தின் வாடை அடிக்கடி மெல் லியதாகக் காற்றில் மிதந்து வந்தது.

இவ்வளவையும் கிரகித்துப் புரிந்துகொள்ள ஞானசுந்தரனுக்கு அதிக நேரமாகவில்லை . அறிமுகப் புன்முறுவலுடன் கரண்டியை எடுத் துக் கொடுத்தான். –

ஆஸ்பத்திரிக்கு வருகிறவர்கள் ரெயில் சிநேகிதர்களைப் போன்ற வர்கள். பரஸ்பரம் எப்பொருட்களை யும் பரிமாறிக் கொள்ளுவார்கள். தங்கள் குடும்ப விவகாரங்களைக் கூடத்தான். இது சர்வசாதாரணம். இதையொட்டித்தான் அவன் உதவி செய்தான்.

சிறிது நேர வேலைக்குப் பின் குழந்தைக்கும் தோடம்பழத் தண்ணீ ரைக் குடிக்கக் கொடுத்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தான், அந்த வாலிபன். “என் பெயர் நடராசா, சங்கானையில் இருக்கிறோம். கொழும் பிலே வேலை. இவ என்னுடைய மகள், வாசந்தி.”

எதைப் பற்றியுமே கேட்க முனையாமலிருக்கும் பொழுது இப் படி அறிமுகப் படலம் நடத்தி முடித்த நடராஜா என்ற அந்த வாலிபனை ஆச்சரியத்துடன் பார்த்தான், ஞானசுந்தரன். விசித்திரமான இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து அபாய அறிவிப்பும் நிகழ்ந்து விடலாம் என்று மனதிற்குள் பயப்பட்டான். சகோதரி வந்துவிட்டால், இந்த ஆபத்தைத் தவிர்த்து விடலாம் என்று சகோதரி சென்று மறைந்த திக்கை எட்டி யெட்டிப் பார்த்தான். மனம் அரித் தது. காவல் நிற்க எரிச்சலாகவும் இருந்தது.

அவன் பயந்தபடியே காரியம் நடந்தது. “நீங்கள் எங்கு இருக்கிறது?” என்று கேட்டான், நடராஜா. அவ னுக்கும் பொழுது போகவேண்டி இருந்தது. சும்மா இப்படிக் கேட்டு வைத்தான்.

இப்படியான விசாரிப்புகளைக் கட்டோடு வெறுப்பவன் ஞானசுந் தரன். எனவே முகத்தைச் சுளித் தான். தமிழர்களிடம் ஒரு அநாகரிகப் பழக்கம் இருக்கிறது. பஸ்ஸில், ரெயி லில் ஏன் சாவீட்டிலும் கூட ஊர், உத்தியோகம், குலம், கோத்திரம், சம்பளம், கலியாணம் செய்தது, செய் யாதது ஆகிய அத்தனையையும் வாய் விட்டே கேட்டு விசாரிப்பார்கள். இது கேவலமான ஒரு செய்கை என்று அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. இவர்கள் எந்த அனுபவத்தைக் கொண்டும் தங்கள் மனப்பான்மையை மாற்றிக்கொள்ள முயற்சிக்கவே மாட்டார்கள். ரெயில், பஸ் பிரயாணத்தில் பலதரப்பட்ட சுபாவமுள்ளவர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், இங்கு ஆஸ்பத்திரியில் – ஆஸ்பத்திரி கூட, இதற்கு விதிவிலக்கல்ல என்று எரிச்சல் பொங்க எண்ணினான். ஆயினும் சம்பிரதாயத்துக்காக “ஆனைக் கோட்டை” என்றான் ஞானசுந்தரன்.

கேள்விக்கணை ஓயவில்லை. ஓய்ந்து விட்டால்தான் அது தமிழ னின் தனிப்பெரும் பரம்பரைப் பண் பாடல்லவே. தொடர்ந்து கேட் டான், நடராஜா. “என்ன உத்தி யோகம் பார்க்கிறீங்கள்?” கேட்டு விட்டுத் தொடர்ந்து பதிலையும் அவனே ஊகித்துச் சொன்னான். “கொழும்பிலே கவுமென்ட் வேலை யாக்கும் என்ன, சரிதானே?” தனது கண்டுபிடிப்பைத் தானே மெச்சிக் கொள்பவனைப் போல, ஞானசுந்த ரனைப் பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்தான்.

“இல்லை ! நான் ஊரில் படிப்பிக்கிறன்.”

“ஓ! மாஸ்டரா?” அவன் முகத்தில் ஓர் அலட்சிய மனோபாவத்தின் ரேகை மின்னி மறைந்ததை ஞான சுந்தரன் கவனிக்கத் தவறவில்லை . தோல்வியை ஒத்துக்கொள்ளாத முறையில் தன்னுடைய முகமாற்றத்தைச் சட்டென்று மாற்றிக்கொண்டான். “நான் முதலில் அப்படித்தான் நினைச்சேன். ஆமாம், நான் அப்படித் தான் எண்ணினேன்.”

அறிவு வளராத குழந்தையைப் போன்ற அந்த வாலிபன் தான் தவ றாகச் சொன்னதைச் சரி செய்வதற் காக எடுத்துக்கொண்ட முயற்சியை யும், அதை உண்மையாக்க, நம்ப வைக்க பட்ட பாடுகளையும் நினைத்த பொழுது ஞானசுந்தரனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

“மாஸ்டர்! நீங்கள் மாஸ்டராக இருக்கிறபடியால் ஒன்று ஞாபகம் வருகுது. இந்தப் பள்ளிக்கூட விவகாரம்…” பேசிக்கொண்டு வந்ததை முடிக்காமல் இடையிலேயே விட்டு விட்டு என் கண்களைக் கூர்ந்து பார்த் தான். நடராஜா முதலில் ஏற்பட்ட ஊகிக்கிற தோல்வியைப் போல ஆகி விடக் கூடாதே என்ற ஆவல் அவன் மனதில் நிறைந்திருந்தது. “என்ன மாஸ்டர் சொல்லுறீங்கள்?”

“எதைக் கேக்கிறீங்கள்?” –

“அதுதான் இந்தப் பள்ளிக்கூடங் களில் எல்லாச் சாதியும் சேர்ந்து படிக் கிற விஷயத்தைத்தான் கேட்கிறன். நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?”

வேடிக்கையான இந்த விவாதத் தில் வென்றுவிட வேண்டும் என்று நினைக்கிற நாற்காலிக் கனவுவாதி களைப் போல, அவன் பரபரப்புடன், ஞானசுந்தரனைப் பார்த்துத் தொடர்ந்து கேட்டான், “இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?”

“உங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லுங்கள். பிறகு நான் சொல்லு கிறேன்” ஞானசுந்தரன் தட்டிக் கழிக் கும் பாவனையில் சொன்னான்.

“நான் கொழும்பிலே வீடெடுத்து இருந்தனான். அங்கேதான் என் மகள் படித்தவள். இந்தச் சிங்களச் சண் டைக்குப் பிறகு சங்கானைக்கு வந்திட் டோம். இப்ப சங்கானைப் பள்ளிக் கூடத்தில்தான் வாசந்தி படிக்கிறாள்.”

இப்படியான சம்பாஷணைகளில் இடையிட்டுப் பேசினால் உணர்ச்சி தோன்றும். ஆக்ரோஷம் பிறக்கும் என்பதை அநுபவ உண்மையாக உணர்ந்த ஞானசேகரன், வார்த்தை களால் உணர்ச்சியைக் கிண்ட நினைத் தான். “இப்ப ஒரு கரைச்சலும் இல்லையே, உங்களுக்கு? சொல்லுங்க என்ன கரைச்சல்?” என்றான்.

“கரைச்சலா? அதையேன் கேக் கிறீங்க? சிங்களவனிட்டே கொழும் பில் அடி வாங்கினதுகூட எங்களுக்கு அவமானமில்லை. வெட்கமில்லை! ஊரிலே – நாங்க பிறந்து, வளர்ந்து படித்துப் பெரியவர்களான ஊரிலே எங்களை நாலுபேர் மதிக்கவில்லை யென்றால், கொழும்பிலே இருந்து ஓடியந்த மாதிரி, பிறந்த ஊரிலே இருந்து நாங்க எங்கே ஓடுகிறது?”

“ஆத்திரப்படாமல் விஷயத்தைச் சொல்லுங்க. என்ன நடந்தது?” சொல் லப் போகிற விஷயத்தை ஓரளவு ஊகித்துப் புரிந்து கொண்டாலும், நட ராஜாவின் வாயினாலேயே விஷயம் முற்றாக வெளிவர வேண்டும் என்ற ஆவலினால் பரபரப்படையாமல் கேட்டான், ஞானசுந்தரன்.

“ஆத்திரப்படாமல் இந்த அநியா யத்தை எப்படிச் சொல்ல முடியும், சொல்லுங்க பார்ப்பம். வாசந்தி படிக் கிற பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாதது குற்றமாம்.”

“பள்ளிக்கூடப் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தவறி, அதற்குத் தகுந்த காரணமும் கூறாமல் இருந்தால் எந்த ஹெட்மாஸ்டரும் நடவடிக்கை எடுக்கத்தானே செய் வார்? இதிலென்ன அதிசயம்?” தான் ஆசிரியர், தனக்கும் பள்ளிக்கூடச் சட்டம் சிறிது தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ள இதைச் சொல்லி வைத்தான், ஞானசுந்தரன்.

“காரணம் என்ன, கத்தரிக்காய்க் காரணம்!” வார்த்தைகள் வெறுப் பைக் கக்கின. படுத்திருந்த குழந்தையின் தலையணையைச் சரிசெய்து மகளை நேராகப் படுக்க வைத்து விட்டுத் தொடர்ந்து சொன்னான் நடராஜா, “காரணம் என்ன? எங்களு டைய பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லை. கண்ட சாதிகள், நிண்ட சாதிகள் எல்லாம் வந்து படிக்கும். அதுகளுடன் சேர்ந்து எங்களுடைய பிள்ளைகள் படிக்கிற துக்கு எங்களுக்கு இஷ்டமில்லை!”

சற்று நேரம் மௌனம் நிலவியது. மறுபடியும் அவன்தான் பேசினான்.

“என்ன இருந்தாலும் மாஸ்டர், இதை நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேணும். இந்த எளிய சாதிகளிடம் நல்ல ஒழுக்கமோ அல்லது நல்ல பண் பாடோ, நன்றி உணர்ச்சியோ மருந் துக்கும் கிடையாது. இதைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?” கோழிச் சண்டையில் வெற்றி பெற்ற சேவல் இறக்கையை அடித்துக் – கொக் கரக்கோ கூவி விட்டு, அலட்சியமாக அங்குமிங்கும் பார்த்து நிற்குமே, அதைப் போன்ற அநாயசமான பார்வையுடன் நடராஜா ஞானசுந்த ரனைப் பார்த்தான். வெகுளித்தனம் பெண்களுக்குக் கவர்ச்சி தரும் ஆபரணமாக இருக்கலாம். ஆனால் அது ஆணிடம் தென்படும் பொழுது?

குதர்க்கம் பேசும் சோம்பேறி மனோபாவமுள்ள குழந்தைத்தன மான இந்த வார்த்தையைக் கேட்ட பொழுது ஞானசுந்தரனுக்கு அழு வதா சிரிப்பதா என்பதே புரிய வில்லை . நாகரிகமாக உடுத்துக் கன வானைப் போலக் காட்சி தரும் அந்த வாலிபனின் வார்த்தைகள் ஞான சுந்தரனைத் திகைக்க வைத்தன.

கொழும்பில் உத்தியோகம் வகிக் கும் ஒரு தற்கால வாலிபன் இப்படி யாக வெறி கொண்டு பேசுவான் என்று அவனால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. குழந்தை களுக்குத்தான் பெயரே சொல்ல முடியாத சில நோய்கள் வருமாம். அதைப்போன்று புரிந்து கொள்ளவே முடியாத சமூக நோய்தானா, இது?

“என்ன மாஸ்டர் பேசாமல் நிக்கிறீங்கள்?”

“ஓ… எனக்கொன்று ஞாபகம் வருகிறது. கிளி ஒன்றைப் பல காலம் கூட் டிலே அடைத்து வைத்து வளர்த்து விட்டு, அதைத் துறந்து விட்டால் அந்தக் கிளி வானத்தில் பறக்காது. வளர்ந்த கூட்டைச் சுத்திச் சுத்தித் தான் வரும். புத்திசாலிகள், உண்மை மனிதர்கள் கிளியைக் கோபிக்க மாட்டார்கள். அதன் சிறகையும் குறை கூற மாட்டார்கள். கிளியின் சுதந்திரத்தைப் பறித்து, சுதந்திர எண்ணத்துடன் வானவீதியில் பறக்கும் சக்தியை மழுங்க அடித்த மனிதப் புல்லுருவிகளைத்தான் திட்டுவார்கள்.

அதைப் போல…

தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லக் கூடியவர்களான உண்மை உழைப்பாளிகளின், கிராமங்களில் இருந்து தமிழ் பேசித் தமிழ் சாகாமல் காத்தவர்களின் மனிதத் தன்மையை, மனிதப் பண்பை , ஏன் அவர்களின் மனித ஆத்மாவையே காலம் கால மாகக் கொன்றவர்கள, சாகடித்தவர் கள் அவர்களிடம் எதையாவது எதிர் பார்க்கலாமா? குளிக்கக் கிணறில்லை. தவளி அள்ளிவிட்டால் கொலை! படிக்கக் பள்ளிக்கூடமில்லை. முயற்சி செய்து சேர்த்து விட்டால், குடிசைகள் கொளுத்தப்படும். இவர்களுக்கு ஒரே யொரு உரிமைதான் இருக்கிறது. சாகிறதுக்கு அல்லது தற்கொலை செய்கிறதுக்கு!” மனதிலிருந்த ஆவேசம், நீண்ட நாட்களாக நெஞ்சில் கொதித்துக் கொண்டிருந்த கொதிப்பு, வார்த்தைகளாக, சொற் பாணங்களாக வெளிவந்தன.

“அது சரி… உங்களுக்கேன் இவ்வளவு கோபம் வருகிறது?”

“நான் கூட நீங்கள் கேவலமாகப் பேசும் எளிய சாதியைச் சேர்ந்தவன். அதாவது தாழ்த்தப்பட்டவன்!”

இன்று எவருமே வாய் திறந்து பேச வெட்கப்படும் இந்த அவமானகரமான பிரச்சினையைப் பற்றிப் பேசிவிட்டு தலை குனிந்து கொள் ளாமல் நிமிர்ந்து நின்று தன்னையே பார்த்துக் கொண்டு நிற்கும் நடராஜாவை ஒரு கணம் கூர்ந்து பார்த்தான், ஞானசுந்தரன்.

சாதிவெறி கூட ஒரு பயங்கரமான வியாதி. அது பகுத்தறிவைச் சூனியமாக்கி மனிதனைக் கோழையாக்கி விடுகிறது இந்த எண்ணம் அவன் நெஞ்சத்தில் நிழலாடியது.

மனச்சாட்சியுடன் தர்க்க வாதம் தனக்குள்ளே செய்து பார்த்தான், நடராஜா. குழந்தையின் பிடிவாதத்தைப் போன்ற ஒரு வகைப் பிடிவாதத்துடன், “என்ன சொன்னாலும் சரி, எங்களுடைய பிள்ளைகளை இப்படியான பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப மாட்டோம். ஆமாம், அனுப்பவே மாட்டோம்!” என்றான்.

ஞானசுந்தரனின் வாய் துடிதுடித்தது. தேகம் பதறியது. பொறுமையை ஒருகணம் இழந்து விட்டான். நிதானம் தவற அவன் பண்பட்ட மனம் இடம் தரவில்லை. நிமிர்ந்து நின்று கேட்டான்.

“பலதும் பத்தும் படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு எங்கள் உயர் சாதிக் குழந்தைகளை அனுப்ப மாட்டோம்; படிப்பிக்க மாட்டோம் என்கிறீர்களே அது சரியென்றால் கண்ட சாதிகளும் நிண்ட சாதிகளும் வந்து மருந்து குடிக்கிற, படுத்திருக்கிற ஆஸ்பத்திரிக்கு நீங்கள் மாத்திரம் வரலாமா? உங்கள் பிள்ளைகள் வந்து படுக்கலாமா?”

அந்தக் குழந்தைகளின் வார்ட்டில் பரிதாபத்துக்குரிய குழந்தையைப் போல, வாய் செத்து மௌனமாக நின்றான், நடராஜா.

அனுங்கல் சத்தம் கேட்டது.

ஞானசுந்தரன் மருமகனைத் திரும்பிப் பார்த்தான். நடராஜாவின் கண்களும் கவனித்தன. அங்கே அந்த வெள்ளைக்காரத் தாதி மருமகனின் போர்வையை ஒழுங்குபடுத்திவிட்டு அதன் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். கூடவே, கையில் வைத்திருந்த ஒற்றைப் பூவொன்றை அதன் காதில் செருகிய பின்னர் புன் முறுவல் பூத்தபடி நடந்து கொண்டிருந்தாள்.

– மல்லிகை மார்ச் 2012

டொமினிக் ஜீவா (Dominic Jeeva, சூன் 27, 1927 - சனவரி 28, 2021) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார். இவரது தந்தை ஆவுறம்பிள்ள; தாய் யோசப் மரியம்மா. இவர் மல்லிகை என்னும் சஞ்சிகையின் ஆசிரியராவார். புரட்சிமோகன் என்ற புனைபெயரில் ஆக்கங்களைப் படைத்துள்ளார். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரது எழுதப்படாத கவிதைக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *