பூமியின் சுற்றுப்பாதையில் சேர்ந்த உடனேயே அத்தனை பூமித் தலைவர்களுக்கும் செய்தி அனுப்பியிருந்தார்கள். “நாங்கள் கிடிழின் வாசிகள். பூமியிலிருந்து மூவாயிரம் ஒளிவருடங்கள் கடந்து புது கிடிழின் கோளிலிருந்து வருகிறோம். நாங்கள் நல்லெண்ணத்தோடு வருகிறோம். எங்களைப் போரில் வெல்ல முடியாது. முயற்சி செய்யாதீர்கள். மறுபடியும் சொல்கிறோம்: நாங்கள் வருவது நல்லெண்ணத்துடன் தான்”.
உலகத்து அத்தனை மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு அந்தந்த நாடுகளின் ஒளி/ஒலி பரப்புகளை இடைமறித்தபடி மணிக்கொருமுறை அவர்களின் செய்திகள் வெளிவந்தன. முதலில் வந்தது செய்தி. பிறகு ஒன்றிரண்டு புகைப்படங்கள். பிறகு ஒளிச்சித்திரங்கள். பிறகு நீண்டத் திரைப்படங்கள்.
அவர்களின் தகவல் தந்திரம் எதிர்பார்த்தபடி வேலை செய்யத் தொடங்கியிருந்தது. ‘உலகமே இடியப் போகிறது’ ‘ஏசு வருகிறார்’ ‘பிரளய காலம்டி’ என்றுப் பலவாறாகச் சிதறிய எண்ணங்கள் ஒருமைப்பட்டன. பிரார்த்தனைகள் நடத்தினார்கள். ‘வருபவர்கள் நல்லெண்ணத்தோடு வருகிறார்கள்’ ‘ஏசுவாவது மயிராவது’ ‘பிரளயத்தை உடைப்பில் போடுங்கள்’ ‘பகுத்தறிவுக்கு விமோசனம்’ ‘இன்னொரு அறிவுருவைச் சந்திக்கத் தயாராகுங்கள்’ ‘பூஜையை நிறுத்துங்கள்’ என்றும் சிலர் பேசத் தொடங்கினார்கள். பிரார்த்தனை செய்பவர்கள் எதிரே மூத்திரம் போனார்கள்.
இடையே, விஞ்ஞானிகளும் தொழிலதிபர்களும் மாணவர்களும் மதவாதிகளும் அறிவுவாதிகளும் அடங்கிய வரவேற்புக் குழு ஒன்று ஒவ்வொரு நாட்டிலும் அமைக்கப்பட்டது. வரவேற்புக் குழுவுடன் சேர்ந்து உலக மக்களும் அவர்களின் வருகையை எதிர்பார்க்கத் தொடங்கினார்கள்.
வந்தார்கள். வரிசையாக வந்து இறங்கினார்கள். உலகத் தலைநகரங்களில் அனேகமாக ஒரே நேரத்தில் வரிசையாக வந்து இறங்கினார்கள். வந்து இறங்கிய முதல் மணியிலேயே உலக மக்களுடன் அறிமுகம் செய்து கொண்டார்கள். அவர்களுடைய வினோத முக வடிவமும், சற்றே அஞ்சவைக்கும் உடல் வடிவமும் கண்ட உலக மக்களின் அனுபவம், அதிர்ச்சியில் தொடங்கி அதிசயத்தில் முடிந்தது. ‘பரவாயில்லை, அவர்கள் கோள் நிலமைப்படி அவர்களுக்கு அந்த வடிவம் கிடைத்திருக்கிறது. இதில் என்ன தவறு?” என்று பேசத் தொடங்கினார்கள்.
சாய், மீனா இருவரும் விஞ்ஞானிகள். வரவேற்புக் குழுவில் முக்கிய பதவியில் இருந்தார்கள். மீனா அவர்களின் நல்லெண்ணத்தில் நம்பிக்கை வைத்திருந்தாலும், சாய் நம்பவில்லை. “இவர்களைப் பார்த்தால் எனக்கென்னவோ நல்லவர்களாகத் தோன்றவில்லை. நம்மை அழிக்கத் தான் வந்திருக்கிறார்கள்” என்றான்.
“சாய், உனக்கு எதிலும் எப்பவும் சந்தேகம் தான். சந்தேகத்தைத் தவிர்த்துக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க முயற்சி செய். உனக்கு இவர்கள் செயல்களின் பின்னணியில் தீமை எதுவும் இருப்பதாகத் தெரியாது” என்றாள் மீனா.
வாக்குவாதம் தீவிரமாகி ஒருவரை ஒருவர் அடித்துக் காயப்படுத்திக் கொண்டார்கள். குழுத் தலைவர் இடையில் புகுந்து சமாதானம் செய்து வைத்தார்.
வந்த முதல் வாரத்திலேயே கிடிழினர் உலகத்தின் நடைமுறைகளைப் பாதிக்கத் தொடங்கினார்கள். “உலகத்து அரசியல்வாதிகளுக்கெல்லாம் இருபத்து நாலு மணி நேரம் அவகாசம் தருகிறோம். அனைத்துப் போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள். இருபத்து நாலு மணி நேரத்தில் போர்கள் நிற்காவிட்டால் போர் புரியும் நாடுகளின் தலைவர்கள் கொல்லப் படுவார்கள்” என்ற செய்தியை வழக்கம் போல் உலகத்தின் அனைத்து ஒலி/ஒளிபரப்புகளில் இடைச் செருகல்களாகப் புகுத்தினர். அவர்களை எள்ளி நகைத்த அமெரிக்கா, இங்கிலாந்து, இரான், ரசியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சவுதி அரேபியா தலைவர்களைக் கடத்திக் கொண்டு போய், பொதுமக்கள் டிவியிலும் நேரிலும் பார்க்கும்படி, ஆயிரம் அடி உயரத்திலிருந்து ஒன்றாகக் கீழே தள்ளத் தொடங்கினார்கள். அதுவரை ஒருவருக்கொருவர் சொல்லால் விளாசிக் கொண்டிருந்த எஞ்சியிருந்த உலகத் தலைவர்கள் அஞ்சி நடுங்கி ஒன்றானார்கள். முதல் வார முடிவில் உலகப் போர்கள் நின்றன.
“நாங்கள் வந்திருப்பது நல்லெண்ணத்துடன் தான்” என்றனர் கிடிழினர். உலகமக்கள் ‘ஜே’ என்றனர்.
மீனா ‘கிடிழினர் வாழ்க’ என்று கூச்சல் போட்டாள். சாய் அவர்களை நம்பவில்லை. கிடிழினரின் தினசரி வாழ்க்கையைப் பார்வையிட அனுமதி பெற்று அவர்கள் கூட்டத்தில் சேர்ந்தான்.
இரண்டாவது வாரத்தில் இன்னும் பல்லாயிரம் கிடிழினர் வந்தார்கள். அவர்களுக்கு உலக இயல்புகளை அறிமுகம் செய்து வைக்கும் பணியை சாய் ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் அவர்கள் விண்கலத்திலேயே தங்கினான். அவர்களைச் சந்தேகித்தாலும் ஒரு கிடிழின் அவனுடைய சட்டை பேன்ட்டைக் கழற்றிய போது பொறுமையாக இருந்தான். இரண்டு மணி நேரம் பொறுத்து, ‘யம்மாடி’ என்று தலை கிறுகிறுக்க முனகினான். பத்தாயிரம் உலகப்பெண்கள் ஒன்றாகச் சேர்ந்தாலும் ஒரு கிடிழினுக்கு இணையாகாது என்று நினைத்தான். கிடிழின் கையிலிருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்தான். அவர்கள் மொழியில் இருந்த புத்தகத்தைப் புரட்டிய போது அதில் சில மனிதப் புகைப்படங்கள் இருப்பதைப் பார்த்தான். ஒரு படத்தைச் சுட்டிக் காட்டிய கிடிழின், சாயின் அந்தரங்கத்தை மெள்ளப் பற்றி படத்தில் ஒற்றி ஒப்பிட்டு “ஜிச்” என்ற போது சாய்க்கு சற்றே சங்கடமாக இருந்தது.
சாய் புத்தகத் தலைப்பைக் காட்டி “இது என்ன?” என்றான்.
“கிடிழ் மொழியில் ‘மானிட சேவை’ என்று பொருள். பூமிக்கு வருவதற்கு முன்னால் ஒவ்வொரு கிடிழ் வாசிக்கும் இந்தப் புத்தகம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை வைத்துத் தான் மானிடர்களைப் பற்றி அறிந்து கொள்கிறோம்”
“ஒன்றிரண்டு படங்களைத் தவிர எல்லாம் எழுத்தாக இருக்கிறதே?”
“ஆமாம். எல்லாம் மானிட சேவை பற்றிய விவரங்கள்”
“உங்கள் மொழியை எனக்குக் கற்றுத் தா” என்றான்.
“நிறைய நாளாகும். வேண்டுமானால் தினமும் இங்கே வா, சொல்லித் தருகிறேன்”
இரண்டாவது வார முடிவில் உலகத்தில் எல்லோருக்கும் இருக்க இடம் கிடைக்கும்படி செய்தார்கள் கிடிழினர். உலகத்து அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் அளவுக்கு அதிகமான செல்வத்தைச் சேர்த்து, இல்லாதவர்களுக்கு வழங்கினார்கள். எதிர்த்த அரசியல்வாதிகளையும் செல்வந்தர்களையும் கட்டிப் போட்டு பொது மக்களிடம் “இவர்களை என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்” என்றனர். உயிர் பிழைக்கும் எண்ணத்தில் அரசியல்வாதிகளும் செல்வந்தர்களும் மேலே கீழே மூடிக் கொண்டு சேர்த்த உபரி செல்வத்தையெல்லாம் தானம் வழங்கினார்கள்.
“இரண்டாயிரம் வருடங்களாக நம்மால் முடியாததை இரண்டே வாரத்தில் செய்து விட்டார்களே!” என்று வியந்தாள் மீனா. “நீ கூட சந்தோசமாக இருக்கிறாய் போலிருக்கிறதே? முகத்தில் எள் கொள் வெடிக்கக் காணோமே?” என்றாள் சாயைப் பார்த்து.
கிடிழின் பற்றிச் சொன்னான். மீனா விசிலடித்தாள். “பலே, பலே. காத்தடிச்சாப்புல அங்கே பருத்திடுச்சே? இதான் விசயமா? ஒரு வேளை என்னைப் பாத்த விளைவோன்னு நினைச்சேன்”
அவள் சொன்னதைக் கவனியாதவன் போல் கிடிழின் வைத்திருந்த ‘மானிட சேவை’ புத்தகம் பற்றிச் சொன்னான். கிடிழ் மொழி கற்பதாகச் சொன்னான்.
அடுத்த எட்டு வாரங்களில் உலகம் எங்கும் தண்ணீர், மருத்துவம், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புச் சிக்கல்கள் ஒழிந்தன. கிடிழின் தொழில்நுட்பம் இவற்றைச் சாத்தியமாக்கியது. உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கலந்து வாழத்தொடங்கினர். வழக்கம் போல் கிடிழினர் செய்திகள் உலக ஒலி/ஒளிபரப்புகளில் இடைச் செருகல்களாகத் தோன்றின: “உலக மக்கள் இனவிருத்தி செய்ய ஊக்கப் படுத்தப்படுகிறார்கள். இன விருத்தி மானிடர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் சலுகை. முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். பிறக்கும் ஒவ்வொரு மானிடக் குழந்தைக்கும், அதன் பெற்றோருக்கும் இலவசச் சலுகைகள் வழங்கப் படும். வீடும், வசதிகளும், உணவும், உடையும், நாய் ஆடு மாடுகளும் அத்தனையும் இலவசமாக வழங்கப்படும்”.
சைனாவிலும் இந்தியாவிலும் மக்கள் உடனடியாகச் செயலில் இறங்கினார்கள்.
“கிடிழினர் நம் தலைமுறைக்குக் கிடைத்த மகத்தான பரிசு. எனக்கு எத்தனை சந்தோசமாக இருக்கிறது தெரியுமா?” என்றாள் மீனா. சாயைப் பார்த்து, “ம்ம்ம்… கிடிழ் கல்வி எப்படிப் போகுது? மானிட சேவை எப்படி நடக்குதுறாங்க?” என்றாள் கிண்டலாக.
சாய் அவளைக் கலவரத்துடன் பார்த்தபடி சொன்னான். “கிடிழ் மொழியில் ‘சேவை’ என்றால் நம்ம ஊர் சேவை, ஸ்பெகடி, நூடுல்ஸ் என்று பொருள். நம்மை எல்லாம் கொழுக்க வைத்து, சாப்பாட்டுக்குத் தயார்ப் படுத்துகிறார்கள்”.
சிறுகதை: Damon Knight எழுதிய ‘To Serve Man’ படித்தவுடன் தமிழில் மொழிபெயர்க்கத் தோன்றிய விபரீத எண்ணத்தின் விளைவு | சித்திரம்: பெண்
– 2009/08/11