மஹாவிஜயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 11,379 
 
 

சூரியனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும், அடையாளங்கள் தோன்றும்; பூமியின் மேலுல்ல ஜனங்களுக்கு தத்தளிப்பும், இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும், அலைகளும் முழக்கமாய் இருக்கும். வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம். அப்போது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

– லூக்கா 21:25:27

சிறிய நகரம்தான் என்றாலும் தெய்வீக ஒளி ஒன்று சூழ்ந்திருப்பதாகக் கருதி இந்நகரத்தை காண வெகு தொலைவிலிருந்தெல்லாம் ஆட்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். எந்த மலைத் தொடரோடும் தொடர்பற்று தனித்திருந்த ஒரு உயரமான மலைக்குன்றின் கிழக்குச் சரிவில் அமைந்திருந்ததால், மாலையில் இந்நகரத்தின்மேல் பெரும் நிழல் ஒன்று கவிந்தது. மழைக்காலங்களில் தேக்கமற்று உருண்டு ஓடும் நீர், நகரத்தைப் பரிசுத்தமாக்கிவிட்டு ஒரு அகன்ற ஏரியில் சென்று கலந்தது. அன்னச்சத்திரங்களும், மடங்களும் கொண்ட வீதிகளில் காவி உடைதரித்த சாதுக்களையும், ரிஷிகளின் ஆஸ்ரமங்களுக்கு வருகைதரும் வெளி நாட்டுக்காரர்களையும் சகஜமாக இங்கு காணலாம்.

ஒரு பைத்தியக்காரனின் தீயகனவு என்று சொல்வதைவிட வேறு என்ன சொல்வது இதைப்பற்றி? கூச்சலும், குழப்பமும், களேபரமும் கொண்ட இக்கனவினுள் இந்நகரம் தன்னை மூழ்கடித்துக்கொண்டதை அவ்வளவு எளிதாக மறந்துவிடவும் முடியாது.

முதல்வரின் வருகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பின்னிரவில்தான் அது தொடங்கியிருக்கவேண்டும். அதிலும் கட்சித்தொண்டர்கள் நடு சாமத்தையும் தாண்டி வேலை செய்துவிட்டு, களைப்பில் உறங்கப்போய்விட்ட பின்புதான் நடந்திருக்கவேண்டும். பெரியார் சிலை சந்திப்பை சுற்றியிருந்த சுவர்களில் தலைவரின் உருவப்படங்கள் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களுக்கு மேல் அடாவடித்தனமாக அவை ஒட்டப்பட்டிருந்தன. வெள்ளைத்தாளில் சிவப்பு மையினால் பின்வருமாறு அச்சிடப்பட்டிருந்தது.

‘பூமியில் மீண்டும் கடவுளின் சாம்ராஜ்யம்! சூன் 8 இரவு 12.00 மணிக்கு இங்கே கடவுள் எழுந்தருளப்போகிறார்’

‘கடவுள்’ என்ற வார்த்தையை மட்டும் பெரிய எழுத்தில் அச்சிட்டிருந்தார்கள்.

தாலுக்கா அலுவலகத்தின் சுவர், அதை ஒட்டிய கைவிடப்பட்ட ஒரு பொதுக்கழிவறைச் சுவரிலும், எதிர்சாரியிலிருந்த தேவாலயத்தின் சுவரிலும், பெரியார் சிலையை சுற்றி கட்டப்பட்ட சுற்றுச்சுவரிலும் அது ஒட்டப்பட்டிருந்தது.

முதல்வர் வருகை தரும் அதே இரவில் கடவுளும் இந்நகருக்கு விஜயம் செய்யப்போகிறார்! பொழுது புலரும் போதே இந்த விஷயம் நகரத்தின் ரத்தநாளங்களில் கலந்து பரவியது. முதல் பார்வைக்கு சாதாரண அத்துமீறல்போல் தோன்றினாலும் அந்த வாசகம் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியது. சிவப்பு மையினால் அச்சிடப்பட்டிருந்ததால் தோற்றத்தில் அது ஏதோ கம்யூனிஸ்ட்டுகளின் சுவரொட்டிகள் போலவே தெரிந்தது; இருந்தாலும் அவர்கள் இதை ஒட்டியிருக்கமுடியாது. ‘கடவுள்’ என்ற இடத்தில் ‘காரல்மார்க்ஸ்’ என்று வேண்டுமானால் அவர்கள் எழுதியிருக்கக்கூடும்.

தேவன் பூமிக்கு வரப்போவதாகவும் பரலோக சாம்ராஜ்யத்தை நிறுவப்போவதாகவும், சொல்லிக்கொண்டிருப் பவர்கள் ஒருவேளை இதை ஒட்டியிருக்கலாம். அதிலும் அருகிலேயே பழமையான தேவாலயம் ஒன்று இருக்கிறது. அதன் சுவர்களில் கூட அந்த விஷமத்தனமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் ‘எழுந்தருளல்’ என்பது அவர்களுடைய பாஷையில்லை. எல்லாவற்றையும் ‘அவன் கேட்டுக்கொண்டிருக்கிறான்’, ‘பார்த்துக்கொண்டிருக்கிறான்’ என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள்கூட கடவுள் பூமிக்கு வந்து மனிதர்களுடன் கலப்பார் என்பதை நம்பியதில்லை.

முதல்வரை கடவுளாக பாவித்து தீவிர கட்சித்தொண்டன் எவனோகூட இந்த வரவேற்பை கொடுத்திருக்கலாம். ‘தெய்வமே’ என்பதற்கு பதிலாக ‘கடவுள்’ என்ற வாசகத்தை பயன்படுத்தி யிருக்கலாம். ஆனால், அவர்களுடைய கட்சியின் வண்ணத்திற்கும் இந்த சுவரொட்டிக்கும் சம்மந்தம் இல்லை. அடுத்ததாக முதல்வர் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடமும், நேரமும் வேறு.

இதை எதிர்கட்சிகளின் சதி என்றுகூட பேசிக்கொண்டார்கள். முதல்வர் இங்கே தொடங்கப்போகும் திட்டம் அவர் ஆட்சிக் காலத்தின் சாதனையாக எப்போதும் பேசப்படப்போகிறதே என்ற பொறாமையில் அவர்கள்தான் செய்திருக்கவேண்டும். வழக்கமான இந்த யூகமும் அவ்வளவாக எடுபடவில்லை.

பிரசித்திபெற்ற பல கோவில்களும், மடாலயங்களும், ஆஸரமங்களும் மலிந்துகிடக்கும் இந்த நகரத்தில், இதையெல்லாம் விட்டுவிட்டு கடவுள் ஏன் இந்த இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுதான் ஒருவருக்கும் விளங்கவில்லை. இங்கே பேருந்துகளுக்காக நிற்கிற ஜனங்கள் தனக்காகத்தான் காத்துநிற் கிறார்கள் என்று கடவுள் தவறாகத்தான் புரிந்து கொண்டிருக்கவேண்டும்.

கட்சித்தொண்டர்கள்தான் வருத்தமுற்று காணப்பட்டார்கள். தலைவரின் வருகை எங்கே ரத்தாகிவிடுமோ என்று பயந்தார்கள். லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்பட்டு செய்யப்பட்ட அலங்காரத்தையெல்லாம் அவர் பார்க்காமல் போனால் என்ன ஆவது?

ஆரம்பத்தில் சலசலப்பாகவும், புரளியாகவும் இருந்த இச்சம்பவம் திரண்டு வளர்ந்தது. மத ஸ்தாபனங்களும், ஆன்மீக இயக்கங்களும் தங்களுக்குள் கூடிப்பேசின. பத்திரிக்கைகள் எழுதின. தொலைக்காட்சிகள் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை விவாதித்தன. எண்ணிக்கையற்ற கேள்விகள் நகரத்தின் மேல் வட்டமிட்டன.

கடவுள் வரப்போவது உண்மையானால் எந்த கடவுள்? ஆண் தெய்வமா, பெண்தெய்வமா? கோவில் சிற்பங்களிலோ, ஓவியங்களிலோ, நாடகத்திலோ, சினிமாவிலோ பார்த்த மாதிரியா மனிதனின் உருவத்தைத்தான் ஒத்திருப்பாரா? வேறு ஏதாவது ஒரு மிருகத்தைப்போலவோ, பறவைகள் போலவோ இருப்பாரா அல்லது இதுவரை காணா புதுவகை உருவத்துடனா? ஆடை, ஆபரணங்கள் அணிந்திருப்பாரா? எந்த மொழியில் பேசுவார்? சிரிக்கத்தெரியமா அவருக்கு? நாடு சுபீட்சமடையுமா? சமூகத்தை எப்படி மாற்றி அமைக்கப்போகிறார்? காலத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதற்கு தக கட்சி தொடங்கி ஆட்சி அமைப்பாரா?

ஒருவேளை அவர் குடும்பத்துடன் வரக்கூடுமென்றால் அவருக்கு இந்த ஆலயங்கள் வசதிப்படுமா? கடவுளுக்கு உறக்கம் உண்டென்றால் ஆலயத்தில் எங்கே படுத்துறங்குவார்? உணவு உண்பவராக இருப்பாரானால் கழிவறை வேண்டியிருக்குமே அதை எங்கே நிர்மாணிப்பது? அவருக்கு மதுவருந்தும் பழக்கம் இருந்தால் எத்தகைய மதுவை அவருக்கு பறிமாறுவது?

காலம்காலமாக தன் மேய்ப்பனுக்காக காத்திருந்த கிறிஸ்துவர்களோ ஆச்சரியப்படத்தக்க வகையில் வரப்போவது இயேசுவாக இருக்கமுடியாதென்றார்கள். ஒருவன் சொன்னான், ‘வானத்திலிருந்து சங்கிலி வழியே இறங்கி வரும் அவர் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சாத்தானைக் கட்டிப்போடுவார்’ இப்படி அவர்தான் வரப்போகிறார் என்று நம்பியவர்களுக்கும்கூட சில குழப்பங்கள் இருந்தன. மனிதர்களின் பாவங்களை தொடர்ந்து அவர் மன்னிப்பாரா என்று. இந்த போப் விஷயம் என்ன ஆவது? இயேசு இந்த நகரத்திற்கு வந்தால் போப் இங்கே வந்து இவரை சந்திப்பாரா, இல்லை இயேசுவே போய் அவரைப் பார்க்கவேண்டியிருக்குமா? பாவமன்னிப்பு வழங்கிய பின்பான ஓய்வு நேரங்களை அவர் எப்படி கழிப்பார்? கல்வாரி மலையில் உயரே இருந்து அவர் கவனித்துக்கொண்டிருந்த சூதாட்டம் அவருக்கு கைகொடுக்குமா?

முஸ்லீம்களோ பெரும் மௌனம் காத்தார்கள். அவர்களால் அல்லாவின் வருகையை நிச்சயிக்கமுடியவில்லை. உருவமற்ற அல்லா உருவுடன் வருவதை அவர்களால் எப்படித்தான் நம்ப முடியும்?

பெரியார் சிலை சந்திப்பை ஒட்டி கடைகளின் முன்னால் நடமாடிக்கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரனும், தேவாலயத்தின் உச்சியில் சிலுவையின் மேல் உட்¢கார்ந்திருந்த கழுகும் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தார்கள். ஆரம்பம் முதல் எல்லாவற்றையும் பிச்சைக்காரன் பார்த்துக்கொண்டிருந்தான். எல்லாம் அவனுக்குக் கனவு போலத்தான் தோன்றியது. அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டது முதல் அவனுடைய கனவு தொடங்குகிறது.

மனிதர்களின் உரையாடல்களை அவன் கேட்கிறான். அவர்கள் அச்சம் கொள்வதையும், கேலி பேசுவதையும் அவன் கவனிக்கிறான். அவனைப் பொருத்தவரை எல்லா நிகழ்வுகளையும் போல இதுவும் ஒன்று. மனிதர்கள் இங்கும் அங்கும் போகிறார்கள், வருகிறார்கள், கூடிப் பேசுகிறார்கள், போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறார்கள், டீ அருந்துகிறார்கள் பின்பு கலைந்து செல்கிறார்கள். அங்கே நிற்பவர்களின் முகங்களை சற்று கவனித்தபடி ஏதோ ஒரு விதத்தில் ஆட்களை தேர்ந்தெடுத்து “நமஸ்காரம் சார்¢, ஒரு டீ வாங்கிக் கொடுங்க சார்’’ என்று இரண்டு கைகளையும் குவித்து அவர்களை வணங்குவான்.

என்னவென்று விளங்காமலேயே கடவுளின் வருகையை அவனும் எதிர்பார்த்திருந்தான்.

இந்த குழப்பத்தை முன்னிட்டு முதல்வரின் வருகை ரத்தானதை கேள்வியுற்ற தொண்டர்கள் மனமொடிந்து போனார்கள். இது திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்பதில் எள்ளளவும் அவர்களுக்கு சந்தேகமில்லை. முடியுமென்றால் கடவுளின் வருகையைக்கூட ரத்துசெய்ய முயற்சி மேற்கொண்டிருந்தார்கள். அவருடைய பிரதிநிதிகள் எங்கே இருக்கிறார்கள்? யார் மூலம் அதைசெய்வது? எதுவுமே அவர்களுக்கு விளங்கவில்லை.

இதனால் பெரும் கலவரம் ஏதாவது நிகழக்கூடுமென்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முதல்வருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடவடிக்கைகள் எல்லாம் கடவுளின் வருகைக்கு என்றானது. இந்த சதியில் ஈடுபட்டவர்களை தேடும் பணி துரிதமாக நடந்துகொண்டிருந்தது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்த விவகாரம் வீண் வதந்தியே தவிர வேறில்லை. நிச்சயம் அவர்களை கைது செய்துவிடுவோம் என்றார்கள். பெரியார் சிலை சந்திப்பில் எந்த கூட்டமும், ஆர்ப்பாட்டமும், நடத்தக்கூடாது என்று தடைவிதித்திருந்தது. அந்த ரகசிய போஸ்டர்கள் அகற்றப்பட்டன.

ஆரம்பத்தில் இது ஏதோ ஒரு புரளி போலத் தோன்றினாலும் நம்பாமலும் இருக்கமுடியவில்லை. இவ்வளவு நாள் வெறுமனே நம்பிக்கொண்டிருந்த ஒரு விஷயம் நிஜத்தில் நிகழப்போகிறது. கடவுள் பூமிக்கு வரப்போகிறார். எப்போதோ அல்ல, இன்று இரவு அது சம்பவிக்கப்போகிறது. அதை நினைத்தபோதே பெரும் பீதி ஒன்று அவர்களை கவ்வியது. சகலத்தையும் உருவாக்கியவர், எல்லாவற்றையும் இயக்குபவர், பூமிக்கு வரப்போகிறார்; மனிதர்களின் செயல்பாடுகளை நேரடியாக பார்வையிடப் போகிறார்; இதுதான் அவர்களை அச்சுறுத்தும்படி இருந்தது.

கடவுள் ஏற்கனவே நகரத்திற்கு வந்தவிட்டார் என்பது போன்றுகூட ஊர் முழுவதும் புரளி பரவியது. ஏதோ ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கிகொண்டு தனது ஆட்கள்மூலம் திட்டங்களை செயல்படுத்திகொண்டிருக்கிறாராம்.

கோவில்களையும், மடாலயங்களையும், ஆஸ்ரமங்களையும் சார்ந்து வாழ்ந்தவர்களின் மனங்கள் தீயாய் பற்றி எரியத் தொடங்கின. இதுவரையிலான அவர்களுடைய நம்பிக்கைகளும், சடங்குகளும், ஸ்திரத்தன்மையும் கடவுளின் வருகையால் எங்கே சிதறுண்டு போகுமோவென்று அஞ்சினார்கள். எல்லாம் அம்பலத்திற்கு வரப்போகிறது. புராண இதிகாசப் புத்தகங்களை சுருட்டி அவர் சிகரெட் புகைக்கப் போகிறார்.

அவருடைய வருகையை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதுதான் ஒருவருக்கும் புரியவில்லை. கடவுள் மிக நல்லவர், ஒருநாளும் அவர் பூமிக்கு வந்து இப்படி மனிதர்களை கலவரத்திற் குள்ளாக்கமாட்டார் என்று நம்பினார்கள் சில பக்தர்கள். சூன்யக்காரர்களோ இது பிசாசுகளின் வேலையாகத்தான் இருக்கும் என்றார்கள்.

சமீபத்தில் பிரபலமாகியிருந்த பீடி புகைக்கும் ஒரு சாமியார் கலக்கத்துடன் காணபட்ட தன் சீடர்களுக்கு சொன்னார்:

“இதற்காக நீங்கள் அஞ்சதேவையில்லை பிரபஞ்சமே கடவுளின் சரீரமா இருக்கும்போது இது எப்படி நிகழ முடியும்? தனது உடலின் ஒரு பகுதிக்கு, முழு உடலும் எப்படி விஜயம் செய்யமுடியும்?’’

ஒரு கவிஞன் எழுதினான்ஙி

‘மொழி வெளியில் இருப்பற்று அலைகிற ஒரு சொல்தான் கடவுள்’ என்று.

“ஏன் இந்த மனிதர்கள் கடவுளோடு இப்படி விளையாடுகிறார்கள்?, எல்லாமே இவர்களுக்கு விளையாட்டு போல அல்லவா ஆகிவிட்டது’’ நம்மையும் மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்பதை நம்பும், மிதவாத மனிதர் ஒருவர் ஆதங்கப்பட்டார்,

ஆஸரமத்திற்கு பக்கத்திலிருக்கும் ஒரு உணவகத்தில் கேழ்வரகு ரொட்டியை மென்று கொண்டே ஒரு வெள்ளைக்காரன் சொன்னான்,

“சில்லி கேம்’’

போலீஸ் உத்தரவின் பேரில் மூடிக்கடந்த ஒயின்ஷாப்பை பார்த்துவிட்டு ஒரு குடிகாரன் திட்டினான்,

“லவடிக்கேபால்’’

கடவுள் மறுப்பாளர்களோ, வரப்போகும் கடவுளுக்கு கறுப்பு கொடி காண்பிக்கப்போவதாகச் சொன்னார்கள்.

கோவில்களிலும், வீடுகளிலும் குடிகொண்டிருந்த உருவங்களில் கடவுள் தன்மை வடிந்து வெளியேறிவிட மனிதமனங்களை பீதிகவ்வியது. எல்லா ஆலயங்களும் பூட்டப்பட்டுவிட்டன. அர்ச்சகர்களும், பக்த சிரோன்மணிகளும் தங்களுடைய வீடுகளுக்குள் அடைந்துகிடந்தார்கள். ‘கடவுள் தீயவர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் தனது பலிபீடத்திற்கு அழைத்துச்செல்வார்; அங்கே வைத்து அவர்களை பலியிடுவார்’ என்று எவனோ ஒருவன் சொன்னதை கேள்வியுற்று பெரியகோபுரத்தின் மேல்மாடத்திற்கு ஏறிச்சென்று ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். பலருக்கு நோய்கண்டது.

போக்குவரத்து வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டிருந்தது. தேவாலயமோ ஒருவரையும் காணாமல் வெறிச்சோடிப்போனது. இரவு பத்து மணி வாக்கில் தேவாலயத்தின் மொத்தக் கதவுகளையும் அதன் காவலாளி மூடித்தாளிட்டான்.

தேவாலயத்தை ஒட்டிய வீடு ஒன்றில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த ஒரு நாய் ஏனோ ஓயாமல் குரைத்துக் கொண்டே இருந்தது.

நகரத்தை பெரும் பீதி சூழ்ந்த அந்த மாய இரவில் மனிதர்கள் தங்களுடைய இருப்பிடங்களில் பயத்துடன் பதுங்கி¢க் கொண்டிருக்க, நகரின் தெருக்களில் கட்சித் தோரணங்கள் மட்டும் வெறுமையாக அசைந்துகொண்டிருந்தன.

கட்டளை பிறப்பிக்கவும், மேற்பார்வை இடுவதற்காகவும் அவ்வப்போது வந்து போன அதிகாரிகளின் வருகை நின்று போயிருந்தது. இதற்குமேல் ஒரு கலவரமும் அங்கே நிகழாது என்பதில் தெளிவடைந்து காணப்பட்ட காவல் துறையினர் அவ்விடத்தைவிட்டு அகன்று போய்விட்டார்கள்.

பிச்சைக்காரனுக்குதான் இது ஆச்சர்யமாக இருந்தது. ‘ஏன் கடவுளை காண ஒருவரும் வரவில்லை?’

எந்த அசம்பாவிதமும் நிகழாமல் அந்த இரவு கடந்து, மறுநாள் நகரமே பெருமூச்சுடன் விழித்தெழுந்தது. வழக்கம்போல காகங்கள் கரைந்தன, பால்காரர்கள் மணியடித்தார்கள், பெரியார் சிலைக்கு அருகிலிருந்த டீக்கடையில், சினிமாப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் நினைத்தது போல கடவுள்பூமியில் பெரும் வெடிப்பு தோன்றி மேலெழுந்தோ, அமைதியாக வானத்திலிருந்து இறங்கியோ, ஒரு தூணை பிளந்துகொண்டோ தேவாலாயத்திலிருக்கும் இயேசுவின் உருவத்திலோ, பெரியாரின் உருவத்திலோ இவர்கள் எதிர்பார்த்தது போல எதுவாகவும் அவர் வரவில்லை.

பேரமைதி கவ்விய அந்த நடுநிசி வேளையில் ஒரு சம்பவம் நடந்தது. மூடப்பட்ட கடைகளின் தடுப்புக்குபின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த பிச்சைக்காரன்தான் அதைப்பார்க்கிறான். தாலுக்கா அலுவலகத்தின் மதில்சுவரை ஒட்டி பராமரிப்பில்லாமல் விடப்பட்டிருந்த பொதுக்கழிவறை பக்கமிருந்து ஒரு மனிதர் வெளிப்பட்டு, சாலையை கடந்து தேவாலயத்தின் சுற்றுச்சுவரை ஒட்டிய சந்தில் நுழைந்து மறைந்தார். அந்த நாயின் குரைப்பு சத்தம் நின்றது. தேவாலயத்தின் சிலுவைமேல் உட்கார்ந்திருந்த கழுகு படபடத்து எழுந்து சென்று பக்கத்திலிருந்த நெட்டிலிங்க மரத்தில் உட்கார்ந்தது. அது ‘அவர்தானோ’ என்ற சந்தேகம் எழுந்தாலும் இதை யாரிடம்போய் அவனால் சொல்லமுடியும்? அப்படிச் சொன்னாலும் யார் நம்பப்போகிறார்கள்? ஒருவேளை அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமானால் ஒரு டீ வாங்கிக்கொடுக்கச் சொல்லி அவரிடம் அவன் கேட்டிருக்கக்கூடும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *