மறைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,187 
 
 

(1989 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தென்னை மரத்தோடு சார்த்தி வைக்கப்பட்டு இருந்த படுதாவில் மைக்கல் சித்திரம் வரைந்து கொண்டு இருந் தான். கடந்த ஒரு வார காலமாக அவனுக்குச் சரியான ஊண் இல்லை, உறக்கம் இல்லை. வண்ணங்களைச் சேர்ப் பதும் வரை வதுமாகவே இருந்தான்.

அவன் இயல்பே அப்படித்தான். சித்திரக்கலையிற் தன்னை மறந்து மூழ்கிவிடும் இயல்பினாற் தன் உயர் கல்வியையே குழப்பிக் கொண்டவன் மைக்கல். ஆனாலும் அவனது கல்லூரி அதிபர் ஒரு காலத்தில் இவன் தன் பெயருக்கேற்ப ‘மைக்கல் ஆஞ்சலோ’வைப் போலச் சித்திரக்காரனாவான் என்றுதான் எண்ணினார்.

ஆனால் அவன் ஒன்றும் அப்படியாக ஆகிவிடவும் இல்லை! தற்போது தன் கிராமத்தவர் செய்யும் மீன்பிடித் தொழிலையே ‘நூத்தோடு நூத்தொன்றாகச்’ செய்து கொண்டு இருக்கிறான். ஆனாலும் அவனது கலைத் துவத்தைத் தெரிந்து கொண்ட ஊரவர்கள் யாராவது அவனிடம் சித்திரம், சோடனை என்று ஏதாவது வேலையை ஒப்படைத்து விட்டால்…

அதன் பின்னர் அவனுக்கு ஊண் தேவையில்லை. உறக்கம் வேண்டியிராது.

சென்ற ஞாயிற்றுகிழவைதான் ஊருக்கு முதன் முறை யாக வரவிருக்கும் புதிய ஆயரை வரவேற்க ஊரின் தலை வாயிலில் அமைக்க இருக்கும் அலங்கார வளைவிற்கான சித்திர வேலைப்பாடுகளைச் செய்யும் பொறுப்பை ஊர வர்கள் மைக்கலிடம் கையளித்திருந்தார்கள்.

அன்றிலிருந்து மைக்கல் தன் தந்தையாரோடு கடலுக்குச் செல்லவில்லை. அவன் வரவே மாட்டான் என்பது அவனது தந்தையாருக்கும் தெரியும். ஆகவே அவரும் அவனை வற்புறுத்தலில்லை. ‘வாழத் தெரியாதவன்’ என்று தம் மனதுள் நொந்து கொண்டே. பெரு மூச்சு விட்டார். அவனுக்குக் கீழே உள்ள இன்னமும் ஐந்து பிள்ளைகளுக்கு உணவு தேடவேண்டிய மகத்தான பொறுப்பை அவரால் தட்டிக்கழிக்க முடியவில்லை! ஆகவே தன்னந்தனியனாகவே அவர் கடலுக்குச் சென்றார்.

மைக்கல் தன் குடிசைக்கு முன்னாற் தென்னை மரத் தோடு சார்த்தி வைக்கப்பட்டிருந்த படுதாவில் சித்திரம் வரைந்து கொண்டிருந்தான்!

அலங்கார வளைவை அமைத்துத் தரும்படி தான் கேட்கப்பட்ட முதல் நாளிரவே அவ்வளைவு எப்படி அமையவேண்டும் என்பதைக் கற்பனை பண்ணி, அக் கற்பனை உருவைத் தன் மனதிலே வரைந்து கொண்டான் மைக்கல். தன் மனதிலே உள்ள உருவைத்தான் இப்போது வரைந்து கொண்டு இருக்கிறான்.

ஊரவர்கள் எவரும் அவனது கற்பனையைக் குழப்ப வில்லை. அவனுடைய சுதந்திரத்தில் தலையிடவும் இல்லை. தலையிட்டால் நூற்றுக்கணக்கில் செலவாகும் என்ற சூக்குமம் அவர்கள் எல்லோருக்கும் தெரியும்! மைக்கலைப் போல வேறு யாராவது இதைச் ‘சும்மா’ செய்வார்களா?

ஊரைக் கிழக்கு மேற்காக இரண்டாகப் பிரித்துக் கொண்டு செல்லும் பிரதான வீதியை அடைத்து, வெள்ளி மீன் ஒன்று ஓடும் நிலையில் வாலை வளைத்தபடி நிற்க வேண்டும். அதன் செதில்களில் ‘நல்வரவு’ என்ற எழுத்துக்கள் தங்கமாய் தகதகக்க வேண்டும். அவ்வெள்ளி மீனைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றில்

‘அவர் கலிலேயாக் கடலோரமாகப் போகையில் சீமோனும் அவருடைய சகோதரர் பெலவேந்திரமும் கடலில் வலைவீசிக் கொண்டிருப்பதைக் கண்டார். ஏனெனில் அவர்கள் மீன் பிடிப்போர். இயேசு அவர்களைப் பார்த்து

“என் பின்னே வாருங்கள்.

உங்களை மனிதரைப் பிடிப்பவராய் இருக்கச் செய் வேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவர்பின் சென்றனா. என்ற நற்செய்திக் காட்சிகளும், இரண்டாவது தூணில் தன் சொந்த ஊர்க் கடலோரக் காட்சிகளும் சித்தரிக்கப் பட வேண்டும் என்று தீர்மானித்து இருந்தான் மைக்கல். அக்காட்சிகளை வரைவதிற் தன்னை மறந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான் இப்போது.

வங்காளப் பெருங்கடல் கரையைக் குடைந்து உள் வாங்கி நீண்டு நௌந்தோடும் உப்பங்கழியருகே நீண்டு நிமிர்ந்து ஓலைக்குடை கவித்து நிற்கும் தென்னை மரங் களிடையே அவ்வூர் அமைந்துள்ளது. ஊரின் நடுவே இராயப்பர் தேவாலயம் வீற்றிருக்கிறது! ஆமாம்; ஒரு பேரரசனைப் போன்ற இறுமாப்புடன் இராயப்பர். கோயில் வீற்றே இருக்கிறது.

கோயிலுக்கு முன்னால் நிற்கும் பென்னம் பெரிய வேப்பமரத்தின் கிளையிலே தொங்கும் மணியின் சு நாதம் கேட்கும் வட்டத்து எல்லையுள இருக்கும் சில ஓட்டு வீடு களும் பல ஓலைவீடுகளும் கோயில் என்ற அப்பேரரசனின் பிரதானிகள், படை. குடிகள்!

அன்று ஞாயிற்றுகிழமை ஆதலால் உப்பங்கழியின் மணல் மேட்டிலே தோணிகளும் கட்டு மரங்களும் விசைப் படகுகளும் இழுத்து வைக்கப்பட்டிருந்தன. வீட்டுக்கு முன்னால் தென்னை மரங்களை இணைத்துக் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த தடிகளில் நைலோன் வலைகளும் கம்பான் கயிறுகளும் ‘அசமந்து’ தொங்கிக் கொண்டு இருந்தன. இலையசையா இறுக்கமும் வெதுவெதுப்பும் கொண்ட பங்குனி மாதமாகையால் கோயிலின் பின்னாற் கிடந்த உப்பங்கழியும் ஏன் அதற்கும் அப்பால் கண் வைத்த தொலைவிற்குக் கருநீலமாகப் பரந்து கிடந்த வங்காளப் பெருங் கடலுங்கூடச் சோம்பித்தான் கிடந்தன.

வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்து ஆலய மணியின் சுநாதத்தால் அழைக்கப்பட்ட ஊர் மக்கள் கோயிலில் திரண்டதும் பூசை ஆரம்பமாயிற்று. பூசையின் இறுதிக் கட்டத்தில்தான் சுவாமியார் அந்த அறிவித்தலைப் பிர கடனஞ் செய்தார்.

‘திர்வரும் பத்தாந்திகதி சனிக்கிழமை பிற்பகல் புதிய ஆயர் அவர்கள் நம் ஊருக்கு வருகை தரு கிறார். அவரை நாம் முறையாக வரவேற்க வேண்டும்.

வங்காளக் கடல் அசமந்து சோம்பிக் கிடக்கும் கோடை. காலத்தில் ஆழ்கடலிலும், அக்கடல் அலை யெற்றி நுரைகக்கிக் கரையிலே ஆர்ப்பரித்து மோதும் மாரியில் உப்பங்கழியிலும், மீன் பிடிக்கும் அதே தொழிலை, அதற்கென்றே அமைந்துவிட்ட மாறுதலில் லாக் கோட்பாடுகளுடன் செய்து கொண்டிருக்கும் அவ் வூரவர்களுக்கு, அடைமாரியில் வரும் நத்தாரும், அருங் கோடையில் வரும் இராயப்பர் திருநாளும், அவர்களின் நித்திய சலிப்பை மாற்றி வாழ்க்கையில் ஓர் பிடிப்பைக் கொடுக்கும் சுபதினங்கள்! இவ்வருடம் ஆயரின் வரவேற்பு விழாவும் அவைகளுடன் சேர்ந்து கொண்டன. அவ்வர வேற்பு வைபவத்திற்காக அந்தக் கணத்திலிருந்தே அவ்வூர் தன்னை ஆயத்தமாக்கிக் கொண்டிருந்தது.

கூட்டங் கூடினார்கள். ஆலோசித்தார்கள். ஆயருக்கு மகத்தான வரவேற்பளிக்க வேண்டும் என்று தீர்மானித் தார்கள். அலங்கார வளைவைச் சித்தரிக்கும் பணியை மைக்கலிடம் ஒப்படைப்பது என்பதும் ஊரின் முடிவு!

மைக்கல் மட்டுமா? பங்குச் சுவாமியாரைத் திருப்திப் படுத்துவதற்காகவென்றே, கிறீஸ்து நாதர் சொன்னது போலத் “தங்கள் கற்பனைப் பட்டலங்களை அகல மாக்கி, வஸ்திரங்களின் தொங்கல்களை பெரிதாக்கிக் கொண்டு” தினந்தினம் கோயிலுக்குச் சென்று வரும் பக்திச் சபையினரும், மோட்சத்தின் திறவு கோலைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் இராயப்பரைத் திருப்தி பண்ணினால் மோட்ச வீடு தங்களுக்கும் திறந்து விடப்படும் என்ற நம்பிக்கையோடு அவர் திருநாளென்று மட்டுமாவது கோயிலுக்குச் செல்லும் கடல் மறவர்களும் ‘ அவர்களை என்னிடம் வரவிடுங்கள்’ என்று கிறீஸ்து நாதர் அன்போடு அழைத்த குழந்தைகளும், தாயரும் கன்னியரும் எவரும் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அவ் வரவேற்பு வைபவத்தில் பங்குகொள்ள ஆயத்த மானார்கள்,

இரண்டு வாரங்கள் உருண்டோடி விட்டன.

நேற்றே தோணிகளும் கட்டுமரங்களும் விசைப்படகு களும் உப்பங்கழியின் மணல் மேட்டில் இழுத்து வைக்கப் பட்டுவிட்டன. தென்னை மரங்களின் குறுக்கே கட்டப் பட்டிருந்த தடிகளில் கம்பாங்கயிறுகளும் நைலோன் வலைகளும் அசமந்து தொங்கின.

பதைபதைக்கும் – சித்திரை மாதத்து வெயிலிலே ஊரைக் கிழக்கு மேற்காக இரண்டாகப் பிரித்துக் கொண்டு செல்லும் பிரசித்த பாதையின் இருமருங்கிலும் சுடுமணலிற் குழிபறித்துக் கொண்டிருந்த இளைஞர்கள், அக்குழிகளிற் தோணி வலிக்க உதவும் துடுப்புக் கம்புகளை நட்டார்கள்.

‘மதியஞ் சறுகியபோது தெருவின் இருகரையிலும் குருத்தோலைத் தோரணங்கள் மாவிவைகள் அவை களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நின்ற கம்பங்களில் செக்கச் சிவந்த தாளம் பழங்களையும் சுமந்து கொண்டு நின்றன. சரக்கொன்றை என்ற இலக்கியப் பெயரை தழுவவிட்டு ‘ஈயவாகை’ என்று இழிசனர் வழக்காய் அழைக்கப்பட்ட நீளமான மஞ்சட் பூங்கொத்துகள் புதிய தோரணங்களிடையே சுண்ணைப் பறித்தன. தோரணங்களுக்குக் கீழே பச்சையும் நீலமுமான நைலோன் வலைகள் தழைந்து தொங்கின.

பெருந்தெருவின் இருமருங்கும் அமைந்திருந்த வீடு களின் தலைவாயிலில் குலைவாழைகள், அவற்றிடையே இரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்ட மேசையிற் பூரண கும்பங்கள் பூசி மினுக்கிய சந்தனப் பேழைகள், குங்குமச் சிமிழ்கள், ஊதுவத்தித் தண்டுகள், பூ மாலைகள், பன்னீர் கும்பாக்கள். |

தெருவோரத்து மரங்களிலே கட்டித் தொங்கவிடப் பட்ட பட்டாசுச் சரங்கள்!

மூன்று மணியாகி விட்டது. ஆனாலும் இன்னமும் முகப்பு அலங்கார வளைவைக் காணோம்!

ஆனாலும் ஊரவர்களுக்கு அனுபவம்! மைக்கல் கடைசி நேரத்தில் தான் அதைக் கொண்டு வந்து கட்டு வான் என்பது அவர்களுக்குத் தெரியும்!

சரியாக நான்கு மணிக்குத்தான் மைக்கல் கம்பங் களை நட்டு அதன்மேற் தன சித்திரத் தூண்களையும், தூண்களுக்கு மேலாகத் தெருவை அடைத்துத்தான் நல் வரவு எழுதிய மீனையும் கட்டினான்.

தங்கள் கல்யாணக் கூறையின் பாரத்தைச் சுமக்க மாட்டாது தள்ளாடி நடந்த பேரிளம் பெண்கள், வெள்ளைச் சேலையுடுத்த விருத்தாப்பியப் பெண்கள், பட்டும் பீதாம்பரமும் அணிந்து நடைபயிலும் வயது வந்த ஆண்கள், கற்பனைப் ‘பட்டயங்களை அகலமாக்கி வஸ்திரங்பளின் தொங்கல்களையும் பெரிதாக்கிக் கொள் ளும் பக்திச் சபையினர், காற்சட்டை அணிவது நிலங்கூட் டற்கே என்ற வைராக்கியத்துடன் தங்கள் யானைக்கால் (சட்டை)களை இழுத்துக் கொண்டு வரும் இளைஞர்கள், வண்ணச் சேலைகளைத் தரித்துக் கொண்டு பட்டாம் பூச்சியாய்த் திரியும் மங்கையர்கள், பாடசாலைச் சீருடை.. அணிந்த பெதும்பையர்கள், மரங்களிற் கட்டித் தொங்க விடப்பட்ட பட்டாசுச் சரங்களுக்குத் தீமூட்டக் கையில் வைத்திருந்த நெருப்புக் கொள்ளிகளை ஊதியபடி ஆயத்த மாக நின்ற சிறுவர்கள், பாடுவதற்கு ஆயத்தமாக நின்ற அரிவையர், இத்தனை சிங்காரிப்புகளுக்கு மத்தியிலும் வேறு எதையெதையோ கேட்டு அடம்பிடிக்கும் குழந்தை கள் என்று திரண்டிருந்த ஊரே அச்சித்திரத் தூண்களை முண்டியடித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. மாலைச் சூரியனின் பொன்னொளியில் அத்தூண்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன!

கூட்டத்தின் மத்தியில் விலை சரஸமான நாட்டுச் சாராயத்தை மாந்திய சந்தியாக் கிழவர் பாடினார்.

வாழைகமுகுகள் நாட்டுங்கோ-நல்ல மாவிலைத் தோரணங் கட்டுங்கோ

அந்த நாட்டுக் கூத்துப் பாடலைப் பாடி முடித்த கிழவர் ஆக்ரோஷத்துடன் சொன்னார்.

“குலைவாழை கட்டாமல் என்ன வரவேற்பு? அதிலும் நம்ம புது ஆண்டவர் அசல் தமிழன். முன்னையப் போல வௌளைக்காரனுமல்ல. அவருக் கேன் இந்தச் சித்திரமெல்லாம்? சித்திரமாம் சித்திரம். சிலுக்க மலுக்கக் கொத்தினாற் சித்திரந்தான். இந்த இழவை எல்லாம் விட்டிற்றுக் குலை வாழை கொண்டு வந்து கட்டுங்கோ.”

கூட்டத்திற் சிலர் அவரை ஆதரித்தனர். ஆதரித்த வர்கள் எங்கிருந்தோ குலைவாழைகளைக் கொண்டு வந்து சித்திரத் தூண்களுக்கு முன்னால் நட்டார்கள்.

நடப்பட்ட அவ்வாழைகளின் பின்னாற் சித்திரத் தூண்கள் மறைந்து அலங்கோலமாய்…

மைக்கலின் இதயமே வெடித்து விடும் போல இருந்தது. அவன் கண் முன்னால் சூரியன் இருண்டது. சந்திரன் ஒளி குன்றியது. வானமண்டலத்தின் சத்துவங்கள் அசைக்கப்பட்டு யுகாந்த காலத்தின் ஊழிக கூத்து அவன் இதயத்திலே நடைபெற்றுக்கொண்டி ருந்தது!

ஆயர் வந்திறங்கியதோ, அவருக்கு மாலையணிவித்ததோ பாடசாலைச் சீருடை அணிந்த மாணவிகள் வரவேற்புப் பாடலிசைத்ததோ, மரங்களிற் கட்டப் பட்டிருந்த பட்டாசுச் சரங்களின் இடைவிடா முழக்கத் திற் புகைமூட்டத்தூடே ஆயர் ஊர்வலமாகக் கோயிலை நோக்கிச் சென்றதோ, கோயிலை அடைந்ததும் “நாடு இன்றிருக்கும் பரிதாபகரமான சூழலில் எனக்கு இத்தகைய வரவேற்பு தேவையற்றதென்று” என அவர் ஊரவர் சுளைக் கடிந்துகொண்டதோ ஏதுமே அக்கலைஞனுக்குத் தெரியாது!

தன் முன்னால் நீண்டு வளைந்து கிடந்த உப்பங் கழியை வெறித்தபடி அவன் பார்த்துக் கொண்டே நின் றான். ‘பன்றிகளின் முன்னால் முத்துக்களை வீச வேண் டாம்’ என்ற நற்செய்தி வாக்கியத்தை அவன் மனம் முணுமுணுத்துக் கொண்டது.

– தொண்டன் 89

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது, ஐம்பது சிறுகதைகள், மித்ர வெளியீடு, முதற் பதிப்பு ஒக்டோபர் 1996

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *