மதிப்புக்குரிய அடிமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 29, 2024
பார்வையிட்டோர்: 787 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நடந்திருக்கவேண்டும். அல்லது அப்படி நடந்துவிடுவதற்காகச் சூழ்நிலைக்குள் சிக்கியிருக்க வேண்டும். இல்லா விட்டால், சூசை முத்தனின் முகம் இப்படிச் சுண்டிப் போயிருக்காது.

மாலைப் பொழுதெனில், அல்லது குறைந்தபட்சம் மதியந்திரும்பும் நேரத்திலெனில், ஏதோ எப்படியோ வந்து சேர்ந்துவிட்ட மயக்கத்தில் இப்படி முகம் கண்டிப்போகும். ஆனால், இவ்வளவு அதிகாலையோடு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதெனில் சூசைமுத்தனைப் பொறுத்த மட்டில் மிகவும் புதினந்தான்.

சூசைமுத்தன் எப்போதும் கலகலப்பாக இருப்பான். எவ்விதத் தாக்கம் ஏற்பட்டபோதும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்துச் சமாளித்து நிற்கும் இவனுக்கு ஏதோ பேரதிர்ச்சிதான் ஏற்பட்டிருக்க வேண்டும்! அவன் முகம் அப்படித்தான் காட்டுகிறது.

ஊருக்கெல்லாம் சூசைமுத்தன் பெரியவன். பெரியவன் என்றால் அப்படி இப்படி என்றல்ல. சபையை ஆக்கவும். சபையைக் கலைக்கவும், வல்லமை உண்டு.

அதிகாலையோடு மூப்பர் அவனை அழைத்துச் சென்றார். ‘குருவானவர் உன்னைக் கையோடை கூட்டியரட்டாம்’, என்று பிடிவாதமாக நின்றுதான் மூப்பர் அழைத்துச் சென்றார். சூசைமுத்தன் பலவிதத்திலும் உழட்டிப் பார்த்தும் மூப்பர் விடவில்லை. அவனை இழுத்தே சென்றுவிட்டார்.

முன்பென்றால் மூப்பர் இப்படி அவனை அவஸ்தைப்படுத்த வேண்டியதில்லை. மூப்பர் முகத்தைக் காண இவனாகவே எழுந்து சென்று விடுவான். இப்போவெனில் மூப்பர் இவனை இப்படி அவஸ்தைப்படுத்தி இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது.

குருவானவருக்கு முன்னால் போவதென்பது சூசை முத்தனுக்கு இலேசுப்பட்ட காரியமல்ல.

பல வருடங்களாகக் குருவானவருக்கு இவன் ‘டிமிக்கி’ கொடுத்து வருகிறான்.

‘வருஷத்தில் ஒரு தடவை என்கிலும், நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து, தேவநற்கருணை பெற வேண்டும்’ என்பது திருச்சபையின் கட்டளை. இந்தக் கட்டளை சூசைமுத்தனுக்குத் தெரியாத ஒன்றல்ல. பாவத்துக்கான பிரிவுகளான, ‘ஜென்மபாவம், கன்மபாவம், அற்பபாவம் சாவான பாவம்’ ஆகியவைகளுக்கான வரைவிலக்கணங்களைப் புரிந்து கொள்ள முடியாத வயதிலிருந்து இருபதாவது வயது வரை இந்தக் கட்டளைகளுக்குப் பணிந்து நடந்தவன் சூசைமுத்தன். இந்த உத்தம கத்தோலிக்கனுக்கு இருபதாவது வயதில் வந்ததே ஒரு வினை! அன்றிலிருந்து இன்றுவரை அது அவனை இப்படி வைத்திருக்கிறது.

இப்போது இருக்கும் மூப்பர், அப்போதைய மூப்பருக்கு மகனாக மட்டுந்தான் இருந்த காலம்! சூசைமுத்தனும், மூப்பர் மகனும் இணை பிரியாது வாழ்ந்த காலம்!

அப்போது, ‘குருவானவர் உன்னை வரட்டுமாடா, வாடா’ என்று உரிமையோடு இழுத்துச் சென்று சுவாமியாருக்கு முன்னால் நிறுத்தினான் இவன்.

‘சாவான பாவமென்றால் என்ன?’ ‘பூரண அறிவு அவதானத்துடனும், முழுச் சம்மதத்துடனும் கனங் கொண்ட காரியத்தில் தேவ கட்டளையை மீறுவதே சாவான பாவம்!

‘பத்துக் கற்பனைகளுள் ஆறாங் கற்பனை எது?’ “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக!’ “நீ கனங்கொண்ட காரியத்தில் தேவகட்டளையை மீறினாய்! விபசாரஞ் செய்தாய்!’

‘இல்லை தேவரீர்! இந்த அந்தோனியாராணை இல்லை ஆண்டவரே! ‘தேவனுடைய திருநாமத்தை வியர்த்தமாகப் பாவியாதே. இது பாவம்!”

‘இல்லை தேவரீர்! நான் கள்ளச் சத்தியம் செய்ய மாட்டேன் தேவரீர்!’

‘பொய் பேசாதே. இந்தக் காரியத்தில் பொய் பேசுவது இரட்டைப் பாபம்!’

‘பாபத்தை ஒப்புக்கொண்டு அதற்காக மனஸ்தாபப்படு பிள்ளாய். அப்போது, உனது பாபம் கர்த்தரால் மன்னிக்கப்படும். பாவிகளுக் காக இரத்தம் சிந்தி. சிலுவையிலே அறையுண்ட தேவகுமாரனின் திருப்பாடுகள் உனது பாபத்தைக் கழுவும்! சூசைமுத்து, அப்பக்கடை அன்னம்மாளுக்கும், உனக்கும் நாளையப் பூசைப் பலியில் முள்முடி வைத்து அவதாரம் தரப்படும்.’

‘ஐயோ தேவரீர், மூப்பற்றைமோன்…’ ‘பேசக்கூடாது! எனக்கு எல்லாந் தெரியும். மூப்பரின் மகன்தான் உன்னைக் கையுங்களவுமாகப் பிடித்தான்….’

‘இல்லை தேவரீர்!’ ‘சரி, கண்டவன் வேறு யாராக இருக்கட்டும். நீ தேவகட்டளையை மீறினாய்! உன்னை அவன் கண்டான். அவன் உங்களைக் கண்டதைக் கண்டவர்கள் இருக்கின்றனர். போ! போய்விட்டு நாளைக்குப் பூசைக்கு வந்துவிடு. போ சூசைமுத்து.’

குருவானவருடன் நடந்த இந்தத் தர்க்கத்துடன் வெளியே வந்தவன் தான் சூசைமுத்தன். இன்றுவரை அந்தக் கோவிலுக்கோ அல்லது அதற்குப்பின், கோவிலுக்கு மாறி வந்த குருவானவருக்கு முன்னோ இவன் போகவில்லை .

மனம் மரத்துப் போய்விட்டது. ஆரம்பத்தில் இப்படி மரக்க வைப்பது கடினமாகத்தான் இருந்தது, பின்பெல்லாம் இந்த மரப்புத் தான் ஓர் இலக்குக் கட்டையாக மாறிவிட்டது.

சூசைமுத்தனின் அப்பனின், அப்பனான கணபதி மனைவி சகிதமாக ‘குடிமகன்’ என்ற தோரணையில் இந்த ஊருக்கு வந்து சேர்ந்தான். அந்தக் காலம், இந்தக் காலம் போல் பொல்லாத காலமல்ல; மகா பொல்லாத காலம்!

ஜாதிகள் என்ற விதத்தில், பலவிதப் படிகள், படிகளுக்குள் படிகள்; சிறு படிகள்; அதற்குள்ளும் பெரும்படிகள்; சிறுபடிகள். ஒவ்வொன் றுக்கும் மாத்திரைக்கு மாத்திரை இலக்கணம் வகுத்துக்கொண்டிருந்த காலம்.

அந்தோனியார் கோவிலைச் சுற்றிக்கொண்டுவாழ்ந்த மீன் பிடியாளர் களுக்கென அப்போது அடிமை குடிமை எதுவுமே இல்லை. சுண்டி எடுக்கப்பட்ட வேறொரு கூட்டத்தினர், அடிமை குடிமை வைத்து, கொடி கட்டிவாழ்ந்த காலமென்றால் அவர்களை அண்டித்தான் மற்றவர்கள் பிழைத்துப்போக வேண்டும். அப்போதுதான் அந்தோனியார் கோவிலின் கட்டளைக் குருவாக வெள்ளைத்தோல் மனிதர் ஒருவர் வந்து சேர்ந்தார். இந்த மீன்பிடி மக்களுக்குக் ‘குருகுலத்தவர்’ என்று பெயரிட்டுப் பெருமைப்படுத்தினார். திவ்விய யேசுவின் சிஷ்யர்கள், மீன்பிடியாளர் என்பதனால் இவர்களைக் ‘குருகுலத்தவர்’ என்று பெயரிட்டுப் பெருமைப்படுத்தியபோது, இந்த குருகுலத்தவர்களின் பெருமையின் நடைமுறைக்கு அடிமைகள், குடிமைகள் எல்லாமே வந்தாக வேண்டி இருந்தது.

மயிர் வெட்டும் தொழிலுடன் ‘குடிமகன்’ என்ற அந்தஸ்துப் பெற்று வந்து சேர்ந்த கணபதி ‘அடைக்கல முத்தன்’ என்று ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிற்று.

இந்த அடைக்கலமுத்தன் தனிக்குடும்பமாகிவிட்டான். உறவினர்கள் என்று பலர் இருந்தாலும் ‘இவன் தொழிலுக்காகப் படியிறங்கி விட்டமையால் அவர்கள் இவனைத் தள்ளி வைத்துவிட்டனர். என்று மொட்டையாகச் சொல்லிவிட்டால் போதாது. சபை, சந்தி, சம்மந்த உம்மந்தம் எல்லாவற்றையுமே வெட்டிவிட்டனர் என்று விரிவாகக் கூறினால்தான் பொருத்தம்.

அந்த அடைக்கலமுத்துக்குச் சவிரிமுத்தன் என்ற ஒரே மகன். அந்தச் சவிரி முத்தனுக்கு எப்படியோவந்து சேர்ந்த மனைவி சவுனத்தின் உதிரத்தில் உதித்தவன் தான் சூசை முத்தன்.

சூசைமுத்தனின் பேரன், ‘கணபதி’ என்ற அடைக்கலமுத்தன் படி இறங்கியதன்மேல் மெதுவாக நகர்ந்த சந்ததிப் பெருக்கம் சூசை முத்தனோடு வெட்டுண்டு நின்றுவிட்டது.

சூசைமுத்தன் ஒண்டிக்கட்டை. உத்தம கத்தோலிக்கர்களுக்காக என்னதான் சட்டங்களை வகுத்துக் கொண்டாலும், சூசைமுத்தனைஇந்தச்சட்டங்கள் அசைத்து விட வில்லை. அவனை ஊருக்கு வேண்டும். இந்தத் தேவை அவனைத் தலை நிமிர்ந்து நடக்கவைத்தது.

சூசைமுத்தனின் கக்கத்திற்குள் ஒரு பை இருக்கும். அந்தப் பைக்குள் ஒரு கத்தரிக்கோல், ஒரு சீப்பு, ஒரு கத்தி, அந்தக் கத்தித் தீட்டுவதற்கான ஒரு கல்லு ஆகியவை இருக்கும். மொத்தத்தில் சொன்னால் இந்தக் கருவி பைதான் ஊருக்குள் அவனை ‘இராச’ அந்தஸ்தில் வைத்திருக் கிறது என்றாவது ஒருநாள் அவன் இந்தக் கருவிப் பையை விட்டெறிந்து விட்டால் ஊரில் மானம் என்னாவது?

ஊரில் நடந்து விடும் நன்மை தீமைகளில்தான் சூசைமுத்தனின் அதிகாரச் சிறப்புத் தெரியவரும்.

சூசைமுத்தன் தலைப்பந்தியில் இருத்தப்படுவான். எல்லோருக்கும் உணவு படைக்கப்பட்டபின், எல்லோரும் சூசைமுத்தனின் தலை அசைப்பிற்காகக் காத்திருக்க வேண்டும்.

‘வழி தவறியவன்- மசுவாதுக்காரன், கலியாணக் கலப்புகளில் படி இறங்கியவன்’ என்ற விதங்களுக்குட்பட்ட, எவனாவது ஒருவன் – அல்லது பலரைச் சபையை விட்டு எழுப்பிவிடத்தான் வேண்டுமென சூசைமுத்தன் ஆணையிடுவானானால் அந்த ஆணைக்கு ஊரின் மூப்பர் செவிமடுத்து அதைச் செய்தால்தான் தொடர்ந்து சபை நடக்கும். இன்றுவரை சூசைமுத்தனின் இந்த ஆணை நிறைவேற்றப் பட்டுத்தான் வருகிறது.

சூசைமுத்தன் சபையைச் சுற்றி இராஜ நோட்டம் விடுவான். எல்லோர் விழிகளும் சூசைமுத்தனையே ஏக்கத்துடன் நோக்கும். வீட்டின் தலைவனும், தலைவியும் வீட்டு வாயிற்படியோரம் நின்று அவனைப் பார்க்கும் பார்வை, அவன் காலடியில் மண்டியிட்டுச் கெஞ்சுவது போலிருக்கும். சூசைமுத்தன் வாயிலிருந்து ‘சரி’ என்ற சொல் பிறந்து விட்டால்தான் எல்லோருக்கும் மூச்சு வரும்.

சூசைமுத்தன் ராஜநடையுடன் சபைக்கு வருவதற்கு முன்பு கையலம்புவதற்காக அவனுக்குக் கை மண்டையில்தான் தண்ணீர் வார்க்கப்படும். உணவருந்தும்போது விடாய்க்காக அவன் தண்ணீர் பருக முடியாது. அப்படிப் பருகும் நிலை ஏற்படின் சிரட்டையில்தான் தண்ணீர் தரப்படும்.

இது குடிமகனை நடத்தும் முறை. குடிமகன் தீண்டத்தகாதவன். பாத்திரங்களில் அவன் கரம் பட்டுவிடக் கூடாது.

சபையில் அவன் தலையசைப்பிற்காக ஏங்கிக் கிடப்பதுடன் அவனுக்குக் கைமண்டையில் தண்ணீர் வார்ப்பதும் சேர்ந்துதான் அவன் ‘குடிமகன்’ என்ற கௌரவத்திற்கு ஆட்படுகிறான்.

‘குடிமகன்’ என்ற கௌரவத்தின் சுருக்கந்தான் ‘பரியாரி’ என்ற அதி கௌரவப்பட்டம்.

பரியாரி சூசைமுத்தனின் கண்கள் எப்போதும் செக்கச் சிவந்திருக்கும். அவன் மூக்குமுட்டக் குடிப்பான். ‘ஒண்டுக்கு ரெண்டு போட்டால் தான் பரியாரி சூசைமுத்துவுக்கு ஞாபகம் பிறக்கும்’ என்பது ஊரின் பரவலான கதை.

தந்தை இறந்து போக, சூசைமுத்தனுக்கு மிஞ்சியதெல்லாம் தாய்க் கிழவி சவுனம் ஒருத்திதான்.

சவுனம் மகனின் கையை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஊருக்கு அவள் ராணி – கௌரவக் குடிமகள். வெள்ளாப்போடு கூடையை எடுத்துக்கொண்டு அவள் மீன்துறைக்குப் போவாள். அவள் யாரிடமும் கைநீட்ட வேண்டியதில்லை. பொழுது கிளம்பி வருவதற்கிடையில் அவளின் கூடை நிறைந்து போய் விடும். தோணிக்கு ஒரு மீன் வீதம் ‘குடிமகளுக்கு’ கொடுப்பது அந்த மீனவர்களுக்குக் கஷ்டமான ஒன்றல்ல. பத்தில் ஒன்று என்ற விதத்தில் கோவில் மூப்பர் நாளாந்தம் நோட்டுகளாக எடுத்துச் செல்லும்போது, கேவலம் இந்தப் பொடி மீனால்தான் என்ன கெட்டுவிடப் போகிறது.

முடிவில் சவுனத்தின் பங்குக் கூறலுக்கு விடப்படும். அதை வாங்கி விடப் பலர் முயல்வர். ஏனெனில், அந்தக் கூடையில் இருப்பவை தெரிவு மீன்கள். ரகத்துக்கு ஒன்றாகச் சேர்ந்திருப்பவை! சவுனத்திற்குக் கிடைக்கும் அந்த வருவாய்ப் போதுமே இராஜ வாழ்வு வாழ!

சூசைமுத்தனுக்கோ கவலையில்லாத வாழ்வு. அன்றாடம் கிடைக்கும் பணத்தை அவன் யாருக்காகவும் மீதிப்படுத்த வேண்டியதில்லை.

அந்தச் சுற்று வட்டாரத்துள் நாலு பேருக்குமேல் கூடி நின்றால் அங்கே பரியாரி சூசைமுத்தனை காணலாம்! எல்லோர் குரலுக்கும் மேலாக அவன் குரல் நிற்கும். தேசியம், சர்வதேசியம், இனவெறி, மொழி வெறி, நாத்திகம் இவைகளைப் பற்றியெல்லாம் அவன் பேசுவான். இவைகளை எப்படித்தான் கற்றுக் கொள்கிறானோ? விகடமாகக் கேள்விகள் போட்டு எல்லோரையும் மடக்கி விடும் பேராற்றல் பெற்றவன் ஊருக்குள் சூசைமுத்து ஒருத்தன்தான்.

ஊரில் நாத்திகம் பேசும் இளம் வட்டங்களோடு சேர்ந்து கொண்டு கத்தோலிக்க பூடத்தின் சின்னத்தனங்களைப் பிய்த்துப் பிய்த்து வைப்பான். இதனால் ஊரின் இளவட்டங்களுக்குப் பணிந்து போகிறான் என்பதல்ல. சில வேளைகளில் இந்த இளவட்டங்களையே சாடித்தாவி மடக்கிவிடுவான்.

நேற்றைக்கு முதல் நாள் மூப்பருக்கும், இவனுக்கும் நாற்சந்திப்பில் தர்க்கம் தொடங்கிவிட்டது. ஒரு ஞானமலையும், ஒரு அஞ்ஞான மவையும் மோதிக் கொள்வதாக நினைத்துப் பெருங்கூட்டமே கூடி விட்டது. அப்போது சூசைமுத்தன் மூப்பரை மடக்கினானே ஒரு மடக்கு!

‘மோட்ச ராட்சியம் எப்படிப்பட்டது?’ இது சூசைமுத்தனின் கேள்வி. ‘புனிதமானது. பசி பட்டினி, வஞ்சகம், சூது, பொறாமை எதுவுமே இருக்காத வீடு’ இது மூப்பரின் பதில். ‘மோட்சத்தில் பொறாமை இருக்காதல்லவா?’ ‘ஆமாம்!’ ‘கர்த்தரால் படைக்கப்பட்டு மோட்ச வீட்டுக்குள் விடப்பட்ட சம்மனசுகளில், ஏழு மண்டலம் சம்மனசுகள் பொறாமைப்பட்டதனால், கர்த்தர் அவர்களைச் சபித்து நரகத்துள் தள்ளினாரே அது எப்படி? மோட்ச வீட்டுக்குள் பொறாமை எப்படி வந்தது?’

மூப்பர் மடங்கிப் போய்விட்டார். தர்க்க ரீதியாக ஜனக்கூட்டம் ஒத்துக் கொள்ளக்கூடியதாக எதுவும் சொல்ல அவருக்கு ஞானத் திறமை இல்லை அவர் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போய்விட்டார்.

சூசைமுத்தனின் வாழ்க்கையில் இப்படி எத்தனையோ! ஆனால், நேற்று நடந்துவிட்டது மிகவும் பாரதூரமானது. ஊரின் நாற்சந்தியில்!

இன்று அதிகாலையோடு மூப்பர் இவனை அழைத்துச் சென்ற போது, இதைப்பற்றி நேற்றைக்கு முதல்நாள் நடந்த தர்க்கத்தைப் பற்றிப் பேசுவதற்காகத்தான் இருக்க வேண்டுமென நினைத்துக்கொண்டு தான், சூசைமுத்தன் தலைநிமிர்ந்து மூப்பரோடு சென்றான். அங்கிருந்து திரும்பியபோது அவன் இப்படிச் சுண்டிப்போய் வந்திருக்கிறான்.

அன்னம்மாளின் மகளுக்கு நாளைக்குக் கல்யாணம். அன்னம்மாள் விதவையாக இருந்த காலத்தில்தான் திரேசு இவளுக்குப் பிறந்திருந்தாள் திரேசு பரியாரி சூசைமுத்தனின் மகள் என்றுதான் ஊருக்குள் பேசப் பட்டது. சாயலில் அவள் சூசைமுத்தனை ஒத்திருக்காதது மட்டுந்தான் இந்தப் பேச்சுக்கு ஒரு குறை. அவள் பெரிது பெரிதாக வரவர, அவள் கண்களில் ஒன்று தோற்றத்தில் பெரிதாகத் தெரிந்தது.

ஊருக்குள் முந்திய மூப்பரின் மகனான இப்போதைய மூப்பருக்குத் தான் தோற்றத்தில் கண இப்படி. ‘அன்னம்மாளின் முழுவியளப்பயன் இது’ என்று தான் கதை பிறந்து அடிபட்டுச் செத்துப் போயிற்று.

“திரேசாவுக்கு தந்தை இல்லை’ என்ற குறையைப் போக்க, அந்தோனி என்பவன் அன்னம்மாளுக்கு இரண்டாந்தாரமாக வந்து சேர்ந்தான் என்று சொல்லி விடமுடியாது. ஏதோ அவனுக்கு அப்போதைக்கப்போது இதங்காண ஒரு துணை வேண்டியிருந்தது. அவனின் மனைவிதான் செத்துப்போனாளே!

ஒதுக்குப் புறச் சதுப்பு நிலத்தில் விளைந்து வரும் அட்டையைப் போல, திரேசு மினுமினுப்பாக வளர்ந்து கல்யாண வாயிற்படியில் நிற்கிறாள்.

ஊருக்குள் இருந்து யாரும் வெளியே பெண் கொடுக்கக்கூடாது. இது பண்டுதொட்டு வந்த வழக்கம். இதை ஒரு மரபாக்கி, இதைக் கட்டிக் காத்து வந்தவர்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டோ , அல்லது இயலாத் தன்மையினாலோ அன்னம்மாள் மட்டுந்தான் தன் மகளை வெளியூரவனுக்குக் கொடுக்கப் போகிறாள்.

மரபை மீறிய இந்தச் செயலைத் தடுக்க முற்பட்டவர்கள் அன்னம்மாளை அணுகியபோது எல்லோருக்கும் அன்னம்மாள் சொன்ன பதில் இதுதான்.

‘நீங்க என்ர புள்ளையைக் குடிமோனுக்குப் பிறந்த பிள்ளை யெண்டு ஊரெல்லாம் சொல்லிக் கெடுத்துப் போட்டியள். அவள் குடிமோனுக்கு பிறக்கேக்கே நீங்க என்ன பாத்துக்கொண்டா நிண்டீங்க? அதைக் கடவுள் கேப்பார். சரிசரி இப்பெண்டாலுஞ் சொல்லுங்க, யாரெண்டாலும் அவளை எடுத்துக்கொள்றதாயிருந்தால் இந்தக் கல்யாணத்தை விட்டிடுறன். என்ன சொல்லுங்கோவன்?’

இந்தக் கேள்விக்கெல்லாம் ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை. பதில் கூற முடியவுமில்லை. இவர்களால் முடிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். குருவானவர் வரட்டாமென்று சூசைமுத்தனைக் கல்யாண வீட்டிற்கு வர வேண்டாமென்று தடுத்து வைத்து, குடிமகன் இல்லாப் பந்தியில் இருக்க முடியாதென்று சொல்லி எல்லோரும் வெளியேறி விட வேண்டுமென்பதுதான்.

மரபு மீறியவளைச் சேர்த்துக் கொள்ள, இன்று காலை ஊரே சேர்ந்து சூசைமுத்தனுக்கு விடுத்த பணிவானதும் – அதிகாரமானதுமான வேண்டுகோள் இதுதான்!

சூசை முத்தன் இந்த வேண்டுகோளுக்குச் செவி மடுக்க வேண்டும். மதிப்புக்குரிய கட்டளைக்குப் பணிந்து போக வேண்டும்!

சூசைமுத்தன் திண்ணையோடு முடங்கிக் கிடந்தது, தாய்க் கிழவி சவுனத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. ‘குருவானவர் அவனை மனந்திரும்ப வைத்துவிட்டார்’ என்ற நினைவினால் அவள் சற்று வேளை இன்பமடைந்தாள்.

மாலைவரை அவன் அப்படியே குப்புறப்படுத்து உழலும் போதும், அந்த இன்பம் நிலைக்கவில்லை. அவன் உடம்புக்கு ஏதாவது வந்து விட்டதாக நினைத்து அவனைப் பரிவோடு தடவிக் கொடுத்தாள்:

‘எணை, சும்மா போய் உன்ரை அலுவலைப் பாரெணை!’ அவன் சீறி விழுந்ததும் அவள் ஒதுங்கிக்கொண்டாள்.

இரவு வந்தது.

அன்னம்மாளின் கணவன் அந்தோனி வந்தான். ‘என்ன சூசைமுத்து, என்ரை வீட்டுக் கலியாணத்தைக் குழப்பவா போறாய்? ஊருக்கை கதை நடக்குது!’

இப்படி அவன் கேட்டான். சூசைமுத்தன் பேசவில்லை. ‘சூசை முத்து, என்ரை மகளின்ரை நன்மையைக் குழப்பிப் போடாதை!’

மீண்டும் அந்தோனிதான் பேசினான். சூசைமுத்தன் பேசவில்லை. சற்றுவேளைக்குப்பின் அந்தோனி மன அலுப்போடு போய்விட்டான். யாரோ ஒருவனுக்காய்ப் பிறவாமல், பிறந்துவிட்ட திரேசுவைத் தன்மகளென்று கூறுபவனை மறுபடியும் சூசைமுத்தன் நினைத்துப் பார்த்தான். அவன் மனது அழுதது.

இரவெல்லாம் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. விடிந்தபோது கோவில் பக்கமாக நான்கைந்து வெடிகள் கேட்டன. அங்கே பலிபீடத்தின் முன்னால் திரேசுவுக்கு மெய்விவாகத் திருச் சடங்கு நடக்கிறது.

அப்போது சூசைமுத்தன் கண்ணயர்ந்து போனான். ஆனாலும் அந்த வெடிகளின் அதிர்ச்சி அவனை விழிக்க வைத்தது. சற்று வேளைக்குப் பின்பு அந்தோனி வீட்டிலிருந்து ஆள் வந்தது. அவனை அழைத்து வரும்படி அந்தோனி அனுப்பியிருந்தான்.

சூசைமுத்தன் எதுவும் பேசவில்லை. ‘என்ரை அலுவல் எனக்குப் பார்க்கத் தெரியும். நீர் போம்!’இப்படி மொட்டையாகச் சொல்லி அவனை அனுப்பி விட்டான்.

பத்து மணிக்கெல்லாம் வேறொருவன் வந்தான். அப்போது சூசை முத்தன் வீட்டில் இல்லை. வந்தவன் வெறுமனே திரும்பிவிட்டான்.

தாய்க்கிழவி சவுனம் சொன்னாள். ‘அவன் ஒருத்தருக்கும் நியாயீனஞ் செய்யான் ராசா. நீ போ அவன் வருவான்’ என்று. கலியாண வீட்டில் பெரும் பரபரப்பு.

குடிமகன் சூசைமுத்தன் பந்திக்கு வரவில்லை . பந்தி வைக்கும் நேரம்! பெண்கள் வட்டாரத்திலிருந்து குசுகுசுப்பு வந்தது. ‘குடிமோன் இல்லாவீட்டிலை நாம் வாய்நனைப் போமோ?’ இப்படி ஒரு குரல்! |

“இனிப் பரியாரி வரமாட்டான் போல மோனை!’ இப்படி ஒருத்தி புறப்பட ஆள் சேர்த்தாள். பந்தல் முகப்பிலே சூசைமுத்தன் தோன்றினான். கண்கள் வழமையை விடச் சிவந்திருந்தன. பலர் முகங்கள் ஏமாற்றத்தால் கறுத்துப்போயின.

அந்தோனி ஓடிச்சென்று அவனை வரவேற்றான். அவன் உடம்பை அந்தோனி சந்தனக் குழம்பால் கழுவினான். ஆனந்தப் பெருக்கால் அந்தோனியின் உடல் வெடவெடத்தது. அன்னம்மாள் சூசைமுத்தனுக்கு முன்னால் வந்து, அந்த மகிழ்ச்சி யில் கலந்து கொண்டாள்.

சற்று வேளைக்குள் பந்தி வைக்கப்பட்டது. தோல்வியை வெற்றிகர மாகச் சமாளித்துக்கொண்டு எல்லோரும் பந்தியில் இருந்தனர். அவர்களால் சூசைமுத்தனை நிமிர்ந்துகூடப் பார்க்க முடியவில்லை.

ஆமைக் குழம்பின் வாசனை மூக்கைத் துளைத்தது. ஆனாலும் எல்லோரும் சூசைமுத்தனின் அனுமதிக்காகக் காத்திருந்தனர்.

சூசைமுத்தன் தலைப்பந்தியில் இருந்தான். ‘என்ன பரியாரி எல்லாஞ் சரிதானே?’ நடுப்பந்தியிலிருந்த மூப்பர் முறைப்படி கேட்டார்.

சூசைமுத்தனின் உடல் நிமிர்ந்தது. முன்னும் பின்னுமாகப் பார்த்தான். அடிப்பந்தியிலிருந்து தலைப்பந்திவரை அதன் பின் வாயில்படிவரை பார்வையை வீசினான். அங்கே அன்னம்மாளும். அந்தோனியும் நின்றனர். அவர்களின் பரிதாபப் பார்வைகள் இவன் நெஞ்சை ஊருடுவி விட்டிருக்கவேண்டும்! ‘என்ன பரியாரி எல்லாஞ் சரிதானே?’

மூப்பரின் குரல் மறுபடியும் கேட்டது. இன்னும் ஒரு தடவை. ஒரே ஒரு தடவைதான் மூப்பர் இப்படி கேட்பார். அதற்கிடையில் சூசைமுத்தன் தனது ஆட்சேபனையைத் தெரிவித்துவிடவேண்டும். யாராவது இருக்கக்கூடாதவன் – அதாவது, ஊரின் மரபை மீறியவன், மசுவாதுக்காரன், என்ன விதத்திற்குட்பட்டவர் இருக்கிறார் என்பதை, அனுமானித்துச் சொல்லிவிட வேண்டும்.

மறுபடியும், மறுபடியும் அவன் கண்கள் பந்தியை நோக்கிப் பாய்ந்து, வழியில் படியில் ஓய்வுகண்டன.

இப்போ அன்னம்மாளுக்கும், அந்தோனிக்கும் நடுவே திரேசு. அவள் வாக்குக்கண் கண்ணீரால் முட்டி நின்றது. அவள் மணப்பெண் கோலத்தில் நின்றாள். அவள் முகம் வெளுத்துப்போய் இருந்தது. சற்றுவேளை உலகமே மௌனத்தில் புதைந்துவிட்டது போன்ற நிலை. எல்லோர் மூச்சுக்களும் சூசைமுத்தன் நெஞ்சிலே மோதுவது போன்ற பிரமைதட்ட, அவன் மூப்பரை ஏற இறங்கப் பார்த்தான்.

மூப்பரின் வாக்குக்கண் சூசைமுத்தனுக்கு முன்னால் பளிச்சிட்டு மின்னியது.

“என்ன பரியாரி எல்லாஞ் சரிதானே?’

மூப்பரின் கடைசிக்குரல் எழுந்து மடிந்தது. ‘மூப்பர் இந்தப் பந்தியிலை இருக்கப்படாது, அவன் எழும்ப வேணும்!’

சூசைமுத்தன் நிதானமாகச் சொன்னான். இது யாராலும் எதிர்பார்க்கப்படாத ஒன்று.

சற்றுவேளை ஏற்பட்ட கலகலப்புக்குப் பின் ஆக்ரோசத்துடன் அவன் மூப்பரின் பக்கம் திரும்பினான்.

அங்கே மூப்பர் இல்லை. பார்வையை மேலே போகவிட்டான் சூசைமுத்தன். வீராவேசத்துடன் மூப்பர் பந்தல் முகப்புக்கப்பால் போய்க் கொண்டிருந்தது, நன்றாகத் தெரிந்தது.

‘பரியாரி, மூப்பரை ஏன் பந்தியை விட்டு எழுப்பினாய்?’ வழக்கமில்லாத ஒரு கேள்வி. ஆனாலும் ஒருவன் கேட்டான். ‘மூப்பர் இந்த வீட்டு மசுவாதுக்காரன்!’ இப்போது சூசைமுத்தனின் குரல் வானம்வரை தாவியது. இது வெளியே செல்லும் மூப்பரின் காதுவரை கேட்க வேண்டு மென்றுதான் சூசைமுத்தன் நினைத்திருக்க வேண்டும்!

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *