இரங்கிய உள்ளம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 18, 2022
பார்வையிட்டோர்: 3,422 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எந்த இன்பகரமான நாளை நஸீருத்தீன் இத்தனை மாதங்களாக எதிர்பார்த்து வந்தானோ, அந்தப் புனித மான பண்டிகை நாளும் பலபலவென்று புலர்ந்தது.

“பிஸ்மில்லா ” என்று ஜபித்துக்கொண்டு வைகறை யில் துயிலெழுந்த அந்த இளைஞன் முதல் காரியமாகச் சுவரை ஒட்டி நின்ற பெட்டியை மெல்லத் திறந்து அதற் குள் நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருந்த கிச்சிலி வர்ண ஷேர்வானியைத் தன் கண்குளிரக் கண்ட பிறகு தான் முகத்தைக் கழுவுவதற்குப் புழக்கடைப் பக்கம் சென்றான்.

முழங்கால் வரையில் தவழ்ந்தாடும் ஷேர்வானியைப் பெருநாளன்று தான் அணிந்து கொள்ள வேண்டும், பள்ளி வாசலுக்குச் சென்று நமாஸில்’ கலந்துகொள்ள வேண் டும், அதன்பின் தன் நண்பர்களைச் சந்தித்து அளவளாவ வேண்டும், அவர்கள் அந்த ஷேர்வானியைக் கண்டு பிரமிப் படைய வேண்டும் – இத்தகைய ஆசைகள் அந்த யுவனின் இள நெஞ்சிலே பல காலமாக ஆர்ப்பரித்துக்கொண் டிருந் தன . அவை யாவும் வரப்போகின்ற பெருநாளன்று ‘பிறைக்கொடியை நாட்டப் போகின்றன என்பதை நினைத்ததும் நஸீருத்தீனின் கழுத்து, பூரிப்பினால் நிமிர்ந்தது.

நஸீருத்தீன் வாழ்க்கைக் கோட்டையைச் சுற்றி வறுமை என்ற பச்சை மண் தான் பூச்சாக நின்றது என்று நாக்கூசாது கூறிவிடுவதில் தப்பு ஒன்றுமில்லை. சமூகமே ஒப்புக்கொள்ளும் காரணம் அதற்கு அடிப்படையாக நின்றதென்றால் எதிர்வாதத்துக்குப் பிரச்னை இல்லாது போயிற்று!

அவன் ஒரு என்.ஜி.ஓ.

ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் சொற்ப ஊதியத்தில் தாயார். இரு சகோதரிகள், ஊனம் அடைந்த தம்பி ஆகிய இவர்களைச் சமாளித்து வந்த நஸீருத்தீன் தன் குடும்பக் கப்பல் கவிழ்ந்துவிடாதபடி ஊதியம் என்ற பாய்மரத்தை யும், செலவு என்ற நங்கூரத்தையும் ஜாக்கிரதையாகக் கையாண்டு வந்தான்.

எப்படியாவது பெருநாளன்று ஒரு புதிய ஷேர்வா னியை அணிந்து கொள்ளத்தான் வேண்டும் என்ற தீர்மா னம் அவன் நெஞ்சில் ஸ்திரமாக நின்றுவிட்டது. அதற் காகக் காகா சாஹிப்’ கடை நாஸ்தா , ஆபீஸ் கான்டீன் சாயா, நாயர் கடையில் வாங்கும் சிகரெட்டுகள் ஆகிய இவைகளுக்குச் சலாம் போட்டுவிட்டு , மாதந்தோறும் ஐந்தைந்து ரூபாயாகச் சேர்க்கலானான். எட்டு மாதங்கள் மாயமாக மறைந்தவுடன் நாற்பது ரூபாய்கள் தன் ஜேபியில் அடைக்கலம் புகுந்ததைக் கண்டு அவனுக்கு ஒரே திகைப்பா யிருந்தது.

நேரே சைனா பஜார் சென்றான். ஒவ்வொரு துணிக் கடையாக நுழைவதும், விழிகளை நான்கு பக்கங்களிலும் மேய விடுவதும் படிகளை விட்டு இறங்குவதும் அவன் ஜோலியாக இருந்தன ! துணி நன்றாக இருந்தால், நிறம் பிடிக்கவில்லை.

இரண்டும் மனத்துக்குப் பொருத்தமாக இருந்த போது ஜேபியிலுள்ள பணத்தில் மூன்றில் ஒரு பங்கை ஏப்பமிடக் காத்துக்கொண் டிருந்த தையற்கூலி அவனை உஷார்ப் படுத்தியது! எப்படியோ ஒரு விதமாக நான்கு கஜம் துணி வாங்கி, அதை ஷேர்வானியாகத் தைப்பதற் குக் கொடுத்துவிட்டுச் சோர்வடைந்த உடலுடன் இல்லத் துக்குத் திரும்பினான். இந்தச் சுப வைபவம் நிகழ்ந்தது பெருநாளுக்கு முதல் வாரத்தில் தான். மூன்றே நாட்களில் தைத்துக் கொடுப்பதாக வாக்கும் உத்தரவாதமும் கொடுத்த தையற்காரத் திப்பு சுல்தான் பெருநாளுக்கு முதல் நாள் கூட அதைக் கொடுக்க மாட்டான் போல் தெரிந்ததை உணர்ந்ததும் நஸீருத்தீனின் நெஞ்சு படாத பாடு பட்டது. ராயப்பேட்டைக்கும் சைனாபஜாருக்கும் ஆறேழு தடவைகள் அலைந்த பின்புதான் அந்த ஷேர்வானி அவன் கைக்கு ஒருவிதமாக வந்து சேர்ந்தது!

இத்தகைய சோதனைகளுக்கு உட்பட்ட அந்தக் கிச்சிலி வர்ண ஷேர்வானியைப் பார்த்துப் பார்த்து மனத்துள் மகிழ்ச்சியோடு முறுவலித்துக்கொண்டே குழாயடிக்கு நஸீருத்தீன் சென்றான்.

அன்று பெருநாள் பண்டிகை! சன்மார்க்க உயர்வுக்காகவும் ஆத்மார்த்த உன்னதத் துக்காகவும் ரம்ஜான் மாதத்தில் முப்பது நாட்கள் அல் லும் பகலும் நோன்பு நோற்ற பின் தம் கடமையை நிறைவேற்றியதற்காக அல்லாஹுத்தாலாவிடம் நன்றி யைச் செலுத்தும் அந்த ஒப்பற்ற நாள் விடிந்தது! முன் னாள் இரவில் விண்ணில் பிறை தென்பட்டவுடன், மறு நாள் – பண்டிகை நாளன்று – திருவல்லிக்கேணியிலுள்ள பள்ளி வாசலில் காலை பதினொரு மணிக்கு நமாஸ்’ ஆரம்ப மாகும் என்று நகரத்துக் காஜி சாஹேப் முன்கூட்டியே அறிவித்து விட்டார்.

ஸ்நானத்தை முடித்துக்கொண்டு சகோதரிகள். தம்பி ஆகிய இவர்களுடன் ஒரே பாயில் அமர்ந்து கண் கண்ட தெய்வமான அன்னை சமைத்துவைத்த அறுசுவை உண்டியை ஆனந்தமாகச் சாப்பிட்டான் நஸீருத்தீன். பெட்டியைத் திறந்து அந்தப் புது ஷேர்வானியை எடுத்து அவன் அணிந்துகொண்ட போது களிப்பினால் அவன் முகம் தாமரையாக மலர்ந்தது. துருக்கிக் குல்லாவைத் தலையில் தரித்து, நிலைக்கண்ணாடி முன் நின்றதும் அசல் ஆர்க்காட்டு நவாபு போல் தான் தோற்றமளித்ததைக் கண்டதும் அவனிடம் உண்டான மகிழ்ச்சி கிளர்ச்சி செய்தது. புட்டி யைத் திறந்து அத்தரைப் பூசிக்கொண்டான். பெற்றவ ளின் சீரடிகளைக் குனிந்து வணங்கிவிட்டு, புதிதாக வாங்கிய காபூலி செருப்புகளை மாட்டிக்கொண்டான். நிலைப்படியைத் தாண்டிவிட்டு மசூதியை நோக்கிக் கிளம்பி னான். நேர் வழியாகச் செல்லாது பல்வேறு சந்துகளில் புகுந்து அவன் போனதற்கு உண்டான விபரீத காரணம் என்னவென்றால், தான் அணிந்திருந்த ஷேர்வானியை யாவரும் பார்க்க வேண்டும் என்று அவன் உள்ளத்தில் தலை தூக்கி நின்ற ஆசைதான்!

அவன் நடை, நவாப் நடையாக மாறி, ஜோராக இருந் தது. பளபளப்பான குல்லாக்களுடன், பஞ்சவர்ண ஆடைகளைத் தரித்த சாயபுமார்கள், சிறார்கள் பின்தொடர மசூதியை நோக்கிச் சென்றுகொண் டிருந்த நேத்திரானந் தமான காட்சி நஸீருத்தீனைத் திக்கு முக்காடச் செய்தது. இந்தக் கூட்டத்துக் கிடையில் வெள்ளைத் தலைப்பாகையும், பொன்னிற ஷேர்வானியும் அணிந்த ஒரு பெரியவரை ஏற்றிச்சென்ற ரிக்ஷா தன் முன்னால் ஊர்ந்து கொண் டிருந் ததை நஸீருத்தீன் கண்டான். கடிகாரத்தைப் பார்த்தான். பதினொரு மணி அடிப்பதற்குப் பத்து நிமிஷங்கள் தாம் எஞ்சி நிற்கின்றன என்பதை அறிந்ததும் அவன் நெஞ்சு பகீரென்றது.

மசூதியில் ‘நமாஸ்’ எங்கே தொடங்கிவிடுமோ என்ற பீதி அவனை வௌவியது. நரம்புகளில் தேங்கிக் கிடந்த சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி நடையைத் துரிதமாக்க அவன் முயன்றபோது ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதைக் கண்டு நஸீருத்தீன் ஸ்தம்பித்து விட்டான். முன்னால் சென்று கொண் டிருந்த ரிக்ஷாவில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர் தடாலென்று நடுரோட்டில் விழுந்துவிட்டார். உடனே நஸீருத்தீன் ஓடி, அந்தக் கிழவரை இரு கைகளா லும் அப்படியே தூக்கிரிக்ஷாவில் அமரச் செய்தபோது அவனுக்கு நெடுமுச்சு வாங்கியது. அந்த முதியவர் பிரக்ஞை இழந்த நிலையில் இருப்பதை உணர்ந்ததும் அவன் சித்தம் ஒன்றும் தோன்றாமல் ஊசலாடிற்று.

“இந்தாப்பா ரிக்ஷா! இவரை இப்படியே வீட்டுக்குத் திருப்பிக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடு” என்றான் நஸீருத்தீன் நாக்குக் குழற.

“வீடு தெரியாமல் இல்லை! ஆனால் இவரைத் தனியாக வைச்சுக்கிட்டு எப்படி வண்டியை இழுத்துக்கிட்டுப் போறது?” என்றான் ரிக்ஷாக்காரன் விரல்களை நொடித் துக்கொண்டு.

“இந்தாப்பா ! இன்னும் ஐந்து நிமிஷத்தில் மசூதியில் தொழுகை ஆரம்பிச்சிடுவாங்க. நான் போய்த்தான் ஆக ணும். எப்படியாவது இவரை அழைத்துக்கொண்டு போய்ச் சேர்த்துவிடு” என்றான் நளீருத்தீன் மிகவும் கெஞ்சிய குரலில்.

“சரிதான், ஐயா! சாயபுக்குப் பேச்சு மூச்சே இல்லியே! ‘சப்போர்ட்’ இல்லாட்டிப் போனால் அவரு மறுபடியும் சாய்ஞ்சு விளுந்துட்டா?” என்றான் ரிக்ஷாக்காரன் தடுமாறிய வண்ணம்.

அன்றோ பெருநாள்! வருஷத்துக்கு ஒரே ஒரு முறை வரும் பண்டிகைப் பெருநாள்!

அந்நாளில் நடைபெறும் புனிதமான தொழுகையில் கலந்து கொள்வதைப் போல் சிறந்தது வேறொன்றும் இல்லை. இந்த எண்ணங்கள் ஒருபுறம் வாட்டி வதைக்க , கடமை உணர்ச்சி மறுபக்கம் தாக்க, இந்த இக்கட்டான நிலையில் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்த நஸீருத் தீன் ஒன்றும் தோன்றாமல் கைகளைப் பிசைந்துகொண்டு நின்றான். பெரியவரின் மீது அவன் நாட்டம் திரும்பியது. அவர் வதனத்தில் நிலவிய சாந்தமும் அமைதியும் தெய் விகக் களையும் அந்த இளைஞனின் இதயத்தைத் தொட்டு விட்டன.

“சரி . நானும் ஏறிக்கொள்கிறேன். அவர் வீட்டை நோக்கி விடு” என்று படபடத்த மனத்திலும் நிதானத்தை இழக்காது பகர்ந்துகொண்டே ரிக்ஷாவில் ஏறிக்கொண்டான். கிழவரைத் தன் மார்போடு தாங்கிக்கொண்டு உட்கார்ந்தான். நுதலில் கசிந்த வியர்வை இமைகளின் மீது சொட்டுச் சொட்டாக வீழ்ந்தும், அதைத் துடைத்து நீக்க அந்த இளம் தியாகிக்கு அவகாசம் இல்லாமற் போய் விட்டது!

ரிக்ஷா அப்பெரியவரின் மனையை அடைந்தது. முதியவரை ஐாக்கிரதையாகக் கீழே இறக்கி, வீட்டா ரிடம் ஒப்படைத்துவிட்டு, பள்ளி வாசலை நோக்கி ஓட எத்தனித்தபோது ஓர் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துவிட் டதை அறிந்ததும் நஸீருத்தீனின் நெஞ்சு பகீர் என்றது. தான் அணிந்திருந்த ஷேர்வானியின் பின்புறம் ஒரே சேறாக இருந்ததைக் கண்டதும் அவன் உள்ளம் இரு கூறு களாகப் பிளந்துவிட்டது . ரிக்ஷாவிலிருந்து அப்பெரியவர் சாய்ந்த போது, சாலையில் இருந்த சேற்றில் தவறி விழுந்து விட்டதும், அவரைத் தூக்கி அவ்வாகனத்தில் ஏற்றிய போது தன் உடை அசுத்தமானதும் அவனுக்கு இப் போது தான் புரிந்தன. துயரம் அவனை வாட்டவே, கண்கள் கலங்கின. ஷேர்வானியின் மீது அவன் மங்கிய பார்வை விழுந்ததும், இத்தனை நாட்களாகத் தான் கட்டிய ஆசைக்கோட்டைகள் துகளாக இடிந்து வீழ்ந்ததை நினைத்து மனம் சஞ்சலித்தது.

நயனங்களிலே நீர் கொப்பளிக்க, இதயத்திலே எஞ்சி நின்ற ஈரமும் ஆவியாகிவிடவே, கவிழ்ந்த சிரத்துடன் பரிதாபக் கோலத்தில் தன் வீட்டை நோக்கித் தள்ளாடி நடக்கலானான் அந்த ஆண் மகன்.

எந்த ஷேர்வானிக்காக அவன் இத்தனை மாதங்கள் அல்லல்பட்டானோ. அதை அவன் கழற்றும் போது கண் கள் குளங்களாயின. அதரங்கள் உலர்ந்தன.

அணிந்த ஆடை போனதோடு மல்லாமல் பெருநாள் தொழுகையும் தவறிவிட்டதை நினைத்ததும் அவன் மேனி, காய்ந்த ஆலிலை போல் துவண்டது. சொல்லொணாத் துயரம் வாட்டிற்று.

வீட்டில் தங்குவதற்கு அவனுக்கு இருப்புக்கொள்ள வில்லை. நல்ல நாளன்று மசூதி வரையிலாவது போய் வருவதற்கு அவன் மனம் பிடிவாதம் செய்தது. எந்த ஓட்டுகள் போட்ட கோட்டை அவன் சர்வசாதாரணமாக உபயோகித்து வந்தானோ, அதை எடுத்து மாட்டிக் கொண்டபோது இதயத்தைக் கீறிக்கொண்டு மேலெழுந்த பெரு மூச்சு அவன் உடலை உலுக்கியது.

பள்ளிவாசலின் வாயிலை அடைந்தபோது, அங்கே நிலவிய காட்சி அவனைத் தூக்கி வாரிப் போட்டது. குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏதோ தன் வருகைக்காகத் காத்துக்கொண் டிருப்பது போல் தோன்றி யதும், நஸீருத்தீன் மலைத்துப் போனான். விழிகள் சுழல், மனம் படபடக்க, அடிமேல் அடி வைத்துப் படிக்கட்டுக் களில் ஏறினான். தன்னை எதிர் நோக்கி நாலைந்து பேர்கள் விரைவாக வருவதைக் கண்டதும் அவனுக்குத் ‘திக்’ கென்றது.

“என்ன அவர் வந்து விட்டாரா?” என்று அவர் களில் ஒருவர் விளித்ததும், நஸீருத்தீனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“எதைக் கேட்கிறீங்க? ‘நமாஸ்’ முடிந்துவிட்டதா?” என்றான் நஸீருத்தீன் ஒரே குழப்பத்துடன்.

“சரியாய்ப் போச்சு. தொழுகை இன்னும் ஆரம் பிக்கவே இல்லையே!” என்று மற்றவர் சொன்னதும் அவன் தலை கிறுகிறுத்தது.

“நிசந்தானா? நேரம் அப்பொழுதே ஆயிடுச்சே!” நளீருத்தீனின் உள்ளம் அலைக்கழிந்தது. சொற்கள் தொண்டையிலிருந்து திக்குமுக்காடிக் கிளம்பின.

“பதினொன்றுக்கு மேலே பத்து நிமிஷங்கூட அதிக மாகப் போயிடுச்சு. என்ன செய்வது? நம்ம டவுன் காஜீ சாஹேப் இன்னும் வந்து சேர்ந்த பாடில்லை! ஒவ்வொரு வருஷமும் அவர்தானே இந்தப் பெருநாள் தொழுகையை முன்னின்று நடத்துவது வழக்கம்? அவருடைய வருகையை எதிர்பார்த்துத்தான் கூட்டம் அப்படியே நிற்கிறது. ஏதாவது சேதியை நீங்கள் கொண்டுவந்திருப்பீர்கள் என்று நினைத்து உங்களைக் கேட்டோம் =!” என்றார் நகரப் பிரமுகர் ஒருவர்.

“எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஏதோ வந்தேன்” என்றான் நஸீருத்தீன் நெற்றியை இறுகப் பிடித்துக்கொண்டு.

“சரி; இனித் தாமதிப்பதில் நியாயமில்லை. பத்து நிமிஷம் வேறு விரயமாகி விட்டது. நம்ம சின்ன காஜீ சாஹேபே இந்த ‘நமாஸை’ முன்னின்று நடத்தட்டும்” என்று அந்தப் பிரமுகர், குழுமியிருந்தோரை நோக்கி உரத்த குரலில் நவின்ற மறுகணத்தில் கூட்டத்தினர் வரிசை வரிசையாக அணிவகுத்து, தோளோடு தோளாக நின்றனர். ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று எழுந்த தெய்விக ஒலியை மசூதி மண்டபம் எதி ரொலிக்கவே, பெருநாள் தொழுகையும் ஆரம்பமாயிற்று.

‘நமாஸ்’ ஆன பிறகு, சின்னக் காஜீ சாஹேப் தொடங்கிய உபந்நியாசம் ஒருவாறு முடிந்த பின் கூட்டம் கலையலாயிற்று.

யாவரும் அவ்விடத்தை விட்டு நீங்கியபின் நஸீருத் தீன் மண்டபத்தை விட்டு வெளியே வந்தான். அவனுக்கு யாவும் ஒரு பகற்கனவுபோல் தோன்றிற்று. மேற்குத் திசையை நோக்கிக் கைகளை உயர்த்தி, ‘யா அல்லாஹு உன் கருணைக்கும் தயாளத்துக்கும் ஈடுண்டோ? ஓர் அற்ப ஜீவனுக்காக ஆயிரக்கணக்கான உன் அடியார்களை நிறுத்தி வைத்து விட்டாய். இந்த எளியனும் கலந்து கொள்ளும் பொருட்டு இந்த ஒப்பற்ற பெருநாள் தொழு கையைக்கூடத் தாமதப்படுத்தி விட்டாய்! உன் செயலே செயல்! யா ரஹ்மான்!’ என்று தன்னையும் மறந்து அந்த இளைஞன் வாய்விட்டு உணர்ச்சி தாளாது கதறியதும் அவன் நயனங்கள் ஆனந்த பாஷ்பத்தைப் பொல பொல வென்று சொரிந்தன. ஈடு இணையற்ற அந்த அருளாளன் புரிந்துவிட்ட மற்றொரு வேடிக்கை என்னவென்றால், நடு ரோட்டில் ரத்த அழுத்த வியாதியால் மயக்கமுற்று விழுந்து கிடந்த எந்தக் கிழவருக்கு நஸீருத்தீன் கை கொடுத்துத் தன் பெருநாள் தொழுகையையும் புதிய ஷேர்வானியையும் தியாகம் செய்துவிட்டானோ, அந்தப் பெரியார் தான் அன்று மசூதியில் பெருநாள் தொழுகையை முன்னின்று நடத்தவேண்டிய டவுன் பெரிய காஜீ சாஹேப் என்பது அந்த இளைஞனுக்கு இன்று வரையில் தெரியாமல் இருப்பதுதான்!

– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

– ‘கல்கி’யில் ‘பிறைக் கொடி’ நாட்டிற்று. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *