”குருவே, எனக்கு உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் பிரச்சனைகள் வந்துக் கொண்டே இருக்கின்றன” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“அப்படியா, என்ன பிரச்சனைகள் வருகின்றன?”
“அவர்கள் யாருமே உண்மையாக இருக்கவில்லை. எல்லோரிடமும் எதாவது கெட்ட குணம் இருக்கு. என்னால யார் கிட்டயுமே சரியா பழக முடியல”
சொன்னவனின் சிக்கல் குருவுக்கு புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.
ஆண்ட்ரூ கார்னகி என்று அமெரிக்காவில் பெரிய கோடீஸ்வரர். அமெரிக்காவின் முதல் பணக்காரர்களில் அவரும் ஒருவர். ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறி தொழில் துவங்கி, பெரும் பணக்காரர் ஆனவர்.
ஒருமுறை அவரிடம் இன்னொரு தொழிலதிபர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.
“எப்படி உங்களால் இவ்வளவு முன்னேற முடிந்தது. நானும் உங்களை மாதிரிதான் தொழில் துவங்கினேன்.ஆனால் என்னால் வளர முடியவில்லையே” என்ற கேள்வியைக் கேட்டார்.
“என்னுடைய வெற்றிக்கு காரணம் என்னுடைய ஊழியர்கள். அவர்கள் இல்லாமல் என்னால் இந்த அளவு உயர்ந்திருக்க முடியாது” என்று கார்னகி பதிலளித்தார்.
“உங்களுக்கு மட்டும் எப்படி நல்ல ஊழியர்கள் கிடைத்தார்கள். எங்கள் நிறுவனத்துக்கு அப்படிப்பட்ட ஆட்கள் கிடைக்கவில்லையே. நானும் எத்தனையோ பேரை முயற்சி செய்துப் பார்த்துவிட்டேன்”
அதற்கு கார்னகி அந்த தொழிலதிபருக்கு ஒரு உதாரணத்தை சொன்னார்.
“தங்கச் சுரங்கத்தில் வேலைப் பார்கிறவர்களை கவனித்திருக்கிறீர்களா? அவர்களுடய ஒரு இலக்கு தங்கத்தை சேகரிப்பதாகதான் இருக்கும். அப்படி தங்கத்தை எடுக்கும் போது வரும் மாசுக்களை பொருட்படுத்துவது கிடையாது. மாசுக்களை நீக்கினால் தங்கம் கிடைக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் நான் மனிதர்களிடத்தில் இருக்கும் நல்ல திறமைகளை மட்டுமே பார்க்கிறேன். அவற்றை மட்டும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறேன். மாசுக்களை பொருட்படுத்துவதில்லை.”
கார்னகியின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை குரு சொன்னதும் வந்தவனுக்கு தன்னிடம் உள்ள குறை புரிந்தது.
அப்போது குரு, அவனுக்கு சொன்ன WINமொழிI: மாசுக்களைப் பார்த்தால் மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள்.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)